வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11

This entry is part of 32 in the series 20061116_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாநடந்து முடிந்த சம்பவத்தினால், சில பிரச்சினைகளும் வந்தன. பொதுவாக தங்களிடத்தில் நியாயமிருப்பதாக நம்பிக்கொண்டு, தங்கள் நடவடிக்கைகளில் கறாராக இருப்பவர்களில் பலரும், பிறருடன் இணங்கிப்போகிறவர்களல்லர். ஆன்னும்(Anne) அதற்கு விதிவிலக்கானவளல்ல. சற்றுமுன்னர் அவள் நடந்துகொண்டமுறையும் அதாவது தனது முரட்டுப்பிடியை மெல்லத் தளர்த்தி, எனது முகத்திலிருந்து கையை எடுத்துக்கொண்ட விதமும் அப்படித்தான். அவள் மனதில் என்னவோ இருந்திருக்கிறது, அதை வெளிப்படையாக சொல்லிவிடலாமென நினைத்திருக்கலாம், கடைசியில் என்மீதுள்ள கரிசனமா அல்லது வழக்கமான தனது அசிரத்தையா எது காரணமென்று தெரியவில்லை, தவிர்த்துவிட்டாள். ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிந்தது: என்னைக்கட்டி மேய்ப்பதென்பது எத்தனை சிரமமோ அத்தனை சிரமங்கள் எனது பலவீனங்களை அனுமதித்து, என்னை அணைத்துச் செல்வதிலும் இருந்தன. எனது தகப்பனாரை மணப்பதால் உண்டான கடமைகள் என்று சொல்லமுடியுமேயொழிய, மற்றபடி எனது அருகிலிருந்து நன்னெறிபடுத்தவேண்டிய கட்டாயமேதும் அவளுக்கில்லை. என்னைச் சதா உதாசீனபடுத்தும் அதாவது எந்தநேரமும் கடுகடுவென்றோ அல்லது தொட்டால் சிணுங்கி மாதிரி இருக்கிற அவளது குணத்தையோ (இவையெல்லாம் காரணகாரியம் பார்த்துவருவதில்லை) நானும் அங்கீகரித்திரிருக்கக்கூடும், காரணம் சிலநேரங்களில் பிறரிடமுள்ள குறைகளை திருத்தவேண்டிய கடமையேதும் நமக்கில்லாதபோது அவைகளோடு இணங்கிப்போவதில்லையா? அப்படி நீங்கள் இதையும் எடுத்துக்கொள்ளலாம். அடுத்த ஆறுமாதங்களில், ‘உன்னால் நான் படுகின்ற தொல்லைகள் போதும்,’ என்று பிரியத்தோடு என்னிடத்தில் அலுத்துக்கொள்வதைத் தவிர, அவளுக்கு வேறு வழிகளில்லை, அதைத்தான் நானும் விரும்பினேன், அதற்குகந்தவளாகத்தான் நானும் நடந்துகொண்டேன். ஆனால் அவ்வாறான உணர்வுகளொன்றையும் அவளிடத்தில் நான் காணப்போவதில்லை; ஒருவேளை என்னை பராமரிக்கின்ற பொறுப்பு அவளைச் சார்ந்தது என்பதால் இந்த முரண்பாடோ என்னவோ? அல்லது இன்னமும் அவள் விரும்பிய வடிவை தருவிக்கக்கூடிய களிமண்ணாக நான் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். களிமண்ணென்றாலும், நான் கடினமானவள் அத்தனை இலகுவாக என்னைக் கையாள முடியாதென்றே நினைக்கிறேன்.

அவள் எண்ணஒட்டத்தை நான் புரிந்துகொள்ளும்வகையிலேயே செயல்பட்டுவந்தாள். சில நாட்கள் கழிந்திருக்கும். இரவு உணவின்போது, விடுமுறையில் நான் தயார் செய்யவேண்டிய பாடங்களைப் பற்றி பேச்சு வந்தது. நான் கொஞ்சம் அசிரத்தையாக, உரையாடலை காதில் வாங்காமல், உணவில் கவனமாக இருந்தேன், இதனை எதிர்பார்க்காததால் அப்பாவுக்கு அதிர்ச்சி. ஆன் (Anne) என்னை கோபத்துடன் இழுத்துபோய் எனது அறையில்தள்ளி கதவை மூடினாள். இத்தனைக்கும் அவர்களிருவருக்கும் எதிராக ஒரே ஒரு சொல்லைக்கூட உரத்து நான் பேசவில்லை. கதவுக்கு வெளியே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. தாகமாய் இருந்தது, ஓடிச் சென்று கதவைத் தள்ளுகிறேன், அது இறுக்கமாகயிருக்கவே பூட்டியிருக்கிறதென்று புரிந்துகொண்டேன். எனக்கு இது புதிது, என்னை இதுவரை ஒருவரும் அறையில் பூட்டிவைத்ததில்லை. எனக்குப் பயமாக இருந்தது. கலவரப்பட்டிருந்தேன்: சன்னலுக்காய் ஓடுகிறேன், ம்… அதன்வழியாக தப்பமுடியாது போலிருந்தது. திரும்பிவருகிறேன். பதட்டமாகயிருந்தது. வெறிபிடித்தவள்போல கதவில் விழுந்ததில் தோளில் வலி கண்டதுதான் மிச்சம். பிறருடைய உதவியின்றி வெளியேறிக்காட்டவேண்டும் என்கிற மன உறுதியுடன், பல்லை இறுகக் கடித்தபடி, நகம் வெட்டும் அலகைக்கொண்டு திறப்பினை உடைக்க முயற்சித்தேன், முடியவில்லை. நகம் வெட்டும் அலகை அப்படியே விட்டுவிட்டு, அறைக்கு நடுவே வெற்றுக் கைகளுடன், செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். நிற்கிறேனென்று சாதாரமாக சொல்லிவிடமுடியாது, ஒரு சின்ன அசைவில்லை சிலைபோல என்று சொல்லலாம், நின்றவள் நிலவிய நிசப்தத்தை அவதானிக்கிறேன், மெல்லமெல்ல ஒருவித சாந்தம் என்னுள் வியாபிக்க, எனது சிந்தனையிலும் தெளிவு, என்ன செய்யவேண்டுமென்பதில் திடமாக இருந்தேன். முதன்முறையாக தப்பானவழியில் எனது மூளை யோசிக்க ஆரம்பித்தது. என்னைநானே தளையிட்டுக்கொண்டதுபோல நினைப்பு, கடுமையாகச் சிந்தித்து, பின்னர் அவைகளை ஒருமுகப்படுத்தினேன், கவனமாக மனதிற்குள் அடுத்து செய்யவேண்டியவைப் பற்றி யோசித்தபடி படுத்துக்கிடந்தவள், மதியத்திற்குப் பிறகு அறையைவிட்டு வெளியேறவேண்டுமென்கிற கோபத்துடன், – எனது திட்டங்களுக்கும் அதற்கும் பெரிதாய் எந்த சம்பந்தமுமில்லை- ஒன்றிரண்டுமுறை கதவில் இடிபட்டது ஆச்சரியம்.

மாலை மணி ஆறிருக்கும் என் தகப்பனார் கதவைத் திறந்துகொண்டு உள்ளேவர, எந்திரத்தனமாக எழுந்து நின்றேன். அவர் வார்த்தையேதுமின்றி என்னைக் பார்த்து புன்னகைக்க, நானும் ஒப்புக்குச் சிரித்துவைத்தேன்.

” – என்ன? ஏதாச்சும் சொல்லணுமா? – அப்பா.

– என்ன பேசணும்? எதைப்பேசணுமோ அதை உங்களுக்கும் பிடிக்காது, எனக்கும் பிடிக்காது. இபோது பேசி என்ன ஆகப்போகிறது…

– உண்மைதான்.” – அப்பாவுடத்தில் முகத்தில் நிம்மதி. மீண்டும் என்னிடம், ” ஆனால் ஆன்னிடம்(Anne) நல்லவிதமாக நடந்துகொள்ளேன். உனக்குப் பணிவுதேவை.

அவர் சொன்ன வார்த்தை என்னை உசுப்பிவிட்டது: என்னது… நானா? நானா ‘ஆன்’னிடம் பணிந்து போகவேண்டும். பிரச்சனையை, என் மீது திருப்பியிருந்தார். ‘ஆன்’னுக்கும் எனக்குமுள்ள பிரச்சினை ஒரு தாய்க்கும் மகளுக்குமுள்ள பிரச்சினையாகப் பார்க்கிறார். இது உண்மைக்கு மிகமிக புறம்பானது, கடவுளே!… எதைவேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது

” – மோசமாக நடந்துகொண்டுவிட்டேன்.. ஆன்னிடம் மன்னிப்பு கேட்கலாமென்றிருக்கிறேன்.

– என்னது… என்னாலே நம்பவே முடியலை.. அப்ப உன் மனசிலே கோபமேதுமில்லைண்ணு சொல்லு.

– ஆமாம்.. தலையை லேசாக ஆட்டினேன். தவிர நாம இரண்டுபேரும் ஆன்கிட்ட ஏதோஒருவைகையில் இழுபட்டு அவதிப்படறோம், சீக்கிரத்தில் நான் கல்யாணம் பண்ணிக்கொண்டால் பிரச்சினைகளில்லையென்று நினைக்கிறேன், வேறொன்றுமில்லை.”

இந்த யோசனை நிச்சயமாக அவரை வருந்தச்செய்யுமென்று எனக்குத் தெரியும்

” – எதையாவது உளறிக்கொண்டிராதே… இப்போது கல்யானத்திற்கெல்லம் என்ன அவசரம். உன்னை வெண்பனி பெண்ணென்று(1) கற்பனை பண்ணிக்காதே. என்னைவிட்டு இவ்வளவு சீக்கிரம் விலகிக்போக, எப்படித் துணிந்தாய்? இதுவரை பெரும்பாலான வாழ்க்கையை நீ விடுதி, விடுதிண்ணு கழிச்சாச்சு, நாம இரண்டு பேரும், ஒன்றாக இருந்ததென்று சொன்னால் அதிக பட்ஷமாக இரண்டுவருடங்களிருக்குமா?..”

நினைத்துப் பார்க்க எனக்கும் சங்கடமாக இருந்தது. எனது தகப்பனார் மார்பில் சாய்ந்து, எனது சந்தோஷ இழப்புகளையெல்லாம் சொல்லி கதறி அழுதுவிடுவேனோ என்று நினைத்தேன். என்னால் முடியாது இந்த ஆட்டத்திற்கு நான் துணைபோகமுடியாது.

” அப்பா… நான் கொஞ்சம் மிகையா நடந்துகிட்டேன். உங்களுக்குத் தெரியாதா, ‘ஆன்’னுக்கும் எனக்கும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பேயில்லை. நாங்களிருவரும் ஒத்துப்போவோம், அதாவது பரஸ்பரம் இருவரும் விட்டுக்கொடுத்து…

– ஆமாம் அப்படித்தான் இருந்திருக்கீங்க, நான் இல்லைண்ணு சொல்லலையே.”

அப்பா மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் நான்தான் விட்டுக்கொடுத்துபோகவேண்டுமே தவிர ஆன்(Anne) அல்ல. அவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்.

” – அப்பா உங்களுக்கு நன்றாகத் தெரியும். ‘ஆன்’ எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் நியாயமிருக்குமென்றுதான் நான் நம்புவேன். நம்மிருவர் வாழ்க்கையையும் பார்க்க அவள் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறாள், சொல்லபோனால் மிகக் கடினமான வழிகளில்…”

நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை உணர்ந்தவராய், அதைமறுப்பதற்கு அறிகுறியாக சில செய்கைகள், நான் கவனியாதவள்போல தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோனேன்:

“…அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில், ஆன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவளாக நான் இருக்கலாம். எங்களிருவருக்கிடையில் முட்டாள்தனமான விவாதங்களுக்கு இடமிருக்காது. என்ன, எனக்குக் கொஞ்சம் பணிவு தேவை. அடக்கமாக இருக்க பழகிக்கணும்.”

அப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார், குழப்பத்திலிருந்தார் கூடவே பதட்டம் வேறு. காரணம் புரிந்தது, தனது தான் தோன்றித்தனமான எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு துணை குறைந்துவிடுமோ அல்லது தனது கடந்தகாலத்தையேகூட ஒருவகையில் இழந்து விடுவோமோ என்கிற அச்சமாகவிருக்கலாம்.

” – எதையாவது கற்பனைபண்ணிக்காதே, குரல் சுரத்தின்றி ஒலித்தது. தொடர்ந்து, “உன்வயதுக்குத் தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத் தவறிவிட்டேன். என்வயதுக்குரிய வாழ்க்கைப்படியாவது உன்னை நடத்தினேனாவென்றால் அதுவுமில்லை. ஆனாலும் பிறர் பரிகசிக்க உன்னை வைத்திருந்தில்லை, நன்றாகவே வைத்திருந்தேன். உண்மையில் கடந்த இரண்டுவருடங்களாக நமது வாழ்க்கையில் அசம்பாவிதங்களுமில்லை, கவலைகளுமில்லை, மகிழ்ச்சியாகவே இருந்துவந்தோம். இன்றைக்கு ஆன்னுடைய அபிப்ராயங்கள் சிலவிஷயங்களில் முரண்படுவதற்காக, சட்டென்று நமது பந்தத்தை துறக்க நினைக்கிறாய். சரியா? கொஞ்சம் யோசித்து பார்..

– துறக்கக் கூடாதுதான், ஆனால் ஒதுங்கிக்கொள்ளலாம் இல்லையா? பதிலில் தெளிவாய் இருந்தேன்.

அப்பாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது. அவருக்கு என்னசொல்வதென்று புரியவில்லை. “தாராளாமாக ஒதுங்கிக்கொள்ளலாம்”, என்றார். பின்னர் இருவருமாக கீழே இறங்கிச் சென்றோம்.

ஆன்னிடம் தயக்கமின்றி மன்னிப்புக் கேட்டேன். ‘எங்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கெல்லாம் பாழாய்ப்போன வெக்கையே காரணமென்பதால், மன்னிப்புக்கு அவசியமில்லை என்றாள். நான் அவள் பதிலை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லையென்றபோதிலும், அந்த நேரம் மகிழ்ச்சியாகவிருந்தது.

சிரிலை, தீர்மானித்திருந்தபடி ஊசியிலைத் தோப்பில்வைத்து சந்தித்தேன். ‘இனி செய்யவேண்டியது என்ன?’ என்று அவனுக்கு விளக்கமாக கூற, அதை ஒருவித அச்சத்துடனும், பிரம்மிப்புடனும் கேட்டுக்கொண்டான். பிறகு என்னை சட்டென்று அணைக்க முயற்சிக்கிறான், நேரம் வேறு ஆகியிருந்தது, நான் எனது வில்லாவுக்குத் திரும்பவேண்டிய கட்டாயத்தினால் புறப்பட நினைக்கிறேன், மனமோ, அவனது அணைப்பிலிருந்து விடுபட தயங்குகிறது, நினைத்திருந்தால் போகவிடாமல் அவன் என்னைத் தடுத்திருக்கலாம், நானிருந்த நிலை அப்படி, எனது உடல் அவன் மனதை உள்வாங்கிக்கொண்டதுபோல, தன்னை மறந்த நிலையில் அவனை அணைத்துகொள்ள, தாபத்துடன் முத்தமிடுகிறேன். மாலையின் இவ்வரிய தருணத்தை, எண்ணிஎண்ணி அவன் வருந்தவேண்டும், இரவுபகலென்று அவனது நினைவு என்னையே சுற்றிவரவேண்டும், அதற்கேற்ற வகையில், அவன் நினைவில் நிறுத்தும்வகையில் ஒரு வலியை, ஒரு தழும்பை இந்தநேரத்திலே அவனிடத்திலே விட்டுசெல்லவேண்டுமென்பதுபோல ஒருவித ஆவேசத்துடன் செயல்படுகிறேன். எனது உடல் மீது அவனை வாங்கிக்கொள்ளாமல், அவனது தழுவல்களில்லாமல், அவனது தந்திரங்களில்லாமல் சட்டென்று வெளிப்படுகிற அவனதுகோபங்களில்லாமல், இனி என்னாலும் ஓர் இரவை கற்பனை செய்யவியலாது. அப்படியே அமைந்தாலும் அவ்வாறான இரவுகள், விடிதலின்றி நீளக்கூடும்.

———————————————————————————-
1. வெண்பனி(Snow white) – Snow white and the Seven dwrafs -கதையின் நாயகி

nakrish2003@yahoo.fr

Series Navigation