நீர்வலை (17)

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
எதாவது செய். செய்தாக வேண்டும் நான்…
மூச்சை நிறுத்தி இழுத்த்து வெளிவிட்டான்.
இரு மிதப்பதில் உனக்கு சாதகமாக உள்ளதைச் சேகரி முதலில். அது முதல்கட்ட நடவடிக்கை. வெயில் வர வர, மூளைக்குத் தெம்பு வர வர, அடுத்த அடுத்த கட்டமாக வேலைகளைப் பிரித்துக் – பி ரி த் து க் கொள்வோம். அதுவே பதட்டம் தணிக்கச் சிறந்த வழி…
அடுத்த நடவடிக்கை. அதுமாத்திரமே இப்போது – அட இப்போதென்ன… எப்போதுமே உன் மனதில் இருக்க வேண்டியது.
இந்தமரம் – இதைநம்பி அதிகம் பயன் இல்லை. சற்றுதள்ளி கடும்தண்டு கொண்ட பெருமரம் ஒன்று… நல்ல விஷயம் நல்ல விஷயம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்து அவன் பிழைத்துக் கொள்ளாமல் எப்படி!
இந்தப் பிடியைவிட பயமாய்த்தான் இருந்தது. மூழ்கி இறந்து விடுவோமோ, என ஒரு உள்சிலிர்ப்பு. பயம். அதுமாத்திரம் கூடவே கூடாது. அப்பா எனக்கு பயம் இல்லை. இல்லவே இல்லை.
நல்லது, நீ பிழைத்து விடுவாய், என்கிறார் அப்பா.
– ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் மூதாதையர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பங்களில் அவர்கள் விழித்துக்கொண்டு மனமுவந்து வழிகாட்டுகிறார்கள்.
அப்பா என்னைக் காப்பாற்று.
மெல்ல, தயங்கித் தயங்கி, அவசரமில்லாமல் நீஞ்சினான். கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. குளிரில் இறுகிக்கிடந்தது கால். சிற்றசைவுகள் தர ஆரம்பித்திருந்தான். கண்விழித்த கணத்தில் இருந்தே அவன் கால்களை, விடாமல் சிறுசிறு அளவுகளில் அசைத்தவாறு இருந்தான். இருந்தாலும் பயத்தில் கால்கள் ஒத்துழைக்க நடுங்கின.
மெல்ல, மிக மெல்ல, நீஞ்சி… ஆகா! அவன் அந்தமரத்தை எட்டிவிட்டான். எருமைபோல, கதைகளில் படித்தபடி… சிறுவயதுப் பாடப்புத்தகத்தில் படம் பார்த்தபடி… முதலைபோல, மிதந்து கொண்டிருக்கும் மரம். காய்ந்த மரம்தான். பச்சைமரம் இன்னும் அழுத்தமாய் முங்கியிருக்கும். மேலே ஏறி உட்கார்ந்து கொண்டான்.
வாழ்வின் மகத்தான கணம் அது. இடுப்புவரை வெயில்பட கதகதப்பு வந்தது. என்ன ஒரு உற்சாக ஆவேசம். அப்போதே பிழைத்துக் கொண்டாற் போல, மயக்க லகரி.
என்னடா? – என்கிறார் அப்பா.
அதெல்லாம் சமாளித்துக் கொள்வேன் இனி…
கைகளைத் தேய்த்துக் கதகதப்பாக்கிக் கொண்டான்.
கடலோரத் தென்னை மரம் ஒன்றும் பார்வையில் பட்டது. எனக்காகவே மிதந்து வந்தாயா மரமே. போதும் போதும்… என்றிருந்தது. உலகின் மிகப் பெரும் செல்வங்களாக அவற்றை உணர்ந்த கணங்கள். அந்தத் தென்னை மரத்தை எப்படியோ பற்றிக் கொண்டபடி ஒரு மனிதர் மிதக்கிறார். இன்னும் விழிப்பு வராதவர்.
கையே துடுப்பு. கைகள் துடுப்புகள். மெல்ல மரத்தைத் தள்ளியபடி யானையில் போவது போலப் போனான். பருந்தண்டு மரம்தான். அந்த மனிதர்… வயதானவர். வழுக்கைத் தலை. சிரித்தாற்போல வாய்பிளந்து கிடந்தார். பல் வாழைப்பூ போலத் தெரிகிறது வெளியே. உடல் பூதப்பட்டிருந்தது. முதல் பார்வைக்கே, எப்போதோ இறந்திருக்க வேண்டும் எனத் தெரிந்து விட்டது.
பிணங்கள் பயமாய் இல்லை இப்போது. அவற்றின் நடுவே நான் உயிரோடு இருக்கிறேன்… அதுதான் என் கவனம். நான் பிழைத்துக் கொண்டேன். அதுதான் முக்கியம். அந்த மரத்தையும் ஒரு கையால் மெல்ல தன்னுடன் இணைத்துக் கொண்டான். இறந்தவரின் சட்டையை மெல்லக் கழற்றினான். சாதாரணமாகவே பெருந் தொந்திக்காரர். கையில் மோதிரம் அணிந்திருந்தார். வாட்ச். அந்த வாட்சைக் கழற்றப் பார்த்தான். உடல் ஊதி, கழற்ற சிரமமாய் இருந்தது. தங்கநிற ஸ்ட்ராப் போட்ட வாட்ச். பணக்கார மனிதராக இருக்கக் கூடும். சுற்றுலா வந்தவராகக் கூட இருக்கலாம்…
தேவையற்ற விவரங்கள்… வாட்ச்சைக் கட்டிக் கொண்டான். நல்லவேளை. குழப்பம் இல்லாமல் – கோடுகள் இல்லாமல் – ஒன்று… இரண்டு, என மணிகாட்டும் கடிகாரம். நீர் உட்புகா தொழில் நுட் பம். தேதி காட்டியது…
… நாலு நாளாய் மிதந்து கொண்டிருக்கிறேன்.
ஊதிய பேருடல். மஞ்சள் ஸ்லாக். பெரும் போராட்டத்துடன் அவர் சட்டையை அவிழ்த்து விடுவித்து, அந்தச் சட்டையால் மரத்தோடு மரத்தைக் கட்டினான். கைக்காயத்துக்கு முதலுதவி போல. பலமான கட்டு அல்ல அது… ஆனால் எதாவது, அவனால் முடிந்ததைச் செய்ய வேண்டும். எப்படியும் பிழைத்துக் கொள்ள வேண்டும். ஐயா… நீர் இறந்து என்னைக் காப்பாற்றுகிறீர் ஐயா. அவரை வணங்க வேண்டும்போல வந்தது. அழுகை வந்தது.
பெரும் அழுகை. பெரும் சிரிப்பு – என்று தனக்கே தெரியாத கிறுகிறுப்புகளுக்குப் பெருவிருப்பு கொண்டிருந்தான். வசப்பட்டிருந்தான்… தேவையற்ற உணர்வுக் கொந்தளிப்புகள் உள்-அலைப் பொங்கல்கள். வேண்டாம்… எனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
இதெல்லாம் அவன் உணர்ந்து செய்தான் என்பதல்ல.
காலம், அது தந்த நெருக்கடி, அது வைத்த சவால்… நான் வெற்றி பெற்றாக வேண்டும்.
நீ சிவாஜிடா. வீர சிவாஜி – என்றானே அண்ணன்…
அண்ணன் அண்ணி கமலா…. அவர்கள் என்ன ஆனார்… எல்லாம் நன்றாக இருப்பார்கள். அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி, துணை, ஆறுதல்… நம் கதையைப் பார்.
வாழ்க்கையின் சுகங்கள் பிடிசிக்கும் எனத் தீர்மானிப்பதற்குள்… திருப்பிப்போட்டு பரோட்டா அடி அடிக்கிறது அவனை.
கிழிஞ்ச லுங்கியை நதிக்கரைப் பாறையில் அடிச்ச்ச்சித் தோய்க்கிறாப் போல…
ஒருகணம் எனக்கு நாற்புறமும் யாருமே இல்லை என நினைத்தால், அந்த நினைவே அரட்டி மிரட்டி விடும் என்னை. முடிவற்று எந்த எதிர்பார்ப்பில் இப்படியே மிதந்து போவது. படகு கூட இல்லை இது. மரத்திண்டு. இதைச் செலுத்திப்போக முடியாது. இது கடல். நடுக் கடல். அலைகளே இல்லை என்னைக் கரைசேர்க்க…
அவசரப் படாதே. ஆக வேண்டியதைப் பார். உன்னால் கூடுவது அதுவே…
இப்போது இரண்டு மரங்கள். இந்த வாய்ப்பே அதிகம். இப்போது பரவாயில்லை… இடம் அதிகம் கிடைத்தது. உடல்பாரம் சிறிது அழுத்தம் குறைந்ததில், இரு மரங்களும் அவனைத் தாங்கிக் கொண்டதில், அதன் உள்ளமுங்கல் குறைந்தது. தெப்பக்குள உற்சவர் போல. தன் உத்திக்குத் தன்னையே மெச்சிக் கொண்டான். அந்தப் பெண்ணின் புடவை கிடைத்தால் எவ்வளவோ உபயோகம் அல்லவா?
இறந்து மிதக்கும் சடலங்களை ஆராய்ந்து, தனக்கு சாதகமான பொருட்கள், என சேகரிக்க ஆரம்பித்தான்…
கழுத்து நகைகள், கால்கொலுசு என்றும் வாட்ச், மோதிரம் என்றும்… மனுசனுக்கு இதெல்லாம் வேண்டியிருக்கிறது.
பணம் இல்லாதவன் பிணம் – என்பார்கள்…
பிணத்தோடு பார் பணம்!
விரித்து காற்றில் விசிறியடிக்கிறான்…
இன்னொரு வேட்டி கிடைத்தது. உள்ள பார்யா வெள்ளி அரைஞாண். ஓதம் வந்தாப்ல துட்டு… அதனால் மரத்திண்டையும், முதலில் தன்னை – சட்டைப் பகுதியைக் குத்தி – இழுத்து வந்த மரத்தையும் இணைத்துக் கொண்டான். அதன் சிறுபகுதி, உயர்த்திய கையைப் போல் இருந்தது. புதிய வஸ்துகள் கிடைத்தால் காய வைக்க அது வேண்டும் அவனுக்கு. பையொன்று சிக்கிக்கொண்டு கூட வந்தது. அதில் கிடைத்த பர்ஸ். அது நிறையப் பணம்… கடகடவெனச் சிரிப்பு வந்தது. பணம்! பணம்!
சட்டென அடங்கினான். என்ன திரும்பத் திரும்ப, பைத்தியக்காரன் மாதிரி நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பிணங்களின் உடைகளைச் சேகரிக்க ஆரம்பித்தது நல்லவிஷயம். ஒருபையில் சிறிது தண்ணீருடன் பாட்டில் ஒன்று. வாழ்வின் மிகப்பெரும் செல்வம் பெற்ற கணம் அது. அந்த மக்களை அழித்ததும் தண்ணீர். இப்போது அவனைக் காப்பதும் தண்ணீரே.
அரை பாட்டில். போதும் போதும், என்றிருந்தது.
தண்ணீரை உயரேதூக்கிப் பார்த்தான். மடக் மடக் என, தொண்டையில் தண்ணீர் இறங்குவது போல் கற்பனைசெய்து கொண்டான். திரும்பப் பையில் வைத்துக் கொண்டான்.
மிதக்கும் பிணங்களை எப்படியாவது அப்புறப்படுத்தி விட்டால் நல்லது. கூடிய சீக்கிரம் அவற்றைத் தின்ன மீன்கள் வந்துவிடும்… கடல்கரையில் மீனவர்கள் வியாபாரம் செய்கையில் பார்த்திருக்கிறான். ஒருபடகு அளவுக்கும் பெரிய மீன்கள் எல்லாம் அவர்கள் பிடித்து வருகிறார்கள். படகில் வைத்தே அறுத்து எடுத்து வருகிறார்கள். மனிதன் அவற்றின் முன்ரொம்பச் சின்ன மிருகம்.
மனிதனுக்குப் பயப்படாத மீன்கள் அவை.
ஒரே வாலடிப்பில் படகையே வீழ்த்தும் வலிமை, வலையையே உதறி அறுத்தெரியும் திறன் கொண்டவை… மாட்டினம்னா…
பயப்டப்டாதே. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது…
உடைகளை, மெல்ல மரத்தின் வெயில்பார்க்க உயர்ந்த கிளைகளில், காயப் போட்டான். தன் கால்சாராயும் அவிழ்த்துக் காயப் போட்டான். அப்படியே நிர்வாணமாய் சூரியன்முன் நின்றான். மொத்த உடம்பையும கதகதப்பாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
அவயவங்களைத் தேய்த்து சூடேற்றிக் கொண்டான். உரிக்க உரிக்க அழுக்கு உருண்டைகளாய் உடம்பில் இருந்து திரண்டது. டேய், நாயே… அதைப் போய் முகர்ந்து பார்க்கறியே…
கடல்காற்றின் உப்புக்கு, வியர்வையே அதிக கனமாய், உள்ப் புழுக்கத்தை அதிகரிப்பதாய் இருந்தது… கசகசப்பு அதிகமாய் இருந்தது. அக்குள், மற்றும் தொடையிடுக்குகளில் பேனும் சடையுமாய் ஆகி விடும் போலிருந்தது…
மரக்கூட்டம் மெல்ல மிதந்து கொண்டிருந்தது…
சிறிது சிறிதாய் இரவு பரவிவரும் போலிருந்தது. ஆனால் விரைவில் பொழுது குவிய ஆரம்பித்தது. காற்றில் குளிர் வந்தது.
நெட்டுக்க நின்ற பொழுது, மல்லாக்க விழுந்து போர்த்திக் கொண்டது…
மனுஷாளைப்போல காற்றுக்கும் நிறமும் ஜாடைகளும் இருக்கலாம்… இது வேறுமாதிரிக் காற்று. நல்லாக் கைகளை உயரே தூக்கி, உள் வியர்த்த பகுதிகளை ஆசுவாசப் படுத்தினான்… ஹா, என அந்தக் குளிர் காற்றை உள்ளிழுத்து, வாய்க்குள், தொண்டைக்குள் அந்தக்குளிரைப் பாய்ச்சிக்கொண்டான். உடம்பில் இருந்து ஒரு கெட்ட வாடை – பாசியும் அழுக்குமாய்க் கலந்த வாடை… வந்து கொண்டிருந்தது, அது இப்போது சற்று அடங்கினாப்போல இருக்கிறது…
பெரும் பாசிகள் சார்ந்த பகுதி அலையில் மிதந்து எப்படியோ வந்து, அவனைச் சுற்றித் தழுவிக் கொண்டது. சிறுஅளவில் அவனை, கடல் நகர்த்திக் கொண்டிருக்கிறதுபோலும்… அவனுக்கே கணிக்க முடியாதிருந்தது அந்த விஷயம்.
ஒளி பிடிஉருவிக் கொள்கிற இளம்மாலை. பிடரிப்பக்கம் அரித்தது. சொறிந்தபடி சுற்றிலும் பார்த்தான். அதுவரை சொறியல் எடுக்காதிருந்த உடலில், உடம்பு பூராவும் நமைச்சல் ஆரம்பித்துவிடும் போலிருந்தது. இருந்த அழுக்கில் சொறிந்த இடத்தில் நகக்கோடுகள் பதிவாயின.
பாசிகளை உண்ண பெரும் பெரும் ஆமைகள் வருகிறதைப் பார்த்தான். பயமாகத்தான் இருந்தது. அவனிடம் ஆயுதம் என எதுவும் கிடையாது. ஆமைகளுக்கு கழுத்தே ஆயுதம். மிக நீளமான, நம்பவே முடியாத அளவு நீளமான கழுத்துகள் கொண்டவை அவை. தவளைக்கு நாக்கு போல, ஆமைக்கு கழுத்து… அந்த ஆமைகள் சட்டென நீளக்கரம் போல கழுத்தை வெளியுருவல் உருவி, ஒருஅறை விட்டிருந்தால் அப்போதே அவன் மரணிப்பான்.
கலவரப்பட்டு அவற்றை விரட்ட, அவற்றைக் கலவரப்படுத்த, கோபப்படுத்த அவன் முயல வேயில்லை. சாதுவாக வெறுமனே நின்றான்… அவற்றைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
அன்பரே நலமா?
நல்ல சௌக்கியம் ஆமைகளே. சாப்டுங்க, பாசியை. உங்க வேலைய முடிங்க. பிறகு சமத்தாப் போயிருங்க.
பாசிகள், கொடிகள் என்று தெரிந்தது… கொடிகள் கிடைத்தால் மரத்துக்கு, மேலும் கட்டுகள் போடலாம். நீஞ்சிப்போய் கொடிமுறுக்கத்தில் சிக்கிக் கொள்வோமா என பயமாய் இருந்தது. கொடி, பாசி… என இருந்தால் ஒருவேளை கரை எதுவும் இருக்கலாம்…
ஆகா, என தலை தூக்கிப் பார்த்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை, கரை என்கிற அம்சமே காணவில்லை.
காலை வெளிச்சத்தில் ஒருவேளை தட்டுப்படுமா?
கரை, அருகில் என்றால் பறவைகள் பறக்கும். அவன் கண்விழித்த கணம்முதல் ஒரு பறவையும் காணவில்லை…
சரி, நான் அதெல்லாம் பிழைத்துக் கொள்வேன்… என சமாதானப்படுத்திக் கொண்டான்.
அப்படித்தானே அப்பா.
ஆமடா என் ராசா, என்றார் அப்பா.
இருளின் பெருங்குளிர் அவன்மீது கவிந்தது. சாத்தானின் அணைப்பு. அது வெறும் குளிராய்க் கூட இல்லை. ஈரம் அபாரமாய் இருந்தது.
இருளும், குளிரும், கருஞ்சாந்துமாய் யாரோ வாணலியில் போட்டு தார்ப்பிசையல் பிசைந்து, சுவர் வரட்டியாய், சப்புச் சப்பென்று எறிகிறார்கள். தானே குஷ்டரோகிபோல உடல்சிறுத்து விரல்கள், அவயவங்கள் கரைந்து, மெல்ல மொத்த ஆளுமே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்…
என்ன இருளடா ஐயா. வெளிச்சமும் இந்த இருளும்… அந்தப் பெருவெளியில் எல்லாமே, நிர்வாணமான முழுஆளுமை செலுத்துவதாய், தன் பிரம்மாண்டப் பேருருவைக் காட்டுவதாக அல்லவா அமைகிறது…
மனிதக் கண்கள் பார்த்திராத பெரு இருள். மிருகங்கள் ஒருவேளை அதனூடே பார்க்கக் கூடுமோ தெரியவில்லை. தூ ர த் தி ல், அருகில் என சிறு கிசுகிசுப்பான ரகசிய சப்தங்கள் கேட்கவே செய்கின்றன. எதுவோ, மேல்தளத்துக்கு நீந்தி வந்து, விஷ்க்கென திரும்பிப் போகலாம்.. காற்றின் அசைவில் சிறு பாசித் துகள் எழும்பி, அவனைத் தொட்டு, கீழே விழுந்திருக்கவும் கூடும். காற்று. அந்தக் கடுங்குளிர். உப்புச நீர்த்தளத்தின் கனம். ஆம்பிளையில் பெரியமீசை வெச்ச ஆம்பிளை, என்கிறாப் போல – அந்த இயற்கையில் ஒரு ‘டாய்!’ – ஓர் அதிகார மிரட்டல் இருந்தாப்போல அவன் உணர்ந்தான்.
தூக்கம் என வராது… வந்தாலும், மனசு பிடிவாதமாய் விழித்திருக்கவே விரும்பும்… தூங்கினாலும் மளுக்கென முங்கி விடாமல், காபந்து செய்து கொண்டான்… அசௌகர்யமாய் இருந்தாலும் சிறிது சாய்ந்து கொள்ள இப்போது வசதி கிடைத்தது அருமையான விஷயம்.
காலைவரை இனி அவனுக்கு வேலை இல்லை. அவன் மனிதன் – சாதாரண மனிதன். அவனின் சக்தி என்று எதுவும் இருந்தால், அது பார்வை வளாகத்திலேயே செல்லுபடியாகும். காலைவரை – வெளிச்சம் வரும்வரை, அவனால் இப்போது செய்யக் கூடுவது ஏதும் – ம்ஹும், இல்லை…
ஆ… மனதை நிதானப்படுத்திக் கொள்ள இந்த அமைதியான நிமிடங்களை, நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… என்னவெல்லாம் சிந்திக்கிறேன் நான்… பள்ளியில் பாடம் படிக்கத்தான் அறிவு பத்தவில்லை…
எலேய், அந்தந்த நேரம்… அதன் நெருக்கடி… அது கத்துக்குடுக்கும்டா எல்லாத்தையும், என்றானே அண்ணன். அப்போது புரியவில்லை… எப்படியும் சமாளித்துத்தான் ஆக வேண்டும்… புரிந்து கொண்டதும், மூளை, இயற்கையின் போக்குக்கு அடிபணிந்து விடுகிறது…
நான் பொழைச்சுவந்து உங்களைச் சந்திப்பேன் அண்ணே. உங்களை – அண்ணியை – தங்கச்சி கமலாவை… கட்டாயம் சந்திப்பேன்.
விடியும்வரை காத்திரு.
காலம் நெகிழ்ந்து, உனக்கு வாய்ப்பு, என அளிக்கும்வரை காத்திரு.
பொறுமையாய்.
ஒருவேளை விடியாமலே போகலாம்… என்றெல்லாம் பதறி, பதட்டப்பட்டு, பயன் என்ன…
நல்லதே நடக்கும் என நம்பியாக வேண்டியிருக்கிறது…
நன்றாக முற்றிவிட்ட இருட்டு. ரேடியம் டயல். மணி பத்தரைகூட தாண்டவில்லை. ம் என்ற இருட்டு அது. மிரட்டும் இருட்டு. கண்ணை மூடியிருந்தாலும், திறந்திருந்தாலும், உன்னால் ஒண் ணும் ஏலாது… எனக் கெக்கலி காட்டும் இருட்டு. காரிருள். அதனினும் பெரிய பேரிருள். முழு உலகில் எதுவுமே இல்லை, என மிரட்டும் இருட்டு…. அவன்கூட இல்லை. இருட்டு மாத்திரம் இருக்கிறது. இல்லை, என்பது மாத்திரம் இருக்கிறது. இருக்கிறது, என்பது எதுவுமே இல்லை.
என்னவெல்லாம் பார்த்தாயிற்று இந்த வயசில்… ஆகாயப் பெருவெளி. பெருங் கடல்வெளி. வெட்ட வெளிச்சம். பெரும் வெளிச்ச வளாகம். பிறகு இப்போது இத்தனாம் பெரிய இருட்டு. பெரும் காற்று. பேரலை, பூகம்பம்…
ஆ எல்லாவற்றுக்கும் மேலே… மாபெரும் மௌனம்…
மகாத் தனிமை. பெரும் இரவு. கடும் இருள்.
காற்று, திரும்ப வேற்று முகம் காட்டியது. காற்றில் ஊசிகள் போல் மழைத்துளிகள் ஊடுருவின. செந்தட்டி முட்கள்போல அவை பாய்ந்து அவனைக் குத்தின. காற்று திடீரெனப் பெருகி அவனையே கீழே தள்ளிவிடுகிறது போல பேராட்டு ஆட்டுகிறது. தடுமாறி, விழுந்து விடாமல் இருக் க வேண்டும்…
மரக்கிளைகளில் காயவைத்த துணிகளில் ஒன்றிரண்டை, அது பறித்து, உருவி, கடலில் எறிந்துவிடலாம். அதை அவனால் எப்படித் தடுக்க முடியும்… எப்படிப் பிடிக்க, காப்பாற்ற முடியும். காலை விடிந்தால்தான் நஷ்டக்கணக்கே அவன் பார்க்க முடியும்… ஐய, முதலில் அவன் ஒழுங்காகப் பிடித்துக்கொண்டு தப்பிக்கிறானா…. அதுவே பெரிய விஷயம். மரங்களைப் பிணைத்த துணிக் கட்டுகள்… அவை அவிழ்ந்து விடாமல் இருக்கிறதா… அதுவே அருமையான விஷயம் அல்லவா?
அப்பா…
ஹ்ரும்… என செருமும் அப்பா. என்னடா?
எய்யா முழிச்சிட்டிருக்கீரா?… தூங்கீட்டீராக்கும்னு பார்த்தேன்…
எனக்குத் தூக்கமே கிடையாது…. என்றார் அப்பா.
எய்யா, நீரு தூங்கிட்டா என்னிய யார் பார்த்துக்குவா… என்றபோது கண்ணீர் வந்தது.
எலேய், நாந் தூங்க மாட்டேன்… அதான் சொல்றேனில்ல… என்கிறார் அப்பா.
தலை கலைத்து, வருடிக் கொடுக்கும் காற்று.
காற்றுதான் அப்பா.
மழை… காற்றின் சுழி மாறி, மழை அறிகுறிகள் வலுக்க ஆரம்பித்தன.
பூகம்பகாலங்களில், உடனே நாலைந்து நாளில் மழை பெய்கிறது…
அடங் கொக்கமக்கா … அவசர அவசரமாய், பனிக்கட்டியாகவே பொழிகிற கனமான மழை. ஆலங்கட்டி மழை…
பூமி அதிர்கையிலேயே மழையும் பெய்கிறதாகச் சொல்கிறார்கள்.
சாதாரண மழையே சைக்கிளில் போகையில் முகத்தைப் பிறாண்டிவிடும் பிறாண்டி. அனுபவித்திருக்கிறான். பெருவெளி. சுதந்திரமான மழை. மேலே மறைப்பே கிடையாது. கூரையே கிடையாது… மழையின் உக்கிரத்துக்குக் கேட்கவா வேண்டும்…
பனித்துண்டுகளாய் அவன்மேல் கனமான சிதர்கள் சடசடவென்று கொட்டின. உடம்பெல்லாம் வலியான வலி. குத்தல்கள். காயங்கள். கீறல்கள்… நான் என்ன செய்வது? என்னால் இதை எப்படித் தடுக்க முடியும்?… அவனது உடைகளும், அவன் காயவைத்த உடைகளும் கூட, முற்றாக நனைந்தன…
ஓவென வலி தாளாமல் அழ ஆரம்பித்தான். செத்துருவமா என்றிருந்தது… வெருண்டிருந்தான்…
இன்றிரவைத் தாக்குப் பிடிப்போமா என்றிருந்தது.
குளிரில் அவன் உடம்பு கிடுகிடுவென நடுங்கியது. சில்லிட்டு விட்டது உடல்… தானறியாமல், உணர்வே இல்லாமல், அப்படியே செத்துப் போய்விடுவோம், என நினைத்தான்
ஒரு பெரும்மீன் வந்து தன்னைக் கடித்து இழுப்பதாகக் கனவு. உடம்பு உதறி, காக்காய் வலிப்பு போல வெட்டியது. பெரும் இருட்டு. நினைவுகள் மழைத்துளிகளாய் ஒழுங்கின்றி அவனிலிருந்து நாலா பக்கமும் சிதற ஆரம்பித்திருந்தன. தன்னிலை இழந்திருந்தான்…
மரக்கிளை ஒன்று… கூட சில மரத் துண்டுகள்… காற்றசைத்த அலையின் சளப் சளப்.
படகு மிதந்து கொண்டிருந்தது.
கண்ணைத் திறந்து பார்த்தபோது வெளிச்சம்… கண்கூசும் வெளிச்சம். மழை விட்டிருந்தது. ஜுரம் – அவனால் கண்ணைத் திறக்க முடியவில்லை. என்னென்னவோ பிதற்றிக் கொண்டு கிடந்தான்.
நினைவுகள் உள் ஜுவாலைக்குள் தீப்பிடித்து எரிகின்றன.
அவன் அப்பா அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு போய்ப் புதைக்கிறார்.
எவ்வளவு நாள், எவ்வளவு நேரம் எல்லாம் தெரியாது. காலக் கணிப்புகள் திரும்பப் பிசகி யிருந்தன… ஒரு வழியாய் மூளையின் கட்டுக்குள் நினைவுகளை – சூழலைக் கொண்டு வந்து பெரும் அசதியுடன் கண்ணைத் திறந்து, விழித்து, பீளை படிந்த, சிவந்த கண்ணை உருட் டிப்பார்த்தான்…
தானே அறியாமல், மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டிருக்கிறான்!…
கமலா அவனை இப்படித்தான் கட்டிக்கொண்டு உறங்கும்.
ஆ ஆ… நான் பிழைச்சுட்டேன்… திரும்ப அந்த பைத்தியக்கார ஆவேசச் சிரிப்பு வந் து.
பட்டினி ஒரு பொருட்டே அல்ல… அவன் பசி அறிந்தவன். அத்தனைக்கு சக்தியை சேமித்துக் கொண்டு மிகக் குறைவாகவே செலவழிக்க உறுதி கொண்டான்.
ஒரே ஒரு மடக்கு தண்ணீர் பருகுகிறான்.
ஜுரம் மட்டுப்பட்டிருந்தது. சரியாய்ப் போய்விடும், என நினைத்துக் கொண்டான்.
அட அதெல்லாம் சரியாப் போயிரும்.
சூர்யனைக் கண்டதும், மனசுக்கு எப்படியோ தெம்பு ஊறி விடுகிறது.
மரக்கட்டைப் படகு மிதந்து கொண்டிருந்தது.

பகலின் வெப்பம் வேறுவிதமான இம்சை. வெயிலின் உக்கிரத்துக்கு உடம்பு காந்தியது. உடம்பெல்லாம் சிவந்து காயம்பட்டாப் போல எரிந்தது. சருமம் சிவந்து சிவப்புப் பொட்டுகள் கிளம்பின. மேல்தோல் செதில் பிரிந்து உட்பாகம் காட்டினாப் போல… எதோ தோல்வியாதி வந்தாப்போல இருந்தது.
சீக்குக் கோழி.
பசித்தது. அதுவரை பச்சைமீனை ருசி பார்க்காதவன்… கையால் அள்ளும் கிட்டத்தில், மீன் கூட்டம். நரநர என்கிற சிறு சப்தத்துடன் வந்தன. கையால் துழாவியதிலேயே சிறு மீன்கள் கையில் சிக்கிக் கொண்டன…
பச்சைமீன் ருசி பிடிக்கவில்லைதான்… வாந்தி வந்தது. திரும்பவும் கடித்தான்… பிடிக்காமல் துப்பினான். பழகு… ஆமாம், நான் பழகிக்கொள்ள வேண்டும்…
பசியை ஞாபகப்படுத்திய மாத்திரத்தில், வயிறு தன்போக்கில் முரட்டுத்தனமான சங்கடங் களை வெளியிட ஆரம்பித்தது… வயிறு வலித்தது. உடம்பே உருக்குலைந்து, மெலிந்துபோனாப் போலிருந்தது…
மரத்தில் ஒட்டி அலையும் பாம்புபோலத் தன்னை நினைத்துக் கொண்டான்… பெரும் திட்டம் எதுவும் கிடையாது… என்ன செய்ய? அவனால் கூடுவதுதான் என்ன? இப்படியே எத்தனை நாள்தான் மிதந்து கொண்டே போவது? இதற்கு முடிவுதான் என்ன?
? ? ? ?
மூளை பெரும் யோசனைகளையே நிறுத்தியிருந்தது. மரத்துப் போக ஆரம்பித்து விட்டதா? அவனும் வீர்யம்குறைந்து அந்தப் பாசி போல… உடைந்து மிதக்கும் மரத்திண்டாய் ஆகி வருகிறானா?
தனக்குத்தானே பேசிக்கொள்ளும் முனைப்பையும் இழந்திருந்தான்.
தெம்பு என்றுகூட அதிகம் இல்லை…
பார்வையில் தெளிவு குறைந்து விட்டிருந்தது.
காதடைக்கும் பசி…
இரவுகள் வந்தன. பகல்கள் வந்தன… அவன் மிதந்து கொண்டிருந்தான்…
வாழ்க்கை மிதந்து கொண்டிருந்தது…
கடிகாரத்தைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தான். கடிகாரம் கட்டியிருப்பதே மறந்து போயிருந்தான். உண்மையில் எதையுமே நினைத்துக் கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
ஆ… நான், கொஞ்சம் கொஞ்சமாய், அடங்க ஆரம்பித்து விட்டேனா?
எனக்கு என்ன, என்று எனக்கே தெரியவில்லை.
பத்தாம் நாள் வாக்கில்… அந்தவழியே அதோ தூரத்தில்… சிறு சலனம். கரையோ என நினைத்தான். அப்பா நான் பிழைத்து விட்டேன் என ஆவேசப் பட்டு கத்தினான். ஏய் கத்தாதே… உடம்பில் தெம்பு வேண்டும்… பரவாயில்லை… ஆஆஆஆஆ… எனக் கத்தினான்.
கரையென்றால் குதித்து நீந்திப்போக வேண்டும். அந்த தூரம் நீந்த என்னால் எப்படி முடியும்? முடிய வேண்டும்…. அழுகை பெருக்கெடுத்தது… குதிப்பமா? முடியுமா? பெரும் தள்ளாட்டமாய் இருந்தது. எழுந்து நிற்கவே உடம்பில் தெம்பு இல்லை…
ஆ… ழமான சமுத்திரம்.
இரு. அது… அது கரை அல்ல.
ஆமாம். அட ஆமாம்… அது இவனைநோக்கி… ஓரளவு இவனை நோக்கி… வந்து கொண் டிருந்தது.
சரியாய்ப் பார்க்கிறானா?
ஆமாம். அட ஆமாம். ஆமாமாம்…
அது ஒரு கப்பல்.
தப்பிச்சேன்யா! ஓஹோஹோஹோ…
கையில் குத்தாலத்துண்டு, சிவப்பு ஈரிழைத்துண்டு எடுத்துக்கொண்டு, ஆட்டியபடி கத்தினான். காப்பாத்துங்க… காப்பாத்துங்க…
விரல்களை – கைகளைக் குவித்துக் கத்த்த்த்…
அவர்கள்வரும் தூரத்தில் கேட்கக் கூட கேட்காது…
துண்டை ஆட்டினான். திரும்பத் திரும்ப துண்டை ஆட்டினான்.
யார் அங்கே? யாராவது என்னைப் பார்க்க முடியுமா? நான் கடலில் மிதந்து கொண்டிருக்கிறேன்… வாங்க காப்பாத்துங்க… சீக்கிரம் வாங்க. வாங்க… யாராவது பார்க்கறீங்களா என்னை?
உணர்வு கொந்தளித்து, அழுகை முட்டியது.
ஆகா, பதில் சொன்னார்களே அதைச் சொல்!
புகை கக்க, பெரிதாய் சைரன் தந்தது கப்பல்!
பார்த்துட்டாங்கய்யா. கண்டுபிடிச்சிட்டானுங்கய்யா…. வாங்க வாங்க வாங்க…
பிழைத்து விட்டேன் பிழைத்து விட்டேன்!….
அப்பா பிழைத்து விட்டேன்… கத்தினான்.
ஆமடா என் ராசா –
உடம்பு நடுங்கியது. மெல்ல அந்தத் திண்டில் குதித்தான்…
ஒருநாட்டில் இருந்து, வேறுநாட்டுக்கு நிவாரண மருந்தும் உணவும் எடுத்துச் சென்றுகொண்டிருந்த கப்பல் அது. அவர்களே யாரும் கடலில் தவிக்கிறார்களா, என்று பார்த்துக்கொண்டேதான் வந்திருக்கிறார்கள்…
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாலைந்து பேர் ஏற்கனவே பாதுகாப்பாக ஏற்றப் பட்டிருந்தார்கள்.
கப்பல் அவனை நெருங்கியது.
கியது.
து.

( மு ற் று ம்)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்