மடியில் நெருப்பு – 7

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

ஜோதிர்லதா கிரிஜா


7.
“யாருங்க அந்தாளு? உங்களை ரொம்பவே தெரிஞ்சவன் மாதிரி சிரிச்சுக்கிட்டே காரை நிறுத்தப்
பார்த்தானே?” – ஏற்கெனவே தான் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வராததால் சூர்யா
ராஜாதிராஜனை மறுபடியும் கேட்டாள்.
“ஓசி லி·ப்ட் கேக்குற சோம்பேறிதான்! வேற யாரு? ‘ஈ’ ன்னு இளிச்சா காரை நிறுத்துவேன்னு
நினைச்சிட்டிருக்கான் – முட்டாள்! நீ என்னோட இருக்கும்போது மூணாவது மனுஷனை எப்படி
ஏத்துறது?…கறுப்புக் கண்ணாடியை ஏத்தியிருக்கிறதால ஒருக்கா அவன் உன்னை கவனிக்கல்லியோ என்னமோ! அதான் காரை
நிறுத்தப் பார்த்திருக்கான்!”
அவள் மேலே ஏதும் பேசாமல் தெருவை வேடிக்கை பார்க்கலானாள்.
“ஏன் லேட்னு உங்க அம்மா கேட்டா என்ன சொல்லுவே?”
“ஆ·பீஸ்ல வேலை ஜாஸ்தின்னுதான் சொல்லணும்! ராஜாதிராஜன்கிறவரோட ஓட்டலுக்குப் போய் டி·பன்
சாப்பிட்டுட்டு அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வந்ததுல லேட்டாயிடிச்சுன்னா சொல்ல முடியும்?”
“அதானே!”
“எனக்கென்னமோ ரொம்ப பயம்மா இருக்குங்க.”
“பயமா! எதுக்கு பயம்? பொய் சொல்லவேண்டி யிருக்கேன்னா?”
“அதில்லீங்க. இந்த நம்ம உறவு நல்லபடியா முடியணுமேன்னுதான்! திடீர்னு இப்படி ஒரு திருப்பம் – நான்
கொஞ்சம் கூட நெனைச்சும் பார்க்காதபடி – என் வாழ்க்கையில ஏற்பட்டிடிச்சு. அதிலேயும் ஒரே
நாள்லேயே! என்னால நம்பவே முடியல்லே! யாராச்சும் இப்படி ஒரு கதை எழுதி யிருத்தா, அதைப் படிச்சுட்டு
‘அபத்தம்! இப்படிக்கூட திடீர்க் காதல் வருமா’ன்னு சிரிச்சிருப்பேன்.”
“அந்த திடீர்த் திருப்பம் உன்னோட வாழ்க்கையில மட்டுந்தானா? என்னோட வாழ்க்கை யிலேயுந்தான்!
ஆனா எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. நான் நினைச்சதைச் சாதிச்சே தீருவேன். நீ பின்
வாங்கினாலொழிய!”
“நான் ஏங்க பின் வாங்கப்போறேன்?”
“ஏன்? நிறைய ‘பின்’ வாங்கி வெச்சிருக்கியாக்கும்!”
“அறுவை ஜோக் அடிக்காதீங்க. ப்ளீஸ்! அடிச்சா நல்ல ஜோக்கா அடிக்கணும்….அப்புறம்…இப்ப உங்க
காரை நிறுத்தப் பார்த்தாரே, அந்த ஆளை நான் எங்கேயோ இதுக்கு முன்னால் பார்த்திருக்கேன்னு
தோணுதுங்க.”
“எங்கேயாச்சும் தெருவிலே, பஸ் ஸ்டாப்லே பார்த்திருப்பே!”
“அப்படித்தான் இருக்கும்.”
“நாம இன்னும் நிறைய பேசணும், பழகணும், சூர்யா! கல்யாணத்துக்கு முன்னாடி நாம ஒருத்தரை ஒருத்தர்
புரிஞ்சுக்குறது ரொம்ப அவசியம்கிறதை நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியதில்லேன்னு
நினைக்கிறேன்.”
“நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, மனசால ஒண்ணாயிட்டவங்க பேசிப் பழக வேண்டிய அவசியமே
கிடையாதுன்னு நான் நினைக்கிறேன். கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி ரொம்பவும் பேசிப் பழகிட்டோம்னா,
அது ஆனதுக்குப் பெறகு சுவாரசியம் குறைஞ்சு போகிறதுக்கு வாய்ப்பு இருக்கு.”
“அட! பரவாயில்லையே! இந்த அளவுக்கு யோசிச்சு வெச்சிருக்கியே!” – ராஜாதிராஜன் தலையைத்
திருப்பிக் கண்ணடித்துச் சிரித்தான்.
தான் ஒன்று சொல்ல, அவன் வேறொன்றை நினைத்துச் சிரித்ததாய்த் தோன்ற, அவளுள் இலேசான
அருவருப்புத் தட்டியது. ‘சே! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் போல!’ என்று எண்ணியவாறு முகத்தை
பொதுமையாக வைத்துக்கொண்டு தெருவில் பார்வையைப் பதித்தாள்.
“நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன். நான் என்ன சொல்ல வந்தேனா, ஒருத்தரோட
விருப்பு, வெறுப்புகள், ஆசா பாசங்கள், சுபாவங்கள், சுபாவக் கோளாறுகள் இதை யெல்லாம் விலாவாரியா
நமக்குள்ளே கல்யாணத்துக்கு முந்தியே விவாதிச்சோம்னு வெச்சுக்க, அதுக்குப் பெறகு நாம நடத்தப் போற
வாழ்க்கைக்கு அது ரொம்ப உபயோகமா யிருக்கும்னு சொல்ல வந்தேன். வேற ஒண்ணுமில்லே.”
‘அதுக்குக் கண்ணடிச்சுச் சிரிப்பானேன்?’ என்று கேட்கத் தோன்றியதைக் கேட்காமல் அவள்
வலுக்கட்டாயமாய்ப் புன்சிரிப்புக் காட்டினாள். அதைக் கார்க் கண்ணாடியில் கவனித்த அவன், ‘விட்டுப் பிடிக்க வேண்டிய
கேஸ் இதுன்னு தோணுது! பார்க்கலாம். இதுதானே முத சந்திப்பு? இன்னும் இருக்கே!’ என்று
எண்ணிக்கொண்டான்.
” சரி, போகட்டும். என்னை உனக்குப் பிடிச்சுப் போனதுக்கு என்ன காரணம்கிறதை நான்
தெரிஞ்சுக்கலாமா? இல்லாட்டி, அதையும் கல்யாணத்துகுப் பெறகுதான் சொல்லுவியா?”
“நாம ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாது. பஸ் ஸ்டாப்ல என்னைப் பார்த்ததும்
உங்களுக்குப் பிடிச்சுப் போயிடிச்சு. காரை ஓட்டிக்கிட்டே என்னைப் பார்த்தபடி போன உங்களை எனக்கும்
பிடிச்சுப் போயிடிச்சு. நீங்காளாவே முன் வந்து பேசல்லைன்னா நான் கம்னு தான் இருந்திருப்பேன்… ஒரு
உண்மையை நாம ரெண்டு பேருமே ஒத்துக்கணும்னு நினைக்கிறேன்.”
“சொல்லு.”
“என்னோட அழகில மயங்கித்தான் நீங்க எம்மேல பிரியம் வெச்சீங்க. நான் உங்களுக்கு ஆதரவா
பதில் சொன்னதுக்கும் அதுதான் காரணமாயிருக்கணும். அதை நாம ஒத்துக்கனும்! நான் அழகில்லாதவளா
யிருந்திருந்தா, உங்களுக்கு என் மேலே ‘லவ்’ வந்திருக்குமா? சொல்லுங்க!”
“நீ சொல்றது ஒரு விதத்துலே உண்மைதான்.”
“ஒரு விதத்துலே இல்லீங்க. முழு உண்மையும் அதுதான்! பெரியவங்க பார்த்துச் செய்து வைக்கிற
கல்யாணத்துக்கும் நாம செய்துக்கப் போற கல்யாணத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லே.”
“அதெப்படி?”
“அப்படித்தான்! இப்ப பாருங்க. நம்ம குடும்பங்கள்லே பொண்ணு பார்க்க மாப்பிள்ளைப் பையன் வர்றான்.
பொண்ணு பிடிக்குது, பிடிக்கல்லைன்றதை எந்த அடிப்படையில சொல்றான்? பொண்ணோட வெளி அழகை
வெச்சுத்தான். இல்லையா? அதே மதிரிதான் இதுவும்! நீங்களும் என்னோட அழகை வெச்சுத்தானே என்னைத்
தேர்ந்து எடுத்திருக்கீங்க?”
“அதுக்குத்தான் நாம் நிறைய பழகணும்னு சொல்றேன்.”
“நமக்குள்ளே அறிமுகம், பின்னாடி பழக்கம் இது ரெண்டும் தற்செயலா ஏற்பட்ட பெறகு, அதனோட
விளைவா ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சுப் போச்சுன்னா, அது ‘லவ்’!”
“அப்ப? அழகை மட்டுமே வெச்சு உன்னை செலெக்ட் பண்ணியிருக்கேன்னு சொல்றே!”
“ஆமா. அதுல சந்தேகமே இல்லே!”
“நீ மட்டும் என்னவாம்?”
” நான் ஒண்ணும் இல்லேன்னு சொல்லல்லையே! நானும் அதேதான்! பங்கரை மாதிரி பல்லும் பவிஷ¤மா ஒரு
ஆளு வந்து, ‘ஐ ல்வ் யூ’ ன்னு சொன்னா, நான் சரின்னுடுவேனா!”
ராஜாதிராஜன், யோசிப்பவன் போல் சில நொடிகளைக் கடத்திய பிறகு, ” நீ சொல்றது
சரிதான்…ஆனா அதுக்காக நாம பரஸ்பர அன்புலே சந்தேகப்படவோ, குறை காணவோ தேவை இல்லே,”
என்றான்.
“நான் குறை காணல்லே…அழகுன்றது குறைகளைக் காண முடியாதபடி ஆரம்பத்துலே அமுக்கிடுதுங்கிறதுக்காகச்
சொல்ல வந்தேன்.”
“நானும் அதையேதான் வேற வார்த்தைகள்லே சொல்றேன். அதுக்காகத்தான் அடிக்கடி சந்திச்சுப் பேசிப்
பழகணும்னு சொல்றேன்.”
சூர்யா கலகலவென்று சிரித்தாள்.
“அப்பாடி! முதல் தடவையா கலகலன்னு சிரிச்சுட்டே! எங்கே உனக்குச் சிரிக்கவே தெரியாதோன்னு
பயந்துக் கிட்டிருந்தேன்.”
“உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?”
“கேளு.”
“நீங்க சொல்றபடி நாம ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சுப் பேசிப் பழகுறோம்னு வெச்சுப்போம்.
அப்படிப் பழகும் போது. நம்ம சுபாவக் குறைகள்ளாம் தெரியவருதுன்னும் வெச்சுப்போம். அதுக்காக நாம
ஒருத்தரை ஒருத்தர் நிராகரிக்கப் போறோமா? அப்படி ஒரு நோக்கம் உங்களுக்கு இருந்திச்சுன்னா, ஒரு
வாதத்துக்காக நீங்க சொல்றது சரின்னு நான் ஒத்துக்கத் தாயாரா யிருக்கேன்! …ஆனா…என்னமோ
தெரியல்லீங்க…இந்த ஒரு நாள்லெயே என் மனசு உங்ககிட்ட ரொம்ப ஒட்டிடிச்சு..என்ன காரணத்துக்காகவும்
என்னால உங்களை நிராகரிக்க முடியாதுன்னு தோணுது…”
வெட்கத்திலும், முதன் முறையாகத் தன் மனநிலையை வெளிப்படுத்திய சங்கடத்திலும் அவள் குரல் உள்ளே
போய்ப் போய் வந்ததை அவன் பெரிதும் ரசித்துச் சிரித்தான்.
“தேங்க்யூ! தேங்க்யூ! … இப்ப ஒரு கேள்வி கேக்கப் போறேன். அதுக்கு உண்மையான பதிலைச்
சொல்லணும்.”
” …..’ உண்மையான பதிலைச் சொல்லனும்’ அப்படின்னு ஏங்க ஒரு நிபந்தனை மாதிரி சொல்றீங்க?
என்னைப் பார்த்தா பொய் சொல்றவ மாதிரி தெரியுதா?”
“அப்படி இல்லே. கொஞ்ச சேரத்துக்கு முந்தி நீதானே சொன்னே – அழகு, கவர்ச்சி இதுகளாலே –
ஒருத்தர் குறைகளை மத்தவங்க கவனிக்கத் தவறுவாங்க அப்படிங்குற மாதிரி? அப்ப? ஆண், பெண் ரெண்டு
பேருமே தன்னோட குறைகள் எதிராளிக்குத் தெரிய வராம மறைச்சுப்பாங்கன்னு தானே சொல்றே? சரியா?
அப்படியும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கில்லே?”
“நான் அந்த அர்த்தத்துலே சொல்லல்லே.”
“இருக்கலாம். ஆனா, அப்படியும் ஒரு நிலை இருக்கத்தான் செய்யுது.”
“அந்த நிலையோட நம்ம ரெண்டு பேரையும் சம்பந்தப்படுத்திப் பேசாதீங்க! நீங்க அப்படி யெல்லாம்
ஒளிச்சுப் பழகுறவர் இல்லைன்னு நான் நம்பறேன்.”
“எதை வெச்சு நான் ஒளிவு மறைவு இல்லாதவன்குறே?”
“இல்லாட்டி, உங்க அப்பாவைப் பத்தின ரகசியத்தை எங்கிட்ட சொல்லுவீங்களா?”
“அதை வெச்சு நீ என்னைக் கணிக்க முடியாது! என்னைப் பத்தி நான் உங்கிட்ட இது வரைக்கும்
சொல்லல்லையே!”
அவள் திகைத்துப் போய் இமைக்காது அவனைப் பார்த்தாள். பின் சாமாளித்துக்கொண்டு, “அப்படி இருந்தா
நீங்களே சொல்லியிருப்பீங்க. இல்லாட்டி, இனிமே சொல்லுவீங்க. ஆனா, நம்ம உறவு நின்னுபோற
அளவுக்கு அது நிச்சயமா இருக்கவே இருக்காது!” என்றாள்.
“அப்படி ஏதாச்சும் மோசமான விஷயம் இருந்துட்டா? நம்ம உறவை முறிச்சுடுவியா?”
“அப்படி எதுவுமே இருக்காது, இருக்காது, இருக்காது!… சரி, என்னை ஏதோ கேள்வி
கேக்கணும்னீங்களே? உண்மையான பதிலை நான் சொல்லணும்னு வேற சொன்னீங்க! கேளுங்க!”
“கேக்கறேன்….” என்ற ராஜாதிராஜன் சில நொடிகள் மௌனமா யிருந்த பின் தொண்டையைக்
கனைத்துக் கொண்டு சூர்யாவை ஏறிட்டான்.

jothigirija@vsnl.net
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா