• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

This entry is part of 31 in the series 20061123_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மகத்தானது, மர்ம மானது மரணம்!
புகட்டலாம் அதனை இரண்டு விதத்தினில்!
என்றோ ஒருநாள் சாவது உறுதி!
எப்படிச் சாவு வரும் நமக்கு?
எப்போது சாவு வரும் நமக்கு?
என்பதி லில்லை உறுதி!

ஸொகியால் ரின்போச், திபெத் வேதாந்தி [Sogyal Rinpoche (1950-****)]

கடலில் பயணிக்க ஒரு படகையும்,
குடியிருந்து வாழ ஒரு வீட்டையும்
முடிவு செய்வது போல நான்
வாழ்வு யாத்திரை முடிக்க
தேர்ந்தெ டுக்கிறேன் மரணமதை!

செனேகா, ரோமன் வேதாந்தி [Seneca (B.C.4-A.D.65)]

வால்மீன்கள் தெரிவதில்லை பிச்சைக்காரர் செத்தால்!
வான மண்டலம் பற்றி எரியும் ஓரிளவரசர் மாண்டால்! …..
கோழையர் மடியும் முன் பன்முறைச் சாவர்!
வீரர்கள் ஒருமுறை தான் சாவைச் சுவைப்பர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சதியே! புன்னகையில் புதைந்து கொள்!
பதுங்கிக் கொள் பணிவுத் தன்மையில்!
பாதைமேல் நடந்தால் மெய்யுரு தெரிந்திடும்!
காரிருள் கூடக் காட்டிக் கொடுத்திடும்! …. (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்!
வைர நெஞ்சை அடிக்குது பேரிடி! நாட்டின்
உருவைச் சிதைக்குது பேய்ப்புயல்! நகரின்
தெருவை நிரப்புது கொட்டும் மழை!

***********

வானும், பூமியும் வாழ்த்திடும் சீஸரை!
வீணாய்க் கலங்குதல் ஏனோ அறியேன்?
நற்கனவே கல்பூர்ணியா கண்டது நேற்று!
முற்றிலும் தவறே துர்க்கனா வென்பது! … தீஸியஸ்

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ•பியோ: சீஸரின் லெ•ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:5 காட்சி:5

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். அதிகாலை வேளை. ரோமாபுரி சீஸரின் மாளிகையில் படுக்கை அறை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், சீஸரின் மனைவி கல்பூர்ணியா, பணியாள், செனட்டர் தீஸியஸ்

காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி அதிகாலைப் பொழுது. இராப்பகலாய்ப் பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சீஸர் மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் உறங்கும் கல்பூர்ணியா பயங்கரக் கனவுகள் கண்டு கலங்கிப் புரண்டு அலறுகிறாள். சீஸர் தூக்கம் முறிந்து அதிர்ச்சியுடன் எழுந்து ஒன்றும் புரியாது நடமாடுகிறார்.

ஜூலியஸ் சீஸர்: வானமும், பூமியும் ஏனின்று கொந்தளித்துக் கூக்குரல் போடுகின்றன? மூன்று தரம் கல்பூர்ணியா தூக்கத்தில் அலறி விட்டாள்! “ஐயோ சீஸரைக் கொல்கிறார்” என்று மும்முறைக் கத்தி விட்டாள், கல்பூர்ணியா! பாழாய்ப் போன ராத்திரி அவளுக்குப் பயங்கரக் கனவுகளைக் காட்டி உலுக்கி விட்டது! யாருக்கு நெஞ்சுறுதி உள்ளது சீஸர் மீது வாளை வீசிட? அஞ்சாதே கல்பூர்ணியா! நான் உயிரோடுதான் உள்ளேன்! உன் கனவுக்கு ஓர் அர்த்த மில்லை! உன் கணவரைக் கொல்லும் எந்தப் பகைவனும் ரோமாபுரியில் இல்லை? அஞ்சாதே கண்ணே! அலறாதே கல்பூர்ணியா! …. யாரங்கே?

பணியாள்: [உள்ளே விரைந்து] பிரபு! நான்தான் உங்கள் பணியாள். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?

ஜூலியஸ் சீஸர்: போ! ஆலயப் பாதிரிகளைக் கண்டு விலங்குகளைப் பலியிடச் சொல்! குருதியைத் தொட்டு பின்னால் என்ன நடக்கப் போகுதென்று அவரை அறியச் சொல்! சொல்லும் தகவலைக் கேட்டு வா! சீக்கிரம் போ!

பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு!

[பணியாள் போகிறான். கல்பூர்ணியா கண்விழித்துப் பயமுடன் எழுந்து கவலையுடன் சீஸரை அண்டுகிறாள்]

கல்பூர்ணியா: [சோக முகத்துடன்] என்ன சொல்கிறீர் பிரபு? வெளியே போகக் கூடாது நீங்கள்! வீட்டுப் படியைத் தாண்டி வெளியேறக் கூடாது நீங்கள்! வெளியேற விடமாட்டேன் நான்! நான் கண்ட தீக்கனா என் நெஞ்சைப் பிளந்து விட்டது!

ஜூலியஸ் சீஸர்: ஏனப்படிச் சொல்கிறாய்? எனக்கென்ன நேரப் போகுது? என்னை பயமுறுத்துபவை முதுகுப் புறத்தில்தான் நிகழும். முகத்தைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும்.

கல்பூர்ணியா: பிரபு! சகுனங்களைப் பொருட் படுத்தாதவள் நான். ஆயினும் அவையின்று எனக்கு அச்சம் ஊட்டுகின்றன. பயங்கரக் கனவுகள் வந்து என்னை வாட்டுகின்றன. குழந்தை யில்லாத எனக்கு நீங்கள் ஒருவர்தான் உறவு! அந்த உறவு பறிபோவதாய்க் காட்டுது என் கனவு! என்ன சொல்வேன் என் அன்புக்குரியவரே! எப்படிச் சொல்வேன் என் ஆருயிரே! உங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணும் போது என் எலும்பும், சதையும், ஆத்மாவும் ஆடுகின்றன! என்னிதயம் வில்லடி பட்ட பறவைபோல் துடிக்கிறது! கனவிலே உங்களைச் சுற்றிக் கூரிய கத்திகள் நெருங்கிடக் கண்டேன்! வீதியில் ஒரு வேங்கை குருதி
சிந்தி வீறிட்டு ஓடுவதைக் கண்டேன்! பிரேதக் குழிகளில் எழுந்த பிணங்கள் உம்மைத் தழுவிக் கொள்வதைக் கண்டேன்! வானத்தில் பிசாசுகள் போரிட்டு மக்கள் மன்றத்தில் குருதி பொழியக் கண்டேன்! பேய்களும், பிணங்களும் தீயைக் கையில் ஏந்தித் தெருவெல்லாம் சுற்றி வரக் கண்டேன்! அவை எல்லாம் அடிவயிற்றைக் கலக்கி அச்சமும் பீதியும் அடைகிறேன்! மக்கள் மன்றத்துக்கு நீங்கள் போக வேண்டாம்! போகக் கூடாது! போக விடமாட்டேன்!

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] வரப் போகும் முடிவை யாரால் தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும்! வராததைக் கனவில் கண்டு வருமென நீ வருந்தலாமா? வரும் என்று நீ எதிர்பார்ப்பது வராது! வராது என்று வாளா விருக்கும் சமயம் வந்திடும் அது! விதியின் விளையாட்டு வேடிக்கையானது, மர்மமானது! பராக்கிரமன் சீஸர் அவற்றுக் கெல்லாம் பயந்தவனில்லை! அழைப்பை ஒப்புக் கொண்ட நான், மன்றத்துக் கின்று போகத்தான் வேண்டும், கல்பூர்ணியா! நீ கண்ட அபசகுனங்கள் சீஸருக்கு மட்டுமல்ல! ரோமானியர் அனைவருக்கும் எச்சரிக்கை அவை!

கல்பூர்ணியா: உண்மை! முற்றிலும் உண்மை! உங்களுக்கு ஆபத்தென்றால் அது ரோமா புரிக்குத்தானே எச்சரிக்கை! பிச்சைக்காரன் செத்தால் வான்மீன் வருவதில்லை! சாவு மணி அடிப்பதில்லை! ஆனால் ஓர் வேந்தன் மாண்டால், வான மண்டலமே வெடித்துப் பிளக்கிறது!

ஜூலியஸ் சீஸர்: கல்பூர்ணியா! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! பிறப்பும், இறப்பும் நாணயத்தின் இரு முகங்கள்! கோழையர் மரணம் வருவதற்கு முன்பாகப் பன்முறை மடிவார்! வல்லவன் ஒருமுறைதான் சுவைக்கிறான் மரணத்தை! ஆச்சரியமாக உள்ளது! மரணம் மனிதனின் முடிவென்று அறிந்தும் ஏனவன் அதற்கு அஞ்சி ஒளிய வேண்டும்! அஞ்சி ஒளிந்தாலும், அவரை மரணம் தேடிப் பிடித்திடும்! யார் அதைத் தடுப்பார்? யார் அதிலிருந்து தப்புவார்? யார் அவரைக் காக்க முடியும்?

[பணியாள் அப்போது ஓடி வருகிறான்]

பணியாள்: பிரபு! சகுனத்தை விளக்கும் ஆலய ஜோதிடர் பலியிட்ட பிறகு சொன்னார், மன்றத்தில் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்று!

ஜூலியஸ் சீஸர்: [அலட்சியமாக] ஆபத்து வரும் என்று உறுதியாகச் சொல்ல வில்லையே! வரலாம் என்றால் ஐயப்பாடு அல்லவா தொனிக்கிறது! தெய்வப் பீடாதிபதிகள் என்னைக் கோழையாக்க முயல்கிறார். சீஸர் ஒருபோதும் அஞ்சி ஒளிவ தில்லை! அபாயத்துக்குத் தெரியுமா, அபாயத்தை விட நான் அபாயமானவன் என்று! பராக்கிரம சீஸர் பயந்து பின்தங்க மாட்டான்.

கல்பூர்ணியா: [கெஞ்சலுடன்] பிரபு! ஊக்கமும், உறுதியும் உங்கள் அறிவை மீறுகிறது! துணிவும், பலமும் உங்களைக் குருடாக்குகிறது! சீஸரை நிறுத்தியது, கல்பூர்ணியாவின் அச்சம் என்று எண்ணிக் கொள்வீர்! அது என் முடிவாகட்டும்! மார்க் ஆண்டனியை அனுப்பி, சீஸருக்கு உடல்நல மில்லை என்று மன்றத்தில் அறிவிக்கச் சொல்வீர்! உங்கள் காலில் விழுந்து மன்றாடுகிறேன். [சீஸர் முன்பு மண்யிட்டு அழுகிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கேலிச் சிரிப்புடன்] “சீஸருக்கு நலமில்லை! மன்றத்துக் கின்று வரமாட்டார்!” என்று மார்க் ஆண்டனி சொன்னால், என்ன கேலிக் கூத்தாக இருக்கும்? செனட்டர் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிக்காமல் இருப்பாரா?

[பணியாள் வந்து செனட்டர் தீஸியஸ் வந்துள்ளதாக அறிவித்த பிறகு, தீஸியஸ் உள்ளே நுழைகிறார்]

தீஸியஸ்: வணக்கம், மேன்மை மிகு தளபதியாரே! வணக்கம், மாண்பு மிகு கல்பூர்ணியா அம்மையாரே! நான் தளபதியை மக்கள் மன்றத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்! நீங்கள் தயாரானதும் உங்களுடன் வர புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சில செனட்டர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] நன்றி தீஸியஸ், நல்லது, பூரிப்படைகிறேன்! சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்! செனட்டருக்கு என் நன்றியை எடுத்துரை! ஆனால் மன்றத்துக்கு நான் வர முடியா தென்று சொல்! முடியா தென்பது சரியல்ல! மன்றத்துக்கு வரப் போவதில்லை என்று சொல்!

கல்பூர்ணியா: [சட்டென] சீஸருக்கு உடல்நல மில்லை என்று சொல். சுகமின்றி சீஸர் வீட்டில் படுத்திருக்கிறார் என்று சொல்!

ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] சீஸர் பொய் சொல்லாமா? கூடாது! கூடவே கூடாது! பேரவைக்கு சீஸர் வரப் போவதில்லை என்று சொல்!

தீஸியஸ்: [தயக்கமுடன், கெஞ்சலில்] பராக்கிரம பிரபு! ஏதாவது ஒரு காரணம் நான் சொல்ல வேண்டாமா? அல்லது மன்றத்தில் என்னைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டாரா?

ஜூலியஸ் சீஸர்: காரணம் என்ன? என் மன விருப்பம் என்று சொல்! செனட்டருக்கு அது போதும். ஆனால் உனக்கு மட்டும் உண்மைக் காரணம் சொல்கிறேன், நீ எனக்கு விருப்பமானன் என்னும் முறையில். கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு என்னைத் தடுத்து விட்டாள்! நிறுத்தி என்னை வீட்டில் தங்க வைத்திருக்கிறாள். அவளது பயங்கரக் கனவில் என் சிலையைக் கண்டாளாம்! சிலை மீதிருந்து பல குருதி ஊற்றுக்கள் பீச்சி எழுவதைக் கண்டாளாம்! ரோமானிய மூர்க்கர் சிரித்துக் கொண்டு அந்தக் குருதியில் கைகளைக் குளிப்பாட்டினாராம்! அவற்றைக் கண்டதில் அச்சம் கொண்டு என்னை போக வேண்டாமெனத் தடுத்து மன்றாடுகிறாள்!

தீஸியஸ்: [சிரித்துக் கொண்டு] வானமும், பூமியும் முன்கூட்டி சீஸரை வாழ்த்துவதைத் தவறாகப் புரிந்திருக்கிறார்! வானம் கொட்டி முழக்குது! பூமி புயலடித்துப் பூரிக்குது! மழை நீர்ப் பூக்களைத் தெளிக்குது! நீரும், நிலமும், வானும் ஒருங்கே சீஸரை வேந்தராக வரவேற்குது! சீஸர் சிலையில் பீறிட்டெழும் குருதி, ரோம சாம்ராஜியத்தை விரிவாக்க அவர் செய்த தியாகத்தைக் காட்டுகிறது! பராக்கிரமப் பிரபு! கல்பூர்ணியா நேற்று கண்டது நற்கனவே! துர்க்கனவாய் எடுத்துக் கொள்வது சரியல்ல!

ஜூலியஸ் சீஸர்: [பேருகையுடன்] பார்த்தாயா கல்பூர்ணியா! தீஸியஸ் கூறும் விளக்கமே சிறந்ததாய்த் தெரியுது எனக்கு! உன் பயங்கர விளக்கம் தவறு! ஆலயப் பீடாதிபதிகள் சொன்னதும் தவறு! தீஸியஸ் சொல்வதே சரி. … தீஸியஸ்! நான் மன்றத்துக்கு வருவதாகச் செனட்டாரிடம் சொல்!

கல்பூர்ணியா: [கண்ணீர் வடித்து] மகா பிரபு! தீஸியஸ் சொல்வதுதான் தவறு! என் மனதில் அப்படித் தோன்ற வில்லை! வல்லமை மிக்க விதி உங்களை வலை போட்டுப் பிடிக்கிறது! தீயஸிஸ் சொல்வதில் தீமை ஒளிந்துள்ளதாகத் தெரியுது எனக்கு! போகாதீர் பிரபு, போகாதீர்!

தீஸியஸ்: பிரபு! செனட்டார் யாவரும் சீஸருக் கின்று பொற்கிரீடம் அணிவிக்கப் போவதாய்த் தீர்மானம் செய்துள்ளார்! தாங்கள் வரப் போவ தில்லை என்றால் அனைவரும் வருந்துவார்! பிறகு மனம் மாறி விடுவார். பெருஞ்சினங் கொண்டு மன்றத்தைக் கலைத்து விடுவார்! “தள்ளிப் போடுங்கள் பட்டாபிசேக நாளை, கல்பூர்ணியா நற்கனவு காணும் வரை!” என்று எள்ளி நகையாடுவார்! பிரபு! தங்கள் தலையை ஒப்பனை செய்த தங்கக் கிரீடம் தயாராக உள்ளது, மன்றத்தில்! தங்களை வேந்தராக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் செனட்டார்! வாருங்கள் மன்றத்துக்கு! வந்து ஏற்றுக் கொள்வீர் வெகுமதியை! பராக்கிரம சீஸரே! உமது பொற்காலமிது! உமது மகத்தான பாராட்டு விழா இது! ஒருமுறைதான் வருமிது! விட்டுவிடாதீர் வீராதி வீரரே!

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] எத்தகை அவமானத்தை எனக்கு உண்டாக்கி விட்டாய் கல்பூர்ணியா? உன் கனவைக் கேட்டு நான் ஒளிந்து கொள்வதா? தீஸியஸ்! வருகிறேன் மன்றத்துக்கு! மகிழ்ந்திடு கல்பூர்ணியா! …. யாரங்கே? கொண்டுவா எனது மேலங்கியை! குளித்து, முழுகி, ஆடை அணிந்து நான் தயாராக வேண்டும்! ….(மெதுவாக) ஆனால் தீஸியஸ்! இங்கு நடந்த அர்த்தமற்ற வாதங்களை வெளியில் எவருக்கும் சொல்லாதே! கல்பூர்ணியா என்னைத் தடுத்து நிறுத்தினாள் என்று யாரிடமும் கூறாதே! கெட்ட சகுனங்களைக் கண்டு சீஸர் அஞ்சினார் என்று எள்ளி நகையாட எவருக்கும் இடங் கொடாதே! … போ! சீஸர் மன்றத்துக்கு வருகிறார் என்று பறைசாற்று! என் பொற்காலம் உதயமாகட்டும்!

[தீஸியஸ் போகிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 23, 2006]

Series Navigation