பாடங்கள் பலவிதம்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

சபா இராஜேந்திரன்



அன்று சிவராமனுக்கு மனசு ஒரு நிலையிலில்லாதவாறு அங்குமிங்குமாய் அலை மோதிக்கொண்டேயிருந்தது. அவருடைய மனைவி இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. தனிமை அவருக்கு வெறுத்துவிட்டது. அவராகத் தேடிக்கொண்ட தனிமை. அவருடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல இடங்களில் கலியாணம் முடித்து அமெரிக்காவில் நல்ல வேலைகளையும் எடுத்துக்கொண்டு அங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். தாயார் இறந்தவுடன் தகப்பனைத் தங்களுடன் வந்து இருக்குமாறு மிகுந்த அன்புடன் கெஞ்சிக்கேட்டார்கள். சிவராமன் மறுத்துவிட்டார். தனது ஆசிரியர் வேலையைத் தொடர்ந்து செய்துவந்தார். பகலிலே பாடசாலையில் நேரம் போவதே தெரியாமல் போய்விடும். இரவிலும் வசதி குறைந்த மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். சாப்பாட்டில் ஒரு பிரச்சனையுமில்லை. காலையில் பழங்கள் மாத்திரம் சாப்பிடுவார். மத்தியானம் பாடசாலைக் கண்டீனில் சாப்பிட்டுக்கொள்வார். இரவிலே பக்கத்துத் தெருவில் பலகாரம் சுட்டு விற்கும் அம்மாள் அனுப்பிவைத்துவிடுவார்.
ஆனால் இப்போது சிலநாட்களாக இரவிலே தூக்கம் வருவது குறைந்துவிட்டது. படுத்து நித்திரையாகி ஒருமணிநேரம் கழிந்ததும் தூக்கம் கலைந்துவிடுகிறது. மனம் அலைபாய்கிறது. என்னவென்றே தெரியாததொரு ஏக்கம் அவரின் அடிமனதை வருடிக் கொண்டேயிருந்தது. ஒரு பெண் துணையிருந்தால் இப்படியாகக் கஷ்டப்படவேண்டியிராது என்றமாதிரியான எண்ணம் அவர் மனதில் அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது. பேச்சுத்துணைக்காகப் பெண் வேண்டியிருந்ததா அல்லது தனது காம இச்சையைத் தீர்ப்பதற்காக வேண்டியிருந்ததா என்று தன்னையே அடிக்கடி கேட்டுக் கொள்வார். சரியான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் பாடசாலையில் சக பெண் ஆசிரியைகளுடன் பழகும் போதெல்லாம் தனது மனசு பலவிதமான கற்பனைகளில் ஈடுபடுவது அவருக்குத் தெரிந்தது. பழகுவதற்குச் சிவராமன் மிகவும் இனியவர் என்பதால் எல்லா ஆசிரியர்களும் அவருடன் மிகவும் அன்பாகத்தான் பழகுவார்கள். அவர்களில் இரண்டு ஆசிரியைகள் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகுவார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த இருவரும் சிவராமனுடன் கதைத்துப் பழகினார்கள். நாளாக நாளாக அவர்களின் சிரிப்பும் பேச்சும் சிவராமனைப் பலவீனமாக்கிக் கொண்டே வந்தன. இரவெல்லாம் அந்த இருவரின் நினைப்பை அவரால் நீக்கமுடியவில்லை.
அவர்களைப்பற்றிய நினைப்புகள் அவருடைய தூக்கத்தைக் கெடுத்ததென்று சொல்வதைவிட, அப்படிக் கீழ்த்தரமாகத் தான் நினைக்கிறேனேயென்ற குற்றமனப்பாங்குதான் அவரை அதிகம் பாதித்தது. இப்படியாக அவர்களைப் பற்றி தான் நினைக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் தன்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்று நிலை குலைந்துபோவார். இதுவரைகாலமும் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணையும் அவர் தொட்டதில்லை. வாலிபனாக இருந்த காலத்தில் அவருடைய நண்பர்கள் தப்பான இடங்களுக்குப் போனபோது மிகவும் உறுதியாக இருந்தார். தனக்கு வரப்போகும் மனைவியுடன் மாத்திரமே தான் உடலுறவு வைத்திருப்பேன் என்று நண்பர்களுடன் காரசாரமாக விவாதித்துள்ளார். அதன்படியே இதுவரைகாலமும் வாழ்ந்துவந்துள்ளார். அப்படியாக மாறாத கொள்கையுடன் வாழ்ந்துவந்த தான் இப்போது நிலை தடுமாறினால் நண்பர்கள், சக ஆசிரியர்கள், பிள்ளைகள், மாணவர்கள் தன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசுவார்கள் என்று பயத்துடன் நினைத்துக் கொள்வார். பின்பு ஒரு சபலம் ஏற்படும். ஒருவேளை சக ஆசிரியைகளுக்கும் இந்தமாதிரியான ஆசை இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொள்வார். அதற்கு ஆதாரமாக அவர்களுடன் நடந்த சில சம்பாஷனைகளை நினைவு படுத்திக்கொள்வார்.
“Mr சிவராமன்! இன்றைய பத்திரிகையைப் பார்த்தீர்களா? எழுபத்தியிரண்டு வயதுக் கணவர் மூலம் முப்பத்திநாலு வயதுப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை. நிச்சயமாக நீங்கள் இன்னுமொரு கலியாணம் செய்யலாம்.”
“எங்கள் வீட்டிற்கு போன் வந்துள்ளது. இந்தாருங்கள் எனது நம்பர். நேரம் போகவில்லையென்றால் போன் பண்ணுங்கள். பேசிக்கொண்டிருக்கலாம்”
“இன்று கோயிலுக்குப் போயிருந்தேன். உங்கள் ஞாபகம் வந்தது. உங்கள் பெயரில் அர்ச்சனை செய்தேன். விபூதி எடுங்கள்”
தான் நல்லவர் என்பதற்காக இப்படியாகத் தன்மீது அன்பு வைத்து நெருக்கமாகப் பழகுகிறார்களா அல்லது அவர்களும் சபலபுத்தியுள்ளவர்களா என்பதை அவரால் நிர்ணயிக்கமுடியவில்லை. அதிலும் ஒரு சக ஆசிரியை பற்றி அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. வேறொரு ஆசிரியருடன் அவருக்குச் சில வருடங்களுக்கு முன்பு தொடர்பு இருந்ததென்ற கதை உலாவிவந்தது.
நல்லவனாயிருப்பதில் உள்ள சிரமம் அவருக்குத் தெளிவாக விளங்கியது. எல்லையைத் தாண்டிப் பார்க்கலாம் என்று அவருடைய காம உணர்ச்சி அவரைத் தூண்டியபோதும் அவருடைய உள்ளுணர்வு தடுத்துக் கொண்டேவந்தது.
அன்று சிறிது எல்லை தாண்டிவிட்டார். பேசிக்கொண்டிருந்துவிட்டு சக ஆசிரியை விடைபெற்றுக் கொண்டபோது அவளுடைய கையைப் பிடித்து விடைகொடுத்தார். வழக்கத்துக்கு மாறின செயல். ஆசிரியை ஒருகணம் தடுமாறிவிட்டதுபோல சிவராமனுக்குத் தெரிந்தது. ஆனாலும் சிறிது தூரம் சென்றபின்பு திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கை காட்டிவிட்டுச் சென்றாளே? அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
“ஆனானப்பட்ட விசுவாமித்திரருக்கே ஆசையைத் தடுக்கமுடியவில்லை. நீ எம்மாத்திரம்?”
அல்லது,
“எவ்வளவு காலம் இதற்காக நான் காத்திருந்தேன்”
தனது செய்கையினால் தடுமாறிவிட்டார். என்னசெய்வதென்றே புரியவில்லை. மறுநாள் அந்த ஆசிரியை எப்படிப் பார்த்துப் பேசமுடியுமென்று நினைத்துக் குறுகிப்போனார். நிம்மதியில்லாத மனதுடன் கடற்கரைக்குச் சென்று ஒதுக்குப்புறமாக இருந்து யோசித்துக் கொண்டேயிருந்தார். ஒரேவிதமான சிந்தனைகள்தான் திரும்பத்திரும்ப வந்தன.
இருட்டுப்படத் தொடங்கிவிட்டது. வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே எழும்பினார். சிறிது தூரத்திலே ஒரு இளம்பெண் கடலை நோக்கிச் செல்வதைக் கண்டார். சந்தேகத்துடன் சத்தம் போட்டுக்கேட்டார்.
“ஏய் பெண்ணே! என்ன செய்கிறாய்?”
பெண் திடுக்கிட்டு நின்றாள். என்ன செய்வதென்று ஒரு வினாடி யோசித்த அவள் விடுவிடுவென்று வேகமாகக் கடலை நோக்கி நடந்தாள்.
“ஓடாதே! அங்கேயே நில்லு”
சத்தம் போட்டுக்கொண்டு தன்னை நோக்கி ஓடிவந்த சிவராமனை வெறித்துப் பார்த்தபடி சிலைபோல நின்ற அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிவதைப் பார்த்த சிவராமன் ஆறுதலாகக் கேட்டார்.
“ஏனம்மா அழுகிறாய்?”
அவளுடைய அழுகை இன்னும் கூடியது. விம்மிவிம்மி அழுதாள்.
அழுகை சிறிதளவு குறையுமட்டும் காத்திருந்த சிவராமன் அன்புடன் கேட்டார்?”
“உன்னுடைய பெயரென்னம்மா?”
பதில் சொல்லாமல் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய எண்ணம் அவருக்குப் புரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். தனிமையான இடமாக இருந்தது. தற்கொலை செய்யும் நோக்கத்திலேயுள்ள அந்தப்பெண்ணுடன் தர்க்கம் செய்வதற்கு அந்த இடம் சரியானதல்ல என்று நினைத்த சிவராமன் “வாம்மா, அங்கே போயிருந்து பேசுவோம்” என்று சொன்னார்.
அவள் அவரை முறைத்துப் பார்த்தாள். கடலுக்குள் ஓடிப்போகலாமாவென்று மனதுக்குள்ளே போராடிக்கொண்டிருந்த அவளுக்கு ஆட்கள் குழுமியிருந்த இடத்திற்கு வருமாறு தன்னைக் கூப்பிட்ட மனிதனில் ஆத்திரமாக வந்தது. கடலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாள்.
அவளுடைய கையைப் பிடித்து நிறுத்த நினைத்து முன்னேறிய சிவராமனுக்கு அன்றையதினம் தான் வேறொரு பெண்ணின் கையைப்பிடித்தது ஞாபகம் வந்ததும் அப்படியே நின்றுவிட்டார். இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே சிறிதுநேரம் நின்றனர்.
“இரம்மா! நானும் உன்னைப்போல மனசுடைஞ்சுபோய்த்தான் இருக்கிறேன். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாம்”
சொல்லியவாறே அந்த இடத்திலேயே அவர் உட்கார்ந்தார். தனது எண்ணத்தை அவர் புரிந்துகொண்டாரென்பது அவளுக்குத் தெரிந்தது. அவருடைய அன்பான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட அவள் கீழே இருப்பதா இல்லையா என்று தனக்குள்ளே தடுமாறினாள். இருக்கவில்லை. நின்றுகொண்டே விரக்தியுடன் சொன்னாள்.
“இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை ஐயா”
ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன்னை மதித்துப்பேசுவதற்கு அந்தப்பெண் தயாராயிருப்பது சிவராமனுக்குப் புரிந்தது. அன்புடன் ஆறுதலாகச் சொன்னார்.
“வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். செத்துப்போகலாமேயென்ற எண்ணம் எல்லோருக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வந்திருக்கும். நீ மட்டும் விதிவிலக்கில்லையம்மா”
“சாதாரணமாக எல்லோருக்கும் வருகிற கஷ்டம் போல இல்லை எனக்கு வந்த கஷ்டம்”
அவள் பேசத்தொடங்கியது அவருக்குத் திருப்தியளித்தது. அவளைப்பேசவிடவேண்டுமென்ற நோக்கத்திலே ஒன்றும் சொல்லாமல் அவளை அன்புடன் பார்த்தபடியே இருந்தார்.
“ஐயா! எனக்கு நடந்ததைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் என்னோடை பேசவும் மாட்டீர்கள்”
அவர் பேசவில்லை. அவள் தொடர்ந்தாள்.
“அழுக்குப்பிடிச்ச இந்த உடம்பு உயிரோடை இருக்கக்கூடாது. ஒருத்தருக்கும் தெரியாமல் இந்த அழுக்கை இந்தக் கடலில் முழுகிவிடலாமென்று பார்த்தேன். ஆனால் உங்களைப் பார்த்தால் என்னுடைய அப்பா போல் இருக்கு. சாவுக்குப் பிறகு அங்கே போய் அவரிடம் சொல்லி அழலாமென்று பார்த்தேன். அவரைப்போல உள்ள உங்களிடம் சொல்லி அழுதால் ஆறுதலுடன் செத்துப்போகலாம்”
என்ன சொல்லலாமென்று யோசித்துக் கொண்டிருந்த சிவராமனை அந்தப்பெண் திடீரெனெக்கேட்டாள்.
“உங்களுக்குப் பெண்குழந்தை இருக்கிறதா?”
“இருக்கிறது. திருமணமாகிவிட்டது”
“உங்கள் மகளுக்குத் திருமணமாகுமுன்பே அவளை ஒருவன் கெடுத்துவிட்டால், உங்கள் மகளைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?”
“அவளை ஒருவன் கெடுத்துவிட்டால் அவள் கெட்டுவிட்டாள் என்று அர்த்தமில்லை”
“நீங்க சும்மா என்னைத் திருப்திப்படுத்துவதற்காகச் சொல்கிறீர்கள். கற்புக்கரசியான கண்ணகி பிறந்த தமிழ்மண்ணில் கற்பையிழந்து நிற்கும் நான் கெட்டுப்போகவில்லையென்று எப்படி நீ£ங்கள் சொல்லலாம்?”
“என்னுடைய பெயர் சிவராமன். பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்கிறேன். உன்னுடைய பெயரென்ன?”
தன்னுடைய விபரங்களை அவரிடம் சொல்வதா எனத்தயங்கிய அவள் சொன்னாள்.
“என் பெயர் சாந்தி. எனது குடும்ப விபரங்களைக் கேட்காதீர்கள். ஆனால் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தந்தான் என்னைக் கெடுத்துவிட்டான். அவனை எவ்வளவு நல்லவன் என்று நினைத்திருந்தேன். அப்படித்தான் இப்பவும் என்னுடைய அக்கா நினைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அவளின் புருசன் எவ்வளவு கேவலமாகத் துடிக்கத்துடிக்க என்னைக்கெடுத்தான் என்று அவளுக்குத் தெரியாது”
சொல்ல விருப்பமில்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப்பற்றி அவள் சொல்வதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சிவராமன்.
” இந்த விஷயம் அக்காவிற்குத் தெரிந்தால் அவள் செத்துப்போவாள். அதைவிட நான் செத்துப்போகலாம்”
“சாந்தி! நீ சொல்வது எனக்குப் புரிகிறதம்மா. கொஞ்சம் யோசிச்சுப்பார். நீ சாவதால் அவன் திருந்தப்போகிறானா? இல்லை. வேறு யாரையும் கெடுப்பான். ஒருநாளைக்கு உனது அக்காவிற்கு அவனைப்பற்றித் தெரியவரத்தான் செய்யும். அந்தநேரம் அவளுக்குத் துணையாய் நீ இருக்கவும் மாட்டாய்”
அவர் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட அவள் மெதுவாக அவர் பக்கத்தில் இருந்தவாறே கேட்டாள்.
“ஐயா! உயிரைவிடக் கற்புத்தான் முக்கியமென்று எங்கடை முன்னோர்கள் சொன்னது பிழையா?”
“இதற்குப் பதில் சொல்வதற்கு முதல் கற்பு என்று எதையம்மா நாங்கள் சொல்கிறோம் என்பதைப் பார்ப்போம். சமூகம் அங்கீகரிக்காத உடலுறவைச் சொல்லலாமா? இதிலே திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ என்பது முக்கியமில்லை. இப்படிப் பார்த்தோமென்றால் பலநேரங்களிலே இருவரும் ஒத்துக்கொண்டே கற்பிழந்து போகிறார்கள். சிலநேரத்திலே பெண்ணுக்கு விருப்பமில்லாமலே ஆண்கள் பலாத்காரப்படுத்துவதால் பெண்கள் கற்பிழந்து போகிறார்களென்று நான் நினைக்கவில்லை”
அவர் கூறுவதைக்கேட்ட சாந்திக்கு அதன் அர்த்தம் சரியாகப் புரியவில்லை. அவர் தொடர்ந்தார்.
“பாதிக்கப்பட்ட பெண்கள் நிச்சயமாகத் தற்கொலை செய்யக்கூடாது. பலாத்காரப்படுத்தும் ஆண்கள்தானம்மா இந்த உலகத்தில் இருக்கக்கூடாது. அவர்கள்தான் கொலை செய்யப்படவேண்டும்.”
அவருடைய கோபத்தைப் பார்த்த அவள் அவரைப் பயத்துடன் பார்த்தாள்.
“பயப்படாதே. நான் ஒரு தீவிரவாதியில்லை. ஒரு கோழியைக்கூட இதுவரை கொன்றிருக்கமாட்டேன். ஆனாலும் பெண்களைப் பலாத்காரம் செய்பவர்களையும் சிறுவர்களைக் கொடுமைப் படுத்துபவர்களையும் நாட்டிலே நடமாடவிடக் கூடாதென்றுதான் நினைக்கிறேன்”
அவர்மீது அவளுக்கு மதிப்புக்கூடியது.
“ஐயா! கற்பிழத்தல் என்றால் சமூகம் அங்கீகரிக்காத உடலுறவு வைத்திருப்பது என்று சொன்னீர்கள். அப்படியென்றால் ஆண்களுக்கும் கற்பு இருக்கிறதா?”
“சமூகம் என்றால் பலதரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். என்னுடைய பார்வையில் ஆண்களுக்கும் கற்பு இருக்கிறது. கணவன் மனைவி தவிர மற்றவர்களுடன் தொடர்புள்ள அனைவருமே கற்பிழந்தவர்கள்தான்”
“நீங்கள் இலகுவாகச் சொல்லிவிடலாம். ஆனால், இதை ஆண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவேண்டுமே?”
“ஆண்களைச் சொல்லிக் குற்றமில்லை. இதற்கெல்லாம் பெண்கள்தான் முக்கிய காரணம். நீங்கள் முதலில் மாறவேண்டும். ஆண்களுக்கும் கற்பிருக்கிறதென்று நீங்கள் நினைக்கவேண்டும்”
“நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லையே. ஆண்டவன் எங்களை அப்படிப் படைச்சுப்போட்டாரே. ஆண்கள் தவறு செய்தால் அதற்கு அடையாளம் இருக்காது. பெண்கள் தவறு செய்தால் தாய்மை காட்டிக்கொடுத்துவிடுமே”
“சிரிப்புத்தான் வருகிறது. அடையாளம் ஒன்றும் இல்லாவிடில், யாருக்குமே தெரியாவிடில் தப்புச் செய்யலாமா?. உன்னுடைய கதையைப்பார். நீ கெடுக்கப்பட்டது உனக்கும் அந்த அயோக்கியனுக்கும்தான் தெரியும். ஆனாலும் நீ வெட்கப்படவில்லையா? அதேமாதிரியாக தப்புச் செய்யும் ஒவ்வொரு ஆண்மகனும் தனக்குள்ளேயே வெட்கப்படவேண்டும்”
இப்போது சாந்தியின் அழுகை நின்றுவிட்டது. கல்லூரியில் பேராசிரியர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்கும் ஒரு மாணவிபோலச் சிவராமன் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“சாந்தி! கொஞ்சநேரத்திற்கு முன்பு கண்ணகியைக் கற்புக்கரசி என்றும் உயிரைவிடக் கற்புத்தான் முக்கியம் என்பது தமிழ்ப்பண்பாடு என்றும் சொன்னாய். எனக்கு அதில் உடன்பாடில்லை. உண்மையைச் சொல்லப்போனால், கண்ணகியைப் பொறுத்தவரையில் கற்பைவிட உயிர்தான் மேலென்று நினைத்தாளென்றுதான் நான் சொல்வேன்”
“என்னைய்யா, இப்படிச்சொல்கிறீங்க?”
“நான் என்னுடைய கோணத்திலேயிருந்து பார்க்கிறேன். ஆண்களுக்கும் கற்பு இருக்கிறதென்ற எண்ணத்துடன் பார்க்கிறேன். கோவலன் மாதவியுடன் தொடர்பு வைத்தபோதே அவன் தனது கற்பை இழந்துவிட்டானென்பதுதான் எனது நிலை. அப்படி அவன் கற்பை இழந்தபோது கண்ணகி வருத்தப்பட்டாளேயொழிய கோபப்பட்டாளா? கோவலன் மீது கோபம் கொண்டு அவனை ஏசினாளா? இல்லையே. ஆனால் அவனுடைஉ உயிர் போனபோது எவ்வளவு கோபப்பட்டாள். பாண்டியமன்னனும் மனைவியும் இறந்தும்கூட அவள் கோபம் அடங்கவில்லை. மதுரைமாநகரையே எரித்தாள். நான் சொல்வதை ஒத்துக்கொள்கிறாயா? கோவலனுடைய கற்பைவிட அவனது உயிர்தான் அவளுக்கு முக்கியம்”
“நாங்கள் கண்ணகியைத் தெய்வமாகக் கருதுவதுபற்றி….”
“அதில் ஆண்களின் பங்கு நிரம்ப இருக்கிறதென்றுதான் நான் நினைக்கிறேன். கண்ணகி போல மனைவி வேணுமென்றுதான் பல ஆண்களுக்கும் விருப்பம். தாங்கள் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும்போது பொறுத்துக்கொள்ளவேண்டும். தங்களுக்கு ஒரு துன்பம் வந்தபோது மனைவி பக்கபலமாக இருக்கவேண்டும்.
“நீங்கள் சொல்வதும் சரிபோலத்தான் இருக்கிறது. ஆனாலும் எங்கள் சமூகம் மாற எவ்வளவோ காலம் இருக்கிறது. நான் இப்போது என்ன செய்யலாம்? வீட்டிற்குப்போனால் அந்த அயோக்கியன் திரும்பவும் என்னைப் பலாத்காரம் செய்வானே?”
“நீ பயப்பட்டால்தான் அவனுக்குப் பயமிருக்காது. இனிமேலும் அவன் தப்பாக நடக்க நினைத்தால், உனது அக்கா உட்பட எல்லோருக்கும் சொல்லிவிடுவாயென்பதை அவனுக்குத் தெளிவாகச் சொல்லிவிடு. அதையும் மீறினால் அவனைக் கொல்வதற்குக்கூடத் தயங்கமாட்டாயென்பதை அவனுக்குத் தெளிவாக்கிவிடு. ஒரு கத்தியை எடுத்துக்காட்டி அதை உன்னுடைய மடியிலை சொருகிவைத்திரு”
தான் இப்படியாக ஒரு வன்முறையாளனாக எப்படி மாறினேனென்ற எண்ணம் அவர் மனதிலே வந்தபோதும் அவருடைய வார்த்தைகள் சாந்திக்கு ஒரு பலத்தைக்கொடுத்தது என்பதையிட்டுச் சந்தோஷமாயிருந்தது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் ரோட்டை நோக்கி நடந்தார்கள். அவருடைய விலாசத்தை வாங்கிக்கொண்ட சாந்தி பஸ் ஏறித் தனது வீட்டிற்குச் சென்றாள்.
ஒரு நல்ல பாடம் நடத்திய திருப்தியில் சிவராமனும் தனது வீட்டிற்குச் சென்றார்.
மறுநாள் அதிகாலையில் சிவராமனின் தொலைபேசி அடித்தது. மறுமுனையில் அவருடைய சக ஆசிரியை.
“சார், இன்னைக்கு இரவு எங்கள் வீட்டிற்கு நீங்கள் சாப்பிடவரவேண்டும்”
அவருக்குத் திகைப்பாயிருந்தது. ஒருவேளை அவளும் தப்பான எண்ணம் உள்ளவளோ?
“இன்று எனது கணவனின் பிறந்தநாள். அதற்காக ஒரு விருந்து கொடுக்கிறேன். தவறாமல் வாருங்கள்”
“நீங்கள் என்னுடைய கையைப் பிடித்ததை நான் மன்னித்துவிட்டேன். எனக்கு அந்தமாதிரியான எண்ணம் இல்லை” என்பதை அப்படி விருந்துக்கு அழைப்பதன் மூலம் சொல்கிறாளா என்பதும் அவருக்குத் தெளிவாகவில்லை.
அவள் தொடர்ந்தாள், “எனக்கு என் கணவர் ரொம்ப முக்கியம். அதுதான் தவறாமல் அவருடைய பிறந்தநாளன்று ஒவ்வொருவருடமும் விருந்து கொடுப்பேன். நான் இறக்கும்வரை இது நிற்கக்கூடாது”
அவள் என்ன சொல்கிறாளென்பது அவருக்குப் புரிந்துவிட்டது. ஒரு சிக்கலிலிருந்து விடுபட்டதுமாதிரித் திருப்தியாயிருந்தது.
அவர் ஒரு புதியபாடம் கற்றுக்கொண்டார்.


asrajendran@hotmail.com

Series Navigation

சபா இராஜேந்திரன்

சபா இராஜேந்திரன்