மாத்தா-ஹரி – அத்தியாயம் – ஒன்று

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஹரிணிக்கு நாக்கு உலர்ந்திருந்தது. தொண்டையில் வரட்சி. வழக்கத்தைப்போல ஆறுமணிக்கே விழித்தாயிற்று. மனத்திலிருந்த பாரம் தலையிலும் வெளிப்பட்டது. ஆறுதலளிப்பதுபோல மின்விளக்கு ஒளியில் நீர்த்திருக்கும் இருட்டு. கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. உடலிலும் அப்படியொரு அசதி. விரல்களை மடக்கிக் கைகளினால் கண்களை மாற்றிமாற்றிக் தேய்த்துக்கொண்டவளின் பார்வையில், சுவரில் மாட்டியிருந்த பெண்மணியின் படம் முதலில் பட்டது. மடங்கிக் கிடந்த கால்களிரண்டையும் போர்வையை விலக்காமலேயே நீட்டினாள், மாறாக கைகளிரண்டும் சட்டென்று மேலே உயர, சின்னதாய் ஒரு கொட்டாவி.

நேற்றுமாலை வெகு நேரம் அலுவலகத்திலிருக்க வேண்டியிருந்தது. அவளது நிறுவனம் வளர்ந்துவரும் கணிணி நிறுவனம்: பெயர் டிராக்குலா.கம். இருபது ஊழியர்கள். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இலாபத்தில் கொழித்துக்கொண்டிருக்கிறது. பிரான்சு நாட்டின் இருபது சதவீத நிறுவனங்கள், தங்கள் எதிர்கால ஊழியர்களை அதன் மூலந்தான் தேர்வு செய்வதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாள். ‘டெல்’ நிறுவனம் முன்னூறு இணையசேவை வழங்கிகளை நியூசிலாந்து தொடங்கி, அமெரிக்காவரை(பின்னே இந்தியா இல்லாமலா) அவர்களுக்காக உலகெங்கும் நிறுவியிருக்கிறதாம், நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். விழிகளை உயர்த்தி கண்மணிகள் மின்ன அவள் சொல்லும் அழகுக்காக நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நேற்று, பிரான்சு டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தோடு மிகப்பெரிய ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டது. இயக்குனரின் நேரடிபார்வையில் நிறுவனம் இருப்பதால், வேலை முடிந்ததென்று வரமுடியாது. நிர்வாக இயக்குனரென்று சொன்னால் ஏதோ நரைத்த தலை, வயிறு பெருத்த ஆசாமி என்று நீங்கள் பாட்டுக்கு எதையாவது கற்பனை செய்துகொள்ளவேண்டாம். ஒவ்வொரு நாளும் இரண்டு கி.மீ ஓடி உடலை பராமரிக்கிற இருபத்தெட்டுவயது இளைஞன். ஆக ஒப்பந்தத்தைத் தயாரிக்க, கையொப்பமிட, விற்பனை பிரிவு, விளம்பரப் பிரிவென ஆளுக்கொரு நகல் தயாரித்துக் கொடுக்க, பத்திரிகைகாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க, பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்டு இருப்பிடம் திரும்பவென்று அதிகாலை நான்காகிவிட்டது. ஆடைகளை வரவேற்பறையிலேயே அவிழ்த்து உதறியிருந்தாள்.

கிழமை நாட்களென்றால் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிடுகிற வழக்கம். காலைச் சடங்குகளை, நேர அட்டவணைப்படி சுருக்கமாக முடித்துக்கொண்டு, ஏழரை மணிக்கு கராஜிலிருந்து காரை எடுத்தாகவேண்டும். அதிவேகச் சாலைகளில், நெருக்கடியேதும் இல்லையென்றால், 30 கி.மீட்டர் தொலைவிலுள்ள அலுவலகத்தில் வரவேற்பில் அமர்ந்திருக்கிற ஜெனி·பர்க்கு ஏழு ஐம்பதிற்கு ‘போன் ழூர்’* சொல்ல முடியும்.

வார இறுதி நாட்கள் சோம்பேறித்தனத்துடன் விடிபவை. எல்லா காரியங்களுக்கும் கூடுதலாக நேரத்தினை ஒதுக்கிக்கொண்டு செயல்படுவது பழகிவிட்டது. திட்டமிடல்கள் இல்லை. விழித்தபடி படுத்திருக்கலாம். காலை உணவுக்கான நேரமென்பது பத்தும் ஆகலாம் பதினொன்றும் ஆகலாம். நினைப்பு வந்தால் பல் துலக்கலாம். அவசரமாய் ஓடி சென்று கணினியை உயிர்ப்பித்து, ‘மணக்கும் மல்லிகை’ வலைப்பூ தளத்திற்காகச் எதையாவது எழுதலாம், இடையில் டாய்லெட் போகலாம், மீண்டும் விசைப்பலகைக்கு வரலாம். தோழி ரீட்டாவோடு தொலைபேசியில் பேசவேண்டுமென்கிற நினைப்புக் குறுக்கிடும். எழுந்தோடுவாள், அவசரகதியில் எண்களைத் தொட்டு, (குறைந்தது இரண்டு முறை) எப்படி இருக்கிறாய் எனப் பிரெஞ்சுமொழியில் நலம் விசாரித்துவிட்டு ஸ்டார் அக்காடெமி, ஜானாதிபதி தேர்தல், இந்திய சினிமா, வெண்டைக்காய் மசாலா என்று தமிழில்பேசப்போக ஒரு கட்டத்தில் அவள் எப்போதும்போல, “நான் வேண்டுமானா, பிறகு போன் பண்றேனே” என்பாள், இவள் “சரி” என்பாள், அவள் மறுமுனையில் ரிஸீவரை வைக்கும் சத்தம் கேட்க மீண்டும் கணினி…

சலவை மணம் குறையாத பருத்தித் துணியாலான வெள்ளைப் போர்வையை, உதறித் தள்ளிவிட்டு, வாய் திறந்த அலாரத்தை விரல் முனைகளால் அடக்கினாள். எழுந்ததும் காத்திருந்ததுபோல அணிந்திருந்த மஸ்லின் இரவாடை, உடலினின்று நழுவிப் பாதங்களை மறைத்தது. தாண்டிக்கொண்டு நடந்தாள். இடுப்பிலும் மார்பிலும் ஸ்லோகி. கேட்பாரில்லையென்கிற தைரியம். அவளது ராச்சியம். அந்த ராச்சியம் ஸ்ட்ராஸ்பூர் நகரின் மேற்கிலுள்ள வில்சன் அவென்யூவில், நான்காவது மாடியிலிருக்கிறது. ஒரு வரவேற்பறை, அருகிலேயே சமையலறை. எதிரே படுக்கை அறை, ஒட்டினாற்போல குளியல் மற்றும் இயற்கை உபாதைகளுக்கான சிறிய ஒழிவிடம். வரவேற்பு அறையில், சமீபத்தில் வாங்கியிருந்த ஈரானிய தரைவிரிப்பு. வெளுர்மஞ்சள் சுவற்றில், அரக்குவண்ண பின்னணியில் தஞ்சாவூர் ஓவியங்கள், மத்தியில் கரும் பழுப்பில் தோலாலான சாய்விருக்கை. எதிரே சின்னதாய் செம்மரத்தாலான சிறிய மேசை, வலதுபுறம் சுவரையொட்டி நீங்கள் பார்ப்பது நூல் நிலையம். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் எல்லாம் கலந்திருக்கிறது. நேற்றைய ·பூக்கோ, தெலெஸ், தெரிதா, சார்த்துரூ, சிமொன் தெ பொவார், பெட்டி ·ப்ரீடென், தொடங்கி, இன்றைய மர்செல் கொஷெ, தொமினிக்லெக்கூரென அம்மாவின் ஞாபகார்த்தமாக இவள் வயதிற்குப் பிடிபடாத பெரியவர்கள் இருக்கிறார்கள். பிறகு தனக்கே தனக்கென்று எரிக் ஒல்தெர், ஒலிவியே அதாம், மார்க் லெவி, கரோலின் லமார்ஷ், டாம் கிளன்சி, ஜான் கிரிஷாம்…. தமிழில் வேண்டாம் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரையும் வாசிக்கிறாள். யாரென்று கேட்டுவிடாதீர்கள். அதை இங்கே சொல்வதற்கில்லை. பூச்சாண்டிகாட்டாமல் இயல்பாகச் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அவளுக்கு முக்கியமாம்.

கைகளை வலப்புறமும், இடப்புறமும் நீட்டி, பின்னர் இடுப்பில் கொண்டுவருகிறாள், இயல்பாய் பின்புறமாக நடந்துசென்று சமயலறைக்குள் நுழைந்தாள். பிரிஜ்ஜைத் திறந்து, ஆக்டிவா தயிர் குப்பியை உடைத்து கிண்ணத்திற் கவிழ்க்கிறாள். உணவு மேசையிலிருந்த பழத்தட்டில் ஸ்ட்ராபெரி பழங்களில்லிருந்த காம்புகளை கிள்ளியெறிந்துவிட்டு, பழங்களை நான்காகப் பிளந்து தயிரில் கலந்தவள், சிறிய மேசைக்கரண்டியொன்றின் உதவியுடன் சாப்பிட்டபடி நடந்துவந்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, அதை அப்படியே அருகிலிருந்த மேசைமீது வைத்துவிட்டு வரவேற்பறையின் இடதுபுறமிருக்கும் கதவினைத் திறந்துகொண்டு பால்கனியை எட்டிப்பார்க்கிறாள்

ரைன் நதியிலிருந்து பிரிந்த கிளைநதி சற்றுதூரத்தில் ஓசையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. வரிசையாக நிமிர்ந்து தழைத்திருந்த மேப்ள் மரங்களுக்கிடையே ‘பீச்’ மூங்கிற்புதர்களைப்போல ஒழுங்கற்று முளைத்து நான்கு திசைகளிலும் கூன்போட்டு நின்றிருக்கின்றன. அவற்றில் கரிக்குருவிகள் வரிசையாக உட்கார்ந்துகொண்டு அவ்வப்போது மூக்கினைக் கிளைகளில் தேய்ப்பதும் பின்னர் சிவ்வென்று ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் அமர்ந்த இடத்திற்கு வருவதுமாயிருக்க, கைத்தட்டி அவைகளின் கவனத்தைத் தன்பக்கமாய்த் திருப்ப உத்தேசித்து அவ்வாறு செய்யவும் செய்தாள். தென்மேற்காக தூரத்தில் குரானாம்பூர் பீர் ஆலையின் பெரியபுகைபோக்கியூடாக கசியும் புகை. பிறகு கண்ணுக்கெட்டியவவரை அடுக்கடுக்காய், செதிள்செதிளாய் சாம்பல் வண்ணத்தில் கூரைகள், இடைக்கிடை புகைபோக்கிகள்… ஒலி ஒளி வாங்கிகள். பிரான்சு நாட்டு இரயில்வே குழுமத்திற்குச் சொந்தமான இரயிலொன்று ஸ்ட்ராஸ்பூர் இரயில் நிலையத்தை நெருங்குவதாலேயே என்னவோ சத்தமின்றி மெதுவாக ஊர்கிறது. அநேகமாக பாரீஸிலிருந்து வருகிற இரயிலாகவிருக்கலாம்.

நேற்றிரவு ஒழுங்காக சாப்பிடாதது ஞாபகத்திற்குவந்தது. ஷம்பெய்ன் வேறு அதிகமாகவே வயிற்றில் இறங்கியிருந்தன் விளைவு, மீண்டும் பசியெடுத்தது. டோஸ்ட்டரில் பிரெட்டும், முட்டையும் கொண்டு சாண்ட்விச் தயாரித்து விழுங்கினாள். மிச்சமிருந்த வயிற்றுக்கு ஆரஞ்சு ஜூஸ் உதவியது. சாப்பிட்டத் தட்டை சமயலறைத் தொட்டியில் போட்டு, குழாய் நீரைத் திறந்து மூடினாள்.

வரவேற்பறையிலிருந்த சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் ஒருமணிநேரத்தில் அம்மாவைச் சந்தித்தாகவேண்டும். அருகில்தானிருக்கிறாள். அருகிலிருந்தாலும் இவள்தான் போய்ப்பார்க்கவேண்டும். இவளைக் கண்டதும், எதிர்கொள்ளவோ, கட்டியணைக்கவோ, என்ன சாப்பிடுகிறாய் எனபதானச் சம்பிரதாய சொற்கள் பிரயோகிக்கவோ அவளால் ஆகாது. இருவரும் அடுத்திருப்பவர்களுக்கு இடையூறில்லாமல் உரையாடத் தெரிந்தவர்கள். ஒரு வித ஊமைகள் சம்பாஷனை. ஸ்ட்ராஸ்பூர் நகரின், மத்தியக் கல்லறையில் அவள் இருப்பிடம். கடந்த சிலவருடங்களாக பிப்ரவவரி மாதத்தில் பத்தாம் தேதியன்று கல்லறைக்குச் சென்று அம்மாவை பார்க்கவேண்டுமென்பது ஹரிணிக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்றுவரை மாற்றமிருந்ததில்லை. ஹரிணி தான் தங்கியுள்ள இருக்கையிகிருந்துப் பார்க்க, மேற்குத் திசையில் ஸ்ட்ராஸ்பூர் நகரமன்ற நிர்வாகத்தின் கீழ், இயங்கும் பேருந்துகளுக்கான பணிமனைக்கு அருகில் கல்லறை தெரியும். இங்கிருந்து நடந்தே கூடப் போகலாம்.

நகரமன்றத்தின் 1995ம் ஆண்டுக்கான இறப்பு ஆவணத்தின்படி கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஹரிணியின் அம்மா பவானி தேவசகாயம்அங்கே நித்திரையிலிருக்கிறாள். வருடத்திற்கொருமுறை எழுந்திருப்பாள். ஆனால் அவளை எழுப்ப ஹரிணி வேண்டும். அம்மாவை நினைத்தமாத்திரத்தில்: ஹரிணியின் இருபத்தோரு வயது, பார்க்கும் உத்தியோகம், இன்றைய தேதியில் அவளுக்குள்ள சுதந்திரம் எல்லாம் மறந்து போகிறது. அவளது நெஞ்சக்கடல் தீடீரென்று வற்றிப்போகிறது. அலைகளில்லை, ஆர்ப்பாட்டம் இல்லை, காற்றில்லை, கரையோர சாரலில்லை. விழுந்து மீள கரைகளில்லை. இப்போதும் அப்படித்தான்,மனதை என்னவோ செய்கிறது. வழக்கம்போல பரபரப்பு தொற்றிக்கொள்ள நெஞ்சில் மொசுமொசுவென்று எறும்புகள் மொய்க்கின்றன. அறையில் திரும்ப திரும்ப நடக்கிறாள், கதவினைத் திறந்துகொண்டு மீண்டும் பால்கனியை எட்டிப் பார்க்கிறாள். மஞ்சள்வெயில் தீ நாக்குகளாக நீள்கின்றன. அவசர அவசரமாக குளியல் அறைக்குத் திரும்பியவள், ஷவரை நன்றாகத் திருப்ப, நீர் பீறிட்டுக்கொட்டுகிறது உள்ளாடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாக நனைந்தாள். தூக்கம், துக்கம், அசதி அனைத்தும் நீரில் கரைந்திருந்தன. துவாலையைச் சுற்றிக்கொண்டு வெளியேறியவள், தலையைத் துவட்டி, பின்புறம் தள்ளி சீவிக்கொண்டாள். கொஞ்சமாய் ஒப்பனை செய்துகொண்டாள். கீழே ஜீன்ஸ¤ம், மேலே டீ ஷர்ட்டும் அணிந்துகொண்டாள். லெதர் ஜாக்கெட், குளிர்கண்ணாடியெனக் கிளம்பியவள் கதவருகே நிறுத்தியிருந்த, காலணிகள் அலமாரியிலிருந்து சாண்டில் ரக மிதியடியொன்றை தேர்வு செய்து அணிந்தாள், கதவினைப் பூட்டிக்கொண்டு, லி·டைத் தவிர்த்துவிட்டு, படிகளில் இறங்கினாள்.

மற்ற நாட்களைப்போலவே வில்சன் அவென்யூவில் மறுதிசைக்குச்செல்ல பாதசாரிகளுக்கான சமிக்ஞை விளக்கிற்குக் காத்திருக்க வேண்டியிருந்தது. இரயில்வே குடியிருப்புகளை இடப்புறம் ஒதுக்கி, பாலத்திற்குக் கீழ்க் கடந்து, எதிர்ப்படும் சைக்கிள்காரர்களுக்கு வழிவிட்டு, வாகன இரைச்சல்களை சகித்துக்கொண்டு அவுஷ்பெல்டன் சாலையைப் பிடித்து சுமார் இருபது மீட்டர் தூரம் நடந்து கல்லறையின் வடக்குப்பக்க வாசலுக்கு வந்தாள். அங்கிருந்த பூக்கடையில் முப்பது யூரோ கொடுத்து ரோஜா, துலிப்பென்று அடங்கிய பூங்கொத்தினை அம்மாவுக்காக தயாரிக்கச் சொல்லி வாங்கிக்கொண்டாள். நடைபாதையிற்போட்டிருந்த குறுமணலும் கூழாங்கற்களும் காலணியில் அரைபடுவதுபோல் சத்தம். சீருடையில் புற்களை எந்திரங்கொண்டு வெட்டிக்கொண்டிருந்த கல்லரை பராமரிப்பு ஊழியன் ஒருமுறை இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு தொடர்ந்து பணியில் ஈடுபட்டான். வரிசைவரிசையாய் பளபளக்கும் கல்லறைகள். வெள்ளை, கருமை நிற பளிங்குக் கற்களில் வாடாத செயற்கை பூக்களோடும், வாடிய பூக்களோடும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தன. இறந்த பிறகும் ஏழை பணக்காரர்களை அடையாளப்படுத்தும் கல்லறைகள். சலவைக் கல்லில், இறக்கைகொண்ட தேவதூதர்களின் அலங்கரிப்புடன் கூடிய மண்டபம் போல நின்ற கல்லறையைக் கடக்க, இவள் கண்ணெதிரே பெரிய சிலுவையொன்றை சுமந்தபடி சிறுவனொருவன், அவனைத் தொடர்ந்து கருப்பு அங்கியும் அதன்மேலே சிறிய வெள்ளை அங்கி தரித்தவராக கையில் ஜெபப் புத்தகத்தை விரித்தபடி குருவானவர் நடந்து செல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒரு சிறுகூட்டம், இவள் முகந்தெரியாத ஒருவருடன் தட்டுதடுமாறி நடக்கிறாள். நிமிர்ந்து பார்க்க அப்படி யாரும் இல்லை. இவளொருத்திமட்டுமே நடந்து செல்கிறாள். தூரத்தில் அக்கறையாக புல்வெட்டும் கல் ஊழியன். ஒன்று, இரண்டு மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசாகாயமென்று பொறிக்கபட்டிருந்தது. தலைப்பகுதியில் மரத்தாலான சிலுவை அலங்கரித்திருந்தது. பூங்கொத்தினைப் பிரித்து சிலுவையின் கீழ்வைத்தவள் சிறிது நேரம் அமைதியாகப் பிரார்த்தனை செய்தாள்.

“கர்த்தாவே! இதோ உமது அடியாள் பவானி தேவசகாயம் இன்று நித்திரை அடைந்து உம்மிடம் வருகிறாள், நீர் அவளது பாவங்களைப் பாராமல் மன்னித்து உமது நித்திய வீட்டில் சேர்த்துக்கொள்ளும். அவர் சமாதானத்தில் இளைப்பாருவாராக! முடிவில்லாத பிரகாசம் என்றும் ஒளிர்வதாக! ஆமென்”

குருவின் குரல் ஒலித்து தேய்ந்தது. அவளைக் கைப்பிடித்து அழைத்துவந்த மனிதர் அவள் கையில் மண்ணைக்கொடுத்து சவப்பெட்டியின்மீது போடச்சொல்கிறார். இவளுக்குக் பின்னால் துக்கத்தை அடக்கத்தெரியாமல் யாரோ உடைந்து அழுகிறார்கள்.

திரும்பிப் பார்க்கிறாள்.

– மத்மசல்(மிஸ்) ஹரிணி..?

– உய்..(யெஸ்)

– என்பெயர், எலிஸபெத் க்ரோ. உங்கம்மாவை எனக்கு நல்லா தெரியும். ரொம்பகாலமா உன்னை பார்க்கணும்னு ஆசைபட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா