வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



பிரான்சுவாஸ் சகன்

அத்தியாயம் – 18

சவ அடக்கம் பாரீஸில் நடைபெற்ற அன்று நல்ல வெயில், கருப்புடை அணிந்து கலந்துகொண்டவர்களில் முகங்களில் ஒருவித ஆர்வம். அப்பாவும் நானும், துக்க சம்பவத்திற்கு வந்திருந்த ‘ஆன்’னுடைய வயதுபோன பெற்றோர்களிடத்தில் கை குலுக்கிக்கொண்டோம். ஆண்டுக்கொருமுறை, எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். என் தந்தையைப் பார்த்த அநேகரது முகங்களில் வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது, மிஸியே வெப்(Monsieur Webb) அனேகமாக ‘ஆன்’னைத், அப்பா திருமணம் செய்யவிருந்ததை சொல்லியிருக்கவேண்டும். புறப்படவிருந்த சமயத்தில் சிரில் என்னைத் தேடுவதைக் கண்டதும், தவிர்த்தேன். அவனை வெறுப்பது, நியாயமற்றதென்கிறபோதும் என்னால் வேறுவிதமாக நடந்துகொள்ள முடியவில்லை… எங்களைத் தெரிந்தவர்கள் முட்டாள்தனமான அப் பயங்கரத்தைக்குறித்து பேசியபடியிருக்க, எனக்கின்னமும், விபத்தைக்குறித்து தீர்க்க முடியாத சில சந்தேகங்களிருந்தன, ஒருவகையில் அச்சந்தேகங்களால் மனதில் அற்ப சந்தோஷமென்றுகூட சொல்லலாம்.

காரில் வீடு திரும்பும்பொழுது அப்பா எனது கரத்தை விடாமல் பிடித்தபடி வந்தார். ‘அப்பா.. இனி உங்களுக்கு நான், எனக்கு நீங்களென்று வாழ்ந்தாகவேண்டும், யாருமற்ற அநாதைகள், துன்புறப் பிறந்தவர்கள்”, என மனதில் நினைத்துக்கொண்டவள், முதன் முறையாக அழுதேன், வடித்த கண்ணீர், மனதிற்குச் சுகத்தைக் கொடுத்தது. எத்தனை அழுதாலும், மருத்துவமனையில், ‘வெனிஸ் காட்சி படிமத்தில்’ கண்ட அந்தக் கொடூரமான சூன்யத்திற்கு ஈடாகாது.

ஒரு மாதகாலம் அப்பா, மனைவியைப் பறிக்கொடுத்திருந்த கணவர்போலவும், நான் அனாதைபோலவும் இருந்திருப்போம். காலை உணவில் ஒன்றாக அமர்வது, மீண்டும் இரவு உணவின்போது சந்திப்பதென்று காலம் கழிந்ததேயன்றி, இருவருமாக வெளியிலெங்கும் போகவில்லை. ‘ஆன்’னைப் பற்றிப் பேசுவதை முடிந்தமட்டும் தவிர்த்தோம், சில நேரங்களில்,” உனக்கு ஞாபகமிருக்கிறதா.. அன்றைக்கு”, என ஆரம்பித்தால், மிகவும் கவனமாக இருப்போம், பார்வையைத் தவிர்ப்போம், எதையாவது சொல்லப்போய் அடுத்தவர் மனதில் ஆறாப்புண்ணை ஏற்படுத்திவிடுமோவென்கிற அச்சம். அந்த எச்சரிக்கைக்கும், கவனத்திற்கும் கூடியசீக்கிரமே பலன் கிடைத்தது, “ஆன் எவ்வளவு நல்லவள், எத்தனை உசத்தி, அவளோடு வாழ்ந்த நாட்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கிறது, என்ன செய்வது கடவுளுக்கு அவள் வேண்டியிருந்தது, அழைத்துக்கொண்டார்”, என்றெல்லாம் எந்தவித மனவருத்தமுமின்றி ‘ஆன்’ குறித்து இயல்பாக எங்களால் பேசமுடிந்தது. ‘எப்படியோ’ அவளிறக்கவேண்டியிருந்தது என்பதற்குப் பதிலாகக் கடவுள் அவளை அழைத்துக்கொண்டதாகக் கூறிவிட்டேன், எங்களுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாமில்லை. இருந்தச் சூழலில், ‘எப்படியோ’ அவள் இறந்துபோனாள் என்பதும் ஒருவவையில் சந்தோஷமே.

பிறகொருநாள், தோழி ஒருத்தியை பார்க்கச் சென்றவள், அவளுடைய உறவுக்காரப் பையனொருவனை சந்தித்தேன், எனக்கு மிகவும் பிடித்தவனாகயிருந்தான். ஒருவாரகாலம், எல்லா காதலுக்கும் தொடக்கத்தில் நடப்பதைப்போல, அந்தப் பையனோடு அடிக்கடி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றினேன். தனிமையை விரும்பாத அப்பாவுக்கும் போதுமான எதிர்பார்ப்புகளைக் கொண்ட இளம் பெண்ணொருத்தி கிடைத்திருந்தாள். பழைய வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினோம், எங்களது எதிர்பார்ப்புபடி அமைந்தது. நேரங் கிடைக்கிறபோது அப்பாவும், நானும் எங்களது வெற்றிகளை பறிமாறிக்கொண்டோம். என் தகப்பனாருக்கு, பிலிப்(Philipe)புடனான எனது உறவில் சந்தேகமிருந்தது, நல்ல அபிப்ராயமில்லை, அவ்வாறே நானும், அப்பா தமது புதிய காதலிக்காக நிறைய செலவுபண்ண வேண்டிவருமென்று நினைத்தேன். என்னாவானாலென்ன? நாங்கள் சந்தோஷமாக இருந்தோமென்பது முக்கியம். குளிர்காலம் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் முன்பு வாடகைக்கு எடுத்திருந்த ‘வில்லாவை’வையே மீண்டுமெடுக்கும் எண்ணம் இருவருக்குமில்லை, வேறொன்றை ‘Juan-les-Pins’- பக்கம் வாடகைக்கு எடுக்கலாமென்றிருக்கிறோம்.

கட்டிலில் படுத்திருக்கிற நேரத்தில் மாத்திரம், அதிகாலை நேரங்களில்பாரீஸ் நகர வாகனங்கள் எழுப்புகிற சத்தத்தைக் கேட்கிறபோது சிற்சில சமயங்களில், துன்புறுத்துகிற பழைய ஞாபகங்கள்: கடந்தகால கோடையும், அதன் நினைவுகளுமாக. அறையெங்கும் இருள், சன்னமான குரலில், ‘ஆன்’.. ‘ஆன்’னென்று திரும்பத் திரும்பச் வெகுநேரம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஏதோவொன்று என்னுள் மெல்ல விடுபடுகிறது, விழிகளிரண்டையும் மூடியபடி அதன் பெயரைவிளித்து வரவேற்கிறேன், “வணக்கம் துயரமே”!

முற்றும்


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரவு உணவுக்கென்று அப்பாவும் நானுமாக மேசைமுன் அமர்ந்திருந்தபோது, மீண்டுமொருமுறை பதட்டத்துடனேயே சந்தித்திருந்தோம். எனக்குச் சுத்தமாக பசியில்லை, அப்பாவுடைய நிலைமையும் அதுதான். ‘ஆன்’ மறுபடியும் திரும்பி வரவேண்டிய அவசியத்தினை, இருவருமே உணர்ந்திருந்தோம். புறப்படுவதற்கு முன், ‘ஆன்’னிடம் கண்ட கலவரமடைந்த முகம் மீண்டும் மீண்டும் கண்ணிற் தெரிகிறது, தொடர்ந்து அவளுற்ற துயரங்கள், அனைத்திற்கும் நானே காரணமென்கிற உறுத்தல், தவிக்கிறேன். மிக நிதானமாக செயல்பட்டதையும், திட்டங்களை அரங்கேற்றியதையும் மறந்தாயிற்று. தலைச்சுற்றுகிறது, என்வசம் நானில்லை. என் தகப்பனார் முகத்தைப் பார்க்க அவரும் என்னைப்போலவே வேதனையின் உச்சத்திலிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

” என்ன நினைக்கிற, அவள் திரும்ப வர நாளாகுமா?

– அவங்க நிச்சயம் பாரீஸ¤க்குத்தான் போயிருக்கவேண்டும். – நான்

– பாரீஸா..,.கனவுகளுடன் முணுமுணுப்பதுபோல தெரிந்தது.

– இனி அவங்களைத் திரும்பவும் பார்ப்போமேன்று நினைக்கலை…”

அப்பா நிலை தடுமாறினார், எனது கையை எட்டிப்பிடித்தார்.

“- என்னோட இந்த நிலைமைக்கு நீதான் காரணம். எனக்கு என்ன நடந்ததென்று தெரியலை. ஊசியிலைத் தோப்புக்குள்ளே ‘எல்ஸா’வும் நானுமாகப் போனோம்…அவளென்னை…கடைசியில் நானும் முத்தமிடவேண்டியதாயிற்று, அநேகமாக ஆன் அதைப் பார்த்திருக்கணும் பிறகு…”

அவர் சொன்னதெதுவும் காதில் விழவில்லை. மனதில், அடர்ந்த ஊசியிலைத்தோப்பு, அதன் நிழலில் ஆணுபெண்ணுமாய் பின்னிய இரு உடல்கள், ‘எல்ஸா’வோ, அப்பாவோ என்கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக சம்பவம் நடந்த அன்றைக்கு, கொடூரத்தைச் சந்தித்த ஜீவனாக, உயிர்ப்புள்ள ஒரே ஜீவனாக என் மனக்கண்களில் கடைசியாகப் பார்த்த ஏமாற்றமும், துயரமும் குடிகொண்ட ‘ஆன்’னின் முகம். அப்பாவுடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டொன்றினை எடுத்துப் பற்றவைக்கிறேன். ‘ஆன்’ இருந்திருந்தால், தனது ஆட்ஷேபத்தைத் தெரிவித்திருப்பாள். உணவு நேரத்தில் புகைபிடித்தலை அவள் விரும்புவதில்லை. என் தகப்பனாரைப் பார்த்து மெல்ல சிரித்தேன்.

” நடந்ததெதற்கும் உங்களைச் குற்றம் சொல்லமுடியாது… சில நேரங்களில், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறோம். ஆனா, நம்மை ‘ஆன்’ மன்னித்துத்தான் ஆகணும், அதாவது ‘உங்களை’.

– என்ன செய்யலாம்?- அப்பா.

அப்பாவை பார்க்க பரிதாபமாக இருந்தது, ‘எனக்குக் கருணை காட்டுங்களேன்’ என்பது போல, நானும் இரக்கப்பட்டேன். ச்சே, என்ன இருந்தாலும் ஆன் சுத்த மோசம், இப்படி எங்களை அந்தரத்தில் நிறுத்திவிட்டு போனதேன்? நாங்கள் எல்லை மீறிபோய்விட்டொமென்பதற்காக ஒருவேளை இந்த தண்டனையா? எங்களுக்காகச் சில பொறுப்புகள் அவளுக்கு இருக்கிறதென்பதை மறந்துவிட்டாளா?

” அவளுக்குக் கடிதமொன்று எழுதலாம், அதில் நம்மை மன்னிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளலாம்”

– மிக நல்ல யோசனை” அப்பா உரத்துச் சொன்னார்.

கடந்த மூன்றுமணிநேரமாக, என்ன செய்வதென்று புரியாமல் கலங்கிக்கொண்டிருந்த நிலையில், கடிதமெழுதும் யோசனை அவருக்கு சரியாகப்பட்டது.

உணவை முடிக்கவில்லை, எழுந்துகொண்டோம். மேசை மீதிருந்த விரிப்பையும் மற்றவற்¨றையும், ஓரமாக ஒதுக்கினோம். அப்பா, ஒரு பெரிய மேசைவிளக்கு, பால்-பாயிண்ட் பேனா, கடிதம் எழுதுவதற்கான தாள்களென்று, வேண்டியதனைத்தையும் கொண்டுவந்தார், எதிரெதிராக அமர்ந்தோம், இருவருடத்திலும் மகிழ்ச்சி, ஏதோ நடத்துகிற இந்த நாடகத்தால் நாளைக்கே, ‘ஆன்’ திரும்பிவிடுவாளென்கிற நினைப்பு எங்களுக்கு. துரிஞ்சிலொன்று சன்னலுக்கு முன்னால் ஒரு சில நொடிகள் அழகாய் பறந்துவிட்டு மறைந்தது. அப்பா குனிந்து எழுத ஆரம்பித்தார்.

அன்றைய இரவு, ஆன்னுக்கு உருகி உருகி, நாங்கள் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையை இன்றைக்குக்கு நினைத்தால்கூட அபத்தமாக வேதனையாகவும் இருக்கிறது. ‘ஆன்’னை எப்படியாவது அடைந்தே தீருவதென்கிற ஆவேசத்துடன் நாங்கள் எழுத உட்கார்ந்தது ஏதோ முட்டாள் மாணவர்களிருவர், மிகவும் கடினமான வீட்டுப்பாடத்தைச் செய்ய உட்கார்ந்ததைப்போல, கவனமெடுத்துக்கொண்டோம்.. அதில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை இரண்டு கடிதங்கள், முடிந்த இடங்களில் மன்னிப்பு கேட்டு, அன்பைப் பொழிந்து, வருந்தி மிக உருக்கமாக எழுதப்பட்டவை, முடித்தபோது ‘ஆன்’ கடிதத்தைப் படிக்கநேர்ந்தால், உடனே புறப்பட்டு வருவாளென்று உறுதியாக நம்பினேன். அப்போதே ‘ஆன்’ திரும்ப வந்திருப்பதைப்போல நினைப்பு, தொடர்ந்து ‘மன்னிப்பு’ நாடகத்தின் காட்சிகள், அரங்கேறுமிடம்: பாரீஸ், எங்கள் வரவேற்பறை, நிறைய சந்தோஷம், வெட்கம், தயக்கம்…’ஆன்’ உள்ளே வருகிறாள்…

இரவு மணி பத்திருக்கும், தொலைபேசி ஒலித்தது. இருவரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், பெரிய சுமை குறைந்ததுபோல, ஒரு நம்பிக்கை: நிச்சயம் அது ‘ஆன்’னாகத்தான் இருக்கவேண்டும். எங்களை ‘ஆன்’ மன்னிக்கவும், திரும்பவும் வருகிறேன் எனச் சொல்வதற்காகவுமே அது ஒலிக்கிறது, தொலைபேசியில் வேறு யார்? ‘ஆன்’ அப்படித்தான் நம்பினோம். வேகமாய் ஓடிச்சென்று கையிலெடுத்த அப்பாவின் குரலில், இதுவரை காணாத சந்தோஷம், “அல்லோ…”

வேறு வார்த்தைகளில்லை, தொடர்ந்து” ம்…ஆமாம், சொல்லுங்க? எங்கே? அப்படியா”, குரலில் சுரத்தில்லை, சோர்ந்து ஒலிக்கிறது. சட்டென்று எழுந்துகொண்டேன், பயத்தில் உடல் நடுங்குகிறது. அப்பாவைப்பார்க்கிறேன், அவரது கரம் எந்திரத்தனமாக முகத்திற் படிந்தது. கடைசியில் தொலைபேசியை வைத்துவிட்டு என்பக்கமாய்த் திரும்பினார்.

” அவளுக்கு விபத்து, எஸ்த்தெர்ல்(Esterl) போகிற வழியில் நடந்திருக்கிறது. முகவரியைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டிருக்கிறார்கள். பாரீஸ¤க்கு போன் செய்து பார்த்திருக்கிறார்கள், பிறகு நமது தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது, இங்கே தொடர்புகொண்டிருக்கிறார்கள்.”

அவர் கடகடவென்று எந்திரம்போல, குரலில் ஏற்ற இரக்கமின்றி, சொல்லிக்கொண்டு போனார், குறுக்கிடுவதற்கு எனக்கு அச்சம்.

” விபத்து நடந்த இடம் மிகவும் மோசமான இடம். ஏற்கனவே பலமுறை அங்கு விபத்து நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கார் ஐம்பதடி ஆழத்தில் விழுந்திருக்கிறது. உயிர்பிழைத்தால் ஆச்சரியம்.”

எஞ்சிய இரவு எத்தனை பயங்கரத்துடன் கழிந்ததென்பது நினைவிலிருக்கிறது. காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் வளர்ந்துகொண்டுபோன சாலை, உணர்ச்சிகளேதுமற்ற அப்பாவின் முகம், மருத்துவமனையின் கதவு… அவளை, நான் பார்ப்பதை அப்பா தவிர்த்தார், காத்திருக்கும் அறையில், பெஞ்சொன்றில் அமர்ந்திருந்தேன், எதிரே சுவற்றில், செதுக்கிய ஓவியமாக ‘வெனிஸ்நகரக் காட்சி. மனம் உறைந்து கிடந்தது. செவிலிப்பெண்ணொருத்தி, கோடையில் மாத்திரம், அதுவரை அங்கே ஆறுவிபத்துகள் நடந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தாள். ‘ஆன்’னைப் பார்க்கவென்று சென்ற அப்பா வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

எல்லாம் முடிந்தது, இனியவள் நிரந்தரமாகத் திரும்பப்போவதில்லை. மீண்டுமொருமுறை ‘ஆன்’ , தான் யாரென்று நிரூபித்திருந்தாள். எங்களுக்கும் அதாவது எனக்கும் என் தந்தைக்கும் – மனத்திடமுமிருந்து, தற்கொலை செய்திருப்போமென்றால், எங்கள் தலையில் குண்டு பாய்ந்திருக்கும், கூடவே சம்பந்தப்பட்ட மனிதர்களின் நிம்மதியையும், உறக்கத்தையும் வாழ்நாள் முச்சூடும் குலைக்கவென்று விபரமாக ஒரு தாளில் எழுதியும் வைத்திருப்போம். விபத்து நடந்த இடத்தையும், கார் தடம்புரண்டிருந்தவிதத்தையும் வைத்து பார்க்கிறபோது, நடந்ததை விபத்தென்று நம்புவதற்கான சாத்தியங்களை, ஓர் அதிசயப்பரிசாக ‘ஆன்’ எங்களுக்கு, வழங்கியிருந்தாளென்று சொல்லலாம். எதிர்காலத்தில், அப்பரிசினை ஏற்றுக்கொள்வதற்குரிய பரிதாபகரமான நிலையில் நாங்களுமிருக்கலாம். அன்றையதினம், தற்கொலை குறித்து பேசுகிற மனநிலையில்தான் நானுமிருந்தேன். இறந்தவரோ, வாழ்பவரோ எங்களுக்கு ஒருவரும் வேண்டாமென்று நினைக்கிற நாங்களாவது தற்கொலைசெய்துகொள்வதாவது? அடுத்து என் தகப்பனாரும் நானும் அச்சம்பவத்தை விபத்தென்று கருதினோமேயொழிய, வேறொன்றாகப் பார்க்க மனம் இடந்தரவில்லை.

மறுநாள், மதியம் மூண்றுமணி அளவில் வீட்டிற்குத்திரும்பினோம். ‘எல்ஸா’வும் ‘சிரிலும்’ வாயிலில் படிகளில் அமர்ந்து எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அர்த்தமற்ற காதல் விளையாட்டுக்கு இருவருமே சொந்தக்காரர்கள்கள், இருவரிடத்திலும், வழக்கம்போல எவரையும் வசீகரித்து சங்கடத்துக்குள்ளாக்குகிற கவர்ச்சி, எங்களைப் பார்த்ததும் எழுந்து நிற்க, அர்த்தமற்ற அரூபமனிதர்களாய் தெரிந்தார்கள், அவர்களுக்கு ‘ஆன்’ அறிந்தவளுமல்ல, விரும்பியவளுமல்ல. சிரில், என்னைக்கண்டதும் முன்வந்து எனது கரத்தைப் பற்றினான். அவனை நேரிட்டுப் பார்த்தேன். ஒருபோதும் உண்மையாய் அவனை, நேசித்ததில்லை. பார்க்க நல்லவனாகவும், இலட்சணமாகவுமிருந்தான். எனது இச்சையை அவன் பூர்த்திசெய்தவிதம் பிடித்திருந்தது, அதற்காகத் தொடர்ந்து எனக்கவன் வேண்டுமென்பதில்லை. விடுமுறை முடிந்தது நான் புறப்படவேண்டும், கோடைகாலம், வில்லா, சிரில் இனியெனக்கு வேண்டியதில்லை, எனது தந்தை, தந்தை மாத்திரம் உடனிருப்பார். எனது எண்ணங்களைப் புரிந்துகொண்டவர்போல, எனது கரத்தை அவர் வாங்கிக்கொள்ள இருவருமாக, வில்லாவுக்குள் நுழைந்தோம்.

வில்லாவில், ‘ஆன்’னை நினைவுபடுத்துகிற அவளுடைய பெரிய மேலாடை, அவள் கொண்டுவந்திருந்த மலர்கள், மலர்கொத்துகள், அவள் தங்கியிருந்த அறை, அவள் உபயோகித்த வாசனை தைலம். அப்பா, சன்னல் இலைத்தட்டிகளை(Les volets) இறக்கினார். குளிர்ப்பதனப்பெட்டியிலிருந்து, ஒரு மதுபாட்டிலையும் இரண்டு கண்ணாடி தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தார். மன ஆறுதலுக்கு, கைக்கெட்டும் தூரத்திலிருந்த எங்களது ஒரே நிவாரணம். ‘ஆன்’னிடம் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்து எழுதிய கடிதங்கள் இன்னமும் மேசையில் கிடந்தன, அவற்றைத் தள்ளியதில், கீழே விழுந்து காற்றில் தடுமாறுகின்றன. மதுவை நிரப்பிக்கொண்டு எழுந்த அப்பா, தரையில் கிடந்த கடிதங்களைக் கண்டு தயங்கி நின்றார், பின்னர் மிதித்திடாமல் கவனமாக என்னிடத்தில் வந்தார். அப்பாவிடமிருந்து கண்ணாடித் தம்ளரை வாங்கியவள் ஒரு மிடறை விழுங்கினேன். அறையெங்கும் சன்னமான இருட்டு, சன்னலொட்டி அருவமாக அப்பா. திரும்பத் திரும்பத் கரையில் மோதிச்சிதறும் கடல்.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 16

விதிக்கு, கண்ணியமற்ற, அற்ப முகங்களென்றால் தனிப் பிரியம்போலிருக்கிறது. அந்தக் கோடையின் போது அதற்கு ‘எல்ஸா’ கிடைத்திருந்தாள். ஆனால் அவளுடை முகம் மிகவும் அழகானது, கவர்ச்சியிலும் குறைவில்லை. கூடுதலாக, அசட்டு மனிதர்களிடத்தில் மாத்திரமே காணக்கூடிய ஒளிவு மறைவற்ற, கலகலவென்ற சிரிப்பு.

என் தகப்பனார் விடயத்தில், அச்சிரிப்பின் பங்கென்ன என்பதை, விரைவில் புரிந்துகொண்டேன், நாங்களிருவரும், எதிர்பாராமல் ‘சிரிலோடு’ சேர்த்து, ‘எல்ஸா’வைச் சந்திக்கிற நேரங்களிலெல்லாம், அதனை அவள் உபயோகிக்கவேண்டி, அத்தனை உபாயங்களையும் கையாண்டிருக்கிறேன். அவளிடத்தில், “அப்பா, உங்களிருவர் அண்மையில், வருவதை அறிந்தவுடனேயே பேசாதே, சிரி.” எனச் சொல்வதுண்டு. அதன்படி அவள் நிறுத்தாமல், கலகலவென்று சிரிப்பதும், தொடர்ந்து அப்பா ஆத்திரப்படுவதும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நடக்கிற நாடகத்திற்கு நானே சூத்ரதாரி என்கிறபோது அத்தனை மகிழ்ச்சி, தொடர்ந்து ஆர்வம் காட்டினேன். வைத்த குறி தப்பியதில்லை, ‘எல்சா’வும் ‘சிரிலு’ம் தங்கள் பொய்யான உறவு நாடகத்தை கனகச்சிதமாக அரங்கேற்றுவதை காண்கிறபோதெல்லாம், அப்பாவும் நானும் முகம் வெளுத்துப்போயிருக்கிறோம், எங்கள் முகத்தில் இரத்தமற்றுபோகும்., இருவருக்கும், அவரவர் உடமைமீதும் ஏற்படுகிற தாபத்தினை, சாதாரண வேதனையென்று சொல்லிவிடமுடியாது, அதற்கும் மேலே. ‘ ‘சிரில்’, எல்சாமீது சாய்ந்தபடி இருக்கிறபோதெலாம்’, என்னுடைய இதயம் சுக்கு நூறாகியிருக்கிறது, இத்தனைக்கும் அக்காட்சியைத் தீர்மானித்தது நானாக இருக்கும், அதைத் தீர்மானித்தபொழுது, அதன் உக்கிரத்தை உணராதது என் தப்பு. அரங்கேறுகிற காட்சிக்குப் பொருத்தமான, எளிமையான இரண்டொரு வார்த்தை பரிமாற்றங்கள்… அதிலும் குறிப்பாக சிரிலின் முகமும், அவனது பழுப்பு நிற, மென்மையானக் கழுத்தும், ‘எல்ஸா’விற்குத் தாரைவார்க்கப்படுவதைப் பார்க்க மனம் பொறுப்பதில்லை, அதைத் தடுத்து நிறுத்த என்னவிலையென்றாலும் கொடுப்பதற்கு தயாராகவே நானிருந்தேன். இதில் ஆச்சரியமென்னவென்றால், பெரும்பாலான நேரங்களில், அக்காட்சிகளுக்கு நான்தான் காரணகர்த்தாவென்பதை மறந்துபோவது.

மேலே குறிப்பிட்டதுமாதிரியான ஏராளமான அசம்பாவிதங்களுக்கிடையிலும், எங்கள் மத்தியில் ஒருவித ‘நம்பிக்கை இழை, நெருக்கம், இனிமை” – இல்லை எனக்குப் பொருத்தமான சொல் கிடைக்கவில்லை, அதாவது ‘ஆன்’னுடைய தயவால் வாய்க்கப்பெற்ற ‘நிம்மதியான’ வாழ்க்கை. ‘நிம்மதி’கூட சரியான சொல்லாகாது, ‘நிம்மதியையொத்த’ என்று, வேண்டுமானாற் சொல்லிக்கொள்ளலாம். அதற்கு முன்பு அப்படி நடந்துகொண்டதில்லை, எங்களைப் பற்றியே நாங்கள் சிந்திந்துக்கொண்டிருந்தநேரத்தில், அவள், எங்கள் நலனை நினத்து செயல்பட்டாள், எங்களது மோசமான ஆசைகளோடும், எனது சின்னத்தனமான திட்டத்தோடும் ஒப்பிடுகிறபோது அவள் மிகவும் உயர்ந்தவள். என் தகப்பனாருக்காக தனது கண்ணியமானத் தோற்றம், புத்திகூர்மை, நேசம் என்பவற்றைத்தவிர, பிறபொய்யான கவர்ச்சிகளை விட்டொழித்தாள். எனது. திட்டத்திற்குப் பெரிது உதவுமென நம்பிக்கொண்டிருந்த அவளுடைய பிரத்தியேக குணங்களான, கல்மனதும், வீம்புங்கூட அவற்றுள் அடங்கும். நான் அவளுக்கென்று வருந்த ஆரம்பித்தேன், சிலவேளைகளில் நமதுணர்வு, படைகளின் அணிவகுப்பில் வாசிக்கப்படும் இசைக்கு ஒப்பானது, விவரிக்க இயலாத பரவசத்தில் நம்மை நிறுத்திவிடும், ‘ஆன்’னுக்காக எனது மனது துடித்தபோது அப்படித்தான் நெகிழ்ந்துபோனேன். அதற்காக என்னை நீங்கள் குற்றஞ் சொல்ல வேண்டாம்.

ஒருநாள் காலை நேரம், மிகுந்த பரபரப்புடன் வேலைக்காரி என்னைத் தேடிவந்தாள், அவள் கையில்: திட்டமிட்டபடி நடக்கிறது, உடனே வரவும்!” என்கிற தகவல். பெரியவிபரீதம் காத்திருக்கிறதென்று மனது எச்சரித்தது. எனது திட்டத்தின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறேன், அதனைச் சந்திக்க பயம். கடற்கரைக்குப் போய் பார்த்தால், அங்கே ‘எல்ஸா’, அவளது முகத்தில், கடைசியில் தான் வென்றுவிட்ட மகிழ்ச்சி.

” – ஒருவழியாக, உன்னோட தகப்பனாரை பார்க்கமுடிந்தது, ஒரு மணிநேரம் ஆகிறது.

– உங்கிட்ட என்ன சொன்னார்?

– அவர் எங்கிட்ட மிருகத்தனமா நடந்துகொண்டாராம், வருத்தம் தெரிவித்தார். உண்மைதானே?”

நான் அனுமதித்ததுபோல, தொடர்ந்தாள்.

” – பிறகு என்னைப் புகழ்ந்து நிறைய வார்த்தைகள், அவருக்கு மாத்திரமே அது வருமென்பதுபோல. கொஞ்சம் ஒட்டுதலற்றகுரல், குழைவான வார்த்தைகள், மனதிலிருப்பதை சொல்ல முடியாமல்…எப்படி சொல்றது..”

நனவுலகிற்கு அவளைக் கொண்டுவர தீர்மானித்தவளாய்:

” – எதற்காக அத்தனையும், கடைசியில் என்னதான் சொன்னார்?

– ஒன்றுமில்லைண்ணு சொல்வதற்கில்லை!… பக்கத்து கிராமத்துக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வரலாமாவென்று கேட்டிருக்கிறார், எனக்கும், ‘பழிவாங்கணுங்கிற எண்ணமெல்லாமில்லை, எனக்கும் பரந்த மனசிருக்கு, முன்னைப்போலயில்லை, நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறேண்ணு’, உனது தகப்பனார்கிட்ட நிரூபிச்சாகணுமில்லையா?.”

என் தகப்பனாருக்கு, தலைமுடி தேன்நிறத்திலிருக்கிற பெண்களின் முன்னேற்றங்கள் குறித்து சில அபிப்ராயங்களுண்டு, அதை நினைத்துப்பார்த்தேன், சிரிப்புவந்தது.

” – ஏன் சிரிக்கிற? அவருடைய அழைப்பையேற்று, போகத்தான் வேண்டுமா?

எனக்கதில் சம்பந்தமில்லையென, சொல்ல நினைத்தேன். அந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முழுக்கமுழுக்க நானே காரணமென்று நினைக்கிறாள், உண்மையிருக்கிறதோ இல்லையோ, வகையாய்ச் சிக்கியிருந்தேன், எனக்குக் கோபம்வந்தது:

” எல்ஸா… இந்த விடயத்திலே என்னை இழுக்காதே, உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய். அடிக்கடி என்னைக்கேட்டுகொண்டு அதன்படி காரியத்திலிறங்கறதும் சரியில்லை, பிறகு, ஏதோ நாந்தான் உன்னை இப்படியெல்லாம் செய்யச்சொல்கிறேனென்று பலரும் நம்பக்கூடும்.

– அதுதானே உண்மை, உன்னுடைய உதவியாலத்தானே இன்றைக்கு இந்த நிலைமை…”

அவளது பாராட்டு மொழிகள், என்னை பரவசபடுத்துவதற்குப் பதிலாகப் பயமுறுத்தியன.

” – உன்னுடைய விருப்பபடி ஆகட்டும், இனி எங்கிட்டே, இதெல்லாம் வேண்டாம், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்!

” – செசில்… என்ன பேசுற நீ, அந்த பொம்பளையை துரத்தியாகணுங்கிறதை மறந்தாச்சா.

தப்பினால் போதுமென்று அங்கிருந்து புறப்பட்டேன். அவருடைய விருப்பமென்னவோ அதன்படி அப்பா நடந்துகொள்ளட்டும், முடிந்தால் ஆன் நெருக்கடியைச் சமாளித்துக்கொள்ளட்டும், நான் சிரிலை சந்திக்க வேண்டியிருந்தது. எனது அப்போதைய கலவரப்பட்டிருந்த மனதிற்கு சிரிலுடனான உறவு மாத்திரமே மாற்றாக இருக்குமென்று நம்பினேன்.

சிரில், எனது கரங்க¨ளைத் தொட்டு அருகிலிழுத்துக்கொண்டான், வார்த்தையேதுமில்லை. அவனது அண்மையில், அனைத்தும் கைகெட்டும் தூரத்தில், நிறைய உக்கிரம், கட்டுக்கடங்கா சந்தோஷம். சிறிது நேரத்திற்குப்பிறகு அக்கடாவென்று, வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்த அவனது பொன்னிற சட்டையணிந்த மார்பில் கிடந்தேன், புயலிற் சிக்கிய படகுபோல அப்படியொரு களைப்பு, அவனிடத்தில் எனக்கிதில் விருப்பமில்லையென்று சொன்னேன். ஆனால் அதை அவனிடத்தில் புன்னகை செய்தபடிதான் கூறினேன், காரணம் அதை நினைத்தபோது எனது மனதில் வலிகளில்லை, மாறாக ஒருவித இதமான மகிழ்ச்சி. சிரில் நான் சொன்னதைப் பெரிதுபடுத்தவில்லை.

” அதனாலென்ன.. என் விருப்பத்திற்கு இணங்கும் அளவிற்கு எனது காதல் உன்னை மாற்றியிருக்கிறது, உன்னை மிகவும் நேசிக்கிறேன், வெகு ஆழமாக நேசிக்கிறேன்…

” உன்னை மிகவும் நேசிக்கிறேன், வெகு ஆழமாக நேசிக்கிறேன்…” என்றவன் கூறியிருந்தது, சாப்பிட உட்கார்ந்தபோதுகூட எனது காதில் ஒலித்தன, விளைவு மதிய உணவின்போது தெளிவாக என்ன நடந்ததென்கிற நினைவில்லை. ‘ஆன்’ ஊதா வண்ணத்தில் வெளுத்த கவுனொன்றினை அணிந்திருந்தாள், அவளது கண்களிலும், கண்களைச் சுற்றிலுங்கூட கருவளையங்கள் சூழ்ந்து, கவுனைப்போலவே சோபையற்றிருப்பதைபோலத் தோற்றம், அப்பாவின் முகத்திலோ சந்தோஷம், அதை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார், நிலைமை அவருக்குச் சாதகமாகத் திரும்பியிருந்தது. கடைசியில் உணவின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருந்தபோது, மதியம், அருகிலிருக்கிற கிராமத்திற்குச் சென்று சில பொருட்களை வாங்கிவரயிருப்பதாகக் அப்பா கூறினார், அதைக் கேட்டதும் உள்ளூரச் சிரித்துக்கொண்டேன். எனக்கு முடியலை, உயிர்வேதனையெனச் சொல்வார்களே அந்த நிலமையில்தான் நானுமிருந்தேன். கடலிலிறங்கி நீந்திவிட்டுவரலாமென்று தோன்றியது.

மணி நான்கிருக்கும் கடலில் இறங்கினேன். அப்பாவை மாடியில் வெளியில் நின்றுகொண்டிருந்தார், மதிய உணவின்போது சொல்லியிருந்தது, ஞாபகத்திற்குவந்தது, அருகிலிருந்த கிராமத்திற்குச் செல்ல தயாராகயிருந்தார், அவரிடம் ஏதாகிலும் சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. கு¨றைந்தபட்சம், கவனமாயிருங்கள், அவசரப்படாதீர்களென்று சொல்லியிருக்கலாம்.

கடல்நீர் இளஞ்சூட்டுப் பதத்துடன் சுகமாக இருந்தது. ‘ஆன்’ கடலில் குளிக்கவரவில்லை. அங்கே அப்பா ‘எல்ஸா’வுடன் ஆசைவார்த்தைகளிலிறங்க, ‘ஆன்’ இங்கே தனது விருப்ப சேகரிப்போடு(Collection) பொழுதைக் கழிக்கலாம் அல்லது தனது அ¨றையிலமர்ந்து சித்திரம் தீட்டலாம். இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும், சூரியனும் எதிர்பார்த்ததுபோல இல்லையென்று தெரிந்தவுடன் மாடிக்கு வந்தேன். செய்தித்தாளொன்றை விரித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன்.

ஆன் வருவது தெரிந்தது. ஊசியிலைத் தோப்பு திசையிலிருந்து வந்தாள், இல்லை ஓடிவந்தாள், பதட்டத்துடன் ஓடிவந்தாள், அப்படியொரு வேகம், வயதான பெண்மணியொருத்தி ஓடிவருவதும் முடியாமல் தடுமாறுவதும், விழுந்தெழுவதும் மாதிரியான விபரீதமான கற்பனையில் நான். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் அமர்ந்திருந்தேன், வந்தவள் வீட்டின் பின்புறமிருந்த, கார் நிறுத்திவைக்கும் கொட்டகைப்பக்கம் மறைந்துபோனாள். நடக்கவிருப்பதென்னவென்று சட்டென்று புரிந்தது, அவளைத் தடுத்து நிறுத்தவேண்டும், ஓடினேன்.

நான் போனபோது காரில் அமர்ந்திருந்தாள், சாவியைக்கொடுக்க எஞ்சின் உருமுகிறது. ஓடிச் சென்று கதவில் விழுந்தேன்.

” ஆன் அவசரப்பட்டு, எந்தமுடிவும் எடுக்க வேண்டாம். போகாதீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம், என்னநடந்ததென்று விளக்கமா சொல்றேன்…”

ம்.. அவள் காதில் வாங்கினாளாவென்று தெரியவில்லை, என்னை நேராகப் பார்ப்பதையும் தவிர்த்தாள், கைச் சக்கரத்தடையை (Hand break), தளர்த்தவென்று குனிந்தாள்.

” ஆன்… போயிடாதீங்க. எங்களுக்கு நீங்க அவசியம் இருந்தாகணும்!”

சட்டென்று நிமிர்ந்தாள், உடைந்து அழுதாள். கடைசியில் எனது எதிரியென்று கருதி மோத நினைத்தது வெறும் ஜடமல்ல, இரத்தமும் தசையும் கொண்ட உயிர், அதற்கும் உணர்வெல்லாமுண்டு என்பது புரிந்தது. அவளும் சிறுமி, கொஞ்சம் புதிர், இளம்பெண், பின்னர் பெண்மணியென்று வாழ்க்கையை அறிந்தவள், நாற்பது வயதும், தனிமைவாழ்க்கையும் அவளை, ஓர் ஆணை விரும்பவைத்திருக்கிறது, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, ஒருவேளை இருபது ஆண்டுகளுக்குக்கூட அவனோடு வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கலாமென்ற கனவுகள் இருந்திருக்கக்கூடும். ஆனால் என்ன செய்திருக்கிறேன், இதோ.. அவளது அவலமான இந்த முகத்திற்கு நான்தானே காரணம்? அதிர்ச்சியில் உறைந்துபோனேன், உடல் நடுங்க கார்க் கதவைப் பிடித்தபடியிருந்தேன்.

” – உங்களுக்கு ஒருவரும் வேண்டாம், உனக்கும் சரி, உன் தகப்பனாருக்குஞ் சரி.” -ஆன்.

எஞ்சின் உருமுவது தொடர்கிறது, எனக்கு ஏமாற்றம், திடீரென்று அவள் புறப்பட நினைப்பது சரியல்ல:

” – ஆன்… தயவு செய், என்னை மன்னிக்கணும். உன்னைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், எங்களோடு இருக்கத்தான் வேண்டும்.

” – எதற்காக மன்னிக்கணும்?”

இரு விழிகளிலிருந்தும், பொலபொலவென்று கண்ணீர், அதைப் பற்றிய அக்கறையின்றி, என்னை வெறித்துப்பார்த்தாள்:

” அசடு அசடு…எதற்காகயிப்படி சின்னப்பெண்போல…”

ஒருசில நொடிகள், அவளது கரம், எனது கன்னத்தில் படிந்திருந்தது, சட்டென்று புறப்பட்டாள். கார் எங்கள் வீட்டினையொட்டி வளைவில் திரும்பும்வரைவரை இருந்தேன், பிறகுச் சுத்தமாக மறைந்துபோனது, போனவிடம் தெரியவில்லை., அனைத்தும் கணத்தில் நடந்துமுடிந்திருந்தது. ஆனால் கடைசியாய் பார்த்த அந்த முகம், ஆன்னின் முகம்…

எனது பின்னால் ஏதோ சத்தம், திரும்பிப்பார்க்கிறேன் அப்பா. சிலநொடிகள் தன்மீது ஒட்டியிருந்த ‘எல்ஸா’வுடைய உதட்டுச் சாயத்தைத் துடைத்துக்கொள்ளவும், தைத்திருந்த ஊசியிலைகளை தட்டிவிடவும் செலவிட்டார், வேகமாய் அவர்பக்கம் திரும்பியவள், அவர் மார்பில் விழுந்தேன்.

” – மிருகம்..மிருகம்!

தேம்பித் தேம்பி அழுகிறேன்,

” – என்ன ஆச்சு? எதற்காக அழற? ‘ஆன்’… ஆன்..எங்கே? செஸில்… அழாம நடந்ததென்னவென்று, சொல்லித் தொலையேன்…”

—————————————-
nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


என்னைப் பற்றியும், ‘ஆன்’னைப் பற்றியும் நான் சொன்ன அளவிற்கு, என் தகப்பனாரைபற்றி உங்களிடத்தில் கூறியிருப்பது குறைவென்று சொல்லலாம், அதற்குக் காரணம், அவரிடத்தில் எனக்கு அக்கறையில்லையென்றோ, நான் சொல்லிகொண்டிருக்கிற கதையில் அவருக்கு முக்கியத்துவமில்லையன்றோ பொருளல்ல. அவரை நேசித்த அளவு வேறொருவரை ஒருபோதும் நான் நேசித்ததில்லை. என் மனதில் அப்பாவிற்கென நிரந்தர இடமிருந்தது, அது ஆழமான அன்பு, அக்காலக்கட்டத்தில் என்னை ஆட்டுவித்த அத்தனை உணர்வுகளிலும் பார்க்க, மேப்பட்டது, பத்திரமாக போற்றியும் வந்தேன். அவரைப்பற்றிச் சொல்வதற்கு மூட்டைமூட்டையாய் தகவல்களிருந்ததுபோல, அவரிடத்தில் மட்டுமே, “எனது மனதுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்ளுங்களேன்”, எனச் சொல்லவும் வேண்டியிருந்தது. அவர் சுயநலவாதியுமல்ல, வீம்பான ஆசாமியுமல்ல. ஆனால் எதையும் யோசனையின்றி செய்யக்கூடியவர், மனம்போனபோக்கு, அதைத் திருத்த முடியாது. ‘நல்லுணர்வுகளுக்கு அவர் அருகதையற்றவர், பொறுப்பற்றவர்’, என்பதும் சரியல்ல. என்னிடத்தில் அவர் காட்டிய அன்பை, ஒரு தகப்பனுக்கும் மகளுக்குமுள்ள சராசரி பாசமாக நீங்கள் கருதக்கூடாது. என்னால் நிறைய இன்னல்களை அவர் அனுபவித்திருக்கக்கூடும்? உலகில் வேறொருவர் அவரளவிற்கு வருந்தியிருக்கமாட்டார்கள். என்னுடைய வருத்தமும் குறைந்ததாயென்ன? அன்றொருநாள், எனக்கேற்பட்ட ஏமாற்றத்திற்கு, என்னை நிராகரிக்கும் அவரது மனப்பாண்மையும் அல்லது முகத்தை அவ்வப்போது அவர் திருப்பிக்கொள்வதுமாத்திரமா காரணங்கள்? நான் முக்கியமா, அவரது சொந்த இச்சைகள் முக்கியமாவென்றால், அவரது தேர்வு எனக்காகவே இருக்கும். சில இரவுகளில் என்னோடு வீட்டிற்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில், ‘மிஸியே வெப்'(Webb) மொழியில் சொல்வதென்றால், ‘வாய்த்த நல்ல சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறார்”. அது தவிர மற்ற நேரங்களிலெல்லாம், சந்தோஷம், சபலம், மனம்போனபோக்கென்று வாழ்ந்துவந்தவரென்பதையும், மறுக்கவில்லை. பிரச்சினைகளை உடல்ரீதியாக அணுகினார். காரணகாரியத்துடன் பதிலிறுப்பார். “என்ன முடியலையா? எரிச்சல் வருதா? மதுவை குறைத்துக்கொள், நிம்மதியாகத் தூங்கு”. பெண்ணொருத்திமீது அவருக்கு வருகிற விபரீதமான ஆசைக்கும் அந்த நிலைமைதான், அதனைக் கூடாதென்று தவிர்ப்பதுமில்லை, அதனை வளர்த்துக்கொண்டு அவதிப்படுவதுமில்லை. யதார்த்தவாதி, பக்குவமாக அணுகும் குணம், அடுத்தவர் மனம் புரிந்து நடப்பவர், மிக மிக நல்லவர்.

எல்ஸா மீதான மோகத்தினால், துன்பத்திலிருந்தார். அதற்காகப் பெரிதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளவேண்டாம். “‘ஆன்’னை ஏமாற்றப்போகிறேன் என்றவுடனே, இனி அவளை நேசிக்கப்போவதில்லையென்று பொருளல்ல. எல்ஸா மீதான தாபம், என்னை மிகவும் வாட்டுகிறது. ஏதாகிலும் செய்தாகவேண்டும், அல்லது ‘ஆன்’னிடம் எனக்கினி ஒத்துவராது”, என்றெல்லாம் என் தகப்பனார் சொல்லிக்கொண்டது கிடையாது. உண்மையில், ‘ஆன்’னை மிகவும் நேசித்தார், அவளைக் கொண்டாடினார். ‘ஆன்’னும் படிப்பறிவற்ற, மோசமான பெண்கள் பின்னால் சுற்றும் அப்பாவின் குணத்தை மாற்றியிருந்தாள். அவரை நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவளால் என் தகப்பனாருடைய வீண்பெருமைகளுக்கும், உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கவும் முடிந்தது, தனது புத்திகூர்மையையும், அனுபவத்தையும் அவரோடு பகிர்ந்துகொண்டாள். அப்பாவின் மனமோ, வேறுவிதமாக ‘ஆன்’னைப்பற்றி கணக்குப்போட்டது. அவள், அவருக்கு ‘பொருத்தமான ஆசைநாயகியாக’வும், எனக்கு ‘இலட்சிய தாயாகவும்’ இருக்கமுடியுமென்று நினைத்திருக்கவேண்டும். ‘இலட்சிய மனைவியாக’ அவளைக் கைப்பிடித்து, நியதிகள்படி வாழ்வதற்கு அவரால் முடியாதென்பது உறுதி.. நாசூக்காகச் சொல்லவேண்டுமென்றால், என் தகப்பனாரும் என்னைப் போலவே கிறுக்குப் பிடித்த ஆசாமியென்பது ‘ஆன்’னுடைய தீர்மானம், சிரிலுடைய கருத்தும் அதுதான். யார் எப்படி நினைத்துக்கொண்டலும், சோபையற்ற வாழ்க்கைக்கு, முடிந்த அளவு ஒளிசேர்ப்பது அவசியமென்றெண்ணுகிற என் தகப்பனாரை தடுக்கவியலாது.

எப்படியாவது எங்கள் வாழ்க்கையிலிருந்து ‘ஆன்’னை ஒதுக்க நினைத்தேனேயன்றி, என் தகப்பானருக்கு அதனால் நேரக்கூடிய சாதக பாதகங்களைக் கணக்கில் கொள்ள தவறிவிட்டேன். எனக்கென்னவோ அப்படியொரு நிலைமை ஏற்பட்டாலும், அப்பா சமாளிப்பாரென்றே தோன்றியது. இதற்கு முன்பு எத்தனையோ விடயங்களில் அவர், தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறார். ஆக ‘ஆன்’னுடன் முரண்பிடித்தால், மனம்போன போக்கிலே அவர் வாழமுடியுமென்பதால் ஒருவகையில் அப்பாவுக்கு இலாபம். என்ன செய்வது, அப்பாவும் நானும் ஒரே இனம், சொல்லப்போனால் ஊர்மேயும் கூட்டம், சந்தோஷம் சந்தோஷமென்று, வாரி இறைத்துவிட்டு புலம்பிக்கொண்டிருக்கு இனம்., என்னைபோலத்தானே என் தகப்பனாருமிருப்பார், வழக்கம்போல காத்திருந்தார், மனதிலுள்ளதை செயல்படுத்தாது வாடிக்கொண்டிருந்தார்.

ஆக அப்பா மிகவும் சஞ்சலத்திலிருந்தார், எல்ஸாமீதான கோபமும் தணியாமலிருந்தது: அப்பாவைப் பொறுத்தவரை, எல்ஸா அவரது கடந்தகால அடையாளம், இளமையின் அடையாளம், குறிப்பாக அவரது இளமையின் அடையாளம்.. “அன்பே ஒரு நாள், கட்டாயம் “எல்ஸாவைச்” சந்திக்கணும், நான் கிழவனில்லைண்ணு அவளிடத்தில் நிரூபிச்சாகணும். எனக்கு நிம்மதி வேண்டுமென்றால், மெத்தனத்தை அவளது சரீரத்திடமிருந்துதான் கற்றாகணும்”, என்றெல்லாம் ‘ஆன்’னிடத்தில் அப்பா சொல்லக்கூடுமோ, என்று நினைத்தேன். ஆனால், ஆன் பொறாமைகொள்வாளென்றோ, நற்பண்புகள்கொண்ட அவளிடத்தில் அவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது என்றெண்ணியோ, கேட்டால் கோபமுறக்கூடுமென்பதாலோ அவர் சொல்லவில்லை. ‘குடி, கூத்தியென்று கூடாது, தான் விடலைப் பையனில்லை என்பதை உணர்ந்தாகணும், ‘ஆன்’னும் அப்பாவை வளர்ந்த ஆண்பிள்ளையாக நினைத்துத் தன்னை ஒப்படைத்திருக்கிறாளேயன்றி அவரது விடலைப் பையன் குணத்திற்கல்லவென்பதை புரிந்து கொண்டு, ஒழுங்காக இருக்கவேண்டும், அதைவிடுத்துக் கண்டதற்கும் ஆசைப்படும் பரிதாபத்திற்குரிய மனிதராக இருக்கக்கூடாது’, என்றெல்லாம் ‘ஆன்’ன்னும் தன்னுடன் வாழ்வதற்கென்று சில நிபந்தனைகளை என் தகப்பனாருக்கு விதித்திருக்கக் கூடும். அதற்காக ‘ஆன்’னை நாம் குற்றம் சொல்ல முடியாது, மனிதர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டுமெனில், சில விதிமுறைகளைக் கடைபிடித்தாகவேண்டும், ஆனால் அவள் விதித்திருந்த கட்டுப்பாடுகளால் ‘எல்ஸா’ மீதான அவரது தாபத்தைக் குறைக்க முடிந்ததாவென்றால், இல்லை. ‘எல்ஸா’ மீது கொண்டிருந்த அவரது காதல், ஒரே நேரத்தில் இரு பொருள்கள் மீது கொள்கிற கூடாத ஆசை, அவ்வாசை, எல்லா ஆசைகளையும்போலவே கூடிகொண்டுபோனதேயன்றி, குறையவில்லை.

அந்தநேரத்தில்தான், பிரச்சினைக்கு என்னால் தீர்வு காணமுடியுமென்று தோன்றியது. ‘பின்னேரத்தில் ஒருநாள், ‘ஆன்’னை அழைத்துக்கொண்டு ‘நீஸ்'(Nice) நகரத்திற்கோ அல்லது வேறெங்காகிலுமோ, நான் செல்கின்ற நேரத்தில் ‘எல்ஸா’ அப்பாவைச் சந்திக்கவேண்டும்’, என்கிற திட்டத்தை அவளிடத்திற் தெரிவிப்பது. அவ்வாறு நடந்தால், ‘நீஸ்'(Nice) நகரத்திலிருந்து திரும்பும்போது, முறையான கலவிக்குவேண்டிய அல்லது விடுமுறைகழித்து நாங்கள் தொடங்கவிருக்கிற வாழ்க்கைக்குத் தேவையான, புத்தம்புது காதலுணர்வுகளில் மிதமிஞ்சியவராய் அப்பா இளைப்பாறி கொண்டிருக்கக்கூடும். திட்டத்தில் உள்ள குறை, தற்காலிகமாகவென்றாலும், அதற்கு உடன்படுகின்றபொழுது ஆசைநாயகிகள் கூட்டத்தில் ‘ஆன்’னும் ஒருவளாகிறாள், எனவே அவள் மறுக்கக்கூடும். ‘ஆன்’ன்னுக்கு பிறர்மதிக்க வாழ்ந்தாகவேண்டும், அப்படித்தான் அவள் வாழ்கிறாளென்கிற நினைப்பு நிறைய அவளுக்குண்டு, அவ்வாறு நினைத்தே, எங்கள் வாழ்க்கையையும் அவதிக்குள்ளாக்கியிருந்தாள்.

ஆனால் திட்டத்தோடு எல்லாம் சரி, ‘எல்ஸா’விடம், ‘அப்பாவுடைய மனமறிந்து நடந்துகொள்’, என்று சொல்லவுமில்லை, ‘ஆன்’னை அழைத்துக்கொண்டு ‘நீஸ்'(Nice) நகருக்குச் செல்லவுமில்லை. ‘எல்சா’ மீதான அப்பாவின் விருப்பம் முற்றிப்போய், அதன்காரணமாக அவர் தவறிழைக்கவேண்டுமென்று மனம் விரும்பியது. அதுவும் தவிர, சமீபகாலம்வரை எனக்கும் என் தந்தைக்கும் மகிழ்ச்சியைத்தந்த எங்கள் மேம்போக்கான கடந்தகால வாழ்க்கையை இழிவாக நினைக்கும் ‘ஆன்’னுடைய மனப்போக்கையும் என்னால் சகித்துகொள்ள முடியாது. அந்த விடயத்தில் எனக்கொன்றும் ‘ஆன்’ மனதைப் புண்படுத்தவேண்டுமென்கிற எண்ணமேதுமில்லை, ஆனால் ‘நாங்கள் தீர்மானித்துகொண்ட வாழ்க்கை இதுதான்’ என்பதை அவளுக்குப் புரியவைக்கவேண்டும். என் தகப்பானரும் அவளை ஏமாற்றக்கூடும், அப்படி நடந்தால், இன்னொருத்தியோடு அவர் சென்றால், ‘ஆன்’ அதனை, அதற்கான கருதுகோளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கவேண்டும், மனித உடல் எதிர்பார்க்கிற தற்காலிக இன்பமென்றே கொள்ளவேண்டும், பதிலாக சொந்த மதிப்பீடுகள், தமது உன்னதம், கண்ணியமென்கிற அடிப்படையில் பார்த்தல்கூடாது. தனது தரப்பு நியாயத்திற்காக தான், எதற்கும் தயாரென்றால், அவள் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான், எங்களை திருத்தியாகவேண்டுமென்கிற ஆசைகளெல்லாம் கூடாது. எங்கள் போக்கிலேயே விடவேண்டும்.

என் தகப்பனாருடைய மனதிலிருந்த குழப்பங்களை புரிந்தும், புரியாதவள்போல நடந்துகொண்டேன். எக்காரணத்தை முன்னிட்டும், அப்பாவுக்காக ‘எல்ஸா’விடத்தில் பரிந்துரைக்கவோ, ‘ஆன்’னை அவரிடமிருந்து விலக்கிவைக்கவோ நான் துணைபோக முடியாது, அப்பா தனது மனவருத்தங்களை என்னிடத்திற் புலம்ப அனுமதிக்கவும் கூடாது.

‘ஆன்’னைப்போலவே, அவள்மீது அப்பா கொண்டிருந்த காதலையும் உயர்வானதென்று கருதுபவள்போல என்னை நான் காட்டிக்கொள்ளவேண்டும். அதில் எனக்கேதும் வருத்தமில்லையென்றும் சொல்லவேண்டும். ஆனால் சிலநேரங்களில் ‘ஆன்’னையும் ஒரு நாள் என் தகப்பனார் ஏமாற்றக்கூடுமென்பதை எண்ணிபார்த்தபோது அச்சமும், பிரம்மிப்பும் கலந்தேயிருந்தன. ‘ஆன்’ முகத்தைக் கண்டதும், மனத்திலுண்டாகிற கவலைகள் குறைந்தன. யதார்த்தத்தையுணர்ந்து, அப்பாவுடைய காரியங்களுக்கு அவள் இணங்கிப்போகலாம், அதன்மூலம், எங்கள் வாழ்க்கைமுறையோடு ஒத்துப்போகலாமென்றும் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. இதற்கிடையில், ‘சிரிலும்’ நானுமாக யாருமற்ற இடங்களாகத் தேடித் தேடி காதல் செய்தோம், ஊசியிலைகளின் வாசம், கடலோசை, அவனது உடல் தந்த நெருக்கம்… இப்போதெல்லாம் அவனும் வேதனைப்பட ஆரம்பித்திருந்தான். எங்கள் இருவர் காதலுக்காக, நான் கேட்டுக்கொண்டதுபோல நடிப்பதாகவும் மற்றபடி நடக்கின்ற நாடகத்தில் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பதுபோலவுமிருந்தான். உண்மைதான் சிரத்தையின்றி உருவான நாடகம், நிறைய பொய்கள், நிறைய வேடங்கள். அவைகள், அந்தச் செய்கைகள் மாத்திரமே, என்னை புரிந்துகொள்ளவும் உதவிற்று.

இதிலிருந்து மீண்டாகவேண்டும், இந்த நிலைமை நீடிக்கக்கூடாது, கொஞ்சம் அதிகமாக யோசித்தால்கூட, பழைய நினைவுகளில் விழுந்து சோர்ந்து போகிறேன். ‘ஆன்’னுடைய சிரித்த முகம், என்னிடத்தில் அவள் காட்டிய பரிவு’ என நினைத்தால் போதும், இடிந்து போகிறேன், வலிபொறுக்கமாட்டாமல் துடிக்கிறேன், எனது மூச்சுக்குழலை நானே நெறித்துக்கொள்வதுபோல எண்ணம். மனசாட்சி உறுத்த, அதிலிருந்து விடுதலைபெற நினைத்து, சிகரெட் பற்ற வைத்தல், இசைதட்டொன்றை கேட்டல், நண்பனொருவனுக்குத் தொலைபேசி எடுத்தல்போன்ற சில்லைரை காரியங்களில் இறங்குகிறேன். கொஞ்சகொஞ்சமாக வேறு விடயத்திம் மனம் அக்கறை கொள்ள, எனக்கதில் விருப்பமில்லை. எனக்கேற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள, அதனை வெல்லாமல் கடந்தகாலத்தை மறக்கமுயல்வதோ, எதையும் மேம்போக்காக பார்க்கிற மனபான்மைக்கு மீண்டும் திரும்புவதோ தீர்வாகாது, அப்படி தற்காலிகமாக நெருக்கடிகளிலிருந்து மீளநினைக்கிற எனதுசாதுர்யத்தை மெச்சிக்கொண்டாலும் எனக்கதில் விருப்பமில்லை.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 14

மறுநாள், எழுந்திருக்கையில் முதல்நாள் சோர்வேதுமில்லை, நன்றாகவே இருந்தேன். நேற்றைய அத்துமீறல்களால் பின்கழுத்தில் மாத்திரம் வலி. வழக்கம்போல எனது கட்டில், சூரிய ஒளியில் மூழ்கிக் கிடக்கிற காலை வேளை. போர்வையை சுருட்டித் தள்ளினேன், போட்டிருந்த பைஜாமாவின் மேற்சட்டையையும் கழற்றிப் போட்டுவிட்டு, எனது வெறும் முதுகை சூரியனுக்குக் காட்டியபடி குப்புற படுத்தேன். மடக்கிய கையில் கன்னத்தை வைத்தபடி பார்க்க, முதலில் போர்வைக் குவியல், தூரத்தில் தரையில் பதித்திருந்த மார்பிளில் ஈயொன்று தவித்துக்கொண்டிருந்தது. காலை சூரியனில்லையா? இதமான வெப்பம். என்மீது கரிசனங்கொண்டு கதகதப்பினையூட்ட நினைத்ததுமாதிரி, சூரியன் எனது தசைக்குள் இறங்கி எலும்புகளை நீவிக்கொண்டிருந்தான். அப்படியே அசையாமல் கட்டிலிற்கிடந்து காலைப் பொழுதை ஓட்டிவிடலாமா என்று கூட நினைத்தேன்.

நேற்று மாலை நடந்ததனைத்தையும் மெல்ல மெல்ல, தெளிவாய் ஞாபகப்படுத்த முடிந்தது. ‘ஆன்’னிடம், ‘சிரில்’ என் ஆசைநாயகன்’ என்று கூறியிருந்ததையும், பின்னர் சிரித்ததையும் நினைத்துக்கொண்டேன்: போதையிலிருக்கையில் உண்மையைப் பேசுகிறோம், ஆனால் ஒருவரும் நம்புவதில்லை. அடுத்து, மதாம் வெப்(Mme Webb)பையும் அவளோடு சண்டையிட்டதையும் ஞாபகப்படுத்த முடிந்தது. எனது வயதும், மதாம் வெப் மாதிரியான பெண்கள் மத்தியில் பழகியதும் அவளைச் சமாளிக்க உதவியிருக்கிறதென புரிந்துகொண்டேன். அப்பெண்களையும் குற்றம் சொல்வதற்கில்லை, வேலையற்று இருப்பவர்கள், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவேண்டுமென்கிற ஆசைகளும் அவர்களுக்கு நிறைய இருக்கின்றன, எனவே பொதுவிடங்களில் இரசாபாசமாக நடந்துகொள்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக ‘ஆன்’ மிகவும் மனமுடைந்திருப்பதும், வருத்தத்திலிருப்பதும், அவள் காட்டிய அமைதி தெரிவித்தது. தொடர்ந்து அவள் அப்படியே இருந்தால், என் தகப்பனாருடைய பெண் நண்பர்களில், யாரை அவளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது, ஒருவரும் சரிவரமாட்டார்களேயென நினைத்துக்கொண்டேன். ஒரு மாலைப்பொழுதை சந்தோஷமாக நீங்கள் என் தகப்பனாருடைய பெண் நண்பர்களோடு கழிக்கவேண்டுமெனில், சில தகுதிகள் உங்களுக்கு அவசியம்: முதலில் ஓரளவுக்காவது நீங்கள் குடிபோதையில் இருக்கவேண்டும், அடுத்து அவர்களோடு மல்லுக்கு நிற்கவேண்டும், கடைசியில் முடிந்தால் அவரவர் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்டத் தோழியையோ, தோழனையோ அல்லது அவர்களது ஜோடியையோ தள்ளிக்கொண்டு மறைவாக ஒதுங்கவேண்டும். என் தகப்பனாருக்கு இவைகள் சுலபமாக வரும். ஷார்ல் வெப்பும்(Charles webb), அப்பாவும் ஸ்த்ரீலோலர்கள். ” இன்றிரவு என்னோடு டின்னர் சாப்பிடவும், படுக்கவும் வருகிறவள் யாரென்று உன்னால் சொல்லமுடியுமா? ஸொரெல்(Saurel) படத்துல வருகிற மார்ஸ்(Mars). துப்புய்(Dupuis) வீட்டுக்கு திரும்பவும் வருகிறேன் அங்கே…” தொடர்ந்து அப்பா உரத்தக் குரலில் சிரிப்பார், வெப்(Webb) என் தகப்பனார் தோளினை மெல்லத் தட்டி: அவனுக்கென்னய்யா ஜாலியான ஆசாமி!… அவளும் அழகில் எலிஸ்(Elise)க்கு எந்த விதத்திலும் இளப்பமில்லை.”, என்பார். இருவரும் பள்ளிச் சிறுவர்கள்போல அரட்டை அடிப்பார்கள். அம்மாதிரியான நேரங்களில் அவர்களிடத்திலே வெளிப்படுகிற தவிப்பும் தாபமும் சுவாரஸ்யமாகயிருக்கும். மாலைவேளைகளில் காப்பி பார்களில் அப்பாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் மணிக்கணக்கில் நடக்கிற உரையாடல்கள் இன்னமும் சுவாரஸ்யமாகயிருக்கும், அதிலும் ‘லொம்பார்ட்'(Lombard) சொல்கிற சோகக்கதைகளை நீங்கள் கேட்டிருக்கவேண்டும்: ” அவளைத்தவிர வேறொருத்தியை என்னால நினைச்சு பார்க்க முடியலை ரெமோன்(Raymond).. என்னுடன் அவளிருந்த வசந்தகாலம் நினைவிருக்கா? அதாவது அவள் என்னைவிட்டுப் போவதற்கு முன்னால நடந்தது… ஒருவனுக்கு ஒருத்திண்ணு சொல்றதெல்லாம் என்ன வாழ்க்கை…” என அவர் மிகவும் அலுத்துக்கொள்வார். என்ன… இப்படியெல்லாம் கூச்சமில்லாமல் அருவருப்பாக பேசிக்கொள்கிறார்களே என நினைப்பீர்கள், எனினும், மதுவை வைத்துக்கொண்டு அவர்கள் பேசும் பேச்சிருக்கிறதே, அதனை எவ்வளவு நேரமென்றாலும் ரசிக்கலாம்.

‘ஆன்'(Anne) நண்பர்கள் ஒருபோதும் தங்களைப்பற்றி அப்படி பேசிக்கொண்டதில்லை. நீங்கள் நினைப்பதும் சரி, அவர்களுக்கு, அப்பாவைப்போலவோ அல்லது அவரது நண்பர்களைப்போலவோ காதலனுபவங்கள் இல்லை. அப்படியே அவர்கள் பேசும்படி நேரிட்டாலும், புன்னகைக்கலாம் அவ்வளவுதான். உண்மையில் பலரும் விரும்பக்கூடியதும், ஏற்கக்கூடியதுமான குணங்கள் அவர்களிடம் இருந்தன. வருங்காலத்தில் அத்தகைய பெருந்தன்மையை ‘ஆன்’ எங்களிடத்திலும் காண்பிக்கலாமென்பதால், அதை பகிர்ந்துகொள்ள நானும் தயார். எனினும் எனது முப்பதாவது வயதை கற்பனை செய்துபார்க்கையில், நான் பெரிதும் அப்பாவின் நண்பர்களை ஒத்திருந்தேனேயன்றி ‘ஆன்’போல இல்லை. அப்போது, அவளது அமைதியும், அலட்சியமும், கமுக்கமும் எனது நெஞ்சை அதிகமாகவே இறுக்கலாம். ஆனால், அடுத்த பதினைந்துவருடத்தில் ஒரு நாள், வாழ்க்கையை ஒருபாட்டம் ஆடிமுடித்து அலுத்துபோய் நான் அமர்ந்திருக்க, அருகில் வசீகரத்துடன் ஆணொருவன் அமர்ந்திருப்பான், அநேகமாக அவனும் என்னைப்போல களைத்திருக்கலாம், அவனிடத்தில்:

” – என்னோட முதல் கள்ளக்காதலன் பேரு ‘சிரில்'(Cyril). அப்போது எனக்கு வயசு பதினெட்டு, கொளுத்தும் வெயிலில், கடலில்…” என்று சுயபுராணம் படித்துக்கொண்டிருப்பேன்.

அம்மனிதனின் முகத்தையும் என்னால் கற்பனைசெய்ய முடிந்தது. அப்பாவைப்போலவே அவனது முகத்திலும் சின்னதாய்ச் சுருக்கங்கள். கதவை யாரோ தட்டும் சத்தம். அவசரவசரமாக பைஜாமாவினுடைய ஜாக்கெட்டை அணிந்தவள், “உள்ளே வரலாம்”, என்றேன். கதவைத் திறந்துகொண்டு ஆன், காப்பிக்கோப்பையொன்றை வெகு ஜாக்கிரதையுடன் கையில் பிடித்திருந்தாள் .

” உனக்குக் காப்பித் தேவைப்படுமென்று நினைத்தேன். உடம்பில் நோக்காடு தெரிகிறதா?

– ஆமாம், நேற்றுமாலை கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேண்ணு நினைக்கிறேன்.

– வெளியே போகும்போதெல்லாம், அதிகமாகக் குடிப்பதென்பதுதான் உனது வழக்கமாகப் போச்சே…அதிலும் நேற்று மாலை ஆக மோசம்… என்னை ரொம்ப நோகடிச்சுட்ட, நேற்றைய இரவு நன்கு கழிந்திருக்கவேண்டியது…”

அதன்பிறகு எனது கவனம் சூரியனிடத்திலுமில்லை, காப்பியின் ருசியிலுமில்லை. ‘ஆன்’னிடம் உரையாடுகின்ற நேரங்களில், வழக்கமாக எனக்கேற்படும் நிலைமை: என்னை முழுவதுவதுமாக அவள் கிரகித்துக்கொள்வாள், எனது இருப்பு பொய்யென்றாகிவிடும், எனினும் நான் ‘இருக்கிறேன்’ என்பதுபோல என்னைக் குறிவைத்து கேள்விகள் வரும், என்னைப்பற்றிய முடிவுக்கு வரும்படி அவை வற்புறுத்தும், அன்றைக்கும் அப்படித்தான் என்னை மிகவும் இக்கட்டான நிலமையில் வைத்திருந்தாள்.

” – செசில்(Cecil) உனக்கு வெப்(Webb), துப்புய் (Dupuis) குடும்பங்களென்றால் சந்தோஷம் போலிருக்கிறது?

– சரியான கழுத்தறுப்பு ஆசாமிகளென்றாலும், நமக்குப் பொழுது போகுதே….”

தரையில் கிடந்த ‘ஈ’ யின் பிரயத்தனங்களை கவனித்தபடியிருந்தாள் ‘ஈ’க்கு ஏதோ நேர்ந்திருக்கவேண்டும். நீளவாக்கிலும், தடித்துமிருந்த ‘ஆன்’னுடைய விழிமடல்கள், பரிவும் கனிவும் அவளது இயல்பான குணமென்று சாட்சியமளித்தன.

“- திரும்பத் திரும்ப ஒப்பந்தங்கள், ஏற்பாடுகள், பெண்கள், மாலைப் பொழுதுகள் என அவர்கள் பேசுகிறபொழுது, அப்பேச்சு உனக்கு எரிச்சலூட்டவோ, அல்லது வருந்தச் செய்யவோ இல்லை.

– ‘ ஆன்… உனக்குத் தெரியும், பத்துவருடங்கள் நான் விடுதியில் தங்கியிருந்தவள். நீ குறிப்பிட்ட அவர்களிடத்தில் பெரிதாக எந்தப் பண்பையும், எதிர்பார்க்கவும் முடியாது, எனவே, அவர்களின் பேச்சு எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.”

சுவாரஸ்யமாக இருக்கிறதென்று சொன்னேனேயன்றி சந்தோஷமாக இருக்கிறதென்று சொல்லவில்லை, உண்மையைச் சொல்ல அச்சம்.

“- இரண்டுவருடமாக, அப்படித்தானே?…. இது, மனிதர்களின் பண்பினைக் அடிப்படையாகக்கொண்டதோ அல்லது நியாயத்தினை அடிப்படையாகக்கொண்டதோ அல்ல, உணர்வு சம்பந்தப் பட்ட விடயம், இன்னும் சொல்லபோனால் அதற்கும் மேலே…”

எனக்கு முடியாது, அப்படியெல்லாம் ஒரு விடயத்தை என்னால் பார்க்கவியலாது, அந்த விவாதத்தினைத் தொடர்வதற்கு எனக்குப் போதாதென்பது தெளிவாய் விளங்கியது.

சட்டென்று அவளிடம் “ஆன்… நான் புத்திசாலிண்ணு நம்பறியா?” கேட்கிறேன்.

அப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காதவள்போல, அவள் கலகலவென சிரித்தாள்.

“- நீ புத்திசாலிண்ணு நம்பத்தான் செய்யறேன். எதற்காக இந்தக் கேள்வி?

– நான் முண்டமாகவிருந்தாலும், உனது பதில் இப்படித்தானிருக்குமா? அடிக்கடி என்னை நீ ஓரங்கட்டுவதுபோல நினைக்கிறேன்…

– எல்லாத்துக்கும் வயசுதான் அடிப்படை. உன்னிலும் பார்க்க தெளிவாக நான் இருப்பது அவசியம், அப்படியில்லையெனில், எனக்கு இன்னமும் அலுப்புத் தட்டிவிடும். உன்னோட ஆதிக்கத்திற்கு நான் அடக்கமென்றாகிவிடும்.”- சொன்னவள் சத்தமிட்டு சிரித்தாள், எனக்கு அவளது பதிலில் ஏமாற்றம்.

” – அப்படியே… நானிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், அதிலென்ன தப்பு?

– வேறு வம்பே வேண்டாம், கற்பனைசெய்யவே பயமாயிருக்கு”, எனக் குரலைத் தாழ்த்திசொன்னவள், சட்டென்று அதிலிருந்து விடுபட்டு நேராக எனது கண்களைப் பார்த்தாள். அவளது பார்வையைத் தாங்கவியலாமல் நெளிகிறேன். இன்றைக்கும் அப்படியானப் பழக்கமுள்ளவர்களைச் சந்திக்கிறேன், அவர்கள் எனது கண்களை நேரிட்டுப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் சொல்வதை நான் காதில் வாங்குகிறேனா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அண்மையில் வந்து நின்றாலோ, அதனை எதிர்கொள்ள என்னால் முடிவதில்லை. தவிர அவர்களிடமிருந்து தப்பினாற்போதுமென நினைத்து, பின்வாங்குவேன், ” கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன், சொல்லுங்கள்”, என்றெனது வாய் சொல்லிக்கொண்டிருக்க, கால்கள் சும்மாயிராது, இடம் வலமென்று மாறிமாறி அடவு பிடிக்கும், தப்பித்தால் போதுமென்று அறையின் அடுத்தமுனைக்கு ஓடுவேன். அம்மனிதர்களின் பிடிவாதமும், இங்கிதமற்ற தன்மையும், தங்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டென்பதுபோல அவர்கள் நடந்துகொள்ளும்விதமும், எனக்கு நிறைய கோபத்தை ஊட்டும். நல்லவேளை, ஆன்(Anne)ன் அப்படியான எண்ணத்துடன் என்னைத் துரத்தினாள் என்றெல்லாம் சொல்லப்போவதில்லை ஆனால் அந்தப் பார்வையில் மாத்திரம் அப்படியொரு வீச்சு, என்னை ஏறிட்டுப்பார்த்தாளெனில் அத்தனை சீக்கிரம் கண்கள் விலகாது, கூடுதலாக அவளது சிரத்தையற்ற மென்மையான குரல், அவைகளைப்பற்றிப் பெருமையாக பேசியதுண்டு, இனி முடியாது.

” – கடைசியில் வெப்(Webb) மாதிரியான ஆண்களுடைய நிலைமை என்ன தெரியுமா?” -மீண்டும் ஆன்.

மனது அப்பாவை நினைத்துக்கொண்டது.

” – சாக்கடையில் விழுவார்கள்”, மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

” -அதற்கென்று ஒரு வயதுவரும், அப்போது அவர்களது வசீகரமனைத்தும் காலாவதியாகியிருக்கும், ‘ஏதோ இருக்கிறேன்’ என்று இருப்பார்கள், மது அருந்த மாட்டார்கள், பெண்கள்மீதான ஆசை மாத்திரமிருக்கும்; அதைத் தணித்துக்கொள்ள பணம் வேண்டும். தங்கள் தனிமையிலிருந்து தப்புவதற்கு சின்னசின்னதாய் அநேக விஷயங்களை விட்டுக்கொடுக்கவேண்டிவரும், இழப்புகளுக்குச் சம்மதிக்க வேண்டிவரும். அவர்கள் பரிதாபத்துக்குரிய மனிதர்கள், அரைக்கம்பத்தில் நிறுத்திய கொடிகள். நிறைய எதிர்பார்ப்பிருக்கும், சட்டென்று கலங்கிப்போவார்கள். உடைந்து, உருக்குலைந்து, கடைசியில் சிதைவுகளாய் மாறிப்போனவர்கள் அநேகம்பேரை நான் சந்தித்திருக்கிறேன்.

” வெப்பை(Webb) நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கிறது”, – நான்

‘ஆன்’ மாத்திரம் அப்பாவைக் கவனித்துகொள்கிற பொறுப்பை நிராகரித்தால், அவரது கதியென்னவாகும். என் தகப்பனாரின் அந்திமக் காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. நான் குழப்பத்திலிருந்தேன்.

” – உன்னால் அதையெல்லாம் எண்ணிப்பார்க்கமுடிகிறதா? எதிர்காலத்தைப்பத்தின கவலைகள் உனக்கேது? உன் வயது அப்படி, இளைஞர்கள் அப்படித்தானிருப்பீர்கள்.

– ஆன்… வேண்டாம், புதுசா இளம்வயது அப்படி, இப்படியென்று சொல்லி இன்னொரு குழப்பம் வேண்டாம். அப்படியொன்றும் இளம்வயது கனவுகளில் மிதப்பவளும் நானல்ல. நீ சொல்கிற வயது எனக்குச் சகலசுதந்திரத்தையும் கொடுத்திருப்பதாகவோ,, எதைச் செய்யவும் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறதென்றோ நான் நினைக்கலை. நீ நினப்பதுபோல அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கிறதில்லை.

– சரி, நீ எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிற உன்னோட நிம்மதிக்கா?… இல்லை உன்னோட சுதந்திரத்திற்கா?”

எனக்கு அதுபோன்ற உரையாடல்களென்றால் பயம், அதிலும் ‘ஆன்’ன்னுடன், அவைகளைப்பற்றியெல்லாம் பேசுவதென்றால் கூடுதல் பயம்.

” இல்லை… எதைப் பற்றியும் நான் நினைப்பதில்லை, என்னைத் தெரியுமில்லை உனக்கு.

– எனக்கு எரிச்சலுண்டாக்கிற…இரண்டுபேருமே என்னை அதிகமாகச் சீண்டறீங்க, உன் தந்தையையும் சேர்த்துத்தான் சொல்றேன். “தகப்பனுக்கும் பெண்ணுக்கும் எதைபற்றியும் சிந்தனையில்லை, நீங்கள் எதற்கும் உபயோகமில்லை… இந்த உண்மைகளெல்லாங்கூட உங்களுக்குத் தெரியாது…” என்ன விளையாடறியா?

– இதிலென்ன விளையாட்டு? என்னை நானே வெறுக்கிறேன். அது கூடாதென்பதற்காக எந்த முயற்சியிலும் இறங்குவதில்லை. ஆனால் நீ, எனது வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தவேண்டுமென்றே, சிலவேளைகளில் என்னைச் சிரமப்படுத்துகிறாய், அதற்குப் பழிவாங்கவேண்டுமில்லையா, நானும் உன்வழியிலேயே செயல்படுகிறேன், அவ்வளவுதான். ”

ஏதோவொரு பாடலொன்றை திடீரென்று முணுமுணுக்கிறாள். ஏற்கனவே கேட்டபாடல், ஆனால் என்னப் பாடலென்று நினைவில் இல்லை.

” – ‘ஆன்’..இப்போ பாடறதை நிருத்தமுடியுமா? எனக்குப் பிடிக்கலை. என்னப் பாட்டு அது?

– தெரியாது,” சிரிக்கிறாள். மனந்தளர்ந்திருப்பதைபோல தெரிந்தது. தொடர்ந்து, ” கட்டிலிலேயே படுத்திரு, உனக்கு இப்போது ஓய்வு தேவை, இதற்கிடையில் எனக்கும் உங்கள் குடும்பத்தின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய ஆராய்ச்சியை தொடரவேண்டியிருக்கிறது, நான் புறப்படறேன்”

“அப்பாவுக்குச் சுலபமாய் முடியும்”, நினைத்துக்கொண்டேன். இன்னொன்றும் எனக்கும் புரிந்திருந்தது: எனக்கு எதைப் பற்றியும் சிந்தனையில்லை என்பதற்கு, “அடியே ‘ஆன்’, உன்னையே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன்”, என்றும் பொருள். புத்திசாலி பெண்மணியான ‘ஆன்’னுக்கு, எனது மனது நிச்சயம் புரிந்திருக்கவேண்டும். கால்களை நீட்டி, தலையணையில் முகம் புதைத்து படுத்தேன். ‘ஆன்’ன்னிடம் சொல்லியிருந்ததற்கு மாறாக, நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என்னை அமைதி படுத்துவதற்குப் பதிலாக, அச்சத்தை விதைத்திருந்தாள். அடுத்த இருபத்தைந்து வருடங்களில், என் தப்பனாருக்கு அருபது வயது, நரைத்த தலை, கூடுதலாக ஓரளவு விஸ்கியும், கடந்தகால வண்ணமயமான வாழ்க்கையும் ஏற்படுத்திய பாதிப்புகள். அப்பாவும் நானும் அடிக்கடி வெளியே போகிறோம், நான் எனது தவறுகளை, அதனாலுற்ற சங்கடங்களை அவரிடம் முறையிடுகிறேன், அவர் எனக்கு தகுந்த யோசனைகளைத் தெரிவிக்கிறார். எனது எதிர்காலம் குறித்த சிந்தனையில் எப்படி ‘ஆன்’ வராமற்போனாள் என்றெண்ணினேன். அவளின்றி என்னால் முடியுமா? அது சாத்தியமாகுமா? எனது எண்ணத்திலிருக்கிற எதிர்கால வீட்டிற்கு ‘ஆன்’னுடைய பிரத்தியேக உடமைகளான ‘ஒழுங்கு’, ‘அமைதி’, ‘இணக்கம்’ இதெல்லாம் ஒத்துவராது, எப்போதும் தலைகீழாக புரட்டிபோட்டதுபோல இருக்கும். சிலவேளைகளில் துக்கத்தில் மூழ்கியிருக்கலாம், சிலவேலைகளில் பூங்கொத்துகளால் நிரம்பிவழியலாம், விதவிதமான காட்சிகள் அரங்கேறலாம், அங்கங்கே பெட்டிபடுக்கைகள் கிடக்க, அந்நிய குரல்களையும் கேட்கலாம். எனக்குள்ள பயமே கடுமையான மனக்குடைச்சல்கள்பற்றியதுதான். எனினும், சிரிலை மனத்தாலும், உடலாலும் நான் நேசிக்கத் தொடங்கியபிறகு, எனக்கு அதுபற்றிய அச்சங்கள் குறைவென்றுதான் சொல்லவேண்டும். அவனோடு எனக்கிருந்த உறவு நிறைய அச்சங்களிடமிருந்து என்னை மீட்டிருந்ததென்றாலும், மனவேதனைகள் குறித்து இன்னமும் பயப்படுகிறேன். அமைதி, அதுவே எனக்கு வேறெதைக்காட்டிலும் பிரதானமாகத் தோன்றியது. உள்ளத்தில் எங்களுக்கு அதாவது எனக்கும் என் அப்பாவிற்கும் அமைதி வேண்டுமெனில், எங்களைச் சுற்றிலும் மாற்றம் நிகழவேண்டும், அதுதான் உண்மை, அதை அங்கீகரிக்கின்ற மனம் ‘ஆன்’னிடம் வேண்டும், எனக்கு நம்பிக்கையில்லை.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 13

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பிரெஞ்சிலிருந்து தமிழில்

அத்தியாயம் – 13

சில நாட்கள் கழிந்திருந்தன, அன்றைக்குச் ‘சேன் ர·பாயேல்(Saint Raphael)லுக்குச் சென்று மது அருந்தலாமேயென என் தகப்பனாரை, அவரது நண்பர்களில் ஒருவர் அழைத்திருந்தார். ஆளுக்கொருபக்கம் தனிமையில் வருந்திக்கொண்டிருப்பதிலிருந்து தப்பினாற் போதுமென்கிற நிலைமையில் நாங்களிருந்ததால், சந்தோஷத்துடன் உடனே புறப்பட்டோம், எல்ஸா(Elsa)விடமும், சிரிலி(Cyril)டமும், சொலெய் பாரில்(Le bar du Soleil), ஏழுமணி அளவில் இருப்போமென்றும், அங்குவந்தால் எங்களைச் சந்திக்க முடியுமென்று அறிவித்தேன்; துரதிஷ்டவசமாக என் தகப்பனாரை அழைத்திருந்த நண்பரை அவளும் அறிந்திருக்க, அவளது சந்தோஷம் இரட்டிப்பாயிற்று. எனக்கும் அப்போதுதான் அதிலுள்ள சிக்கல்கள் உறைத்தது, அவளை வராமல்தடுக்க முயற்சித்தேன், முடியாமற்போனது.

” – ஷார்ல் வெப்புக்கு (Charles Webb) நானென்றால் கொள்ளை பிரியம்”, ‘எல்ஸா’வின் பதில் குழந்தைத்தனமாகவிருந்தது. அவர் என்னைப் பார்த்தாரென்றால், மறுபடியும் ரெமோனைச்(Raymond), என்னோடு சேர்த்துவைப்பார்.”

சிரிலுக்கு, சேன் ர·பாயேல்(Saint Raphael)லுக்கு வருவதா,கூடாதா என்பதெல்லாம் பிரச்சினையில்லை, அவனுக்கு நான் எங்கு போகின்றேனோ அங்கே அவனும் வரவேண்டும், அதுதான் முக்கியம். அவன் கண்களை பார்த்த மாத்திரத்தில் தெளிவாய் புரிய, ஒருவகையில் எனக்கு பெருமிதமாகவும் இருந்தது. பின்னேரம் நாங்கள் காரில் புறப்பட்டபோது மணி ஆறிருக்கும். ஆன் தனது காரில் செல்லாம் என்று சொல்லியிருந்தாள். அவளது காரென்றால் எனக்கு மிகவும் விருப்பம்: அதுவொரு அமெரிக்க தயாரிப்பு, பெரியது, மேலே திறந்துமூடக்கூடியது. அவளது ரசனைக்கு ஒத்ததென்று சொல்லமுடியாது, ஆனால் ஆடம்பர ரகம். எனது ரசனைக்கு ஒத்துப்போககூடியது. காரில் பளபளவென்று நிறைய விஷயங்கள், வளைவில் சர்ரென்று வழுக்கித் திரும்பும், உள்ளே அத்தனை அமைதி, சத்தமே போடாது, சனசந்தடியற்ற உலகிலிருப்பதுபோல பிரமையை உண்டுபண்ணும். தவிர நாங்கள் மூவருமே காரின் முன் பக்கம் அமர்ந்திருந்தோம். இதற்குமுன் அப்படியான சுகத்தை வேறொரு காரில் கண்டதில்லை, அம்மாதிரியான அன்னியோன்னியத்தை அனுபவித்ததில்லை. கையை மடித்துவைத்துக்கொண்டு கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து, காரின் வேகமும், வீசும் காற்றும் தந்த ஆனந்தத்தை மூவருமாய் சுகித்தோம், ஒருவேளை விபத்து நிகழ்ந்து மரணத்திருந்தால்கூட மூவரும் சேர்ந்தார்போல சுகித்திருப்போம். அமையவிருக்கும் எங்கள் குடும்பத்திற்கு அவள்தான் அடையாளம் என்பதுபோல காரை ஆன்(Anne) ஓட்டிவந்தாள். கான்(Cannes) நகருக்கு, ஒரு மாலைநேரத்திற் சென்று பிரச்சினைகள்பட்டுவந்த பிறகு, அன்றுதான் அவளது காரில் மறுபடியும் ஏறியிருந்தேன். எனவே ஒருசில எதிர்பார்ப்புகளும் இருந்தன.

‘சொலெய் பாரில்’ (Le bar du Soleil), ஷார்ல் வெப்(Charles Webb) அவரது மனைவியோடு வந்திருந்தார். மேடைநாடக விளம்பரத்துறையில் அவர் சிரமப்பட்டு சம்பாதித்ததையெல்லாம், வெகு எளிதாய் அவரது மனைவி வேறொருவகையில் கரைத்துக் கொண்டிருந்தாள், அதுவும் வாலிபப்பையன்களாய்த் தேடிதேடி செலவு செய்துகொண்டிருந்தாள். வரவையும் செலவையும் சரிகட்டுவதே அவரது அன்றாடச் சிந்தனையாகவிருந்தது, பணம் பணமென்று அலையவேண்டிய நிர்ப்பந்தம். நண்பரின் மனைவி அப்படியென்றாள், அவர் தரப்பிலும் சில அசிங்கங்கள் இருந்தன. வெகுகாலம் தனது மனைவிக்குத் தெரியாமல் எல்சா(Elsa)வுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார், அழகிருந்த அளவிற்கு மனதிற்குள் பெரிதாக ஏதும் ஆசைகளின்றி ‘எல்சா’ இருந்ததும், அவளது மேம்போக்குத்தனமும் அவருக்குப் பிடித்திருந்திருக்கிறது.

மதாம் வெப்(Mme Webb) மோசமானள், ஆனால் அருகில் அமர்ந்திருந்த ‘ஆன்’ அவளை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகத்தைப் பார்த்தவுடனேயே, பிறரை கேவலப்படுத்துகிற, விமர்சிக்கிற கூட்டத்தில் அவளும் ஒருவளெனப் புரிந்தது. தொணதொணவென்று பேசிக்கொண்டிருந்த ஷார்ல் வெப்(Charles webb)பின் கண்கள் அவ்வப்போது ‘ஆன்’னை திருட்டுத் தனமாகப் பார்த்தன. “சதா பெண்கள் பின்னால் அலைவதோடு, பெண்ணொருத்திக்குத் தகப்பனாகவுமிருக்கிற ரெமோன்(Raymond) மாதிரியான ஆளிடம், உனக்கு என்னவேலை”,யென்று வெளிப்படையாகவே ‘ஆன்’னிடம் கேட்டார். சற்றுநேரத்தில் உண்மை தெரியவரப்போவதையெண்ண, எனக்கு தலைகால் புரியவில்லை, காத்திருந்தேன். அப்பா ஷார்ல் வெப்(Chales Webb) பக்கம் குனிந்து, மூச்சினை வாங்கிகொண்டவர், கடகடவென அவரிடம் பேசலானார்.

“- உங்கிட்ட சொல்லணுதான் நினைச்சிருந்தேன்… வருகிற அக்டோபர்மாதம் ஐந்தாம் தேதி, ‘ஆன்’னும் நானும் மணம் செய்து கொள்ளப்போகிறோம்.”

வெம்(Webb) இரண்டுபேரையும் மாற்றி மாற்றி பார்த்தார். மனிதர் மூர்ச்சையாகாத குறை. எனக்கோ மகிழ்ச்சி. அவரது மனைவியின் முகத்திலும் குழப்பம், அவளுக்கு என் தகப்பனார் மீது எப்போதும் ஒருவித வாஞ்சையுண்டு.

” – எனது வாழ்த்துகள்”, என வெப்(Webb) சத்தமிட்டது, பார்முழுக்கக் கேட்டது, தொடர்ந்து, “அடட உருப்படியான காரியந்தான்! எனது அன்பிற்குரிய பெண்மணி, இந்த மாதிரி அய்யோக்கியனோட வாழணுமென்றால், உண்மையிலே உங்களுக்குப் பெரிய மனசுதான். சர்வர் தம்பி, கொஞ்சம் இங்கே வந்துட்டு போ… இந்த நல்லவிஷயத்திற்கு ஒரு பெரியே விருந்தே கொடுத்தாகணும்…”, என்றார்.

ஆன் முகத்தில் புன்னகை, சற்றுமுன் காணாத நிம்மதி, பிறகு அமைதியானாள். வெப்(Webb)முகத்தில் திடீரென்று பரவசம், நான் திரும்பவில்லை:

” அட கடவுளே!.. எல்ஸா(Elsa)…எல்ஸா மக்கென்பூர்(Elsa Mackenbourg), என்னை அவள் கவனிக்கலை. ரெமோன்(Raymond) பார்த்தியா? எத்தனை அழகா மாறியிருக்கா?…

– உண்மைதான் இல்லையா?..” ஏதோ அவளுக்கு இன்னமும் இவர்தான் உரிமைகொண்டாடுபவர்போல அப்பாவுடைய பதில், மகிழ்ச்சியோடு வெளிப்பட்டது.

பிறகு எதையோ நினத்துக்கொண்டாரென்று நினைக்கிறேன், அவரது முகம் மாறிப்போனது. எனது தகப்பனார் அழுந்த உச்சரித்த விதத்தை ‘ஆன்’ புரிந்துகொண்டிருக்க வேண்டும், தனது முகத்தை அவரிடமிருந்து எனக்காய்ச் சட்டென்று திருப்பினாள், எதையோ என்னிடத்தில் சொல்ல முற்பட்டவள்போல. உடனே அவளிடம் குனிந்து:

” – ஆன்… எல்லோரும் உன்னையே திரும்பிப் பார்க்கும்படி அத்தனை ஜோரா இன்றைக்கு வந்திருக்கிற. அங்கே பார் ஒரு ஆள் உன்னை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறான்.”

பெரிய ரகசியத்தை அவளிடத்தில் சொல்வதுபோல நான் பாவனை செய்திருந்தாலும், என் தகப்பனார் காதிலும் சொல்வது விழவேண்டுமென்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே, வேகமாய்த் தலையைத் திரும்பி, அந்த நபரைப் பார்த்தார்.

” – எனக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்காது”, என்றவர் ‘ஆன்’ கையைப் பற்றினார்.

– இரண்டுபேரும் எவ்வளவு நல்லவர்கள். ஷார்ல்(Charles)! காதலர் இருவரையும் வம்புக்கு இழுக்காமல் உன்னால் இருக்க முடியாதா? செஸில்(Cecile) பெண்ணைமாத்திரம் நீ அழைத்திருக்கவேண்டும்.”, திருமதி வெப்(Mme Webb) மனம் நெகிழ்ந்து கூறினாள்.

– செஸில் பெண், கூப்பிட்டால் போதுமென்று வருபவளல்ல,” எனது பதில் அலட்சியமாக வெளிப்பட்டது.

– ஏன், இந்தமுறை மீனவர்கள் யாரேனும் உனக்கு காதலிக்க கிடைச்சிருக்காங்களா?

ஒருமுறை, பேருந்து நடத்துனர் ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தேன், அதிலிருந்து அவள் சமூகத்தில் கீழ்நிலை மக்களோடு தொடர்புகொண்டவளாகவே என்னைப் பார்க்கிறாள், அப்படியே நடத்துகிறாள்.

“- ஆமாம், உனக்குத் தெரியாதா? -, முகத்தைச் சந்தோஷமாக வைத்துக்கொண்டு சொல்கிறேன்.

– என்ன தூண்டில்ல நிறைய சிக்குதா?

அவளுக்கு இந்த சங்கேத உரையாடல் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும், மாறாக எனக்குக் கோபம் கோபமாய் வந்தது.

– மக்கரோ (Maquereaux)* மீனைப்பத்தி எனக்குப் பெரிதா எதுவும் தெரியாது, ஆனாலும் தூண்டில் போடத்தான் செய்யறேன்.”

அங்கு திடீரென்று நிசப்தம், ‘ஆன்’னுடைய குரல் உரத்து ஒலித்தது.

“- ரெமோன்(Raymond), சர்வரிடம் ஒரு ஸ்ட்ரா கொண்டுவரச் சொல்லேன். ஆரஞ்சுப்பழ சாற்றுக்கு, அதில்லாமல் முடியாது.

ஷார்ல் வெப்(Charles Webb) உற்சாகத்தைத் தரவல்ல பழசாற்றைகுடிப்பதில் கவனமாயிருந்தார். அப்பா, கலகலவென்று சிரித்தவர், அவரது வழக்கப்படி கண்ணாடிக் குவளையை உறிஞ்சிக்கொண்டிருந்தார். ‘ஆன்’ என்னைப் பார்த்த பார்வையில், தயவு செய்து பிரச்சினை பண்ணாமலிரு, எனக் கெஞ்சுவதாக இருந்தது. எதற்கு வீண் வம்பு என்று தீர்மானித்தவர்களைப்போல எல்லோரும் உணவிற்குத் தயாரானோம்.

என் தகப்பனாரை பார்க்கிறபோது பதட்டத்தையும், என்னை பார்க்கிறபோது ஏறக்குறைய நன்றியையும் ‘ஆன்’ன்னுடைய முகம் வெளிப்படுத்தியவாறிருக்க, அதைத் தாங்கமாடாமல் உணவின்போது நிறைய மது அருந்தினேன். மதாம் வெப்(Mme Webb) என்னை ஒருமாதிரி பார்க்கிறபோதெல்லாம், நான் சிரித்து அதைச் சமாளித்தேன். எனது தந்திரம் அவளைக் குழப்பத்திலாழ்த்தியது. நேரம் கூடக்கூட அவள் என்னிடம் கடுமையாக இருந்தாள். ஆன் என்னை அமைதியாக இருக்கும்படி குறிப்பால் உணர்த்தினாள். பொதுவிடத்தில் ரசாபாசமாக எதுவும் நடந்துவிடக்கூடாதே என்கிற பயம் அவளுக்கிருந்தது. மதாம் வெப்(Mme Webb), அதற்கெல்லாம் தயாரானவளென்றும் அவள் நினைத்தாள். எனக்கு இவைகளெல்லாம் புதிதல்ல, எங்கள் குடும்பத்திற்கு இதெல்லாம் பழகியிருந்தது, எனினும் அவளென்ன பேசினாலும் நானும் காதில்போட்டுக்கொள்ளக் கூடாது என்றுதானிருந்தேன்.

உணவிற்குப் பிறகு சேன் ர·பாயேலி(Saint Raphael)லுள்ள இரவு விடுதியொன்றிற்குச் சென்றோம். நாங்கள் அங்குசென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், ‘சிரிலு’ம் ‘எல்ஸா’வும் வந்தார்கள். எல்ஸா வாயிலில் நின்று, வருபவர்களின் உடமைகளையும், மேலங்கிகளையும் வாங்கிவைத்துப் பாதுகாக்கிற பொறுப்பிலிருந்த பெண்மணியிடம் உரத்த குரலில் பேசினாள், பின்னர் அவளுக்கு முன்னால் அப்பாவிபோல நடந்துவந்த ‘சிரிலை’த் தொடர்ந்து உள்ளே வந்தாள். அவளது பேச்சும் செயலும் ஒரு காதலிக்குரியதாக இல்லை, வேசிப்பெண்ணுகுரியதாகவே இருந்தது, அதற்கேற்ற கவர்ச்சியும் அழகும் அவளிடத்தில் அன்றைக்கு இருந்ததும் உண்மை.

” – யார் அந்த மன்மதன்? பார்க்க இளைஞனாகவும் இருக்கான்…”, கேட்டவர் வெப்(Webb).

“- ஏதோ காதல் விவகாரம்னு நினைக்கிறேன். காதல் சாதகமா முடிஞ்சிருக்கணும்ணு தோணுது,”- வெப்(Webb) மனைவி முணுமுணுத்தாள்.

” – காதலாவது கத்திரிக்காயாவது, ஒரு மண்ணுமில்ல…கொழுப்பேறி திரியறா”-, அப்பாவிடமிருந்து கோபத்துடன் வார்த்தைகள் வந்தன.

நான் ‘ஆன்’னைப் பார்த்தேன். ‘எல்ஸா’வை அவள் பார்த்த பார்வையில் ஓர் அந்நியம் தெரிந்தது, ஏதோ அவள் இவளுக்குச் சம்பந்தமில்லாததைப்போல, ஆடை அலங்கார அணிவகுப்பில், கலந்து கொள்ளும் விளம்பரப் பெண்ணை அல்லது இளம்பெண்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்ப்பதுபோல, பார்த்தாள். அப் பார்வையில் அசூயையோ¡, அல்லது வேறுவிதமான அற்பத்தனங்களோ இல்லை. ஒப்பிட்டுப்பார்த்தால், ‘ஆன்’ பலமடங்கு ‘எல்ஸா’ வைக் காட்டிலும் உயர்ந்தவள், அழகு மாத்திரமல்ல, சாதுர்யமும் அவளிடமிருந்தது. நான் மது அருந்திய போதையிலிருந்ததால், மனதில் நினைத்ததை அவளிடத்தில் சொன்னேன்.

” – ‘எல்ஸா’வைக் விட நான் அழகா? அப்படியா நினைக்கிற?

– இதிலென்ன சந்தேகம்…

– கேட்க நல்லாதான் இருக்கு. ஆனால் நீ நிறைய குடிக்கிற, அன்றைக்கும் இப்படித்தான் நடந்துகொண்டாய். உன்னுடைய கிளாஸ எங்கிட்டகொடு. அது சரி.. உன்னுடைய ‘சிரில்’ அவதிப்படறமாதிரி தெரியுதே, அவனைப் போய் பார்க்கணும்ணு உனக்குத் தோணலை?

– ஆமாம்…அவனை நான் வச்சிருக்கேன், என்னோட ஆசைநாயகன் அவன்”, சந்தோஷத்துடன் வார்த்தைகள் வந்தன.

” – நெஞ்சு முட்ட குடிச்சிருக்கிற, போதையிலே கண்டதை உளறர.. நல்ல வேளை, நாம வீட்டிற்குத் திரும்பர நேரம்.”

வெப்(Webb) தம்பதியினரைப் பிரிந்தபோது நிம்மதியாக இருந்தது. தவிர மதாம் வெப்(Mme Webb)பிடம், நடந்ததையெல்லாம் மறந்திடுவோம் என்பதுபோல, ‘பிரியத்திற்குரிய அம்மணி’யென அவளை அழைத்து, சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். திரும்பும்போது வாகனத்தை ஓட்டி வந்தவர் அப்பா. நான் ‘ஆன்’ தோளில் தலைசாய்த்திருந்தேன்.

வெப்(Webb) தம்பதிகள், பிறகு வழக்கமாக நாங்கள் சந்திக்கிற, பழகுகிற மனிதர்கள் என்று பார்க்கிறபொழுது ‘ஆன்’ எனக்கு மிகவும் விரும்பும்வகையிலிருப்பாள் என்றே தோன்றியது. அவள் உயர்ந்தவள், பண்பானவள், புத்திகூர்மையும் நிறைய, வேறென்ன வேண்டும். வழியில் அப்பா அதிகம் பேசவில்லை. உணவகத்திலும், இரவு விடுதியிலும் ‘எல்ஸா’வைக் கண்டது அவரது மனதில் காட்சியாக வந்திருக்குமென நினைத்தேன்.

” – என்ன அவள் தூங்குகிறாளா?”, ‘ஆன்’னிடம் அப்பா கேட்கிறார்.

– அவள் வயது பெண்களைப்போலத்தான் இருக்கிறாள். என்ன… மக்கரோ (Maquereaux)* என்றெல்லாம், பேசி நேரிடையாகத் பிறரைப் புண்படுத்துவது கொஞ்சம் அதிகம்…”

அப்பா சிரித்தவர், அமைதியானார். பிறகு மீண்டும் தொடர்ந்தார்:

” – ஆன் உன்னை காதலிக்கிறேன், உன்னுடைய இடத்தில் வேறொருத்தியை நினைத்துப்பார்க்க என்னால் முடியாது. என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கா?

– ஆனா அதை அடிக்கடி நீ சொல்வதை நினைத்து, அச்சப்படறேன்…

– உனது கையைக் கொடு.”

நிமிர்ந்து உட்கார முயன்றேன், “இப்படி மலை வளைவுகளில் கார்போகிறபோது, கொஞ்சல் எதுவும் வேண்டாம்”, அவர்கள் செய்கையைத் தடுக்க முயன்றேன், முடியவில்லை. இன்னமும் என்னிடமிருந்த மதுவின் போதை, ஆன் சரீரத்தில் ஒட்டியிருந்த வாசனைதிரவியத்தின் மணம், எனது தலை முடியை பறக்கவைத்தக் கடற்காற்று, கலவியின் போது, தோளில் ‘சிரில்’ உண்டாக்கியிருந்த விரல் நகக் குறிகள், பற்கள் பதித்த தடங்களென என்னை இன்பத்தில் ஆழ்த்த, அமைதி கொள்ளவைக்க ஆயிரத்தெட்டுக் காரணங்களிருந்தன. நான் உறங்கிப் போனேன். அந்த நேரத்தில், “பாவம் சிரில், பிறந்த நாள் பரிசாக அவனது தாயார் கொடுத்திருந்த மோட்டார் சைக்கிளில் ‘எல்ஸா’வுடன் மிகவும் சிரமத்துடன் திரும்பியிருப்பான்”, என்று நினைத்தேன். சிரில், அவனது கடினமான மோட்டார் சைக்கிள் பயணம் என நினைத்தவுடன் கண்ணீர் தளும்புகிறது, காரணம் புரியவில்லை. கார் அமைதியாக ஊர்ந்துசெல்ல தாலாட்டுவதுபோல இருந்தது, நன்கு தூங்கலாம் போலிருந்தது. உறக்கம் என்றவுடன் மதாம் வெப்(Mme Webb) நினைவுக்கு வந்தாள், அவள் அந்த நேரத்தில் தூங்கியிருக்க மாட்டாள். நானுங்கூட அவள் வயதில், என்னோடு படுக்கவென்று இளைஞர்களுக்கு நிறைய செலவு செய்வேன், பின்னே உலகில் உடலுறவைக்காட்டிலும், அத்தனை மென்மையாக, அத்தனை உயிர்ப்புள்ளதாக, நியாயப்படுத்தக்கூடியதாக வேறொன்று இருக்கிறதா என்ன? கொடுக்கின்ற பணத்துக்கு, கிடைக்கின்ற பலன் குறைவாய் கூட இருக்கட்டுமே அதனாலென்ன? அப்போதுகூட ‘ஆன்’ன்னிடத்திலோ அல்லது ‘எல்ஸா’விடத்திலோ இருக்கிறமாதிரி கசப்பையும், காழ்ப்பையும் ஒருபோதும் என்னிடத்தில் அது ஏற்படுத்தாது. சத்தமிடாமல் சிரிக்கிறேன். ‘ஆன்’னுடைய தோள் கொஞ்சம் கூடுதலாக இறங்கிக் கொடுத்தது. ‘தூங்கு’ என்று கட்டளையிடுவதுபோலச் சொன்னாள். நான் தூங்கிப்போனேன்.

—————————————————————————————————-

1. Maquereaux – என்ற சொல்லுக்குத் தமிழில் அயளை மீன். எனினும் பிரெஞ்சுமொழியில், வேசித்தொழில் செய்து பணம் பண்ணும் பெண்ணையும் ‘மக்கரோ’ (‘Maquereaux) என்ற சொல் குறிக்குமென்பதால், நான் ‘அயளை’யென மொழிபெயர்ப்பதைத் தவிர்த்தேன்.

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மறுநாள்காலை பொடிநடையாக சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென அப்பாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன், வழியில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டோம். எங்கள் ஜாகைக்குத் திரும்புகையில், ஊசியிலைத் தோப்புவழியாகப் போகலாமே என்றேன், அவரும் சம்மதித்தார். அப்போது நேரம் சரியாக பத்தரை மணி. திட்டமிட்டபடி அங்கிருந்தேன். பாதை குறுகலாக இருந்ததோடு, இருபுறமுமிருந்த முட்செடிகள் கால்களில் பட்டு, நான் சொறிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதைத் தவிர்க்க நினைத்தவர்போல எனக்கு இடம்விட்டு அப்பா முன்னால் நடந்தார். சிறிது தூரம் சென்றிருப்போம், முன்னால் சென்றுகொண்டிருந்த அப்பா சட்டென்று நின்றார். அவர்களைப் பார்த்துவிட்டாரென்று புரிந்துகொண்டேன். அவரருகில் வந்து நின்றேன். சிரிலும்(Cyril) எல்ஸாவும்(Elsa), ஊசியிலை மிலாறுகளைப் பரப்பி கிராமத்தவர்களைப்போல சுகமாகப் படுத்திருந்தார்கள், இந்த யோசனையைச் சொன்னவள் நானென்றாலும், அவர்கள் படுத்திருந்த காட்சியைப் பார்த்ததில், மனம் உடைந்துபோனது. இருவருமே நல்ல அழகு, வாலிப வயதினர், தவிர கடந்த சிலநாட்களாக அருகருகே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், இந்த லட்சணத்தில் எல்ஸா(Elsa)வுக்கு அப்பாவிடத்தில் உள்ள காதலோ அல்லது சிரிலுக்கு(Cyril) என் மீதுள்ள காதலோ, அவர்களுக்கிடையான அசம்பாவிதங்களுக்கு எப்படி தடைபோட முடியும்?. அப்பாவிடத்தில் எனது கவனம் திரும்பியது, அசையாமல் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்; முகத்தில் அதுவரை நான் காணாதப் பதட்டம்; அவரது கையைப் பற்றியவள்:

” – அவர்களை எழுப்பவேண்டாம், நாம போகலாம்”, என்றேன்.

கடைசியாக ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தார்: எல்ஸா, தனது இளமையின் முழு வாளிப்புடன், முதுகுப்புறமாக படுத்திருக்கிறாள், செக்கசெவேரென்றிருந்த உடல், சொக்கத் தங்கம் போல மினுக்குகிறது, உதட்டில், இளம் வயது விபச்சாரிமாதிரி, புன்னகை, ம்..பரவாயில்லை, தேர்ந்துவிட்டிருந்தாள்…அப்பா திரும்பி வேகமாக நடந்தார்.

” தேவடியா, தேவடியா!… “, அப்பா முனகுகிறார்

– எதனால அப்படிச் சொல்லணும்? அவள் விருப்பப்படி நடந்துகொள்ள சுதந்திரம் இல்லையா என்ன?

– அதற்காக சொல்லலை. ஆனால் சிரிலை(Cyril) அவள் அணைத்துக்கொண்டிருக்கும் விதத்தை, பார்த்தாயே, நல்லாவா இருக்கு?

– நல்லா இருக்குண்ணா நான் சொல்றேன், எனக்குப் பிடிக்கலைதான்- நான்

– எனக்குந்தான். எல்ஸாவை எனக்குப் சுத்தமா பிடிக்கலை- இருந்தாலும் அவளோட கொஞ்ச காலம் நான் இருந்திருக்கிறேன் என்கிற உண்மை இல்லையென்று ஆயிடுமா, என்ன? ஆக மோசம்…”

என் தகப்பனாரை இந்தவிவகாரம் எந்த அளவிற்கு வேதனைப் படுத்துமென்று எனக்குத் தெரியும். அவர் மனதிலும் நான் நினைத்தது போலவே விருப்பங்கள் இருக்கலாம் அதாவது அவர்கள் மீது பாய்வது, இருவரையும் பிரிப்பது, நேற்றுவரை தனக்கு உடமையாக இருந்ததற்கு மீண்டும் சொந்தம் கொண்டாடுவது.

” – ஆன்னுக்குத் தெரியவந்தால் என்ன நடக்குந்தெரியுமா?…

– என்னது? ஆன்னுக்குத் தெரியவந்தாலா?…வரட்டுமே. அவள் இதைப் புரிஞ்சுக்கபோறதில்லை. ஒருவேளை அதிர்ச்சி அடையலாம், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனா நீ, என்னோட மகள்தானே, உனக்கு என்னோட வேதனை என்னவென்று புரியுதா இல்லையா? இந்தக் கண்றாவிகளைப் பார்க்க அதிர்ச்சியாக இல்லை?

அவரது மனதைப்புரிந்துகொண்டு அதை மேய்ப்பது சுலபாமாக இருந்தது. ஆனால் அதை நன்றாக புரிந்துகொள்வதிலேதான், கொஞ்சம் பயம்..

” – எனக்கு அவர்களை அந்த நிலையில் பார்த்ததில் எந்த அதிர்ச்சியுமில்லை. கொஞ்சம் யதார்த்தத்துடன் இதைப் பார்க்கவேண்டும். எல்ஸா(Elsa)வுக்கு மறதி அதிகமென்று நினைக்கிறேன். சிரிலை(Cyril) அவளுக்குப் பிடித்திருக்கிறது. நீங்களாகத் தொலைத்த பொருளை சொந்தமென்று சொல்லிக்கொள்வதிலும் அர்த்தமுமில்லை. அதிலும் அவளுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது…

– சரி நான் விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம்”, என்று ஆரம்பித்தவர், வார்த்தைகளின்றி தடுமாறினார்.

“உங்களால் முடியாது, தீர்மானமாகக் கூறினேன்”, ஏதோ எல்ஸாவை(Elsa) மீண்டும், அப்பா தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசுவது நியாயமானது என்பதுபோல, நாங்கள் உரையாடினோம்.

” ம்.. இது சரிவருமென்று நானும் நினைக்கலை, – யதா¡ர்த்தவாதியாகப் அப்பா மாறியிருந்தார்.

– ஆமாம்.. அதுதான் உண்மை,” தோளிரண்டையும் உயர்த்தியவாறு கூறினேன்.

“அடப் பாவி மனிதா, பந்தயத்தித்திலிருந்தே விலகிகொண்ட பிறகு, ஜெயித்தாகணும்ணா எப்படி?”, என்பது அந்தத் தோள் உயர்த்தலுக்குப் பொருள். எங்கள் வில்லாவை அடையும் வரை ஒரு வார்தை பேசவேண்டுமே, ம்… மனிதர் அமைதியாக வந்தார். வில்லாவுக்குள் நுழைந்தோமோ இல்லையோ, ‘ஆன்’னை(Anne) இறுக அணைத்துகொண்டு சிலநொடிகள் மெய் மறந்திருந்தார். என் தகப்பனாரிடத்திலிருந்து அதனை எதிர்பார்க்காததால், அவளுக்கு வியப்பு, புன்னகைத்தபடி, நடக்கட்டுமென அனுமதித்தாள். அங்கிருந்து வெளியேறியவள் கூடத்து சுவற்றில் சாய்ந்தபடி நின்றேன், குற்ற உணவில் எனது உடல் நடுங்கியது.

இரண்டுமணி அளவிற்கு சீழ்க்கை ஒலி கேட்டது. சிரிலென்று(Cyril) புரிந்துகொண்டு, கடற்கரைக்கு இறங்கி நடந்தேன். படகிலேற எனக்கு உதவியவன், ஆழ்கடல் திசைக்காய் அதனைச் செலுத்தினான். கடலில் ஒருவருமில்லை, வெயில் கொளுத்தியது. ஆழ்கடல் சென்றதும், படகு நகராமலிருக்க, பாயினை இறக்கினான், எனக்காய்த் திரும்பினான். சிலநொடிகள் இருவருமே மௌனமாக இருந்தோம், பிறகு முதலில் அவனே பேசத் தொடங்கினான்.

” – காலமே நடந்தது…

– பேசாதே! எங்கிட்ட ஒரு வார்த்தை வேண்டாம், நான் எந்த விளக்கத்துக்கும் தயாரா இல்லை.”

மெல்ல என்னை படகிற்கிடந்த மூடுசீலை (Tarpaulin)யொன்றில் கிடத்தினான். இருவருமே தத்தளிக்கிறோம், வியர்வையில் வழுக்குகிறோம், ஆவேசம், அவசரம்; எங்கள் கலவிக்கு ஈடுகொடுத்து தாலாட்டப்படும் படகு. தலைக்குமேலே தெரிந்த சூரியனைப் பார்க்கிறேன். அடுத்த கணம் சிரில், தனக்குமட்டுமே பேச உரிமையுண்டு என்பதுபோல மென்மையானகுரலில் பிதற்றுகிறான்: “சூரியன் வானத்திலிருக்கிறதென்றுதானே பார்க்கிற, அது எப்போதோ விழுந்துட்டுது, வெடித்து சிதறி, இப்போது எனது உடல்மீதுதான் அத்தனையும் படிந்திருக்கின்றன. சொல்லு.. இப்போது நான் எங்கிருக்கேன்? கரையேறமுடியாமல் வெகு ஆழத்தில் விழுந்து கிடக்கிறேன் என்பது நிச்சயம், ஆனால் எங்கே, கடலிலா? காலத்திலா? காதற் பரவசத்திலா? உரத்த குரலில் சிரிலை, அழைத்தேன். அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

அடுத்து உப்பு நீரின் சிலுசிலுப்பு. இருவருமாகச் சேர்ந்து சிரித்தோம், பரவசத்தில் திளைத்தோம், களைப்புற்றோம், ஒருவரையொருவர் நன்றியுடன் பார்த்துக்கொண்டோம். சந்தோஷமாக இருந்தது. கீழே கடல், ஆகாயத்தில் சூரியன், சிரிப்பு, காதல் அத்தனையும் துணைக்கிருந்தன. அப்படியொரு கோடைவிடுமுறை, மிதமிஞ்சிய குதூகலத்துடன், நி¨றைய செறிவுடன் பயமும், சஞ்சலமும் தயவுபண்ணிய அவைகள் மறுபடியும் வாய்க்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

சிரிலுக்கும் எனக்குமான காதல், எனது உடல் இச்சையை பூர்த்திசெய்திருப்பது உண்மையென்றாலும், நினைத்துப்பாக்க அறிவார்ந்த ஆனந்தத்தையும் எனக்குக் கொடுத்திருந்தது. அவர்களுக்கோ ‘காதல் செய்வது’ ஒரு கவர்ச்சிகரமான சொல், அதைத் தவிர பெரிதாக பொருள்கொள்ள ஏதுமில்லை, அதற்கேகூட அவர்களிடத்தில், முரண்பாடுகள் இருக்ககூடும். பொருள்சார்ந்ததும், நம்பிக்கையும் கொண்ட ‘செய்தல்’ என்கிற சொல் ‘காதல்’ என்ற கவித்துவ கனவுசொல்லில் கலந்து என்னை மெய்மறக்கச் செய்திருந்தது. இதுவரை ‘காதலை’ கொஞ்சங்கூட நாகரீமின்றியும், கூச்சமின்றியும், அதன் இனிமையை உணராமலேயே விமர்சித்து வந்திருக்கிறேன். சிரிலுடனான அனுபவத்திற்குப் பிறகு எனது புத்தி, தன்மையாய் செயல்படுகிறது. என் தகப்பனார் வைத்தவிழிவாங்காமல் ‘ஆன்’னை(Anne)ப் பார்க்க, பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன். அவள் மறுவிநாடி, சின்னதாய் கொஞ்சங்கூட நாகரீகமற்றவகையில் வேசிபோல சிரிக்க, எங்களிருவர் முகமும் வெளுத்துப்போனது, சன்னலுக்காய்த் திரும்பிகொண்டோம். உன்னுடைய சிரிப்பு சரியில்லையென்று சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். என் தகப்பனாரோடு அவளுக்கிருந்த உறவினை, ஓர் ஆணுக்கும் அவனது ஆசைக் கிழத்திக்கும் உள்ள உறவென்று சொல்லமுடியாது, வேண்டுமானால் ஓர் ஆணுக்கும், அவனது தோழிக்குமுள்ள உறவென்று கருதலாம். வெறுமனே தோழியென்று சொன்னாலும் சரியாக இருக்காது, ‘பிரியமான தோழி’ என்பதே பொருத்தமான சொல். ஆனால் இரவுநேரங்களிலும் தோழமையோடுதான் பழகியிருப்பார்களா?… என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள். அப்படியான அசிங்கமானக் கற்பனைகளில் இறங்குவதை நிறுத்தியாகவெண்டுமென்றுதான் நினைத்தேன், என் மனதை அலைகழிக்கக்கூடிய எண்ணங்களை அறவே வெறுத்தேன்.

நாட்கள் கடந்திருந்தன. சில நாட்களாக ஆன், அப்பா, எல்ஸாவென அனைவரையும் கொஞ்சம் மறந்திருந்தேன். விழிகள் திறந்திருக்க, நிலவொளியில் காதலில் லயித்தபடி கிடந்தேன். அமைதியாகவும், அன்புக்குரியவளாகவும் இருந்தேன். சிரில் என்னிடத்தில்,”கருத்தரித்துவிடுமென்கிற பயமேதுமில்லையா?”, என்று கேட்கிறான், நான் பதிலுக்கு, “எனக்கென்ன பயம்? உன்னிடத்தில் பிள்ளையைத் தூக்கிக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கப்போகிறேன்.” என்கிறேன். எனது பதிலில் நியாயமிருப்பதுபோல அமைதியாக இருந்தான். ஒருவேளை அந்தத் தைரியத்தில்தான் அவனிடத்தில் தயங்காமல் என்னை ஒப்படைத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்: அந்த விடயத்தில், என்னை குற்றஞ்சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. மாறாக நானோ, தாயாக நேர்ந்தால், அவனே குற்றவாளியென்று, நம்பினேன். என்னால் இயலாததை, அவன் சுமப்பதற்குத் தயாராகவிருந்தான். என்னுடல் மெலிந்தும், கடினமாகவும் இருந்தது, இந்த லட்ஷணத்தில் பிள்ளைத்தாய்ச்சி பெண்ணாய் என்னுடலை கற்பனைசெய்துபார்க்க, கருமம் கருமம்… எனது பதின்பருவத்து உடல் முதன்முறையாக திருப்தியளித்தது. இப்படியே இருக்க முடிந்தால் மகிழ்ச்சி, என நினைத்தேன்.

‘எல்ஸா’வுக்குப் பொறுமையில்லை. விடாமற் என்னை கேள்விகளால் துளைத்தெடுத்தாள். அவளோடோ அல்லது சிரிலோடோ இருக்கும் சந்தர்ப்பம் அமைந்துவிடபோகிறதென்கிற பயம் எனக்கும் இருந்தது. என் தகப்பனார் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவளும் வந்தாள், அல்லது அதுமாதிரியானச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டாள். அவள் பேச்சிலும், செயலிலும் தான் ஜெயித்துவிட்டதாக நினைப்பு, அவர் என்னிடமிருந்து இனி தப்பமுடியாதென்றாள். சமீப காலம்வரை காதலென்றாலே, எல்ஸாவிற்கு(Elsa) பணத்தோடு சம்பந்தப்பட்டது, அதாவது காதலும்-பணமும் பிரிக்கமுடியாதவை, என்று நினைக்கும் கூட்டத்தைச் சார்ந்தவள். ஆனால் நடந்தது என்ன? அவசரகதியில் இயங்கும் மனிதர்களுடைய பார்வையையும், அசைவையுங்கூட மிக நுணுக்கமாக அவதானித்து, இலக்கிய காதலில் மூழ்கியவள்போல, உணர்ச்சியில் தத்தளித்தது, உண்மையில் ஆச்சரியம். இதுவரை, சாதுர்யமாக ஒரு காரியத்தை செய்வதென்பது, அவளுக்குச் சுட்டுபோட்டாலும் வராது, அத்தகையவளுடைய நடவடிக்கைகள், ஏதோ உளவியல் ரீதியில் நுணுக்கமாக ஆய்ந்து அனைத்தையும் செயல்படுத்துவதுபோல நடந்துகொண்டாள்.

என் தகப்பனாரும் அதற்குப் பிறகு, சதா எல்ஸா(Elsa)வுடைய நினைப்பிலேயே இருந்தாரென்று சொல்லலாம், ஆனால் ஆன்(Anne) இதையெல்லாம், கவனத்திலெடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. அவளிடத்தில் இதுவரை கண்டிராத அன்பும், அக்கறையும் வெளிப்பட, இது எங்குகொண்டுபோய் விடுமோவென்கிற அச்சமெனக்கு, ஒருவேளை அதன்மூலம் கவனமின்றி தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாளோ என்றுகூட நினைத்தேன். இதில் முக்கியமாக உங்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், அடுத்த மூன்றுவாரங்களிலும் பெரிதாய் எதுவும் நடக்கவில்லை. பாரீஸ¤க்கு எல்லோரும் திரும்பவேண்டியிருந்தது. ஆன்னும்(Anne), என் தகப்பனாரும் திருமணம் செய்துக்கொள்வது உறுதியெனில், எல்ஸா(Elsa)வும் அநேகமாக பாரீஸ¤க்குத் திரும்பிவிடக்கூடுமென நினைத்தேன். பாரீஸில் சிரிலும்(Cyril) இருப்பான். கோடைவிடுமுறையின்போது எப்படி அவனிடம் எனக்குள்ள உறவை தடுக்கமுடியாமற்போனதோ அவ்வாறே, நான் அவனைச் சந்திப்பதையும் ‘ஆன்’ தடுக்க முடியாது. பாரீஸில் அவன், தனது அம்மாவிடமிருந்து பிரிந்து தனியாக வெகுதூரத்தில் இருந்தான். எனது மனம் அவனது அறைபற்றிய கற்பனையில் மூழ்கிப்போனது: சன்னற் கதவு திறந்திருக்க சிவந்தும், ரோஜா வண்ணத்திலும் இருக்கும் வானம், அதாவது பாரீஸ் நகரத்திற்கே உரிய அசாதாரண வானம், சாய்ந்துநிற்க உதவும் கம்பிகளில் புறாக்கள் எழுப்பும் ஓசை, சிரிலும் நானும் கட்டிலில், அருகருகே மிகநெருக்கமாக…


Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



நடந்து முடிந்த சம்பவத்தினால், சில பிரச்சினைகளும் வந்தன. பொதுவாக தங்களிடத்தில் நியாயமிருப்பதாக நம்பிக்கொண்டு, தங்கள் நடவடிக்கைகளில் கறாராக இருப்பவர்களில் பலரும், பிறருடன் இணங்கிப்போகிறவர்களல்லர். ஆன்னும்(Anne) அதற்கு விதிவிலக்கானவளல்ல. சற்றுமுன்னர் அவள் நடந்துகொண்டமுறையும் அதாவது தனது முரட்டுப்பிடியை மெல்லத் தளர்த்தி, எனது முகத்திலிருந்து கையை எடுத்துக்கொண்ட விதமும் அப்படித்தான். அவள் மனதில் என்னவோ இருந்திருக்கிறது, அதை வெளிப்படையாக சொல்லிவிடலாமென நினைத்திருக்கலாம், கடைசியில் என்மீதுள்ள கரிசனமா அல்லது வழக்கமான தனது அசிரத்தையா எது காரணமென்று தெரியவில்லை, தவிர்த்துவிட்டாள். ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிந்தது: என்னைக்கட்டி மேய்ப்பதென்பது எத்தனை சிரமமோ அத்தனை சிரமங்கள் எனது பலவீனங்களை அனுமதித்து, என்னை அணைத்துச் செல்வதிலும் இருந்தன. எனது தகப்பனாரை மணப்பதால் உண்டான கடமைகள் என்று சொல்லமுடியுமேயொழிய, மற்றபடி எனது அருகிலிருந்து நன்னெறிபடுத்தவேண்டிய கட்டாயமேதும் அவளுக்கில்லை. என்னைச் சதா உதாசீனபடுத்தும் அதாவது எந்தநேரமும் கடுகடுவென்றோ அல்லது தொட்டால் சிணுங்கி மாதிரி இருக்கிற அவளது குணத்தையோ (இவையெல்லாம் காரணகாரியம் பார்த்துவருவதில்லை) நானும் அங்கீகரித்திரிருக்கக்கூடும், காரணம் சிலநேரங்களில் பிறரிடமுள்ள குறைகளை திருத்தவேண்டிய கடமையேதும் நமக்கில்லாதபோது அவைகளோடு இணங்கிப்போவதில்லையா? அப்படி நீங்கள் இதையும் எடுத்துக்கொள்ளலாம். அடுத்த ஆறுமாதங்களில், ‘உன்னால் நான் படுகின்ற தொல்லைகள் போதும்,’ என்று பிரியத்தோடு என்னிடத்தில் அலுத்துக்கொள்வதைத் தவிர, அவளுக்கு வேறு வழிகளில்லை, அதைத்தான் நானும் விரும்பினேன், அதற்குகந்தவளாகத்தான் நானும் நடந்துகொண்டேன். ஆனால் அவ்வாறான உணர்வுகளொன்றையும் அவளிடத்தில் நான் காணப்போவதில்லை; ஒருவேளை என்னை பராமரிக்கின்ற பொறுப்பு அவளைச் சார்ந்தது என்பதால் இந்த முரண்பாடோ என்னவோ? அல்லது இன்னமும் அவள் விரும்பிய வடிவை தருவிக்கக்கூடிய களிமண்ணாக நான் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். களிமண்ணென்றாலும், நான் கடினமானவள் அத்தனை இலகுவாக என்னைக் கையாள முடியாதென்றே நினைக்கிறேன்.

அவள் எண்ணஒட்டத்தை நான் புரிந்துகொள்ளும்வகையிலேயே செயல்பட்டுவந்தாள். சில நாட்கள் கழிந்திருக்கும். இரவு உணவின்போது, விடுமுறையில் நான் தயார் செய்யவேண்டிய பாடங்களைப் பற்றி பேச்சு வந்தது. நான் கொஞ்சம் அசிரத்தையாக, உரையாடலை காதில் வாங்காமல், உணவில் கவனமாக இருந்தேன், இதனை எதிர்பார்க்காததால் அப்பாவுக்கு அதிர்ச்சி. ஆன் (Anne) என்னை கோபத்துடன் இழுத்துபோய் எனது அறையில்தள்ளி கதவை மூடினாள். இத்தனைக்கும் அவர்களிருவருக்கும் எதிராக ஒரே ஒரு சொல்லைக்கூட உரத்து நான் பேசவில்லை. கதவுக்கு வெளியே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. தாகமாய் இருந்தது, ஓடிச் சென்று கதவைத் தள்ளுகிறேன், அது இறுக்கமாகயிருக்கவே பூட்டியிருக்கிறதென்று புரிந்துகொண்டேன். எனக்கு இது புதிது, என்னை இதுவரை ஒருவரும் அறையில் பூட்டிவைத்ததில்லை. எனக்குப் பயமாக இருந்தது. கலவரப்பட்டிருந்தேன்: சன்னலுக்காய் ஓடுகிறேன், ம்… அதன்வழியாக தப்பமுடியாது போலிருந்தது. திரும்பிவருகிறேன். பதட்டமாகயிருந்தது. வெறிபிடித்தவள்போல கதவில் விழுந்ததில் தோளில் வலி கண்டதுதான் மிச்சம். பிறருடைய உதவியின்றி வெளியேறிக்காட்டவேண்டும் என்கிற மன உறுதியுடன், பல்லை இறுகக் கடித்தபடி, நகம் வெட்டும் அலகைக்கொண்டு திறப்பினை உடைக்க முயற்சித்தேன், முடியவில்லை. நகம் வெட்டும் அலகை அப்படியே விட்டுவிட்டு, அறைக்கு நடுவே வெற்றுக் கைகளுடன், செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். நிற்கிறேனென்று சாதாரமாக சொல்லிவிடமுடியாது, ஒரு சின்ன அசைவில்லை சிலைபோல என்று சொல்லலாம், நின்றவள் நிலவிய நிசப்தத்தை அவதானிக்கிறேன், மெல்லமெல்ல ஒருவித சாந்தம் என்னுள் வியாபிக்க, எனது சிந்தனையிலும் தெளிவு, என்ன செய்யவேண்டுமென்பதில் திடமாக இருந்தேன். முதன்முறையாக தப்பானவழியில் எனது மூளை யோசிக்க ஆரம்பித்தது. என்னைநானே தளையிட்டுக்கொண்டதுபோல நினைப்பு, கடுமையாகச் சிந்தித்து, பின்னர் அவைகளை ஒருமுகப்படுத்தினேன், கவனமாக மனதிற்குள் அடுத்து செய்யவேண்டியவைப் பற்றி யோசித்தபடி படுத்துக்கிடந்தவள், மதியத்திற்குப் பிறகு அறையைவிட்டு வெளியேறவேண்டுமென்கிற கோபத்துடன், – எனது திட்டங்களுக்கும் அதற்கும் பெரிதாய் எந்த சம்பந்தமுமில்லை- ஒன்றிரண்டுமுறை கதவில் இடிபட்டது ஆச்சரியம்.

மாலை மணி ஆறிருக்கும் என் தகப்பனார் கதவைத் திறந்துகொண்டு உள்ளேவர, எந்திரத்தனமாக எழுந்து நின்றேன். அவர் வார்த்தையேதுமின்றி என்னைக் பார்த்து புன்னகைக்க, நானும் ஒப்புக்குச் சிரித்துவைத்தேன்.

” – என்ன? ஏதாச்சும் சொல்லணுமா? – அப்பா.

– என்ன பேசணும்? எதைப்பேசணுமோ அதை உங்களுக்கும் பிடிக்காது, எனக்கும் பிடிக்காது. இபோது பேசி என்ன ஆகப்போகிறது…

– உண்மைதான்.” – அப்பாவுடத்தில் முகத்தில் நிம்மதி. மீண்டும் என்னிடம், ” ஆனால் ஆன்னிடம்(Anne) நல்லவிதமாக நடந்துகொள்ளேன். உனக்குப் பணிவுதேவை.

அவர் சொன்ன வார்த்தை என்னை உசுப்பிவிட்டது: என்னது… நானா? நானா ‘ஆன்’னிடம் பணிந்து போகவேண்டும். பிரச்சனையை, என் மீது திருப்பியிருந்தார். ‘ஆன்’னுக்கும் எனக்குமுள்ள பிரச்சினை ஒரு தாய்க்கும் மகளுக்குமுள்ள பிரச்சினையாகப் பார்க்கிறார். இது உண்மைக்கு மிகமிக புறம்பானது, கடவுளே!… எதைவேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது

” – மோசமாக நடந்துகொண்டுவிட்டேன்.. ஆன்னிடம் மன்னிப்பு கேட்கலாமென்றிருக்கிறேன்.

– என்னது… என்னாலே நம்பவே முடியலை.. அப்ப உன் மனசிலே கோபமேதுமில்லைண்ணு சொல்லு.

– ஆமாம்.. தலையை லேசாக ஆட்டினேன். தவிர நாம இரண்டுபேரும் ஆன்கிட்ட ஏதோஒருவைகையில் இழுபட்டு அவதிப்படறோம், சீக்கிரத்தில் நான் கல்யாணம் பண்ணிக்கொண்டால் பிரச்சினைகளில்லையென்று நினைக்கிறேன், வேறொன்றுமில்லை.”

இந்த யோசனை நிச்சயமாக அவரை வருந்தச்செய்யுமென்று எனக்குத் தெரியும்

” – எதையாவது உளறிக்கொண்டிராதே… இப்போது கல்யானத்திற்கெல்லம் என்ன அவசரம். உன்னை வெண்பனி பெண்ணென்று(1) கற்பனை பண்ணிக்காதே. என்னைவிட்டு இவ்வளவு சீக்கிரம் விலகிக்போக, எப்படித் துணிந்தாய்? இதுவரை பெரும்பாலான வாழ்க்கையை நீ விடுதி, விடுதிண்ணு கழிச்சாச்சு, நாம இரண்டு பேரும், ஒன்றாக இருந்ததென்று சொன்னால் அதிக பட்ஷமாக இரண்டுவருடங்களிருக்குமா?..”

நினைத்துப் பார்க்க எனக்கும் சங்கடமாக இருந்தது. எனது தகப்பனார் மார்பில் சாய்ந்து, எனது சந்தோஷ இழப்புகளையெல்லாம் சொல்லி கதறி அழுதுவிடுவேனோ என்று நினைத்தேன். என்னால் முடியாது இந்த ஆட்டத்திற்கு நான் துணைபோகமுடியாது.

” அப்பா… நான் கொஞ்சம் மிகையா நடந்துகிட்டேன். உங்களுக்குத் தெரியாதா, ‘ஆன்’னுக்கும் எனக்கும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பேயில்லை. நாங்களிருவரும் ஒத்துப்போவோம், அதாவது பரஸ்பரம் இருவரும் விட்டுக்கொடுத்து…

– ஆமாம் அப்படித்தான் இருந்திருக்கீங்க, நான் இல்லைண்ணு சொல்லலையே.”

அப்பா மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் நான்தான் விட்டுக்கொடுத்துபோகவேண்டுமே தவிர ஆன்(Anne) அல்ல. அவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்.

” – அப்பா உங்களுக்கு நன்றாகத் தெரியும். ‘ஆன்’ எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் நியாயமிருக்குமென்றுதான் நான் நம்புவேன். நம்மிருவர் வாழ்க்கையையும் பார்க்க அவள் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறாள், சொல்லபோனால் மிகக் கடினமான வழிகளில்…”

நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை உணர்ந்தவராய், அதைமறுப்பதற்கு அறிகுறியாக சில செய்கைகள், நான் கவனியாதவள்போல தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோனேன்:

“…அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில், ஆன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவளாக நான் இருக்கலாம். எங்களிருவருக்கிடையில் முட்டாள்தனமான விவாதங்களுக்கு இடமிருக்காது. என்ன, எனக்குக் கொஞ்சம் பணிவு தேவை. அடக்கமாக இருக்க பழகிக்கணும்.”

அப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார், குழப்பத்திலிருந்தார் கூடவே பதட்டம் வேறு. காரணம் புரிந்தது, தனது தான் தோன்றித்தனமான எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு துணை குறைந்துவிடுமோ அல்லது தனது கடந்தகாலத்தையேகூட ஒருவகையில் இழந்து விடுவோமோ என்கிற அச்சமாகவிருக்கலாம்.

” – எதையாவது கற்பனைபண்ணிக்காதே, குரல் சுரத்தின்றி ஒலித்தது. தொடர்ந்து, “உன்வயதுக்குத் தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத் தவறிவிட்டேன். என்வயதுக்குரிய வாழ்க்கைப்படியாவது உன்னை நடத்தினேனாவென்றால் அதுவுமில்லை. ஆனாலும் பிறர் பரிகசிக்க உன்னை வைத்திருந்தில்லை, நன்றாகவே வைத்திருந்தேன். உண்மையில் கடந்த இரண்டுவருடங்களாக நமது வாழ்க்கையில் அசம்பாவிதங்களுமில்லை, கவலைகளுமில்லை, மகிழ்ச்சியாகவே இருந்துவந்தோம். இன்றைக்கு ஆன்னுடைய அபிப்ராயங்கள் சிலவிஷயங்களில் முரண்படுவதற்காக, சட்டென்று நமது பந்தத்தை துறக்க நினைக்கிறாய். சரியா? கொஞ்சம் யோசித்து பார்..

– துறக்கக் கூடாதுதான், ஆனால் ஒதுங்கிக்கொள்ளலாம் இல்லையா? பதிலில் தெளிவாய் இருந்தேன்.

அப்பாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது. அவருக்கு என்னசொல்வதென்று புரியவில்லை. “தாராளாமாக ஒதுங்கிக்கொள்ளலாம்”, என்றார். பின்னர் இருவருமாக கீழே இறங்கிச் சென்றோம்.

ஆன்னிடம் தயக்கமின்றி மன்னிப்புக் கேட்டேன். ‘எங்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கெல்லாம் பாழாய்ப்போன வெக்கையே காரணமென்பதால், மன்னிப்புக்கு அவசியமில்லை என்றாள். நான் அவள் பதிலை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லையென்றபோதிலும், அந்த நேரம் மகிழ்ச்சியாகவிருந்தது.

சிரிலை, தீர்மானித்திருந்தபடி ஊசியிலைத் தோப்பில்வைத்து சந்தித்தேன். ‘இனி செய்யவேண்டியது என்ன?’ என்று அவனுக்கு விளக்கமாக கூற, அதை ஒருவித அச்சத்துடனும், பிரம்மிப்புடனும் கேட்டுக்கொண்டான். பிறகு என்னை சட்டென்று அணைக்க முயற்சிக்கிறான், நேரம் வேறு ஆகியிருந்தது, நான் எனது வில்லாவுக்குத் திரும்பவேண்டிய கட்டாயத்தினால் புறப்பட நினைக்கிறேன், மனமோ, அவனது அணைப்பிலிருந்து விடுபட தயங்குகிறது, நினைத்திருந்தால் போகவிடாமல் அவன் என்னைத் தடுத்திருக்கலாம், நானிருந்த நிலை அப்படி, எனது உடல் அவன் மனதை உள்வாங்கிக்கொண்டதுபோல, தன்னை மறந்த நிலையில் அவனை அணைத்துகொள்ள, தாபத்துடன் முத்தமிடுகிறேன். மாலையின் இவ்வரிய தருணத்தை, எண்ணிஎண்ணி அவன் வருந்தவேண்டும், இரவுபகலென்று அவனது நினைவு என்னையே சுற்றிவரவேண்டும், அதற்கேற்ற வகையில், அவன் நினைவில் நிறுத்தும்வகையில் ஒரு வலியை, ஒரு தழும்பை இந்தநேரத்திலே அவனிடத்திலே விட்டுசெல்லவேண்டுமென்பதுபோல ஒருவித ஆவேசத்துடன் செயல்படுகிறேன். எனது உடல் மீது அவனை வாங்கிக்கொள்ளாமல், அவனது தழுவல்களில்லாமல், அவனது தந்திரங்களில்லாமல் சட்டென்று வெளிப்படுகிற அவனதுகோபங்களில்லாமல், இனி என்னாலும் ஓர் இரவை கற்பனை செய்யவியலாது. அப்படியே அமைந்தாலும் அவ்வாறான இரவுகள், விடிதலின்றி நீளக்கூடும்.

———————————————————————————-
1. வெண்பனி(Snow white) – Snow white and the Seven dwrafs -கதையின் நாயகி

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 10

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 10

அப்பாவால் முடிந்ததெல்லாம் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருப்பது, அன்றைக்கும் அந்த நிலையில்தானிருந்தார். எல்ஸா எங்கள் வில்லாவுக்கு வந்துபோனதையும் தனது உடைமைகளை கொண்டுசென்றதையும், பணிப்பெண் அப்பாவிடம் கூறினாள். சொன்னவள், எனக்கும் எல்சாவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பற்றி மூச்சுவிடாதது ஏனென்று புரியவில்லை. பணிப்பெண், உள்ளூர் பெண்மணி, கற்பனை வளமும் இருக்கவேண்டும், எங்களிடையே நடந்த சம்பவங்களைக் கூட்டிக் கழித்து சுவரஸ்யமான முடிவொன்றுக்கு அவள் வந்திருக்கக்கூடும். அதிலும், ஒரு பணிப்பெண்ணுக்கு, கொஞ்ச நாட்களாக எங்கள் அறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தெரியாதா என்ன?

ஆன்னும்(Anne) அப்பாவும் தங்கள் மனதில் ஏற்பட்டிருந்த வருத்தங்களை மறைத்துக்கொண்டு, எனது நலனில் அவர்கள் காட்டிய அக்கறைகள் ஆரம்பத்தில் எனக்குத் தலைவலியாக இருந்தன, பின்னர் வெகு சீக்கிரத்தில் அவற்றின் தேவையை உணரத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் ‘சிரிலை'(Cyril)யும், எல்ஸாவை(Elsa)யும் மிக நெருக்கமான ஜோடியாக எங்கேயாகிலும் சந்திக்க நேரிட்டால், இத்தனைக்கும் அதற்கு நானே காரணமென்றாலுங்கூட, வெறுக்கத் தொடங்கினேன். படகுசவாரியையெல்லாம் மறந்தாயிற்று, கடந்த சில நாட்களாக படகில் என் இடத்தில் எல்ஸா, அவளது தலைமுடியும், என்னுடையதைபோலவே காற்றில்அலைந்ததையும் பார்த்தேன். அவர்களிருவரையும் ஊசியிலைத் தோப்பு, கிராமம், சாலைகளென எங்கே சந்திக்கநேர்ந்தாலும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், ஒதுங்கிக் கொள்ளவும் எனக்குச் சுலபமாய் முடிந்தது. அந்த நேரங்களில், ஆன்(Anne) என்னைத் தேற்றுவதுபோல சாடையாகப் பார்ப்பாள், எனது தோளில் கைபோட்டு ஆறுதலாக அணைத்துகொள்வாள். அவளிடம் கண்ட இந்த மாறுதல்கள் உண்மையா?’ என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. சமீப நாட்களில் அவளிடத்தில் நான் கண்ட அன்பினை, தேர்ந்த மதிநுட்பம் என்பதா அல்லது ‘அசிரத்தையென்று’ சொல்லி முடித்துக்கொள்வதா என்கிற குழப்பம் வேறு. நிலமைக்குத் தகுந்தவாறு, பேசவும், செயல்படவும் ஆன்(Anee) வல்லவள் என்பதும் தெரிந்ததுதான். தவிர உண்மையிலேயே ‘சிரிலு’க்காக நான் வருந்துவதாகயிருந்தால், ‘ஆன்’ இந்த அளவிற்கு என்மீது அக்கறை காட்டுவாளா என்கிற சந்தேகமும் நிறைய இருந்தது.

அம்மாதிரியான சூழ்நிலையில், நடப்பது நடக்கட்டுமென நானுமிருந்தேன். எதிர்பார்த்ததுபோல சிரில்-எல்ஸா ஜோடியைக் கண்டு அப்பாவுக்கு பொறாமையேதுமில்லை என்பதை அவரிடத்தில் பேசித்தெரிந்துகொண்டேன். சொல்லப்போனால் என் தகப்பனாருக்கு ‘ஆன்’மீதுள்ள பிரியத்தை நடந்தசம்பவங்கள் உறுதிபடுத்தியதோடு, என்னுடைய திட்டங்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பதையும் புரியவைத்தன. ஒருநாள் எனது தகப்பனாருடன் அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. ‘எல்ஸா’வும் எதிர்பாராதவிதமாக அங்கு வந்திருந்தாள். எங்களைப் பார்த்தும் பார்க்காதவள்போல இருந்தாள். எனது தகப்பனாரோ, அறிமுகமில்லாத பெண்ணொருத்தியைப் பார்த்து வியப்பதைப்போல, அவள் பக்கம் திரும்பியவர், மெல்ல சீழ்க்கையடித்தபடி:

” – என்னமா மாறிட்டா இந்த எல்ஸா!- என வியந்தார்.

– அவளை மாத்தினதுக்கு காதலைத்தவிர வேறு காரணங்களேது? – நான்

அவரது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

– ஆக உனக்கு, அந்தப் பையன் கிடைக்கலைங்கிற வருத்தமெல்லாம் இல்லைண்ணு சொல்லு…

– இதிலே, நான் வருத்தப்பட என்ன இருக்கு? ரெண்டுபேருக்கும் கிட்டத்தட்ட ஒரேவயது, அதனாலே பிரச்சினைகள் குறைவு, ஒத்துப்போகும்.

– ஆன்னை(Anne) அவன் காதலிக்கவில்லை, பிரச்சினைகளும் இல்லை, அப்படித்தானே?” –

என் தகப்பனார் முகம் சிவந்திருந்தது.

” – நான் ஒருத்தியை வேண்டாமென்றுசொன்னால், அவளை அந்த ராஸ்கல், தன்னுடையவளாக மாற்றிக்கொள்ள நியாயமுண்டு என்பதுதான் உன்னோட எண்ணம்…

– இல்லை. காதல் விஷயத்தில் வயதுக்கும் பங்கிருக்கிறதென்று சொல்லவந்தேன்…

அப்பா தோளைக்குலுக்கியவர், அமைதியானர். வழியில் எதையோ சிந்தித்தபடி வந்தார்: எல்ஸா(Elsa)வுக்கும் சிரிலுக்கும்(Cyril) வயதிலுள்ள ஒற்றுமையும், அடுத்து, வயதுகேற்றப் பெண்ணை மணக்கவிருப்பதன் மூலம், தன்வயது ஆண்வர்க்கத்தோடு ஒத்துபோகக்கூடும் என்பது மாதிரியான எண்ணங்களும் அநேகமாக மனதிலிருக்கலாம். இந்த விஷயத்தில் தனிப்பட்ட வகையில் நானும் ஜெயித்திருக்கிறேன். ஆன்(Anne) விழியோரங்களில் தெரிந்த வரிகளையும், அதரங்களையொட்டித் தெரிந்த சுருக்கங்களையும் பார்க்க, மனதுக்கு வேதனையாகவும் இருந்தது. என்னசெய்வது, மனம்போன போக்கில் போவதும் பின்னர் அதற்காக வருந்துவதும், எனக்குப் பழகிவிட்டது.

ஒருவாரம் கழிந்திருந்தது. ‘சிரிலும்(Cyril), எல்சாவும்(Elsa)வும் தங்கள் பிரச்சினைகளின் போக்கைப்பற்றி எதுவும் அறியாமல் ஒவ்வொரு நாளும் எனக்காக காத்திருந்தார்கள். அவர்களிடத்திற் சென்றால் யோசனைகள் அல்லது திட்டங்கள் என்ற பேரில் எனது வாயைக்கிளறினால், என்னாலும் சும்மாஇருக்கமுடியாது, எதையாவது உளறிவிடக்கூடுமென்கிற பயத்தில் நானும் போகாமலிருந்தேன். தவிர மதியவேளைகளில் தேர்வுக்குப் படிக்கிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டு எனது அறைக்குச்சென்று கதவை அடைத்துக்கொள்வதுண்டு. உண்மையில் சும்மாதானிருந்தேன். யோகா சம்பந்தப்பட்டப் புத்தகமொன்று கிடைக்க, மிகுந்த அக்கறையோடு அதில் எழுதியிருந்தபடி செய்து பார்த்தேன். அதன்படி சில நேரங்களில் தன்னந்தனியே சிரிக்கவேண்டியிருக்கும், சிரிப்பேன் ஆனால் ஆன்னுக்குக் கேட்குமோவென்று சத்தம்போடாமல் முடிந்தமட்டும் அமைதியாகத்தான் சிரிப்பது வழக்கம். அவளிடத்தில் கடுமையாக உழைக்கிறேன் என்று கூறினேன். காதலில் நான் அடைந்துள்ள தோல்வியை, பெற இருக்கிற பட்டம் சரிகட்டிவிடும் என்கிற நம்பிக்கையில் உழைப்பதுபோல அவளிடம் நடந்துகொண்டேன். ‘ஆன்’னுக்கும் என்மீது ஒருவித நல்ல அபிப்ராயம் வந்திருப்பதுபோல தெரிந்தது. உணவின்போது ‘காண்ட்(Kant)’டைப்பற்றியெல்லாங்கூட பேசப்போக, இத்தனைதூரம் நான் போவென்று அப்பா எதிர்பார்க்கவில்லைபோலிருக்கிறது, அவரது முகத்தில் ஏமாற்றம்.

ஒரு நாள் மதியத்துக்குப்பிறகு, இந்துமத சாது போல ஒரு பெரிய துண்டை உடலிற் சுற்றிக்கொண்டேன். வலதுகாலைத் தூக்கி இடது தொடைமீது போட்டுக்கொண்டு கண்ணாடியை வெறித்து பார்த்தபடி அமர்ந்தேன். எனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக இதை நான் செய்யவில்லை, ஆனாலும் ஒரு பெரிய இந்துமதச் யோகி என்கிற கற்பனையில் மூழ்கியிருந்து உண்மை. அந்த நேரத்தில், அறைக் கதவை யாரோ தட்டினார்கள். பணிப்பெண்தான் கதவைத் தட்டுகிறாள் என்று முதலில் நினைத்தேன், ஏனெனில் கொஞ்சநாட்களாக எதற்கும் கவலைப்படாதவளாக அவளிருந்தாள். உள்ளே வரலாமென்று சத்தபோட்டேன்.

வந்திருந்தது ஆன். நானிருந்த கோலத்தை பார்த்துவிட்டு ஒருவிநாடி அசந்துபோய்நின்றாள், கதவருகே நின்றபடி என்னைபார்த்துவிட்டு சிரிக்கிறாள்.

” இதென்ன விளையாட்டு?

– இதுக்குப்பேருதான் யோகா. இது விளையாட்டு அல்ல. இந்துக்கள் தத்துவமுறைகளில் ஒன்று”

மேசையை நெருங்கியவள், என்னுடைய புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள். எனக்கு பயம். திறந்திருந்தது நூறாவதுபக்கம், மற்ற பக்கங்களில் ‘அசாத்தியமானது’, ‘கடினம்’, என்றெல்லாம் நிறைய கிறுக்கியிருந்தேன்.

” – மிகுந்த அக்கறையோட படிக்கிறாய் என்றுதான் நினக்கிறேன். ஆனால் பஸ்காலை(Pascal)(1)ப் பத்தின கட்டுரை குறித்து நிறைய பேசிக்கொண்டிருந்தாயே, என்ன நடந்தது?”

உண்மை. உணவின்போது, எனது சிந்தனை முழுதும் பஸ்காலுடைய வாக்கியமொன்றில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக நிறைய படித்துக் கட்டுரையொன்று எழுதவிருப்பதாகவும் கதைவிட்டிருந்தேன். உண்மையில் இதுவரை ஒரே ஒரு சொல்லைக்கூட அதற்கென்று எழுத ஆரம்பிக்கவில்லை. ஆன்னுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் விழித்துகொண்டு நிற்க, அவளுக்குப் புரிந்துவிட்டது.

” – நீ ஒழுங்காக படி அல்லது படிக்காம, கண்ணாடிமுன்னால நின்றுகொண்டு எதையாவது பண்ணு, அது உன்னுடைய சொந்த விவகாரம். ஆனால் என்னை, உன் தகப்பனாரை, மற்றவர்களை, ஏமாற்றவென்று நிறைய பொய்களைச்சொல்லி, சந்தோஷப்படறபாரு, அதை நினைச்சாதான், எரிச்சல் வருது. தவிர இப்பவெல்லாம் ஏதோ ரொம்ப புத்திசாலி மாதிரி நீ நடந்துகொள்வதைப் பார்க்க நம்ப முடியலை…”

அவள் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் துவாலையுடன் பிரமை பிடித்தவள் போல நிற்கிறேன். என்னை பொய்காரியென்று எதற்காகசொல்லவேண்டும். நான் கட்டுரை அது இதுவென்று பேசியதெல்லாம் ஒருவகையில் அவளை சந்தோஷப்படுத்தவென்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம், மாறாக சட்டென்று என்னை நிந்தித்திருந்தாள். என் விடயத்தில் அவள் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் ஓரளவுக்கு எனக்குப் பழகிவிட்டிருந்தன. தவிர அவளது வரம்பு மீறிய அமைதியும், என்னை சதா நிந்திக்கிற அவளது மனோபாவமும், கோபமூட்டியது. நான் போட்டிருந்த வேடத்தைக் கலைத்துக்கொண்டு, ஒரு நீண்ட கால் சராயையும், கிடைத்த பழைய சட்டையையும் அணிந்தவள் வெளியே ஓடினேன். வெளியே வெயில் கடுமையாக இருந்தது, எனினும் பொருட்படுத்தாமல் ஓடினேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்ன நினைப்பார்களென்று கூட யோசிக்காமல், பித்து பிடித்தள்போல சிரிலுடைய(Cyril) ‘வில்லா’வரை ஓடியவள், வாயிற்படியில் நின்று மூச்சுவாங்கிக்கொண்டேன். பின்னேரத்து வெப்பத்தில் குடியிருப்புகளில் ஒர் இனம்புரியாத நிசப்தம், மர்மம், ஏதோ அடுக்கடுக்கான ரகசியங்களை உள்ளடக்கியதுபோல. ஒரு முறை அவனது அம்மாவைப்பார்க்கவென்று வந்தபோது, சிரில்(Cyril) தனது அறையைக் காட்டியிருந்ததை ஞாபகப் படுத்திக்கொண்டு, அங்கே சென்றேன். கதவைத் திறந்தேன், கட்டிலில் குறுக்காக சிரில் தூங்கிக் கொண்டிருந்தான், முழங்கையில் தலையிருந்தது. ஒரிரு நிமிடங்கள் அவனைப் பார்த்திருப்பேன். முதன் முதலாக எனது மனதை நெகிழவைத்தான், தேவைகளை நிறைவேற்றக்கூடியவனென்று மனம் நம்பியது. மெல்ல அழைத்தேன். கண்திறந்துபார்த்தவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

” – நீயா? எப்படி இங்கே?…”

சத்தம்போடாதே என்பதுபோல கையை அசைத்து சைகை செய்தேன். அவள் அம்மா இங்கே வர நேர்ந்தால், தன்னுடைய மகன் அறையில் என்னை பார்க்க நேர்ந்தால் அசம்பாவிதமாக எதையாகிலும் கற்பனை செய்யக்கூடும் என்கிற பயம்… தவிர எதைச் சொன்னாலும் இந்த நிலையில் அவள் நம்பவும் போவதில்லை, புறப்பட எத்தனித்து கதவருகே சென்றேன்.

” ஏய்…செஸில்(Cecil) எங்கப் போற? பக்கத்தில் வா.”, சிரில்(Cyril) சத்தம்போடுகிறான்.

சிரித்தபடி எட்டி எனது கையைப் பிடித்தவன், விடாமலிருந்தான். திரும்பி அவனைப் பார்த்தேன். அவனது முகம் சற்றே வெளுத்திருந்தது என்னுடைய நிலைமையும் அதுதான். பிடித்திருந்த கையைத் தளர்த்தினான். நோக்கம் என்னை முழுவதுமாக அவனது கைகளில்வாங்கிக் கொள்வதாய் இருந்திருக்கவேண்டும். அதுதான் நடந்தது. என்னை அவன்பக்கமாய் இழுத்துக்கொண்டான். எனது மனம் ஒரு நிலையிலில்லை. ‘ஏதோ நடக்கப் போகிறது, ஏதோ நடக்கப்போகிறதென’, மனம் எச்சரிக்கிறது.. பிறகென்ன? காதல் விளையாட்டுகள்.. இருந்த அச்சங்கள் இச்சைகளாக உருவெடுத்தன..ஒரு வித வாத்சல்யம், வெறி, கடுமையான வேதனைகள்..இறுதியில் எதையோ வென்றுவிட்ட எக்காளம், பரவசம். அன்றையதினம், நான் அதிர்ஷ்ட்டக்காரி என்பதும், ‘சிரில்’லிடத்திலும் நான் எதிர்பார்த்த சுகம் உண்டென்பதும், நீருபணமாகியிருந்தன.

அவனருகே பிரக்ஞையற்றவளாய், பிரம்மித்து, ஒருமணி நேரம் அளவிற்கு இருந்திருப்பேன். காதலையும் ஒருவித விளையாட்டென்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவரை நானும் எனது வயது காரணமாக சிறுபிள்ளைத்தனமாக அப்படித்தான் பேசிவந்திருக்கிறேன், இனி ஒருபோதும் எடுத்தேன் கவிழ்த்தேனென்று என்பாட்டுக்கு எதையாவது சொல்லிவிடக்கூடாது. ‘சிரில்’ என் மீது சாய்ந்திருந்தான். என்னை மணம் செய்துக்கொள்ளபோவதாகவும், வாழ்க்கை முழுதும் பிரியாமலிருக்கப் போவதாகவும் கூறினான். எனது அமைதி அவனுக்குக் கோபத்தைத் தந்தது: நிமிர்ந்து உட்கார்ந்தேன், நேராக அவனைப்பார்த்து, “எனது அன்புக் காதலா”, என்று அழைத்தேன். அவன் எனக்காய் சாய்ந்தான், மெல்லக் குனிந்து துடிக்கும் நெஞ்சில் எனது இதழிரண்டையும் அழுந்தப் பதித்தேன், “சிரில்.. என் அன்பே.. முனகினேன். உண்மையிலேயே அந்த நேரம் அவனை நேசித்தேனா என்று கேட்டால், என்னிடத்தில் அதற்குப் பதிலில்லை. காரணம் இந்தக் காதல் விவகாரங்களில் எனக்குத் திடமான சிந்தை ஒருபோதும் கிடையாது. தவிர என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் வேறுமாதிரியான அபிப்ராயங்கள்தான் உதிக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில் அவன் மீது எனக்கெழுந்த காதலைப்பார்க்க எனக்கே சற்று அதிகமாகப்பட்டது, அவனுக்காக எனது உயிரைக் கொடுக்கவும் சம்மதித்திருப்பேன். நான் புறப்பட்டபோது, அவனை நினைத்து நான் வருந்தினேனா, என்று அவன் கேட்கவும், எனக்குச் சிரிப்பு.

ஊசியிலைத் தோப்பு வழியாக மீண்டும் எனது ஜாகைக்குத் திரும்பியபொழுது, மிகவும் களைத்து, மயக்க நிலையிலிருந்தேன். முன்னதாக ‘துணைக்கு வரட்டுமா?’ என சிரில் கேட்டபோது, வேண்டாமென்று மறுத்திருந்தேன். வேறு வினையே வேண்டாம். முகத்திலோ சற்றுமுன் அனுபவித்த பரவசத்தின் சுவடுகள், கனத்திருக்கும் உதடுகள், கண்ணிற் தெரிகிற சோர்வு, இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சரீரம், ஆக எவரேனும் பார்க்க நேர்ந்தால் ஆபத்து இன்னமும் முற்றாக நீங்கவில்லையென்றுதான் சொல்லவேண்டும். வீட்டுக்கு முன்பாக, பெரிய நாற்காலியொன்றில் அமர்ந்தபடி ‘ஆன்’ புத்தகமொன்றை வாசித்தபடியிருந்தாள். ‘எங்கே போயிருந்தாய்?’ எனக் கேட்டால், பதில் சொல்வதெற்கென்று அழகாய் இரண்டு பொய்களை யோசித்து வைத்திருந்தேன், நல்லவேளை அவளிடத்தில் கேள்விகளேதுமில்லை. எப்போது கேட்டாள் இப்போது கேட்பதற்கு. எனக்கும் அவளுக்கும் சிலமணி நேரங்களுக்கு முன்னதாக வீட்டில் நடந்த பிரச்சினைகள் நினைவுக்கு வர, அமைதியாய்ச் சென்று அவளருகே உட்கார்ந்தேன். எனது சுவாசம், எனது விரல்களின் அசைவுகளென கவனத்தைச்செலுத்தியபடி விழிகளை இறுக மூடியவண்ணம் அமைதியாக இருந்தேன். இடைக்கிடை சிரிலுடைய சரீரமும், அதனையொட்டிய மறக்க முடியாத தருணங்களும் எண்ணத்தில் குறுக்கிட்டன.

மேசைமீதிருந்த சிகரெட்டொன்றை எடுத்து, தீக்குச்சியை உரசுகிறேன், சட்டென்று அணைந்து போகிறது. அடுத்து இன்னொரு தீக்குச்சியை எடுத்து, கவனத்துடன் உரசுகிறேன். நல்லவேளை காற்று இல்லை, மாறாக கை நடுங்குகிறது. எரிந்துகொண்டிருந்த தீக்குச்சி சிகரெட்டை நெருங்கியதும், காத்திருந்ததுபோல பழையபடி அணைந்துவிட்டது. முனகிக்கொண்டே மூன்றாவதாக ஒரு தீக்குச்சியை எடுக்கிறேன். ஏனென்று தெரியவில்லை, தீக்குச்சியும் – அதனைப் பத்தவைப்பதும், அப்போதைக்கு மிகமிக முக்கியமான காரியமாக தோன்றியது. ஒருவேளை பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆன், தனது அசிரத்தை மனப்பான்மையைக் கைவிட்டுவிட்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு என்னைக் கண்காணித்தது காரணமாக இருக்கலாம். அதனால்தானோ என்னவோ, சட்டென்று காலத்தையும், இதர காட்சிகளையும் துரத்திவிட்டு, ‘தீக்குச்சியும், அதிற்படிந்திருந்த எனது விரல்களும், சாம்பல்நிற தீப்பெட்டியும், ஆன்னுடைய கண்களும்’ ஆக்ரமித்துக்கொள்கின்றன. எனது இதயத்தின்வேகம் இருமடங்காகியிருந்தது, தாவிக்குதிக்கிறது. விரலிடுக்கில் சிக்கியத் தீக்குச்சி, தீப்பெட்டியில் உரச, சட்டென்று ஜுவாலை, தாமதமின்றி, வாயிலுள்ள சிகரெட்டை அதனிடத்திற் கொண்டுபோகிறேன், சிகரெட் தீக்குச்சியின் ஜுவாலையை நெருங்கியதும் மீண்டும் அணைந்து போனது. தீப்பெட்டியைத் தரையிலெறிந்துவிட்டு, விழிகளை இறுக மூடிக்கொண்டேன். எதற்காக இந்த நாடகமெல்லாம் என்பதுபோல, தீட்சண்யத்துடனான ஆன்னுடைய பார்வை என்மீது படிந்திருப்பதையும் உணரமுடிந்தது. ஒருவிதமான காத்திருப்பு, புரியாத நிலை, யாரேனும் இதை முடிவுக்குக் கொண்டுவரக்கூடாதா? மனம் தவிக்கிறது. எனது முகம் இப்போது ஆன்னுடைய கைகளில், மெல்ல முகத்தை உயர்த்துகிறாள், எனது பார்வையை அவள் சந்தித்துவிடக்கூடாதே என்கிற பயத்தில், ஒருவித எச்சரிக்கையுடன் கண்களை மூடியபடி நான் இருக்கிறேன். சோர்வும், துர்க்குணமும், சந்தோஷமும், என்னிடமிருந்து விடுதலை பெற தீர்மானித்தவைபோல, மெல்ல மெல்ல கண்ணீர்த் துளிகளாய் அரும்புகின்றன. வழக்கமான உதாசீனத்துடன் ஒருவகை அலட்சியமனோபாவத்துடனும், இன்னொருவகையில் சமாதானபடுத்துவதுபோலவும், தனது கைகளை மெல்ல தாழ்த்தி, எனது முகத்திலிருந்து பின்னர் விடுவித்துக்கொள்கிறாள். அடுத்து சிகரெட் ஒன்றினை பத்தவைத்து என் வாயிற் செருகியவள், வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தினை மீண்டும் தொடர்ந்தாள்.

அவளது இந்த செயல்பாட்டுக்கு சரியானப் பொருளை உணர்த்தவேண்டுமென்று தீர்மானித்த நான், அப்படியே செய்யவும் செய்தேன். ஆனால் இன்றைக்கும் எப்போதாவது தீக்குச்சி விஷயத்தில் தவறுகிறபோது, மறக்கமுடியாத அந்தத் தருணம் நெஞ்சை உறுத்துகிறது, எனக்கும், எனது செய்கைக்கும் இடையிருந்த பிளவுகள், ஆன்னுடைய கடுமையான பார்வை அதைச் சுற்றியிருந்த சூன்யம், அச் சூன்யத்துக்குரிய உக்கிரம், ரௌத்திரம்…
, ————————————————————–
1. Blaise Pascal (1623 – 1662), பிரெஞ்சு கணக்கியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 9

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மறுநாள் சிரிலுடைய(Cyril) வில்லாவின் திசைக்காய் சென்றபோது, புத்திசாலிகளுக்கான மொழியில் சொல்வதென்றால், எனக்கே என்மீது நம்பிக்கை இல்லை. என்னுடைய, இந்தப் புதிய மாற்றத்தைக் கொண்டாடும் விதமாக, நேற்றையஇரவு, உணவின்போது கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தேன், மனதில் வழக்கத்திற்கு மாறான குதூகலம். என் தகப்பனாரிடத்தில் இலக்கியத்தில் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்றும்; மெத்தபடித்தவர்களோடு மாத்திரமே இனிப் பழகுவேனென்றும்; பலரும் புகழும் அளவிற்கு உயர்வதோடு, எல்லா அறிவுஜீவிகளையும் போலவே பிறருக்குத் தலைவலியாக இருக்கும் எண்ணமும், நிறைய உண்டென்று கூறினேன். என்ன செய்வது, அப்பாவென்றாலும் இப்புதிய அவதாரத்தைச் சரியாய்த் தொடங்க, அதற்குண்டான விளம்பர தந்திரங்களையும், காட்சிகளையும் அரங்கேற்றத்தானே வேண்டும்?இருவருமாக அபத்தமான சங்கதிகளைப் பறிமாறிக்கொண்டோம், கைகொட்டி ஆரவாரம் செய்தோம். ஆன்னும்(Anne) எங்களுடன் சேர்ந்துகொண்டு சிரித்தாள், அதில் அடக்கமிருந்தது. சிலவேளைகளில் அவள் சிரித்திருப்பாளா என்றே சந்தேகம், என்னுடைய புதிய அவதாரத்தின்படி இலக்கியம், எளிமை, அடக்கமென்று பேசுவதற்கு ஏராளமாகச் சங்கதிகள் இருந்தன. அப்பா தனது சந்தோஷத்தை வெளிப்படையாகவேக் காட்டிக்கொண்டார், முன்புபோலவே அர்த்தமற்று ஆட்டம்போட்டோம், நடப்பவற்றை வேடிக்கைபார்த்தபடி ஆன்(Anne) அமைதியாக இருந்தாள். கடைசியில், ஆன்னும்(Anne) அப்பாவுமாக என்னைப் படுக்கச்செய்து, போர்த்திவிட்டார்கள். மனம் நெகிழ்ந்துபோனது. இரண்டுபேருக்கும் ‘நன்றி’ சொன்னவள், “நீங்களிருவரும் இல்லையெனில் தனியொருத்தியாக என்னால் என்ன செய்யமுடியும்?”, என்று கேட்டேன். அப்பாவிடத்தில் பதிலில்லை. மாறாக ஆன்(Anne) திட்டவட்டமான யோசனையொன்றை வைத்திருப்பவள்போல முகத்தைக் காட்டினாள். அதனை எனக்குச் சொல்லவேண்டுமென்று கேட்டேன், மெல்லக் குனிந்தாள், பிறகு என்ன நடந்ததென்று ஞாபகமில்லை, உறங்கிப்போனேன். நடுநிசியில் விழித்துக்கொண்டேன், மனதில் மீண்டும் குழப்பம், அதற்கு முன்பு அப்படியொரு மோசமான விழிப்பனுவத்தை அறிந்ததில்லையென்றுகூட சொல்லலாம்… ஏதேதோ சிந்தனைகள், மனதிற் தயக்கம், காலை நேர கடலையும், ஆரவாரமிடும் கடற்பறவைகளையும் அலட்சியம் செய்துவிட்டு, ஊசியிலைமரங்கள் தோப்பிற்காய் இறங்கி நடந்தேன்.

சிரில்(Cyril)தோட்டத்துக்குப் போகும் வாயிலில் நின்றுகொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடிவந்தவன், கைகளில் வாங்கிக்கொண்டான், இறுகத் தழுவியவன், உளர ஆரம்பித்தான்:

“- அன்பே.. உன்னைப் பத்தின கவலைகள்தான் எனக்கு…வெகு நாட்களாகவே…அந்தப் பொம்பளை இப்படி வேதனைபடுத்தற அளவுக்கு, என்ன தப்பு செஞ்ச?… இந்தப்பிரச்சினை என்னையும் வாட்டுமென்று நான் நினைக்கலை… மதியத்திற்குப் பிறகு, ஒவ்வொருநாளும் எத்தனை முறை, கடலருகே உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறேன், தெரியுமா? என்னாலேயே நம்பமுடியலை, அந்த அளவிற்கு உன்னை நேசிக்கிறேன்.

– நான் கூட”, ஆமோதித்தேன்.

உண்மையில், சிரிலுடையப்(Cyril) பேச்சு வியப்பாக மாத்திரமல்ல, என் மனதையும் தொட்டது. அவனது மனவேதனைகளுக்கு, நானே காரணம் என்பதை நினைத்தும், உணர்வுகளை அவனிடத்தில் வெளிபடுத்தத் தெரியாமலும், வருந்தினேன்.

” – என்ன முகமெல்லாம் இப்படி வெளுத்திருக்கு, உன்னைப் பத்திரமா பார்த்துக்க வேண்டியது என்பொறுப்பு. இனியும் உன்னை பிறர் இம்சிக்க என்னால் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியாது,” – சிரில்.

இத்தனை கூத்துக்கும் எல்ஸா(Elsa)தான் காரணமென்பதை புரிந்துகொண்டு, மனதிற்குள் அவளைப் பாராட்டினேன். சிரிலுடைய அம்மா, எல்ஸாவைப்(Elsa) பத்தி என்ன நினைக்கிறார்களென்று, அவனிடம் கேட்டேன்.

“- எல்ஸாவை(Elsa) எனது தோழியென்றும், உறவென்று சொல்லிக்கொள்ள அவளுக்கு எவருமில்லையென்றும், அம்மாவிடம் அறிமுகம் செய்தேன். தவிர, எல்ஸா(Elsa)விடத்திலும் குறைசொல்ல என்ன இருக்கிறது? அந்தப் பொம்பளையைப் பத்தின உண்மைகளை ஒன்றுவிடாமற் சொன்னவளும் அவள்தான். ஆன்(Anne)முகத்தில்தான் எத்தனை மென்மை, தவிர பெரிய இடத்துத் பெண்மணி மாதிரியானத் தோற்றம், கடைசியில் நடத்தையைப் பார்..எவ்வளவு கேவலம்? நம்ப முடிகிறதா?.

– ‘எல்ஸா(Elsa), ரொம்பவும் மிகைபடுத்தியிருக்கிறாள்’, குரலில் சுரத்தில்லாமல் சொன்னேன். அவளிடத்தில் உண்மையில் நான் என்ன சொல்லணும்னு நினைசேன்னா…

சிரில் சட்டென்று குறுக்கிட்டான்.

– உங்கிட்ட, நான் சொல்றதுக்கும் விஷயங்கள் இருக்கு. செசில், உன்னை, கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு ஆசை.”

எதிர்பார்த்ததென்றாலும், இப்படிப் போட்டு உடைப்பானென்று நினைக்கவில்லை. மனம் கலவரப்பட்டது. எதாவது செய்தாகவேண்டும், சொல்லவேண்டும்..தலைசுற்றுகிறது…

” உன்னைக் காதலிக்கிறேன்”, காதில் முணுமுணுக்கிறான். “சட்டப் படிப்பை தொடர்ந்து படிக்கப்போறதில்லை, எனக்கென்று ஒரு நல்ல வேலை காத்திருக்கிறது, என்னோட உறவினரொருத்தர்.. ஏற்பாடு செஞ்சிருக்கிறார். இப்ப வயசு எனக்கு இருபத்தாறு, நானொன்றும் சின்னப் பையனில்லை. ஏதோ வேடிக்கைக்காக இத்தனையும் சொல்றேண்ணு, நீ நினைக்கக் கூடாது. புரியுதா? உன்னுடைய பதிலுக்காகத்தான் காத்திருக்கிறேன், என்ன சொல்ற?”

அவனை எப்படி சாமாளிப்பதென்கிற குழப்பம். அவனை மணம் செய்துகொள்ளணுங்கிற விருப்பமெதுவும் எனக்கில்லை. அவனைப் பிடித்திருந்தது, நேசிக்கவும் செய்தேன், அதற்காக கணவன் மனைவியாகணுமென்றால் எப்படி? அவனென்றில்லை, வேறொருத்த¨னைக்கூட மணம் செய்துகொள்கிற எண்ணமெல்லாம் இல்லை. வாழ்க்கை எனக்கு அலுத்திருந்தது.

” சிரில்.. அவசரப்படாதே, அது முடியாது”,… வார்த்தைகள் குழறின, தடுமாற்றத்துடன் பேசினேன்.

“- என்ன?… உங்க அப்பாவை நினைச்சு பயமா? விடு, உனக்கேன் அந்த கவலை. நான் பார்த்துக்கிறேன்,- சிரில்.

– இப்போ பிரச்சினை அப்பாவல்ல.. ஆன்(Anne). அவள்தான் பிரச்சினை. அவள் இதை விரும்பமாட்டாள். அவளைப் பொறுத்தவரை, நான் சின்னப்பாப்பா.. பெரியவளல்ல. அவள் சம்மதமில்லாமல் ஒன்றும் நடவாது,. நாளைக்கு அவள் முடியாதென்றால், அப்பாவும் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டுவார். என்னால முடியலை சிரில், மனசு கிடந்து தவிக்குது, கொஞ்சம் எங்கேயாவது உட்கார்ந்து பேசலாமா?…அங்கே நிற்கிறது.. எல்ஸாதானே …”

எல்ஸா, வீட்டுக்குள் அணிகின்ற கவுனில் அறையிலிருந்து இறங்கிவந்திருந்தாள், களையாகவும் பளிச்சென்றுமிருந்தாள். நான் மெலிந்தும் சோர்ந்துமிருந்தேன். அவர்களிருவருமே பார்வைக்குத் துலக்கமாக, உணர்ச்சியின் விளிம்பில், சந்தோஷ மனோபாவத்துடனிருக்க, என்னிடத்தில் ஆகச் சோர்வு. அப்போதுதான் ஏதோ சிறைவாழ்க்கையிலிருந்து மீண்டிருப்பதைப்போல. என்னை, உட்காருமாறு எல்ஸா(Elsa) கரிசனத்தோடு பணித்தாள்.

” – ரெமோன்(Raymond) எப்படி இருக்கிறார்? நான் வந்திருப்பது அவருக்குத் தெரியுமில்லே?”- எல்ஸா.

நடந்ததை மன்னித்தும், நடக்கவிருப்பதை நினைத்தும், அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையில் மகிழ்ச்சியின் சாயலிருந்தது. அவளிடத்தில், ‘அப்பாவுக்கு உன்னை மணம்செய்ய விருப்பமில்லை’யென்றோ, அவனிடத்தில், எனக்கு உன்னை மணம் செய்துகொள்கிற எண்னமில்லை’யென்றோ சொல்லமுடியாது. நான் கண்களை மூடி அமைதியாகவிருந்தேன் சிரில்(Cyril) காப்பி கொண்டுவரச் சென்றான். எல்ஸா, நிறுத்தாமற் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு நான் புத்திசாலியென்கிற நினைப்பு, என்னிடத்தில் அதீத நம்பிக்கை. சிரில் கொண்டுவந்திருந்த காப்பியில் தூள் அதிகம், நல்ல வாசம். காய்ந்துகொண்டிருந்த சூரியனால், மனதிற்கு தெம்புகிடத்திருந்தது.

” – நானும் பலவகைகளில் யோசித்துபார்த்துட்டேன், சரியான வழி புலப்படலை- எல்ஸா.

– ஏது? வழி, இருந்தால்தானே கிடைக்கும். அந்தப்பெண்மணிமேல அந்த ஆளுக்கு அப்படியொரு பித்து, அவளும் நல்லா வசியம்பண்ணிவச்சிருக்கிறா, நாம செய்வதற்கு இதுலே ஒன்றுமில்லை..

– இருக்கு.. அதற்கு வழியிருக்கு. உங்களுக்குதான் அதைபற்றிய ஞானம் போதாது”, – நான்

எதிரிலிருந்த இருவரும் பவ்யமாக, நான் சொல்வதைக் காதுகொடுத்துக்கேட்பதைப் பார்க்க, எனக்குப் பெருமையாக இருந்தது. இரண்டுபேருக்குமே என்னைக் காட்டிலும் பத்து ஆண்டுகள் வயதில் அதிகம், இருக்கட்டுமே, என் அளவிற்கு யோசிக்கத் தெரியவில்லை என்கிறபோது வயது முக்கியமா என்ன? சட்டென்று சர்வசுதந்திரமும் கிடைக்கப்பெற்றவள்போலப் பேசத் தொடங்கினேன்.

” உளவியல் ரீதியில் இதை நாம அணுகவேண்டும்.”, – நான்.

அதிக நேரமெடுத்துக்கொண்டு, எனது திட்டத்தை விளக்கமாக அவர்களிடம் சொன்னேன். முன்தினம் எப்படியெல்லாம் நான் விவாதித்திருந்தேனோ, அவற்றையே அவர்களிடத்தில் திரும்பவும் கேட்க நேர்ந்தது. அவர்கள் எழுப்பிய மறுப்புகளை வலுவிழக்கசெய்ய முயன்று திருப்திபட்டுக்கொண்டேன்- ஒருவகையில் செலவில்லாமல் கிடைத்த மகிழ்ச்சி, ஆனாலும் அவர்களிருவரையும் எனது கருத்துக்கு இணங்கவைப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. ”தாராளமாக நம்மால் அவர்களுக்கு எதிராக செயல்படமுடியும்’ என்றேன். ஆனால் அத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் எண்ணமெதுவும் அப்போதைக்கு மனதில் சுத்தமாக இல்லை, ‘சிரிலி’டமும், ‘எல்ஸா’விடமும், எனது தயக்கத்தைச் சொல்ல நினைத்தபோதும், அதற்குச் சரியான காரணங்களை வைக்கவேண்டுமே என்பதாற் குழப்பமிருந்தது.

“- எனக்கென்னவோ நீ சொல்றதெதுவும் சரியாப் படலை. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இதைத் தவிற வேறுவழிகளில்லையென்பதால், ஏற்கிறேன்.

– நான் என்ன சொல்லவறேன்னா, நடந்தவற்றுக்கு ஆன்(Anne) மாத்திரம் பொறுப்பல்ல என்கிறேன் – நான்.
– என்ன நடக்குமென்று உனக்கு நன்றாகவேத் தெரியும், அவள் உங்கள் குடும்பத்திலொருவளென்றாள், நாளைக்கு அவள் யாரைக் கை காட்டுகிறாளோ, அவனைத்தான் நீ, கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிவரும்.” -எல்ஸா.

அப்படியும் நடக்கலாம். என் கண்முன்னே காட்சிகள் விரிந்தன, எனது இருபதாவது பிறந்ததினம், ஆன்(Anne) இளைஞன் ஒருவனை அழைத்துவருகிறாள்:அநேகமாகப் பட்டதாரி இளைஞன், பிரகாசமான எதிர்காலமுள்ள பையன், அதிபுத்திசாலி, கட்டுடல், பரஸ்பர புரிந்துணர்வுகளுக்குச் சொந்தக்காரன்.. இத்யாதி இத்யாதி அமசங்களுடன், ஓரளவிற்கு ‘சிரிலை'(Cyril)யொத்து…. கலகலவென்று சிரித்தேன்.

” – தயவு செய்து சிரிக்காதே… இதொன்றும் சிரிக்கிற விஷயமல்ல. சொல்லு.. எல்சாவை(Elsa)க் காதலிப்பதுபோல நடித்தால் உனது மனசுக்குப் பொறுக்குமா? இந்தமாதிரி திட்டத்தையெல்லாம், எப்படியுன்னால யோசிக்க முடியுது. என்னை நீ காதலிப்பது உண்மைதானே?”

சிரில்(Cyril) குரலைத் தாழ்த்திப் பேசினான். புரிந்துகொண்டவள்போல ‘எல்ஸா’ விலகியிருந்தாள். பழுப்பு நிறம், கண்களில் சோர்வு, நிறைய ஏக்கமென்றிருந்த அவனது முகத்தை ஏறிட்டு நோக்கினேன். அவன் என்னை காதலிக்கிறான், உண்மை. ஒர் வித்தியாசமான உணர்வை அது எனக்குக் கொடுத்தது. அவனது வாய், உயிர்ப்புள்ள உதடுகள், அத்தனை நெருக்கத்தில்… எனது அறிவுஜீவி மனப்பான்மை சட்டென்று விலகிக்கொண்டது. மெல்ல என்மீது இறங்கிய அவனது முகம், எனது அதரங்கள் இடம்பார்த்து அமர்ந்தது, தாங்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை இருதரப்பு அதரங்களும் புரிந்துகொண்டிருக்கவேண்டும். விழிகள் மலர, வேர்பிடித்தவள்போல, அசையாமல் அமர்ந்திருக்கிறேன், அசைவற்று அவனது அதரங்கள் எனது அதரங்களோடு பொருந்தின, வெப்பம் குறைந்திராத தடித்த உதடுகள், அவற்றின் குறும்பயணத்தில் மெல்லிய அதிர்வு, முடிவுக்குக் கொண்டுவர நினைத்ததைப்போல, அழுந்தப் பதிந்துப் பின்னர் விலகிக்கொண்டன. அவனது முத்தம் எனது சரீரத்தை சீண்டிவிட்டிருந்தது, நான் அதிர்ந்து கொண்டிருந்தேன், அவன் எனது சரீரமெங்கும் கோலோச்சுகிறான், நான் செய்வதறியாமல் தவிக்கிறேன், எத்தனை பலம்.. எத்தனை சாமர்த்தியம்…படித்து பட்டம்பெறுவதைக்காட்டிலும், ஒரு பையனைப் பட்டப்பகலில் முத்தமிடுவது எனக்குச் சுலபமாக வருமென்று புரிந்தது. ஆசுவாசப்படுத்திக்கொள்ளவென்று கொஞ்சம் விலகிக்கொண்டேன்.

” – செசில்(Cecile) நாம ஒன்றாக இருக்கலாம். திட்டமிட்டபடி, எல்ஸா(Elsa)வுடனான காதல் விளையாட்டுக்கு நான் தயார்.”

என்னுடைய கணக்குகள் சரியா? போடவிருக்கிற நாடகத்தின் சூத்ரதாரி என்கிற வகையில் இப்போது கூட, அனைத்தையும் நிறுத்திவிடமுடியும்.

” – உன்னோட திட்டங்களை நினைக்க ஆச்சரியமாகத்தான இருக்கு”..புன்னகைத்தபடி கூறினான், அவனுக்கேயுரிய தப்பிக்கும் புன்னகை, உதட்டை மெல்ல உயர்த்தி, போக்கிரிகுணத்தை அடையாளப்படுத்தியது, சாதாரணபோக்கிரியல்ல மகா போக்கிரி.

“- சிரில், தயவு பண்ணு.. முத்தமிடு..வா நெருக்கமா வா.. என்னை புரிஞ்சுக்கோ.. சீக்கிரம்..”

ஆமாம், அப்படித்தான் விருப்பமில்லாமலேயே, ஒரு வித உந்துதலில் அந்த நாடகத்தை ஆரம்பித்துவைத்தேன். கசப்பும், கடுமையும் இருந்தபோதிலும், என்னைமீறி சிலவிடயங்கள் நடக்கிறபோது, அம்மாதிரியான தருணங்களை வரவேற்றேன். தவிர இந்தவிஷயத்தில் குற்றவாளியென்றால் அது நானாகத்தான் இருக்கவேண்டும், எனது சோம்பலோ, சூரியனோ, அல்லது சிரிலுடைய முத்தமோ குற்றவாளிகளல்லர்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, இனி இருந்தால் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டுமென்கிற நிலையில், எனது புதிய கூட்டாளிகளிடமிருந்து சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். எனது இரண்டுங்கெட்டான் முடிவுக்குச் சாதகமாக பல காரணங்களிருந்தன: முதலில் எனதுத் திட்டம், எனக்கே அதன் வெற்றியைக்குறித்து நம்பிக்கையில்லை. பிறகு ஆன்(Anne)மீது அப்பா கொண்டுள்ள மோகம், நாளைக்கே இந்தமோகம் அவரை விசுவாசமிக்க மனிதராக மாற்றக்கூடும். அடுத்து சிரிலோ(Cyril), எல்சாவோ(Elsa) எனது துணையின்றி, தன்னிச்சையாய் செயல்படக்கூடியவர்களென்று நான் நினைக்கவில்லை. எனது தகப்பனார், இந்தவிளையாட்டில் மும்முரமாய் இறங்கிவிட்டதுபோல ஓர் அறிகுறி, இந்தநிலையில் எனக்கேன் வன்பு? நான் போட்ட உளவியல் கணக்குகள், சரியா தவறா என்பதைப் பார்ப்பதில்மாத்திரம் ஒருவித சந்தோஷம், எப்போதும்போல இருந்தது.

தவிர சிரில் என்னைக் காதலிப்பதும், என்னை மணம் செய்துகொள்வதில், அவனுக்குள்ள விருப்பமும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருந்தன. ஒன்று அல்லது இரண்டுவருடங்களில் வளர்ந்து பெரியவளாகிவிடுவேன். அதுவரை அவன் காத்திருப்பானென்றால், எனக்கும் இந்தத் திருமணத்திற் பூரண சம்மதம். மனதில், சிரிலோடு(Cyril) வாழ்வதுபோலக் காட்சி, அவனோடு உறங்குகிறேன், அவனைவிட்டு விலகாமல், எந்த நேரமும் அவனுடனேயே இருக்கிறேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் நாங்களிருவரும் மதிய உணவினை அப்பாவுடம் ஆன்(Anne)னுடனும் சாப்பிடவேண்டி செல்கிறோம். அப்பா, ஆன், சிரில், நான், சிரிலுடைய அம்மாவென அனைவரும் உணவு மேசையில். வழக்கம்போல சிரிலுடைய அம்மா, தனது பேச்சால், உணவு நேரத்திற்கு கலகலப்பூட்டுகிறாள்.

ஆன்(Anne) மேற்தளத்தில் நின்றுகொண்டிருந்தவள், கடலில் அப்பாவைப் பார்த்ததும் இறங்கி அவரோடு சேர்ந்துகொண்டாள். நான் அவர்களை நெருங்கியதும் வரவேற்ற முகத்தில் ஒருவித நமட்டுச்சிரிப்பு, ஏதோ முதல்நாள் நிறைய குடித்த மனிதர்களை மறுநாள் பார்ப்பதுபோல. “நேற்றைய இரவு ஏதோ சொல்லவந்தாய், அதற்குள் நான் கண்ணயர்ந்துவிட்டேன், அதை இப்போது சொல்லமுடியுமா?”, என்று ஆன்னிடம்(Anne) கேட்டேன். சிரித்துக்கொண்டே மழுப்பினாள், அதற்குப்பொருள், சொன்னால், நான் வருந்துவேனாம். அப்பா, நீரிலிருந்து எழுந்தபோது, எப்போதும்போல அவரது வாட்டசாட்டமான உடல் என்னைக் கவர்ந்தது. ஆன்னுடன்(Anne)சேர்ந்து நானும் நீந்தினேன். தலைமுடியில் தண்ணீர் படாமல் தவிர்க்க நினைத்தவள்போல, தலையை நீருக்குமேலே வைத்தபடி நிதானமாக நீந்தினாள். பின்னர் மூவருமாக அருகருகே வயிறுபடிய நீந்தினோம்: நான் நடுவில் சத்தமின்றி அமைதியாக நீந்த, இருபுறமும் அவர்கள்.

அபோதுதான் நீர்ப்பரப்பில் மறுகோடியில், பாய்விரித்த விளையாட்டுப்படகு கண்ணிற்பட்டது. எனது தகப்பனார்தான் முதலில் பார்த்தார்.

” – அட நம்ம சிரில், என்ன ஆச்சு அவனுக்கு? என சிரித்தபடி கேட்ட அப்பா, மீண்டும், ” ஆன்.. அவனை மன்னிக்கலாம்? என்ன நினைக்கிற? உண்மையில் அவன் நல்ல பையன்”, – என்றார்.

தலையை உயர்த்திப் பார்த்தேன், நிலைமையின் விபரீதம் உறைத்தது.

” – என்ன செய்யறான் அவன், நம்ம பக்கம் வந்ததும் இத்தனை, வேகமெதற்கு? அடட, அவன் தனியா இல்லையே, கூட இருக்கிறது யாரு?…”

அடுத்து, ‘ஆன்’ தலையை உயர்த்திப்பார்த்தாள்…படகு எங்களைக் கடந்தபோது வேகமெடுத்தது. சிரில்(Cyril) கண்ணிற்பட்டதும், அவனிடத்தில் மானசீகமாக வேண்டாம், போய்விடென்று கெஞ்சுகிறேன்.

இரண்டு நிமிடத்திற்குப் பிறகும் நடந்து முடிந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து, அப்பா மீளாமலிருந்தார். அவர் என்ன சொல்லப்போகிறாரெனக் காத்திருந்தேன்.

” அட.. எல்ஸா(Elsa)தானே அது? அவளுக்கென்ன வேலை இங்கே.” என்றவர் ஆன்(Anne)னிடத்தில், “அவள் கெட்டிக்காரி.. பாரேன் அந்தப்பையனை வளைத்துப்போட்டால், கிழம் தன்னைக் கூடவே வைத்துக் கொள்ளுமென்று நினைக்கிறாள்போல.”

அப்பா சொன்னது எதையும் ஆன் காதில்வாங்கியதாகத் தெரியவில்லை. எனதுபக்கம் திரும்பினாள். அவளை ஒருகணம் ஏறெடுத்துபார்த்தேன், குற்ற உணர்வில் அவளைப்பார்க்கத் திராணியற்று மணற்பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். மெல்ல நீண்ட அவளது கரம், எனது கழுத்தில் விழுந்தது:

” – இங்கே பாரு. என்னை பழிதீர்த்துகொள்ற, அப்படித்தானே?”

கண் திறந்து பார்க்கிறேன்: அவளது பார்வையில் கவலை, ஒரு விதக்கெஞ்சல். முதன் முறையாக உணர்ச்சியுள்ள ஜீவனைப் பார்க்கிற பார்வை, முன்பொருநாள் இப்படித்தான்.. நான் மெல்ல செருமுகிறேன், அவளது கரத்திலிருந்து விடுபட நினைத்தவள்போல பலவந்தமாகத் தலையை எனது தகப்பனார்பக்கம் திருப்பினேன். அவர் இன்னமும் படகினைப் பார்த்தபடி இருந்தார்.

” செசில் செல்லம்.. தப்பு என்னுடையதுதான். உன்னிடத்தில் இத்தனை கடுமையாக நடந்திருக்கக்கூடாது, ஒத்துக்கொள்றேன்…ஆனால் உன் மனதை நோக அடிக்கணுங்கிறதும் எனது விருப்பமில்லை, என்னை நம்பு.” -ஆன்

எனது தலை, பிறகு கழுத்தென்று அவளது கை தடவியபடி முன்னேறியது. அசையாமல் இருந்தேன். அலை திரும்பும்போதெல்லாம், மணல் எனது சரீரத்தில் ஏற்படுத்திய குறுகுறுப்பை, அவளது தீண்டலில் உணர்ந்தேன், எதிரியின் வெற்றியில் குதூகலிக்கும் மனப்பான்மை, ஒருவித இதம் என்னைக் கவ்வியது, எனது கோபமோ, இச்சையோ அல்லது வேறு உணர்வுகளோ எனக்கு இதுவரை தந்திராத அனுபவம். போதும் இந்த நாடகமெல்லாம் போதும், இனி அவர்கள் இருவரின் கைகளிலேயே காலமுச்சூடும் கிடக்கலாமோ என்று கூட மனது நி¨த்தது.. இதுவரை எனது வாழ்க்கையில், இப்படியொரு பலவீனத்தின் முரட்டுத்தனத்தில் சிக்கி வருந்தியதில்லை. கண்களை இறுக மூடினேன், எனது இதயஓட்டம் நின்றுவிட்டதுபோல பிரமை.

——————————————————————————

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரண்டு நாட்கள் கடந்திருந்தன: வழக்கத்தைப்போல அறைக்குள்ளேயே சுற்றி சுற்றிவந்து களைந்திருந்தேன். ‘எங்கள் வாழ்க்கை ஆன் தலையீட்டினால் குட்டிச்சுவராகபோகவிருக்கிறதென்கிற’ நினைப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன். சிரிலை(Cyril) மறுபடியும் பார்க்கவேண்டுமென்கிற எண்ணமில்லை, இருந்த சூழ்நிலையில் அவனைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லதென்றும் தோன்றியது, தவிர எனது மனதிலும் அவனைச் சந்திக்க வேண்டுமென்கிற ஆசைகள் எழாதது ஆச்சரியம். இக்கட்டான அந்த மனநிலையில் எனக்கு மகிழ்ச்சிதரும்வகையில் சில காரியங்களைச் செய்தேன்: சுலபத்தில் விடைகாணமுடியாதக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழம்பிக்கொண்டிருப்பது, சோதனையான நாட்களை மீண்டும் நினைத்துப்பார்ப்பது அல்லது வரவிருக்கும் நாட்களை நினத்து பயந்துகொண்டிருப்பது…இப்படி. வெளியில் வெப்பம் கடுமையாக இருந்த நாட்கள் அவை, உள்ளே அறைக்குள் போதிய வெளிச்சமின்றி இருட்டாக இருக்கும். சன்னற் கதவுகளை அடைத்திருந்தபோதிலிலும், அறையெங்கும் பிசுபிசுவென்று ஈரத்தன்மையுடனான மோசமானகாற்றோடு கூடிய ஒருவித இறுக்கமுண்டு. மேலே கூரையை பார்த்தபடி கட்டிலிலேயே படுத்துக்கிடப்பேன். எப்போதாவது சலவைசெய்த கட்டில்விரிப்பின் சுகத்திற்காக புரளுவது உண்டு. உறக்கம் சுலபத்தில் வந்ததில்லை. அந்த நேரங்களில் கட்டிலருகேயிருக்கும், ரேடியோ பெட்டியில், வெறும் ரிதமெழுப்பும் இசைத்தட்டை மெல்ல சுழலவிட்டு ரசிப்பேன். நிறைய புகைப்பேன். நான் சீரழிந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்திருந்தேன், இருந்தும் மகிழ்ச்சி. மனதை சந்தோஷமாக வைத்திருக்க அத்தனையும் முயன்றுபார்த்தேன், முடியவில்லை- வேதனைகள் குறைவதாக இல்லை, திசைதெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் பின்னேரம், கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த பணிவிடைசெய்பவள், முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, எச்சரிப்பதுபோன்ற குரலில், “கீழே யாரோ வந்திருக்கிறார்கள்”, என்றாள். எனக்குச் சட்டென்று ‘சிரில்’ ஞாபகம் வந்தது, இறங்கினேன், வந்திருந்தது ‘எல்ஸா’. ஆர்வத்தோடு எனது கைகளைப் பிடித்துக்கொண்டாள். நான் மூர்ச்சையாகாத குறை. எங்கிருந்து இந்த அழகை வாங்கினாளென யோசித்தேன். அப்படியிருந்தாள். கடைசியில் அவளுக்குப் பிரியமான பழுப்பு நிறத்திற்கு தோலின் நிறம் மாறியிருந்தது, அதாவது மாசுமருவற்ற, அளவான பழுப்பு நிறம், மிகுந்தக் கவனத்துடன் அவளுடலை பராமரித்திருக்கவேண்டுமென்பதை, இளமையையின் சௌந்தர்யத்துடன் அது பிரகாசித்ததை வைத்து முடிவுக்கு வந்தேன்.

” என்னோட உடமைகளை எடுத்துபோகலாமென்று வந்தேன். ஒன்றிரண்டு கவுன்களை, ‘ழூவன்'(Juan) வாங்கிதான் கொடுத்தான், ஆனா அது போதலை.”

சட்டென்று, ழூவன்(Juan)என்பவன் யார்? என்ற கேள்வி மனதில் உதித்தது. பிறகு அது முக்கியமல்ல என்றும் தோன்றியது. எல்ஸாவை மறுபடியும் பார்க்கமுடிந்ததே என்ற மகிழ்ச்சி. வந்திருக்கும் எல்ஸா, தனது அழகை பராமரிக்கத்தெரிந்த பெண்மணி, அவளோடு மதுச்சாலைகளும், மாலை நேரங்களும், இரவு விடுதிகளும், குதூகலமாக அவளோடு கழித்த நாட்களும் நினைவுக்குவந்தன. மறுபடியும் அவளைப் பார்க்கநேர்ந்த சந்தோஷத்தைக் குறிப்பிட்டு அவளிடம் பேசினேன். ஆமோதித்தவள், “நம்மிடையே பொதுவான சில அம்சங்கள் இருந்ததால், நாமிருவரும் பிரச்சினைகளின்றி பழக முடிந்தது,” என்றாள். அதைக் கேட்டதும், என்னுடல் மெல்ல சிலிர்த்தது, அதைச் சாமர்த்தியமாக அவளிடமிருந்து மறைத்துவிட்டு, ‘என்னோட அறைக்குப் போகலாமா? என்றேன். அதற்கும் காரணமிருந்தது. அவ்வாறு அழைத்துச் சென்றால், அப்பாவையும் ஆன்னையும், அவள் சந்திக்கும் வாய்ப்பு அமையாது என்று நினைத்தேன். எனது தகப்பனாரைப் பற்றி பேச்சுவந்தபோது, மெல்ல அவள் தலையை ஆட்டினாள், எனக்கு வியப்பு. ழுவான்(Juan)னையும், அவன் வாங்கிக் கொடுத்த கவுன்களையும் மறந்துவிட்டு இன்னமும் அவள், அப்பாவை நேசிக்கிறாளோ?… இந்தச் சின்ன தலையாட்டுதலை மூன்று வாரங்களுக்கு முன் அவள் செய்திருந்தால், அது எனது கண்களில் பட்டிருக்குமோ?

எனது அறைக்குச் சென்றதும், அவளது நவநாகரீக கடற்கரை வாழ்க்கையை கலகலப்புடன் சொல்லக்கேட்டேன். எனக்குள் இதுவரைத் தோன்றாத எண்ணங்கள், ஒரு வகையில் அவ்வெண்ணங்களுக்கு, நான் இதுவரைக் கண்டிராத ‘எல்ஸாவும்’ காரணமாக இருக்கலாம். நான் அமைதியாக இருக்கவே, மேலே தொடரவிருப்பமில்லாமல், அவளாகவே பேச்சை நிறுத்திக்கொண்டாள். சில அடிதூரம் அறைக்குள் நடந்தவள், திரும்பாமலேயே, குரலில் சுரத்தின்றி, “என்ன ரெமோன்(Raymond)னுக்கு இப்போது சந்தோஷம்தானா?” என்றாள். அதை அழுந்தச் சொன்னதுபோல இருந்தது, அதற்கான காரணத்தினை விளங்கிக்கொண்டேனோ இல்லையோ, மனதில் அடுக்கடுக்காய் யோசனைகள் திட்டங்கள் தோன்றி எனக்குள் பாரமாயிறங்கின. அவற்றை சுமக்கமுடியாமல் துவண்டுவிழும் நிலையில் நானிருந்தேன். அந்தச் சுமையை உடனே இறக்கியாகவேண்டும்,. உடனேயே அவளிடத்திற் பகிர்ந்தாகவேண்டும்:

” – என்ன? அப்பாவுக்குச் சந்தோஷமா என்றுதானே கேட்ட? ஒரிரு வார்த்தைகளில் என்னிடத்தில் அதற்கு பதிலில்லை. நிறைய பேசணும் உலகில் ‘சந்தோஷத்தைத்’ தவிர வேறு வார்த்தைகள் இல்லையென்பதுபோலத்தான், அப்பாவை ‘ஆன்’ நம்பவைத்திருக்கிறாள்.. ரொம்பவும் சாமர்த்தியக்காரி.

– ஆமாம் ரொம்ப ரொம்ப, எல்ஸா பெருமூச்சிட்டபடி சொன்னாள்.

– அவள் மனசுல என்ன திட்டமிருக்கு என்பதை உன்னால யூகிக்கவேமுடியாது. அப்பாவை கூடிய சீக்கிரம் திருமணம் செய்ய இருக்கிறாள். சட்டென்று எனக்காய்த் திரும்பினாள், முகம் அதிர்ச்சியில் வெளுத்திருந்தது:

” – என்னது? திருமணமா? ரெமோன் அவளை திருமணம் செய்ய இருக்கிறாரா,… அவரா?

– ஆமாம், ரெமோன் திருமணம் செய்யவிருக்கிறார், அழுத்தம் திருத்தமாகக் கூறினேன்.

உடனே சிரிக்க வேண்டும்போல இருந்தது. எனது கைகள் நடுங்கின. ‘எல்ஸா’ நிலைகுலைந்திருந்தாள், அந்த நேரத்தில் அவளையும் என்னையும் யாரேனும் பார்த்திருந்தால், நான்தான் அவளை தாக்கியிருப்பேனென நினைத்திருக்கக் கூடும். எல்ஸாவை அப்படியே வைத்திருக்கவேண்டும், யோசிக்கவிடக்கூடாது. அவளது வழக்கமான கூத்துகளையெல்லாம் கொஞ்சநா¨ளைக்கு மறக்கச் செய்யவேண்டும், மெல்ல அவளிடத்தில், குரலில் பரிவை வரவழைத்துக்கொண்டு :

” அது நடக்கக்கூடாது எல்ஸா. அப்பா, ஏற்கனவே அவளிடத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். திருமணமும் முடிந்தால் என்ன ஆகும்? யோசித்து பாரு..

– ஆமாம்”,- அவள்.

அவள் எனது பேச்சில் மயங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. எனக்குச் சிரிப்புவந்தது, எனது உடலோ முன்னைக்காட்டிலும் கூடுதலாக அதிர்ந்தது.

” – நான் உனக்காகத்தான் காத்திருந்தேன். ஆன்னை(Anne) எதிர்த்து நிற்க உன்னால் முடியும், உன் ஒருத்திக்கு மாத்திரமே அதற்கான தகுதியுமுண்டு.”

அடுத்து வந்த அவளது கேள்வி, நான் சொன்னதை நம்பியதுபோலத்தான் இருந்தது.

“- சரி உங்க அப்பாவும் அவளை உண்மையாக நேசிப்பதாகவோ, மணம் செய்யவோ விரும்பினால்?

– எல்ஸா… என்னநீ இப்படியெல்லாம் சந்தேகப்படற, அவர் உன்னைத்தானே விரும்புகிறார். உன்னை மறந்திட்டாரென்று மாத்திரம் சொல்லாதே. நான் நம்பமாட்டேன்.” அமைதியாகக் கூறினேன்.

அவள் இமைகள் துடிப்பதைக் கவனித்தேன். அவளிடத்தில் நான் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கை, சட்டென்று முகத்தில் மகிழ்ச்சியாய் வெளிப்பட்டது, அதை மறைக்க விரும்பியவளைப்போல முகத்தைத் திருப்பிகொண்டாள். அவளை திசைதிருப்பியதில் எனக்குள்ளும் கிறக்கம், எனினும் அவளிடத்தில் என்ன பேசவேண்டுமென்பதில் தெளிவுடனிருந்தேன்.

” எல்ஸா(Elsa).., ஆண்பெண் உறவு, இல்வாழ்க்கை, நன்நெறியென்று அப்பாவை மடக்க, ஆன்(Anne) ஒரு பெரிய பாடமே எடுக்கப்போய், இவரும் காலில் விழுந்து கிடக்கிறார். இதை நீ புரிஞ்சுக்கணும்.”

சொல்லிமுடித்ததும், மனம் கனத்தது, துக்கம் தொண்டையை அடைத்தது; பள்ளிச் சிறுமியைப்போல, உளறிக்கொட்டினேனென்று வேண்டுமானால் சொல்லலாம். எப்படியோ, மனதிலிருந்த உணர்வை முடிந்தமட்டும் அவளிடத்தில் சொல்ல முடிந்தது.

” – எல்ஸா…அந்தத் திருமணம் நடந்து முடிந்தால், அப்பாவுடைய வாழ்க்கைமட்டுமல்ல, நம்மிருவர் வாழ்க்கையுங்கூட குட்டிசுவராகிவிடும். அப்பாவை இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது காப்பாற்றியாகணும். அவர் வயதானாலும் இன்னமும் சின்னக்குழந்தை…வயதான குழந்தை…”

‘வயதான குழந்தை’ என்ற வார்த்தையை உரத்து திரும்பவும் சொன்னேன். மிகப்பெரிய துக்கநாடகமொன்றை நடத்திமுடித்த திருப்தி. அதனை உறுதிபடுத்துவதுபோல எல்ஸாவின் மரகதவண்ண விழிகளிரண்டும் கலங்கியிருந்தன. தேவாலயத்தில் ஸ்தோத்திரம் சொல்லி முடிப்பதுபோல:

” – எல்ஸா… எனக்கு நீதான் உதவணும். இவ்வளவும் எதற்காக நான் சொல்கிறேனென்று யோசித்து பார். உன்னோட நன்மைக்காகவும், அப்பாவுடைய நன்மைக்காகவும், உங்களிருவரின் காதலுக்காகவுந்தான், நான் இத்தனை தூரம் கெஞ்சுகிறேன்,” என்றவள் கடைசியில் எனக்காகவுங்கூட….”என்று முணுமுணுத்தேன்.

” – இந்த விவகாரத்துல நான் என்ன செய்ய முடியுமென்று நினைக்கிற…எனக்கென்னவோ இது ஆகாத வேலைண்ணுதான் நினைக்கத் தோணுது.

– உன்னால முடியாதென்றால், விட்டுடு…, எனது குரல் சோர்ந்து ஒலித்தது.

– ‘பச்சைச் தேவடியா’! எல்ஸா முணுமுணுத்தது காதில் விழுந்தது.

– அவளை(ஆன்னை) அப்படி சொல்றதிலே தப்பே இல்லை”, என்கிறேன், பின்னர் எனது பங்கிற்குத் தலையைத் திருப்பிக் கொண்டேன்.

எல்ஸா புதிய அவதாரம் எடுத்திருந்தாள். முகம் சிவந்திருந்தது. இவள் ஆன்னுடைய பேராசைக்கு பாடம் கற்பிப்பதென்று தீர்மானித்திருப்பவள். நாங்கள் அறிந்திருந்த ‘எல்ஸா'(Elsa)வல்ல, இவள் எல்ஸா மக்கென்பூர்(Elsa Mackenbourg). அப்பா அவளை இன்னமும் நேசிக்கிறார் என்பதை மறக்காத எல்ஸா. புதிதாக ஒரு ழுவான்(Juan)கிடைத்திருந்தாலும், ரெமோனின்(Raymond) வசீகரம், அவளுடைய மனதில் அப்படியே இருக்கிறது. ஆன்னைப்போல(Anne) உண்மை, வருங்காலம், குடும்பம் என்பது பற்றிய திட்டங்களேதும் அவளுக்கில்லை, அதை வற்புறுத்தப்போகிறவளுமல்ல.

” – எல்ஸா… என்னாலும் அவளது நடவடிக்கைகளை பொறுத்துக்க முடியலை. நான் சொன்னேனென்று சிரிலை(Cyril)போய்ப் பார், அவனுடைய அம்மாவிடம் பேசி, அவர்களுடைய ‘வில்லாவில்’ கொஞ்சகாலம் தங்க ஏற்பாடு செய்யமுடியுமாவென்று கேள். நாளைகாலையில் அவனை வந்து பார்க்கிறேனென்று சொல். பிறகு மூவருமாக உட்கார்ந்து பேசுவோம்.”

அவள் கதவருகிற் செல்ல, ” எல்ஸா, இது உன்னோட விதி சம்பந்தப்பட்ட விஷயம், அதை நல்லபடியா அமைச்சுகிற பொறுப்பு உனக்கு இருக்கு”, சும்மா ஒரு பேச்சுக்காக விதிகளையெல்லாம உரையாடலிற் சேர்த்துக்கொண்டேன்.

அவள் தலையை ஆட்டிய விதத்தில் விசனத்தின் சாயலிருந்தது, ஏதோ வரிசையாக விதிகள் அவளைத் துன்புறுத்த காத்திருப்பதுபோலவும், அதை உணர்ந்தவள்போலவும் தலையாட்டினாள், அவளோட சம்பந்தப்பட்ட மனிதர்களும் குறைவுதான், விதிகளும் குறைவுதான். அவள் புறப்பட்டுப்போனபோது சூரியன் பளிச்சென்று காய்ந்து கொண்டிருந்தான். அவள் நடையில் மகிழ்ச்யின் அறிகுறியாக மெல்லிய துள்ளல். ஒருவாரகாலத்திற்குள், அப்பாவை மறுபடியும் எல்ஸாவுடன் சேர்த்துவைக்கவேண்டும், மனதிற்குள் சபதமெடுத்துக்கொண்டேன்.

மாலை மணி 3.30. இந்த நேரத்தில் ஆன்னுடைய அணைப்பில் அப்பா உறங்கிக்கொண்டிருக்கலாம். இன்பலாகிரியில், காதல் விளையாட்டில் தோல்விகண்டு, துவம்சம் செய்யப்பட்ட ஆனு(Anne)ங்கூட ஒருவேளை களைப்புற்று கண்ணயர்ந்திருக்கலாம். இனி ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கூடாது. மனதிலிருப்பதை உடனடியாகச் செயல்படுத்தவேண்டும். ஒழுங்காய்த் திட்டம் தீட்டப்படவேண்டும். அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக தொடர்ந்து நடந்தபடி இருந்தேன், சன்னல்வரை சென்றவள், கடலலைகள் கடற்கரைமணலில் தொடர்ந்து விழுவதும் சிதறுவதுமாக இருப்பதைப்பார்த்தேன், கதவருகில் வந்தவள், திரும்பினேன். கணக்கிட்டுக் காய்களை நகர்த்த தொடங்கினேன், துல்லியமாக திட்டம் தீட்டினேன், விருப்புவெறுப்புக்கும் ஒருபோதும் இடங்கொடாமல் கவனத்துடன் தடையாக இருக்கக் கூடியவை எவையென்பதையறிந்து, அவற்றை முற்றாக அழித்தேன். ஒருசிலவேளைகளில், மிகவும் ஆபத்தான முறைகளில் திட்டமிடுகிறேனோ என்று கூட நினைத்தேன். எல்ஸா(Elsa)விடத்தில் பிரச்சினையை சாமர்த்தியமாக கொண்டுசென்றதிலிருந்து எனக்குள், எனக்கெதிராக ஒருவித குமட்டல் மனோபாவம், ‘சீச்சீ.. நீயா. இப்படி’ என்பதைபோல, கூடவே எதையோ சாதித்துவிட்ட பெருமிதம். குற்ற உணர்வு ஒருபக்கம், தனிமையின் சஞ்சலம் மறுபக்கம்.

இனி இப்படியான குழப்பங்களெதுவும் இருக்காதென்று நினைக்கிறேன், சரி- சொல்லி என்ன ஆகக்போகிறது? கடலில் இறங்கி குளிக்கிற நேரம். ‘ஆன்னை’ வைத்துக்கொண்டு தேவையில்லாமல் உடல் நடுங்கித் தொலைத்தது. அதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் தெரிந்திருந்தேன். உதாரணமாக. அன்றைக்குப் பாருங்களேன், அவள் தண்ணீரைவிட்டு வெளியேவந்தாளோ இல்லையோ, நான் துவாலையை கொடுக்க அவளை நோக்கி ஓடுகிறேன் – ஆன்னுடைய கைப்பை என்னிடத்தில்தானிருந்தது. இனிக்க இனிக்க பேசியும், என்ணமெலாம் அவளேயென்பதுபோல, அக்கறைகாட்டியும், அவளை பரவசபடுத்துகிறேன். திடிரென்று என்னிடத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக்கண்டு அவளிடத்தில் ஆச்சரியமேதுமில்லை, மாறாக மகிழ்ந்தாள். அப்பாவுக்கும் சந்தோஷம். ஆன் தனது ‘நன்றி’யை புன்னகையூடாகத் தெரிவித்தாள். என்னிடத்தில் பேசும்போதெல்லாம், முகத்தில் அப்படியொரு பூரிப்பு. சிலமணிநேரங்களுக்கு முன்னர்தான், எல்ஸாவின் மடத்தனத்தை ஆங்கீகரிக்கிறவகையில், ஆன்னை(Anne) ‘பச்சைத் தேவடியாள்’ என்று வாய் கூசாமல் சொல்லியிருந்தேன். எண்ணிப் பார்க்க வெட்கமாக இருக்கிறது. நாளை முதல்வேலையாக, எனது தவறை ஒத்துக்கொண்டு, எல்ஸாவை(Elsa) அனுப்பித் தொலைக்கவேண்டும். இனி முன்புபோலவே அனைத்தும் நல்லவிதமாக நடக்கலாம், தேர்வில் வெற்றிபெறலாம், பள்ளியிறுதி வகுப்பு தேர்வில் வெற்றிபெறுவதென்பது உருப்படியான காரியமில்லையா?

” அப்படித்தானே? பள்ளியிறுதி வகுப்புத் தேர்வில் வெற்றிபெறுவதென்பது உருப்படியான வேலைதானே? ஆன்னிடம் கேட்டேன்.

என்னை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், கலகலவென்று சிரிக்கிறாள். அவளது சிரிப்பு என்னிடமும் தொற்றிக்கொண்டது. அவளது முகத்திற் தெரிந்த மகிழ்ச்சியைக் காண எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

” உன்னை புரிந்துகொள்வது ரொம்ப கடினம்”, ஆன்

உண்மை. என்னைப் புரிந்துகொள்வது அத்தனை சுலபமில்லை, அதிலும் அவளுக்கு சிலமணி நேரங்களுக்கு முன்புவரை என்மனதிலிருந்தத் திட்டங்கள் தெரியவந்தால், என்னைப் புரிந்துகொள்வது மிகமிகச் சிரமமென்றுதான் நினைத்திருப்பாள். அதை அவளிடத்திற் சொல்லாமற்போனாலும் தலைவெடித்துவிடும்போலிருக்கிறது:

” ஆன் உனக்குத் தெரியுமா, ‘எல்ஸா’வை(Elsa) வைத்து வேடிக்கையான நாடகமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன், அதன்படி சிரில்(Cyril)மீது காதல்கொண்டவளாக எல்ஸா(Elsa) நடிக்கவேண்டும்; அவன் வில்லாவிலே தங்கவேண்டும்; நாம் மூவரும் பார்க்கின்ற வகையில் அவர்களிருவரும் அடிக்கடி படகில் சேர்ந்து செல்லவேண்டும், ஊசியிலைமரங்கள் தோப்பிலே சந்திக்கவேண்டும், கடற்கரையில் நடமாடவேண்டும். அதுவும் தவிர எல்ஸா(Elsa) முன்னமாதிரி இல்லை, இப்போது அத்தனை அழகா திரும்பிவந்திருக்கிறாள். உன்னுடைய அழகோடு ஒப்பிட முடியாதென்றாலும், ஆண்களைத் திரும்ப வைக்கிற வசீகரத்தோடு வந்திருக்கிறாள். ஒர் அழகான பெண்மணி, நேற்றுவரை தனக்குச் சொந்தமாக இருந்த ஒருத்தி, தீடீரென்று ஒர் இளைஞனோடு சுற்றுவதில் சுகம் காணுகிறாளென்றால், அதை எப்படி எனது தகப்பனாரால் சகிக்க முடியும்.. ஆன்’Anne)… நான் என்ன சொல்லவறேனென்று உனக்குப் புரியுதா? உன்னை அவர் நேசிப்பதும் உண்மைதான், நான் மறுக்கவில்லை, இருந்தாலும் உடனே எல்ஸா(Elsa) தனக்குச் சொந்தமாகணுமென்று நினைப்பார். அப்பாவுடைய குணத்தை நீ அறிந்தவள்தானே? தடுமாறும் ஆசாமி, புத்தி ஓரிடத்தில் நிற்காது. எல்ஸாவும்(Elsa), நான் சொல்கிறபடி கேட்பாள். ஒரு நாள் அவர்களிருவரையும் பார்க்கக்கூடாதவகையில் பார்ப்பாய், உனக்குச் சட்டென்று கோபம் வரும். தவிர நீ..விட்டுக்கொடுக்குங் குணங்கொண்ட பெண்மணியுமல்ல. பிறகென்ன நீ புறப்பட்டு போய்விடுவாய், அப்படி நடக்கணும், அதுதான் என்னோட ஆசை. இதென்ன அசட்டுத்தமான யோசனைண்ணு நீ நினைக்கலாம். எல்லாத்துக்கும் பெர்க்ஸனும்(Bergson), கொளுத்தும் வெயிலுந்தான் காரணம், பிறகென்ன நினைக்கிறேனென்றால்…வேண்டாம் அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு தைரியம் காணாது, விளக்கமாகச் சொல்லவும்முடியாது, அத்தனை அபத்தமானது. எனது அம்மாவுடைய தோழியை, அப்பாவுக்கும் எனக்குமான சிநேகிதியை, மிக மோசமாக நடத்துவதற்குக் கேவலம் எனது ‘பள்ளி இறுதித்தேர்வு’ காரணமாகிவிட்டது. இருந்தபோதிலும் ‘பள்ளி இறுதித் தேர்வு’ ரொம்ப முக்கியம், இல்லையா?

– என்ன இல்லையா? பள்ளி இறுதித் தேர்வை’பத்திதானே கேட்கிற? -ஆன்.

– ஆமாம்.., -நான்.

இவ்வளவுக்கும் பிறகு அவளிடத்திற் சொல்லிக்கொண்டிருப்பதில் பொருளே இல்லை, அவள் நான் சொன்னது எதையும் புரிந்துகொண்டதுபோலவும் தெரியவில்லை. ஆன்னுக்குப் புரியாத விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தண்ணீரில் பாய்ந்து அப்பாவைப் பின்தொடர்ந்து நீந்திச் சென்றேன், அவரோடு மல்லுக்கு நின்றேன், கடல்நீரையும், அது தந்த மகிழ்ச்சியையும், இழந்திருந்த மனத்தினை திரும்பப் பெறமுடிந்த ஆனந்தம். நாளை எனது அறையை மாற்றிக்கொள்ள இருக்கிறேன். தளத்தின் மேற்தட்டில் உட்கார்ந்து வாசிக்க இருக்கிறேன், அப்போதுகூட பெர்க்ஸன்(Bergson) கூடாது; அதற்காக இனி இராப்பகலா படிக்கப்போகிறேன் என்று பொருளில்லை. இரண்டுமணிநேரம், தனிமையில், அமைதியான சூழலில், காகிதம், மை.. இவற்றின் வாசத்தோடு படிக்கவேண்டும், அதுபோதும். அக்டோபரில் முடிவு வெளியாகும், நான் தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிப்பார்கள், அப்பா வழக்கம்போல சிரிக்க அதில் வியப்பு கலந்திருக்கும், ஆன் பாராட்டுவாள், பிறகு மேற்படிப்பு. அதற்குப்பிறகு நான் புத்திசாலி, அறிவு ஜீவி, பண்பு தெரிந்தவள், பாதிப்புக்குள்ளாதவள் அதாவது ஆன்னை(Anne)ப்போல. புத்திசாலிகளுக்குண்டான திறன்கள் எனக்கும் வந்துவிடும். எந்தவொரு முறையான யோசனைக்கும் இனி அதிகபட்ஷம் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினாற் போதுமானது, அபத்தமாக இருக்கலாம், ஆனால் நியாயமானதென்று சொல்லிக்கொள்ளலாம். இனி எல்ஸாவின்(Elsa) கதி? அற்பத்தனமாகவும், உணர்ச்சிவேகத்திலும் அவளை இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டாயிற்று.. இனி அவள் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாக வேண்டும். இதென்ன கூத்து என்கிறீர்களா? எல்ஸா(Elsa)வுடைய பலவீனத்தை அறிந்ததால் வந்தவினை. முதன் முறையாக இந்த விளையாட்டில் எல்லையில்லாத ஆனந்தம் ஏற்பட்டிருந்தது: ஒர் உயிரில் ஓட்டை போட்டேன், உள்ளிருப்பது என்னவென்று அறிந்தேன், அதன் உண்மையான குணத்தைப் புரிந்து சுருள் கம்பியொன்றை அழுத்துகிற எச்சரிக்கையுடன், மெல்லத் தொட்டேன், எனது எதிர்பார்ப்பு பொய்க்காமல், சட்டென்று இன்னொன்றாக அது எழுந்தது. என்னையாரும் அப்படித் தொட்டதில்லை, ஆனாலும் சிணுங்கியிருக்கிறேன், எழுந்து இருக்கிறேன், எனது இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதுவரை இன்னொரு சீவனின் அண்மையில் நான் இருக்கநேர்ந்த அனுபவம் அனைத்துமே, எதிர்பாராமல் நிகழ்ந்தது, ஒருவகையான விபத்தென்றும் சொல்லலாம். அடுத்துவந்தநாட்களில் ஆச்சரியமூட்டும்வைகையில், எந்திரத்தனமான மானுட சிந்தனையோடும், அதிமேதாவித்தனமான சொற்களோடும் விவாதித்துக்கொண்டிருந்தேன், அவை அனைத்துமே விதண்டாவாதமாக நீண்டதென்பதையும் மறுக்கவில்லை. என்றேனும் ஒருநாள், எனக்கென்று ஒருவன் அதீதகாதலோடு வரத்தான் போகிறான், எதிர்கொள்ளத்தான் போகிறேன், நெருங்குவேன், கைகள் நடுங்க, கவனத்துடன், மெல்ல அவனை…
——————————————————————————

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 5

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



பிரச்சினைகளேதுமின்றி விடுமுறை சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. யார்கண்பட்டதோ? அதற்கெல்லாம் முடிவுகட்டுவதுபோல சம்பவமொன்று நடந்தது. ஒரு நாள் காலை அப்பா, ‘இன்றிரவு கான்(Cannes) நகரத்திற்கு போகலாமே’, என்றார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த அந்நகரத்தில் சூதாட்ட விடுதிகளும், இரவு விடுதிகளும் நிறையவே இருந்தன. ஆட்டபாட்டமென்று இரவை உல்லாசமாகக் கொண்டாடமுடியும். எனவே அப்பா தெரிவித்த யோசனையை கேட்டதும், எல்சாவிற்கு அப்படியொரு சந்தோஷம். இன்றைக்கும் அது கண்முன்னே நிற்கிறது. விடுமுறையென்ற பெயரில் தனிமைபடுத்தப்பட்டும், தகிக்கும் வெயிலினாற் ஓருவகையில் சோர்ந்தும், தனது கவர்ச்சிகரமான உடல் சந்தித்த இழப்புகளைச் சூதாட்டவிடுதி நேர்செய்துவிடுமென்று அவள் நினைத்திருக்கவேண்டும். எனவே எனது எதிர்பார்ப்பிற்கு மாறாக, அப்பாவுடைய யோசனைக்குச் சம்மதம் தெரிவித்ததோடு, மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் செய்தாள். ஆக, இரவு கான் நகருக்கு நாங்கள் போவதென்பது உறுதியாகிவிட்டது. மதிய உணவிற்குப் பிறகு, மாலைநேர விசேடங்களுக்கான உடையை அணிவதற்கென்று எனது அறைக்குச் சென்றேன். இது போன்ற கொண்டாட்டங்களுக்கென ஒரேயொரு ஆடைதான் வைத்திருந்தேன். அதைக்கூட கடையில் தேர்வு செய்தது நானில்லை அப்பா; தூரதேசங்களிலிருந்து இறக்குமதிசெய்யபட்ட துணிவகையென்று பார்த்தமாத்திரத்தில் எவரும் அதைச் சொல்லமுடியும், அதிலும் அந்த ஆடையில், தூரதேசத்து சாயல் கொஞ்சம் கூடுதலென்றே சொல்லவேண்டும். அவ்வகை துணிகள் மீதான மோகமோ அல்லது அனுபவமோ, எதுவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் விரும்பியபோதெல்லாம் அவற்றை அணிந்து கவர்ச்சிகரமான பெண்ணாக நான் உலாவரவேண்டுமென எதிர்பார்த்தார். அன்றைக்கு அதனை உடுத்திக்கொண்டு கீழே இறங்கிவர அப்பா, பளிச்சென்று ‘டின்னர் ஜாக்கெட்டில்’ நின்றுகொண்டிருந்தார். எனது கைகளிரண்டும் அவரது கழுத்தை பின்னிகொண்டன.

– ‘இத்தனை கம்பீரமா, ஓர் ஆணை நான் சந்திச்சதில்லை’- நான்

– ‘சிரிலைத் தவிர்த்து அப்படித்தானே?. பதில் தயக்கமின்றி சட்டென்று வெளிப்பட்டது. நீமட்டுமென்ன? குறைச்சலா? இப்படியான ஒரு தேவதையை இதற்குமுன்ன, நானுந்தான் சந்திச்சதில்லை.’ – அப்பா.
– அதாவது எல்சாவிற்கும், ஆன்னுக்கும் பிறகு, அப்படித்தானே? எனது பதிலும் தயக்கமின்றி வெளிப்பட்டது.

-‘அவர்கள் இரண்டுபேரும் அவ்வளவு சீக்கிரம் இறங்கிவருவாங்கண்ணு தோணலை, நம்மை காத்திருக்க வச்சிட்டாங்க. மூட்டுத்தொல்லையால் அவதிப்படுகிற இந்தக் கிழவனோட கொஞ்சம் நடனமாடித்தான் பாரேன்..

இரவுக்கான எங்கள் கொண்டாட்டம் அப்போதே ஆரம்பித்துவிட்டதைப்போல உணர்ந்தேன். வயதான மனிதரென்று, அப்பாவை பார்க்கிறவர்கள் எவரும் சுலபத்தில் சொல்லிவிட வரமுடியாது, இளமை முறுக்கோடு இருந்தார். சேர்ந்து நடனமாடியபொழுது: அவரது பிரத்தியேக வாசனைதைலம், அன்பின் கதகதப்பு, புகைக்கும் சுருட்டு… அத்தனையும் நாசியைத் தொட்டன. சீராக கால்களை எடுத்துவைத்தார். பாதிமூடிய இமைகள். என்னைப்போலவே உதட்டோரத்தில் ஒளிக்கமுடியாமல் ஒருபுன்னகை.

அவருக்குள்ள மூட்டுவலியையெல்லாம் மறந்துவிட்டு,

“எனக்கும் ஒருநாள் நீ ‘பி-பாப்'(1) கற்றுக்கொடுத்தாகணும்”, என்றார்.

நடனத்தை சட்டென்று நிறுத்தினார். முணுமுணுவென்று தன்னைத்தானே புகழ்ந்தபடி எல்சா இறங்கிக் கொண்டிருந்தாள். அப்பா அவளை எதிர்கொண்டு அழைக்க நினைத்திருக்கக்கூடும். பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். முகத்தில் சூதாட்டவிடுதி மனிதர்களிடத்தில் நாம் பார்க்கிற செயற்கை புன்னகை. படிகளில் நிதானமாக இறங்கினாள். உலர்ந்திருந்த தலைமயிர் படிய வாரபட்டிருந்தது. வெயிலில் சுருங்கியிருந்த தேகமும் ஏதோ இழுத்து சரிசெய்யப்பட்டதுபோல இருந்தது. கண்ணைப்பறிக்கிற அலங்காரமில்லை, கண்ணியமானத் தோற்றம்.

“- என்ன புறப்படலாமா?

– ஆன் இன்னும் இறங்கலை, -நான்.

– மேலே போயிட்டு பார்த்துட்டுவா. கான்(Cannes)ன்னுக்குப் போய்ச்சேர, இரவு பன்னிரண்டு ஆயிடும்..”-அப்பா.

விழாக்கால ஆடையுடன் படிக்கட்டில் ஏற கடினமாகவிருந்தது. கதவைத் தட்டினேன். உள்ளேவரச்சொல்லி, ஆன் சத்தமிட்டாள். கதவைத் திறந்துகொண்டு நின்றேன். சாம்பல் வண்ண கவுன், அரிதான சாம்பல்வண்னம், மின்சார ஒளியில் ஆங்காங்கே வெள்ளைவெளேரென்று பிராகாசிக்கிறது, அதிகாலையில் திட்டுதிட்டாய்ப் ஜொலிக்கும் கடல்போல. பக்குவப்பட்ட பெண்ணுக்குரிய அத்தனை வசீகரமும், அவளிடத்தில் அன்றைக்குத் திரண்டிருந்ததைக் கவனித்தேன்.

– “அபாரம்! ‘ஆன்’ இப்படியொரு கவுனா?”

யாரிடமாவது சொல்லிக்கொண்டு புறப்படுகிறபோது நாம் புன்னகைப்போமில்லையா? அன்றைக்கு ஆன்கூட அப்படித்தான் கண்ணாடியைப் பார்த்து புன்னகைத்தாள்.

” – சாம்பல்நிறம் எனக்கு நல்லா அமைஞ்சிருக்கில்ல, நான் பாக்கியசாலி -ஆன்.

– ‘நீங்கள்’ பாக்கியசாலிங்கிறதை யார் மறுக்கக்கூடும்?” நான்

அவள் எனது காதினைப் பிடித்தாள். நேராக என்னைப் பார்த்தாள். அவளது கண்களிரண்டும் கருநீலமாகவிருந்தன. அவை ஒளிர்வதையும், மெல்ல மலர்வதையும் கவனித்தேன்.

” – சிலவேளைகளில் சோர்வுற்றவள்போல இருந்தாலும், நீ நல்லப் பெண்.

நான் உடுத்தியிருந்த கவுனை ஏறெடுத்துப் பார்க்காமலேயே, என்னைக் கடந்து அவள் செல்ல, ஒருவகையில் எனக்குப் பெருமையாகவும் இருந்தது, ஏமாற்றமாகவுமிருந்தது. பெருமை: அடுத்தவர் கண்களை உறுத்துவதுபோல எனது ஆடை இல்லை. ஏமாற்றம்: பிறரைக் கவரும் அளவிற்கு எனது ஆடையில்லை. என்னை முந்திக்கொண்டு இறங்கியவளைப் பார்த்ததும் அப்பா எங்களை நோக்கிவந்தார். படிகளண்டை வந்ததும் நின்றார், காலை முதற்படியில் வைத்தவர் தலையை உயர்த்தி ஆன்னை(Anne)ப் பார்த்தார். எல்சா(Elsa)வும் ஆன்(Anne) இறங்குவதைப் பார்த்தாள். இன்றைக்கும் அக்காட்சி தத்ரூபமாக எனது கண்கள் முன்னே விரிகிறது: காட்சிப்படி, எனக்கு முன்பாக பொன்னிறகழுத்தும், திருத்தமான தோள்களுமாக முதலில் ஆன்(Anne); கொஞ்சம் கீழே – இரண்டாவதாக- முகத்தில் பரவசத்துடனும், நீட்டிய கரத்துடனும் அப்பா. கடைசியாக தூரத்தில் காட்சியின் விளிம்பில் எல்ஸா(Elsa).

” – ஆன்! நீ அசாதாரணப் பெண்மணி “- அப்பா.

பதிலேதுமின்றி புன்னகைத்தபடி அப்பாவைக் கடந்து சென்றாள், குளிர்கால மேலங்கியை கையில் எடுத்துக்கொண்டாள்.

” – அப்போ அங்கே பார்க்கலாம். ‘செசில்'(Cecile) நீ எங்கூட வற?”

கார்த் திறப்பினை என்னிடத்திற் கொடுத்தாள். அன்றிரவு சாலை அத்தனை ரம்மியமாகவிருக்க காரை நிதானமாக ஓட்டினேன். வழி நெடுக ஆன் அமைதியாகவே இருந்தாள். காரிலிருந்த வானொலியில் ட்ரம்பெட் போட்டச் சத்தம்ங்கூட அவளைப் பாதித்தாகத் தோன்றவில்லை. அப்பாவுடைய கன்வெர்டிபிள் கார்(2) எங்களை முந்திக்கொண்டு வேகமாகச் சென்றபோதுங்கூட அவளிதத்தில் எதிர்வினையேதுமில்லை. இவர்களுக்கிடையேயான பந்தயத்திலிருந்து விலகியதுபோலவும், இனி அதில் குறுக்கிட என்னால் இயலாதென்பதையும் அப்போதே புரிந்துகொண்டேன்.

சூதாட்ட விடுதியில், அப்பாவின் வழக்கமான தந்திரத்தினால், வெகுசீக்கிரமாகப் பிரிந்திருந்தோம். நானும் எல்சாவும் பாரில் வந்தமர்ந்தோம். எங்களோடு எல்ஸா(Elsa)வுக்கு அறிமுகமான தென் அமெரிக்க நண்பனொருவன். அவன் அரை மயக்கத்திலிருந்தான். நாடகத் துறையில் இருக்கிறானென்று அறிந்தேன். மது மயக்கத்திலிருந்தபோதும் நாடகத்தைச் சிலாகித்துப் பேசியபடியிருந்தான். சுமார் ஒருமணிநேரமாயினும் அவனோடு சந்தோஷமாக நேரத்தைக் கழிந்திருப்பேன், இடையிடையே எல்சாவின்(Elsa)தொந்தரவுகளோடு. இம்மாதிரியான ஒன்று அல்லது இரண்டு பைத்தியங்களை அவ்வப்போது எல்ஸா தெரிந்துதான் வைத்திருந்தாள். என்ன.. நுணுக்கமான விடயங்களைப் பேசுவதென்றால் ஓடிவிடுவாள். சட்டென்று என் அப்பாவை தேட ஆரம்பித்தாள். என்னைக் கேட்டாள், ஏதோ என்னிடத்தில் சொல்லிவிட்டு அப்பா போயிருப்பதைப்போல. எங்களை விட்டு விலகிச் சென்று தேடினாள். தென் அமெரிக்கன் சட்டென்று சோர்ந்துபோனான். விஸ்கி உள்ளிறங்கியதும் பழைய நிலைக்குத் திரும்பினான். என்னிடத்திலும் வேறு சிந்தனைகளில்லை. அவனது தீர்த்தவைபவத்தில் கலந்துகொண்டவள் என்றவகையில் ஒருவகை மகிழ்ச்சி. அவன் என்னோடு நடனம் ஆடவேண்டுமென தனது விருப்பத்தைத் தெரிவிக்க, நிலமையின் தீவிரம் புரிந்தது. என்னிடமிருந்து தள்ளிபிடித்தபடி, கால்களையும் அவனிடமிருந்து காத்துக்கொண்டு ஆடுவதென்பது சாதாரண விஷயமா? அதற்கு நிறைய தெம்புவேண்டும். நாங்களிருவரும் மகிழ்ச்சியாக இருந்தநேரம், ‘எல்ஸா’ எனது தோளைத் தட்டினாள். திரும்பினால் ஏதோ ‘கசாந்துரு'(3)மாதிரி எதிரே நிற்கிறாள். ‘எங்கேயாவது ஒழிந்து போயேன்’ என்றுகூட சொல்ல நினைத்தேன்.

” – அவரை கண்டுபிடிக்க முடியலை”, என்கிறாள்.

அவளைப் பார்க்க ஏதோ, புத்திபேதலித்தவள் மாதிரி தெரிந்தது. முகத்துக்கிட்டிருந்த மாவு, போனவிடம் தெரியவில்லை. அவளது இயல்பான முகத்துடனிருந்தாள், முகத்திலிருந்த கோடுகளை வகைப்படுத்த முடிந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தாள். அப்பாமீது கோபம் கோபமாக வந்தது. கொஞ்சங்கூட நாகரீகமற்ற மனிதர்.

” – ஆ!.. அவர்கள் எங்கே இருப்பார்களென்று எனக்குத் தெரியும், சிரித்தபடி சொல்லுகிறேன். ஏதோ சாதாரண விடயம்போலவும், கவலைகொள்கிற அளவிற்கு பெரிதாக அதில் ஒன்றுமில்லையென்பதும் எனது சிரிப்பிற்கான பொருள். இதோ வந்துடறேன்.”

நான் புறப்பட்டதும் பிடிப்பின்றி விழ இருந்த தென் அமெரிக்கனை, சட்டென்று எல்சா (Elsa) மார்பில் தாங்கிக்கொண்டாள், அவனுக்கும் அது கொஞ்சம் சௌகரியமாக இருந்திருக்குமென நினைக்கிறேன். எல்சாவினுடைய மார்புகள் பெரியவை, அவற்றை என்னுடையதோடு ஒப்பிட்டுப்பார்க்க, ஒருவகையில் வருத்தமென்றுதான் சொல்லவேண்டும் அதற்காக அவளை வெறுக்க என்னால் முடியுமா என்ன? சூதாட்ட விடுதி பெரியது: இரண்டு முறை சுற்றிவந்தும், பலனில்லை. திறந்தவெளியில் போட்டிருந்த இருக்கைகளையும் அலசிப் பார்த்தாகிவிட்டது, கடைசியில் காரின் ஞாபகம் வந்தது.

கார்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள். அப்பாவையும், ‘ஆன்’னையும் பிடிக்க கணிசமாகவே நேரம் தேவைபட்டது. ஒருவழியாக கண்டுபிடித்தேன். பின்புறம் சென்று கண்ணாடிவழியாகத் தலையைப் தாழ்த்திப்பார்க்க, மிகம் நெருக்கமாகவும், முகம் சுளிக்கும்வகையிலும் இருந்தார்கள். மின்சாரவிளக்குக் கம்பத்தின் கீழிருந்து பார்க்க வித்தியாசமான அழகொன்றினை அங்கே கண்டேன். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர், மெல்ல முணுமுணுப்பதை உறுதிப்படுத்தும் உதடுகளின் உலாத்தல். எனக்குத் திரும்பிபோய்விடலாம்போலிருந்தது. எல்சா(Elsa)வை நினைத்தவளாய், காரின் கதவினைத் திறந்தேன்.

அப்பாவுடைய கை ஆன்(Anne)னுடைய கைமேல் கிடந்தது. அவர்களிருவரும், நான் நிற்பதை கவனித்ததாகத் தெரியவில்லை.

” என்ன.. இரண்டுபேரும் ரொம்ப சந்தோஷத்தில இருக்கிற மாதிரி தெரியுது? அமைதியாகவே கேட்டேன்.

– என்ன வேண்டும்? உனக்கு இங்கென்ன வேலை? அப்பாவின் வார்த்தைகளில் கோபம் தெறித்தது.

– இது நான் கேட்கவேண்டிய கேள்வி. உங்களுக்கு இங்கென்ன வேலை? கடந்த ஒரு மணிநேரமா எல்ஸா உங்களைத் தேடாத இடமில்லை.”

ஆன் விருப்பமில்லாதவள்போல தலையைத் திருப்பினாள்.

” – நாங்க வில்லாவுக்குத் திரும்பணும், எனக்கு உடம்புக்கு முடியலை. அதனால அப்பா வீட்டுக்கு என்னை அழைச்சுபோறதா, அவளிடத்தில சொல்லு. நீங்களிருவரும், போதுங்கிறவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு, என்னுடைய காருல வந்திடுங்க.”

எனக்குநேர்ந்த கடுகடுப்பில், என்ன பேசுவதென்று தெரியாமல் தவிக்கிறேன்.

” – ‘போதுங்கிறவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு!’ என்ன சொல்ற? இப்படிப் பேச எப்படி முடியுது? கேட்கிறதுக்கு அசிங்கமா இருக்கு!

– இதிலென்ன அசிங்கம்? அப்பாவின் கேள்வியில் ஆச்சரியம் தொனித்தது.

– சிவத்த தோலுடைய ஒருத்தியை, வெயிலில் காய்வதென்பது, அவளுடம்பிற்கு ஆகாதென்று அறிந்திருந்தும், கடற்கரைபிரதேசமொன்றுக்கு அழைத்து போவீர்கள், அங்கே அவள் தோலுரிந்து வாடிக்கொண்டிருக்கிற நேரத்தில் அம்போவென்று தவிக்க விடுவீர்கள், சரியா? இதெல்லாம் உங்களுக்கு அற்ப சங்கதி, அப்படித்தானே? சரி இப்போ எல்சாவிற்கு என்ன பதிலை சொல்ல?”

ஆன் எனது தகப்பனாரைப் பார்க்கிறாள். களைத்திருந்தாள். அவர் சிரிக்கிறார். நான் கூறியது எதுவேணும் அவர் காதில் விழுந்திருக்குமா? இல்லையென்று தான் சொல்லவேண்டும். அவர்களது கோபத்தின் விளிம்பை பார்க்க நினைத்தவள்போல,

“- என்ன சொல்லணும்? அப்பா இப்போ இன்னொரு பொம்மனாட்டியை கண்டுபிடிச்சு, அவளோட படுத்துக்கொண்டிருக்கிறார், அந்தப் பொம்மனாட்டியும் கூர்தீட்ட ஒத்தாசைபண்றா¡ண்ணு சொல்ணும் அவ்வளவுதானே?”

அப்பா திகைத்துப்போவதும், ஆன்(Anne) எனது கன்னத்தில் அறைவதும் ஒரே நேரத்தில் நடந்து முடிகிறது. ஏகத்திற்கும் வலிக்கிறது. கார்க் கதவிலிருந்து எனது தலையை இழுத்துக்கொண்டேன்.

” – மன்னிப்பு கேட்டாகணும்”- அப்பா.

கதவருகில் சிறிதுநேரம் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்துடன் நின்றேன். அவசரபட்டுவிட்டோமாவென்று தோன்றியது. நல்ல புத்தி தாமதமாகத்தான் வருமில்லையா?

” – இங்கே வா”- ஆன்

மிரட்டல் தொனி அவள் குரலில்லை, என்பதை உணர்ந்தவளாய், நெருங்கினேன். எனது கன்னத்தை வருடினாள். என்னை மண்டூகமென்று நினைத்தவள்போல நிதானமாகவும், பரிவுடனும் பேசினாள்.

” – அசடு.. அசடு..இப்படியெல்லாம் நடந்துக்கக்கூடாது. எல்ஸாவை நினைச்சா, வருத்தமாகத்தான் இருக்கு அதற்காக என்ன செய்யமுடியும். நிலைமையை எப்படி சமாளிக்கிறதுங்கிறதை, உனக்கு சொல்லிக்கொடுக்கணுமா என்ன?. நாளைக்கு விபரமா பேசலாம். ரொம்பவும் பலமா அடிச்சுட்டேனா?

– ம்.. அதையெல்லாங்கூட உங்களால் நினைச்சுப்பார்க்க முடிகிறதா? அமைதியாகக் கேட்டேன். சற்றுமுன்புவரை என்னிடமிருந்த கோபத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முந்த நினைத்த எனது நல்லதனம் மனதை இளக்க, அழவேண்டும்போலிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்க அவர்களிருவரும் புறப்பட்டுச் போனார்கள், எல்லாவற்றையும் இறக்கிவைத்ததுபோல உணர்வு. இருந்த ஒரே ஆறுதல், பிரச்சினையை கையாளுவதில் எனக்குள்ள சாமர்த்தியம். மீண்டும் சூதாட்டவிடுதிக்கு வருகிறேன். அங்கே எல்சாவை மறுபடியும் கண்டேன். தென் அமெரிக்கன் கைகளில் கட்டுண்டிருந்தாள்

” – ஆன்னுக்கு உடம்புக்கு முடியலை, அப்பா அவசியம் அவளை வீட்டுக்குக் கூட்டிபோக வேண்டியிருந்தது. நாம ஏதாச்சும் குடிக்கலாமா?” அவளிடத்தி மெதுவாய்க் கூறினேன்.

என்னைப் பார்த்தாளே தவிர, பதில் சொல்லவில்லை. நான் சொன்னதை உறுதிப்படுத்துவதற்காக கூடுதலாக சொற்கள் தேவைபட்டன.

” – அவளுக்குக் குமட்டல். அணிந்திருந்த ஆடைமுழுக்க அசிங்கமாயிட்டுது, பார்க்க சகிக்கலை.”

இந்த விளக்கம் நான் சொல்லவந்ததை உண்மையென்று நம்பவைக்கப் போதுமானதாகயிருந்தது. எல்ஸா மெதுவாக ஆனால் பரிதாபமாக விம்மி அழுதாள். எப்படித் தேற்றுவதென்று புரியாமல், குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன்.

” செஸில்.. ஓ செஸில், எத்தனை சந்தோஷமா நாம இருந்தோம்….” – எல்ஸா.

அவளது விம்மலும், அழுகையும் இருமடங்கானது. ‘ஆமாம் நாம எத்தனை சந்தோஷமா இருந்தோம், எத்தனை சந்தோஷமா இருந்தோம்’ எனத் திரும்பத் திரும்ப கூறியபடி தென் அமெரிக்கனும் அழ ஆரம்பித்துவிட்டான். எனக்கு அப்பாமீதும், ஆன்மீதும் ஏராளமாய்க்கோபம். இமைமயிரிலிருந்து மஸ்கார கரைய கரைய எல்ஸா அழுதுக்கொண்டிருக்கிறாள், போதாதற்கு தென் அமெரிக்கன்வேறு, அவன் பங்குக்கு அழுகிறான். இதை நிறுத்த ஏதேனும் செய்தாக வேண்டும்.

” – உங்கிட்ட நான் சொல்றதுக்கு நிறைய இருக்கு, எங்கூட வா.

– இல்லை செஸில். நான் வருவதற்கில்லை நீ புறப்படு. கூடிய சீக்கிரம் என்னோட உடமைகளை எடுக்கணுங்கிறதுக்காக வேண்டுமானால் வில்லாவுக்கு வருவேன், நாம ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டு நல்லபடியாகத்தானே இருந்தோம்.”

எல்ஸாவிடத்தில் பெரும்பாலும் கால நிலவரம், உடை அலங்கார விடயங்களில் புதிதாக என்ன அறிமுகமாகியிருக்கிறது என்பதைத் தவிர வேறு விடயங்களை, நான் பேசியதில்லை, எனினும் அன்றைய தினம் எனது நெடுநாளைய தோழி ஒருத்தியைப் பிரிவதுபோல உணர்ந்தேன். சட்டென்று திரும்பி நடந்தவள், கார்வரை ஓடினேன்.

————————————
1. Be-bop – ஒரு வகை ஜாஸ்(Jazz) நடனம்.
2. Convertible -Car – கோடை நாட்களில் மேலே மூடவும், திறக்கவும் வசதியுடைய கார்
3. Cassandre – கிரேக்க இதிகாசப்படி, ட்ராய்(Troy) மன்னன் பிரியாம்(Priam)முடைய மகள். நடக்கவிருந்ததை – ட்ராய் போர் உட்பட- அவளால் துல்லியமாக சொல்லமுடிந்தபோதும், ஒருவரும் நம்பியதில்லை..

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அடுத்துவந்த நாட்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எதுவென்று சொன்னால், எல்சாவிடத்தில் ஆன் காட்டிய அளவுக்கதிகமான கரிசனம். அர்த்தமற்ற அவளது பேச்சைக் கேட்டபிறகும் எல்சாவை விமர்சித்து வார்த்தைகளேதுமில்லை. எதையும் இரத்தினச் சுருக்கமாக சொல்லியாகவேண்டும், அதற்கானக் காரணத்தை அவள்மட்டுமே அறிந்திருந்தாள். எனவே அவளது வழக்கப்படி இரண்டொருசொற்களில் எல்சா(Elsa) உடைய அபத்தத்தை மூடிமறைக்க முயற்சித்தும் இருக்கலாம். அவளது பொறுமையையும், கனிவையும் காண பிரம்மிப்பாகவிருந்தது. அவள் சாமர்த்தியக்காரி, அவளது செய்கைக்கான உட்பொருளை உணர்ந்துகொள்ள நான்தான் தவறியிருந்தேன். அப்பா, இதுமாதிரியான பேய்விளையாடல்களுக்கு ஏற்றவரல்ல, எளிதில் களைத்துபோகும் சுபாவம். எனினும், ஆன்(Anne)ன்னிடம் மரியாதை இருந்தது. நன்றி என்கிற சொல்லை அவசியம் உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயம் அவருக்கிருந்தது. ஒருவகையில் இந்த’நன்றி’கூட பெரிய அளவில் அவள் இவருக்குச் செய்திருக்கும் உதவிக்கு ஒரு சிறு சைகை அவ்வளவுதான். உண்மை, ஆன் அவரது மரியாதைக்குரியவள், அவரது மகளுக்கு இரண்டாவது தாயாகவிருந்து சில கடமைகளை ஆற்றியிருக்கிறாளில்லையா? அதற்காக. தவிர, அவளுடைய பாதுகாப்பில் என்னை விடவும், என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஆன்னைக் குற்றஞ்சொல்லவும், எனக்கும் அவளுக்குமான இடைவெளியைப் பெரிதும் குறைக்கவும், நாங்கள் அன்யோன்யமாக இருக்கவும், ஒருவகையில் அப்பா கொண்டிருந்த மரியாதை, துருப்புச்சீட்டாக அவருக்குப் பயன்பட்டது. ஆனால் அவளை அப்பா பார்க்கிற பார்வைம், அவரது சேட்டைகளும், ஏதோ முன்பின்தெரியாத பெண்ணிடத்தில், அவளைத் தெரிந்துகொள்ள ஆசைபட்டு ஓர் ஆடவன் நடந்துகொள்வதுபோலவிருந்தது. இப்படியான மனோபாவத்தை ‘சிரில்'(Cyril) இடத்திலும் கண்டு வியப்படைந்திருக்கிறேன். அதுபோன்ற நேரங்களில், அவனிடமிருந்து விலகிக்கொள்ளவோ அல்லதுஅவனைச் சீண்டிக் கோபமூட்டவோ செய்வேன். ஆன்(Anne)அளவிற்கு எனக்குத் தைரியம் காணாது, சுலபாய் என்னை ஒருவர் வீழ்த்தலாம், அப்பாவுடைய அத்தனை விளையாட்டினையும் திடமாய் எதிர்கொண்ட அவளதுமனம் ஒருவகையில் எனக்கு நிம்மதியையும் அளித்தது. ஆரம்பத்தில் அவளைத் தவறாகத்தான் எடைபோட்டிருக்கிறேன், ஒருவரும் குற்றம் சொல்லமுடியாத அவளது இந்த நல்லகுணத்தின் காரணமாக அப்பா உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. அவளுடைய அமைதி, அதிலும் இயல்பாக அவளிடமிருந்த நிதானமான குணம், அதை வெளிப்படுத்தும் அழகு… எல்சா இடைவிடாது கீச்சுக்குரலில் எதையாவது சொல்லிக்கொண்டிருக்க, நிழலுக்கெதிரான சூரியனைப்போல, அப்பாவும் ஆன்னும் அவளுக்கெதிராக கைகோர்த்திருந்தார்கள். பாவம் எல்சா, அவளைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறியாமலிருந்தாள். வழக்கம்போல சந்தோஷமும் சஞ்சலமுங்கொண்ட பெண்ணாக, கிடைத்த நேரங்களில் வெயிலிற் கிடந்து உடலைக் வாட்டிக்கொள்பவளாகவும் இருந்தாள்.

ஒரு நாள், எல்சா உண்மையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும்: மதிய உணவிற்காக நாங்கள் அமர்ந்தோம், அப்பாவின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பியவள் அவரது காதில் என்னைத்தையோ முனுமுனுக்கிறாள்,அடுத்தநொடி, அப்பாவின் முகம் சுருங்கிப்போனது, பிறகு சமாளித்தவராக மெல்ல சிரித்தபடி தலையை ஆட்டினார். உணவிற்குப்பிறகு கடைசியாய் அனைவரும் காப்பியைக் குடித்துமுடித்ததும், எல்சா எழுந்துகொண்டாள், கதவை அடைந்ததும் எதையோ பறிகொடுத்தவளைப்போல எங்களைப்பார்க்க, அமெரிக்க திரைப்படத்தில் வருகிற காட்சிகளை நினைவூட்டினாள். அடுத்து பேசியபோது, குரலில் பிரெஞ்சுகாரர்களுக்கேயுரிய அத்தனை வக்கணையுமிருந்தது.

“- ரெமோன்(Raymond), நீங்கள் வருகிறீர்களா?”

அப்பா எழுந்தார், முகம் கிட்டத்தட்ட சிவந்திருந்தது. தன்னை எல்சா நடத்தும் விதத்தினாலெழுந்த அவமானமா அல்லது கோபமா எனப் புரிந்துகொள்ள கடினமாகவிருந்தது. அவளைப்பின்தொடர்ந்தவர், அதை நியாயபடுத்துவதைபோல, மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் கண்ணயர்வதால் ஏற்படுகிற நன்மைகளை சிலாகித்துச் சொன்னார். ஆன் வாய் திறக்கவில்லை. அவளது விரலிடுக்கில் சிகரெட்டொன்று புகைந்துகொண்டிருந்தது. இறுக்கத்தைக் குறைக்க ஏதேனும் நான் பேசியாகவேண்டும்:

” இப்பல்லாம் பலரும் ஓய்வென்றுசொன்னால் கொஞ்ச நேரமாகிலும் தூங்கணுமென்று நினைக்கிறாங்க, ஆனா அதிலே உண்மையில்லை…”

சட்டென்று பாதியில் நிறுத்திக்கொண்டேன், வாக்கியத்தின் உள்ளர்த்தத்தை உணர்ந்ததால் வந்த வினை.

“‘செஸில், தயவு செய். தத்துபித்தென்று எதையாவதுச் சொல்லிக்கொண்டிராதே” ஆன் வார்த்தைகள் உணர்ச்சிகளற்று ஒலித்தன.

எனது பேச்சை சில்லுண்டித்தனமானதென்று நினைத்தாளேயொழிய, அதில் விகற்பமிருக்குமென்று நினைக்கவில்லை. அவளை நேராகப் பார்த்தேன், விச்ராந்தியான முகம், அமைதியை வலியத் திணித்திருந்தாள். புரிந்துகொண்டதும் மனம் நெகிழ்ந்தது. ஒருவேளை, இந்த நேரத்தில் எல்சாமீது அவளுக்கு ஆசை வந்திருக்குமோ? அவளை சமாதானபடுத்த நினைத்தேன். விஷமத்தனமாக ஒர் எண்ணம் பிறந்தது. வழக்கம்போல மனதிற்குள் சந்தோஷம்: எனக்கு நானே ஏற்படுத்திக்கொள்ளும் ஒருவிதப் பாதுகாப்பு வளையம், ஒருவித போதை, என் உடந்தைக்குற்றவாளி யாரென்று நினக்கிறீர்கள்? சாட்ஷாத் நான்தான். அது உரத்து ஒலித்தபோது, தடுக்க முடியவவில்லை.

“- பார்..வெயிலில் சதா படுத்துபடுத்து எல்சா உடலை எப்படியெல்லாம் வாட்டிக்கொண்டிருக்கிறாள், இந்த லட்சணத்தில், கொஞ்ச நேரம் தூங்கினா அப்படியென்ன பெருசா உதவிடும்? அவளுக்கு மட்டுமில்லை, வேறொருத்தருக்குங்கூட மதியத்துல கொஞ்சம் கண்ணயர்வதாலே, எந்தப் பலனுமில்லை.”

நான் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

“-இந்தமாதியான அபிப்ராயங்களை எங்கிட்டச் சொல்லாதே. உன்னோடவயசுக்கு, இத்தனை அசட்டுத்தனமா பேசுவேண்ணு நான் நினைக்கலை. கொடுமைடா சாமி.”

எனக்குச் சட்டென்று கோபம் வந்தது.:

-” சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். தப்பென்றால் மன்னிப்பு கேட்கிறேன். உறுதியா நான் நம்பறேன்…அவர்கள் இரண்டுபேரும் உண்மையில் சந்தோஷமா இருக்காங்க.”

கோபாவேசத்துடன் என்னைப் பார்த்தாள். நிலைமையை புரிந்துகொண்டு தாமதமின்றி மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டவள், தாழ்ந்தகுரலில் நிதானத்துடன் பேச ஆரம்பித்தாள்:

“- உங்களுக்கு காதலென்பது ஒரு விளையாட்டு. பத்தோடு பதினொன்று, தன்னிச்சை உணர்வுகளின் ஒரு பரிமாணமாக அதை நீங்கள் பார்ப்பதில்லை….”

உண்மை, இதுவரை எனக்கேற்பட்ட காதல் அனுபவங்களை அந்த வகையில்தான் சேர்க்கவேண்டும். வசீகரிக்கவல்ல ஒரு முகம், மெய்தீண்டல், ஒருமுத்தம் என ஏதோவொன்றிர்க்காக என்னையே மறந்ததும்…காரணமின்றி பரவசத்தில் திளைத்த கணங்களுமே என்னிடத்தில் காதலனுபவங்களென எஞ்சியிருப்பவை.

– ” செசில், காதலை வேறமாதிரியும் பொருள்கொள்ளலாம்: நிலையான அன்பு, இனிமை, பிரிவாற்றாமை….ம்.. இவைகளைக் குறித்து உன்னிடத்தில் பேசி என்ன ஆகப்போகிறது? உனக்குப் புரியவும் புரியாது.” – ஆன்.

உணர்வுகள் விடயத்தில் எனக்குப் போதிய ஞானமில்லை, ஒத்துக்கொள்கிறேன். அதற்காக கோபத்தோடு என்னைக் கண்டித்திருந்தால்கூட ஏற்றுக்கொண்டிருப்பேன். அதற்குப்பதிலாக, ‘ஆன்’ என்னைத் தவிர்க்க நினைத்தவள்போல கையில், செய்தித்தாளைப் பிரித்துவைத்துக்கொண்டாள். எண்ணிப்பார்க்க, அவள் தரப்பிலும் நியாயமிருந்தது. என்னை முறையுடன் நடத்தவேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியல்ல. இன்றைய தேதியில் எனக்கு விலங்கினும் கேவலமான வாழ்க்கை, எடுப்பார் கைப்பிள்ளை, கையில் பணமில்லை, அபலைபெண்ணென்று சொல்லிக்கொண்டாலும் தப்பில்லை. இதற்கு முன்பு என்னை நானே நல்லவளென்றோ கெட்டவளென்றோ விமர்சித்துகொள்ளுகிற நெருக்கடிகள் எனக்கு ஏற்பட்டதில்லை. மேலேயுள்ள எனது அறைக்குச் சென்றேன், ஏதேதோ கனவுகள், கட்டிலிற் கிடந்த எனது விரிப்புகள் வெதுவெதுப்பாயிருந்தன, ஆன்னுடைய குரல் இடைவிடாமல் காதில் ஒலிக்கிறது: “செசில், காதலை வேறமாதிரியும் பொருள்கொள்ளலாம்,…ஒரு வகை பிரிவாற்றாமை.” யாரேனும் ஒருத்தரைப் பிரிந்து எப்போதேனும் நான் வாடியதுண்டா?

இந்த பதினைந்து நாட்களாக என்ன நடந்ததென்கிற ஞாபகமில்லை. என்னை அச்சுறுத்திய எதையும் அல்லது ஆழமாக எதனையும் புரிந்துகொள்ளும் ஆர்வம் என்னிடத்திலில்லையென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் அடுத்துவந்த நாட்களில் என்ன நடந்ததென்பதை வரிசையாகச் சொல்லமுடியும், காரணம் எல்லாவற்றிலும் முழுமனதோடு முடிந்த அளவு நான் பங்கெடுத்திருக்கிறேன். இந்த மூன்று வாரங்களில் அதாவது மொத்தத்தில் சந்தோஷமாக கழிந்த மூன்று வாரங்களில் நிறைய சம்பவங்கள்… ஒருநாள் சிரித்து மழுப்பியபடி தனது உதாசீனத்தை ஆன் வெளிப்படுத்த, அப்பா உரத்தகுரலில் அவளைக் கண்டித்தார். மற்றொருநாள், அரைகுறை ஞானங்கொண்ட எல்சாவினுடைய பேச்சை ஆன்னுடைய சாதுரியத்தோடு ஒப்பிட்டு, சிரிக்காமல் விமர்சித்தார். இவ்விரண்டு சம்பவங்களிலும், ஆன்னை நேரிடையாய் பார்த்து அப்பா பேசியது என்றைக்கென்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். வேறொரு விஷயமும் எனக்குத் தெளிவானால்தான் நிம்மதி: கடந்த பதினைந்துவருடங்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கறிவர், அவர்களுக்குள் ஆசையிருந்தால் காதலர்களாக இருந்திருக்கக்கூடும். அட… இனிதான் அவர்களிருவரும் காதலிக்கட்டுமே, அதனாலென்ன? மிஞ்சிப்போனால் மூன்றுமாதங்கள் அப்பா தீவிரமாக ‘ஆன்’னைக் காதலிக்கக்கூடும், அதன்பிறகு அவளுக்கு மிஞ்சப்போவது ஒருசில அவமானங்களும், கொஞ்சம் காதல் அனுபவங்களுமன்றி வேறல்ல. எனினும் ஆன் சுலபத்தில் பிறரால் கைவிடப்படகூடிய பெண்மணியல்லவென்று எனக்குத் தெரியாதா என்ன? எனக்கென்று சிரில் இருக்கிறான், எனது பல கேள்விகளுக்கும் அவனிடத்தில் விடையிருக்கையில் வேறென்ன வேண்டும். சிரிலும் நானும் பெரும்பாலும் மாலைவேளைகளில் சென்-த்ரொப்பேஸ் (Saint -Tropez) இரவுவிடுதிகளுக்கு செல்வதுண்டு. அங்கே அவ்வப்போது அடங்கி ஒலிக்கும் கிளாரினெட்டொன்றுக்கு, இரவுமுழுக்க இனிக்க இனிக்க காதல் மொழிகளை பாரிமாறியபடி ஆடிமுடித்து வில்லாதிரும்பினால், மறுநாள்காலை அத்த்னையும் மறந்திருக்கும். பகலில் கடற்கரையையொட்டி விளையாட்டுப் பாய்மரப்படகில் பயணித்து பொழுதுபோக்குவது எங்கள் வழக்கம். சிலசமயம் அப்பாவும் எங்களுடன் கலந்துகொள்வதுண்டு. சிரிலை பெரிதும் சிலாகிப்பார். அதிலும் ஒருமுறை நீச்சலில் இவர் வெற்றிபெறட்டுமென்று அவன்விட்டுக்கொடுத்ததிலிருந்து, கூடுதலாகவே பிரியம் காட்டினார். அப்பா ”மோன் பெத்தி சிரில்”(l), என்றழைக்க பதிலுக்கு அவன் அப்பாவை “மிஸியே”(2) என்றைழைத்தான். இருவரும் வயது வித்தியாசமின்றி பழகினார்கள்.

பிற்பகலில் ஒரு நாள், தேநீர் குடிக்கவென்று சிரில் வீட்டிற்கு அனைவரும் சென்றோம். வீட்டில் சிரிலுடைய அம்மாவைச் சந்திக்க முடிந்தது. வயதுகூடிய பெண்மணி, புன்னகையுடன் கூடிய அமைதி தவழும் முகம், விதவையாகவும் தாயாகவுமிருந்து அவள் படும் இன்னல்களை எங்களிடத்தில் நிறைய பேசினாள். அப்பாவுக்கு மனம் இளகிவிட்டது, ஆன்னை நன்றியுடன் பார்த்தார், சிரிலுடைய அம்மாவை வாய்கொள்ள புகழ்ந்தார். இவ்விடத்தில் ஓருண்மையை உங்களிடத்தில் சொல்லவேண்டும். அப்பாவுக்கு நேரத்தின் அருமை தெரியாது, பேச ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். நடந்ததை அனைத்தையும் வெறுமனே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஆன், வழியில் ‘சிரிலுடைய அம்மா’ எல்லோராலும் விரும்பத்தக்கப் பெண்மணியென்று, பாராட்டுப்பத்திரம் வழங்கினாள். உலகிலிருக்கிற அத்தனைகிழங்களையும் சாபமிட்டபடி கலகலவென்று சிரித்தேன். உடன் வந்தவர்கள் சிரிப்பில் ஒருவித ஏளனமும், சந்தோஷமும் கலந்திருக்க, நான் என்னை மறந்து கத்தினேன்:

“- அந்தக்கிழத்தை நீங்க சரியா புரிஞ்சுக்கலை. நீங்க நினைப்பதுமாதிரி அவளுக்குப் பிரச்சினைகளில்லை, சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். ‘தனக்குரிய கடமையை செய்துமுடிச்சுட்டேனென்கிற’’ தற்பெருமை வேற அவளுக்கு பிறகு…

– உண்மைதான். இல்லைண்ணு சொல்லமுடியுமா? ஒரு பெண்ணாக இருந்து ஆற்றவேண்டிய அத்தனை கடமைகளையும் தவறாமல் செய்திருக்கிறாள்: தாயாக, மனைவியாக.. பிறகு அடுத்தது என்ன?” ஆன் சொல்லி முடிக்கவில்லை இடையில் குறுக்கிட்டேன்;

– தெவடியாள் கடமை. அதையும்கூடவிடவில்லை, அப்படித்தானே? – நான்.

– இம்மாதிரி தடித்தவார்த்தைகளை கேட்க நான் தயாரில்லை. ஏட்டிக்குப்போட்டியா எதைச் சொன்னாலும் எனக்குப்பிடிக்காது.

– ஏட்டிக்குப்போட்டியா என்னத்தைச் சொல்லிட்டேன். உலகில் நடப்பதைத்தானே சொன்னேன். விருப்பத்தின் பேரிலோ, விரும்பிய சுகத்தை அடையவேண்டியோ, எல்லாப் பெண்களும் திருமணம் செய்துக்கொள்வதைப்போலவே, அவளும் செய்தாள். பிள்ளையும் பெற்றுக்கொண்டாள். எப்படி பிள்ளை பெற்றுக்கொள்வதென்று உனக்குத் தெரியுமில்லையா?

– உன் அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சுவச்சிருக்கேன்.

– பிறகென்ன, பிறந்த பிள்ளையை வளக்கணுமில்லையா? வளர்த்திருக்கிறா. நல்லவேளை, சோரம்போகாம இருந்ததாலே, நெருக்கடிகள், கவலைகள்னு எந்த பிரச்சினைகளிலும் சிக்காம தப்பிக்க முடிந்திருக்கிறது. சராசரி பெண்களுக்கான வாழ்க்கை அவளுக்கும் அமைஞ்சிருக்கு, அதை பெருமையா வேற நினைக்கிறா. இதெல்லாம் உங்களுக்கும் புரிஞ்சிருக்கணும்…மேட்டுக்குடிவர்க்கத்தைச் சார்ந்த ஓர் இளம்மனைவியாகவும், தாயாகவும் வாழ்ந்தவள், அந்த எண்ணத்தில் இன்னமும் ஊறிக்கிடக்கிறாள். அதிலிருந்து கரையேற எந்த முயற்சியும் அவள் மேற்கொள்ளவில்லை. இதைச்செய்யவில்லை அதைச் செய்யவில்லையென அவளால் பெருமைபட்டுக்கொள்ளமுடிகிறதே தவிர எதையாவது செய்து முடித்தற்கு பெருமைப்படமுடிகிறதா?.

– உருப்படியாய் ஏதாவதிருந்தால் சொல்லு – அப்பா.

– வானம்பாடிக்கு கண்ணாடி காட்டறதுபோல(3) உங்களை இரக்கத்தைத் தனது பேச்சு சாதுரியத்தால் கிழம் சுலபமா சம்பாதிச்சிட்டுது. ‘என்னோட கடமையைச் செய்தேன்’ அப்படிண்ணு ஒருத்தர் சொன்னால் , உருப்படியா எதையும் செய்யலைண்ணுதான் அர்த்தம். ஒரு நடைபாதை குடும்பத்தில் பிறந்து, பின்னர் நடுத்தெருவுக்கு வந்தவளுமாக இருந்து, இப்படியான காரியத்தைச் சாதித்திருந்தால், தாராளமாக அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம், -நான்.

– நீயென்ன பண்ணுவ, இப்படியெல்லாம் பேசுவதென்பது சமீபத்தில் ஒரு நாகரீகமாகவே வளர்ந்துட்டுது. ஆனால் இதற்கெல்லாம் எந்த மரியாதையும் இல்லை.- ஆன்

அவள் சொல்வது உண்மையாக இருக்கலாம். தவிர என்னுடைய சிந்தனையும் பேச்சும் ஒன்றாகத்தான் இருந்தது. மற்றவர்களும் என்னை அப்படித்தான் விமர்சித்தார்கள். அப்பாவுடைய வாழ்க்கையும் சரி அல்லது என்னுடைய வாழ்க்கையும் சரி, இதன் அடிப்படையில்தான் அமையவிருந்தன. ஆன் என்னை அநியாயத்திற்கு நிந்தித்து, காயபடுத்தினாள். ஊர்பேர்தெரியாத பிரச்சினைகளில் அக்கறைகொள்கிறபோது உபயோகமற்ற விடயங்களில் அக்கறை கொள்வதில் என்ன தப்பென்று கேட்கிறேன்? இவளுக்கும் சிந்திக்கவருமென்கிற எண்ணம் ஆன்னுக்கு ஒருபோதும் தோன்றாது. ஆன் என்மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயத்திற்கு, உடனடியாக தீர்வுகாண வேண்டும், மிகவும் அவசரம். அதற்கான சந்தர்ப்பம் இத்தனை சீக்கிரம் எனக்கு வாய்க்குமென்றோ, அதனைச் சரியாக என்னால் பயன்படுத்திக்கொள்ளமுடியுமென்றோ நான் நினைக்கவில்லை. தவிர, நான் ஒருபோதும் நிலையான கருத்துக்குரியவளல்ல, அடுத்த ஒரு மாதத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எனது புத்தி வேறுவகையில் சிந்திக்கக்கூடும், மாற்று அபிப்ராயங்களை முன்வைக்கக்கூடும். இந்த லட்சணத்தில் என்னை தருமதேவதை என்று சொல்லிக்கொண்டால் எப்படி?
——————————————————————–

1. Mon petit Cyril -My little Cyril
2. Monsieur –sir
3. C’est un miroir aux alouettes

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வணக்கம் துயரமே!

பிரான்சுவாஸ் சகன்
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

அத்தியாயம் – 3

மறுநாள் காலை, கீழ்வானத்து தகிக்கும் கதிரொளி வெள்ளமெனப் பாய்ந்து அறையை நிரப்ப, நான் படுத்திருந்த கட்டிலும் வெப்பத்திலும், ஒளியிலும் சிக்கித் தத்தளித்தது, விழித்துக்கொண்டேன். இரவு முழுக்க, என்னுடன் மல்லுக்குநின்ற அர்த்தமற்ற அதிசய கனவுகளும் அதனால் முடிவுக்கு வந்தன. தூக்கக் கலக்கத்துடன், முகத்திற் படிந்திருந்த வெக்கையை, கைகொண்டு வழித்தெறியமுயன்று தோற்றேன். காலை மணி பத்து. பைஜாமா உடையில் பால்கணிக்கு இறங்கிவந்தேன். ஆன்(Anne) நாளேட்டின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தாள். முகத்தில் அளவாய் ஒப்பனை. ஆன்(Anne) எல்லோரையும்போல விடுமுறையை விடுமுறையாகக் கழிக்கும் பெண்மணியல்ல என்பதை மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தாள். அவளது கவனம் முழுக்க செய்தித் தாளிலிருக்க, நான் ஒரு கோப்பை காப்பியும், ஆரஞ்சு பழமுமாக, படிகட்டொன்றிலமர்ந்து காலைப்பொழுதின் இனிமையை மெல்ல ருசிக்கத் தொடங்கினேன்: ஆரஞ்சை வாய்கொள்ள கடித்தேன், பீறிட்ட இனிய சாறு, வாயை நிரப்பியது; ஒரு மிடறு காப்பியை சூடானபதத்துடன் விழுங்கினேன், அச் சூட்டினை தணிப்பதுபோல மீண்டும் வாய்கொள்ள ஆரஞ்சுப்பழம். அதிகாலை சூரியனால் எனது தலை கொதித்தது. போர்வை உடலில் ஏற்படுத்தியிருந்த சுவடுகளை வெப்பம் நீவிக்கொண்டிருந்தது. இன்னும் அய்ந்து நிமிடத்திற்குள் குளிப்பதற்கு இறங்கவேண்டுமென்று நினைக்கையில், ஆன்(Anne)னுடைய குரல் திடுக்கிடவைத்தது.

-” செசில்(Cecile), நீ காலையில் சாப்பபிடுவதில்லையா?

– இல்லை, காலைவேளைகளில் பழச்சாறு, காப்பிமாத்திரம் எடுத்துக்கொள்கிறேன்.

– எடையில் மூன்று கிலோவை கூட்டுவது அவசியம். உடம்பு கொஞ்சம் பூசினாபோல இருக்கணும். கன்னத்தில் குழிவிழுந்து, எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க சகிக்கலை. ரொட்டியிருந்தால் கொண்டுவா..வெண்ணெய், ஜாம் தடவி சாப்பிடு”

உணவு விஷயத்தில் வற்புறுத்தவேண்டாமென்று நான் கெஞ்ச, அவளோ, காலைவேளையில் வெறும் வயிற்றோடு இருக்கக்கூடாதென்கிறாள். அச்சமயம், அப்பா தனது ஆடம்பரம்பான புள்ளிபோட்ட டிரெஸ்சிங் கவுனில் அங்கு வந்தார்.

– “அடடா.. இதமான காலை வெயில்; உடல் நிறத்தை போதுமான அளவு குறைத்துக்கொண்டு அழகாய் இரண்டு இளம்பெண்கள்; ரொட்டி, வெண்ணெய் ஜாமென்று பேசிக்கொண்டிருப்பது; உண்மையில் கண்கொள்ளா காட்சி.

– ரெமோன்(Raymond) இங்கே இளம்பெண்ணென்றால் செசில்(Cecil) ஒருத்திதான். எனக்கு உங்கள் வயது.”

அப்பா, குனிந்து அவள் கைகளிரண்டையும் தமது கைகளில் வாங்கிக்கொண்டவர், “கடுகடுவென்றிருப்பதை எப்போது நிறுத்தபோகிறாயோ?, என்றார். பொய்க்கோபமும், கொஞ்சலும் சமவிகிதத்திலிருந்தன. அப்பாவின் எதிர்பாராத வார்த்தைத் தீண்டல்களால், ஆன்(Anne)னுடைய இமைகளிரண்டும் துடிப்பதைக் கவனித்தேன்.

இதுதான் சரியான நெரமென்று தீர்மானித்தவளாய், அங்கிருந்து தப்பித்தேன். மாடிபடிகளில் ஏறியபொழுது, எல்ஸா(Elsa) எதிர்ப்பட்டாள். நித்திரை கலைந்து அப்பொழுதுதான் எழுந்திருந்தாளென்பதுபோல விழிகளில் வீக்கமிருந்தது. அதரங்கள் வெளுத்திருக்க, கடுமையான வெயிலிற் படுத்துப்படுத்து உடலும் மோசமாக கண்றியிருந்தது. கீழே இறங்கவிருந்தவளை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆன்(Anne) முகத்தைக் கவனமாகத் திருத்திக்கொண்டு, அளவான ஒப்பனையுடன் ஆன்(Anne) அங்கே இருப்பதையும், உடலை சேதப்படுத்திக்கொள்ளாமல், சூரிய வெப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்கிற அவளது சாதுரியத்தையும் சொல்லி, எல்சாவை(Elsa) எச்சரிக்கவேண்டுமென்றும் நினைத்தேன். ஆனால், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ? எல்சாவுக்கு இருபத்தொன்பது வயது, ஆன்னைக்(Anne)காட்டிலும் பதின்மூன்று வயது இளையவள், தனதுடலை அக்கறையெடுத்துக் கவனிக்கவேண்டிய அவசியமேதுமில்லையென நினைக்கலாம்.

நீச்சல் உடையை எடுத்துக்கொண்டு, கடலுக்காய் ஓடினேன். சிரில்(Cyril), தனது படகுடன் அங்கிருப்பானென எதிர்பார்க்கவில்லை. என்னைப்பார்த்ததும் இறங்கிவந்தான், முகத்தில் வருத்தம் தெரிந்தது. எனது கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டவன்,

-“நேற்று நான் அப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. என்னை மன்னிக்கணும், .

– அது என்னோட தப்பு,”- என்றேன்.

நடந்ததைச் சுத்தமாய் மறந்திருந்தேன், உண்மையில் எவ்வித வருத்தமுமில்லை. அவனைப்பார்க்க, பரிதாபமாக இருந்தது, ஏதோ அபயம் கேட்டுவந்தவனைபோல.

-“என்னை மன்னித்தேனென்று சொன்னால்தான் நிம்மதி, படகை நீரில் தள்ளிக்கொண்டே பேசினான்.

– நான் எப்பவோ மறந்தாச்சு, விடுங்க வேறெதாச்சுமிருந்தால் சொல்லுங்க.

– என்னால மறக்க முடியலை.”

இதற்குள் படகில் ஏறி இருந்தேன். நீதிமன்றத்து சாட்சிக்கூண்டினைப் பிடித்தபடி நிற்பவன்போல, சிரில்(Cyril) முழங்கால் அளவு தண்ணீரில், படகைப் பிடித்துக்கொண்டு நின்றான். மனதிலிருப்பதை சொல்லிமுடிக்காமல் படகில் ஏறமாட்டானென்று தோன்றியது. எனது முழுக்கவனமும் அவன் மீதிருந்தது. கடந்த சில தினங்களில் அவன் மனதைப் ஓரளவு படித்திருந்தேன். அடுத்தது என்ன நடக்குமென்றும் தெரியும். தனது இருப்பந்தைந்து வயது இளமைக்கு, பிறரைக் கவரக்கூடிய வல்லமையுண்டென்று அவன் நம்பிக்கொண்டிருக்கிறான். கடவுளே! வாய்விட்டுச் சிரித்தேன்.

– “சிரிக்காதே. நேற்று, ஏதோவொரு தீர்மானத்தோடத்தான் நெருங்கினேன்பது, உனக்குத் தெரியும். என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியாது; அது உனது அப்பாவாக இருக்கட்டும், அந்தப் பெண்மணியாக இருக்கட்டும் அல்லது வேறு எவராகக்கூட இருக்கட்டும்… நானொன்றும் மோசமான ஆசாமி இல்லையென்கிறபோதும், நேற்றைக்கு அப்படித்தான் நடந்துகொண்டிருப்பேன்; அதன்பிறகு நீயும் என்னை…”

அவனுடைய பேச்சினை வெற்றுப் பிதற்றல்களாகக் கொள்வதற்கில்லை. நல்லவனென்பதும், என்னைக் காதலிக்க அவன் தயார் நிலையிலிருப்பதும், அவனைக் காதலிக்க எனது மனமும் விழைகிறதென்பதும், நான் புரிந்துகொண்ட உண்மைகள். எனது கரங்கள் அவனது கழுத்தைப் பின்னிக்கொண்டன, அவனது கன்னத்தில் எனது கன்னம், பிறகு அவனது பரந்த தோள்களில், அவனது உரம்வாய்ந்த உடலோடு உடலாக…

– “சிரில்! நீங்கள் மிகவும் நல்லவர், முணுமுணுத்தேன். நீங்கள் எனக்குச் சகோதரனாக பிறந்திருக்கணும்.”

ஆச்சரியம்கலந்த கோபத்துடன் என்னை வளைத்துப் பிடித்தவன், படகிலிருந்து மெல்ல என்னை விடுவித்தான். இறுகத் தழுவினான். நிமிர்த்தினான். எனது சிரத்தினை அவனது தோளில் வாங்கிக்கொண்ட அந்தக் கணத்தில், எனது மனதை அவனிடத்தில் முழுமையாக இழந்திருந்தேன். காலைநேர சூரிய ஒளியில் என்னிலும் பொன்னிறமாக, என்னிலும் மேம்பட்டவனாக, என்னிலும் மென்மையானவனாக இருந்தான். எனது உயிர்க்கு இரட்சகனாகவும் தெரிந்தான். அவனது அதரங்கள் என்னுடையதைத் தேடிவர, அவனது சரீரத்தைப் போலவே எனது சரீரத்திலும் அதிர்வுகள். எங்களிருவரின் முத்தபரிமாற்றங்களில் சஞ்சலமோ, தயக்கமோ இல்லை. அவ்வப்போது நாங்கள் முனகிக்கொண்டபோதும், ஆழ்ந்த பரிசோதனையில் எங்கள் முழுக்கவனமுமிருந்தது. அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். சற்று தொலைவில் மிதந்து கொண்டிருந்த படகை நீந்தி அடைந்தேன். குளிர்ந்த நீரில் முகத்தை அமிழ்த்தினேன், சுகமாகவிருந்தது. பலமுறைத் தொடர்ந்தேன். தண்ணீர் பச்சைவண்ணத்திலிருந்தது. மனதிலிருந்த பாரங்களெல்லாம் நீங்க, அவ்விடத்தை சந்தோஷம் நிரைத்தது.

மணி பதினொன்றரை, சிரில்(Cyril) புறப்பட்டுப் போயிருந்தான். அப்பா, அவரது இருபெண்சிநேகிதிகளை அணைத்தபடியும், அவர்கள் இருவரது கரத்தினையும், தமக்கேயுரிய குணத்தின்படி மாற்றிமாற்றி நாசூக்காய் பிடித்தபடியும் நடந்துவந்தார். ஆன்(Anne) குளிக்கும் அறை துவாலையுடனேயே வெளியில் வந்திருந்தாள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அவிழ்த்தவள், நீட்டிப்படுத்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தது, கச்சிதமான மெல்லிய உடல், அதற்கேற்ப நீண்ட கால்கள். ஆண்டுகள் பலவாக சரீரத்தின் மீது அவளுக்கிருந்த அக்கறையும் கவனிப்பும் உடல் வனப்பில் வெளிப்பட்டது. அதனை அங்கீகரித்தவளாக, எந்திரத்தனமாக, கண்கள் விரிய, பார்வையை, அப்பா பக்கமாகத் திருப்பினேன். நம்பமுடியவில்லை, அவளது அழகில் அக்கறையற்று கண்க¨ளை மூடிக்கொண்டிருந்தார். எல்சாவோ(Elsa)வோ, உடல் முழுக்க எண்ணெய் பூசிக்கொண்டு, சகித்துக்கொள்ளமுடியாதவாறிருந்தாள். இப்படியே இருந்தாளென்றாள், அப்பாவுக்கு ஒருவாரமெல்லாம் ரொம்பவும் அதிகமென்று தோன்றியது. ஆன்(Anne) என்பக்கம் தலையைத் திருப்பினாள்:

– “செசில்(Cecil)! இங்கே எதற்காக சீக்கிரம் எழுந்திடற? பாரீஸில், பகல் பன்னிரண்டு வரை தூங்கறதென்பது உனக்குத்தான் வழக்கமாச்சே?.

– அங்கே வேலைகள் அதிகம், அந்த அசதியிலெ தூங்கிடறேன்.

– அவள் புன்னகைக்கவில்லை. விரும்பினாலொழிய புன்னகைப்பவளல்ல. எல்லோரையும் போல, மரியாதைக்காக பல்லிளிப்பததெல்லாம், அவளிடத்தில் கிடையாது.

-” உன்னோட தேர்வு என்னாச்சு?

– கோட்டை விட்டுட்டேன் – நான். பதில் சட்டென்று வெளிப்பட்டது, எனக்கேதும் அதில் வருத்தமில்லை என்பதுபோல.

– அக்டோபரில் கண்டிப்பாக எழுது

– எதற்காக எழுதணும்? எங்கிட்ட எந்த பட்டமுமில்லை, பட்டயமுமில்லை. எனக்கென்ன சந்தோஷத்திற்கு குறைச்சலா? – என் தகப்பனார் குறுக்கிட்டார்.

– உங்க நிலைமை வேற. வேண்டிய அளவு உங்கக் கிட்ட ஆரம்பத்துலெயே பணமிருந்தது. அதனாலே படிப்பு அவசியமில்லாம இருந்திருக்கலாம்.

– அதனாலென்ன? வாழ்க்கையைக் அனுபவிக்கத் தெரிந்த ஆண்கள் எப்படியும் என் மகளுக்குத் தாராளமாக கிடைப்பார்கள், அப்பாவுடைய பதிலில் ஒருவித கர்வம்.

கலகலவென்று சிரித்த எல்சா(Elsa) எங்கள் மூவரையும் புரிந்துகொண்டு சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

-“இந்தக் கோடை விடுமுறையில், கொஞ்சமேனும் வேலைசெய்து அவள் சம்பாதித்தாகணும், கண்களை மூடியபடி ஆன்(Anne)கூறினாள். அவளது செய்கையில் உரையாடலை முடித்துக்கொள்ளும் எண்ணமிருந்தது.

ஏமாற்றத்துடன் அப்பாவைப் பார்த்தேன். அவர் சங்கடத்துடன் புன்னகைத்தார். மீண்டும் பெர்க்சனை(1) கையில் சுமந்துகொண்டு வாசிப்பதுபோலவும், சிரில்(Cyril) என்னை கேலிசெய்வதுபோலவும், கற்பனைசெய்துபார்க்கக் கொடுமையாக இருந்தது. மணலில் மெல்ல நகர்ந்து ஆன்(Anne) அருகிற் சென்றேன். குரலைத் தாழ்த்தி அழைத்தேன். அவள் கண் திறந்து பார்த்தாள். முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டேன், படித்துப் படித்து அலுத்துப்போன புத்திசாலியாக என்னைக்காண்பித்துக்கொண்டு, கெஞ்சுகிறேன்.

-” ஆன்! வேண்டாம் மறுபடியும் புத்தகங்களை கையிலெடுக்கிற தண்டனையெல்லாம் வேண்டாம், காயற வெய்யிலில் இது வேறயா…இந்த விடுமுறை நிறைய எனக்கு நல்லது பண்ணும்னு நம்பிக்கொண்டிருக்கிறேன், அதைக் கெடுத்திடாதே…”

வைத்தவிழி வாங்காமல் என்னையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவளின் இதழோரத்தில் மர்மமாய் ஒருவிதப்புன்னகை, பிறகு ஏதோ நினைத்தவள்போல தலையைத் திருப்பிக்கொள்கிறாள்.

– ” உன்னை விடப்போவதில்லை, நீ சொல்ற மாதிரி கொதிக்கும் கோடையென்றாலும், ‘அதை’க் கட்டாயம் செய்தாகணும். இரண்டு நாளைக்குமேலெ நானுனக்கு வேண்டியதில்லை, உன்னைப் புரிந்துவைத்திருக்கிறேன். எனவே அதற்குப் பிறகு தேர்வு முக்கியம்.

– ” சிலவிஷயங்களை பழக்கப்படுத்திக்கொள்ளகூடாது”, சிரித்துக்கொண்டே கூறினேன்.

அவளது எடுத்தெறிந்த பார்வையில் கேலியும், அலட்சியமும். நான் மீண்டும் மணலில் படுத்துக்கொண்டேன், மனம் கலவரப்பட்டிருந்தது. எல்சா(Elsa), அப்பகுதி கடற்கரைப் கொண்டாட்டங்களைக் குறித்து தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தாள், அப்பாவின் கவனம் அவளிடத்திலில்லை ஆன்(Anne)வசமிருந்தது. மூன்றுபேரும் அருகருகே படுத்து உருவாக்கியிருந்த முக்கோண சேர்மானத்தில், அப்பாவின் தலை மேலேயிருக்க, ஆன்(Anne) தலைகீழாகத் தெரிந்திருக்கவேண்டும். அவளது தோளுக்கு நேராக பார்வையைக் கொண்டுவந்தவர், ஒரு சிலவிநாடிகள் கண்சிமிட்டாமல் விறைத்துப் பார்ப்பதை நான் புரிந்துகொண்டேன். மணலிற் கிடந்த அவரது கை சீராக, மெல்லத் தொடர்ந்து திறப்பதும் மூடிக்கொள்வதுமாக இருக்கிறது. கடலுக்காய் ஓடினேன். எஞ்சியிருக்கும் விடுமுறைநாட்கள் மீதான நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை வெதும்பல்களுடன் நீரில் பாய்ந்தேன். ஒரு துன்பவியல் காட்சியை அரங்கேற்றப் போதுமானவை எங்களிடத்திலே இருந்தன: பெண்களைச் சுலபமாய் வசீகரிக்கவென்று ஒரு நாயகன், ஒரளவு மேட்டிமைத்தனத்தோடு ஒரு பெண்மணி, விஷயஞானத்தோடு இன்னொருத்தி. நீரின் ஆழத்தில் அழகாய் ஒரு கிளிஞ்சல், அடுத்து நீலமும் இளஞ்சிவப்புமாக ஒரு கல். அதை எடுப்பதற்காக மூழ்கினேன், மதிய உணவுவரை கையிலேயே பத்திரபடுத்திவைத்திருந்தில்,தேய்ந்து மிருதுவானது. கைவசம் இருக்கும்வரை நல்லதே நடக்குமென்று மனம் உறுதியாய் நம்பியதால், கோடைமுழுக்க அதைபிரியப்போவதில்லை. அது கையைவிட்டுப்போனால், எனக்குண்டானதனைத்தையும் இழந்துவிடுவேனென நினைத்ததாலோ என்னவோ, மிகவும் பத்திரமாக வைத்திருந்தேன். இன்றைக்குங்கூட இளஞ்சிவப்பு நிறத்தில், வெதுவெதுப்புடன் எனது கையிலிருப்பது அந்தக் ‘கல்’தான். ‘கல்’கொடுக்கும் தைரியத்தில், தேம்பி அழவேண்டுமென்கிற ஆசை மனதில் நிறையவே உண்டு.

————————————————————————————————————–
1. Henri Bergson(1859-1941)பிரெஞ்சு தத்துவஞானி, 1927ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்றவர்.

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 2

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எப்படியும் ஒருவாரத்திற்கு முன்பாக ஆன்(Anne)இங்கு வரப்போவதில்லை, அதுவரை, எஞ்சியிருக்கும் நாட்களையாவது உண்மையான விடுமுறையாக கழிப்பதென்று தீர்மானித்தேன். இரண்டு மாதங்களுக்கு ‘வில்லா’வை வாடகைக்கு எடுத்திருப்பதும் உண்மை, எனினும் ‘ஆன்’ வருகைக்குப் பிறகு, அக்கடாவென்று விடுமுறையை அனுபவிக்கவியலாது. அவளுக்கு அப்படியொரு சாமர்த்தியம்: தொட்டதெல்லாம் துலங்கும், வார்த்தைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளது சொற்களிலுள்ள ஆழமும், கூர்மையையும் புரிந்துணர அப்பாவிற்கும் எனக்கும் பொறுமை இருப்பதில்லை, ஓடி ஒளிவோம். பேச்சில் நல்ல இரசனையும், இனிமையும் இருந்தபோதிலும், அவற்றிற்கென சில நெறிமுறைகளை வைத்திருந்தாள். உரையாடல்களுக்கிடையில் சட்டென்று அவள் ஒதுங்கிக்கொள்கிறபோதும், புண்பட்ட மனதுடன் அமைதிகொள்கிறபோதும், பிற மெய்ப்பாடுகள் ஊடாகவும் அதனை உணரமுடியும். உணர்ச்சிகளின் கொந்தளிப்பும், அலுப்பும், அவமானமும் ஏற்படுத்திய விளைவுகள், அவையென உணர்ந்தபோது, அவளது செய்கைக்கான காரணம் புரிந்தது.

அந்த நாளும் வந்தது. அப்பாவும் எல்ஸாவும் ‘Frejus’ இரயில் நிலையத்திற்குச் சென்று காத்திருப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. எனக்கு அம்மாதிரியான அனுபவங்கள் ஒத்துவராதென்பதால் திட்டவட்டமாக மறுத்தேன். அப்பாவுக்கு ஏமாற்றம், தோட்டத்தில் மலர்ந்துகிடந்த ஒருவகை நாணற்பூக்களை, இரயிலிலிருந்து ஆன்(Anne) இறங்கும்போது கொடுத்து வரவேற்கும் எண்ணத்துடன் பறித்துக்கொண்டார். பூங்கொத்தை எல்சாவிடம் கொடுத்துவிடாதீர்கள், நீங்களே எடுத்துச் செல்லுங்களென்று, அவரிடம் எச்சரித்தேன். அவர்கள் புறப்பட்டுச் சென்றபிறகு, மூன்றுமணி அளவிற்கு கடற்கரைக்குச் சென்றேன். கடுமையான வெயில். மணலில் நீட்டிப்படுத்து கண்ணயர்ந்த நேரம், சிரிலுடைய(Cyril) குரல், என்னை எழுப்பியது. கண் திறந்து பார்த்தேன், வானம் வெள்ளைவெளேரென்றிருந்தது, போதாக்குறைக்கு தகிக்கும் வெப்பம் வேறு. அமைதியாக இருந்தேன். எனக்கு சிரிலிடம் பேசும் எண்ணமில்லை. அவனென்று இல்லை, வேறு எவராக இருந்திருப்பினும், பேசியிருக்கமாட்டேன். கோடையின் அத்தனை பலத்தையும் எதிர்கொண்டவளாய்க் கைகள் கனத்துகிடக்க, வாய் உலர்ந்துபோக மனலில் அழுந்தப் படுத்துக்கிடந்தேன்.

” என்ன.. உயிரோடுதானே இருக்கிறாய்? தூரத்திலிருந்து பார்க்க ஏதோ தீண்டுவாரற்ற கூளம்போலக் கிடந்தாய்.” – சிரில்.

மெல்ல சிரித்துவைத்தேன். எனதுபக்கம் வந்தமர்ந்தான்.. எனது தோளில் அவனது கை படர, இதயத் துடிப்பு அதிகமானது, மிகக் கடுமையாகவே அடித்துக்கொண்டது. கடந்த வாரத்தில், தவறுதலாக நான் கையாள, படகு ஆழ்கடல் திசைக்காய் செல்வதும், நாங்கள் ஒருவரோடொருவர் பின்னிக்கொள்வதும் பலமுறை நேர்ந்திருக்கிறது, அப்போதெல்லாம் எனது நெஞ்சத்தில் எந்தவித அதிர்வினையும் உணர்ந்ததில்லை. ஆனால் இன்றைக்கு, மெல்ல மெல்ல நான் உடைந்துபோவதற்கு, இந்த வெப்பமும், பொய்த்தூக்கமும், அசட்டுத் தனமான சிலசேட்டைகளும் போதும்போலிருக்கிறது. அவன் பக்கமாகத் தலையைத் திருப்பினேன். என்னை நேரிட்டுப் பார்த்தான். அவன் இன்னாரென்று புரிய ஆரம்பித்தது: எதிலும் சமநிலை, நல்ல குணங்கள்மாத்திரம் அவன் வயதுக்கு, இயற்கைக்குமாறாக கொஞ்சம் அதிகமாகவிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நாங்களிருந்த நிலைமையும் – வித்தியாசமான மூவரைக்கொண்ட எங்கள் குடும்பமும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. மிகவும் நல்லவனாகவோ, மிகவும் அடக்கமானவனாகவோ இருந்தான், அப்படிப்பட்டவன் என் தந்தையிடத்தில் காழ்ப்பும், ஒருவித வன்மமும் கொண்டிருப்பதுபோல தோன்றியது. அவனது செய்கையைக்கண்டு நான் சஞ்சலப்படவேண்டுமென்பதும் அவனது அவாவாகவிருந்தது. ஆனால் அதனாலெல்லால் நான் பாதிக்கபட்டதில்லை. அவனது அவா இப்பொழுது நிறைவேறிடும்போலிருக்கிறது. வேறொன்றும் இந்த நேரத்தில், என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறது, அது அவனது நேரிட்ட பார்வை. அப்பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்கவியலாமல் என்னிதயம் படபடக்கிறது. என்மீது படிந்தான். கிழமையின் இறுதி நாட்களையும், எனது நம்பிக்கையையும், எனது அமைதியையும், அவனது அண்மையிற் கண்டேன். சற்றே தடித்தும், அகன்றுமிருந்த அவனது வாய் என்னை நெருங்கி வர, பரிதாபமான நிலையில் நான்.

– ” சிரில்! இதுவரை சந்தோஷமாகவே இருவரும் இருந்தோம். அதை…” நான்.

மெல்ல முத்தமிட்டான். வானத்தைப் பார்த்தேன். இறுக மூடிய எனது கண்ணிமைகளுக்குக் கீழே, எங்கும் சிவந்து பிரகாசிக்கும் ஒளியன்றி வேறேதும் காட்சியிலில்லை. வெப்பம், கிறுகிறுப்பு, முதல் முத்தத்தின் இனிப்பு, நேரமெடுத்துக்கொண்ட பெருமூச்சுகள்.

ஆரன் சத்தம் கேட்டு, திருடர்களைப்போல பதட்டத்துடன் விலகிக்கொண்டோம். சிரிலிடம்(Cyril) சொல்லிக்கொள்ளாமலேயே புறப்பட்டேன் எங்கள் ‘வில்லாவை’ நோக்கி நடந்தேன். இத்தனைச் சீக்கிரம் திரும்பிவிடுவார்களென்று நினைக்கவில்லை, ஆதாலால் வியப்பு: ‘ஆன்'(Anne)னுடைய இரயில் இதற்குள் வந்து சேர்ந்திருக்காது. எனினும் பால்கணியில் நின்றிருப்பது அவள்தான், சொந்தக்காரில் வந்திருக்கவேண்டும்.

-” அட.. இதுதான் ‘Belle-au-Bois-dormant (எங்கள் வில்லாவின் பெயர்)வா? பரவாயில்லையே, வெயில் உனது நிறத்தை ஓரளவு பழுப்புநிறத்திற்கு மாற்றித்தானிருக்கிறது. செஸில்(Cecil)! உன்னை மீண்டும் சந்திப்பதில், எத்தனை சந்தோஷம் தெரியுமா?..

– எனக்குங்கூடத்தான், பாரீஸிலிருந்து வருகிறாயா.. என்ன? -நான்.

– காரில் வருவது பிடித்திருந்தது, ரொம்பவும் களைத்திருக்கிறேன். ”

அவளுக்கென ஒதுக்கபட்டிருந்த அறைக்கு அழைத்துபோனேன். சன்னலைத் திறந்துவைத்தேன், சிரிலின்(Cyril) படகு கண்ணிற்படுமென்று நம்பினேன். இல்லை, மறைந்துவிட்டிருந்தான். ஆன்(Anne) கட்டிலில் அமர்ந்தாள். அவள் கண்களைசுற்றிலும் கருவ¨ளையமிட்டிருப்பதைக் கவனித்தேன்.

“- இந்த வில்லா மிகவும் அருமை, நெட்டுயிர்த்தாள். உடையவரை எங்கே காணோம்?

– உன்னை வரவேற்கவென்றுதான் எல்சாவுடன்(Elsa) இரயில் நிலையத்துக்குச் சென்றார்.”

அவளுடைய பெட்டியை நாற்காலியொன்றின்மீது வைவத்துவிட்டுத் திரும்பிய எனக்கு அதிர்ச்சி, அவளது முகம் பேயறைந்தது போலிருந்தது, அதரங்கள் மெல்ல நடுங்கின.

” – எல்சா மக்கென்பூர்(Elsa Mackenbourg)? உங்க அப்பா, எல்சா மக்கென்பூரை இங்கே அழைத்து வந்திருக்கிறாரா என்ன?”

எனக்கு, என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவளைப் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்துபோனேன். எனக்குத் தெரிந்து அமைதியும், தன்னில் உறுதியும் கொண்ட முகம், இன்றென்னை வியப்பிலாழ்த்தியது. சற்றுமுன்பு, நான் சொன்ன வார்த்தைகள் தீட்டியிருந்த சித்திரங்களூடாக என்னை நிறுத்தினாள், பார்த்தாள், பிறகு தலையைத் திருப்பிக் கொண்டாள்.

” உங்களுக்கு முன்னமேயே தெரிவித்திருக்கவேண்டும், என்ன செய்வது? நான் அவசரமாகப் புறப்பட வேண்டியிருந்தது, ரொம்பவும் களைத்திருக்கிறேன்…

– பிறகு இப்பொழுது…, நான் – (எதையாவது சொல்லியாகவேண்டுமே, அதற்காக)

– இப்பொழுதென்றால்? என்ன பொருள்? -ஆன்

இம்முறை அவளது பார்வையில் ஒருவித ஏளனம், பிறகு அமைதியானாள்.

” அதாவது, இப்பொழுது நீயும் வந்திருக்கிறாய், எனது கையிரண்டையும் தேய்த்தபடி, அசட்டுத்தத்துடன் உளறிவைத்தேன். நீ வந்திருப்பதால், உண்மையில் எனக்கும் ஒருவகையில் சந்தோஷம். உனக்கும் அதற்கான காரணம் தெரியும். அதைச் சொல்லவேண்டுமா என்ன? சரிசரி… கீழே உனக்காகக் காத்திருக்கிறேன். ஏதாவது குடிக்கவேண்டுமென்று தோன்றினால்..இறங்கிவா. மினி’பாரில்'(Bar) எல்லாமிருக்கிறது.”

சங்கடத்துடன் அவளது அறையைவிட்டு வெளியில் வந்தேன். மாடிப்படிகளில் இறங்கியபோது, பலவிதமான சிந்தனைகளால் மனம் நிறைய குழப்பங்கள். எதனால் அவளது முகம் அப்படிப் போனது? குரலில் ஏன் இத்தனைத் தடுமாற்றம், இத்தனை சோர்வு எங்கிருந்து வந்தது? நாற்காலியொன்றில் அமர்ந்தேன். கண்களை மூடினேன். நானறிந்த ஆன்(Anne)னுடைய கடுமையான, நம்பிக்கைதரும் எல்லாமுகங்களையும் நினைவிற் கொண்டுவந்தேன். ஏளனம், கவலையின்மை, அதிகாரம் என்று வரிசையில் நின்றன. எளிதில் பாதிப்புள்ளாகிற அவளது முகங்களின் குணங்களை அறியநேர்ந்ததால், ஒருபுறம் கலக்கம், இன்னொருபுறம் கோபம். என் தந்தையை விரும்பினாளா? அவரைக் காதலிக்கக்கூட அவளால் முடியுமா? அவரிடத்தில், அவள் விரும்பத்தகுந்த குணங்களென்று ஏதுமில்லையே. அவர் பலவீனமானவர், எதிலும் அவசரம், சில வேளைகளில் எளிதில் மனம்தளர்ந்து போகக்கூடியவர். அப்படியிருக்க அவர்மீது இவளுக்கு காதல்வருமென்றால் யார் நம்புவது? ஒருவேளை பயணக் களைப்பினால், முகம் அப்படிச் சோர்ந்ததுபோல தெரிந்ததோ? அல்லது மனதளவில் காயப்பட்டிருப்பாளோ? முடிவுக்குவர இயலாமல் ஒருமணிநேரத்திற்கு மேலாகத், தவித்தேன்.

‘எல்சா’வுடன் அப்பா வீட்டிற்குத் திரும்ப மாலை மணி அய்ந்தாகியிருந்தது. அவர் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்தேன். ஆன்(Anne) இவரை காதலிப்பதற்கான சாத்தியங்களுண்டா? மனதிற்குள் கேட்டுப்பார்த்தேன். பின்புறமாகத் தலையை வெட்டிச் சாய்த்தபடி வேகமாய் என்னிடம் வந்தார். சிரித்தார். வேறொருத்தியால் அவரை நேசிக்கமுடியுமெனில், ‘ஆன்'(Anne) அவரை நேசிப்பதற்கான சாத்தியங்களும் அதிகமென்றே தோன்றியது.

” ‘ஆன்'(Anne) அங்கே இல்லை?, சத்தமிட்டார். வாயிலில் அவள் குறுக்கிட்டுவிடக்கூடாதென்று, நினைத்துக்கொண்டேன்.

– அவளது அறையிலிருக்கிறாள். காரில் வந்திருந்தாள் – நான்.

– உண்மையாகவா? நல்லதாப் போச்சு! -அப்பா.

– மேலே சென்று கையிற்வைத்திருக்கிற பூங்கொத்தை நீங்கள் கொடுக்கவேண்டியதுதான், பாக்கி. -நான்

– பூங்கொத்து எனக்காகவா வாங்கினாய்¡? மிக்க நன்றி-” ஆன்னின்(Anne) குரல்.

மாடியிலிருந்து சிரித்தமுகத்துடன் இறங்கிக் கொண்டிருந்தாள், சற்றுமுன்னர் முகத்தில் தெரிந்த வாட்டம், இப்போதில்லை. அணிந்திருந்த நெடுஞ்சட்டையில் பயணம் செய்ததற்கான அடையாளமேதுமில்லை. கொஞ்சம் முன்கூட்டியே இறங்கிவந்து என்னிடத்தில் சிறிதுநேரம் பேசியிருக்கலாம். அதனை விடுத்து கார் சத்தத்தினைக்கேட்ட பிறகு இறங்கிவந்ததை நினைக்க, எனக்கு அவள்மீது வருத்தம். அப்படி வந்திருந்தால், நடந்து முடிந்த தேர்வில் நான் கோட்டை விட்டதைக் குறித்து சொல்லவேண்டியிருந்திருக்கும். பரவாயில்லை, அந்தவகையில் ஆறுதல்.

அப்பா வேகமாய் அவளிடத்தில் வந்தார், கரத்தினை வாங்கி முத்தமிட்டார்.

” கால் மணிநேரத்திற்குக் கூடுதலாக பிளாட்பாரத்தில், கையில் பூங்கொத்துடனும், உதட்டில் அசட்டு சிரிப்புடனும் காத்திருந்தேன். கடவுளே! கடைசியில் நீ இங்கிருக்கிறாய்! எல்ஸா மகென்பூர்(Elsa Mackenbourg) உனக்குத் தெரியுமில்லையா?”

அடுத்து என்ன நடக்குமென்று தெரியும், அவர்களைப் பார்ப்பதை தவிர்த்தேன்.

“நாங்களிருவரும் ஏற்கனவே சந்தித்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், ‘ஆன்’னுடைய பதிலில் கனிவு இருந்தது. எனக்கென்று ஒதுக்கிய அறை அருமை. விடுமுறையை உங்களோடு கழிக்கவென்று அழைப்பு விடுத்ததற்காக, ரெமோன்(Raymond)உனக்கு மிகவும் நன்றி, காரில் வந்ததால் களைத்திருக்கிறேன்.”

அப்பா செருமிக்கொண்டார். வார்த்தைகளை அளந்து பேசினார். போத்தல்கள் திறக்கப்பட்டன. சிரில்(Cyril)லுடைய காதற்பசிகொண்ட முகமும், ஆன்(Anne)னுடைய முகமும் ஒன்றுமாற்றியொன்று எனது மனதில் வந்துபோனது. இருமுகங்களிலும் ஒருவித வன்மம் படிந்திருப்பதை உணர்ந்தேன். அப்பா எதிர்பார்ப்பதுபோல, இக்கோடைவிடுமுறை எந்தவித சிக்கலுமின்றி முடியுமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நாங்கள் அனைவரும், முதன்முறை ஒன்றாக உணவுகொள்ள உட்கார்ந்தபோது மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அப்பாவும் ஆன்(Anne)னும், தங்கள் இருவருக்கும் இடையேயான பொதுவிடயங்கள்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள், அப்படியான விடயங்கள் அதிகமில்லையென்கிறபோதிலும், அவை உயர்வானவை, வண்ணமயமானவை. அவர்களது உரையாடலை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆன்(Anne) என் தந்தையின் கூட்டாளி ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டபோது, அந்த நபர், ஒர் ‘அரைவேக்காடு’ என்றாள். அவள் யாரைபற்றிப் பேசுகிறாள் என்றெனக்குத் தெரியும். அவரொன்றும் தப்பான ஆசாமியல்ல. மது அருந்தும் பழக்கம் கொஞ்சம் அதிகம். அவரோடு சேர்ந்து, நானும் அப்பாவும் பலமுறை உணவருந்தியிருக்கிறோம். அந்த நாட்கள் சுலபத்தில் மறக்கமுடியாதவை.

ஆன்னு(Anne)டைய அபிப்ராயத்தை மறுப்பது அவசியமாயிற்று.

“ஆன்!..லொம்பார்து (Lombard) ஒரு வேடிக்கையான நபர். அவரோடு இருந்தால் நேரம்போவதே தெரியாது. மற்றபடி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை….- நான்.

– ஆக அவரைபற்றிப் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லையென்பதை, அப்பாவும் பெண்ணும் ஒத்துக்கொள்கிறீர்கள். அவரது நகைச்சுவை உணர்வுகூட ஒருவகையில்…- ஆன்.

– ஒருவேளை நாம் எதிர்பார்க்கிற வகையிலான ஞானம் அவருக்கு இல்லாமலிருக்கலாம்…..- எனது வாக்கியத்தை முடிக்கும் முன்பாகக் குறுக்கிட்டாள், முகத்தில் முந்தைய ஏளனமில்லை. கொஞ்சம் இறங்கிவந்திருந்தாள்.

– ஞானத்தின் வகைகளென்று பேசினாயே, அது வயதைப் பொறுத்தது, வயதுக்குத் தகுந்த புத்தியோடு மனிதர்கள் நடந்துகொள்ளவேண்டும். ”

வார்த்தைகளில் விளையாடுவதும், சொல்லவந்த கருத்தில் உறுதியாய் நிற்பதும், அவளுக்குக் கைவந்தகலை. பேச்சில் நிறைய ஆழமும், கூர்மையுமுண்டு. மேதைகள் உலகத்திற்கான கதவுகளை எனக்கென்று அகலத் திறந்துவைக்கும் தன்மையது. அரைமனதோடு பார்வையைத் திருப்புவேன், சுலபமாய் அடிமைகொள்ளூம். இதற்காகவே குறிப்பேடும் எழுதுகோலும் கண்டிப்பாய் கைவசமிருக்கவேண்டும். அன்றைக்கும், அப்படியான எண்ணம் உதிக்க, அதனை ஆன்(Anne)னிடம் தெரிவித்தேன். எனது தகப்பனார் வெடித்துக்கொண்டு சிரித்தார்:

” உனக்கொன்றும் அவள் மீது பொறாமையில்லையே?”

– அவள்மீது பொறாமைகொள்ள என்னால் முடியாது? ஆன் தப்பானவளில்லையே.

எனினும் அவள் என்னோடு மிகமோசமாக முரண்பட்டிருப்பதை உணர்ந்தேயிருந்தேன். பிடிவாதத்துடன் எடுக்கும் அவளது முடிவுகளில் தெளிவிருப்பதில்லை, அம்முடிவுகள் என்னால் ஏற்கமுடியாதவையுங்கூட.

முதள்நாள் மாலை, எல்சா வேண்டுமென்றே எனது தந்தையின் அறையில் நுழைந்ததை, ஆன் கவனித்ததாகத் தெரியவில்லை. தனக்கென்று வைத்திருந்தபொருட்களிலிருந்து, கம்பளிச் சட்டையொன்றை எடுத்துவந்த ஆன்(Anne) என்னிடத்திற் கொடுத்தவள், நன்றி சொல்வதற்கான வாய்ப்பினை எனக்கு அளிக்கவில்லை. ‘நன்றிகள்’ அவளுக்கு இடையூறாக இருந்தன, தவிர ‘நன்றிகளை’ விரும்பும்வகையில் என்னால் சொல்லவும் முடிந்ததில்லை. எனவே அன்பளிப்பாய் பெற்ற கம்பளிச் சட்டைக்கு நன்றிசொல்லமுடியாமற்போனதால் வருத்தமேதுமில்லை.

” எல்சா(Elsa) மிகவும் நல்ல பெண்மணியென்று நினைக்கிறேன், – புறப்படவிருந்த என்னிடம், ஆன் கூறினாள்.

எனது கண்களை நேரிட்டுப் பார்த்தாள், முகத்தில் வழக்கமாக தென்படுகிற புன்னகை இல்லை. என்னிடத்தில் ஏதோவொன்றை தேடுவதுபோலத் தோன்றியது, அதனை முளையிலேயே கிள்ளிவிடவேண்டுமென்கிற எண்ணமும் இருந்தது. சற்றுமுன்பு அவள் குறிப்பிட்ட, ‘அறிவு, வயது’ இவற்றையெல்லாம் மறந்தவளாக, பதிலிறுக்கத் துணிந்தேன்.

” ஆமாமாம்.. எல்லோராலும் விரும்பத்தக்கவள், வயதும் அதிகமில்லை… அன்பாய்வேறு பழகுகிறாள்.”

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நான் உளறினேன். அவள் கலகலவென்று சிரித்தாள். எனக்கு எரிச்சல் வந்தது, இருக்கவிருப்பமில்லை, படுக்கச் சென்றேன். நித்திரையின் போது, சிரிலை(Cyril) நினைத்துக்கொண்டேன். அநேகமாக இந்நேரம் கான்(Cannes) நகரத்தில் பெண்களோடு இரவு விடுதிகளில் ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பான்.

எனது மறதி குறித்து நினைத்துப்பார்த்தேன், அதிலும் ‘முக்கியமானது’ சுத்தமாக மறந்துபோகிறது: கடலின் இருப்பு, ஓயாமல் அது எழுப்புகிற ஓசை, சூரியன் மறந்து விடுகிறேன்; மாகாணத்து விடுதிமுற்றத்திலிருந்த நான்கு எலுமிச்சை மரங்களும், அவற்றின் நறுமணமும் மறந்துபோகிறது; இரயில் நிலையத்தில் எனக்காகக் காத்திருந்த என் தகப்பனாரின் சிரிப்பு மறந்திருந்தது, அச்சிரிப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுதியிலிருந்து வெளியேறியநேரத்தில், எனது தலைமுடியைச் சடையாகப் பின்னித் தொங்கவிட்டிருந்ததற்காகவும், கறுப்புவண்னத்தில் பிறர் சகியாவண்ணம் அணிந்திருந்த நீண்டசட்டைகாரணமாகவும், வேறுபொருளைத் தந்தது, மறந்து போயிற்று; காரில் அமர்ந்தபொழுது கரைகாணாத மகிழ்ச்சியில் அப்பா, சட்டென்று ஒருவித எக்காளத்துடன் சத்தம்போட்டுச் சிரித்ததைக்கூட மறந்திருந்தேன், அச்சிரிப்புக்கான காரணம், எனது கண்களும் எனது வாயும் அவரது சாயலைப் பெற்றிருந்ததற்காக. என்னை விலைமதிப்பற்றவளாகவும், மிகவும் விசித்திரமானதொரு பொம்மையாகவும் கருதினார். எதைப்பற்றியும் எனக்குத் தெரியாது; எனது அப்பாதான் அனைத்தையும் அறிமுகப்படுத்தினார்: பாரீஸ் மாநகரம், உல்லாசம், எளிதான வாழ்க்கை…. அப்போதைய எனது பெரும்பானமையான சந்தோஷங்களுக்கு பணமே மூலகாரணமென்று நம்பினேன்: காரில் மின்னல் வேகத்திற் பறந்தது, நாளுக்கொரு ஆடையில் வலம்வந்தது, பிடித்த இசைச் தட்டுகளை வாங்கமுடிந்தது, பிறகு புத்தகங்கள், பூக்கள்…என எல்லாவற்றிர்க்குமே, பணமே மூலம். எளிதாகப்பெறமுடிந்ததால், அந்த சந்தோஷங்களை அவமரியாதைக்குரியதாக எண்ணவில்லை, தவிர அவற்றை எளிதானவையென்று நான் சொல்வதற்குக்காரணம், அவை அவ்வாறாகத்தான் இருந்தன. என்றேனும் ஒருநாள் இதற்காக நான் வருந்தக்கூடும், வேதனைகளைலிருந்து அல்லது விளங்கிக்கொள்ளவியலாத இந்தச் சிக்கல்களிலிருந்து விமோசனம்பெற எவரிடமாவது சொல்லி அழக்கூடும். வாழ்க்கையென்றால் இரண்டே விடயங்கள்தான் எனக்குச் சுவாரசியமாகத் தோன்றுகின்றன: ஒன்று: இன்பமும் அதனைச் சுகிக்கும் வகையும், மற்றொன்று: மகிழ்ச்சியும் அதனைக் கொண்டாடும் விதமும். போதிய அளவு எனக்குப் படிப்பு ஏறாதுதான் காரணமோ? விடுதியில் தங்கியிருந்தபோது அதிகமாக வாசித்ததெல்லாம் ஒழுக்கம், உண்மை மாதிரியான உபதேசங்களையன்றி வேறல்ல. பாரீஸிலிருந்தபோது படிப்பதற்கு எனக்கு நேரமே காணாது: வகுப்பு முடிந்து வெளியே வந்தால், காத்திருக்கும் நண்பர்களுடன் திரைப்படங்களுக்குச் செல்வேன்; நடிகர்களின் பெயரெதுவும் எனக்குத் தெரியாதென்றால் நண்பர்கள் வியப்பார்கள். பிறகு க·பே(1)யின் சூரிய வெப்பத்துடனான திறந்தவெளிமுற்றம்; கூட்டத்தில் ஒருத்தியாக சந்தோஷத்துடன் நேரத்தைப் போக்குவது, அதற்காக எதையாவது கொண்டுவரச் செய்து குடித்துக்கொண்டிருப்பது, எனது கண்களை நேரிட்டுப் பார்க்கும் ஒருவனுடன் கைகோர்த்துக்கொண்டு எந்தக் கூட்டத்தை நேசித்தேனோ, அதே கூட்டத்திலிருந்து விலகி வெகுதூரம் செல்வது. அவனோடு வீடுவரை நடந்தே செல்வது. வீட்டை நெருங்கியதும் கதவருகில், சட்டென்று என்னை அணைத்து அவன் முத்தமிடுவான்: முத்தங்களினால் கிடைக்கும் இண்பங்களை கண்டறிவேன். எனது நினைவில் ‘அவன்’ களுக்கு பல பெயர்கள் உண்டு. எல்லா இளம் பெண்களுக்குமே தெரிந்த பெயர்கள் அவை: ழான், உபேர், ழாக்…இரவானதும், எனக்கு வயது கூடிவிடும். அப்பாவுடன் புறப்பட்டுப்போவேன். சில இரவுகளில் வெறுமனே சுற்றிவர வேண்டியிருக்கும், சில இரவுகள் உல்லாசமாகவும், என் வயதுக்கேற்ற ஆட்டப்பாட்டங்களுடனும் கழியும். வீட்டிற்குத் திரும்பிவுடன் பெரும்பாலான நாட்களில் அப்பா என்னைமட்டும் காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு, தனது பெண் சிநேகிதியுடன் கிளம்பிப் போனாரென்றால், வீட்டிற்கு எத்தனை மணிக்குத் திரும்புவாரென்று எனக்குத் தெரியாது. அப்பாவுடைய இம்மாதிரியான காரியங்களில் எனக்கு உடன்பாடு இருப்பது மாதிரியான பொய்யான நம்பிக்கையை அவருக்கு ஊட்ட விருப்பமில்லை. அவரது நடவடிக்கைகள் என்னிடம், எதையும் மறைக்க விருப்பமில்லாததுபோலத்தான் தோன்றியது. சரியாய் சொல்லவேண்டுமென்றால் அவராக, இந்தபெண்மனியுடன் சேர்ந்து சாப்பிட அவளோடு போகிறேன், அல்லது அந்தப் பெண்மணி வீட்டிற்குப் போகிறேன், அங்கேயே தங்கிவிடுவேனென்றோ (நல்லவேளை, ஒரு சில நாட்களுக்கு மட்டும்) தமது செய்கையை நியாயப்படுத்தும் விதத்திலோ அல்லது மறுத்தோ எதையும் சொன்னதில்லை. எது எப்படியோ, தனது விருந்தினர்களிடம் அவருக்குக்குள்ள இம்மாதிரியான உறவுகளைத் தொடர்ந்து அலட்சியபடுத்த முடியாது. தவிர கண்டதையும் கற்பனை செய்திட அனுமதிக்காததோடு, தம்மீது முடிந்த அளவு நம்பிக்கையுடன் இருக்குமாறு என்னைப் பார்த்துக்கொண்டார். பழுதில்லாமல் அவர்போட்டிருந்த திட்டபடி எல்லாம் நடந்தன. எனது இளம்வயது மற்றும் அனுபவத்தின் விளைவாக சிறிதுகாலம், காதலைக் கேளிக்கைப்பொருளாக எடுத்துக்கொண்டேன், அதன் உண்மையான தாக்கத்தையும் உணரமறுத்தேன். இதற்கு அப்பாவின் காதல் விவகாரங்களிலிருந்து, நான் பெற்ற அனுபவங்களே மூலம். அப்பாவைக் குற்றம் சொல்லவேண்டுமெனில், இந்த ஒரு காரணம் போதும். “நவீன உலகில், வண்ணங்களில் எஞ்சியிருப்பது பாவம் மாத்திரமே”, என்ற ஆஸ்க்கார் வைல்டின், மேற்கோளை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். அவர் கருத்தில் உடன்பட்டு, என்பங்கிற்கும் இந்த மண்ணில் பாவங்களை விட்டுச் செல்லவேண்டும், பிறகு அதனை நன்கு செயல்படுத்துவகையில் எளிதானதாக உருவாக்கவும் வேண்டும். எனது வாழ்க்கை இவ்வரிகளை ஒரு நாள் பிரதிபலிக்கக்கூடும், அதனை முன்னுதாரணமாகக்கொண்டு இயங்கவும் கூடும்,. ‘எப்பினால் சித்திரத்தின்'(2) எதிர்மாறாய்கூடஅமையலாம்: இறந்த காலங்கள், அநித்யம், தினசரி வாழ்க்கையின் நல்லுணர்வுகள், அனைத்தையும் மறந்தாயிற்று. கடைசியில் அர்த்தமற்ற, கீழ்மையான வாழ்க்கைக்குக் காத்திருப்பதே இலட்சியமாயிற்று.
————————————————————

1. Cafe -(க·பே) காப்பி, தேநீர் மற்றும் மது அருந்துமிடங்கள், எளிய உணவுகளும் கிடைக்கும்.

2. பிரான்சுநாட்டில் எபினால் பகுதியிலிருந்த ஒருவகை சித்திரக்கலை (Image d’Epinal), மரப்பலகையில் செதுக்கி வண்ணங்கள் பூசப்பட்ட இச்சித்திரங்கள் அரசியல், மதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டன. நாளடைவில், ஒருபொருளின் நல்லபக்கத்தைக்குறிக்க(வடிவமுள்ள பகுதி) எப்பினால் சித்திரம், என்கிற சொல்லாடல் வழக்கிற்குவந்தது

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா