மாத்தா-ஹரி – அத்தியாயம் 7

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் 7

‘வானத்து சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது காடு நன்று’ எனப்படித்தப் பாரதியின் ‘காட்சி நினைவை முட்டியது. மழையின் எல்லாப் பரிணாமங்களும் பவானிக்குப் பிடித்தமானது: சினம், நிதானம், பாய்ச்சல், பரிவு, விழுமியம், குரூரம், ஆளுமை, வன்மம், விதுப்பு, உடல், மனம், விளிம்பு, நுனி, ஓரம், கூரை விழல்முனையின் குன்றிமணிக் காய்ப்புகள், இலைச் சரிவுகளில் எடுக்கும் ஓட்டம், நீர்க் காளான்களாய் நிலத்தில் இறங்குமுன் உள்ளங்கைகளில், உதடுகளில், பற்களில், கண்களில், கண்மடல்களில், இமை மயிர்களில், மார்பகங்களில், இதயத்தில் நிகழ்த்தும் அதன் செப்படி வித்தைகள், ஆனந்தப்படும் உடல், ஏற்படுத்தும் கிளர்ச்சி, அதன் முன் பின் காலங்கள், போதிக்கும் பாடங்கள், கற்றுத் தரும் அனுபவங்கள் எல்லாமே விருப்பமானது. அதை எதிர்கொள்ள, முடிந்ததைச் செய்திருக்கிறாள். ஒதுங்கிக் காத்திருந்து சிறுமியாய் ஓடும்நீரில் கப்பல் விட்டு அது கவிழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்; பதின்வயதில் பாவடை நாடாவை இறுக்கிக்கட்டிக்கொண்டு, வாசல் நீரில் தபதபவென குதித்திருக்கிறாள், விலாப்புறங்களில் இடித்துக்கொண்டு கூத்தாடி இருக்கிறாள், தெறித்து உயரும் நீரை முகத்தில் வாங்கி இருக்கிறாள், ஒருசிலதுளிகள் சந்தடிச்சாக்கில், இவள் சட்டையின் அனுமதிப்பெற்று, முதுகுப்பரப்பிலும், மார்பிலுமாக இறங்கிப்பரவ, கிறங்கி இருக்கிறாள், பாட்டியுடைய இளஞ்சூட்டுக் கோபத்திற்கு அஞ்சியவளாக மூக்கால் அழுதபடி ஏறிவந்திருக்கிறாள், இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல தும்மிக்கொண்டு, அவள் அரவணைப்பில் வேதுபிடித்திருக்கிறாள். வாலைக்குமரியாய் மழைக்காதலைப் புரிந்து குடை விரிக்காமல் நிதானமாக நடந்து அதன் அன்பில் நனைந்திருக்கிறாள்; இன்றைக்கு உடல் தழுவும் அதன் தாபத்தைப் தெரிந்து, கலவிக்கு உடன்படுகிறாள், முடிவில் பரவசம் காண்கிறாள். இடியும் மின்னலுமாய் ஊடலை வெளிப்படுத்தும் மழையையும் எதிர்கொள்ளத் தெரிந்தவள், அவள் மண் அல்ல குன்று, பேய் மழையில் கரைவதில்லை. சூறாவளி நண்பனுடன் சிநேகிதம் கொள்ளும் மழையை வெறுக்கிறாள். கெஞ்சுதலுடன் அந்த உறவு வேண்டாமே என்கிறாள். அதன் வெள்ளப் பிரவாகத்தில் நீச்சல் தெரிந்தவர்களுங்கூட மூழ்கடிக்கப் படுகிறார்களே என்கிற வருத்தம் அவளுக்கு.

புதுச்சேரியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும், மழைக்கு முன்னும் பின்னுமான காலங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கடற்கரையில் நின்றபடி, மழைக்குத் தன்னை தயார் செய்துகொள்ளும் வானத்தை ஏதோ புதையலைக் கண்டவர்போல அப்பாவின் விழிகளும், உடலும் வாங்கிக்கொள்வதும், அவர் கைவிரல்தொட்டு தன்னுள் பாயும் அனுபவ மின்சாரத்தில் சிறுமி பவானி அதிர்வதும் நிறைய நடந்திருக்கிறது. மழையை வரவேற்கும் அப்பா மேலுக்குச் சட்டை அணிவதில்லை. துண்டைக்கூட வீட்டில் போட்டுவிட்டுத் திறந்த மார்புடன் ஆவேசம் வந்தவர்போல இவளை இழுத்துக்கொண்டு நடப்பார். ‘பார் பார் மேலே பார்.. அங்கே… இதோ இந்தப்பக்கம் அடிவானில்….’ தவறவிட்டால் இனிக் கிடைக்காது என்பதுபோல. அதற்குப் பிறகு அவர் புலன்களின் காட்சித்தரவுகள், துணுக்குச் சித்திரங்களாகத் துளிர்விட்டு கொடிகளாகச் சுற்றிக்கொள்வதும், பல நேரங்களில் கிளைபரப்பி அசைவதும் அவளிடத்தில் நடந்திருக்கிறது. “மழை ஒரு மகத்தான ஜீவன். மணிமேகலை, புத்தன், காந்தி என்ற பெயர்களில் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது, கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது. இப்போது நமக்கெல்லாம் மழைமட்டுமே நம்பிக்கை, கனவுகள், என அப்பா சொல்லிமுடித்துவிட்டு அடிவானத்தைப் பார்க்கவும், சோர்ந்திருக்கும் சூரியனை மேகங்கள் சூழ்ந்துகொள்ளும். பின்னர் அவற்றைக் காற்றின் கைகொண்டு சூரியன் வழித்துப்போடுவதும், அவ்விடத்தை வேறு மேகங்கள் ஆக்ரமிப்பதும் நடக்கும். சாம்பல் வண்ணத்தில் இருள் படர, பகல் தியானத்தில் ஆழ்ந்துவிடும். நெளிவுகளில் தன் உடல்காட்டி பகலின் மோனத்தை குலைக்கவென்று கடல்மேனகை அலைகள் மூலம் முயற்சிப்பாள், தொடர்ந்து நாசித் தமர்களில், ஈரத்துடனான கவிச்சி. தனது உடலைக் குறுக்கித் திணிப்பது போல பவானி உணரும்போது, ‘அப்பா வீட்டிற்குத் திரும்பலாமே’, என்பாள். அவர், இவளைத் திரும்பிப் பாராமலேயே, ‘ஸ்ஸ்ஸ்ஸ்..’.என்பார். ‘மழையில் நனைந்து பழகிக்கொள். பனிக்குளிருக்கும், அலைக்கும் காற்றுக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இல்லாத மகத்துவம் மழைச் சஞ்சீவியில் இருக்கிறது மகளே! வாழ்வியல் மேட்டையும் பள்ளத்தையும் சமதளத்தில் நிறுத்துவதற்கான வல்லமை நீருக்கும் அதன் தாயான மழைக்கு மட்டுமே உண்டு. நமது பிறப்பிற்கும், உயிர்வாழ்க்கைக்கும் மழையே ஆதாரம். வயிற்றுக்கு உணவு இல்லையென்றாற்கூடச் சக்கரவாகப் பறவைபோல எனக்கு மழையை உண்டு பசியாறமுடியும், நமது எல்லா வலிகளுக்கும் மழையே நிவாரணம்’, என்பார். கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாகச் சடசடவென்று பெய்து நம்மை தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதி மணக்கும் மழை, போது போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி, நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடல்களை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மழையிற்தான் எத்தனை விதம். தனது இறப்புக்கூட ஒரு மழை நாளில் நடைபெறவேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தி இருந்த அப்பாவை எரிக்க, ஈரவிறகிற்கு டின் டின்னாய் மண்ணெண்ணெய் தேவைப் பட்டதை, அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவரது உடலை எரிக்கவேண்டி இருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட மழையிற் கரைத்திருக்கலாம்.

