• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)

This entry is part of 33 in the series 20070405_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எல்லா வற்றையும் நம்ப வேண்டாம்!
அவ்விதம் நீவீர் நம்பினால்
எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்!
உங்களுக்கும் என் சகோதர னுக்கும்
பிளவு ஏற்பட்டால், வேதனைப் பட்டு
பேரளவு வருத்தம் அடைபவள் நான்! … (அக்டேவியா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நல்ல தெய்வங்கள் எள்ளி நகையாடும் என்னை!
கணவர் வெற்றி பெற வேண்டு மென்று
கடவுளை நான் வேண்டிக் கொண்டால்
தமையன் தோல்வி அடைவார்!
உடனே அவ்விதம் வேண்டாம் என்றலறித்
தமையன் வெல்லட்டும் என்று விழைகிறேன்!
கணவன் வெல்க! தமையன் வெல்க!
என மாறி, மாறி நான் வேண்டினால்
என் துதிப்பே அடுத்த துதிப்பை அழித்திடும்!
நடுவழி யில்லை இச்சையின் எல்லை இரண்டில்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Antony & Octavia

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

Fig. 2
Octavia Going as a Messenger

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:7

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:7

நேரம், இடம்: ரோமிலே ஆண்டனியின் அரண்மனை. காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புது மனைவி அக்டேவியா

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தளபதி மீது புகார்களைக் கூறிக் கொண்டு ஆண்டனி கோபத்தோடு அங்குமிங்கும் நடமாடுகிறார். அக்டேவியா தன் சகோதரன் செய்த குற்றங்களைத் தெரியாதவள் போன்று காட்டிக் கொள்கிறாள்.

ஆண்டனி: அவை மட்டுமல்ல கண்ணே அக்டேவியா! உன்னருமைச் சகோதரன் அக்டேவியஸ் என்னை அவமதித்துச் செய்த அற்ப வினைகள் ஆயிரக் கணக்கானவை! எதை மன்னிப்பது, எதைத் தண்டிப்பது என்று உறுதிப் படுத்த முடியாது. அவர் செய்த பெரும் தவறு இளைய பாம்ப்பியின் மீது புதிய போர்களைத் துவக்கியது, எனக்கு அறிவிக்காமல்! நம்முடன் போரிடப் போவதில்லை என்று பாம்ப்பி என்னிடம் கூறியதை அவர் நம்பவில்லை. ரோம் போரிடப் போவதாகக் கூறி நகரெங்கும் முரசடித்து விட்டார்! என்னப் பற்றி அவதூறாகப் பேசி யிருக்கிறார்! அதுவும் என் காதில் எட்டி விட்டது. என் தங்கையின் கணவர் நீ, என்னருமை மைத்துனர் நீ என்று என் முன்னால் காது குளிரப் பேசுகிறார், உன் சகோதரன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உத்தமரை என்ன செய்வது, அக்டேவியா! சொல். என்னுடன் கைகுலுக்கும் போது அவர் கைதான் சூடாக உள்ளது! ஆனால் உள்ளத்தில் வீசுவது குளிர் காற்று! நொய்ந்து நோய்ப்பட்டு ஈரம் வற்றிப் போன நெஞ்சம். நான் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாலும், உள்ளத்திலிருந்து நன்றி பிறக்காமல், அவரது கோரப் பற்கள்தான் பதில் உரைக்கின்றன.

அக்டேவியா: என்னருமைப் பிரபு! எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்! அப்படி நம்பினால் நீங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்! உங்களுக்கும் சகோதனுக்கும் பிளவு ஏற்பட்டால், வேதனைப்படும் அபாக்கியவதி நான்தான்! சகோதரனை நீங்கள் வெறுக்கலாம். ஆனால் அக்டேவியஸை என்னால் வெறுக்க முடியாது. அவரை நீங்கள் திட்டும் போதெல்லாம், அந்த அடி என் நெஞ்சில் படுகிறது. உங்கள் இருவரிடையே நின்று இருபுறமும் அடி வாங்கிக் கொள்கிறேன். அப்போது உங்களுக்கும், சகோதரனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் போடும் ஊமைச் சண்டையில் பாதிக்கப் பட்டு மனமுடைந்து போவது நான்!

Fig. 3
Octavia Leaving Antony

ஆண்டனி: உன் தமையனுக்கு என்னை எப்போதுமே பிடிக்காது! உன்னை மணந்த பின் அவர் மாறுவார் என்றெண்ணி ஏமாந்தேன்! எனக்குத் தெரியாமல் போருக்கு மறுபடியும் ஏற்பாடு செய்கிறார்! அது எனக்குப் பிடிக்க வில்லை! ரோமுக்கும் அது உகந்ததல்ல.

அக்டேவியா: நல்ல தெய்வங்கள் எள்ளி நகையாடும் என்னை! கணவர் வெற்றி பெறச் செய்யென்று, கடவுளைத் துதித்தால் தமையன் தோல்வி அடைவார்! உடனே அவ்விதம் வேண்டாம் என்று அலறி தமையன் வெல்லட்டும் என்று நான் விழைகிறேன்! கணவன் வெல்க, தமையன் வெல்க என்று மாறி, மாறி நான் வேண்டினால் என் துதிப்பே என் துதிப்பினை அழித்திடும்! நடுவழி யில்லை எல்லை கடந்த எனது இச்சை இரண்டுக்கும்!

ஆண்டனி: கண்ணே, அக்டேவியா! ஒருவரை ஒருவர் பல்லாண்டுகள் வெறுக்கும் தளபதிகள் இருவரை ஒரே சமயத்தில் ஒரே தன்மையில் நீ நேசிக்கிறாய்! யாராவது ஒருவர் பக்கம் சேர்ந்து கொள்! எனக்குக் கவலை யில்லை நீ உன் தமையன் பக்கம் சேர்ந்தால். என் தன்மானம்தான் எனக்குப் பெரியது! அது அழிந்து போனால் நானோர் ஆண்மகனில்லை! உனக்காகவோ, உன் தமையனுக்காகவோ நான் என் சுயமதிப்பை இழக்க மாட்டேன்! உன் சகோதரனுக்காக நான் உன்னை இழக்க நேர்ந்தாலும், கவலைப் படமாட்டேன்.

அக்டேவியா: என்னருமை ஆண்டனி! அப்படி எல்லாம் சொல்லாதீர். நீங்கள்தான் முதலில் எனக்கு முக்கிய நபர்! ஆனால் பாசம் சகோதரர் மீது பாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை. … நானொன்று செய்ய விரும்புகிறேன். உங்களுக்காக, நான் தூது செல்கிறேன். தமையனை உங்களுடன் பிணைப்பதற்காக நான் தூது செல்கிறேன். அதை என் விருப்பம் ஆண்டனி.

ஆண்டனி: அப்படி நீ பிணைக்க முனைவதை நான் தடுக்க மாட்டேன்! ஆனால் அக்டேவியஸ் கடுஞ்சினம் கொண்டவர்! எளிதாக எதனையும் நம்பாதவர். நல்லது. நீ தூது செல்! அவர் வெறுப்பு தணிந்து என்னுடன் நட்பு கொண்டால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது நடக்குமா?

அக்டேவியா: நிச்சயம் நான் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பேன். என் உறவுத் தூது வெற்றியடைய வாழ்த்துவீர், என்னருமை ஆண்டனி!

ஆண்டனி: போய்வா கண்மணி! உன் தூது எமக்குள் மீண்டும் உறவை உண்டாகட்டும்! அக்டேவியஸை மீண்டும் எனது மைத்துனன் ஆக்கு! உன் பிரார்த்தனையால் எங்கள் உறவு உறுதியாகட்டும். நீ தூது செல்! நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். நான் விட்டு வந்த பணிகளை முடிக்க வேண்டும்.

அக்டேவியா: நன்றி ஆண்டனி. தூது செல்கிறேன். நல்ல செய்தியுடன் உங்களை எகிப்தில் சந்திப்பேன். விடை பெறுகிறேன்.


Fig. 4
Mark Antony Leaving to
Egypt

ஆண்டனி: போய்வா கண்ணே, போய்வா! நிச்சயம் எகிப்தில் சந்திப்போம், கிளியோபாத்ரா அரண்மனையில்.

அக்டேவியா: கிளியோபாத்ராவின் மயக்க மாளிகையில் என்னை மறக்காமல் தினமும் நினைப்பீரா ? எனக்குக் கடிதம் எழுதுவீர், வாரம் ஒருமுறை. அப்படி நீங்கள் எழுதா விட்டால், எகிப்துக்கு நான் முன்பாகவே புறப்பட்டு விடுவேன். [ஆண்டனியை முத்தமிட்டுப் போகிறாள்]

ஆண்டனி: கவலைப் படாதே கண்மணி! வாரமொரு கடிதம் உனக்கு வரும். நல்ல செய்தி எனக்குக் கொண்டுவா. … மதி எங்களைச் சேர்க்க நினைத்தாலும், விதி உறவை அறுத்து விடுகிறது. உறவு ஒரு முட்டை போன்றது. ஒருமுறை கீறல் உண்டாகி அது பிளந்து விட்டால், அதை ஒட்டி வைக்க முடியாது. கிளியோபாத்ராவை நான் உடனே காண வேண்டும். அவளுடன் ஒட்டிக் கொண்ட என் உறவை விதி வெட்ட முடியாது. ஆயிரம் மாதர் என்னைத் தேடினாலும், என் மனம் நாடுவது கிளியோபாத்ராவை! அக்டேவியாவின் பிரிவு என்னை உறுத்தாமல் இருக்க நான் எகிப்துக்குச் செல்ல வேண்டும். என் உடல் உள்ளது ரோமில்! ஆனால் என் ஆத்மா உள்ளது எகிப்தில்! ரோமாபுரி சாம்ராஜியத்தில் அடங்கியது எகிப்தின் ஆத்மா! ரோமும், எகிப்தும் சேரும் போதுதான் உடலும், உயிரும் கூடி இன்பம் அடைகிறது. [போகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 4, 2007)]

Series Navigation