வித்தியாசம் எதாவது…

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

குரல்செல்வன்


திடீரென வரும் விருந்தினருக்கு வாங்கி வைத்திருங்கள் என்று விளம்பரங்களில் வருமே, அது போல சாமியும் பிறந்த நாள் பரிசாகப் பல விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைப்பது வழக்கம். சூரனுக்கு அவன் நண்பர்களில் யாருக்காவது பிறந்த நாள் பார்ட்டி யென்று திடீரென்று அழைப்பு வரும். ஒன்றை எடுத்து ஹாப்பி பர்த்டே என்று அலங்காரக் காகிதத்தில் சுற்றிப் பரிசளிக்க அவனிடம் கொடுத்தனுப்புவான். கடைக்குப் போய் வாங்கி வர முடியாமல் போகலாம். பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையின் வயதிற்கு ஏற்ற விளையாட்டு சாமான் கிடைக்காமல் போகலாம். அப்படிச் செய்வது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று புதிதாக வந்திருக்கும் கரோல்ஸ்கியுடன் பேசிய போது சாமிக்குத் தோன்றியது.
அது ஒரு வெள்ளிக்கிழமை. மாலை சமையலில் சரவணப்ரியா ப்ராக்கோலி கறி செய்திருந்தாள். எல்லா சிறுவர்களையும் போல் சூரன் அதைச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தான். அது பச்சையாக இருக்கிறது என்பது அவன் குறை. சாராவும், சாமியும் சாப்பிட்டு விட்டு அவன் முடிப்பதற்காகக் காத்திருந்தார்கள்.
“ப்ராக்கோலி பச்சையாத்தான் இருக்கும். அப்பாவை வேணுமின்னா கேட்டுப் பார்.”
“ப்ராக்கோலியோட பச்சை பிடிக்காவிட்டால் அடுத்த முறை ப்ராக்கோஃபிளவர் வாங்கலாமா? அது அவ்வளவு பச்சையாக இருக்காது.”
அப்பாவும், அம்மாவும் சேர்ந்து தன்னை மடக்கிவிட்டார்கள் என்று உணர்ந்த சூரன் ப்ராக்கோலி சாப்பிட்டால் என்ன திரும்பப் பெறலாம் என்று யோசித்தான்.
“நீ ப்ராக்கோலி சாப்பிட்டா உன்னை பிக் வீல்ஸ்லே ஐவி சர்க்கில் முழுக்க அழைச்சிட்டுப் போவேன்.”
சூரனுக்கு அது பிடித்திருந்தது. ஆனால் இன்னும் கொஞ்சம் யோசித்து, “யூ ஃபீட் மீ” என்றான்.
சரவணப்ரியா கரண்டியை அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள். இரண்டு நிமிடங்களில் ப்ராக்கோலி போன இடம் தெரியவில்லை.
நாற்காலியைத் தள்ளி விட்டு சாமி எழுந்தான். “சூரனைக் கூட்டிண்டு நீ முன்னாடி போ. நான் பாத்திரங்களைக் கவனிச்சிட்டு அப்புறமா வரேன். போகும் போது கேரன் வீட்டில் இருந்தால் அவளையும் அழைச்சிண்டு போ!”
சூரனின் மூன்று சக்கர வண்டியைச் சரவணப்ரியா வெளியே எடுத்து வந்து வைத்தாள். பேரிரைச்சலுடன் வண்டி கிளம்பியது. சாமி தட்டுகளையும், பாத்திரங்களையும் ஓரளவு கழுவி டிஷ் வாஷரில் அடுக்கத் தொடங்கினான். அவன் எதிர் பார்த்ததை விட அது அதிக நேரம் பிடித்தது. ஐவி சர்க்கில் அரை வட்ட வடிவில் இருந்த பிரதான சாலை. அதிலிருந்து பிரியும் யேல் கோர்ட்டில் அவர்கள் வீடு இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பி ஐவி சர்க்கிலில் இடது பக்கம் திரும்பி அந்தத் தெருவைச் சுற்றி வருவது வழக்கம். அப்படி அவர்கள் செல்லும் போது அவர்களைப் பிடித்து விடலாம். சூரனுக்கு அங்கங்கே வண்டியை நிறுத்தி வேடிக்கை பார்க்க வேண்டும். அன்று பிற்பகலில் பெய்த மழையால் தெருவில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அவனுக்கு ஒவ்வொரு குட்டையிலும் சைக்கிளை விட்டுச் செல்ல வேண்டும்.
வேலை முடிந்த பின் சாமி வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.
யேல் கோர்ட்டிலிருந்து ஐவி சர்க்கிலில் திரும்பும் போது, “ஹாய்” என்ற குரல் கேட்டது. ஒரு மாதமாக ‘விற்பனைக்கு’ என்று போர்டு போட்டிருந்த வீட்டிலிருந்து ஒருவர் வேகமாக வந்தார். அவர் கையில் ஒரு கவர் இருந்தது. சாமி அவர் அருகில் சென்று கை நீட்டினான்.
“ஹாய்! என் பெயர் சாம். நான் இந்த யேல் கோர்ட்டில் இருக்கிறேன். வெல்கம் டு த நெய்பர்வுட்.”
“தாங்க் யூ! நான் டாம் கரோல்ஸ்கி. நான் டியுக்கில் சோஷியல் எதிக்ஸ் சொல்லித்தருகிறேன்.”
அப்படி ஒரு பாடம் இருக்கறதா என்று வியந்த சாமி, “என் மனைவியும் டியுக்கில்தான் இருக்கிறாள். எங்களுக்கு மூன்றரை வயதில் ஒரு பையன் இருக்கிறான்” என்றான்.
“சற்று முன்னால் அவர்கள் இந்த வழியாக நடந்து போனார்களோ?”
“ஆமாம்.”
“அவர்கள் என் மனைவி, பையனுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்து அதைப் பார்த்துவிட்டுத்தான் நான் வெளியே வந்தேன். நான் வருவதற்குள் அவர்கள் போய்விட்டார்கள் போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த கவரை நீட்டினார். “நாளை என் பையனுக்கு நான்காவது பிறந்த நாள். இதில் அழைப்பு இருக்கிறது. கவரில் நீங்கள் தான் உங்கள் பையனின் பெயரை எழுத வேண்டும்.”
அவரிடமிருந்து கவரையும், பேனாவையும் வாங்கி அவர் சொன்ன படியே சாமி செய்தான். “எங்கே பார்ட்டி?”
“இங்கேதான். வீட்டின் பின் பக்கம். திடீரென்று அழைப்பதற்கு மன்னிக்க வேண்டும்.”
“அதெல்லாம் பரவாயில்லை. நீங்களே இந்த வாரம்தானே வீடு மாற்றி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது உதவி வேண்டுமா?”
“வேண்டாம். நாங்கள் இரண்டு வீடு தள்ளி இருக்கும் மிஸ் ரெயின்போவை நேற்று சந்தித்தோம். அவளை உங்களுக்குத் தெரிந்திருக்குமே.”
“குழந்தைகளின் பார்ட்டிகளில் பார்த்திருக்கிறேன்.”
“அவளே எல்லா ஏற்பாடுகளும் செய்கிறாள்.”
“நாங்கள் கட்டாயம் வருவோம்” என்று சொல்லிக் கொண்டே சாமி நகர்ந்தான்.
“பை. நாளைக்குப்; பார்ப்போம்.”
வந்த வழியில் சென்று இனி அவர்களைப் பிடிக்க முடியாது என்று நினைத்து, சாமி எதிர்ப்புறம் நடக்க ஆரம்பித்தான். அவன் நான்கு வீடுகளைக் கூட கடக்கவில்லை. அதற்குள் து}ரத்தில் சரவணப்ரியாவின் உயரமும், சூரனின் வண்டியும் தெரிந்தன. அவன் அங்கேயே நின்று என்ன விளையாட்டுப் பொருளைப் புதுப் பையனுக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தான். ரிமோட் கண்ட்ரோல் கார், செசமி ஸ்ட்ரீட் புத்தக செட், கூடைப் பந்து, பெண் குழந்தையின் முதல் டைரி, என்று சமீபத்தில் கொடுத்த பரிசுகளின் பட்டியல் நீண்டது. ஐந்திலிருந்து எட்டு வயதிற்குள் என்று குறிப்பிட்;ட லெகோ செட் ஒன்று இன்னும் இருந்ததாக நினைவு. நான்கு வயது பையனுக்கு அது சரியாக இருக்கும் என்று முடிவு செய்த போது சரவணப்ரியாவும், சூரனும் அவன் அருகில் வந்தார்கள். சாமி திரும்பி அவர்களுடன் நடந்தான்.
“கையில் இருப்பது என்ன?”
“பிறந்த நாள் பார்ட்டிக்காக உனக்கு ஒரு அழைப்பு.”
“யாருடைய பிறந்த நாள்?”
“நீ சற்று முன் பார்த்தாயே அந்தப் பையனுக்குத்தான்.”
யேல் கோர்ட்டில் திரும்பினார்கள்.
“நாங்க வர்ர போது கேரன் வீட்டிலே இல்லை. அதனால சூரன் கொஞ்சம் வருத்தமா இருந்தான். ஏரனைப் பாத்ததிலே அவனுக்கு சந்தோஷம்.”
“ஏரன்தான் அந்தப் பையனுடைய பேரா?”
அப்போது அவர்களைக் கடந்து சென்ற காரிலிருந்து கேரன் கை ஆட்டினாள்.
“நான் கேரனுடன் விளையாடலாமா?”
“அவள் அம்மா சம்மதித்தால்.”
அவர்கள் தெருவிலே காத்திருக்கும் போது கேரனின் வீட்டிற்குள் சென்ற சூரன், “லீசா செட் ஓ கே” என்று கத்தினான். சரவணப்ரியா, “இன்னும் ஒரு மணியிலே உன்னை அழைச்சிட்டுப் போக வருவேன். அது வரைக்கும் நீ விளையாடலாம்” என்றாள்.
அவர்களுடைய வீட்டை நோக்கி நடக்கும் போது சாமி சொன்னான். “நம்ம வீட்டுப் பக்கத்திலே ஒரே பெண் குழந்தைகள் தான். சூரனோட விளையாட ஒரு புதுப் பையன் வந்திருக்கான். அடுத்த வருஷம் ரெண்டு பேருமா ஒண்ணா எலிமெண்டரி ஸ்கூலுக்குப் போகலாம்.” சரவணப்ரியா திரும்பி சாமியைப் பார்த்தாள், ஆனால் பதில் சொல்லவில்லை.
“கிறிஸ்மஸ் முடிஞ்சப்பறம் நீ வாங்கின ஒரு லெகோ செட் இன்னும் பிரிக்காம இருக்கு. நாளைக்கு அவனுக்கு அதைக் கிஃப்ட்டா கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்.”
“அது அவனுக்கு சரிப்படாது. இன்னைக்குக் கடைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனாலும் மாலுக்குப் போய் ஒரு சட்டையும், ஷார்ட்ஸ_ம் வாங்கிட்டு வா. பையங்க சைஸ் நாலு சரியா இருக்கும்.”
“ஏன் சரிப்படாது?”
“நேரா சொல்ல வேணாம்னு பாத்தேன். அவனுக்கு டௌன் சிண்ட்ரோம் இருக்கும் போலத் தெரியுது.” அவளுடைய அக்காவின் குழந்தை அந்தக் குறையுடன் பிறந்ததும், அதற்காக அவள் கணவன் அவளைத் தள்ளி வைத்ததும் சாமிக்குத் தெரியும். அதனால் மௌனம் சாதித்தான்.
“நான் அவங்க வீட்டு வாசல்லே இருந்த வரைக்கும் அவன் ஒரு வார்த்தை கூடப் பேசல.”
“பையங்க பேசாதது ஒண்ணும் அதிசயமில்லையே.”
“அது மட்டுமில்ல. பாக்க ரொம்ப சிறிசா இருந்தான்.”
அது கூட சாமிக்குச் சரியான காரணமாகத் தோன்றவில்லை. ஏரனுடைய அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அவளால் அவனைக் கூர்ந்து கவனித்திருக்க முடியுமா?
“அப்படி அவன் நார்மலா இருந்தா சட்டையும், ஷார்ட்ஸ_ம் போட்டுக்கலாம். ஒரு வேளை நான் நினைக்கிற படி அவனுக்கு டௌன் சிண்ட்ரோம் இருந்துச்சின்னா, நாம கொடுக்கிற லெகோ செட்டினால அவனோட அம்மா அப்பாவுக்கு மனம் வருத்தப் படும்.”
சாமி மறுக்கவில்லை.

மறுநாள் காலை பதினோரு மணிக்கு, சாமி சூரனை அழைத்துக் கொண்டு கரோல்ஸ்கி வீட்டிற்கு வந்தான். தபால் பெட்டியில் கட்டப் பட்ட பலு}ன்கள் அவர்களை வரவேற்றன.
அவற்றைப் பார்த்த சூரன், “ரெயின்போ” என்று சுட்டிக் காட்டினான்.
“பலு}ன்கள் மட்டுமல்ல. கேக், தட்டுகள், கோப்பைகள், மேஜை விரிப்பு எல்லவற்றிலும் இன்று வானவில் இருக்கும்.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“ஒரு ஊகம்தான்.”
வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் தோட்டத்தை அடைந்த போது நடுவில் இருந்த பெரிய மேஜையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தவள், “குட் மார்னிங். ப்ளீஸ் கம்” என்று அழைத்தாள். “நான் லிண்டா கரோல்ஸ்கி. உங்களுடன் பேசியதைப் பற்றி டாம்; சொன்னார்.”
சாமி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
சூரன் தான் எடுத்து வந்திருந்த பரிசுப் பெட்டியை மேஜையின் மேல் வைத்தான். “மிஸஸ் கே! நானே இதைக் காகிதத்தில் சுற்றினேன்.”
“உன்னைப் பார்த்தவுடனேயே நீ மிகவும் புத்திசாலி என்று எனக்குத் தெரிந்துவிட்டது” என்று அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.
“உங்கள் வீட்டின் யார்ட் மிக நன்றாக இருக்கிறது.” பைன் மரங்களுடன் நிறைய டாக்வுட்டும் இருந்ததால் மே மாதத்து வெயில் கூட அதிகமாகத் தெரியவில்லை. குழந்தைகள் விளையாட சறுக்கு மரமும், ஊஞ்சல்களும், ஒரு மணல் மேடும் இருந்தன. பட்டாம் பூச்சிகள் சில காற்றில் மிதந்தன. தேனீயும் ஒன்றிரண்டு இருக்குமோ என்று சாமி பயந்தான்.
“அதனால்தான் இந்த வீட்டை வாங்கினோம். இதற்கு முன் ட்யூக் பக்கத்திலே ஒரு அபார்ட்மெண்ட்டில் குடி இருந்தோம்.”
வீட்டிலிருந்து டாம் கரோல்ஸ்கி வெளியே வந்தார்;. கோட்டும் டையுமாகப் பின்னால் ஏரன். அவனுடைய குட்டையான உருவமும், தட்டையான முகமும், சற்று மேலே து}க்கிய கண்களும் சாமிக்கு வித்தியாசமாகத் தெரிந்தன.
சூரன் ஏரனின் அருகில் சென்று, “ஹாய்! ஏரன்!” என்று கை ஆட்டினான். ஏரன் பதில் சொல்லாவிட்டாலும் அவன் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது.
அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் கார்களும், மினிவான்களும் பார்ட்டிக்குக் குழந்தைகளை இறக்கி விட்டுச் சென்றன. இந்த மாதிரி பார்ட்டிகளில் இரண்டு பெரியவர்கள் குழந்தைகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதைச் சாமி பார்த்ததுண்டு. பக்கத்திலேயே இருந்ததால் அவன் அங்கேயே தங்க முடிவு செய்தான். “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் கேளுங்கள்.”
“வெளியில் குழந்தைகள் யாரும் போகாமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய உதவி இருக்கும்.”
அங்கு வந்த ஆறேழு குழந்தைகளில் பல தோற்றத்தில் ஏரனைப் போலவே இருந்தன. அவர்கள் எல்லோரும் ஒரே சிறப்புப் பள்ளிக்குச் செல்வார்களாக இருக்கும். தன்னிச்சையாக, நிதானமாக இங்குமங்கும் அலைந்தார்கள். அதனால் அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமாகவே இருந்தது.
சூரனுக்கு வேறு யாரையும் தெரியாததால் ஏரன் பக்கத்திலேயே இருந்தான். அங்கு சுற்றிப் பறந்த பட்டாம் பூச்சிகளில் ஒன்று ஏரனின் கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதைப் பிடிக்க அதன் பின்னால் சென்றான்.
“அது ஒரு பட்டர்ஃப்ளை.”
“;ஃப்ளை.”
பட்டாம் பூச்சி சூரனையும், ஏரனையும் ஊஞ்சல் வரை இழுத்துச் சென்று பிறகு வேகமாகப் பறந்துவிட்டது. சூரன் உயரமான ஊஞ்சல் ஒன்றில் உட்கார்வதைச் சாமி பார்த்தான். காலைத் தரையில் உதைத்து ஆட ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து ஏரனும் ஊஞ்சலில் உட்கார்ந்தான். அவனுக்கு ஆட்டிக் கொள்ளத் தெரியவில்லை. சாமி அவனுக்குப் பின்னால் சென்று ஊஞ்சலைப் பிடித்துப் து}க்கி மெதுவாக இறக்கி விட அவன் ஆடினான். வேகம் குறைந்த போது மறுபடியும் தள்ளப் போனான். “டாட்! அவனைத் தள்ளாதே! ஊஞ்சலில் எப்படி ஆடுவது என்று நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்.” என்று சூரன் காலை நீட்டியும் மடக்கியும் காண்பிக்க ஏரனும் அப்படியே செய்யப் பார்த்தான்.
மூன்றாவது ஊஞ்சலில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். அவள் உடனே ஆடாததால், “நான் உன்னைத் தள்ளட்டுமா?” என்று சாமி கேட்டான். அவள் தலையை அசைத்தாள்.
“என் பெயர் சாம். உன் பெயர் என்ன?”
அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. ஆறு விரல்களைக் காட்டினாள்.
“அவளுக்கு நீ கேட்டது புரியவில்லை. அவளுடைய வயதை நீ கேட்டதாக அவள் நினைக்கிறாள்.” சாமி திரும்பிப் பார்த்தான். பின்னல் போட்ட ஒரு பெண்.
“நான் அந்தப் பையனின் அப்பா.”
“அவள் பெயர் லாரா. நான் அவளை விடச் சிறியவள். ஆனால் நான்தான் அவளை அக்காவைப் போல் பார்த்துக் கொள்வேன்.” அதைக் கேட்ட சாமிக்கு உடல் சிலிர்த்தது. கண்ணின் நீரை மறைக்க முகத்தைத் திருப்பி லாராவின் ஊஞ்சலைத் தள்ள ஆரம்பித்தான்.
ஊஞ்சல் நின்றவுடன் எல்லோரும் இறங்கினார்கள்.
அப்போதுதான் ஏரன் லாராவைப் பார்த்தான். அவள் அருகில் சென்று தலையை நீட்டினான். மெதுவாக இருவரும் முட்டிக் கொண்டார்கள். ஏரன் திரும்பி சூரனைக் காண்பித்தான். அவனுக்கும் லாராவிடமிருந்து நெற்றியில் ஒரு குட்டு கிடைத்தது.
ஹாப்பி பர்த்டே பாட்டை பாடிக்கொண்டு ஒரு Nஃபாக்ஸ்வேகன் கார் வரவே எல்லோருடைய கவனமும் அதன் மேல் திரும்பியது. வானவில் வரைந்த காரிலிருந்து இறங்கிய கோமாளியைப் பார்த்து சூரன், “மிஸ் ரெய்ன்போ” என்று கத்தினான்.
“இங்கே ஒரு பிறந்த நாள் பையன் இருக்கிறானாமே! அவன் எங்கே?” என்று தலையில் வானவில்லின் வண்ணங்களில் ஒரு விக் வைத்திருந்த மிஸ் ரெய்ன்போ தேடத் தொடங்கினாள். அவள் அணிந்திருந்த பெரிய கருப்புக் கண்ணடி அவள் பார்வையை மறைக்க மரங்கள் மீதும், மனிதர்கள் மீதும் அவள் மோதிக் கொள்வதைப் பார்த்துக் குழந்தைகள் சிரித்தார்கள். லாராவின் தங்கை, “கருப்புக் கண்ணாடியை எடு. அப்புறம் உனக்கு நன்றாகத் தெரியும்” என்றாள். “நான் சரியான முட்டாள்” என்று சொல்லிக் கொண்டே மிஸ் ரெய்ன்போ கண்ணாடியை எடுத்தாள். பிறகு அவள் ஏரனைக் கண்டு பிடித்து அவனைக் காரின் முன் அழைத்துச் சென்றாள். கார் ஹாப்பி பர்த்டே பாட்டுப் பாடி வண்ண காகிதத் துண்டுகளை அவன் மேல் இறைத்தது. குழந்தைகள் கூச்சல் போட்டு அவர்களைச் சுற்றி நின்றார்கள். அப்போதுதான் ஏரனுக்குத் தனக்காகத் தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று சாமிக்குத் தோன்றியது.
மிஸ் ரெய்ன்போ, “பிறந்த நாள் பையனுக்கு என்ன பொம்மை வேண்டும்?” என்று கேட்டாள்.
“ஃப்ளை.”
பட்டர்ஃப்ளை என்று பக்கத்தில் இருந்த சூரன் விளக்கினான். மேலே அணிந்திருந்த அங்கியின்; பையிலிருந்து ஒரு நீண்ட பலு}னை எடுத்து ஊதி, அதை வளைத்து, முடி போட்டு ஒரு வண்ணத்துப் பூச்சியை உருவாக்கி, பையிலிருந்து எடுத்த மார்க்கர்களால் சிறகுகளுக்கு வண்ணம் தீட்டி ஏரன் முன் நீட்டிய போது அவன், “ஃப்ளை” என்றான்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த சூரனைப் பார்த்து, “உனக்கு நிஞ்சா டர்ட்டில் வேண்டுமா? அல்லது டிரான்ஸ்ஃபார்மர் வேண்டுமா?” என்று கேட்டாள்.
“எனக்கு இரண்டும் வேண்டாம். உன்னால் ப்ளு டெவில் செய்ய முடியுமா?”
“ப்ளு டெவில் செய்வேன். அதை விட நன்றாக டார்ஹீல் செய்வேன்.” கோமாளி குறும்புடன் சிரித்தாள். சூரன் அதைக் கவனிக்கவில்லை. “ப்ளு டெவில் மட்டும்தான் எனக்கு வேண்டும்.”
நீல பலு}னுக்கு நீண்ட காதுகளும், ஒரு வாலும் வளர்ந்தன. கறுப்பு மையால் முகத்தில் மீசையும் தாடியும் முளைத்தன. கடைசியில் ஒரு சிறிய பிளாஸ்டிக் Nஃபார்க்கை அதன் கையில் வைத்து ஒட்டி, “டியூக் ரசிகனுக்கு” என்று சூரன் கையில் கொடுத்தாள்.
மிஸ் ரெய்ன்போ ஒவ்வொரு குழந்தைக்கும் அது கேட்டபடி பலு}னில் ஒரு பொம்மை, அதுவும் அந்தக் குழந்தையுடன் பேசிக்கொண்டே செய்த அழகை வேடிக்கை பார்த்தான் சாமி.
அது முடியும் போது, “கேக் வெட்டும் நேரம்” என்று லிண்டா அழைத்தாள்.
சாமியும், டாமும் ஒரு வழியாக எல்லாக் குழந்தைகளையும் திரட்டி வந்து மேஜையைச் சுற்றி உட்கார வைத்தார்கள். லிண்டா நான்கு மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கேக்கின் மேல் செருகினாள். வானவில்லின்; கீழ் இருந்த எழுத்துக்களைக் கூட்டி, “ஹாவ் எ கலர்ஃபுல் டே! ஏரன்!” என்று படித்தான் சூரன்.
“சூரன்! எப்படிப் படிப்பது என்று நீதான் ஏரனுக்குக் கற்றுத் தர வேண்டும். டாம்! கேமரா ரெடியாக இருக்கிறதா?”
பெரியவர்கள் ஹாப்பி பர்த்டே பாடலைப் பாட, குழந்தைகள் வாயசைக்க, டாம் கையில் காமராவுடன் காத்திருக்க, ஏரன் அவன் முன் எரிந்த மெழுகுவர்த்திகளை வேடிக்கை பார்த்தான். பக்கத்தி;ல் உட்கார்ந்திருந்த சூரன் கன்னத்தை உப்ப வைத்து அவனுக்கு ஊதிக் காட்டினான். ஏரன் அதைப் போல் செய்ய முயற்சித்தான். பிறகு இருவரும் ஊத ஒருவழியாக மெழுகுவர்த்திகள் அணைந்தன. கை தட்டல் ஒலி எழுந்து அடங்கியது. ஏரன் அம்மா கொடுத்த பிளாஸ்டிக் கத்தியால் கேக்கின் மேலிருந்த சர்க்கரைப் பாகை எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். டாம் அவனிடமிருந்து கத்தியை வாங்கி, வேறொரு பெரிய கத்தியால் கேக்கைப் பல துண்டுகளாக வெட்டித் தட்டுகளில் வைக்க, சாமியும் லிண்டாவும் எல்லோருக்கும் வினியோகம் செய்தார்கள். ஒரு துண்டை ஏற்றுக் கொண்ட மிஸ் ரெய்ன்போ குழந்தைகள் சாப்பிடும் மும்முரத்தில் இருக்கும் போது வண்ணக் காரில் ஏறிச் சென்று விட்டாள்.
பிறகு பரிசுகளைப் பிரிக்கும் நேரம். பக்கத்தில் இருந்த சூரன் தான் கொண்டு வந்த பெட்டியை எடுத்து ஏரன் கையில் கொடுத்தான். ஏரன் மேல் இருந்த காகிதத்தைச் சுலபமாக எடுத்துவிட்டுப் பெட்டியைப் பிரிக்கும் போது ஒரு சட்டையும், ஒரு தொப்பியும் கீழே விழுந்தன. கீழே குனிந்த ஏரன் அவற்றின் மேலிருந்த நைகியின் அடையாளத்தை ஒரு நிமிடம் கவனித்தான். அதைத் தொட்டுவிட்டு அப்படியே பக்கத்தில் சூரனின் நைகி ஷ_வில் இருந்த அடையாளத்தைக் காட்டிச் சிரித்தான். “ஸ்வூஷ்.”
மற்ற பரிசுகளை லிண்டாவும், டாமும் பிரித்தார்கள். நீந்தும் போது அணியும் கண்ணாடி, அழகான பிளாஸ்டிக் தட்டுகள், வௌ;வேறு காலங்களில் அணியும் உடைகள் என்று ஏரனின் நண்;பர்கள் கொடுத்த பரிசுகள். கடைசியாக ஒரு பெரிய அட்டைப் பெட்டி.
“ஏரன்! இது உன் தாத்தா பாட்டி அனுப்பிய பரிசு. அவர்களை உனக்கு நினைவிருக்கிறதா? சென்;ற கிறிஸ்மஸ்ஸ_க்கு கூட வந்திருந்தார்களே.” ஏரனுக்கு அது புரிந்ததாகத் தெரியவில்லை. டாம் பெட்டியைத் திறந்து ஒரு லெகோ செட்டை எடுத்தான். சாமி ஏரனுக்குத் தருவதற்கு என்று நினைத்திருந்த அதே மாதிரி செட். நல்ல வேளை அதை எடுத்து வரவில்லை.
லிண்டா சாமியிடம் ரகசியமாகச் சொன்னாள். “இதையெல்லாம் ஏரனுக்குச் செய்யத் தெரியாது என்று எவ்வளவோ முறை சொல்லியாகி விட்டது. டாமின் பெற்றோர்களுக்கு அது புரிவதில்லை. தங்களுடைய ஒரே பேரன் வித்தியாசமாக இருக்கிறான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.”
சூரனையும், லாராவின் தங்கையையும் தவிர மற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளைப் பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. மெதுவாக எழுந்து நகர ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அது நடந்தது.
திடீரென்று ஏரன் அழ ஆரம்பித்தான். அது ஏன் என்று தெரியவில்லை.
“எழுந்திருக்கும் போது இடித்துக் கொண்டுவிட்டாயா?” இல்லை.
தோட்டத்தில் பறந்த தேனீக்களும், வண்டுகளும் நினைவுக்கு வர சாமி “ஏரன்! ஏதாவது பூச்சி உன்னைக் கடித்ததா?” என்று கேட்டான். இல்லை.
“வாயைத் திறந்து காட்டு. நாக்கைக் கடித்துக் கொண்டுவிட்டாயா?” என்று லிண்டா கேட்டாள். ஏரன் வாயைத் திறக்காமல் தலையை அசைத்தான், ஆனால் அழுகையை நிறுத்தவில்லை. அவள் சாமியிடம், “ஏரனை வளர்ப்பதில் எவ்வளவோ கஷ்டங்கள். அவன் அழும்போது ஏன் அழுகிறான் என்று தெரிந்து அவன் அழுகையை நிறுத்த முடியாததுதான் எனக்கு பெரிய வருத்தம்” என்றாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சூரன் ஓடிச் சென்று லெகோ பெட்டியை எடுத்து வந்து ஏரன் முன் வைத்தான். அடுத்த சில நிமிடங்களுக்குப் பேச்சுக்குரல் எதுவும் கேட்கவில்லை. இலைகள் அசையவில்லை. பூச்சிகள் கூடப் பறந்ததாகத் தெரியவில்லை. அட்டைப் பெட்டி பிரிக்கப் பட்டது. துண்டுகள் கொட்டப் பட்டன. கூட வந்த புத்தகம் விரிந்தது. அதில் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு துண்டும் சூரனின் கையில் ஏறி, ஏரனின் கைக்கு மாறி, அதனுடைய இடத்தில் வந்து அமர்ந்தது. அதை அழுத்தவதற்குப் பல இளங் கைகள் உதவின. பச்சை நிறத் தரையில் வெள்ளையும், மஞ்சளும் கலந்த சுவர்கள் எழுந்தன. நீல ஜன்னல்களும், கதவும் பொருந்தின. சிவப்புக் கூரை அமர்ந்தது. மஞ்சள் நிற பஸ் வந்து நின்றது. கடைசியாகப் பைகள் சுமந்த ஒரு பையனும், பெண்ணும் பஸ்ஸை நோக்கி நடந்தார்கள்.
“ஹ_ர்ரே சூரன்! ஹ_ர்ரே ஏரன்! அது என்ன?”
ஒரு புன்னகை மிக மிக நிதானமாக ஏரனின் முகத்தில் வந்து அமர்ந்தது. “ஸ்கூல்”
“நீ சூரனுடன் பள்ளிக்குப் போகிறாயா?”
லாரா நெருங்கி வந்து ஏரன் தலையிலும் சூரன் தலையிலும் முட்டிக் கொண்டாள்.
சொல்லி வைத்தாற் போல் அடுத்த சில நிமிடங்களில் கார்களும், மினி வான்களும் வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றன. லிண்டா ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு பரிசுப்பையை மறக்காமல் கொடுத்து அனுப்பினாள். கடைசியில் சாமியும், சூரனும் விடை பெற்றுக் கொண்டார்கள். சூரன் ஏரனைக் கட்டிக் கொண்டு பை சொன்னான்.
“நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. பார்ட்டியின் வெற்றிக்கு சூரன்தான் காரணம். அதற்காக அவனுடைய பையில் ஒரு சிறப்புப் பரிசு போட்டிருக்கிறேன்” என்று லிண்டா ஒரு பையைச் சாமியிடம் கொடுத்தாள்.
“அது என்ன மிஸஸ் கே?”
“நீ வீட்டிற்குப் போய்தான் அதைப் பார்க்க வேண்டும்.”
சூரன் முன்னால் ஓடப்; பின்னால் சாமி அவனைத் தொடர வீட்டிற்குத் திரும்பினார்கள். சரவணப்ரியா கதவைத் திறந்தாள்.
“சூரன்! பார்ட்டி எப்படி இருந்தது?”
“பிரமாதமாக இருந்தது.”
சாமியிடம் “ஏரன் பற்றிய என் அனுமானம் சரியா?” என்று கேட்டாள்.
சூரன் கவனிக்காத போது பையில் அவனுக்கு லிண்டா கொடுத்த பரிசை சாமி பார்த்திருந்தான். மடிக்கப் பட்ட ஒரு டீ-ஷர்ட். பிரகாசமான நீலத்தில் தங்க நிற எழுத்துக்கள். டியூக் மெடிகல் ஸ்கூல். அதற்குக் கீழே க்ளாஸ் ஆஃப் 21.. கடைசி இரண்டு எண்கள் தெரியவில்லை.
“அவனையே கேள்!”
சரவணப்பிரியா சூரனின் உயரத்திற்கு மண்டியிட்டு “ஏரனுக்கும் உன்னுடைய மற்ற நண்பர்களுக்கும் வித்தியாசம் எதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“நோ டிஃபரன்ஸ்.”

(venkataraman.amarnath@vanderbilt.edu)

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்