வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8

This entry is part of 34 in the series 20061026_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரண்டு நாட்கள் கடந்திருந்தன: வழக்கத்தைப்போல அறைக்குள்ளேயே சுற்றி சுற்றிவந்து களைந்திருந்தேன். ‘எங்கள் வாழ்க்கை ஆன் தலையீட்டினால் குட்டிச்சுவராகபோகவிருக்கிறதென்கிற’ நினைப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன். சிரிலை(Cyril) மறுபடியும் பார்க்கவேண்டுமென்கிற எண்ணமில்லை, இருந்த சூழ்நிலையில் அவனைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லதென்றும் தோன்றியது, தவிர எனது மனதிலும் அவனைச் சந்திக்க வேண்டுமென்கிற ஆசைகள் எழாதது ஆச்சரியம். இக்கட்டான அந்த மனநிலையில் எனக்கு மகிழ்ச்சிதரும்வகையில் சில காரியங்களைச் செய்தேன்: சுலபத்தில் விடைகாணமுடியாதக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழம்பிக்கொண்டிருப்பது, சோதனையான நாட்களை மீண்டும் நினைத்துப்பார்ப்பது அல்லது வரவிருக்கும் நாட்களை நினத்து பயந்துகொண்டிருப்பது…இப்படி. வெளியில் வெப்பம் கடுமையாக இருந்த நாட்கள் அவை, உள்ளே அறைக்குள் போதிய வெளிச்சமின்றி இருட்டாக இருக்கும். சன்னற் கதவுகளை அடைத்திருந்தபோதிலிலும், அறையெங்கும் பிசுபிசுவென்று ஈரத்தன்மையுடனான மோசமானகாற்றோடு கூடிய ஒருவித இறுக்கமுண்டு. மேலே கூரையை பார்த்தபடி கட்டிலிலேயே படுத்துக்கிடப்பேன். எப்போதாவது சலவைசெய்த கட்டில்விரிப்பின் சுகத்திற்காக புரளுவது உண்டு. உறக்கம் சுலபத்தில் வந்ததில்லை. அந்த நேரங்களில் கட்டிலருகேயிருக்கும், ரேடியோ பெட்டியில், வெறும் ரிதமெழுப்பும் இசைத்தட்டை மெல்ல சுழலவிட்டு ரசிப்பேன். நிறைய புகைப்பேன். நான் சீரழிந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்திருந்தேன், இருந்தும் மகிழ்ச்சி. மனதை சந்தோஷமாக வைத்திருக்க அத்தனையும் முயன்றுபார்த்தேன், முடியவில்லை- வேதனைகள் குறைவதாக இல்லை, திசைதெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் பின்னேரம், கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த பணிவிடைசெய்பவள், முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, எச்சரிப்பதுபோன்ற குரலில், “கீழே யாரோ வந்திருக்கிறார்கள்”, என்றாள். எனக்குச் சட்டென்று ‘சிரில்’ ஞாபகம் வந்தது, இறங்கினேன், வந்திருந்தது ‘எல்ஸா’. ஆர்வத்தோடு எனது கைகளைப் பிடித்துக்கொண்டாள். நான் மூர்ச்சையாகாத குறை. எங்கிருந்து இந்த அழகை வாங்கினாளென யோசித்தேன். அப்படியிருந்தாள். கடைசியில் அவளுக்குப் பிரியமான பழுப்பு நிறத்திற்கு தோலின் நிறம் மாறியிருந்தது, அதாவது மாசுமருவற்ற, அளவான பழுப்பு நிறம், மிகுந்தக் கவனத்துடன் அவளுடலை பராமரித்திருக்கவேண்டுமென்பதை, இளமையையின் சௌந்தர்யத்துடன் அது பிரகாசித்ததை வைத்து முடிவுக்கு வந்தேன்.

” என்னோட உடமைகளை எடுத்துபோகலாமென்று வந்தேன். ஒன்றிரண்டு கவுன்களை, ‘ழூவன்'(Juan) வாங்கிதான் கொடுத்தான், ஆனா அது போதலை.”

சட்டென்று, ழூவன்(Juan)என்பவன் யார்? என்ற கேள்வி மனதில் உதித்தது. பிறகு அது முக்கியமல்ல என்றும் தோன்றியது. எல்ஸாவை மறுபடியும் பார்க்கமுடிந்ததே என்ற மகிழ்ச்சி. வந்திருக்கும் எல்ஸா, தனது அழகை பராமரிக்கத்தெரிந்த பெண்மணி, அவளோடு மதுச்சாலைகளும், மாலை நேரங்களும், இரவு விடுதிகளும், குதூகலமாக அவளோடு கழித்த நாட்களும் நினைவுக்குவந்தன. மறுபடியும் அவளைப் பார்க்கநேர்ந்த சந்தோஷத்தைக் குறிப்பிட்டு அவளிடம் பேசினேன். ஆமோதித்தவள், “நம்மிடையே பொதுவான சில அம்சங்கள் இருந்ததால், நாமிருவரும் பிரச்சினைகளின்றி பழக முடிந்தது,” என்றாள். அதைக் கேட்டதும், என்னுடல் மெல்ல சிலிர்த்தது, அதைச் சாமர்த்தியமாக அவளிடமிருந்து மறைத்துவிட்டு, ‘என்னோட அறைக்குப் போகலாமா? என்றேன். அதற்கும் காரணமிருந்தது. அவ்வாறு அழைத்துச் சென்றால், அப்பாவையும் ஆன்னையும், அவள் சந்திக்கும் வாய்ப்பு அமையாது என்று நினைத்தேன். எனது தகப்பனாரைப் பற்றி பேச்சுவந்தபோது, மெல்ல அவள் தலையை ஆட்டினாள், எனக்கு வியப்பு. ழுவான்(Juan)னையும், அவன் வாங்கிக் கொடுத்த கவுன்களையும் மறந்துவிட்டு இன்னமும் அவள், அப்பாவை நேசிக்கிறாளோ?… இந்தச் சின்ன தலையாட்டுதலை மூன்று வாரங்களுக்கு முன் அவள் செய்திருந்தால், அது எனது கண்களில் பட்டிருக்குமோ?

எனது அறைக்குச் சென்றதும், அவளது நவநாகரீக கடற்கரை வாழ்க்கையை கலகலப்புடன் சொல்லக்கேட்டேன். எனக்குள் இதுவரைத் தோன்றாத எண்ணங்கள், ஒரு வகையில் அவ்வெண்ணங்களுக்கு, நான் இதுவரைக் கண்டிராத ‘எல்ஸாவும்’ காரணமாக இருக்கலாம். நான் அமைதியாக இருக்கவே, மேலே தொடரவிருப்பமில்லாமல், அவளாகவே பேச்சை நிறுத்திக்கொண்டாள். சில அடிதூரம் அறைக்குள் நடந்தவள், திரும்பாமலேயே, குரலில் சுரத்தின்றி, “என்ன ரெமோன்(Raymond)னுக்கு இப்போது சந்தோஷம்தானா?” என்றாள். அதை அழுந்தச் சொன்னதுபோல இருந்தது, அதற்கான காரணத்தினை விளங்கிக்கொண்டேனோ இல்லையோ, மனதில் அடுக்கடுக்காய் யோசனைகள் திட்டங்கள் தோன்றி எனக்குள் பாரமாயிறங்கின. அவற்றை சுமக்கமுடியாமல் துவண்டுவிழும் நிலையில் நானிருந்தேன். அந்தச் சுமையை உடனே இறக்கியாகவேண்டும்,. உடனேயே அவளிடத்திற் பகிர்ந்தாகவேண்டும்:

” – என்ன? அப்பாவுக்குச் சந்தோஷமா என்றுதானே கேட்ட? ஒரிரு வார்த்தைகளில் என்னிடத்தில் அதற்கு பதிலில்லை. நிறைய பேசணும் உலகில் ‘சந்தோஷத்தைத்’ தவிர வேறு வார்த்தைகள் இல்லையென்பதுபோலத்தான், அப்பாவை ‘ஆன்’ நம்பவைத்திருக்கிறாள்.. ரொம்பவும் சாமர்த்தியக்காரி.

– ஆமாம் ரொம்ப ரொம்ப, எல்ஸா பெருமூச்சிட்டபடி சொன்னாள்.

– அவள் மனசுல என்ன திட்டமிருக்கு என்பதை உன்னால யூகிக்கவேமுடியாது. அப்பாவை கூடிய சீக்கிரம் திருமணம் செய்ய இருக்கிறாள். சட்டென்று எனக்காய்த் திரும்பினாள், முகம் அதிர்ச்சியில் வெளுத்திருந்தது:

” – என்னது? திருமணமா? ரெமோன் அவளை திருமணம் செய்ய இருக்கிறாரா,… அவரா?

– ஆமாம், ரெமோன் திருமணம் செய்யவிருக்கிறார், அழுத்தம் திருத்தமாகக் கூறினேன்.

உடனே சிரிக்க வேண்டும்போல இருந்தது. எனது கைகள் நடுங்கின. ‘எல்ஸா’ நிலைகுலைந்திருந்தாள், அந்த நேரத்தில் அவளையும் என்னையும் யாரேனும் பார்த்திருந்தால், நான்தான் அவளை தாக்கியிருப்பேனென நினைத்திருக்கக் கூடும். எல்ஸாவை அப்படியே வைத்திருக்கவேண்டும், யோசிக்கவிடக்கூடாது. அவளது வழக்கமான கூத்துகளையெல்லாம் கொஞ்சநா¨ளைக்கு மறக்கச் செய்யவேண்டும், மெல்ல அவளிடத்தில், குரலில் பரிவை வரவழைத்துக்கொண்டு :

” அது நடக்கக்கூடாது எல்ஸா. அப்பா, ஏற்கனவே அவளிடத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். திருமணமும் முடிந்தால் என்ன ஆகும்? யோசித்து பாரு..

– ஆமாம்”,- அவள்.

அவள் எனது பேச்சில் மயங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. எனக்குச் சிரிப்புவந்தது, எனது உடலோ முன்னைக்காட்டிலும் கூடுதலாக அதிர்ந்தது.

” – நான் உனக்காகத்தான் காத்திருந்தேன். ஆன்னை(Anne) எதிர்த்து நிற்க உன்னால் முடியும், உன் ஒருத்திக்கு மாத்திரமே அதற்கான தகுதியுமுண்டு.”

அடுத்து வந்த அவளது கேள்வி, நான் சொன்னதை நம்பியதுபோலத்தான் இருந்தது.

“- சரி உங்க அப்பாவும் அவளை உண்மையாக நேசிப்பதாகவோ, மணம் செய்யவோ விரும்பினால்?

– எல்ஸா… என்னநீ இப்படியெல்லாம் சந்தேகப்படற, அவர் உன்னைத்தானே விரும்புகிறார். உன்னை மறந்திட்டாரென்று மாத்திரம் சொல்லாதே. நான் நம்பமாட்டேன்.” அமைதியாகக் கூறினேன்.

அவள் இமைகள் துடிப்பதைக் கவனித்தேன். அவளிடத்தில் நான் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கை, சட்டென்று முகத்தில் மகிழ்ச்சியாய் வெளிப்பட்டது, அதை மறைக்க விரும்பியவளைப்போல முகத்தைத் திருப்பிகொண்டாள். அவளை திசைதிருப்பியதில் எனக்குள்ளும் கிறக்கம், எனினும் அவளிடத்தில் என்ன பேசவேண்டுமென்பதில் தெளிவுடனிருந்தேன்.

” எல்ஸா(Elsa).., ஆண்பெண் உறவு, இல்வாழ்க்கை, நன்நெறியென்று அப்பாவை மடக்க, ஆன்(Anne) ஒரு பெரிய பாடமே எடுக்கப்போய், இவரும் காலில் விழுந்து கிடக்கிறார். இதை நீ புரிஞ்சுக்கணும்.”

சொல்லிமுடித்ததும், மனம் கனத்தது, துக்கம் தொண்டையை அடைத்தது; பள்ளிச் சிறுமியைப்போல, உளறிக்கொட்டினேனென்று வேண்டுமானால் சொல்லலாம். எப்படியோ, மனதிலிருந்த உணர்வை முடிந்தமட்டும் அவளிடத்தில் சொல்ல முடிந்தது.

” – எல்ஸா…அந்தத் திருமணம் நடந்து முடிந்தால், அப்பாவுடைய வாழ்க்கைமட்டுமல்ல, நம்மிருவர் வாழ்க்கையுங்கூட குட்டிசுவராகிவிடும். அப்பாவை இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது காப்பாற்றியாகணும். அவர் வயதானாலும் இன்னமும் சின்னக்குழந்தை…வயதான குழந்தை…”

‘வயதான குழந்தை’ என்ற வார்த்தையை உரத்து திரும்பவும் சொன்னேன். மிகப்பெரிய துக்கநாடகமொன்றை நடத்திமுடித்த திருப்தி. அதனை உறுதிபடுத்துவதுபோல எல்ஸாவின் மரகதவண்ண விழிகளிரண்டும் கலங்கியிருந்தன. தேவாலயத்தில் ஸ்தோத்திரம் சொல்லி முடிப்பதுபோல:

” – எல்ஸா… எனக்கு நீதான் உதவணும். இவ்வளவும் எதற்காக நான் சொல்கிறேனென்று யோசித்து பார். உன்னோட நன்மைக்காகவும், அப்பாவுடைய நன்மைக்காகவும், உங்களிருவரின் காதலுக்காகவுந்தான், நான் இத்தனை தூரம் கெஞ்சுகிறேன்,” என்றவள் கடைசியில் எனக்காகவுங்கூட….”என்று முணுமுணுத்தேன்.

” – இந்த விவகாரத்துல நான் என்ன செய்ய முடியுமென்று நினைக்கிற…எனக்கென்னவோ இது ஆகாத வேலைண்ணுதான் நினைக்கத் தோணுது.

– உன்னால முடியாதென்றால், விட்டுடு…, எனது குரல் சோர்ந்து ஒலித்தது.

– ‘பச்சைச் தேவடியா’! எல்ஸா முணுமுணுத்தது காதில் விழுந்தது.

– அவளை(ஆன்னை) அப்படி சொல்றதிலே தப்பே இல்லை”, என்கிறேன், பின்னர் எனது பங்கிற்குத் தலையைத் திருப்பிக் கொண்டேன்.

எல்ஸா புதிய அவதாரம் எடுத்திருந்தாள். முகம் சிவந்திருந்தது. இவள் ஆன்னுடைய பேராசைக்கு பாடம் கற்பிப்பதென்று தீர்மானித்திருப்பவள். நாங்கள் அறிந்திருந்த ‘எல்ஸா'(Elsa)வல்ல, இவள் எல்ஸா மக்கென்பூர்(Elsa Mackenbourg). அப்பா அவளை இன்னமும் நேசிக்கிறார் என்பதை மறக்காத எல்ஸா. புதிதாக ஒரு ழுவான்(Juan)கிடைத்திருந்தாலும், ரெமோனின்(Raymond) வசீகரம், அவளுடைய மனதில் அப்படியே இருக்கிறது. ஆன்னைப்போல(Anne) உண்மை, வருங்காலம், குடும்பம் என்பது பற்றிய திட்டங்களேதும் அவளுக்கில்லை, அதை வற்புறுத்தப்போகிறவளுமல்ல.

” – எல்ஸா… என்னாலும் அவளது நடவடிக்கைகளை பொறுத்துக்க முடியலை. நான் சொன்னேனென்று சிரிலை(Cyril)போய்ப் பார், அவனுடைய அம்மாவிடம் பேசி, அவர்களுடைய ‘வில்லாவில்’ கொஞ்சகாலம் தங்க ஏற்பாடு செய்யமுடியுமாவென்று கேள். நாளைகாலையில் அவனை வந்து பார்க்கிறேனென்று சொல். பிறகு மூவருமாக உட்கார்ந்து பேசுவோம்.”

அவள் கதவருகிற் செல்ல, ” எல்ஸா, இது உன்னோட விதி சம்பந்தப்பட்ட விஷயம், அதை நல்லபடியா அமைச்சுகிற பொறுப்பு உனக்கு இருக்கு”, சும்மா ஒரு பேச்சுக்காக விதிகளையெல்லாம உரையாடலிற் சேர்த்துக்கொண்டேன்.

அவள் தலையை ஆட்டிய விதத்தில் விசனத்தின் சாயலிருந்தது, ஏதோ வரிசையாக விதிகள் அவளைத் துன்புறுத்த காத்திருப்பதுபோலவும், அதை உணர்ந்தவள்போலவும் தலையாட்டினாள், அவளோட சம்பந்தப்பட்ட மனிதர்களும் குறைவுதான், விதிகளும் குறைவுதான். அவள் புறப்பட்டுப்போனபோது சூரியன் பளிச்சென்று காய்ந்து கொண்டிருந்தான். அவள் நடையில் மகிழ்ச்யின் அறிகுறியாக மெல்லிய துள்ளல். ஒருவாரகாலத்திற்குள், அப்பாவை மறுபடியும் எல்ஸாவுடன் சேர்த்துவைக்கவேண்டும், மனதிற்குள் சபதமெடுத்துக்கொண்டேன்.

மாலை மணி 3.30. இந்த நேரத்தில் ஆன்னுடைய அணைப்பில் அப்பா உறங்கிக்கொண்டிருக்கலாம். இன்பலாகிரியில், காதல் விளையாட்டில் தோல்விகண்டு, துவம்சம் செய்யப்பட்ட ஆனு(Anne)ங்கூட ஒருவேளை களைப்புற்று கண்ணயர்ந்திருக்கலாம். இனி ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கூடாது. மனதிலிருப்பதை உடனடியாகச் செயல்படுத்தவேண்டும். ஒழுங்காய்த் திட்டம் தீட்டப்படவேண்டும். அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக தொடர்ந்து நடந்தபடி இருந்தேன், சன்னல்வரை சென்றவள், கடலலைகள் கடற்கரைமணலில் தொடர்ந்து விழுவதும் சிதறுவதுமாக இருப்பதைப்பார்த்தேன், கதவருகில் வந்தவள், திரும்பினேன். கணக்கிட்டுக் காய்களை நகர்த்த தொடங்கினேன், துல்லியமாக திட்டம் தீட்டினேன், விருப்புவெறுப்புக்கும் ஒருபோதும் இடங்கொடாமல் கவனத்துடன் தடையாக இருக்கக் கூடியவை எவையென்பதையறிந்து, அவற்றை முற்றாக அழித்தேன். ஒருசிலவேளைகளில், மிகவும் ஆபத்தான முறைகளில் திட்டமிடுகிறேனோ என்று கூட நினைத்தேன். எல்ஸா(Elsa)விடத்தில் பிரச்சினையை சாமர்த்தியமாக கொண்டுசென்றதிலிருந்து எனக்குள், எனக்கெதிராக ஒருவித குமட்டல் மனோபாவம், ‘சீச்சீ.. நீயா. இப்படி’ என்பதைபோல, கூடவே எதையோ சாதித்துவிட்ட பெருமிதம். குற்ற உணர்வு ஒருபக்கம், தனிமையின் சஞ்சலம் மறுபக்கம்.

இனி இப்படியான குழப்பங்களெதுவும் இருக்காதென்று நினைக்கிறேன், சரி- சொல்லி என்ன ஆகக்போகிறது? கடலில் இறங்கி குளிக்கிற நேரம். ‘ஆன்னை’ வைத்துக்கொண்டு தேவையில்லாமல் உடல் நடுங்கித் தொலைத்தது. அதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் தெரிந்திருந்தேன். உதாரணமாக. அன்றைக்குப் பாருங்களேன், அவள் தண்ணீரைவிட்டு வெளியேவந்தாளோ இல்லையோ, நான் துவாலையை கொடுக்க அவளை நோக்கி ஓடுகிறேன் – ஆன்னுடைய கைப்பை என்னிடத்தில்தானிருந்தது. இனிக்க இனிக்க பேசியும், என்ணமெலாம் அவளேயென்பதுபோல, அக்கறைகாட்டியும், அவளை பரவசபடுத்துகிறேன். திடிரென்று என்னிடத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக்கண்டு அவளிடத்தில் ஆச்சரியமேதுமில்லை, மாறாக மகிழ்ந்தாள். அப்பாவுக்கும் சந்தோஷம். ஆன் தனது ‘நன்றி’யை புன்னகையூடாகத் தெரிவித்தாள். என்னிடத்தில் பேசும்போதெல்லாம், முகத்தில் அப்படியொரு பூரிப்பு. சிலமணிநேரங்களுக்கு முன்னர்தான், எல்ஸாவின் மடத்தனத்தை ஆங்கீகரிக்கிறவகையில், ஆன்னை(Anne) ‘பச்சைத் தேவடியாள்’ என்று வாய் கூசாமல் சொல்லியிருந்தேன். எண்ணிப் பார்க்க வெட்கமாக இருக்கிறது. நாளை முதல்வேலையாக, எனது தவறை ஒத்துக்கொண்டு, எல்ஸாவை(Elsa) அனுப்பித் தொலைக்கவேண்டும். இனி முன்புபோலவே அனைத்தும் நல்லவிதமாக நடக்கலாம், தேர்வில் வெற்றிபெறலாம், பள்ளியிறுதி வகுப்பு தேர்வில் வெற்றிபெறுவதென்பது உருப்படியான காரியமில்லையா?

” அப்படித்தானே? பள்ளியிறுதி வகுப்புத் தேர்வில் வெற்றிபெறுவதென்பது உருப்படியான வேலைதானே? ஆன்னிடம் கேட்டேன்.

என்னை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், கலகலவென்று சிரிக்கிறாள். அவளது சிரிப்பு என்னிடமும் தொற்றிக்கொண்டது. அவளது முகத்திற் தெரிந்த மகிழ்ச்சியைக் காண எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

” உன்னை புரிந்துகொள்வது ரொம்ப கடினம்”, ஆன்

உண்மை. என்னைப் புரிந்துகொள்வது அத்தனை சுலபமில்லை, அதிலும் அவளுக்கு சிலமணி நேரங்களுக்கு முன்புவரை என்மனதிலிருந்தத் திட்டங்கள் தெரியவந்தால், என்னைப் புரிந்துகொள்வது மிகமிகச் சிரமமென்றுதான் நினைத்திருப்பாள். அதை அவளிடத்திற் சொல்லாமற்போனாலும் தலைவெடித்துவிடும்போலிருக்கிறது:

” ஆன் உனக்குத் தெரியுமா, ‘எல்ஸா’வை(Elsa) வைத்து வேடிக்கையான நாடகமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன், அதன்படி சிரில்(Cyril)மீது காதல்கொண்டவளாக எல்ஸா(Elsa) நடிக்கவேண்டும்; அவன் வில்லாவிலே தங்கவேண்டும்; நாம் மூவரும் பார்க்கின்ற வகையில் அவர்களிருவரும் அடிக்கடி படகில் சேர்ந்து செல்லவேண்டும், ஊசியிலைமரங்கள் தோப்பிலே சந்திக்கவேண்டும், கடற்கரையில் நடமாடவேண்டும். அதுவும் தவிர எல்ஸா(Elsa) முன்னமாதிரி இல்லை, இப்போது அத்தனை அழகா திரும்பிவந்திருக்கிறாள். உன்னுடைய அழகோடு ஒப்பிட முடியாதென்றாலும், ஆண்களைத் திரும்ப வைக்கிற வசீகரத்தோடு வந்திருக்கிறாள். ஒர் அழகான பெண்மணி, நேற்றுவரை தனக்குச் சொந்தமாக இருந்த ஒருத்தி, தீடீரென்று ஒர் இளைஞனோடு சுற்றுவதில் சுகம் காணுகிறாளென்றால், அதை எப்படி எனது தகப்பனாரால் சகிக்க முடியும்.. ஆன்’Anne)… நான் என்ன சொல்லவறேனென்று உனக்குப் புரியுதா? உன்னை அவர் நேசிப்பதும் உண்மைதான், நான் மறுக்கவில்லை, இருந்தாலும் உடனே எல்ஸா(Elsa) தனக்குச் சொந்தமாகணுமென்று நினைப்பார். அப்பாவுடைய குணத்தை நீ அறிந்தவள்தானே? தடுமாறும் ஆசாமி, புத்தி ஓரிடத்தில் நிற்காது. எல்ஸாவும்(Elsa), நான் சொல்கிறபடி கேட்பாள். ஒரு நாள் அவர்களிருவரையும் பார்க்கக்கூடாதவகையில் பார்ப்பாய், உனக்குச் சட்டென்று கோபம் வரும். தவிர நீ..விட்டுக்கொடுக்குங் குணங்கொண்ட பெண்மணியுமல்ல. பிறகென்ன நீ புறப்பட்டு போய்விடுவாய், அப்படி நடக்கணும், அதுதான் என்னோட ஆசை. இதென்ன அசட்டுத்தமான யோசனைண்ணு நீ நினைக்கலாம். எல்லாத்துக்கும் பெர்க்ஸனும்(Bergson), கொளுத்தும் வெயிலுந்தான் காரணம், பிறகென்ன நினைக்கிறேனென்றால்…வேண்டாம் அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு தைரியம் காணாது, விளக்கமாகச் சொல்லவும்முடியாது, அத்தனை அபத்தமானது. எனது அம்மாவுடைய தோழியை, அப்பாவுக்கும் எனக்குமான சிநேகிதியை, மிக மோசமாக நடத்துவதற்குக் கேவலம் எனது ‘பள்ளி இறுதித்தேர்வு’ காரணமாகிவிட்டது. இருந்தபோதிலும் ‘பள்ளி இறுதித் தேர்வு’ ரொம்ப முக்கியம், இல்லையா?

– என்ன இல்லையா? பள்ளி இறுதித் தேர்வை’பத்திதானே கேட்கிற? -ஆன்.

– ஆமாம்.., -நான்.

இவ்வளவுக்கும் பிறகு அவளிடத்திற் சொல்லிக்கொண்டிருப்பதில் பொருளே இல்லை, அவள் நான் சொன்னது எதையும் புரிந்துகொண்டதுபோலவும் தெரியவில்லை. ஆன்னுக்குப் புரியாத விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தண்ணீரில் பாய்ந்து அப்பாவைப் பின்தொடர்ந்து நீந்திச் சென்றேன், அவரோடு மல்லுக்கு நின்றேன், கடல்நீரையும், அது தந்த மகிழ்ச்சியையும், இழந்திருந்த மனத்தினை திரும்பப் பெறமுடிந்த ஆனந்தம். நாளை எனது அறையை மாற்றிக்கொள்ள இருக்கிறேன். தளத்தின் மேற்தட்டில் உட்கார்ந்து வாசிக்க இருக்கிறேன், அப்போதுகூட பெர்க்ஸன்(Bergson) கூடாது; அதற்காக இனி இராப்பகலா படிக்கப்போகிறேன் என்று பொருளில்லை. இரண்டுமணிநேரம், தனிமையில், அமைதியான சூழலில், காகிதம், மை.. இவற்றின் வாசத்தோடு படிக்கவேண்டும், அதுபோதும். அக்டோபரில் முடிவு வெளியாகும், நான் தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிப்பார்கள், அப்பா வழக்கம்போல சிரிக்க அதில் வியப்பு கலந்திருக்கும், ஆன் பாராட்டுவாள், பிறகு மேற்படிப்பு. அதற்குப்பிறகு நான் புத்திசாலி, அறிவு ஜீவி, பண்பு தெரிந்தவள், பாதிப்புக்குள்ளாதவள் அதாவது ஆன்னை(Anne)ப்போல. புத்திசாலிகளுக்குண்டான திறன்கள் எனக்கும் வந்துவிடும். எந்தவொரு முறையான யோசனைக்கும் இனி அதிகபட்ஷம் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினாற் போதுமானது, அபத்தமாக இருக்கலாம், ஆனால் நியாயமானதென்று சொல்லிக்கொள்ளலாம். இனி எல்ஸாவின்(Elsa) கதி? அற்பத்தனமாகவும், உணர்ச்சிவேகத்திலும் அவளை இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டாயிற்று.. இனி அவள் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாக வேண்டும். இதென்ன கூத்து என்கிறீர்களா? எல்ஸா(Elsa)வுடைய பலவீனத்தை அறிந்ததால் வந்தவினை. முதன் முறையாக இந்த விளையாட்டில் எல்லையில்லாத ஆனந்தம் ஏற்பட்டிருந்தது: ஒர் உயிரில் ஓட்டை போட்டேன், உள்ளிருப்பது என்னவென்று அறிந்தேன், அதன் உண்மையான குணத்தைப் புரிந்து சுருள் கம்பியொன்றை அழுத்துகிற எச்சரிக்கையுடன், மெல்லத் தொட்டேன், எனது எதிர்பார்ப்பு பொய்க்காமல், சட்டென்று இன்னொன்றாக அது எழுந்தது. என்னையாரும் அப்படித் தொட்டதில்லை, ஆனாலும் சிணுங்கியிருக்கிறேன், எழுந்து இருக்கிறேன், எனது இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதுவரை இன்னொரு சீவனின் அண்மையில் நான் இருக்கநேர்ந்த அனுபவம் அனைத்துமே, எதிர்பாராமல் நிகழ்ந்தது, ஒருவகையான விபத்தென்றும் சொல்லலாம். அடுத்துவந்தநாட்களில் ஆச்சரியமூட்டும்வைகையில், எந்திரத்தனமான மானுட சிந்தனையோடும், அதிமேதாவித்தனமான சொற்களோடும் விவாதித்துக்கொண்டிருந்தேன், அவை அனைத்துமே விதண்டாவாதமாக நீண்டதென்பதையும் மறுக்கவில்லை. என்றேனும் ஒருநாள், எனக்கென்று ஒருவன் அதீதகாதலோடு வரத்தான் போகிறான், எதிர்கொள்ளத்தான் போகிறேன், நெருங்குவேன், கைகள் நடுங்க, கவனத்துடன், மெல்ல அவனை…
——————————————————————————

Series Navigation