அறையைவிட்டு வெளியில்வந்தாள், தெற்கு திசையில் பார்வையின் முடிவில் நீள் வரிசையில் மரங்கள். என்னென்ன மரங்கள் அவை என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவை அரியாங்குப்பம் ஆற்றின் கரை ஒட்டியும் ஒட்டாமலும் வளர்ந்து நிற்கும் தென்னைமரங்களும், பலா மரங்களும், மா மரங்களும். அவற்றின் தலைக்கு மேலாக முதலில் ஐம்பதில் நரைத்த மனிதத்தலைபோல கறுத்தமேகம். இவள் பார்த்துக்கொண்டிருக்க சருகுகள் சிவ்வென்று மேலெழும்பி, சிட்டுக்குருவிகள் போல தட்டாமாலையாகச் சுற்றிவிட்டு மயக்கத்துடன் பூமியில் விழுகின்றன. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மரங்கள், இரண்டொருமுறை அசைந்துகொடுத்துவிட்டு, ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டதைப்போல நிறுத்திக்கொள்கின்றன.அடுத்து அதிகாலைநேரங்களில் கடற்கரைமணலில், கால் புதைய நடக்கிறபோது, உடலைச் சுற்றிக்கொள்ளுமே குளிர்ந்த காற்று, அப்படியான காற்று. இப்போது இடைக்கழி, கூடமென்று நடந்து வாசலுக்கு வந்திருக்கிறாள். காற்று ஓய்ந்து உடலில் இதமாய் பரவும் வெப்பம். இடக்கையால் உலக்கை மாதிரி இடப்புறம் நிற்கிற தூணைப் பிடித்தாள். பிறகு இடதுகாலால், கவனமாக குதிகாலைப் பின்னே தள்ளி தூணை கெந்தி அணைத்தைப்படி வாசலூடாக மீண்டும் விண்ணைப் பார்க்கிறாள். காற்றில் வழுக்கும் முதல் நீர்முத்து, மீன்கொத்திபோலச் செங்குத்தாக அவள் கண்மணியை குறிவைத்து இமைமயிர்களில் விழுந்து ஊசலாடி முடிக்கும் முன்பு, சட்டென்று விழிமடல்களில், அடுத்தடுத்து குதித்து விளையாடுகிறது, த¨லையை சிலுப்பிக்கொள்ள நேரிடுகிறது. முகம் தெரியாத ஒருவர் அந்தரங்கத்தைத் தீண்டும் அனுபவம், கிறக்கத்தில் வலது கையை குவித்து நீட்டுகிறாள், உள்ளங்கையில் நீர்த் துளி விழுகிறபோதெல்லாம் உடல் சிலிர்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பவானியின் விருப்பமானவைகள் பட்டியலில் காற்றும், தீயும், மண்ணும் ஆகாயமுங்கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கும், மழையேகூட காரணமாக இருக்கலாம். அப்பா இருந்திருந்தால் காரணம் சொல்லி இருப்பார். பிடிக்காதது அவைகளை மறந்து வாழ்வது. அவற்றின் கோபத்தோடும், சாந்தத்தோடும் வாழப்பழகி இருக்கிறாள். வானில் வேர் விடவும், மண்ணில் கிளை பரப்பித் துழாவவும், காற்றைப் பருகவும், நீரைச் சுவாசிக்கவும், தீயில் விரல் நனைக்கவும் அவளுக்கு முடிகிறது. இலையுதிர்காலத்தில் பூக்களையும், கோடையில் மழையையும், எதிர்பார்க்கும் சாராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டு, அவற்றுக்கான குறியீடுகளுடன் தனது கதவைத் தட்டுகிறபொழுதெல்லாம் தாழ் திறக்கிறாள். நெஞ்சு பிசையப்பட சர்வமும் சிலிர்த்திருக்கிறாள். பிறரைப்போல நாம் இருப்பதில்லை என்பது இருக்கட்டும், சில நேரங்களில் நாமாகக் கூட நாம் இருப்பதில்லை. அதுதானே உண்மை. நேற்றுப் பாருங்களேன் ‘கா•ப்கா’ போலவே பாய்ச்சலிடும் குதிரை ஒன்றில் செவ்விந்தியனாகச் சவாரிசெய்கிறாள், அவனைப்போலவே அவளது தலையற்ற உடலைப் பார்க்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த பவானி இல்லை. இவள் வேறு.

– ‘மழையோடு இப்படி ஆட்டம்போடுவது, பிறகு இரவெல்லாம், மூக்கை உறிஞ்சியபடி தும்மிக்கொண்டு இருப்பது. நாளைக்கு பிரச்சினைகள் என்றால், கிழவி என்ன செய்வேன்’ -பாட்டி.

இச் சொற்களையும், வாக்கியத்தையும் நினைவு தெரிந்த நாளில் இருந்து கேட்டுக்கேட்டு பவானிக்கு அலுத்துவிட்டது.

– என்ன பாட்டி, ஆரம்பிச்சுட்டியா?

– ஆமாண்டி நீபாட்டுக்கு மழையிலே நனைந்து, சளி காய்ச்சலென்று படுத்துக்கொண்டால், அவசரத்துக்கு எங்கேண்ணு வைத்தியனைத் தேடுவது.

– இப்படிப் புலம்புவதை விட்டாகணும். இல்லைண்ணா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீ வேண்டாமென்று சொல்லிட்டுப் புறப்பட்டுவிடுவேன்.

பாட்டியின் கண்களை, மறுகணம் கண்ணீர் மறைத்தது. கண்களின் இடநெருக்கடி காரணமாக ஒன்றிரண்டு துளிகள் சுருங்கிய முக வரிகளில் விழுந்து பரவின.

– அய்யோ பாட்டி! உன்னை விட்டுட்டு எங்கே போவேன். இறுகக் கட்டிகொண்டாள். தளர்ந்த உடலென்றாலும், அவளது, அன்பின் கதகதப்பு தனது உடலில் பரவட்டும் என்று காத்திருந்து, விலகிக்கொண்டாள். அவள் கண்களைத் துடைத்தாள்.

மெள்ள சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் ஈரப்பதத்துடன் திறந்துமூட, பற்களற்ற சூன்யத்தை ஒளிரும் கண்கள் நிரப்புகின்றன. இருகண்களிலும் சேர்ந்தாற்போல நீர்த்திரை. முந்தானையைத்தேடி அவள் கை அலைவதைக் கவனித்தாள். அவளை மீண்டும் அணைத்துக்கொண்டாள். பாட்டியின் கண்ணீர் இவளது கன்னத்தில், இவளது கண்ணீர் பாட்டியின் முகத்திலுமாகச் சங்கமித்து உதட்டினைத் தொட்டு கரித்தது. இடியும் மின்னலுமாக மழை இன்னமும் சடசடவென்று பெய்து கொண்டிருக்கிறது. வாசல் நிரம்பி, நீர்க் குமிழிகள் உண்டாவதும், விலகுவதும், உடைந்து தெறிப்பதுமாக இருக்க, பாட்டியை விலக்கிக்கொண்டு கவனிக்கிறாள்.

“இதில் யார்யாருக்கு எந்தக் குமிழி? படைப்பிலக்கணத்தின் விதிப்படி நான் தொடக்கம், உடைந்து தெறிக்கிற நீர்க்குமிழி பாட்டியாகவும் இருக்கலாம், பிறகு அங்கே அதோ அதுபாட்டுக்கு எனது கவனத்திற்படாமல் உடைந்து நீர்த்துப்போகிற குமிழிகளில் அப்பாவும் அம்மாவும் இருக்கலாம். தொடக்கமென்று நான் குறிப்பிட்ட குமிழி, பார்த்துக்கொண்டிருக்க விலகிப் போகிறது, எத்தனை தூரம் போகும்? வாழ்க்கையே விலகல் சார்ந்ததா? இந்தவீட்டையும், பாட்டியையும் விட்டுவிட்டு எப்படி?”- மனம் கேட்டது.

மழைவிட்டிருந்தது. குழந்தைகள், தெருவில் கால் பதிய ஓடும் சத்தம். வயதை மறந்து ஒரு பரபரப்பு. வாசலில் வடியாமல் தேங்கி நின்றிருந்த தண்ணீரில் கால்நனைத்துக் கடந்து, பாசிபடிந்த மெத்தைப்படிகளில் கவனமாகக் கால்வைத்து, வாயில் முட்டைகள் கவ்விச்செல்லும் கட்டெறும்புகளின் வரிசையைத் தாண்டிக்கொண்டு மாடிக்கு வந்தாள் நாளின் பிற்பகுதி. மாலை நேரத்திற்கு இன்னமும் நேரமிருக்கிறது. அடிவானத்தில் முற்றாத சூரியஒளி. ஈரக்காற்று பிசுபிசுவென்று முகத்தில் ஒட்டுகிறது. வலப்புறம் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து அணிலொன்று வாலை உயர்த்திக்கொண்டு விர்ரென்று இறங்கியவேகத்தில், பூமியில் எட்டிக்குதித்துப் பார்வையிலிருந்து மறைகிறது. ஒரு குடிசை வீட்டின் முன்பகுதியில் பரபரப்புடன் குப்பையைச் சீய்த்தபடி நடந்துசெல்லும் தாய்க்கோழி வானத்தை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொக்கரிக்கிறது, கவலை மழைபற்றியது அல்ல. கழுகுகள் அல்லது வல்லூறுகள் பற்றியது. மாடிக் கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்தபடி தெருவைப் பார்க்கிறாள். ஊர் முழுக்கத் தண்ணீரில் முங்கியெடுத்ததுபோலச் சொட்டச்சொட்ட நனைந்திருக்கிறது. வீதியில் ஆங்காங்கே திசைதெரியாமல் பயணிக்கும் மழைநீர், சில இடங்களில் பயணத்தைத் தொடரவியலாமல் சோர்ந்து குட்டையாய் நிற்கிறது. வயிற்றில் சுருக்கென்றது. மடிந்து சாய்ந்திருந்த மாடிப்படியிலிருந்து விலகி என்னவென்று பார்க்க, கைப்பிடிச்சுவரில் சிற்றெறும்புகள்.

பாவானியின் வீடு தெற்கே பார்த்த கல்வீடு. கற்சுவரெழுப்பித் தளம்போட்டு, மொட்டைமாடிவைத்து கட்டப்படும் வீடுகளனைத்திற்கும் இப்படியொரு பெயர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுசேரியிலும் இப்போதெல்லாம் பெரிய பெரிய வீடுகள் பல இலட்சங்களை விழுங்கிக்கொண்டு மூளைத்திருக்கின்றன எழுபதுகள்வரை புதுச்சேரி அழகு அதிகம் சிதைக்கப்படாமலேயே இருந்த காலம் அது. மரபான தமிழ் வீடுகளைபோலத்தான் அவளுடைய வீடும் இருந்தது என்றாலும், ஆவர்கள்- அதாவது பாட்டி, அவளென்று அடங்கிய- வீட்டினை வைத்து அவரவர் வயதளவிற்குக் கதைகளிருக்கின்றன(ஆதாரமில்லாத எதுவும் கதைகள்தானே?).

வீட்டின்முன்புறம், தெருப்பக்கமாய்ச் சரிந்த கூரை, சிற்றோடுகள் வேய்ந்தது. தேக்குமரத்தில் வாசற்கதவு பூக்கள், அன்னமென்று செதுக்கப்பட்டிருக்கும். எல்லா வீடுகளையும்போலவே, அவள் வீட்டிலும் எந் நேரமும் வாசற் கதவு திறந்துபோட்டபடியிருக்கும் கதவின் இருபுறமும் திண்ணைகள். தாத்தா உயிரோடிருக்கும்வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் அங்குதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதாகப் பாட்டி பலமுறை அலுக்காமல் சொல்லியிருக்கிறாள். பிறகு நடை. அங்கே, வார இதழொன்றில் வருகிற அட்டைப்பட பெண்களையெல்லாம் வாலிபப்பருவத்தில் அப்பா வரிசையாக ஒட்டிக்கொண்டிருப்பாராம். தாத்தா ஒருமுறை பார்த்துவிட்டு, கிழித்தெறிந்திருக்கிறார். அன்றைக்கே சுண்ணாம்பு அடித்தார்களாம். இதுவும் பாட்டி ஞாபகப்படுத்திச் சொல்லும் கதைதான். பிறகு நடையைக் கடந்தால் முற்றம். முற்றம் செல்லும் வழியில் இரண்டு பெரிய அறைகள். அதில் ஒன்று அவளுடையது. அங்குதான் சற்றுமுன்புவரை பாவானியை நாம் பார்த்தது. நீண்ட பெரிய அறை, தெருவைப் பார்த்து ஒரு சன்னல். சன்னற்கதவுகளைத் திறந்துவைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வீதியை சுவாசித்திருக்கிறாள். அதன் விழிப்பு, இயக்கம், உறக்கம், அவளோடு இணைந்தது. அதன் சந்தோஷமும் துக்கமும் அவளிடத்தில் கலந்திருக்கிறது. காற்றின் புழக்கமற்ற அறையென்பதால் இறுக்கமான வெப்பம் நிலவும். புதியவர்களுக்கு எறிச்சலையூட்டலாம். முதல் நுழைவில் நாசியில் சட்டென்று அமர்ந்து முகஞ்சுளிக்கவைக்கிற மணத்தை சொல்லி உங்களுக்குப் புரியவைக்கமுடியாது. கிராமங்களில் தொழுவம் பக்கம் போயிருக்கிறீர்களா? வீட்டுப் பரண்களை ஒழித்திருக்கிறீர்களா? என்னவோ சொன்னீர்களே.. ஆமாம் அந்த மணமேதான். சுவற்று அலமாரியில் வரிசையில் சிக்கி; உயிர்வதைப்படுகிற – புத்தகங்கள், பாட்டியின் குரலில் சொல்வதென்றால் ‘உதவாக்கரைப் புத்தகங்களால்’ வருகிற மணம்.

முற்றத்தைப் பற்றியும் நிறையச் சொல்லலாம். பாட்டியோடு பிறந்தவர்கள் பெண்களில் இரண்டுபேர், ஆண்களில் மூன்றுபேர். அத்தனை உறவுகளும்: வெவ்வேறு உறவின் பெயரில் வருவதும் போவதுமாக இருந்த வீடு. தாத்தாதரப்பு உறவினர்கள் உள்ளூர்காரர்கள் என்பதால் விசேட நாட்களில் மட்டும் எட்டிப்பார்ப்பதுண்டு. எதிரெதிராக உட்கார்ந்துகொண்டு, வந்திருக்கும் உறவினர்கள் வெகுநேரம் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள். தாத்தாவுக்கு இடைஞ்சலென்றால், தனது அறையிலிருந்து வெளிப்பட்டு கூடத்தில் இருட்டில் சில நொடிகள் நிற்பார், பிறகு – பாட்டி மடியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அவளிடம், ‘நீ போய் வேளையாய்ப் படு, அவளுக்குத்தான்(பாட்டிக்கு) ஊர்க்கதைகளைப் பேசலைண்ணா தூக்கம் பிடிக்காது; நீ எதற்காகக் கண்முழிக்கணும்’, என்பார். உறவினர்கள் புரிந்துகொள்வார்கள். அவரவர் அங்கங்கே படுத்து அடுத்த சில நொடிகளில் குறட்டைவிட ஆரம்பித்துவிடுவார்கள்

கடந்த இரண்டு தினங்களாக வீடு அமைதியாக இருக்கிறது. சன்னற் கம்பிகள், மேலிருக்கும் சாளரம், கதவிடுக்குகள், சுவரில் தெரியும் ஓட்டைகள் இங்கெல்லாங்கூட, நடக்கிறபோது கால்விரல்கள் இடைவெளியை நிரப்புகிற மணலொத்து மௌனங்கள் இடம் பிடித்துவிட்டன. மொட்டை மாடியின் ஈரம் கோர்த்த தரையில், இளங்காற்றில் தடுமாறும் முடிக்கற்றையை ஒதுக்கியபடி குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறாள். கைப்பிடிச் சுவர்மாத்திரம் குறுக்கிடாவிட்டால், உலகின் அடுத்தமுனைவரை நடந்திருப்பாள். சுளீரென்று காய்கிற மாலைச்சூரியன் சங்கடப்படுத்துகிறான். ஒளி மங்கிய இடம் வேண்டும்: நிலவற்ற இரவு, இருண்ட குகை, அடர்ந்த காடு இப்படி ஏதாவதொன்றில் தன்னை இருத்திக்கொள்ளலாமென தோன்றுகிறது. தமிழ்நாட்டில், தென் இந்தியாவில், ரிஷிகேசத்தில், ஐரோப்பாவில், வட அமெரிக்காவில், தூந்திரபிரதேசத்தில் எஸ்கிமோக்களோடு, இக்ளூவில்? தோலாடை அணிந்து, மிருகங்கள் கொழுப்பில் எரிகிற விளக்கின் துனைக்கொண்டு மனச் சங்கடங்களை எழுதி அலுத்துபோகலாமென்று நினைக்கிறாள்.

– பவானி?

– ம்”

– ஆசைகளும் கனவுகளும் எதிர்காலத்துக்காகத்தான் இருக்கணும். அவை கடந்த காலத்துக்கானதல்லவென்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்.

கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று. அவள் முரண்டுபிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால், சிறுக சிறுக சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள்.அவளுக்கு நினைவுகளின் வதைகள் புரியாது.

– போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்க வந்தவளென்கிற நினைப்பும், ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ, நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல், என்ன பெண் நீ?

– அங்கெல்லாம் போயிட்டு நிற்காதேண்ணு எத்தனை முறை சொல்றது. ஈரச் சுவர் எப்போ எப்போ என்றிருக்கிறது- கையில் காப்பி தம்ளர், பாட்டிக்கு மாடிப்படிபடி ஏறி வந்ததில் மூச்சிறைத்தது. அந்திவெயில் காரணமாக முளைத்திருந்த பாட்டியின் வளர்ந்த நிழல் தன்மீது படிவதை, அப்போதுதான் கவனித்தாள். சொன்னவளின் கருடப் பார்வை வீட்டை ஒருமுறை வலம்வந்தபின், படபடத்த கண்ணிமைக்குள் ஒடுங்கிக்கொண்டது.

– நீ எதற்காக இப்படி மேலேவந்து சிரமப்படணும், கொஞ்சம் நேரம்போனா, நானே இறங்கிவந்திருப்பேன்.

அநேகமாக பாட்டியின் கவலைகள் சிதிலமடைந்த நிலையிலிருக்கும் இந்தவீட்டைப் பற்றியதாக இருக்கலாம். அவள் நினப்பு அவ்வப்போது நான்குதிசைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக விர்விரென்று பறக்கும், பிறகு சடாரென்று எதையாவதுப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்துவிடும்.

– பாட்டி சாயந்திரம் கோவிலுக்குப் போகலாமா? காப்பித் தம்ளரை கையில் வாங்கியபடிக் கேட்டாள். வழக்கம்போல பெரிய தம்ளர் நிறைய காப்பி.
– …

– பாட்டி, உன்னைத்தான் கேட்கிறேன்.

– என்னால் இப்போதெல்லாம் அவ்வளவுதூரம் நடக்க முடியலைடா. சித்தே முன்ன பத்மாவிடமிருந்து போன் வந்தது. உன்னை அவசியம் பார்க்கணுமாம்.

– வீட்டிலேயா இருக்கிறாள்? பிரெஞ்சு வகுப்புக்கு போகவில்லையா?

– என்னைக் கேட்டா?

– சரி நான் அவளை பார்க்கப் போகிறேன்? அப்படியே இரண்டுபேருமா கோவிலுக்குப் போயிட்டு வந்துடறோம்.

– வேளையாய் வீட்டுக்குத் திரும்பு…
– (தொடரும்)

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா