எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்

This entry is part of 32 in the series 20061116_Issue

சி. ஜெயபாரதன், கனடாவானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்!
வைர நெஞ்சில் அடிக்குது பேரிடி! நாட்டின்
உருவைச் சிதைக்குது பேய்ப்புயல்! நகர்த்
தெருவை நிரப்புது பெரும்மழை!

**************

பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்)
இறந்து விட்டன இயற்கையின் நிகழ்ச்சிகள்!
வேதனைக் கனவுகள் சீரழிக் கின்றன,
திரைமறைவில் எழும் தூக்க மதை!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [மாக்பெத்]

(சீஸர்) மரணத்தால் மட்டுமே தீரும்!
சினமில்லை எனக்குத் தனிப்பட்ட முறையில்!
குடிமக்கள் நலத்தையே எண்ணுவேன்!
முடி சூடுவார் பேராசைச் சீஸருக்கு!
முடி சூடுவீர் சீஸருக்கு! பிறகு அவரை
உடை வாளால் நான் ஊடுறுவ
விடை தருவீர் எனக்கு அனுமதி! …. (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

“விழுதுயில் கின்றனை, விழித்தெழு புரூட்டஸ்!
நோக்கிடு உன்னை நீயே! ரோமுக் காகப்
போராடு! உரையாடு! தீர்த்திடு!
ஓரதிபர் ரோமை ஒடுக்கி ஆள்வதா?” … (காஸ்ஸியஸின் கடிதம்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சதியே! புன்னகையில் மறைந்து கொள்!
பதுங்கிக் கொள் பணிவுத் தன்மையில்!
பாதையில் நடந்தால் உன் மெய்யுரு தெரிந்திடும்!
காரிருளும் உன்னை காட்டிக் கொடுத்திடும்! …. (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சீஸரின் ஒற்றை அங்கமே ஆண்டனி! …
தேச நேசர் நாமெல்லாம் அறிவீர்!
நாசக் கொலைஞர் அல்ல நாம்!
சீஸரின் பேராசைக்கு எதிரிகள் நாம்!
உறுப்பை அறுப்பது நம்பணி யன்று! …..
மறக்கப்பட வேண்டும் மார்க் ஆண்டனி!
சீஸரின் சிரம் அறுக்கப் பட்ட பின்,
செய்வ தென்ன அவர் வெற்று உறுப்புகள்?

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.

அங்கம்:5 காட்சி:4

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். நள்ளிரவு வேளை. ரோமாபுரியில் புருட்டஸின் மாளிகைத் தோட்டம்.

நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா. புரூட்டஸின் பணியாள் லூசியஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மற்றும் சில சதிகாரர்கள்,

காட்சி அமைப்பு: மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. புரூட்டஸ் தோட்டத் தாழ்வாரத்தின் கீழ் உலாவி வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தாழ்வாரத்தில் மெழுகுவர்த்திகள் எரிந்த வண்ணம் உள்ளன.

புரூட்டஸ்: [தனக்குள் பேசியபடி] எப்படி அந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பது? சீஸரின் மரணத்தால்தான் ரோமுக்கு விடுதலை என்றால் அப்படியே ஆகட்டும்! எனக்குச் சீஸர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லை! பகையில்லை! வேற்றுமை யில்லை! குடிமக்கள் நலமே எனது குறிக்கோள்! ஆதலால் வேந்தராகச் சீஸரை முடிசூட்டுவது முறையன்று. அவரைக் கொன்றுதான் அதைத் தடுக்க வேண்டும் நான்!

[அப்போது பணியாள் லூசியஸ் ஒரு சுருள் கட்டோடு வருகிறான்]

லூசியஸ்: பலகணி வழியாகப் போகும் போது என் கண்ணில் தெரிந்தது. யாரோ சொருகி வைத்த காகிதச் சுருளிது. ஏதோ அவசரசத் தகவல் போல் தெரிகிறது. [சுருளைப் புரூட்டஸ் கையில் கொடுத்து உள்ளே போகிறான்]

புரூட்டஸ்: [மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படிக்கிறார்] “புரூட்டஸ்! நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்! விழித்தெழு! உன்னையே நீ ஆராய்ந்து செய்! ரோமுக்காக உரையாடு! குடியாட்சிக்குப் போராடு! செம்மைப் படுத்து ரோம் ஆட்சியை! விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!”

[கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது]

புரூட்டஸ்: “விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!” விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். யாரோ கதவைத் தட்டுகிறார்! லூசியஸ்! கதவைத் திறந்து யாரென்று பார்! .. காஸ்ஸியஸ் என் நெஞ்சின் கதவைத் தட்டியது முதலாக சரிவரத் தூக்க மில்லை எனக்கு!

[லூசியஸ் மீண்டும் வருகிறான்]

லூசியஸ்: காஸ்ஸியஸ் வந்திருக்கிறார். உங்களைக் காண விரும்புகிறார்.

புரூட்டஸ்: தனியாக வந்திருக்கிறாரா?

லூசியஸ்: இல்லை! கூட்டமாக வந்திருக்கிறார்கள். முகத்தை மூடியிருப்பதால் மற்றவர் யாரென்று தெரியவில்லை!

புரூட்டஸ்: உள்ளே தோட்டத்துக்கு அழைத்து வா. [லூசியஸ் போகிறான்] ஓ சதியே! நீ ஒளிவ தெங்கே? புன்னகையிலும், பணிவுப் போர்வைக் குள்ளேயும் பதுங்கிக் கொள்! வெளியே நீ தலை நீட்டினால், காரிருள் கூட உன்னைக் காட்டிக் கொடுத்திடும்!

[காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, தீசியஸ், மெத்தலஸ், திரிபோனியஸ் ஆகிய சதிகாரர் அனைவரும் முக்காடு முகத்துடன் நுழைகிறார்கள்]

காஸ்ஸியஸ்: அர்த்த ராத்திரியில் உங்களை எழுப்பி விட்டோமா? மன்னிக்க வேண்டும் புரூட்டஸ்!

புரூட்டஸ்: நட்ட நிசியானாலும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ இன்று உறக்கம் வரவில்லை எனக்கு! அறிமுகப் படுத்துவீர் காஸ்ஸியஸ். இவர்களில் பலரைத் தெரியாது எனக்கு!

காஸ்ஸியஸ்: பயங்கர இந்த இரவில் பண்பாளர் யாரும் தூங்க முடியாது. அறிமுகம் செய்கிறேன் புரூட்டஸ். யாவரும் உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர். இவர் திரிபோனஸ், இவர் தீசியஸ், இவர் காஸ்கா, இவர் சின்னா, இவர் மெத்தலஸ்.

புரூட்டஸ்: வரவேற்கிறேன் அனைவரையும். கைகளை நீட்டுவீர். [ஒவ்வொருவருவர் கையையும் குலுக்கிறார்]

காஸ்ஸியஸ்: [எல்லோரையும் பார்த்து அழுத்தமாக] நாமெல்லாம் இன்று உறுதிமொழி உரைப்போம்.

புரூட்டஸ்: வேண்டாம், உறுதி எடுக்கத் தேவை யில்லை! எல்லாரது துணிச்சலை நம்புவோம். நமது பணிக்கு யாரும் உறுதி கூறத் தேவை யில்லை! கோழைகள்தான் உறுதிமொழி கூற வேண்டும்! நெஞ்சில் உரமில்லாதவர்தான் உறுதி எடுக்க வேண்டும். உன்னத மானது நமது நாட்டுப் பணி! உறுதி எடுக்கத் தேவை யில்லை அதற்கு! நம்பத் தக்க தீரர் அனைவரும், காஸ்ஸியஸ்!

காஸ்ஸியஸ்: சிசேரோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்! சேர்த்துக் கொள்ளலாமா நம்முடன்?

காஸ்கா: சேர்த்துக் கொள்ள வேண்டும் சிசேரோவை. முதிய நபர் அவர். அவரது நரைத்த முடி அனுபவம் நமக்கு உதவும். அவரைச் சேர்ப்பதால், அவரைப் பின்பற்றுவோர் ஆதரவும் கிட்டும் நமக்கு.

புரூட்டஸ்: வேண்டாம் நமக்கு சிசேரோ. நம் சதித் திட்டம் அவர் காதில் விழக் கூடாது! செவிடன் காதில் ஊதிய சங்கொலி ஆகும் அது. வீண் முயற்சி! பிறர் சொல்வதைப் பின்பற்றுபவர் அல்லர் சிசேரோ!

காஸ்ஸியஸ்: சரி வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள் சிசேரோவை.

தீசியஸ்: சீஸர் ஒருவரைத்தான் தீர்த்துக்கட்ட வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டுமா?

காஸ்ஸியஸ்: [சிந்தித்து] சீஸரின் ஆருயிர்த் தோழர் மார்க் ஆண்டனியை விட்டுவிடுவது சரியா? ஆண்டனி சூட்சிக்காரர்! நம் திட்டத்தைப் பற்றித் தெரிந்தால், நிச்சயம் நிறுத்த முயல்வார் ஆண்டனி! அவரை விட்டுவிடுவது சரியில்லை! சீஸரோடு ஒன்றாகச் செத்து வீழட்டும் ஆண்டனியும்!

புரூட்டஸ்: அது பெரும் குருதிப்போர் ஆகிவிடும், காஸ்ஸியஸ்! நாம் கசாப்புக் கடைக் கொலைகாரர் அல்லர்! நாட்டு நேசர் நாமெல்லாம்! தலையைத் துண்டித்த பிறகு அங்கத்தை வெட்டுவதில் என்ன பலன்? மார்க் ஆண்டனி சீஸருக்கு வெறும் உறுப்புதான்! நாமெல்லாம் எதிர்ப்பது சீஸரின் பேராசைக் குணத்தை! சீஸரின் அங்க உறுப்புகளைத் துண்டு துண்டாக்குவது நம் தொழிலில்லை! சீஸரின் குருதி ஆறாய் ஓடப் போகிறது! அருமை நண்பர்களே! அஞ்சாமல் துணிச்சலோடு சீஸரைத் தீர்த்துக் கட்டுவோம்! ஆங்காரமாய்க் கொல்ல வேண்டாம்! பண்பாடு படைத்துவர் நாமெல்லாம்! கோரக் கொலைகாரர் அல்ல நாம்! மார்க் ஆண்டனியை மறந்து விடுங்கள்! சீஸர் தலை கீழே உருண்ட பிறகு, அவரது வலது கரமான ஆண்டனி என்ன செய்வான்? அழுவான்! தொழுவான்! ஏன் சீஸரோடு தானும் விழுவான்!

காஸ்ஸியஸ்: [சற்று அழுத்தமுடன்] ஆயினும் ஆண்டனிக்கு அஞ்சுகிறேன் நான்! அவர் சீஸர் மீது கொண்டுள்ள அன்பு ஆழமாக வேரூன்றியது! ஆண்டனியை நானென்றும் நம்புவதே யில்லை, புரூட்டஸ்! சீஸர் மாண்டதும் ஆண்டனி என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது!

புரூட்டஸ்: அருமைக் காஸ்ஸியஸ்! ஆண்டனியைப் பற்றிக் கவலைப் படாதீர்! சீஸர் செத்ததும் உடலை வைத்து அழுவதற்கு ஆண்டனி போவான்! அப்புறம் மனமுடைந்து ஆண்டனியும் சாவான்.

திரிபோனியஸ்:னாம், புரூட்டஸ் சொல்வதே சரி, அஞ்ச வேண்டாம் ஆண்டனிக்கு! அவர் மடியத் தேவையில்லை! நமது குறி சீஸர் மட்டுமே.

[அப்போது டங், டங் கடிகார மணியோசை கேட்கிறது]

புரூட்டஸ்: [சற்று தயங்கி] கேளுங்கள் மணியோசையை!

காஸ்ஸியஸ்: மூன்று மணி ஆகிறது. கிழக்கு வெளுப்பதற்குள் நாம் கலைய வேண்டும்.

திரிபோனியஸ்: போகும் நேரம் வந்து விட்டது.

காஸ்ஸியஸ்: [சற்று கவலையுடன்] சீஸர் காலை மக்கள் மன்றத்துக்கு வருவாரா என்பது சந்தேகமே! பேரிடி, பெருமழை, பேய்ப்புயல், மின்னல் ஆகியவற்றைப் பார்த்துப் பயப்படுவார் சீஸர்! நிரம்ப சகுனம் பார்ப்பவர் சீஸர்! இன்று ராத்திரி வானத்தில் நடக்கும் கோர நாட்டியங்கள் அவரை வெளியில் வராமல் நிறுத்தி விடலாம்! அல்லது அஞ்சிவிடும் கல்பூர்ணியாவே அவரைத் தடுத்து விடலாம். என்ன செய்யலாம்?

தீசியஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நானவரை இழுத்துக் கொண்டு வருவேன். அவரிடம் சக்கரையாகப் பேசி அழைத்து வருவேன்! உயர்வு நவிற்சியில் அவரைப் புகழ்ந்தால், மனிதர் மெழுகாய் உருகிடுவார்! முகத்துதியில் அவரைக் கவர்வது எளிது! சீஸர் முகத்துதிவாதிகளை அறவே வெறுப்பவர்! ஆனால் முகப் புகழ்ச்சி செய்தால் வேம்பாய் இருப்பவர் கரும்பாய் மாறுவார்!

காஸ்ஸியஸ்: கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பவன் அல்லவா நீ? சீஸரை மக்கள் மன்றத்துக்கு இழுத்து வரும் பணி உன்னுடையது! அதே சமயத்தில் சீஸர் அருகில் வராமல் ஆண்டனியை ஒதுக்க வேண்டுமே? யார் செய்ய முடியும் அதை?

மெத்தலஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! அழகியைக் கண்டால் மெழுகாகிப் போவார் ஆண்டனி! எனக்குத் தெரிந்த பேரழகி ஒருத்தி ஆடல் புரிய வந்திருக்கிறாள். அவளது காந்த விழிகளைக் காட்டிச் சில மணிநேரம் ஆண்டனியைத் தாமதிக்க வைக்கிறேன்! அவள் மேனி அழகு ஆண்டனியைக் கட்டிப் போட்டுவிடும்! அந்த பணியை நான் அழகாகச் செய்து முடிப்பேன்.

காஸ்ஸியஸ்: விடியப் போகிறது! கிழக்கு வெளுத்து விட்டது! நமது திட்டமும் தலைதூக்கி விட்டது! நாமெல்லாம் நீங்கும் வேளை வந்து விட்டது! மெய்யான ரோமானியராய் நம்மைக் காட்டிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது! போய் வாருங்கள் தோழர்களே! வாயைத் திறக்காதீர்! வாளைக் கூர்மை ஆக்குவீர்!

புரூட்டஸ்: ஆம் அருமை நண்பர்களே! உங்கள் முகமும், வாயும் நம் திட்டத்தைக் காட்டி விடக் கூடாது!

[அனைத்துச் சதிகாரரும் புரூட்டஸ் தோட்டத்தை விட்டுப் போகிறார்கள். தூக்கம் கலைந்து புரூட்டஸின் மனைவி போர்ஷியா வருகிறாள்.]

போர்ஷியா: [கவலையுடன்] முக்காடு போட்டு முகத்தைக் காட்டாமல் போகும் அவர்கள் யார்? விடிந்தும், விடியாத இந்தக் காலை வேளையில் நமது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் யார்? என்னைப் பார்த்தும், பாராமல், வாய்மூடி வணக்கம் கூடச் சொல்லாமல் நழுவிச் செல்லும் அந்த அநாகரீக மனிதர்கள் யார்? என்ன சொல்ல வந்தார் அனைவரும்? ஏன் நீங்கள் அதிகாலையில் எழுந்து வந்தீர்? ஏன் உங்கள் முகம் கரிந்து போய் உள்ளது? மின்னல் அடித்து விட்டதா உங்கள் முகத்தில்?

புரூட்டஸ்: [ஆச்சரியம் அடைந்து] நீ ஏன் அதிகாலையில் எழுந்து வந்தாய்? தூக்கம் ஏன் கலைந்தது உனக்கு? காலைத் தூக்கம் கலைந்தால், உனக்குத் தலை சுற்றுமே?

போர்ஷியா: அதே கேள்விகளை நான் உங்களைக் கேட்கிறேன்? நள்ளிரவுத் தூக்கம் இல்லா விட்டால், உங்களுக்கும் நல்ல தில்லையே! உறக்க மில்லாத உடம்பு வலுவின்றிப் போகுமே! உங்கள் முகம் சோகத்துடன் காணப் படுவதின் காரணம் என்ன? சொல்லுங்கள் எனக்கு!

புரூட்டஸ்: போர்ஷியா! உடம்புக்கு நலமில்லை எனக்கு. உறக்கம் வரவில்லை எனக்கு.

போர்ஷியா: என்ன? உடம்புக்கு நலமில்லையா? உடம்புக்குச் சுகமில்லை என்றால் படுக்கையில் அல்லவா ஓய்வெடுக்க வேண்டும்? பத்து ஆட்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக்கிறது? புரூட்டஸ¤க்கு நலமில்லையா? நலமில்லாதவர் அதிகாலைக் குளிரில் நடமாடினால் என்ன ஆகும்? உடல்நலம் மேலும் குறையுமே! உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒரு நோய் உள்ளது! எனக்கது தெரிந்தாக வேண்டும். உங்கள் ஆருயிர் மனைவிடம் உங்கள் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? ஏழெட்டுப் நபர்கள் ஏன் முகத்தை மூடி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார்? சொல்லுங்கள் நடந்ததை? நான் உங்கள் மனைவி அல்லவா? [மண்டியிட்டு மன்றாடுகிறாள்]

புரூட்டஸ்: கண்மணி போர்ஷியா! மண்டி யிடாதே! மன்றாடாதே! எனக்கொன்றும் கொடிய நோயில்லை! வெறும் தலைவலிதான்!

போர்ஷியா: [வியப்புடன்] வெறும் தலைவலியைச் சொல்லவா இத்தனை தயக்கம்? நம்ப முடியவில்லை என்னால்! எதையோ சொல்ல மறுக்கிறீர்! எதையோ சொல்லக் கூடாதென்று மறைக்கிறீர்! நான் உங்கள் மனைவி என்பதையும் மறக்கிறீர்! உண்டி படைப்பதற்கும், படுக்கையில் ஒட்டி உறங்குவதற்கும் மட்டுமா உங்களுக்கு மனைவி? போர்ஷியா மனைவில்லை! வெறும் உடல் விருந்தாளி உங்களுக்கு!

புரூட்டஸ்: [போர்ஷியாவை அணைத்துக் கொண்டு] அப்படி சொல்லாதே போர்ஷியா? ஆருயிர் மனைவி நீ! அன்பு மனைவி நீ! ஆசை மனைவி நீ! அழகிய மனைவி நீ! அறிவுப் பெண்மணி நீ! போகப் போக நீயே தெரிந்து கொள்வாய்!

போர்ஷியா: அன்பு மனைவி, அழகு மனைவி, அறிவு மனைவி என்றெல்லாம் அடைமொழி கொடுத்து என்னை நீங்கள் ஏமாற்றுகிறீர்! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தராமல் மறைக்கிறீர். அவர்கள் யாரென்று சொல்லுங்கள்! யாரிடமும் நான் கூறப் போவதில்லை.

புரூட்டஸ்: போகப் போகத் தெரிந்து கொள்வாய் போர்ஷியா! [அப்போது கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது] பார்! போர்ஷியா உள்ளே போ! யாரோ வருகிறார்? உள்ளே போ! நிம்மதியாக இரு!

[போர்ஷியா உடனே உள்ளே போகிறாள். லூசியஸ் ஆழ்ந்து தூங்குகிறான். புரூட்டஸ் கதவைத் திறக்கச் செல்கிறார்]

புரூட்டஸ்: யாரது மீண்டும் என்னைக் கலக்க வருகிறார்? முதலில் சதிக் கூட்டம்! அப்புறம் போர்ஷியா! அடுத்தினி என்னை யார் ஆட்டி வைக்க வருகிறார்? ஒருநாள் உறக்கம் போனது உயிர் போனது போல் உணர்கிறேன்! விதியே! சதி யாரை விழுங்கப் போகிறது? சீஸரையா? அல்லது புரூட்டஸையா? விதவை ஆகப் போவது கல்பூர்ணியாவா? அல்லது போர்ஷியாவா? சதி கால் முளைத்து நடக்க ஆரம்பித்து விட்டது! அந்த பூதத்தை யாராலுமினி நிறுத்த முடியாது!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 16, 2006]

Series Navigation