அவல்

This entry is part of 32 in the series 20061207_Issue

சந்திரவதனா


சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால் மாமியாக எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டவள்.

மாமியின் சீதன வீட்டின் ஒரு பகுதியில் அவளது தாய் தந்தையருக்கும் உரிமை இருந்தது. மாமியுடனான நெருக்கத்தில் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய் வருவோம். மாமியின் தாயார் செல்லம்மாப் பாட்டி இன்முகத்துடன் எங்களை வரவேற்பாள்.

நாற்சார முற்றத்தில் பெரியவர்கள் இருந்து கதைக்க, நாங்கள் பிள்ளைகள் எங்காவது ஒரு மூலையில் இருந்து சிப்பியோ, சோகியோ வீசிச் சம்பா விளையாடுவோம். மாமிக்கு நான்கு தம்பிமார். கடைசி இரண்டு தம்பிமாரும் எங்கள் சோடிகள்தான். எல்லோருக்கும் ஏழில் இருந்து பத்து வயதுக்குள்தான். ஆனாலும் கடைசித் தம்பி எழிலன் ஒருநாளும் எங்களோடு இருந்து விளையாட மாட்டான். எப்போதும் தாயின் சேலையை எடுத்து அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டு, சேலைத்தலைப்பால் போர்த்திக் கொண்டு நெளிவான். நாணிக் கோணி நிற்கும் அவனது பாவனை ஒரு பெண் போலவே இருப்பதாகச் சொல்லி எல்லோரும் சிரிப்பார்கள். ரசிப்பார்கள்.

“எழிலன்…! வாடா, விளையாடுவம்” என்றால் அழகாகச் சிரிப்பானே தவிர எங்களோடு சம்பா போடவோ, ஒளித்துப் பிடித்து விளையாடவோ வரமாட்டான்.

“பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்திருக்க வேண்டியவன்….“ செல்லம்மாப் பாட்டியும், பாட்டாவும் பெருமையோடு சொல்வார்கள்.

நடனம் ஆடிக் காட்டுவான். சரோஜாதேவி போலக் கண்களைச் சுழற்றி, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி மந்தகாசப் புன்னகையுடன் தலை குனிவான்.

அவன்தான் இறந்து விட்டானாம். இப்போது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். ஓலங்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் அரசல் புரசலாய் ஏதேதோ கதைகள்.

கடிதம் எழுதி, கிணற்றுக்கட்டில் வைத்து விட்டு, கடிதத்தின் மேல் ஒரு கல்லையும் வைத்து விட்டு தன்னை முடித்துக் கொண்டு விட்டானாம். மாரிக்கிணறு. அதுவும் ஆழக் கிணறு. காலையில் செல்லம்மாப் பாட்டி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப் போன போதுதான் கிணற்றுக்குள் அவன் மிதப்பதைக் கண்டாவாம்.

கடிதத்தில் தனது சாவுக்கு நான்கு பேர் காரணம் என்றும் தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கும் போதும் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும், அந்த உபாதையை தன்னால் தாங்க முடியாததாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அந்த நான்கு பேர்களின் பெயர்களையும் எழுதியிருந்தானாம். நான்கு ஆண்கள் இவனோடு பாலுறவு வைத்திருந்தார்களாம். எனக்கு எதுவும் சரியாகப் புரியவில்லை.

அவனுக்கு வந்தது உடல் உபாதையா, உள உபாதையா என்ற சிந்தனை ஏதுமின்றி „இவனைப் பார்த்தால் பொம்பிளை மாதிரித்தானே, அதாலைதான்…“ என்று ஒரு சாராரும், „இவன் விரும்பாமல் நடந்ததோ?“ என்று இன்னொரு சாராரும்… அவல் கிடைத்த திருப்தியில் மென்று கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாப்பாட்டியும் மாமியும் இன்னும் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

சந்திரவதனா
ஜேர்மனி
22.11.2006

Series Navigation