கொழும்பு குதிரை

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

மீரான் மைதீன்


எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு வந்தது என பெருமையாக சொல்லுவார். சைக்கிளின் பின்பக்கம் இரண்டாக மடக்கி சிறிதாக்கிக் கொள்ளும் வசதியோடு ஒரு பெரிய கேரியர் உண்டு. ஒரு பங்சர் பெட்டி வேறு சைக்கிளோடு கூடவே இருக்கும். நாங்கதான் வெட்கப்பட்டு வாப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பங்சர் பெட்டியை பிரித்து எடுத்தோம். சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகளெல்லாம் ரொம்பவும் தடிமனானது. இப்போதுள்ள சைக்கிள்களிலெல்லாம் அப்படியான கம்பிகளை பார்க்க முடிவதில்லை. முன் மெக்கார்டின் முனையில் கூம்பு போன்று அரையடி உயரத்தில் ஒரு கம்பி நிமிர்ந்து நிற்கும். ரிம்மும் சக்கரக் கம்பிகளும் மத்தியில் இணையும் பாகமும்கூட மற்ற சைக்கிளிலிருந்து மாறுபட்டே இருந்தது. கடந்து போகிற யாருமே சைக்கிள் மீது ஒரு விசித்திர பார்வையை வீசாமல் சொல்லுவதில்லை. வாப்பா சைக்கிளை குதிரை என்று தான் சொல்லுவார்.
”மக்கா அந்த குதிரையை ஒண்ணு மினுக்கி எடுலே… நாலணா தாரேன்….”
வாப்பாவிடம் நாலணா வாங்கிக் கொண்டு ஆர்லிக்ஸ் குப்பி மூடியில் தேங்கா எண்ணை எடுத்து துணியில் முக்கி மெக்காடை பளபளப்பாக்கி சைக்கிளை துடைத்து கம்பீரமாக்கி விட்டு தள்ளி நின்று பார்க்கும் போது கூடவே வாப்பாவும் உத்துப்பாத்துக்கொண்டே
”ஸ்கூட்டராம்… மயிராம்… நம்ம குதிரைக்கிட்ட வருமாலே….” என லயித்து பார்க்கும்போது
வாப்பா… ஒரு ரவுண்டு … என்பேன்.
”ம்…”
சைக்கிளை எடுத்துக் கொண்டு தெருவில் தான் ரவுண்டு அடிக்க வேண்டும். ரோட்டு பக்கம் போகக்கூடாது. அதுவும் தெற்குப் பக்கம் செட்டியார் தெரு தாண்டியும் போகக்கூடாது. சனி, ஞாயிறுகளில் குதிரைக்கு பின்னால் ஒரு கூட்டமே ஹே… ஹே… என ஓடி வரும். தெருவில் குதிரை அங்குமிங்கும் வரும்போது மாமி மகள் கட்டமண் சுவருக்கு பின்னால் மறைஞ்சி நின்னு கொமைப்பாள்… ”லாரி… லாரி… லாரி….”
”போளா… துக்கே”
”ஒரு லோடு செங்கல் எறக்கணும் லாரி வருமா…?” அஞ்சாறு பொம்பளைகளும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
குதிரை என்றும் லாரி என்றும் ஊரில் அறியப்பட்ட எங்கள் கொழும்பு குதிரை சைக்கிள் ரொம்பவும் பிரபல்யம். ஹேண்டில்பாரில் இரண்டு பக்கமும் தொங்கும் குஞ்சலமும் அசப்பில் குதிரைவால் போலவே தெரியும். டைனமாவுக்கு வாப்பா ஒரு மஞ்சள் ரெக்ஸின் துணி கட்டி வைத்திருப்பார்.
”இது என்னப்பா அன்பே வா சரோஜாதேவி மாதிரி ஒரு கெட்டு… எழவுடுங்கோ இரணியலுக்க மேக்க”’ சொல்லிவிட்டு எல்லோரும் சிரிப்பார்கள்.
சைக்கிளில் காத்து அடைக்க தனி பம்பு உண்டு அதையும் பாரில் வைத்துக் கெட்டிக் கொள்ளலாம். அந்த பாரின் வடிவமே தனி தான் பெண்கள் சைக்கிளைப் போல் மேல்பார் இல்லாமல் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்தது. பலரும் பரிகாசம் செய்ய பம்பையும் தனியாகப் பிரித்து எடுத்து விட்டோம்.
வாப்பா நீண்ட காலமாக இந்த சைக்கிளில்தான் பாய் வியாபாரத்துக்கு போய் வந்தார். அவர் ஒவ்வொரு சாயங்காலமும் வியாபாரம் முடித்து வரும்போது சைக்கிள் பற்றிதான் கதை சொல்லுவார்.
”இன்னைக்கு ஒருத்தன் வில்லுகூகுறிக்கிட்ட மாட்டுனாம்டே…. ஒரு பரட்ட ஸ்கூட்டரு…. குதிரைய தட்டிவுட்டேன்…. நமக்கிட்ட நடக்குமா…. குமாரகோயிலு வெலக்கு வர புடிச்சுப் பாத்தான்… முந்தவே முடியலே…. குதிரை பறக்கு… அந்த துக்கைக்க வண்டியிலிருந்து புகையாபோச்சி… கடைசிய ஒரு வழியா ஒதுக்கி நிறுத்தினான்… புகைக்க சைசப்பாத்தா வண்டி தீ பிடிச்சாலும் பிடிச்சிருக்கும்…’
”வாப்பா திரும்பி பாக்கலியா…?”
‘மின்னலு போல நம்ம குதிரை போவது… இதுல எங்கோடி திரும்பிப்பாக்க… ரோட்ல போன ஒண்ணு ரெண்டு பேரு… ஸ்கூட்டர்காரனப்பாத்து ஊள போட்டானுவோ… நான் அடுத்த செக்கண்டு தக்கல தாண்டியாச்சி…”
வாப்பா சொல்லச் சொல்ல எனக்குள்ளே காட்சிஓடியது. உற்சாகமாய் துள்ளி குதித்தேன். குதிரையைப் பற்றி ஒருபாடு விசயங்கள் உண்டு.
பத்தாங்கிளாஸ் பெரிய பரிச்சை எழுத ஆசாரிபள்ளம் ஸ்கூலுக்குப் போகும்போது வாப்பா குதிரையில் போகச்சொன்னார்.
”வேண்டாம் வாப்பா… பயலுவோ கொமைப்பானுவோ….?”
”மயிரு கொமைப்பானுவோ… இது ராசியான சைக்கிளு… இதுல போனா வெற்றிதான்…”
வாப்பா சொன்னபிறகு ஏழு பரிச்சைக்கும் குதிரையிலேயே போனேன். கடைசி பரிச்சை முடிந்து வரும்போது பையன்மார்களோடு சைக்கிள் பந்தயம் ஆசாரிபள்ளம் ஸ்கூலில் இருந்து எங்கள் பார்வதி புரம் பள்ளிக்கூடம் வரை. டியூஷன் வாத்தியார் பழனி அண்ணன்தான் நடுவர்.
”என் பார்வைக்கு குதிரை தாம்புடே ஜெயிக்கும்..” என்று அவர் முதலில் சொன்னது போலவே நான்தான் ஜெயித்தேன். வாப்பாவிடம் விசயத்தைச் சொன்னவுடன்
”சைக்கிளு என்னாலே சைக்கிள்… ட்ரான்ஸ்போட்டு பஸ்ஸ வரச்சொல்லு… பொலையாடிமவன் பஸ்ஸ நம்ம குதிரையை வச்சி நான் ஜெயிச்சு காட்டுதேன்….”
வாப்பா விரல் சுண்டி சொன்னவிதத்தில் எல்லோரும் குதிரையை ஒருமுறை உற்றுப் பார்த்தோம்.
மாதம் ஒருமுறை எப்படியும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நானும் வாப்பாவும் வலியாத்துச்சருக்கலில் குதிரையை கொண்டு போய் கழுவி குளிப்பாட்டி வீட்டுக்கொண்டு வந்து தேங்காஎண்ணெய் போட் மினுக்கி விடுவோம். ஒரு முறை பள்ளியில் நோன்பு பெருநாள் போட்டியில் சைக்கிள் சிலோ ரைஸில் அண்ணன் குதிரையில் வந்து ஜெயித்த விசயத்தை வாப்பா கேள்விப்பட்டுச் சொன்னார்.
”அப்படியும் வெற்றிதான்… இப்படியும் வெற்றிதான்….குதிரைன்னா குதிரைதான்…”
சைக்கிளில் ஒரு டிங்டாங் பெல் இருந்தது. அந்த மணிச்சத்தம் அற்புதமான இசையைப்போல இருக்கும். அதுவும் வாப்பா தெருமுனையில் வரும்போது மணிச்சத்தம் வீட்டில் கேட்டு விடும் என்பதால் பாடபுத்தகத்தை எடுத்து படிப்பது போல பாவலா காட்டுவோம்.
நான் கல்லூரியில் சேர்ந்து முதல் நாள் கல்லூரிக்கு போவதற்காக வாப்பவும் ம்மாவும் மைனியுமாக சேர்ந்து குதிரையை மினுக்கி வைத்தார்கள்.
”நான் குதிரையில் போகமாட்டேன் ஸ்கூட்டர் வேணும்… சொல்லிட்டேன்”. வாப்பாவின் முகம் வாடிப்போனது நீண்ட மெளனத்துப் பிறகு சொன்னார்.
”இது சைக்கிள் இல்ல மெளனே… எனக்க கூடப்பொறப்பு மாதிரியாக்கும்.. எனக்க பனிரெண்டாமத்த வயசுல இந்த கொழும்பு சைக்கிள்ல கோரம்பாய் கெட்டிக் கொண்டு போய் வித்து உண்டாக்குன சக்கரத்துலயாக்கும் இந்த வீட்டுக்க எடத்தவாங்கினேன் வீடு வச்சேன். ஒனக்க அக்காமாரு ரெண்டுபேருக்கும் மாப்பிள்ளை பாத்துக் கெட்டி வச்சேன். அண்ணன் அரேபியா போறதுக்கு ஏஜெண்டுட்ட நாப்பதாயிரம் எண்ணிக் கொடுத்தேன். இது ராசியான சைக்கிளு மோனே… இந்த சைக்கிள்ல போய் நீ காலேஜ் படிச்சியின்னா நீ கலைக்டர் ஆவே…”
வாப்பாவின் பேச்சுக்குப்பிறகு பதில் சொல்லாமல் காலையில் கொழும்பு சைக்கிளில் காலேஜ்க்கு புறப்பட்டு போகும்போது மாமி மகள் ”லாரி” என்று கத்தினாள் திரும்பிப் பார்த்தேன். ”கலெக்டரே போயிட்டு வாரும்…” என்றாள்.
கல்லூரியில் என் குதிரையை பார்த்ததும் பயலுவோ ஊளை போட்டு கொமைத்தெடுத்தார்கள். எனக்கு குதிரையை போட்டு விட்டு ஓடிவிடலாம் போல இருந்தது. இனி குதிரையை தொடக்கூடாது என்று மனதுக்குள் தீர்மானித்து நின்ற போதுதான் ரெண்டு மூன்று பையன்மார்கள் வந்து என் முன்னால் நின்று
”லாரிக்கு லைசன்ஸ் இருக்கா….” இன்னும்என்னவெல்லாமோ சொல்லி கொமைத்தார்கள். நான் பதில் பேச முடியாமல் வெட்கமாக குதிரை அருகிலேயே நின்றிருந்தேன். ஒரு அழகிய பெண் பி.எஸ்.ஏ. லேடிஸ் சைக்கிளில் வந்தாள். அவளைப் போலவே அவள் சைக்கிளும் அழகாகவே இருந்தது. ஸ்டாண்டில் அவள் சைக்கிளை நிறுத்திவிட்டு என் குதிரையை ஒரு பார்வை பார்த்த மாத்திரத்தில் அவள் புருவம் உயர்ந்தது. கொஞ்சநேரம் பார்த்து விட்டு புன்னகைத்து விட்டு போனவளை மீண்டும் அதே சைக்கிள் ஸ்டாண்டில் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நேற்றைவிட அதிகமாக புன்னகைத்து விட்டு மெல்லிய குரலில் பேசினாள்.
”இது உங்க சைக்கிளா…?”
ஒரு விதமான திணறலோடு நின்றேன்.
”எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” பளிச்சென அவள் சொன்னபோது எனக்கு இரண்டு ரெக்கைகள் முளைத்தன.
எனது வகுப்பில் கூட ஒன்றிரெண்டு பேர் குதிரை பற்றி விசாரித்தார்கள். எத்தனை பேர் விசாரித்தாலும் பி.எஸ்.ஏ. லேடீஸ் சைக்கிள் பேரழகியின் பேச்சுப்போல வரவில்லை. அதுவும் அவள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்ன வார்த்தையும் அப்போதைய அவளின் முகபாவனையும் திரும்பப் திரும்ப மனதிற்குள் காட்சியாய் ஓடியது. பத்து பதினைந்து நாட்களில் குதிரை கல்லூரியில் எனக்கான அடையாளமாக மாறிப்போனது.
இந்த ஒரு மாதத்திற்குள் பி.எஸ்.ஏ. லேடீஸ் சைக்கிள் பேரழகி இரண்டோ, மூன்றோ முறை என்னைக் கடந்து போகும் போது சிரித்து விட்டு போயிருக்கிறாள். அவளின் சிரிப்பு ஒவ்வொரு முறையும் கொழும்பு குதிரைய நோக்கித்தான் என்றாலும் எனக்கு அவளின் சிரிப்பும், என் சைக்கிளின் மீதான அவளின் கரிசன பார்வையும் ரொம்ப இஷ்டமானதாகவே இருந்தது.
இதன்பிறகு ஒரு மாலையில் கல்லூரியின் முன்பக்கம் நான் குதிரையில் வரும்போது ”ஏய்… சைக்கிள்…” சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன் பி.எஸ்.ஏ. லேடீஸ் சைக்கிள் பேரழகி நின்று கொண்டிருந்தாள்.
”உங்க சைக்கிள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…”
சிரித்தாள். அவள் என்னை பரிகாசிப்பது போலப்பட்டது. அவள் பரிகாசித்தாலும் அது எனக்கு பிடித்தம் தான்.
கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹிந்தி டியூசனுக்குப் போனேன். டியூஷன் டீச்சர் வீட்டுக்குப் பின்னால் பெரிய மைதானம் கிடந்தது. மைதானத்தின் ஒரு மூலையில் தான் சைக்கிளை வைத்து விட்டு டீச்சர் வீட்டுக்குப் போவேன். டீச்சருக்கும், சைக்கிள் பிடித்து விட்டது. டீச்சரின் வீட்டுக்காரர் கடைக்குப் போய் வர சைக்கிள் கேட்டு வாங்கி சிகரட் குடித்துக் கொண்டே ஸ்டைலாக போய் வந்து சொன்னார்.
”குதிரையில இருந்தாப்ல இருக்கு…”
என்னோடு இருந்த பையன்களும் பிள்ளைகளும் சிரித்தனர்.
டீச்சர் வீட்டுப்பக்க மைதானத்தின் மூலையில் நான் சைக்கிள் வைக்கும் போது கவனித்தேன். அங்கிருந்த ஒன்றிரெண்டு சைக்கிளின் மத்தியில் பி.எஸ்.ஏ. லேடீஸ் சைக்கிள் இருந்தது. அந்த பேரழகியின் முகம் நினைவில் வந்தது. டீச்சர் வீட்டுக்குள் வந்ததும் என் பார்வையில் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த பேரழகிப் பட்டாள். மெல்லிய குரலில் ‘சைக்கிள்’ என்றாள். நான் லேசாக சிரித்தேன். எனக்கு பாடம் துவங்கும்போது அவள் முடித்துக் கொண்டு எழுந்து போனவள் வாசலில் நின்று லேசாக சிரித்து விட்டுப் போனாள். ஒரு வாரம் இப்படித்தான் நான் உள்ளே போகும்போது அவள் வெளியே வருவாள். என்னை கடந்து போகும் போது ஒரு மெல்லிய சாரல் போல என்னை நனைத்து விட்டு போவாள். தனியாக என்னைப் பார்க்கும்போது இல்லாமல் கூட்டத்தில் என்னைப் பார்க்கும்போது அவளின் முகம் இறுக்கமாகத்தான் இருக்கும். ஆனாலும் அவள் இருதயம் புன்னகைப்பதை என்னால் உணர முடிந்திருக்கிறது. இந்த ஒருவாரத்திற்குப் பிறகு ஒரு சனிக்கிழமை நான் டியூஷன் முடித்து வரும்போது என் சைக்கிளின் பின்பக்க கேரியரில் அவள் உட்கார்ந்திருந்தாள். எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தபோதும் நான் தயக்கத்தோடு தான் கிட்டே போனேன்.
”எனக்கு இந்த சைக்கிள்ல ஒரு ரவுண்டு தருவீங்களா…?”
பாவமாகச் சொன்னாள். நான் ”ம்…” என தலையாட்டினேன். பிறகு அவளே சொன்னாள்.
”நாளைக்கு டியூஸன் முடிஞ்சி நான் வரும்போது நீங்க சாவிய எங்கிட்ட நைசா தரணும்… நான் வந்து ஒரு ரவுண்டு அடிச்சிட்டு பூட்டி சாவிய, புஸ்தகத்த மறந்து வச்சுட்டு எடுக்க வந்ததுமாதிரி அங்க வந்து சாவிய நைசா தந்துட்டு வந்துடுவேன்…ம்….”
ம்… கேள்வியாக எழுந்தது.
”ம்…” என்று நானும் அவளை புரிந்து கொள்ள முடியாத தவிப்போடு நின்றேன். தவிப்பா அல்லது ஏதோ ஒன்றா தீர்க்கமாக சொல்ல தெரியவில்லை.
அவள் அவளின் பி.எஸ்.ஏ. லேடிஸ் சைக்கிளில் போகும்போது எங்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிப்பதாக சொல்லி என் பெயரையும் கேட்டுவிட்டு அவள் பெயரையும் சொல்லிவிட்டுப் போனாள். எனக்கு அந்த இரவு இயல்பாகவே இல்லாமலிருந்தது.
அவள் போனதும் மைதானத்தில் கொஞ்சநேரம் மெளனமாகவே நின்றிருந்தேன். அவளின் மனங்கவர்ந்த குதிரையின் சொந்தக்காரன் நான் என்றபோது எனக்குள்ளேயே ஒருமுறை துள்ளிக் கொண்டேன். அந்த துள்ளலின் உயரம் ஆகாயம் தொடும் அளவுக்கு இருந்தது.
மறுநாள் மைதானத்தின் மூலையில் குதிரைய நான் அவளின் பி.எஸ்.ஏ. லேடிஸ் சைக்கிளை ஒட்டி நிறுத்தினேன். இதற்கு முன்னால் நான் அப்படி நிறுத்தியதில்லை. அவள் சைக்கிளின் ஹேண்டில்பாரை பிடித்துப் பார்த்தேன். குதிரையின் ஹேண்டில்பாரை போல இல்லாமல் ரொம்பவும் கச்சிதமாக இருந்தது. சின்னபெடலும் அதன் ஸீட்டும் ரொம்பவும் அழகாக இருப்பதாகப்பட்டதும் வாப்பாவிடம் சொல்லி இதுபோல ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
டீச்சர் வீட்டில் அவள் சொன்னதுபோலவே காத்திருந்தாள். அவளின் கண்சாடையை புரிந்து கொண்டு நான் நைசாக சாவியை கொடுத்தேன். அவள் இரண்டு புத்தகங்களை மறந்து விட்டு விட்டு போவதுபோல போனாள். அவளுக்குள் குடியேறியிருந்த கம்பீரத்தை ஓரக்கண்ணால் பார்த்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது. எனக்குப் பாடம் ஓடவில்லை. படிப்பதைப்போல பாவலா காட்டிக் கொண்டிருந்தேன். மனம் முழுவதும் சைக்கிள் பேரழகி வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் வருகிறாளா என்று அடிக்கொருதரம் டீச்சர் வீட்டு வாசலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்தாள். அவளின் முகம் வாடிப்போய் இருந்தது கொஞ்சம் நொண்டி நடப்பதைப்போல நடந்து வந்தாள். புத்தகத்தை எடுக்க வந்தவள் போல எடுத்துவிட்டு குனிந்து என் அருகே சாவியை வைத்தபோதுதான் அவள் இடது கை முட்டிலிருந்த ரத்தச் சிவப்பைப் பார்த்தேன். உராய்ந்து பிய்ந்து போய் இருந்தது. மீண்டும் அவள் லேசாக நொண்டிக் கொண்டே போனாள்.
நான் டியூஷன் முடிந்து வேகமாக வந்து குதிரையைப் பார்த்தேன். குதிரையின் டைனமா சப்பி மாறி டைனமாவிலிருந்த அன்பேவா சரோஜாதேவி கெட்டு தொங்கிக் கொண்டு இருந்தது. முன் மெக்காடும் சப்பி சைக்கிளின் சக்கரம் உருளுவதற்கு சிரமமாக இருந்ததை கவனித்து ஒரு கல்லால் தட்டி நிமிர்த்தி உருட்டி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வாப்பா பார்த்துவிட்டுக் கேட்டார். அவரிடம் ஒருவன் இடித்து விட்டதாக பொய் சொன்னேன். அவர் நீண்ட யோசனைக்குப் பிறகு சைக்கிள் கடைக்கு கொண்டு போய் சரியாக்கிக் கொண்டு வந்தார்.
”இதுபோல இனி கெடைக்காது மொனே… எனக்க வாப்பா காலத்திலேயே இது இருக்கு… ரொம்ப கவனமா போணும்…”
மறுநாள் கல்லூரியில் அவளைத் தேடினேன், காணவில்லை. டியூஷனுக்கு போனபோது மைதானத்தில் அவள் சைக்கிளும் இல்லை. அவள் டியூஷனுக்கு வரவுமில்லை. எனக்கு ரொம்பவும் குழப்பமாகிப் போனது. ஐந்தாறு நாளுக்குப் பிறகு கல்லூரிக்குள் சைக்கிளில் போகும் போது கும்பலாக நடந்து போன பெண்களில் ஒருத்தி சொன்னாள்.
”மத்தவளுக்க காலமுறிச்ச சைக்கிள் இதுதான்…”
மனசுக்குள் வலித்தது. அவள் பெயர் மட்டும் தான் அவள் சொல்லி தெரியும். சைக்கிளை விடவும் அவள் நினைவுகளே அதிகமாக எனக்குள்ளே ஓடின. கிட்டத்தட்ட இருபது நாளுகளுக்குப் பிறகு மைதானத்தில் அவள் சைக்கிளைப் பார்த்தபோது மீண்டும் அதே ஆகாயந்தொடும் துள்ளல். வேகமாக டீச்சர் வீட்டுக்குள் போனதும் அவள் என்னைப் பார்த்து மன்னிப்பு கேட்டும் முகபாவனையோடு வெட்கமாகச் சிரித்தாள். அவளோடு பேச வேண்டும் என்ற என்விருப்பம் அப்போது தோற்றுப்போனது இயல்பானதே. நீண்ட நாள்களுக்குப் பிறகு நானும்அவளும் மைதானத்தில் சந்தித்துப் பேசினோம். அன்று தான் நான் அவளின் பி.எஸ்.ஏ. லேடிஸ் சைக்கிளையும் ஓட்டிப் பார்த்தேன். அது ஒருவிதமான பறத்தலை எனக்கு தந்தது. அவள் குதிரையிலிருந்து விழுந்ததை விவரித்தாள். இடது கால் முட்டில் ஏற்பட்ட காயத்தைப் பற்றிச் சொன்னாள். குதிரை உயரமாக இருப்பதால் பளிச்சென கால் ஊன்ற முடியாமல் நிலை தடுமாறிவிட்டதாகச் சொல்லி வெட்கப்பட்டாள். முதன் முதலாக அவளின் வெட்கத்தை ரசித்தேன். இதன் பிறகு நானும் அவளும் ஒருக்கிலும் நான் கற்பனை பண்ணி பார்க்காத அளவுக்கு நெருங்கி விட்டோம். சந்திக்கும்போதேல்லாம் பேச்சு தான். என்னை ஒருமையில் தான் அழைத்துப் பேசுவாள். ஆனாலும் நான் கடைசி வரை அவளை நீங்க…. வாங்க….என்று தான் பேசி இருக்கிறேன்.
”என்ன இப்படி பேசுறீங்க…”
”ஏன் பேசக்கூடாதா?…. நீ என்னைவிட சின்ன பையன்தானே”…
எனக்கு இதன் பிறகு பதில் பேசவராது.
அவள் ஊரைச் சொன்னாள். வீட்டு அடையாளமும் சொல்லி படிப்புக்காக இங்கே உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாகச் சொன்னாள். என் வீட்டிலிருந்து அல்லது ஊரிலிருந்து அது ரொம்ப தூரத்திலிருந்து நான் குதிரையை ஓட்ட அவள் பின்னால் உட்கார்ந்து ஒரு ரவுண்டு வரவேண்டும் என்ற அவளின் எண்ணத்தை ஒரு விதமான பயத்தின் காரணமாய் நிறைவேற்ற முடியாமல் போனதின் வருத்தம் இப்போதும் உண்டு. குதிரையில் தொடங்கிய எங்களின் நட்பு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மாலை நேர ஆகாயம் போல ஐஸ்வர்யம் நிறைந்ததாகவே இருந்தது. நானும் அவளும் டியூஷன் டீச்சர் வீட்டுப் பக்க மைதானத்தில் நின்று பேசிக் கொண்டே பேச்சுக்கள் எதுவும் மனதில் இல்லையென்றாலும் அந்த இனிமையை இதயத் துடிப்பைப்போல இப்போதும் விலக்கித் தள்ளமுடியவில்லை. பேசுவதற்கும் எதுவும் இல்லாமல் பேசிக் கொண்டே இருந்தது அவளோடு மட்டும் தான்.
அவள் கல்லூரி முடித்துக் கொண்டு பேகும் கடைசி நாள் என்னை ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னாள் கொஞ்சம் வருத்தமாகத்தான் பேச்சைத் துவகினோம். எடுத்த எடுப்பிலே
”எம்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கே” என்று கேட்டாள்
”ரொம்ப … நிறையா…” சொல்லிவிட்டு அவள் என்னிடம் கேட்ட அதே கேள்வியை திருப்பிக் கேட்டேன்.
”கடலளவுக்கு… ஆனா உன்மேல பாசம் பச்சி என்ன பிரயோஜனம்”
”என்ன பிரயோஜனம்னா….?”
‘உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா?…”
”அது முடியாது. நான் சின்ன பைய்யம்லா….” மெளனமாகவே நின்றாள்.
”சரி நான் முடியும்னு சொன்னா நீ என்ன பண்ணுவே…?”
வறட்டுச் சிரிப்போடு
”என்னாலயும் முடியாது தான்…” என்றாள்.
மெளன நொடிகள் நிமிடங்களாய் வளர்ந்தது. அவள் கடைசியாய் போகும்போது என் சைக்கிளின் டிங்டாங் பெல்லை அடித்து விட்டு சிரிப்பதைப்போல அழுதுவிட்டுப் போனாள். எனக்கும் அந்த லேடீஸ் சைக்கிள் பேரழகிக்கும் நடந்த கடைசி சந்திப்பும் உரையாடலும் அதுதான்.
காலம் என்னையும் அணண்னையும் தம்பியையும் ஒவ்வொரு பக்கமாக ஆக்கிவிட்டிருந்தது. வெளிநாட்டு வாழ்க்கை மூன்று வருடங்களுக்குப் பிறகு நேற்றுதான் ஊருக்கு வந்தேன். கடந்த முறை நான் ஊருக்கு வந்தபோது அண்ணனும் தம்புயிம் ஊரில் இல்லை. தம்பி வரும்போது நானும் அண்ணனும் ஊரில் இல்லை… இரண்டு வருடங்களுக்கு முன்னால் மக்காவில் உம்ரா செய்ய வந்த அண்ணனோடு பலத்தில் பத்து நிமிஷம் பேசிக் கொண்டதுதான். அப்போது அவன் தான் சொன்னான் குதிரை முறிஞ்சுபோனதாக. கக்கூஸ் முறியின் மேல்பக்க காலி இடத்தில் குதிரை மூன்று துண்டாக முறிந்து கிடந்ததை கண்டபோது கொஞ்ச நேரம் மெளனமாக மட்டுமே நிற்க முடிந்தது. என்னையும் அண்ணனையும் தம்பியையும் வாப்பா குதிரையில் வைத்து முடிவெட்ட கடைக்கு கொண்டு போன காலத்தின் மகிழ்ச்சி முற்றிலுமாக அழிந்து போயிருந்தது. அந்த மகிழ்ச்சி இனி ஒருக்கிலும் திரும்ப வராது. முறிந்து போன குதிரையை சரியாக்கி எடுக்கும் முயற்சி வாப்பாவிடம் இல்லாமல்போனது இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவரின் வயசும் அந்த வயசுக்குரிய இயலாமையாகவும் இருக்கலாம்… ”இதுபோல இனி கெடைக்காது மொனே” எனக் கரிசனமாக சொன்ன காலத்தில் வாப்பாவின் மனப்பலம் இப்போதைய மனப்பலத்தில் இல்லை. கடந்த லீவில் வந்து போன அண்ணன் ம்மாவிடம் சொல்லி முறிந்து கிடந்த குதிரையின் முன் சக்கரத்தை அவன் மகன் விளையாடுவதற்காக எடுத்துக் கொண்டான்.


Series Navigation

மீரான் மைதீன்

மீரான் மைதீன்