மடியில் நெருப்பு – 15

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

ஜோதிர்லதா கிரிஜா



15.
லில்லியின் கேள்விக்கு ராஜாதிராஜன் பதில் சொல்லுமுன், ஜகந்நாதன், “ஏன்? என்ன விஷயம், லில்லி?” என்றார்.
“தங்கம்தான் கேக்குது. வேற எதுவும் சொல்லல்லே. அல்லையன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயமா யிருக்கலாம்.”
இதற்குள் ராஜாதிராஜன், ” ஏம்மா? என்ன விஷயம்னு கேளுங்க. ஆனா தண்டபாணின்னு எனக்கு ஒரு சிநேகிதன் இருக்கான்தான்!” என்றான்.
“இருங்க, கேக்கறேன்.”
லில்லி மறுபடியும் தங்கையோடு தொலைபேசினாள்: ” ஹல்லோ … ஆமா, இருக்காராம். என்ன விஷயம்னு கேக்கறாரு… ஓ! அப்படியா? அவரு சொன்ன பையனுக்குத்தான் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா?.. பையன் பேரென்ன? சேதுமாதவனா? லண்டன்லே இருக்கானா? லீவுக்கு வந்திருக்காராமா? ..சரி. விசாரிக்கச் சொல்றேன்…எல்லாம் ஓகே ஆயிட்டா, அப்ப லண்டன் போயிறுவே!” என்ற லில்லி சிரித்தாள்.
ராஜாதிராஜனின் பார்வை லில்லியின் மீது பதிந்திருந்தது. தங்கம் எனும் அந்தப் பெண் லில்லியின் தங்கை என்பது தண்டபாணிக்குத் தெரிந்திருக்குமோ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். ஜகந்நாதனின் பார்வை ஓர் அதிருப்தியுடன் ராஜாதிராஜனின் மீது பதிந்திருந்தது.
லில்லி திரும்பி வந்து உட்கார்ந்தாள்: “லண்டன்லே சேதுமாதவன்னு ஒரு பையன் அங்கே ஒரு பெரிய டீ கம்பெனியிலே சேல்ஸ்மனா இருக்கானாம்…இப்ப இந்தியாவுக்கு வந்திருக்கானாம். பேரண்ட்ஸ் கிடையாதாம். பம்பாயிலே ஒரு ·ப்ரண்ட் வீட்டிலே ஒரு வாரம் போல இருப்பானாம். இந்தியப் பொண்ணா – அதிலேயும் தமிழ்ப் பொண்ணா – கல்யாணம் கட்டணும்கிறதுக்காக வந்திருக்கானாம். தண்டபாணிங்கிற ஆளு மூலமா இந்தப் பையன் பத்தித் தெரிய வந்திச்சாம். தண்டபாணி தரப்பிலேருந்து அந்தப் பையன் பத்தி பலமான சிபாரிசாம். ஆனா, எங்க சித்திக்கு அந்த ஆளு தண்டபாணியைச் சுத்தமாப் பிடிக்கவே இல்லையாம். முதல்ல இந்த தண்டபாணியைப் பத்தி விசாரிச்சுப் பார்க்கணும்கிறாங்களாம்…அவன் நம்பகமான ஆளுன்னு நிச்சயமாத் தெரிஞ்சா மட்டுமே அவனோட சிபாரிசைக் கன்சிடர் பண்ணணும்கிறாங்களாம்… அந்தாளு சித்திகிட்ட நம்ம தம்பி ராஜாவைத் தனக்குத் தெரியும்னு சொன்னாப்ல….உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டே பேசின பேச்சா இல்லாட்டி தற்செயலாப் பேசின பேச்சான்னு தெரியல்லே… என்னப்பா, ராஜா, தண்டபாணியோட சிபாரிசை நம்பலாமிலே? என்ன சொல்றே?”
ராஜாதிராஜன் பதில் சொல்லுமுன் ஜகந்நாதனே இடைமறித்தார்: “அந்த தண்டபாணியைப்பத்தி நாம முதல்ல விசாரிக்கணும்…அதுதான் என்னோட அபிப்பிராயம். எனக்கும் அவனைப் பிடிக்காது. அவன் மூஞ்சியும் மொகரையும்! எனக்கென்னமோ அவனைப் பார்த்தாலே எரியும்!”
லில்லி சங்கடத்துடன் ராஜாதிராஜனை நோக்கியபோது, அவன் புன்சிரிப்புக் காட்டினான்: “அவன் பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி தெரிவான். அவனோட அடர்த்தியான தலைமுடி, செவப்பேறின கண்ணு, கம்பளிப்பூச்சி மாதிரி புருவம் – கொஞ்சம் தாட்டியா வேற இருப்பான் – இதெல்லாம் சேர்ந்து ஒரு ரவுடி மாதிரி அவனைக் காமிக்கும். அதனால, ஆரம்பத்துலேர்ந்தே அப்பாவுக்கு அவனைக் கண்டாலே ஆகாது…என்னைப் பொறுத்த வரையிலே அவன் எனக்கொரு நல்ல சிநேகிதனாத்தான் இருந்துக்கிட்டிருக்கான்….நான் பணக்காரக் குடும்பம்கிறதுக்காக என்னோட நட்பா யிருக்கான்னும் சொல்ல முடியாது. ஏன்னா அவனே ஒரு பிஸினெஸ்மன் தான்…”
“என்ன பிஸினெஸ் பண்றானாம்?” என்ற ஜகந்நாதனின் குரலில் ஆத்திரமும் கிண்டலும் ஒருசேரத் தெரிந்தன.
“பலவிதமான பிஸினெஸ் பண்றான்…”
“பலவிதமான பிஸினெஸ்ஸா, இல்லே, ‘பலான’ பிஸினெஸ்ஸா?” என்று அவர் அவனை முடிக்க விடாமல் இடக்காக இடைமறித்தார்.
ராஜாதிராஜன் சினத்தை அடக்கிக்கொண்டு, “கமிஷன் ஏஜென்ட்டா யிருக்கான். அப்புறம் பிளாஸ்டிக் தொழிற்சாலை வெச்சிருக்கான்… பக்கெட்ஸ், சூட் கேஸஸ், ட்ரேஸ் மாதிரியான சாமான் எல்லாம் பண்றான்… நம்ம கம்பெனியிலே கூட ஒரு பார்ட்னராச் சேர்றேன்னு ஒரு தரம் சொன்னான்.அப்பாதான் கூடாதுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டாரு. மெடிக்கல் ஷாப் கூட ஒண்ணு வெச்சிருக்கான். எவர்சில்வர் பாத்திரக்கடை ஒண்ணு வெச்சிருக்கான்…ரொம்ப பிஸியான ஆளு… காலேஜிலே படிக்கிறப்ப லேர்ந்து எனக்குப் பழக்கம்…” என்றான் – லில்லியைப் பார்த்தவாறு.
“அது சரி, அவன் ஏன் லில்லியுடைய தங்கை கிட்ட தனக்கு உன்னைத் தெரியும்னு சொல்லணும்?.. அப்போ… லில்லிக்கும் எனக்கும் உள்ள உறவு அவனுக்குத் தெரிஞ்சிருக்கணும்!” என்ற ஜகந்நாதன் குற்றம் சாட்டுகிற பார்வையால் ராஜாதிராஜனை ஏறிட்டார்.
“அதையேதாம்ப்பா நானும் யோசிச்சுக் கிட்டிருக்கேன். என் வாயாலே நான் சொன்னதே இல்லேப்பா. வேற யார் மூலமாவாவது அரசல் புரசலாக் கேள்விப்பட்டிருந்திருப்பான்.”
லில்லி சிரித்தபடி குறுக்கிட்டாள்: “நீங்க ஏங்க தம்பியை முறைக்கிறீங்க? எத்தினியோ பேருக்கு நம்ம உறவு தெரிஞ்சுதான் இருக்கும். அடிக்கடி இங்கே கார்லே வர்றீங்க. உங்க காரை அடையாளம் கண்டுக்கிறவங்க, நான் உங்ககிட்ட ஸ்டெனோவா யிருந்தவங்கிறதும் தெரிஞ்சவங்களா யிருந்தா ரெண்டும் ரெண்டும் நாலுன்னு ஊகிக்கமாட்டாங்களா என்ன! நம்மைச் சுத்தி இருக்கிறவங்க ஒண்ணும் இளிச்சவாய்ங்க இல்லே! மத்தவங்க சொந்த விஷயத்தை வேவு பார்க்கிறதுதான் பலருக்கும் பொழுதுபோக்கு!”
ஜகந்நாதன் தலையைக் குனிந்துகொண்டார். லில்லி கோப்பைகளில் காப்பியை ஊற்றினாள். மூவரும் காப்பியைப் பருகலானார்கள்.
“இப்பவும் ஒண்ணும் மோசமாயிடல்லே. என் கழுத்தில ஒரு தாலியைக் கட்டிடுங்க. ஏற்கெனவே சொன்னபடி நான் ஒரு இந்துவா வேணும்னாலும் மாறிட்றேன்…லில்லிங்கிற பேரை செல்லின்னோ வள்ளின்னோ மாத்திக்கிறேன்… நீ என்ன சொல்றே, ராஜா?”
ராஜாதிராஜனுக்கு எரிச்சல் வந்தது. காட்டிக்கொள்ளாமல், புன்னகை செய்து, “அது எங்கப்பாவுடைய சொந்த விஷயம். அதுலே நான் சொல்றதுக்கு என்னங்க இருக்கு?” என்றான்.ஜகந்நாதன் எதுவும் பேசவில்லை.
திடீரென்று கவிந்துவிட்ட மவுனத்தை லில்லிதான் கலைத்தாள்: ” என்னோடபழைய பல்லவியை விடுங்க. பாடிப்பாடி அலுத்துட்ட பல்லவி…அது சரி, என்னமோ சொல்றேன்னீங்களே? உங்க உடம்பைப் பத்தி?”
“எனக்கு ருமேட்டிக் ஹார்ட்டாம்.”
லில்லியின் அதிர்ச்சி உடனடியான அவளது கண் சிவப்பில் தெரிந்தது. லில்லியின் அன்பு உள்ளம் ராஜாதிராஜனை வெட்கமுறச் செய்தது. ‘பெற்ற தகப்பன் மேல் எனக்கில்லாத அன்பு இவளுக்கு அவர் மேல் இருக்கிறது!’
கண்களை உடனே துடைத்துக்கொண்ட லில்லி, சமாளித்துப் புன்னகை காட்டி, “உங்களுக்கு அதெல்லாம் வராதுங்க. ‘ரொமாண்டிக்’ ஹார்ட்னிருப்பாரு டாக்டர். தப்பாக் காதிலே வாங்கியிருப்பீங்க!” என்றாள்.
ராஜாதிராஜனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘என் மகனுக்கு முன்னால் இதென்ன அசட்டு விளையாட்டு?’ என்பது போல் ஜகந்நதான் லில்லியை முறைத்தார்.
“சாரி…. மருந்து, மாத்திரையெல்லாம் எழுதிக் குடுத்திருக்காரில்ல?”
“உம்ம்…”
“கொடுத்திருக்காரு. பெரிசாக் காவலைப் பட்றதுக்கு ஒண்ணும் இல்லே, ஆனா மாத்திரைகளை மட்டும் ஒழுங்காச் சாப்பிடணும்னு சொல்லியிருக்காரு. எதுக்கும் நானும் டாக்டர் கதிரேசனை இது விஷயமாச் சந்திச்சுப் பேசலாம்னு இருக்கேன். அப்பா பொய் சொல்றாரோ என்னமோ!…”
“ஆமாந்தம்பி! செய்யுங்க… எதுக்கும் இங்கேயும் கொஞ்சம் அந்த மாத்திரைகளை எங்கிட்ட குடுத்து வைங்க. இங்கே வர்றப்போ சாப்பிடணுமில்லே?”
ஜகந்நாதன் ஒன்றும் சொல்லவில்லை.
மறுபடியும் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்ட லில்லி, “வா, தம்பி. தோட்டம் பார்க்கலாம். ஒண்ணும் பெரிசா பண்ணியிருக்கேன்னு சொல்லமுடியாது. எனக்கும் பொழுது போகணுமில்லே? ஒரு கொழந்தை இருந்தா அதை வளர்க்கிறதுக்குப் பொழுதே பத்தாது. ஆனா நான் என்ன செய்யிறது? அதான் செடிங்களையாச்சும் வளர்க்கலாமேன்னு!…”
ஜகந்நாதனின் முகம் சுருங்கியது. ராஜாதிராஜன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். லில்லி ஒரு பெருமுச்சுடன் எழுந்தாள்: “சரி, வாங்க! போலாம்….”
மூவரும் எழுந்தார்கள். தோட்டத்துக்குப் போனார்கள்.
“என்னங்க! இந்த வாழை மரத்தைச் சுத்தி எத்தினி கன்னுங்க! அதுக்கு இருக்கிற சந்தோஷம் கூட எனக்கில்லீங்க!” – சற்றுத் தொலைவில் ஒரு ரோஜாச் செடிக்கு அருகில் நின்றிருந்த ராஜாதிராஜனின் காதுகளில் விழாவண்ணம் லில்லி கிசுகிசுப்பாக ஜாந்நாதனிடம் சொன்னாள்.
“நான் ஒரு அநாதைக் கொழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்னு இருக்கேன்! நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உச்…இதையெல்லாம் பேசுறதுக்கு இதுதான் நேரமா? ராஜா காதுலே விழப்போகுது! ……இதெல்லாம் வேண்டாத ஆசைன்னுதான் சொல்லுவேன் – என்னைக் கேட்டா.”
“நீங்க ஆம்பளைங்க. இப்படித்தான் பேசுவீங்க. ஒரு கொழந்தையோட ஸ்பரிசத்துக்காக என் உடம்பெல்லாம் துடிக்குதுங்க. அது உங்களுக்கு எங்கே புரியப்போகுது! உங்க மூலமாப் பெத்துக்குறதுக்கும் விட மாட்டேன்னுட்டீங்க!…தத்து எடுத்து வளர்க்கிறதுலே உங்களுக்கு என்ன தடை?”
“என்னமோ செய்யி!.. ஆனா வீண் தொல்லையை இழுத்துவிட்டுக்குறேன்னு தோணுது. சரி, சரி… ராஜா வர்றான். இத்தோட நிறுத்திக்க…”
“என்ன, ராஜா? நித்திய மல்லிகைச் செடி பார்த்தியா?”
“பார்த்தேங்க. கும்னு ஒரே வாசம்! ரொம்ப நல்லா வெச்சிருக்கீங்க…”
“தேங்க்ஸ்!…”
மேலும் சற்று நேரம் இருந்த பின்னர் ஜகந்நாதனும் ராஜாதிராஜனும் லில்லியிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள்.
வழியில், “ராஜா! இன்னைக்குக் காலையிலே உன்னோட பேசினப்போ தண்டபாணியைப் பத்தின ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்லல்லே. ஆனா இப்ப சொல்லிடணும்னு தோணுது…உங்கிட்ட சொன்னா அவனுக்குத் தகவல் சொல்லித் தப்ப வெச்சிறுவியோன்னுதான் காலையிலே சொல்லல்லே…” என்ற ஜகந்நாதன் மகனை அதிருப்தியுடன் பார்த்தார்.
“என்னப்பா விஷயம்? தப்பவைக்கிறது, அது, இதுன்றீங்க!”
“தண்டபாணியைப் போலீஸ்லே வாட்ச் பண்ணிட்டிருக்காங்க!”
அவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். அவனது நா வறண்டு போயிற்று.

jothigirija@vsnl.net

(தொடரும்)

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா