கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3

This entry is part of 34 in the series 20070419_Issue

வே.சபாநாயகம்


மெதுவாகக் கரையை நெருங்கினார். வலதுபுறம் சற்றுத்தொலைவில் தெரிந்த இடுகாட்டில் ஒரு பிணம் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘அட! இது நம் அப்பாவை எரித்த இடமல்லவா?’ எந்த குறிப்பிட்ட இடத்தில் எரித்தது என்று காண முடியவில்லை. நினைவுச் சின்னமோ தகரக் கொட்டகையோ வைக்கமுடியாத, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற பகுதியல்லாவா! இங்கேதான் ஆற்றையொட்டிய பகுதியில் தகனம் செய்த ஞாபகம். சற்றே அப்பாவின் நினைவில் தோய்ந்து நிற்கிறார். மனதில் சோகம் மூட்டமிடுகிறது. அப்பாவின் அந்தத் தகனக் காட்சி கண் முன்னே விரிகிறது.

– சிதைமீது உடலை ஏற்றி, விரட்டி கொண்டு மூடி, வைக்கோல் பரப்பி, சேறிட்டு மெழுகி, முகம் மட்டும் கடைசி தரிசனத்துக்காக மூடாமல் விடப்பட்டிருக்கிறது. கடைசித் தடவையாக சகோதரர்கள் ஒவ்வொருவராக, அப்பாவின் அந்த சாந்த மான முகத்தைத் தரிசித்து அழுகை வெடித்துப் பீரிட்டது கண்முன்னே தோன்றுகிறது.

தொடர்ந்து – மரணாவஸ்தையில் அப்பாவின் இறுதிக் கணங்களில் ஏற்பட்ட தவிப்பும், சோகமும் காட்சியாகிறது.

அப்பாவின் உடல் நிலை மோசம் என்று தந்தி வந்து – மற்றச் சகோதரர்கள் வெகு தொலைவில் இருந்ததால் தான் மட்டும் – அடித்துப் புடைத்துக் கொண்டு புறப்பட்டு ஊர் வந்த போது –

– வீட்டில் மரணக்களை நிலவியிருந்தது.

“உனக்காகத்தாம்பா உசிரு துடிச்சிட்டுக்கிருக்கு. இல்லேண்ணா எப்பவோ அடங்கி இருக்கும்” என்று வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த எதிர்வீட்டு மாமா எழுந்து வந்து அணைத்தபடி உள்ளே அழைத்துப் போகிறார்.

நெஞ்சு பதைக்க வாசற்படி தாண்டி கூடத்தை அடைந்ததும், “தம்பீ! அப்பாவைப் பாருடா! உனக்காகத்தான் காத்திருக்காங்க….” என்று உடைந்த குரலில் அம்மா விம்ம, அருகில் போய்ப் பார்க்கிறேன்.

”அப்பா…..”

அப்பாவா அது? எதிலும் சுத்தமும், ஆரோக்கியமும், நறுவிசும், ஒழுங்குமாக இருந்த அப்பா – இதோ கால்மாடு தலைமாடு மாறி, பஞ்சுமெத்தையின் குறுக்காக அசைவற்றுக் கிடக்கிறார்கள். கண் பஞ்சடைந்து, சுருங்கி மெலிந்த முகமும், எலும்புக்கூடாய்த் தெரியும் உடலுமாய்- வாய் அங்காந்து வெட்டி வெட்டி உள்ளிருந்து காற்றை விசிற, உயிரின் இறுதிப் போராட்டத்தில் ஆட்பட்டு…….

பார்க்கவே பதறுகிறது.

“அப்பா…….” என்று குரல் நடுங்க, குனிந்து முகத்தருகே அழைக்கிறேன்.

“ஆரு வந்திருக்கா பாருங்க! செதம்பரம் வந்திருக்கான்” என்று அம்மா அழுகையினூடே சொல்கிறார்.

“அப்பா………அப்பா………சிதம்பரம் வந்திருக்கேன்பா”

கொஞ்சம் நினைவு மீள்கிறது. மறுபடியும் அழைக்கிறேன். பஞ்சடைந்த கண்கள் மெதுவாய் விரித்து எங்கோ நோக்குகின்றன. பின்னர் குரல் வந்த திசைக்குத் திரும்புகின்றன. நடுங்கும் மெலிந்த குரலில் “ஆரு……செதம்பரமா ……”

அதற்குமேல் கேட்க முடியாமல் குரல் அடங்குகிறது. ஆழ்கிணற்றின் அடியிலிருந்து நலிந்த குரலில் ரகசியம் பேசுகிறமாதிரி இருக்கிறது.

“வ..ந்..து..ட்..டி..யா…” என்பதுதான் இறுதிச் சொல்லாகக் கேட்கிறது. கண்கள் பழையபடி தொய்கின்றன. வாய் வெட்டி இழுக்கிறது. தலை துவள்கிறது.

“தம்பீ, தம்பீ! மடியிலே தலையை எடுத்து வச்சுக்கோப்பா. உனக்காகத்தான் இத்தினி நேரம் இருந்த மாதிரி இருக்கு……..” என்றபடி அம்மா அப்பாவின் தலையைத் தூக்கி என் தளர்ந்த மடிமீது வைக்கிறார். அதற்குள் அண்டை அயலில் இருப்பவர்கள் கூடிவிடுகிறார்கள்.

“ஆமாண்டாப்பா! மவனோட மடியிலேதான் போவணும்னு புடிவாதமா உசிரு தொத்திக்கிட்டிருந்திருக்கு.” என்கிறார் பக்கத்து வீட்டு மூதாட்டி.

எனக்கு அழுகை உள்ளுக்குள் முட்டி மோதுகிறது.

“இந்தா இந்தப் பவுனை வாயிலே போட்டு காசித் தீர்த்தத்துலே கொஞ்சமா விடு” என்று அம்மா மூக்குப்பொட்டளவு உள்ள ஒரு சின்னப் பொன் துணுக்கையும், பற்றவைப்பு மூடி நீக்கிய ஒரு சின்னக் காசிச்சொப்பையும் நீட்டுகிறார், முன்பே தீர்மானித்து ஆயத்தப்படுத்தி இருந்தபடி.

மூச்சு விசிறிவிசிறி….. மரண அவஸ்தையை நேரில் தரிசிக்கிறேன். மனம் வலிக்கிறது.

“வேண்டாம்மா. தொண்டையிலே சிக்கிக்கும். மூச்சை அடக்கிடும்…..” என்று அம்மாவிடம் கெஞ்சுகிறேன்.

“இல்லைப்பா! அவ்வளவுதான். இனிமே தாங்காது! போட்டு தீர்த்தத்தை விடு” என்று எதிர்வீட்டு மாமா ஆதரவுடன் தோளில் தட்டுகிறார்.

கை நடுங்க, குமுறும் அழுகையினூடே அந்தப் பொட்டுத் தங்கத்தை அப்பாவின் வாயில் இட்டு காசித் தீர்த்தத்தைக் கொஞ்சமாக விடுகிறேன். லேசான ‘களக்’ ஒலியுடன் நீர் அடித்தொண்டையில் இறங்குகிறது. அமைதியாக தலை என் மடியில் சரிகிறது. உயிரின் அவஸ்தை முடிகிறது. ‘அப்பா……….” என்று அதுவரை நெஞ்சுக் குள் முட்டிமோதிய சோகம் வெடித்துப் பீரிடுகிறது.

“அழப்படாது….அழப்படாது….இன்னும் வழிவுடலே…” என்று பக்கத்து வீட்டுப் பாட்டி என்னைப் பரிவோடு தட்டிக் கொடுக்கிறார்.

மெல்லப் பூப்போல அப்பாவின் தலையை இறக்கி வைத்துவிட்டு, உடலை நேராக்கிவிட்டு கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டபடி தெரு நடைக்கு வருகிறேன்.

தெருவாசலில், போகிற உயிருக்கு வழியனுப்பி வைக்கும் ஏற்பாடு நடக்கிறது. அம்மா எல்லாம் முன்னதாகத் தயார் செய்து வைத்திருக்கிறார். முக்கிளையாக ஒரு சின்னக் கிளையைத் தேடி ஒடித்து முனைகளில் சின்னப்பந்தம் போல துணிசுற்றி எண்ணையில் நனைத்து வைத்திருக்கிறது. அதை வாசலுக்கு எதிரே தெருநடுவில் சின்ன மண்முட்டில் செருகிப் பற்றவைத்து முக்கிளையாய்ப் பந்தம் எரிகிறது. தேங்காய் உடைத்து, கற்பூரத் தீபம் காட்டி, பங்காளிகள் புடைசூழ சுற்றிவந்து பூமியில் நெஞ்சு பட விழுந்து எழுகையில், அழுகைப் பிரவகித்து ‘ஓ’ வென்று அழுகிறேன். அம்மாவின் ஓலம் குபீலென்று எழுகிறது. அதற்காகக் காத்திருந்தது போலப் பெண்களின் ஒப்பாரி ஆரம்பமாகிறது.

– ”இன்னா சார்! பொடி சுடலே? அப்பிடியே வெறிச்சு என்னாத்தப் பாக்குறீங்க?” என்ற குரல் கேட்டு நினைவுத் தடத்திலிருந்து மீள்கிறார். மாட்டுக்காரச் சிறுவன் மீட்கிறான்.

அதற்கப்புறம் எத்தனை பேரை அந்த இடத்தில் எரித்திருப்பார்கள்! எத்தனை முறை வெள்ளம் வந்து அத்தனைபேர் சாம்பலையும் அடித்துக் கொண்டுபோய்க் கடலில் சேர்த்திருக்கும்! உத்தேசமான, அப்பாவின் தகன பூமியை மனதுள் வணங்கிவிட்டு மெல்ல மணலை விட்டு நீங்கி, திடமான தார்ச்சாலையை அடைந்து நடக்கிறார். பையன்கள் அவரை விசித்திரமாய்ப் பார்த்தபடி தமக்குள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation