பல்லு முளச்சு, அறிவு வந்துருச்சப்பு!

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

இரா. நாகேஸ்வரன்


நாலு கழுத வயசாயிப் போச்சு, இப்பதேன் அறிவு வருதுன்னு சொல்றாய்ங்க.. ம் என்னத்தச் சொல்ல.. மக்கா, மயிலக்காள கணக்காத் துள்ளித் திரிஞ்சு வேலபொழப்பப் பாத்துக்கிறுந்தேன்.. நல்ல சகுனத்துல, அந்த வலி வந்துச்சப்பு!

சரி, நம்மூரா இருந்தா, வேம்பு இல்லன்னா நாயுருவி வேரப்போட்டு பல்லைத் தேய்ப்போம்! அதுல ஈக்கி ஈறுல ஏறுறதுக்கு வாய்ப்பு இருக்கு.. இந்தூருல தெனம் ஒரு புருசுக்கு எங்கிட்டுப் போறது, இங்கன வந்த பொறவு பேஸ்ட்டும் புருசும் பழகிப் போச்சு.. ம்.. சரி கதைக்கி வாரேன்!
கொஞ்சமா வலிச்சுச்சு, பொறுத்துப் பாக்கலான்னு இருந்தேன்.. எதையாவது நோண்டுனோம்னா தெரியாதுன்னுட்டு, கம்ப்யூட்டருக்குள்ளாற புகுந்து வெளையாடிக்கிறுந்தேன். ..ம்ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம்ம்.. என்னமோ நடக்குது நம்ம வாயிலயும் காதுலயும் தெரிந்சு போச்சு! ஆத்தி.. வலி தாங்கல.

நம்மாளு ஒருத்தரு இருக்காப்ல, இங்க, மனுசங்கிட்ட, “எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் ; நில்லாதோட நீயெனக்கருள்வாய்”ன்னு பாடலாம். என்னா நோவுன்னாலும் மருந்து வச்சிருப்பாப்ல!
“ஏ ஆத்தி வலிக்குதப்பே”ன்னு போனைப் போட்டேன்.
சரவணபவனார் சடுதியில் வருவாரான்னுத் தெரியலை, நம்ம நண்பன் வந்துப்புட்டாப்ல! நம்மாளு ஸ்பெசாலிட்டி என்னன்னாக்கா, மருந்து உள்ளாற போயி என்னத்தப் பண்ணும்ன்னு விலாவாரியா கிளாஸ் எடுப்பாப்ல! அதுலயே, நம்ம ரத்தத்துல, வயித்துக்குள்ற நடக்குற அம்புட்டு சங்கதியும் மனக்கண்ணுலத் தெரிஞ்சுறும், அப்படி ஒரு பெரிய படிப்புப் படிச்ச ஆளு! நம்ம நேரமுன்னு ஒன்னு இருக்குல்ல,
வந்தவரு “சாரிப்பு, உனக்குரிய மருந்து மட்டும் ஸ்டாக் இல்லன்னுட்டாரு..” ஒரு மண்ணும் புரியல, என்ன பண்றது, இன்னக்கி சிவராத்திரி தான்னு, அம்புட்டையும் அணைச்சுட்டு, ஒறங்கலாம்ன்னு படுத்தேன். எந்தப் பக்கம் திரும்புனாலும், எப்படிப் படுத்தாலும் வலி!

இதென்னா, ஒரு மாதிரி வலிக்கிதே, இதுக்கு முன்னாடி இப்படி வரலையே நமக்குன்னு, அறிவு பொறந்துச்சு! (மக்கா, கரேட்டா தாம்ப்பு சொல்லிருக்காய்ங்க, அப்பதேன் எனக்கு அந்த அறிவே பொறந்துச்சு!!)
செரி என்ன எழவோ, படுத்து ஒறங்கிராலாம்ன்னு இருந்தா.. எங்க சீயான் நெனப்புல வந்துச்சு, நம்மளுக்கு எதுனாச்சும் ஒண்ணுன்னா இப்டி வருவாப்ல.. அந்தப் பெரிச நாம்பார்த்தது இல்ல, எல்லாம் நம்ம ஆத்த சொன்ன கதை வச்சு தாின் அவருப் பழக்கம் நமக்கு!! ஆளு, காாலம்பற (காலையிால்) எந்திரிச்சு, குண்டாஞ்சட்டி நீச்சத்தண்ணியக் குடிச்சுாிாப்புட்டுக் கம்பு சுத்த ஆரம்பிிாாப்பாப்லயாம்!
ரொம்ப வீரமான ஆளும்பாய்ங்க.. ஊர்காவல்கார கோஷ்டி அது!

மொறத்தாலயும் தண்டட்டினாலயும், நம்ம அம்மாச்சி, அப்பத்தாமாரெல்லாம் புலியப் பொளந்துறுக்குக, நம்மால சின்ன வலியத்தாங்க முடியலன்னுட்டு, ஆத்தமாட்டாமப் படுத்துக் கெடந்தேன். நம்ம மாமா ஒருாத்தரு இருக்காிப்ல, அவரும் ஊர்காவக்கார ஆளு! ஒருக்கா, அவரு வெளியூருப் போகையில, காட்டுக்குள்ளக் களவாணிப் பயபுள்ளைக, அருவாக்கம்போட சுத்திப்புுட்டாய்ங்களாம்! மாமா தோளுல கெடந்த வெறுந்துண்ட மட்டும் வச்சுக்கிட்டு,
அம்புட்டுபய சொட்டையயும் முறிச்சுப்புட்டு, வீட்டுக்கு வந்து, தோளுல கெடந்தத் துண்ட ஒதறுனா…. பூாாப் பூவாக் கொட்டுாதாம், துண்டோட நூலெல்லாம்!! எங்கப் பெரியாத்தா அடிக்கடி சொல்லும்! கொஞ்சம் ஆத்தா கற்பனயாயிருக்குமோன்னுத் தோணும், ஆனா, இந்த ஆளுகள நேர்ல பார்த்தவக, நெறய சொல்லும்பபோது, நெசந்தாம்போலன்னுத் தோணும். அம்புட்டுபயபுள்ளகளும் ரவைக்கு வந்து “..க்காலி, இதென்னடா, இதுக்குப்போயி சொணங்கிக் கிடக்கிற, போடா வெட்டிப்பயலே”ன்னு வஞ்சுப்புட்டுப் போனாய்ங்க… எப்படியோ, பொரண்டுபொரண்டு, படுத்துத் தூங்கிட்டேன்..

காலம்பற, (நமக்கு மதியம் 12 மணி இல்லாட்டி, 1 மணிதான் விடியக்கால..) எந்திரிச்சுப் பாத்தா, கன்னாம்பட்ட, ஒரு பக்கட்டு இழுத்துக்கிட்டாப்ல ஆயிருச்சு, கல்ல அதக்குனமா(தி)ரி… வலிக் கொஞ்சம் கொஞ்சமா எகிறுச்சு பாருங்க.. அம்புட்டு, கணக்கு அறிவியல் பாடமெல்லாம் மண்டைக்குள்ளப் புரியுது, ஆனா, இந்த வலி மாத்திரம் என்னன்ட்டேத் தெரியமாட்டேங்கிது. ஒறங்கவும் முடியல,, வாயத்தொறக்கவும் முடியல.. திங்க முடியல, அடேயப்பா, தாழம்பூ கருப்பு என்னப்பா ஆச்சு எனக்குன்னுட்டு, மண்ட கிறங்கிபோயித் திரிஞ்சேன்! ஆத்தாடி, அப்பதான் மண்டக்குள்ற மணியடிச்சுச்சு.. எல்லா ஆஸ்பத்திரிக்கும் லீவு.. வெரசா அதிகமாவுது வலி, இந்த மேட்டர் ஒறக்கவும்.. சரி, நம்ம மருந்து நண்பனத் தேடியோடிப் பிடிச்சு, வலி கொறய (வலி தெரியாம.. இந்த நேரத்துல, sementics வேற.. சே..) ரெண்டுமூணு மாத்தர வாங்கி,.. நண்பன் வழக்கம்போல, வெளக்கங் கொடுத்தாப்ல, அப்பறமா, கொஞ்ச நேரத்துலவலி போயிருச்சு.. எப்படியோ அன்னிக்கி நாளு சென்டுறுச்சு..

மக்காநாள், எந்திரிச்சதும், ஆசுபத்திரிக்கு ஓடுனேன்.. ஆத்தி, அந்த ரிசப்சனிஸ்ட்டுக்கிட்ட, ஒடஞ்ச செர்மன்பேசி, கொஞ்சூண்டு இங்கிலீசு பேசி.. ம்ஹூம்.. அந்தம்மாவுக்கு ஒன்னும்புரியல.. வாயக்காமிச்சு, ‘ஆத்தா, வாய் kaputt’ன்னேன், தமிழு, செர்மன், என் மொகறயோட கோணல் ன்னு பல பல மொழிகளைப் புரிஞ்சுட்டு, சிரிச்சுட்டேப் பதிஞ்சுட்டு, உள்ள போயி ஒக்காருன்னுச்சு.. வலி…. “ஆசுபத்திரி தொறக்கப் பொறுத்த பயலுக்கு, டாக்டர் பாக்க பொறுக்கல”.. நான் ஒலத்தி ஒலாத்தியே ஆசுபத்திரி ஆட்டங் கண்டுபோச்சு.. இங்குள்ள் ஆசுபத்திரிக்கு, ஆசுபத்திரி வாசமே கெடயாது, அதனால போயிட்டு வந்தா கூட ஒரு எபெக்ட் இருக்காது.. ஒரு எடத்துல, நட்டுபோல்ட்டு எல்லா வச்சு, ஒரு டாக்டர், ஒரு ஆளுக்கு வைத்தியம் பாக்குற மாதிரிக்கு வச்சுருந்தாய்ங்க.. நம்ம சமாச்சாரமா இருக்கேன்னு பாத்துக்கிறுந்தேன்.. அம்மாடி, “ராயேந்திரன்”ன்னு எலக்கண சுத்தமா கூப்டாய்ங்கிலப்பு நம்மள.. படுக்கயும் இல்லாம, சேரு மாதிரியும் இல்லாத ஒண்ணுல நர்சக்கா, ஏத்திவிட்டுட்டு “klein Moment” ன்னுக் கெளம்பிருச்சு… ‘ங்கொக்காமக்கா, வலி தெரியாம வெளயாடுறீங்களே’ன்னு அப்படியே சுத்திமுத்திப்பார்த்தேன்.. உள்ள, ட்ரில், அறம் அது இதுன்னு நம்மூருஆசாரி ரேஞ்சுக்கு வச்சிருந்ததப் பாத்ததுமே, என் பல்லுவலி அப்படியே கொறஞ்சமாதிரி ஒரு நெனப்பு.. எந்திரிச்சு ஓடிருவோமான்னு, கெளம்புற நேரத்துல வந்தாப்புல, நம்ம டாக்டரு.. என்னமோத் தெரியல, வாழ்க்கயிலப் பண்ணத் தப்பெல்லாம், சம்பந்தா சம்பந்தமில்லாம திடீர்ன்னு ஞாபத்துக்கு வருது, அவரப் பாத்ததும்..

பல் டாக்டருங்கிறது, அவர் சிரிப்பே சொல்லுச்சு.. கைய அவருக் குலுக்கின அதிர்ச்சியில நான் இருக்கும்போதே, ‘தடால் புடால்’ ன்னு செர்மன்ல அடிச்சு நொறுக்குனாப்ல.. “ஏ ஐயா, இங்கிலீசுல சொல்லப்பு” ன்னேன்.. “ஓ ஓகே” ன்னு சொன்னாப்ல, ஆனா அம்புட்டு நேரம் அடிச்சு நொறுக்குனத சொல்லல.. சரி போறாப்புல ன்னுட்டு, ஒரு பக்கட்டு, வாயக் கிழிக்கிறாப்ல, கைய விட்டு இழுத்து, கொரண்டி மாதிரி ஒண்ண விட்டு இழுத்துப் பாத்துட்டு, ஹஹஹான்னு ஒரே சிரிப்பு.. வள்ளுவர் சொன்னதத் தப்பாப் புரிஞ்சுட்டாப்லயோ?!! “ஏயப்பு, ஒனக்கு வலிச்சாதாம்ப்பு இப்டி சிரிக்கணும்” ன்னுக் கத்தலாம் போல இருந்துச்சு.. “I see an inflammation, because, tooth for intelligence is growing”ன்னு சொன்னதும், வள்ளுவப்பெருந்தகை சொன்னாப்ல விழுந்துவிழுந்து நாஞ்சிரிச்சேன்.. இப்பல்லாம், நம்மூருல கள்யெடுக்குறப் புள்ளகக் கூட அசால்ட்டா, இங்கிலீசு பேசுதுக.. சரி, வளர்ப்பு சரியில்ல!
என்னவோ மருந்துபோட்டு, ஊசியக் காமிச்சு, “It’s not an injection and the medicine tastes good”ன்னு சொல்லி, வீக்கம்பக்கத்துலப் பரவவிட்ருப்பார்ன்னு நெனக்கிறேன். அது அப்படியே எச்சில கலந்து, நாக்குக்கு வந்தப்ப, எம்மொகம், இஞ்சி தின்ன கொரங்க ஞாபகப்படுத்திருக்குன்ன்னு நான் நெனக்கிறேன். அப்படியொரு சிரிப்பு.. போய்ட்டு நாலுநா செண்டு வா ன்னு அனுப்புச்சாப்ல..

சோத்த அரகுறயா மென்னுமுழுங்கிப் படாதபாடு பட்டுப் போனேன்.. அவரு என்ன மருந்து போட்டாப்லயோ தெரியல, வலி கொறஞ்சபாட்டக் காணோம்.. சரி.. இனி வலிச்சா வலிக்கட்டுன்னு விட்டுட்டேன்.. எப்படியோ, தூங்கிட்டேன்.. ஏதோ ஊருக்கு நாங் காவகாக்குற மாதிரி ஒருக் கனா.. அட, நாந்தானா அது.. அம்புட்டுக் களவாணிப் பயல்களையும் கொல்றேன்.. ஆனா செத்தவ்ன், ஒவ்வொருத்தனும் எந்திரிச்சு வ்ந்து, கரேட்டா, வலிக்கிற இடத்துலயே, வேல்கம்பாலக் குத்துறாய்ங்க.. ஐயோ.. காலம்பற எந்த அலப்பறயும் பண்ணாம, எந்திரிச்சு உக்காந்தா, அம்புட்டு ஆத்தாளுகளும் நெனப்புக்கு வாராக.. ஒரு பல்லு முட்டி மோதி வெளிய வாரதுக்கு, இம்புட்டு அலப்பறப் பண்ணிட்டமேன்னு!!

–இரா. நாகேஸ்வரன்
eswar.quanta@gmail.com

Series Navigation

இரா. நாகேஸ்வரன்

இரா. நாகேஸ்வரன்