வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 10

This entry is part of 41 in the series 20061109_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 10

அப்பாவால் முடிந்ததெல்லாம் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருப்பது, அன்றைக்கும் அந்த நிலையில்தானிருந்தார். எல்ஸா எங்கள் வில்லாவுக்கு வந்துபோனதையும் தனது உடைமைகளை கொண்டுசென்றதையும், பணிப்பெண் அப்பாவிடம் கூறினாள். சொன்னவள், எனக்கும் எல்சாவுக்கும் இடையில் நடந்த உரையாடல் பற்றி மூச்சுவிடாதது ஏனென்று புரியவில்லை. பணிப்பெண், உள்ளூர் பெண்மணி, கற்பனை வளமும் இருக்கவேண்டும், எங்களிடையே நடந்த சம்பவங்களைக் கூட்டிக் கழித்து சுவரஸ்யமான முடிவொன்றுக்கு அவள் வந்திருக்கக்கூடும். அதிலும், ஒரு பணிப்பெண்ணுக்கு, கொஞ்ச நாட்களாக எங்கள் அறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தெரியாதா என்ன?

ஆன்னும்(Anne) அப்பாவும் தங்கள் மனதில் ஏற்பட்டிருந்த வருத்தங்களை மறைத்துக்கொண்டு, எனது நலனில் அவர்கள் காட்டிய அக்கறைகள் ஆரம்பத்தில் எனக்குத் தலைவலியாக இருந்தன, பின்னர் வெகு சீக்கிரத்தில் அவற்றின் தேவையை உணரத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் ‘சிரிலை'(Cyril)யும், எல்ஸாவை(Elsa)யும் மிக நெருக்கமான ஜோடியாக எங்கேயாகிலும் சந்திக்க நேரிட்டால், இத்தனைக்கும் அதற்கு நானே காரணமென்றாலுங்கூட, வெறுக்கத் தொடங்கினேன். படகுசவாரியையெல்லாம் மறந்தாயிற்று, கடந்த சில நாட்களாக படகில் என் இடத்தில் எல்ஸா, அவளது தலைமுடியும், என்னுடையதைபோலவே காற்றில்அலைந்ததையும் பார்த்தேன். அவர்களிருவரையும் ஊசியிலைத் தோப்பு, கிராமம், சாலைகளென எங்கே சந்திக்கநேர்ந்தாலும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், ஒதுங்கிக் கொள்ளவும் எனக்குச் சுலபமாய் முடிந்தது. அந்த நேரங்களில், ஆன்(Anne) என்னைத் தேற்றுவதுபோல சாடையாகப் பார்ப்பாள், எனது தோளில் கைபோட்டு ஆறுதலாக அணைத்துகொள்வாள். அவளிடம் கண்ட இந்த மாறுதல்கள் உண்மையா?’ என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. சமீப நாட்களில் அவளிடத்தில் நான் கண்ட அன்பினை, தேர்ந்த மதிநுட்பம் என்பதா அல்லது ‘அசிரத்தையென்று’ சொல்லி முடித்துக்கொள்வதா என்கிற குழப்பம் வேறு. நிலமைக்குத் தகுந்தவாறு, பேசவும், செயல்படவும் ஆன்(Anee) வல்லவள் என்பதும் தெரிந்ததுதான். தவிர உண்மையிலேயே ‘சிரிலு’க்காக நான் வருந்துவதாகயிருந்தால், ‘ஆன்’ இந்த அளவிற்கு என்மீது அக்கறை காட்டுவாளா என்கிற சந்தேகமும் நிறைய இருந்தது.

அம்மாதிரியான சூழ்நிலையில், நடப்பது நடக்கட்டுமென நானுமிருந்தேன். எதிர்பார்த்ததுபோல சிரில்-எல்ஸா ஜோடியைக் கண்டு அப்பாவுக்கு பொறாமையேதுமில்லை என்பதை அவரிடத்தில் பேசித்தெரிந்துகொண்டேன். சொல்லப்போனால் என் தகப்பனாருக்கு ‘ஆன்’மீதுள்ள பிரியத்தை நடந்தசம்பவங்கள் உறுதிபடுத்தியதோடு, என்னுடைய திட்டங்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பதையும் புரியவைத்தன. ஒருநாள் எனது தகப்பனாருடன் அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. ‘எல்ஸா’வும் எதிர்பாராதவிதமாக அங்கு வந்திருந்தாள். எங்களைப் பார்த்தும் பார்க்காதவள்போல இருந்தாள். எனது தகப்பனாரோ, அறிமுகமில்லாத பெண்ணொருத்தியைப் பார்த்து வியப்பதைப்போல, அவள் பக்கம் திரும்பியவர், மெல்ல சீழ்க்கையடித்தபடி:

” – என்னமா மாறிட்டா இந்த எல்ஸா!- என வியந்தார்.

– அவளை மாத்தினதுக்கு காதலைத்தவிர வேறு காரணங்களேது? – நான்

அவரது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

– ஆக உனக்கு, அந்தப் பையன் கிடைக்கலைங்கிற வருத்தமெல்லாம் இல்லைண்ணு சொல்லு…

– இதிலே, நான் வருத்தப்பட என்ன இருக்கு? ரெண்டுபேருக்கும் கிட்டத்தட்ட ஒரேவயது, அதனாலே பிரச்சினைகள் குறைவு, ஒத்துப்போகும்.

– ஆன்னை(Anne) அவன் காதலிக்கவில்லை, பிரச்சினைகளும் இல்லை, அப்படித்தானே?” –

என் தகப்பனார் முகம் சிவந்திருந்தது.

” – நான் ஒருத்தியை வேண்டாமென்றுசொன்னால், அவளை அந்த ராஸ்கல், தன்னுடையவளாக மாற்றிக்கொள்ள நியாயமுண்டு என்பதுதான் உன்னோட எண்ணம்…

– இல்லை. காதல் விஷயத்தில் வயதுக்கும் பங்கிருக்கிறதென்று சொல்லவந்தேன்…

அப்பா தோளைக்குலுக்கியவர், அமைதியானர். வழியில் எதையோ சிந்தித்தபடி வந்தார்: எல்ஸா(Elsa)வுக்கும் சிரிலுக்கும்(Cyril) வயதிலுள்ள ஒற்றுமையும், அடுத்து, வயதுகேற்றப் பெண்ணை மணக்கவிருப்பதன் மூலம், தன்வயது ஆண்வர்க்கத்தோடு ஒத்துபோகக்கூடும் என்பது மாதிரியான எண்ணங்களும் அநேகமாக மனதிலிருக்கலாம். இந்த விஷயத்தில் தனிப்பட்ட வகையில் நானும் ஜெயித்திருக்கிறேன். ஆன்(Anne) விழியோரங்களில் தெரிந்த வரிகளையும், அதரங்களையொட்டித் தெரிந்த சுருக்கங்களையும் பார்க்க, மனதுக்கு வேதனையாகவும் இருந்தது. என்னசெய்வது, மனம்போன போக்கில் போவதும் பின்னர் அதற்காக வருந்துவதும், எனக்குப் பழகிவிட்டது.

ஒருவாரம் கழிந்திருந்தது. ‘சிரிலும்(Cyril), எல்சாவும்(Elsa)வும் தங்கள் பிரச்சினைகளின் போக்கைப்பற்றி எதுவும் அறியாமல் ஒவ்வொரு நாளும் எனக்காக காத்திருந்தார்கள். அவர்களிடத்திற் சென்றால் யோசனைகள் அல்லது திட்டங்கள் என்ற பேரில் எனது வாயைக்கிளறினால், என்னாலும் சும்மாஇருக்கமுடியாது, எதையாவது உளறிவிடக்கூடுமென்கிற பயத்தில் நானும் போகாமலிருந்தேன். தவிர மதியவேளைகளில் தேர்வுக்குப் படிக்கிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டு எனது அறைக்குச்சென்று கதவை அடைத்துக்கொள்வதுண்டு. உண்மையில் சும்மாதானிருந்தேன். யோகா சம்பந்தப்பட்டப் புத்தகமொன்று கிடைக்க, மிகுந்த அக்கறையோடு அதில் எழுதியிருந்தபடி செய்து பார்த்தேன். அதன்படி சில நேரங்களில் தன்னந்தனியே சிரிக்கவேண்டியிருக்கும், சிரிப்பேன் ஆனால் ஆன்னுக்குக் கேட்குமோவென்று சத்தம்போடாமல் முடிந்தமட்டும் அமைதியாகத்தான் சிரிப்பது வழக்கம். அவளிடத்தில் கடுமையாக உழைக்கிறேன் என்று கூறினேன். காதலில் நான் அடைந்துள்ள தோல்வியை, பெற இருக்கிற பட்டம் சரிகட்டிவிடும் என்கிற நம்பிக்கையில் உழைப்பதுபோல அவளிடம் நடந்துகொண்டேன். ‘ஆன்’னுக்கும் என்மீது ஒருவித நல்ல அபிப்ராயம் வந்திருப்பதுபோல தெரிந்தது. உணவின்போது ‘காண்ட்(Kant)’டைப்பற்றியெல்லாங்கூட பேசப்போக, இத்தனைதூரம் நான் போவென்று அப்பா எதிர்பார்க்கவில்லைபோலிருக்கிறது, அவரது முகத்தில் ஏமாற்றம்.

ஒரு நாள் மதியத்துக்குப்பிறகு, இந்துமத சாது போல ஒரு பெரிய துண்டை உடலிற் சுற்றிக்கொண்டேன். வலதுகாலைத் தூக்கி இடது தொடைமீது போட்டுக்கொண்டு கண்ணாடியை வெறித்து பார்த்தபடி அமர்ந்தேன். எனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக இதை நான் செய்யவில்லை, ஆனாலும் ஒரு பெரிய இந்துமதச் யோகி என்கிற கற்பனையில் மூழ்கியிருந்து உண்மை. அந்த நேரத்தில், அறைக் கதவை யாரோ தட்டினார்கள். பணிப்பெண்தான் கதவைத் தட்டுகிறாள் என்று முதலில் நினைத்தேன், ஏனெனில் கொஞ்சநாட்களாக எதற்கும் கவலைப்படாதவளாக அவளிருந்தாள். உள்ளே வரலாமென்று சத்தபோட்டேன்.

வந்திருந்தது ஆன். நானிருந்த கோலத்தை பார்த்துவிட்டு ஒருவிநாடி அசந்துபோய்நின்றாள், கதவருகே நின்றபடி என்னைபார்த்துவிட்டு சிரிக்கிறாள்.

” இதென்ன விளையாட்டு?

– இதுக்குப்பேருதான் யோகா. இது விளையாட்டு அல்ல. இந்துக்கள் தத்துவமுறைகளில் ஒன்று”

மேசையை நெருங்கியவள், என்னுடைய புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள். எனக்கு பயம். திறந்திருந்தது நூறாவதுபக்கம், மற்ற பக்கங்களில் ‘அசாத்தியமானது’, ‘கடினம்’, என்றெல்லாம் நிறைய கிறுக்கியிருந்தேன்.

” – மிகுந்த அக்கறையோட படிக்கிறாய் என்றுதான் நினக்கிறேன். ஆனால் பஸ்காலை(Pascal)(1)ப் பத்தின கட்டுரை குறித்து நிறைய பேசிக்கொண்டிருந்தாயே, என்ன நடந்தது?”

உண்மை. உணவின்போது, எனது சிந்தனை முழுதும் பஸ்காலுடைய வாக்கியமொன்றில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக நிறைய படித்துக் கட்டுரையொன்று எழுதவிருப்பதாகவும் கதைவிட்டிருந்தேன். உண்மையில் இதுவரை ஒரே ஒரு சொல்லைக்கூட அதற்கென்று எழுத ஆரம்பிக்கவில்லை. ஆன்னுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் விழித்துகொண்டு நிற்க, அவளுக்குப் புரிந்துவிட்டது.

” – நீ ஒழுங்காக படி அல்லது படிக்காம, கண்ணாடிமுன்னால நின்றுகொண்டு எதையாவது பண்ணு, அது உன்னுடைய சொந்த விவகாரம். ஆனால் என்னை, உன் தகப்பனாரை, மற்றவர்களை, ஏமாற்றவென்று நிறைய பொய்களைச்சொல்லி, சந்தோஷப்படறபாரு, அதை நினைச்சாதான், எரிச்சல் வருது. தவிர இப்பவெல்லாம் ஏதோ ரொம்ப புத்திசாலி மாதிரி நீ நடந்துகொள்வதைப் பார்க்க நம்ப முடியலை…”

அவள் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் துவாலையுடன் பிரமை பிடித்தவள் போல நிற்கிறேன். என்னை பொய்காரியென்று எதற்காகசொல்லவேண்டும். நான் கட்டுரை அது இதுவென்று பேசியதெல்லாம் ஒருவகையில் அவளை சந்தோஷப்படுத்தவென்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம், மாறாக சட்டென்று என்னை நிந்தித்திருந்தாள். என் விடயத்தில் அவள் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் ஓரளவுக்கு எனக்குப் பழகிவிட்டிருந்தன. தவிர அவளது வரம்பு மீறிய அமைதியும், என்னை சதா நிந்திக்கிற அவளது மனோபாவமும், கோபமூட்டியது. நான் போட்டிருந்த வேடத்தைக் கலைத்துக்கொண்டு, ஒரு நீண்ட கால் சராயையும், கிடைத்த பழைய சட்டையையும் அணிந்தவள் வெளியே ஓடினேன். வெளியே வெயில் கடுமையாக இருந்தது, எனினும் பொருட்படுத்தாமல் ஓடினேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்ன நினைப்பார்களென்று கூட யோசிக்காமல், பித்து பிடித்தள்போல சிரிலுடைய(Cyril) ‘வில்லா’வரை ஓடியவள், வாயிற்படியில் நின்று மூச்சுவாங்கிக்கொண்டேன். பின்னேரத்து வெப்பத்தில் குடியிருப்புகளில் ஒர் இனம்புரியாத நிசப்தம், மர்மம், ஏதோ அடுக்கடுக்கான ரகசியங்களை உள்ளடக்கியதுபோல. ஒரு முறை அவனது அம்மாவைப்பார்க்கவென்று வந்தபோது, சிரில்(Cyril) தனது அறையைக் காட்டியிருந்ததை ஞாபகப் படுத்திக்கொண்டு, அங்கே சென்றேன். கதவைத் திறந்தேன், கட்டிலில் குறுக்காக சிரில் தூங்கிக் கொண்டிருந்தான், முழங்கையில் தலையிருந்தது. ஒரிரு நிமிடங்கள் அவனைப் பார்த்திருப்பேன். முதன் முதலாக எனது மனதை நெகிழவைத்தான், தேவைகளை நிறைவேற்றக்கூடியவனென்று மனம் நம்பியது. மெல்ல அழைத்தேன். கண்திறந்துபார்த்தவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

” – நீயா? எப்படி இங்கே?…”

சத்தம்போடாதே என்பதுபோல கையை அசைத்து சைகை செய்தேன். அவள் அம்மா இங்கே வர நேர்ந்தால், தன்னுடைய மகன் அறையில் என்னை பார்க்க நேர்ந்தால் அசம்பாவிதமாக எதையாகிலும் கற்பனை செய்யக்கூடும் என்கிற பயம்… தவிர எதைச் சொன்னாலும் இந்த நிலையில் அவள் நம்பவும் போவதில்லை, புறப்பட எத்தனித்து கதவருகே சென்றேன்.

” ஏய்…செஸில்(Cecil) எங்கப் போற? பக்கத்தில் வா.”, சிரில்(Cyril) சத்தம்போடுகிறான்.

சிரித்தபடி எட்டி எனது கையைப் பிடித்தவன், விடாமலிருந்தான். திரும்பி அவனைப் பார்த்தேன். அவனது முகம் சற்றே வெளுத்திருந்தது என்னுடைய நிலைமையும் அதுதான். பிடித்திருந்த கையைத் தளர்த்தினான். நோக்கம் என்னை முழுவதுமாக அவனது கைகளில்வாங்கிக் கொள்வதாய் இருந்திருக்கவேண்டும். அதுதான் நடந்தது. என்னை அவன்பக்கமாய் இழுத்துக்கொண்டான். எனது மனம் ஒரு நிலையிலில்லை. ‘ஏதோ நடக்கப் போகிறது, ஏதோ நடக்கப்போகிறதென’, மனம் எச்சரிக்கிறது.. பிறகென்ன? காதல் விளையாட்டுகள்.. இருந்த அச்சங்கள் இச்சைகளாக உருவெடுத்தன..ஒரு வித வாத்சல்யம், வெறி, கடுமையான வேதனைகள்..இறுதியில் எதையோ வென்றுவிட்ட எக்காளம், பரவசம். அன்றையதினம், நான் அதிர்ஷ்ட்டக்காரி என்பதும், ‘சிரில்’லிடத்திலும் நான் எதிர்பார்த்த சுகம் உண்டென்பதும், நீருபணமாகியிருந்தன.

அவனருகே பிரக்ஞையற்றவளாய், பிரம்மித்து, ஒருமணி நேரம் அளவிற்கு இருந்திருப்பேன். காதலையும் ஒருவித விளையாட்டென்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவரை நானும் எனது வயது காரணமாக சிறுபிள்ளைத்தனமாக அப்படித்தான் பேசிவந்திருக்கிறேன், இனி ஒருபோதும் எடுத்தேன் கவிழ்த்தேனென்று என்பாட்டுக்கு எதையாவது சொல்லிவிடக்கூடாது. ‘சிரில்’ என் மீது சாய்ந்திருந்தான். என்னை மணம் செய்துக்கொள்ளபோவதாகவும், வாழ்க்கை முழுதும் பிரியாமலிருக்கப் போவதாகவும் கூறினான். எனது அமைதி அவனுக்குக் கோபத்தைத் தந்தது: நிமிர்ந்து உட்கார்ந்தேன், நேராக அவனைப்பார்த்து, “எனது அன்புக் காதலா”, என்று அழைத்தேன். அவன் எனக்காய் சாய்ந்தான், மெல்லக் குனிந்து துடிக்கும் நெஞ்சில் எனது இதழிரண்டையும் அழுந்தப் பதித்தேன், “சிரில்.. என் அன்பே.. முனகினேன். உண்மையிலேயே அந்த நேரம் அவனை நேசித்தேனா என்று கேட்டால், என்னிடத்தில் அதற்குப் பதிலில்லை. காரணம் இந்தக் காதல் விவகாரங்களில் எனக்குத் திடமான சிந்தை ஒருபோதும் கிடையாது. தவிர என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் வேறுமாதிரியான அபிப்ராயங்கள்தான் உதிக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில் அவன் மீது எனக்கெழுந்த காதலைப்பார்க்க எனக்கே சற்று அதிகமாகப்பட்டது, அவனுக்காக எனது உயிரைக் கொடுக்கவும் சம்மதித்திருப்பேன். நான் புறப்பட்டபோது, அவனை நினைத்து நான் வருந்தினேனா, என்று அவன் கேட்கவும், எனக்குச் சிரிப்பு.

ஊசியிலைத் தோப்பு வழியாக மீண்டும் எனது ஜாகைக்குத் திரும்பியபொழுது, மிகவும் களைத்து, மயக்க நிலையிலிருந்தேன். முன்னதாக ‘துணைக்கு வரட்டுமா?’ என சிரில் கேட்டபோது, வேண்டாமென்று மறுத்திருந்தேன். வேறு வினையே வேண்டாம். முகத்திலோ சற்றுமுன் அனுபவித்த பரவசத்தின் சுவடுகள், கனத்திருக்கும் உதடுகள், கண்ணிற் தெரிகிற சோர்வு, இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சரீரம், ஆக எவரேனும் பார்க்க நேர்ந்தால் ஆபத்து இன்னமும் முற்றாக நீங்கவில்லையென்றுதான் சொல்லவேண்டும். வீட்டுக்கு முன்பாக, பெரிய நாற்காலியொன்றில் அமர்ந்தபடி ‘ஆன்’ புத்தகமொன்றை வாசித்தபடியிருந்தாள். ‘எங்கே போயிருந்தாய்?’ எனக் கேட்டால், பதில் சொல்வதெற்கென்று அழகாய் இரண்டு பொய்களை யோசித்து வைத்திருந்தேன், நல்லவேளை அவளிடத்தில் கேள்விகளேதுமில்லை. எப்போது கேட்டாள் இப்போது கேட்பதற்கு. எனக்கும் அவளுக்கும் சிலமணி நேரங்களுக்கு முன்னதாக வீட்டில் நடந்த பிரச்சினைகள் நினைவுக்கு வர, அமைதியாய்ச் சென்று அவளருகே உட்கார்ந்தேன். எனது சுவாசம், எனது விரல்களின் அசைவுகளென கவனத்தைச்செலுத்தியபடி விழிகளை இறுக மூடியவண்ணம் அமைதியாக இருந்தேன். இடைக்கிடை சிரிலுடைய சரீரமும், அதனையொட்டிய மறக்க முடியாத தருணங்களும் எண்ணத்தில் குறுக்கிட்டன.

மேசைமீதிருந்த சிகரெட்டொன்றை எடுத்து, தீக்குச்சியை உரசுகிறேன், சட்டென்று அணைந்து போகிறது. அடுத்து இன்னொரு தீக்குச்சியை எடுத்து, கவனத்துடன் உரசுகிறேன். நல்லவேளை காற்று இல்லை, மாறாக கை நடுங்குகிறது. எரிந்துகொண்டிருந்த தீக்குச்சி சிகரெட்டை நெருங்கியதும், காத்திருந்ததுபோல பழையபடி அணைந்துவிட்டது. முனகிக்கொண்டே மூன்றாவதாக ஒரு தீக்குச்சியை எடுக்கிறேன். ஏனென்று தெரியவில்லை, தீக்குச்சியும் – அதனைப் பத்தவைப்பதும், அப்போதைக்கு மிகமிக முக்கியமான காரியமாக தோன்றியது. ஒருவேளை பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆன், தனது அசிரத்தை மனப்பான்மையைக் கைவிட்டுவிட்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு என்னைக் கண்காணித்தது காரணமாக இருக்கலாம். அதனால்தானோ என்னவோ, சட்டென்று காலத்தையும், இதர காட்சிகளையும் துரத்திவிட்டு, ‘தீக்குச்சியும், அதிற்படிந்திருந்த எனது விரல்களும், சாம்பல்நிற தீப்பெட்டியும், ஆன்னுடைய கண்களும்’ ஆக்ரமித்துக்கொள்கின்றன. எனது இதயத்தின்வேகம் இருமடங்காகியிருந்தது, தாவிக்குதிக்கிறது. விரலிடுக்கில் சிக்கியத் தீக்குச்சி, தீப்பெட்டியில் உரச, சட்டென்று ஜுவாலை, தாமதமின்றி, வாயிலுள்ள சிகரெட்டை அதனிடத்திற் கொண்டுபோகிறேன், சிகரெட் தீக்குச்சியின் ஜுவாலையை நெருங்கியதும் மீண்டும் அணைந்து போனது. தீப்பெட்டியைத் தரையிலெறிந்துவிட்டு, விழிகளை இறுக மூடிக்கொண்டேன். எதற்காக இந்த நாடகமெல்லாம் என்பதுபோல, தீட்சண்யத்துடனான ஆன்னுடைய பார்வை என்மீது படிந்திருப்பதையும் உணரமுடிந்தது. ஒருவிதமான காத்திருப்பு, புரியாத நிலை, யாரேனும் இதை முடிவுக்குக் கொண்டுவரக்கூடாதா? மனம் தவிக்கிறது. எனது முகம் இப்போது ஆன்னுடைய கைகளில், மெல்ல முகத்தை உயர்த்துகிறாள், எனது பார்வையை அவள் சந்தித்துவிடக்கூடாதே என்கிற பயத்தில், ஒருவித எச்சரிக்கையுடன் கண்களை மூடியபடி நான் இருக்கிறேன். சோர்வும், துர்க்குணமும், சந்தோஷமும், என்னிடமிருந்து விடுதலை பெற தீர்மானித்தவைபோல, மெல்ல மெல்ல கண்ணீர்த் துளிகளாய் அரும்புகின்றன. வழக்கமான உதாசீனத்துடன் ஒருவகை அலட்சியமனோபாவத்துடனும், இன்னொருவகையில் சமாதானபடுத்துவதுபோலவும், தனது கைகளை மெல்ல தாழ்த்தி, எனது முகத்திலிருந்து பின்னர் விடுவித்துக்கொள்கிறாள். அடுத்து சிகரெட் ஒன்றினை பத்தவைத்து என் வாயிற் செருகியவள், வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தினை மீண்டும் தொடர்ந்தாள்.

அவளது இந்த செயல்பாட்டுக்கு சரியானப் பொருளை உணர்த்தவேண்டுமென்று தீர்மானித்த நான், அப்படியே செய்யவும் செய்தேன். ஆனால் இன்றைக்கும் எப்போதாவது தீக்குச்சி விஷயத்தில் தவறுகிறபோது, மறக்கமுடியாத அந்தத் தருணம் நெஞ்சை உறுத்துகிறது, எனக்கும், எனது செய்கைக்கும் இடையிருந்த பிளவுகள், ஆன்னுடைய கடுமையான பார்வை அதைச் சுற்றியிருந்த சூன்யம், அச் சூன்யத்துக்குரிய உக்கிரம், ரௌத்திரம்…
, ————————————————————–
1. Blaise Pascal (1623 – 1662), பிரெஞ்சு கணக்கியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி

Series Navigation