• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5)

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:5)

This entry is part of 32 in the series 20070322_Issue

சி. ஜெயபாரதன், கனடா


என் தூண்டிலை எடுத்து வா!
நைல் நதியில் மீன் பிடிக்கப் போவோம்!
இன்னிசை அங்கே பின்னணியில் கேட்க
வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை!
வளைந்த கொக்கி வாயைக் குத்தி
இழுத்திடும் போது அவை அனைத்தும்
ஆண்டனி என நினத்துக் கூறுவேன்:
“ஆகா! நீ அகப்பட்டுக் கொண்டாய்” …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

அந்தக் காலமது! அப்போது ஒருநாள்
ஆண்டனி பொறுமையைச் சோதிக்க
அவரை எள்ளி நகை யாடினேன்!
அன்றிரவு அமைதிப் படுத்தி
முன்னே புன்முறுவல் புரிந்தேன்!
அடுத்த நாள் காலை அவரை
படுக்கையில் தள்ளினேன்,
மதுவினைக் கொடுத்து!
முகத்திரை அங்கியால் மூடி அவரது
வெற்றி வாளை உருவிக்
பற்றினேன் என் கையில்! …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

“ஆண்டனி செத்தார்” என்று நீ சொன்னால்
மாண்டு போவாள் உன்னாசை ராணி!
உயிருடன் சுகமாய் உள்ளார் என்றால்
உனக்கு ஈதோ பொற் காசுகள்!
மன்னர் நக்கி முத்தமிட நடுங்கும்
என் கரங்கள் ஈதோ நீ முத்தமிட! …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

பேசு முன்னே உன்னை அடித்திட
என் மனம் துடிக்கும்.
ஆண்டனி நலமென்றால்
அது போது மெனக்கு!
அக்டே வியாக்கு நண்பன்,
ஆண்டனி போரில் பிடிபட வில்லை
என்றால் பொழிவேன் பொற்காசு பரிசு!
செல்வ முத்துக்கள் அள்ளித் தருவேன். …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

ஆண்டனியை நான் புகழ்வதால்
அக்டேவியஸின் பகை யானேன் …. கிளியோபாத்ரா

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:5

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீள்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்:7 காட்சி:5

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழிகள்: ஐரீஸ், ஈராஸ், சார்மியான், மர்டியான் [அலி], பணியாள் அலெக்ஸாஸ்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி எகிப்துக்கு மீண்ட செய்தியைக் கேள்விப்பட்டுப் பரபரப்புடன் இருக்கிறாள். ரோமுக்கு அனுப்பிய தூதுவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

கிளியோபாத்ரா: [மனக் கவலையுடன்] ஐரீஸ்! வாத்திய இசைக் குழுவை அழைத்துவா! துயர்க்கடலில் மூழ்கிப் போன என்னை இன்னிசைதான் கரை சேர்க்க வேண்டும்! என் மன வேதனை தீருவது எப்போது? மதுவும் கசந்தது! படுக்கையும் முள்ளானது! நேற்றிரவில் எனக்குத் தூக்க மில்லை! ஏன், நிற்கிறாய் போ அழைத்துவா! [ஐரீஸ் போகிறாள்] சார்மியான், வா நாம் பில்லியர்டு விளையாடுவோம்.

சார்மியான்: மகாராணி! என் கையில் காயம் பட்டு விட்டது. என்னால் விளையாட முடியாது. மர்டியான் கூட விளையாடுங்கள்.

கிளியோபாத்ரா: மர்டியான் ஓர் அலி! அது ஆணுமில்லை! பெண்ணுமில்லை! மரப் பொம்மை அது! மரப்பாச்சிப் பொம்மையோடு குழந்தைதான் விளையாடும். பெண்ணோடு பெண் விளையாடுவதில் பேரின்பம்! சார்மியான் வா! உன்னோடுதான் நான் விளையாடுவேன்! நீதான் எனக்கு அருமைத் தோழி!

[அப்போது வாத்திய இசைக்குழு நுழைகிறது]

சார்மியான்: ஈதோ, வாத்தியக் குழு வந்து விட்டது. மகாராணி கான வெள்ளத்தின் பின்னணியில் பில்லியர்டு விளையாடலாம்.

கிளியோபாத்ரா: [மனம் மாறி] வேண்டாம், நாமெல்லாம் நைல் நதிக்குப் போவோம்! எனது தூண்டிலை எடுத்துவா. மீன் பிடிக்கலாம். வாத்தியக் குழுவின் இசைப் பின்னணியில், நான் வஞ்சிப்பேன் செதில் முளைத்த மீன் குழுவை. தூண்டில் கொக்கி பிடித்து வாய் கிழியும் ஒவ்வொரு மீனையும் ஆண்டனி என்று நினைத்துச் சொல்வேன், “ஆஹா, என்னிடம் பிடிபட்டுக் கொண்டாய் ஆண்டனி.” என்று.

சார்மியான்: மகாராணி! ஆண்டனி ஒரு விநோத மீன்! அந்த மீனுக்கு இரட்டைத் தலை! அது முன்னும் போகும், திரும்பாமல் பின்னும் போகும்! ஒருமுகம் எகிப்தைப் பார்க்கும்! மறுமுகம் ரோமை நோக்கும்! அந்த இரண்டு வாயில் ஒரு வாயைத்தான் உங்கள் தூண்டில் கிழிக்கும்! அது எந்த வாய் என்று சொல்வீர்?

கிளியோபாத்ரா: நல்ல உவமை! ரோமைப் பார்க்கும் அந்த கோர முகத்தைக் கிழிக்கும் என் தூண்டில்! இரண்டு முகமும் என்னை நோக்க வேண்டும்! என்னைத்தான் தேட வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? எங்கே அந்த தூதுவன்? வந்து விட்டானா? ரோமில் ஆண்டனி என்ன செய்கிறார் என்று உளவு செய்யப் போனான்! … [சிரித்துக் கொண்டு] கால தேவன் அறிவான்! அன்றொரு நாள் நான் நகையாடிக் கேலி செய்து, ஆண்டனியின் பொறுமையைச் சோதித்தேன்! அன்றிரவு முறுவல் பூண்டு அவரை அமைதிப் படுத்தினேன்! அடுத்த நாள் காலையில் ஆண்டனியைக் குடிபோதையில் தள்ளிப் படுக்கையில் கிடத்தினேன். அதன் பிறகு என் முகத் துண்டையும், அங்கியையும் அவர் மீது போர்த்தி, அவரது உடை வாளைக் கைப்பற்றினேன்!

சார்மியான்: அப்படியா? அத்தனை பெரிய தளபதி ஆண்டனியை மடக்கிச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டீர்! வீரமும் வசீகரமும் சண்டை யிட்டால், வசீகரந்தான் வெல்லுகிறது! பெண்ணின் வசீகரமே ஆணின் வாளைவிடக் கூரியது!

[அப்போது ஒரு தூதுவன் வருகிறான். வணங்குகிறான்.]

கிளியோபாத்ரா: [கோபமுடன்] எங்கிருந்து வருகிறாய் ? இத்தாலியிருந்தா வருகிறாய்? நல்ல செய்தியா? அல்லது கெட்ட செய்தியா? செவிக் கினிய செய்தியைச் சொல்! நாட்கள் ஆகிவிட்டன நல்ல செய்தியைக் கேட்டு! சொல் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?

தூதுவன்: [மண்டியிட்டு] வணக்கம், மகாராணி! … நான் சொல்ல வருவது…. என்ன வென்றால்..!

கிளியோபாத்ரா: [பொறுமையின்றி] செத்து விட்டார் ஆண்டனி என்றால் கொன்று விடுவாய் உன் ஆசை ராணியை! நலமுடன் உள்ளார், யாருடனும் இல்லாமல் தனியாக உள்ளார் என்றால், உனக்குப் பொற்காசு வெகுமதி கிடைக்கும். பேரரசர் நக்கி முத்தமிட நடுங்கும் என் கையை முத்தமிடத் தருவேன் உனக்கு!

[பொற்காசுகளைத் தந்து தன் கரத்தை நீட்டுகிறாள்]

தூதுவன்: [தயக்கமுடன், பயமுடன்] மகாராணி! முதல் செய்தி. … ஆண்டனி நலமாக உள்ளார்.

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] ஈதோ இன்னும் தருகிறேன் பொற்காசுகள்! அப்படி நல்ல செய்தியாகச் சொல். போருக்குப் போனவர் உயிரோடு உள்ளார்! அவர் சாகவில்லை! அது போதும். என் நெஞ்சில் தேன் ஊறுகிறது! அடுத்த நல்ல செய்தி என்ன?

தூதுவன்: ஆமாம், மகாராணி, அவர் உயிருக்கு ஒன்றும் நேரவில்லை. ஏனென்றால் எதிர்பார்த்தபடி போர் எதுவும் நிகழ வில்லை! ஆனால் மேலும் நான் சொல்லப் போவது ….. கோபம் ஊட்டலாம் உங்களுக்கு! … கேளுங்கள் மகாராணி!

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] என்ன ஆனால் ஆனால் …! எனக்குப் பிடிக்காது அந்த ஆனால்! நீ வாயைத் திறப்பதற்கு முன் உன்னை உதைக்க வேண்டும்! ஆண்டனி நலமாய் உள்ளார் என்றாய், நல்லது. அக்டேவியஸ் கையில் பிடிபடாமல் அவருக்கு நண்பராகி விட்டார் என்றால் நல்லது!

தூதுவன்: ஆமாம், ஆண்டனி அக்டேவியஸின் நண்பர் ஆகிவிட்டார். அக்டேவியஸின் மைத்துனர் ஆகிவிட்டார்! …. ஆனால் … !

கிளியோபாத்ரா: ஆனால், ஆனால் என்று நீ சொல்வது எனக்குப் பிடிக்காதது! மைத்துனர் ஆகிவிட்டார் என்றால் …எனக்குப் புரிய வில்லை. மார்தட்டிப் போரிட்டவர் எப்படி மைத்துனர் ஆகிவிட்டார்?

தூதுவன்: மகாராணி! மகாராணி! அடிக்காதீர் என்னை! நானிதைச் சொல்லத்தான் வேண்டும்! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி! அக்டேவியஸின் ஒன்றுவிட்ட தங்கை அவள்.

கிளியோபாத்ரா: [பக்கத்தில் இருந்த மதுக் கிண்ணத்தை தூதுவன் மீது விட்டெறிகிறாள். கைவாளை உருவி எடுத்து] முட்டாள்! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? ஆண்டனிக்குத் திருமணமா? நானிருக்க வேறு மணமா? அழைப்பிதழ் எனக்கு வரவில்லை! பொய்! பொய்! பொய்! பொய் சொல்லாதே! நீ யுருடன் உலவக் கூடாது! [விரட்டி விரட்டித் தூதுவனைக் குத்தப் போகிறாள்]

தூதுவன்: மகாராணி! நான் தூதுவன்! நான் ஏழை! என்னைக் கொல்லாதீர். எனக்கு மனைவி, மக்கள் உள்ளார். ஆண்டனியின் திருமணத்தால் என்னுயிரை வாங்காதீர். [ஓடுகிறான்]

கிளியோபாத்ரா: [ஆங்காரமாகக் கூச்சலிட்டு, விரட்டிக் கொண்டு] அயோக்கியப் பயலே! உன் கண்ணைக் குடைந்து எடுக்கிறேன், பார்! என்ன சொன்னாய்? திருமணம் செய்து கொண்டாரா? நானிருக்க அக்டேவியா சிறுக்கியை ஆண்டனி எப்படித் திருமணம் செய்யலாம்? காதல் சல்லாபத்துக்குக் கிளியோபாத்ரா! கல்யாணத்துக்கு அக்டேவியா? அந்த செய்தியை ஏன் கொண்டு வந்தாய்? அதை ஏன் எனக்குச் சொன்னாய்? [மறுபடியும் விரட்டுகிறாள்] ஆண்டனிக்குத் திருமணமா?

சார்மியான்: மகாராணி, பாபம் தூதுவன், தயவு செய்து விட்டுவிடுவீர்! தகவல் கொண்டுவந்த தூதுவனைக் கொலை பண்ணுவது பாபம்! மகாப் பாபம்! உங்கள் கோபம் ஆண்டனி மீது! தூதுவன் மீதல்ல!

தூதுவன்: [ஓடிக் கொண்டே] நான் செத்தாலும் உண்மையைச் சொல்கிறேன்! மகாராணி! அக்டேவியாவை மணந்து கொண்டார் ஆண்டனி.

கிளியோபாத்ரா: [நின்று ஆனால் ஆங்காரம் அடங்காமல்] நாசமாய் போகட்டும் ரோமாபுரி! பேரிடி விழட்டும் அக்டேவியா மீது! பெரு மின்னல் அக்டேவியஸ் கண்களை எரிக்கட்டும்! நைல் நதி பொங்கி பாலை வனத்தில் பாயட்டும்! என் ஆண்டனி திருமணம் செய்து கொண்டாரா? எவர் உண்மையான ஆண்டனி? என்னை நேசித்த ஆண்டனியா? அக்டேவியாவை மணந்த ஆண்டனியா?

சார்மியான்: உங்களை நேசித்த ஆண்டனிதான் மெய்யானவர் மகாராணி!

கிளியோபாத்ரா: [தளர்ந்து போய்] ஐரிஸ்! சார்மியான்! அருகில் வாருங்கள், மயக்கம் வருகுது எனக்கு! பிடித்துக் கொள்வீர் என்னை! தாங்க முடியாது இந்த வேதனையை! … அலெக்ஸாஸ்! போ ரோமுக்கு! அக்டேவியாவைப் பற்றி எனக்குத் தகவல் வேண்டும்! அவள் வயதென்ன? அவள் குட்டையா? நெட்டையா? முகம் எப்படி என்று கண்டு வா! எடுப்பான உடம்பா? அல்லது எலும்புக் கூடா? எனக்குத் தெரிய வேண்டும்! கூந்தலின் நிறமென்ன? கண் பூனைக் கண்ணா? அல்லது என்னைப் போல் புலிக் கண்ணா? பார்த்து வா! போ அலெக்ஸெஸ் போ! சீக்கிரம் செல்! உடனே தெரிந்து வா!

[அலெக்ஸெஸ் போகிறான்]

கிளியோபாத்ரா: ஐரிஸ்! சார்மியான்! படுக்கை அறைக்கு என்னைக் கொண்டு செல்வீர். [இருவரும் கிளியோபாத்ராவைத் தாங்கிக் கொண்டு போகிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 21, 2007)]

Series Navigation