• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு

This entry is part of 35 in the series 20061102_Issue

சி. ஜெயபாரதன், கனடா


“காதல் நோக்குவது கண்கள் மூலமன்று!
உள்ளத்தின் மூலமே!”

“காதலின் மெய்யான போக்கு கரடு முரடானது.”

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஒரு வேனிற்காலக் கனவு]

பண்ணிசை உள்ளத்தைப் பெறாத மனிதன்,
இன்னிசைக் குரலுக்கு உருகாத மனிதன்,
பாழானவன்! துரோகம் செய்பவன்!
பகைவனாய் ஏமாற்றும் பாதகன்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]

வெளிச்சத்தைப் பொழிகிறது வெண்ணிலவு!
இம்மாதிரி இரவு வேளையில் தான்
மரங்களை அணைத்து
முத்த மிடுகிறது மிருதுவாய்,
சித்தம் குளிரும் தென்றல்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.

அங்கம்:5 காட்சி:2 பாகம்:1

நேரம், இடம்: பகல் வேளை. ரோமாபுரியில் சீஸரின் தனி மாளிகை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், ஆண்டனி, புரூட்டஸ், அக்டேவியன், காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ, மற்றும் சில செனட்டர்கள்.

காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தன் தனி மாளிகையில் ஆசன மெத்தையில் மகனுடன் அமர்ந்திருக்கிறார். கிளியோபாத்ரா சற்று தூரத்தில் நின்று சீஸரையும், மகனையும் கவனிக்கிறாள். அறையில் வரப் போகும் செனட்டர்களுக்காக பல நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.

ஜூலியஸ் சீஸர்: [மகனை மடிமேல் அமர்த்தி] கண்மணி! ரோமாபுரி அலெக்ஸாண்டிரியா போல் உள்ளதா? ரோம் தலைநகரம் உனக்குப் பிடித்திருக்கிறதா? நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று உன் அன்னை சொன்னாள்.

சிஸேரியன்: [முகத்தைச் சுழித்து] ரோம் எனக்குப் பிடிக்க வில்லை அப்பா! என்னைப் பார்ப்பவர் எல்லாம் ஒருமாதிரி விழிக்கிறார்! பரிவும், பாசமும் என்மேல் யாருக்கு மில்லை! முகத்தை உம்மென்று வைத்து ஆந்தை போல் கூர்ந்து பார்க்கிறார்! அலெக்ஸாண்டிரியாவில் புன்னகை முகத்தையே பார்ப்பேன். சேடியர் எனது கன்னத்தில் முத்தமாய்ப் பொழிவார்! யாரும் என்னருகில் வராமல் தள்ளியே நிற்கிறார்! எனக்கு ரோம் அறவே பிடிக்க வில்லை அப்பா! அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன்.

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரிமுடன்] அப்படிச் சொல்லாதே கண்மணி! எகிப்த் உன் அன்னை ஊர்! ரோமாபுரி உன் தந்தை ஊர்! நீ ஒருநாள் ரோமாபுரிக்கு ராஜாவாகப் போகிறாய்! ரோம் பிடிக்க வில்லை என்று சொல்லக் கூடாது! ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. போகப் போக ரோமானியரின் பரிவு தெரியும் உனக்கு. பார், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ரோமானியர், உன்னைத் தோளில் தூக்கி வைத்து ஆடுவார்! பாடுவார்! நாடுவார்!

சிஸேரியன்: அப்பா! எனக்குக் கத்திச் சண்டை போட ஆசை. வில்லம்பு ஏவிட ஆசை. பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீரா? தினமும் அலெக்ஸாண்டிரியாவில் எனக்கு மொழிப்பயிற்சி உண்டு. கிரேக்க மொழி கற்றுக் கொள்ள ஆசை எனக்கு. அதற்கும் ஏற்பாடு செய்வீரா? கிரேக்க வீரர் அலெக்ஸாண்டர் கதையை அம்மா எனக்குச் சொல்லி யிருக்கிறார்.

ஜூலியஸ் சீஸர்: ஈதோ, ஏற்பாடு செய்கிறேன். [மணி அடித்துக் காவலனை அழைக்கிறார். காவலன் சிறுவனைக் கூட்டிச் செல்கிறான்.]

[கிளியோபாத்ரா புன்னகையுடன் சீஸர் வருகிறாள். சீஸர் அவளை முத்தமிடுகிறார்]

கிளியோபாத்ரா: சிஸேரியன் கிரேக்க மொழி கற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாய் உள்ளான். ரோமில் அதைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. .. அது சரி, நாளை ரோமாபுரியின் மக்கள் மன்றத்தில் உங்களுக்குப் பட்டாபிசேக விழா அல்லவா? வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி அல்லவா அது? சீஸரின் பொற்காலம் என்று என் குருநாதர் சொல்கிறார்! செனட்டர் செய்த முடிவுதான் என்ன? எப்படிப் பட்டம் சூடப் போகிறார் உங்களுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] ரோமாபுரிக்கு வெறும் ஏகாதிபதியாக என்னை நியமிக்கப் போகிறார்! பெருத்த ஏமாற்றம் எனக்கு! எதிர்பாராத அடி எனக்கு! வெற்றிமேல் வெற்றி பெற்ற எனக்கு ரோமானியர் அளிக்கும் வெகுமதி வெறும் அதிபதி! அதுவும் ஏகாதிபதி!

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்ன ஏகாதிபதியா? ஏமாற்றம் எனக்கும்தான்! ரோமாபுரிக்கு வேந்தரில்லையா நீங்கள்? வேடிக்கையாக உள்ளதே உங்கள் விநோத செனட்டர் முடிவு! அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீரா? தளபதியை அதிபதியாக ஆக்கியதில் என்ன மதிப்பிருக்கிறது? ரோமானிய செனட்டர்கள் கோமாளிகள்!

ஜூலியஸ் சீஸர்: நிச்சயம், ஒப்புக் கொள்ளப் போவதில்லை நான்! வேறு வழி என்ன என்று சிந்திக்கிறேன்.

[அப்போது செனட்டர்கள் வருகையைக் காவலன் அறிவிக்கிறான். சீஸர் அனுமதி அளிக்க ஆண்டனி, சின்னா, புரூட்டஸ், அக்டேவியன், சிசெரோ, காஸ்ஸியஸ், காஸ்கா ஆகிய செனட்டர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்கள். சீஸரும், கிளியோபாத்ராவும் ஆசனத்தில் அமர்கிறார்.]

ஆண்டனி: [எழுந்து நின்று] மாண்புமிகு தளபதி அவர்களே! செனட்டாரின் ஏகோபித்த முடிவை நான் அவர்கள் சார்பாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாளை நடக்கும் பட்டாபிசேக விழாவில் ரோமாபுரியின் ஏகாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் படுவீர் தாங்கள். [செனட்டர் யாவரும் ஆரவாரமுடன் கைதட்டுகிறார்கள்]

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன் எழுந்து] நிறுத்துங்கள் கைதட்டலை! நிராகரிக்கிறேன் உமது முடிவை! முதலில் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், உமது ஏகோபித்த முடிவை! புறக்கணிக்கிறேன் உமது போலித் தனமான வேடிக்கை முடிவை!

புரூட்டஸ்: [எழுந்து நின்று கண்ணியமாக] மாண்புமிகு தளபதியாரே! மாபெரும் மத்திய கடற்கரை வெற்றி வீரருக்கு வேறென்ன வேண்டும்? ஏகாதிபதி என்பது ரோமாபுரியின் உன்னதப் பட்டமல்லவா? சீஸர் அதை வேண்டாம் என்று வெறுப்பதின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று குரலைத் தணித்து] அருமை புரூட்டஸ்! என்னை நீ அறிவாய்! என் போர் வல்லமையை நீ அறிவாய்! பல்லாண்டு போரிட்டுச் சலிக்காதவன் நான்! ஸ்பெயின் முதல் எகிப்த் வரைக் கைப்பற்றியதை நீ அறிவாய்! பன்முறைப் போரிட்டு ரோமானிய சாம்ராஜியத்தைப் பல்லாயிரம் சதுர மைல் விரித்தவன் நான்! பார்புகழும் ஓர் மாவீரருக்கு அளிக்கும் வெகுமதியா இது? ஏமாற்றம் அடைந்தேன் புரூட்டஸ்! பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்! நான் எதிர்பார்த்தது இதுவன்று!

காஸ்ஸியஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதியாரே! நீங்கள் எதிர்பார்த்தது என்ன வென்று தெளிவாகச் சொல்வீரா? உங்கள் பேராற்றலை செனட்டார் யாரும் குறைக்க வில்லையே! வெறும் பட்டப் பெயரில் என்ன உள்ளது?

ஜூலியஸ் சீஸர்: [அழுத்தமுடன்] ஏகாதிபதியாக இருக்க விருப்ப மில்லை எனக்கு! ரோமாபுரியின் ஆற்றல் மிக்க ஏகச் சக்ரவர்த்தியாக விளங்க விழைகிறேன்! ரோமின் வேந்தராகப் பட்டாபிசேகம் ஆக விரும்புகிறேன். ரோமானிய சாம்ராஜியத்தின் முடி சூடிய மாமன்னராக அறிவிக்கப்பட வேண்டுகிறேன்!

[செனட்டருக்குள் பல முணுமுணுப்புகள் எழுகின்றன]

காஸ்ஸியஸ்: [ஆத்திரமுடன்] வேந்தராக ஒருவர் ரோமுக்கு ஆகிவிட்டால், செனட்டராகிய எமக்கு வேலை யில்லை! குடியாட்சியைப் புதைத்து முடியாட்சியைப் புகுத்த விழைகிறீர்! எமது ஆற்றல் மங்கிப் போகும்! எமது குரல் மதிப்பற்றுப் போகும்! நூற்றுக் கணக்கான செனட்டர்களைக் கீழே தள்ளிவிட்டு நாங்கள் எதற்கு ஓர் வேந்தரை நியமிக்க வேண்டும் ரோமுக்கு?

ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன்] பேராற்றல் படைத்த எனது அரசியல் உரிமையைச் செனட்டர் அபகரித்துக் கொள்வதை ஏற்கப் போவதில்லை நான்! என்றைக்கும் உடன்படப் போவதில்லை நான்!

புரூட்டஸ்: [சற்று யோசனையுடன்] மேன்மைமிகு தளபதியாரே! நாங்கள் அதைப் பற்றித் தனியாகச் சிந்திக்க வேண்டும்! சற்று அவகாசம் தேவை. கொடுப்பீரா? ரோமாபுரிக்கு ஒரு வேந்தர் தேவையா என்று செனட்டர்கள் ஆராய வேண்டும்! தர்க்கத்துக்குரிய பிரச்சனை அது! கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை அது!

காஸ்ஸியஸ்: [கோபத்துடன்] செனட்டர் தீர்மானம் செய்ய வேண்டாம் அதை! ரோமாபுரிக்கு மன்னர் பதவி தேவை யில்லை. மன்னர் ஆட்சியில் செனட்டருக்கு என்ன வேலை?

சிசெரோ: [எழுந்து நின்று] மன்னிக்க வேண்டும், சீஸர் நான் குறுக்கீடு செய்வதற்கு! செனட்டர்கள் கூடிப் பேச சில மணிநேரம் அவகாசம் வேண்டும். அடுத்த அறையில் உடனே முடிவு செய்கிறோம் நாங்கள்!

ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்யுங்கள். அனுமதி அளிக்கிறேன். [ஆண்டனி, புரூட்டஸ் மற்றும் ஏனைய செனட்டர் அனைவரும் வெளியேறுகிறார். மூடிய அடுத்த அறையில் கூடி அளவளாவுகிறார்கள்]

கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு அருகில் வந்து] மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு மாவீரர் பரம்பரையில் சீஸரை மிஞ்சியவர் யார்? பல்லாயிரம் சதுர மைல் நாடுகளைப் பிடித்து ரோமானியப் பேராற்றலைக் காட்டியது யார்? உங்களை வேந்தர் என்று உங்கள் ரோமானியரே ஏற்றுக் கொள்ளாதது வியப்பாக உள்ளது எனக்கு! உங்கள் செனட்டார் அனைவரும் மூடர்கள்!

ஜூலியஸ் சீஸர்: ஆத்திரப் படாதே, கிளியோபாத்ரா! எகிப்திய மகாராணி ரோமானிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்! நான் தளபதி ஆயினும், ரோமானிய செனட்டரைப் புறக்கணிக்க முடியாது. அத்தனை பேரது பகையையும் நான் தேடிக் கொள்ளலாகாது!

கிளியோபாத்ரா: [சினத்துடன்] சீஸர்! ·பாரோவின் பரம்பரை வாரிசைப் பெற்ற நீங்கள் தேவனுக்குச் சமமானவர்! என்னை மணந்ததால் எகிப்த் உங்களை மன்னராக ஏற்றுக் கொண்டது! ஆனால் ரோமாபுரி ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? என்னை மணந்த காரணமா? அல்லது உங்களுக்கு ஓர் மகன் பிறந்த காரணமா? பரம்பரை முடியாட்சியை செனட்டார் வெறுக்கிறாரா? சொல்லுங்கள். குழப்பமாய் உள்ளது எனக்கு!

ஜூலியஸ் சீஸர்: அப்படி எல்லாம் சந்தேகப் படாதே கிளியோபாத்ரா.

[அப்போது செனட்டர்கள் யாவரும் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் அமர்கிறார்]

புரூட்டஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதி அவர்களே! செனட்டார் யாவரும் செய்த முடிவு இதுதான். ரோம் சாம்ராஜியத்துக்கு வேந்தர்! ஆனால் ரோமுக்கு நீங்கள் ஏகாதிபதி! ரோமாபுரியின் ஆட்சியில் செனட்டரின் முடிவு முதலிடம் பெறும்! ரோமாபுரிக்கு வெளியே நீங்கள் வேந்தராக அறிவிக்கப் படுவீர்.

ஜூலியஸ் சீஸர்: [ஆங்காரச் சிரிப்புடன்] என்ன? சீஸர் வெளி உலகுக்கு மட்டும் வேந்தர்! ஆனால் உள்ளூருக்குள் வெறும் தளபதி, அதாவது ஏகாதிபதி! வேடிக்கையான பட்டாபிசேகம்! உள் நாட்டில் வெறும் பீடம்! வெளிநாடு போகும் போது ராஜ கிரீடம்! உள்ளூரில் பொம்மை ராஜா! வெளியூரில் உண்மை ராஜா! வேண்டாம் எனக்கு இந்த இரட்டை வேடம்! எனக்குத் தேவை ஒரே வேடம்! ராஜக் கிரீடம்! ரோமாபுரியின் ஏகச் சக்ரவர்த்தி!

காஸ்ஸியஸ்: தளபதியாரே! செனட்டர் ஏகோபித்த முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்! அவமானம் எங்களுக்கு! எகிப்த் ராணியின் முன்பாக அனைத்து செனட்டரை அவமதித்தால் வெளியேறுகிறோம் நாங்கள்! உங்களுடன் பேச்சில்லை எமக்கு!

காஸ்கா: [சினத்துடன்] கிளம்புங்கள் வெளியே! நமக்கினிப் பேச்சில்லை! முடியாட்சி ரோமில் முளைத்திட யாம் அனுமதிக்க மாட்டோம்!

காஸ்ஸியஸ்: செனட்டர் கடமை ரோமாபுரியைக் காப்பாற்றுவது! குடியாட்சியைக் கீழே தள்ள நாம் எப்படி உடன்படுவோம்?

[ஆண்டனி, புரூட்டஸைத் தவிர அனைத்து செனட்டரும் வேகமாக வெளியேறுகிறார்]

புரூட்டஸ்: [கண்ணியமாக] செனட்டார் சொல்வதைச் சீஸர் கேட்பது சாலச் சிறந்தது. செனட்டர் சினத்துக்குச் சீஸர் தீனி போடுவது நல்லதன்று! செனட்டர் நெஞ்சில் கனலை வளர்ப்பது எரிமலையைத் தூண்டுவது போலாகும்.

ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] புரூட்டஸ்! உனக்கு உலகம் தெரியாது! நீ வாலிபன்! உன் அறிவுரை தேவை யில்லை எனக்கு! செனட்டர் பக்கம் சேரும் நீயும் அவருடன் வெளியேறிச் செல்!

[புரூட்டஸ் தலைகுனிந்து கொண்டு பரிதாபமாக வெளியேறுகிறார்]

ஆண்டனி: [கனிவாக] சீஸர்! கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோட்டையைப் பிடிக்கலாம்! ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! நீங்கள் கேட்டதில் முக்கால் பாகம் கிடைத்துள்ளதே! அது போதாதா? ரோம் ராஜியம் உங்கள் நேரடி ஆட்சிக்குக் கீழ்! ரோமாபுரி மட்டும் செனட்டர் ஆட்சிக்குக் கீழ்! ஏற்றுக் கொள்ளுங்கள் சீஸர் முதலில்! மாற்றிக் கொள்ளலாம் அவரைப் பின்னால்!

ஜூலியஸ் சீஸர்: [சற்று யோசனையுடன்] சிந்தித்துச் சொல்கிறேன் ஆண்டனி! அவகாசம் தேவை எனக்கும்! நன்றி உன் ஆலோசனைக்கு!

ஆண்டனி: [கிளியோபாத்ரா அருகில் சென்று] ரோமாபுரியின் கொந்தளிப்பில் உங்களைச் சந்தித்தது என் துர்பாக்கியமே! எத்தனை நாட்கள் ரோமில் தங்குவதாக உங்கள் திட்டம்? தனியாகப் பேச வேண்டும் நான் உங்களுடன்! உங்கள் வருகையால் ரோமாபுரியில் ஒளி வெள்ளம் பரவி உள்ளது! சீஸருக்கு ஆண்மகவைக் கொடுத்த கிளியோபாத்ரா ரோமாபுரியின் வரலாற்றைச் செழிப்பாக்கியவர்.

கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] மிக்க நன்றி ஆண்டனி! மூன்று மாதங்கள் ரோமில் நான் தங்குவேன்! எகிப்துக்கு நீங்கள் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டும்! அங்கே அரசாங்க விருந்தாளியாக நீங்கள் என் அரண்மனையில் தங்க வேண்டும்.

ஆண்டனி: மார்ச் பதினைந்தாம் தேதி சீஸருக்குப் பட்டாபிசேக விழா! என் அரசியல் பொறுப்புகளை அவர் மீது போட்ட பிறகுதான் எனக்கு விடுதலை! எகிப்துக்கு நான் வருவதை உறுதியாகச் சொல்ல முடியாது! அழைப்புக்கு மிக்க நன்றி, கிளியோபாத்ரா! [அருகில் வந்து கிளியோபாத்ராவின் வலது கரத்தில் முத்தமிடுகிறார்.] … போய் வருகிறேன் சீஸர்! கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார்]

கிளியோபாத்ரா: [அழுத்தமுடன்] ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! புரூட்டஸ் சொல்வதிலும், ஆண்டனி சொல்வதிலும் பொருள் உள்ளதாகத் தெரிகிறது எனக்கு! சிறுகச் சிறுகப் பிடி என்று ஆண்டனி கூறியது ஒரு வேத வாக்கு! செனட்டரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்! வயதில் சிறியவள் ஆயினும், என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். வயதில் பெரியவர் ஆயினும், ஒப்புக் கொள்வதில் உங்களுக்குத் தாழ்மை யில்லை! மகா அலெக்ஸாண்டரின் வெற்றிப் பாதை உங்களுக்குத் திறந்து விட்டது! அவர் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்! இந்தியாவின் சிந்து நதியைத் தாண்டி, கங்கைக் கரையைத் தாண்டிச் சென்று சைனாவைக் கைக்கொண்டு புது வரலாற்றைப் படைக்க வேண்டும் சீஸர். இது ஒருபெரும் வாய்ப்பு. இழந்து விடாதீர் அதனை!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முதலில் நீதான் என்னுடன் வாதாடினாய்! ஏற்றுக்கொள் என்று மாறாக நீ வழக்காடுகிறாய்! ஒரு கணத்தில் 180 டிகிரி கோணத்துக்குத் திரும்பி விட்டாய்! ஆனால் நான் அப்படி ஒரு கணத்தில் மாறுபவன் அல்லன்! நான் போர்த்தளபதி! பிடித்துக் கொண்டதை எளிதில் விட்டுவிடுபவன் அல்லன்! ரோமாபுரிக்கு வேந்தர் பட்டாபிசேகம்! அதை வேண்டி நின்ற பின்னர், வேறு எதனையும் விரும்ப மாட்டேன் நான்! நாளை நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 2, 2006]

Series Navigation