வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 5

This entry is part of 36 in the series 20061006_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாபிரச்சினைகளேதுமின்றி விடுமுறை சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. யார்கண்பட்டதோ? அதற்கெல்லாம் முடிவுகட்டுவதுபோல சம்பவமொன்று நடந்தது. ஒரு நாள் காலை அப்பா, ‘இன்றிரவு கான்(Cannes) நகரத்திற்கு போகலாமே’, என்றார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த அந்நகரத்தில் சூதாட்ட விடுதிகளும், இரவு விடுதிகளும் நிறையவே இருந்தன. ஆட்டபாட்டமென்று இரவை உல்லாசமாகக் கொண்டாடமுடியும். எனவே அப்பா தெரிவித்த யோசனையை கேட்டதும், எல்சாவிற்கு அப்படியொரு சந்தோஷம். இன்றைக்கும் அது கண்முன்னே நிற்கிறது. விடுமுறையென்ற பெயரில் தனிமைபடுத்தப்பட்டும், தகிக்கும் வெயிலினாற் ஓருவகையில் சோர்ந்தும், தனது கவர்ச்சிகரமான உடல் சந்தித்த இழப்புகளைச் சூதாட்டவிடுதி நேர்செய்துவிடுமென்று அவள் நினைத்திருக்கவேண்டும். எனவே எனது எதிர்பார்ப்பிற்கு மாறாக, அப்பாவுடைய யோசனைக்குச் சம்மதம் தெரிவித்ததோடு, மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் செய்தாள். ஆக, இரவு கான் நகருக்கு நாங்கள் போவதென்பது உறுதியாகிவிட்டது. மதிய உணவிற்குப் பிறகு, மாலைநேர விசேடங்களுக்கான உடையை அணிவதற்கென்று எனது அறைக்குச் சென்றேன். இது போன்ற கொண்டாட்டங்களுக்கென ஒரேயொரு ஆடைதான் வைத்திருந்தேன். அதைக்கூட கடையில் தேர்வு செய்தது நானில்லை அப்பா; தூரதேசங்களிலிருந்து இறக்குமதிசெய்யபட்ட துணிவகையென்று பார்த்தமாத்திரத்தில் எவரும் அதைச் சொல்லமுடியும், அதிலும் அந்த ஆடையில், தூரதேசத்து சாயல் கொஞ்சம் கூடுதலென்றே சொல்லவேண்டும். அவ்வகை துணிகள் மீதான மோகமோ அல்லது அனுபவமோ, எதுவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் விரும்பியபோதெல்லாம் அவற்றை அணிந்து கவர்ச்சிகரமான பெண்ணாக நான் உலாவரவேண்டுமென எதிர்பார்த்தார். அன்றைக்கு அதனை உடுத்திக்கொண்டு கீழே இறங்கிவர அப்பா, பளிச்சென்று ‘டின்னர் ஜாக்கெட்டில்’ நின்றுகொண்டிருந்தார். எனது கைகளிரண்டும் அவரது கழுத்தை பின்னிகொண்டன.

– ‘இத்தனை கம்பீரமா, ஓர் ஆணை நான் சந்திச்சதில்லை’- நான்

– ‘சிரிலைத் தவிர்த்து அப்படித்தானே?. பதில் தயக்கமின்றி சட்டென்று வெளிப்பட்டது. நீமட்டுமென்ன? குறைச்சலா? இப்படியான ஒரு தேவதையை இதற்குமுன்ன, நானுந்தான் சந்திச்சதில்லை.’ – அப்பா.
– அதாவது எல்சாவிற்கும், ஆன்னுக்கும் பிறகு, அப்படித்தானே? எனது பதிலும் தயக்கமின்றி வெளிப்பட்டது.

-‘அவர்கள் இரண்டுபேரும் அவ்வளவு சீக்கிரம் இறங்கிவருவாங்கண்ணு தோணலை, நம்மை காத்திருக்க வச்சிட்டாங்க. மூட்டுத்தொல்லையால் அவதிப்படுகிற இந்தக் கிழவனோட கொஞ்சம் நடனமாடித்தான் பாரேன்..

இரவுக்கான எங்கள் கொண்டாட்டம் அப்போதே ஆரம்பித்துவிட்டதைப்போல உணர்ந்தேன். வயதான மனிதரென்று, அப்பாவை பார்க்கிறவர்கள் எவரும் சுலபத்தில் சொல்லிவிட வரமுடியாது, இளமை முறுக்கோடு இருந்தார். சேர்ந்து நடனமாடியபொழுது: அவரது பிரத்தியேக வாசனைதைலம், அன்பின் கதகதப்பு, புகைக்கும் சுருட்டு… அத்தனையும் நாசியைத் தொட்டன. சீராக கால்களை எடுத்துவைத்தார். பாதிமூடிய இமைகள். என்னைப்போலவே உதட்டோரத்தில் ஒளிக்கமுடியாமல் ஒருபுன்னகை.

அவருக்குள்ள மூட்டுவலியையெல்லாம் மறந்துவிட்டு,

“எனக்கும் ஒருநாள் நீ ‘பி-பாப்'(1) கற்றுக்கொடுத்தாகணும்”, என்றார்.

நடனத்தை சட்டென்று நிறுத்தினார். முணுமுணுவென்று தன்னைத்தானே புகழ்ந்தபடி எல்சா இறங்கிக் கொண்டிருந்தாள். அப்பா அவளை எதிர்கொண்டு அழைக்க நினைத்திருக்கக்கூடும். பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். முகத்தில் சூதாட்டவிடுதி மனிதர்களிடத்தில் நாம் பார்க்கிற செயற்கை புன்னகை. படிகளில் நிதானமாக இறங்கினாள். உலர்ந்திருந்த தலைமயிர் படிய வாரபட்டிருந்தது. வெயிலில் சுருங்கியிருந்த தேகமும் ஏதோ இழுத்து சரிசெய்யப்பட்டதுபோல இருந்தது. கண்ணைப்பறிக்கிற அலங்காரமில்லை, கண்ணியமானத் தோற்றம்.

“- என்ன புறப்படலாமா?

– ஆன் இன்னும் இறங்கலை, -நான்.

– மேலே போயிட்டு பார்த்துட்டுவா. கான்(Cannes)ன்னுக்குப் போய்ச்சேர, இரவு பன்னிரண்டு ஆயிடும்..”-அப்பா.

விழாக்கால ஆடையுடன் படிக்கட்டில் ஏற கடினமாகவிருந்தது. கதவைத் தட்டினேன். உள்ளேவரச்சொல்லி, ஆன் சத்தமிட்டாள். கதவைத் திறந்துகொண்டு நின்றேன். சாம்பல் வண்ண கவுன், அரிதான சாம்பல்வண்னம், மின்சார ஒளியில் ஆங்காங்கே வெள்ளைவெளேரென்று பிராகாசிக்கிறது, அதிகாலையில் திட்டுதிட்டாய்ப் ஜொலிக்கும் கடல்போல. பக்குவப்பட்ட பெண்ணுக்குரிய அத்தனை வசீகரமும், அவளிடத்தில் அன்றைக்குத் திரண்டிருந்ததைக் கவனித்தேன்.

– “அபாரம்! ‘ஆன்’ இப்படியொரு கவுனா?”

யாரிடமாவது சொல்லிக்கொண்டு புறப்படுகிறபோது நாம் புன்னகைப்போமில்லையா? அன்றைக்கு ஆன்கூட அப்படித்தான் கண்ணாடியைப் பார்த்து புன்னகைத்தாள்.

” – சாம்பல்நிறம் எனக்கு நல்லா அமைஞ்சிருக்கில்ல, நான் பாக்கியசாலி -ஆன்.

– ‘நீங்கள்’ பாக்கியசாலிங்கிறதை யார் மறுக்கக்கூடும்?” நான்

அவள் எனது காதினைப் பிடித்தாள். நேராக என்னைப் பார்த்தாள். அவளது கண்களிரண்டும் கருநீலமாகவிருந்தன. அவை ஒளிர்வதையும், மெல்ல மலர்வதையும் கவனித்தேன்.

” – சிலவேளைகளில் சோர்வுற்றவள்போல இருந்தாலும், நீ நல்லப் பெண்.

நான் உடுத்தியிருந்த கவுனை ஏறெடுத்துப் பார்க்காமலேயே, என்னைக் கடந்து அவள் செல்ல, ஒருவகையில் எனக்குப் பெருமையாகவும் இருந்தது, ஏமாற்றமாகவுமிருந்தது. பெருமை: அடுத்தவர் கண்களை உறுத்துவதுபோல எனது ஆடை இல்லை. ஏமாற்றம்: பிறரைக் கவரும் அளவிற்கு எனது ஆடையில்லை. என்னை முந்திக்கொண்டு இறங்கியவளைப் பார்த்ததும் அப்பா எங்களை நோக்கிவந்தார். படிகளண்டை வந்ததும் நின்றார், காலை முதற்படியில் வைத்தவர் தலையை உயர்த்தி ஆன்னை(Anne)ப் பார்த்தார். எல்சா(Elsa)வும் ஆன்(Anne) இறங்குவதைப் பார்த்தாள். இன்றைக்கும் அக்காட்சி தத்ரூபமாக எனது கண்கள் முன்னே விரிகிறது: காட்சிப்படி, எனக்கு முன்பாக பொன்னிறகழுத்தும், திருத்தமான தோள்களுமாக முதலில் ஆன்(Anne); கொஞ்சம் கீழே – இரண்டாவதாக- முகத்தில் பரவசத்துடனும், நீட்டிய கரத்துடனும் அப்பா. கடைசியாக தூரத்தில் காட்சியின் விளிம்பில் எல்ஸா(Elsa).

” – ஆன்! நீ அசாதாரணப் பெண்மணி “- அப்பா.

பதிலேதுமின்றி புன்னகைத்தபடி அப்பாவைக் கடந்து சென்றாள், குளிர்கால மேலங்கியை கையில் எடுத்துக்கொண்டாள்.

” – அப்போ அங்கே பார்க்கலாம். ‘செசில்'(Cecile) நீ எங்கூட வற?”

கார்த் திறப்பினை என்னிடத்திற் கொடுத்தாள். அன்றிரவு சாலை அத்தனை ரம்மியமாகவிருக்க காரை நிதானமாக ஓட்டினேன். வழி நெடுக ஆன் அமைதியாகவே இருந்தாள். காரிலிருந்த வானொலியில் ட்ரம்பெட் போட்டச் சத்தம்ங்கூட அவளைப் பாதித்தாகத் தோன்றவில்லை. அப்பாவுடைய கன்வெர்டிபிள் கார்(2) எங்களை முந்திக்கொண்டு வேகமாகச் சென்றபோதுங்கூட அவளிதத்தில் எதிர்வினையேதுமில்லை. இவர்களுக்கிடையேயான பந்தயத்திலிருந்து விலகியதுபோலவும், இனி அதில் குறுக்கிட என்னால் இயலாதென்பதையும் அப்போதே புரிந்துகொண்டேன்.

சூதாட்ட விடுதியில், அப்பாவின் வழக்கமான தந்திரத்தினால், வெகுசீக்கிரமாகப் பிரிந்திருந்தோம். நானும் எல்சாவும் பாரில் வந்தமர்ந்தோம். எங்களோடு எல்ஸா(Elsa)வுக்கு அறிமுகமான தென் அமெரிக்க நண்பனொருவன். அவன் அரை மயக்கத்திலிருந்தான். நாடகத் துறையில் இருக்கிறானென்று அறிந்தேன். மது மயக்கத்திலிருந்தபோதும் நாடகத்தைச் சிலாகித்துப் பேசியபடியிருந்தான். சுமார் ஒருமணிநேரமாயினும் அவனோடு சந்தோஷமாக நேரத்தைக் கழிந்திருப்பேன், இடையிடையே எல்சாவின்(Elsa)தொந்தரவுகளோடு. இம்மாதிரியான ஒன்று அல்லது இரண்டு பைத்தியங்களை அவ்வப்போது எல்ஸா தெரிந்துதான் வைத்திருந்தாள். என்ன.. நுணுக்கமான விடயங்களைப் பேசுவதென்றால் ஓடிவிடுவாள். சட்டென்று என் அப்பாவை தேட ஆரம்பித்தாள். என்னைக் கேட்டாள், ஏதோ என்னிடத்தில் சொல்லிவிட்டு அப்பா போயிருப்பதைப்போல. எங்களை விட்டு விலகிச் சென்று தேடினாள். தென் அமெரிக்கன் சட்டென்று சோர்ந்துபோனான். விஸ்கி உள்ளிறங்கியதும் பழைய நிலைக்குத் திரும்பினான். என்னிடத்திலும் வேறு சிந்தனைகளில்லை. அவனது தீர்த்தவைபவத்தில் கலந்துகொண்டவள் என்றவகையில் ஒருவகை மகிழ்ச்சி. அவன் என்னோடு நடனம் ஆடவேண்டுமென தனது விருப்பத்தைத் தெரிவிக்க, நிலமையின் தீவிரம் புரிந்தது. என்னிடமிருந்து தள்ளிபிடித்தபடி, கால்களையும் அவனிடமிருந்து காத்துக்கொண்டு ஆடுவதென்பது சாதாரண விஷயமா? அதற்கு நிறைய தெம்புவேண்டும். நாங்களிருவரும் மகிழ்ச்சியாக இருந்தநேரம், ‘எல்ஸா’ எனது தோளைத் தட்டினாள். திரும்பினால் ஏதோ ‘கசாந்துரு'(3)மாதிரி எதிரே நிற்கிறாள். ‘எங்கேயாவது ஒழிந்து போயேன்’ என்றுகூட சொல்ல நினைத்தேன்.

” – அவரை கண்டுபிடிக்க முடியலை”, என்கிறாள்.

அவளைப் பார்க்க ஏதோ, புத்திபேதலித்தவள் மாதிரி தெரிந்தது. முகத்துக்கிட்டிருந்த மாவு, போனவிடம் தெரியவில்லை. அவளது இயல்பான முகத்துடனிருந்தாள், முகத்திலிருந்த கோடுகளை வகைப்படுத்த முடிந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தாள். அப்பாமீது கோபம் கோபமாக வந்தது. கொஞ்சங்கூட நாகரீகமற்ற மனிதர்.

” – ஆ!.. அவர்கள் எங்கே இருப்பார்களென்று எனக்குத் தெரியும், சிரித்தபடி சொல்லுகிறேன். ஏதோ சாதாரண விடயம்போலவும், கவலைகொள்கிற அளவிற்கு பெரிதாக அதில் ஒன்றுமில்லையென்பதும் எனது சிரிப்பிற்கான பொருள். இதோ வந்துடறேன்.”

நான் புறப்பட்டதும் பிடிப்பின்றி விழ இருந்த தென் அமெரிக்கனை, சட்டென்று எல்சா (Elsa) மார்பில் தாங்கிக்கொண்டாள், அவனுக்கும் அது கொஞ்சம் சௌகரியமாக இருந்திருக்குமென நினைக்கிறேன். எல்சாவினுடைய மார்புகள் பெரியவை, அவற்றை என்னுடையதோடு ஒப்பிட்டுப்பார்க்க, ஒருவகையில் வருத்தமென்றுதான் சொல்லவேண்டும் அதற்காக அவளை வெறுக்க என்னால் முடியுமா என்ன? சூதாட்ட விடுதி பெரியது: இரண்டு முறை சுற்றிவந்தும், பலனில்லை. திறந்தவெளியில் போட்டிருந்த இருக்கைகளையும் அலசிப் பார்த்தாகிவிட்டது, கடைசியில் காரின் ஞாபகம் வந்தது.

கார்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள். அப்பாவையும், ‘ஆன்’னையும் பிடிக்க கணிசமாகவே நேரம் தேவைபட்டது. ஒருவழியாக கண்டுபிடித்தேன். பின்புறம் சென்று கண்ணாடிவழியாகத் தலையைப் தாழ்த்திப்பார்க்க, மிகம் நெருக்கமாகவும், முகம் சுளிக்கும்வகையிலும் இருந்தார்கள். மின்சாரவிளக்குக் கம்பத்தின் கீழிருந்து பார்க்க வித்தியாசமான அழகொன்றினை அங்கே கண்டேன். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர், மெல்ல முணுமுணுப்பதை உறுதிப்படுத்தும் உதடுகளின் உலாத்தல். எனக்குத் திரும்பிபோய்விடலாம்போலிருந்தது. எல்சா(Elsa)வை நினைத்தவளாய், காரின் கதவினைத் திறந்தேன்.

அப்பாவுடைய கை ஆன்(Anne)னுடைய கைமேல் கிடந்தது. அவர்களிருவரும், நான் நிற்பதை கவனித்ததாகத் தெரியவில்லை.

” என்ன.. இரண்டுபேரும் ரொம்ப சந்தோஷத்தில இருக்கிற மாதிரி தெரியுது? அமைதியாகவே கேட்டேன்.

– என்ன வேண்டும்? உனக்கு இங்கென்ன வேலை? அப்பாவின் வார்த்தைகளில் கோபம் தெறித்தது.

– இது நான் கேட்கவேண்டிய கேள்வி. உங்களுக்கு இங்கென்ன வேலை? கடந்த ஒரு மணிநேரமா எல்ஸா உங்களைத் தேடாத இடமில்லை.”

ஆன் விருப்பமில்லாதவள்போல தலையைத் திருப்பினாள்.

” – நாங்க வில்லாவுக்குத் திரும்பணும், எனக்கு உடம்புக்கு முடியலை. அதனால அப்பா வீட்டுக்கு என்னை அழைச்சுபோறதா, அவளிடத்தில சொல்லு. நீங்களிருவரும், போதுங்கிறவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு, என்னுடைய காருல வந்திடுங்க.”

எனக்குநேர்ந்த கடுகடுப்பில், என்ன பேசுவதென்று தெரியாமல் தவிக்கிறேன்.

” – ‘போதுங்கிறவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு!’ என்ன சொல்ற? இப்படிப் பேச எப்படி முடியுது? கேட்கிறதுக்கு அசிங்கமா இருக்கு!

– இதிலென்ன அசிங்கம்? அப்பாவின் கேள்வியில் ஆச்சரியம் தொனித்தது.

– சிவத்த தோலுடைய ஒருத்தியை, வெயிலில் காய்வதென்பது, அவளுடம்பிற்கு ஆகாதென்று அறிந்திருந்தும், கடற்கரைபிரதேசமொன்றுக்கு அழைத்து போவீர்கள், அங்கே அவள் தோலுரிந்து வாடிக்கொண்டிருக்கிற நேரத்தில் அம்போவென்று தவிக்க விடுவீர்கள், சரியா? இதெல்லாம் உங்களுக்கு அற்ப சங்கதி, அப்படித்தானே? சரி இப்போ எல்சாவிற்கு என்ன பதிலை சொல்ல?”

ஆன் எனது தகப்பனாரைப் பார்க்கிறாள். களைத்திருந்தாள். அவர் சிரிக்கிறார். நான் கூறியது எதுவேணும் அவர் காதில் விழுந்திருக்குமா? இல்லையென்று தான் சொல்லவேண்டும். அவர்களது கோபத்தின் விளிம்பை பார்க்க நினைத்தவள்போல,

“- என்ன சொல்லணும்? அப்பா இப்போ இன்னொரு பொம்மனாட்டியை கண்டுபிடிச்சு, அவளோட படுத்துக்கொண்டிருக்கிறார், அந்தப் பொம்மனாட்டியும் கூர்தீட்ட ஒத்தாசைபண்றா¡ண்ணு சொல்ணும் அவ்வளவுதானே?”

அப்பா திகைத்துப்போவதும், ஆன்(Anne) எனது கன்னத்தில் அறைவதும் ஒரே நேரத்தில் நடந்து முடிகிறது. ஏகத்திற்கும் வலிக்கிறது. கார்க் கதவிலிருந்து எனது தலையை இழுத்துக்கொண்டேன்.

” – மன்னிப்பு கேட்டாகணும்”- அப்பா.

கதவருகில் சிறிதுநேரம் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்துடன் நின்றேன். அவசரபட்டுவிட்டோமாவென்று தோன்றியது. நல்ல புத்தி தாமதமாகத்தான் வருமில்லையா?

” – இங்கே வா”- ஆன்

மிரட்டல் தொனி அவள் குரலில்லை, என்பதை உணர்ந்தவளாய், நெருங்கினேன். எனது கன்னத்தை வருடினாள். என்னை மண்டூகமென்று நினைத்தவள்போல நிதானமாகவும், பரிவுடனும் பேசினாள்.

” – அசடு.. அசடு..இப்படியெல்லாம் நடந்துக்கக்கூடாது. எல்ஸாவை நினைச்சா, வருத்தமாகத்தான் இருக்கு அதற்காக என்ன செய்யமுடியும். நிலைமையை எப்படி சமாளிக்கிறதுங்கிறதை, உனக்கு சொல்லிக்கொடுக்கணுமா என்ன?. நாளைக்கு விபரமா பேசலாம். ரொம்பவும் பலமா அடிச்சுட்டேனா?

– ம்.. அதையெல்லாங்கூட உங்களால் நினைச்சுப்பார்க்க முடிகிறதா? அமைதியாகக் கேட்டேன். சற்றுமுன்புவரை என்னிடமிருந்த கோபத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முந்த நினைத்த எனது நல்லதனம் மனதை இளக்க, அழவேண்டும்போலிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்க அவர்களிருவரும் புறப்பட்டுச் போனார்கள், எல்லாவற்றையும் இறக்கிவைத்ததுபோல உணர்வு. இருந்த ஒரே ஆறுதல், பிரச்சினையை கையாளுவதில் எனக்குள்ள சாமர்த்தியம். மீண்டும் சூதாட்டவிடுதிக்கு வருகிறேன். அங்கே எல்சாவை மறுபடியும் கண்டேன். தென் அமெரிக்கன் கைகளில் கட்டுண்டிருந்தாள்

” – ஆன்னுக்கு உடம்புக்கு முடியலை, அப்பா அவசியம் அவளை வீட்டுக்குக் கூட்டிபோக வேண்டியிருந்தது. நாம ஏதாச்சும் குடிக்கலாமா?” அவளிடத்தி மெதுவாய்க் கூறினேன்.

என்னைப் பார்த்தாளே தவிர, பதில் சொல்லவில்லை. நான் சொன்னதை உறுதிப்படுத்துவதற்காக கூடுதலாக சொற்கள் தேவைபட்டன.

” – அவளுக்குக் குமட்டல். அணிந்திருந்த ஆடைமுழுக்க அசிங்கமாயிட்டுது, பார்க்க சகிக்கலை.”

இந்த விளக்கம் நான் சொல்லவந்ததை உண்மையென்று நம்பவைக்கப் போதுமானதாகயிருந்தது. எல்ஸா மெதுவாக ஆனால் பரிதாபமாக விம்மி அழுதாள். எப்படித் தேற்றுவதென்று புரியாமல், குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன்.

” செஸில்.. ஓ செஸில், எத்தனை சந்தோஷமா நாம இருந்தோம்….” – எல்ஸா.

அவளது விம்மலும், அழுகையும் இருமடங்கானது. ‘ஆமாம் நாம எத்தனை சந்தோஷமா இருந்தோம், எத்தனை சந்தோஷமா இருந்தோம்’ எனத் திரும்பத் திரும்ப கூறியபடி தென் அமெரிக்கனும் அழ ஆரம்பித்துவிட்டான். எனக்கு அப்பாமீதும், ஆன்மீதும் ஏராளமாய்க்கோபம். இமைமயிரிலிருந்து மஸ்கார கரைய கரைய எல்ஸா அழுதுக்கொண்டிருக்கிறாள், போதாதற்கு தென் அமெரிக்கன்வேறு, அவன் பங்குக்கு அழுகிறான். இதை நிறுத்த ஏதேனும் செய்தாக வேண்டும்.

” – உங்கிட்ட நான் சொல்றதுக்கு நிறைய இருக்கு, எங்கூட வா.

– இல்லை செஸில். நான் வருவதற்கில்லை நீ புறப்படு. கூடிய சீக்கிரம் என்னோட உடமைகளை எடுக்கணுங்கிறதுக்காக வேண்டுமானால் வில்லாவுக்கு வருவேன், நாம ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டு நல்லபடியாகத்தானே இருந்தோம்.”

எல்ஸாவிடத்தில் பெரும்பாலும் கால நிலவரம், உடை அலங்கார விடயங்களில் புதிதாக என்ன அறிமுகமாகியிருக்கிறது என்பதைத் தவிர வேறு விடயங்களை, நான் பேசியதில்லை, எனினும் அன்றைய தினம் எனது நெடுநாளைய தோழி ஒருத்தியைப் பிரிவதுபோல உணர்ந்தேன். சட்டென்று திரும்பி நடந்தவள், கார்வரை ஓடினேன்.

————————————
1. Be-bop – ஒரு வகை ஜாஸ்(Jazz) நடனம்.
2. Convertible -Car – கோடை நாட்களில் மேலே மூடவும், திறக்கவும் வசதியுடைய கார்
3. Cassandre – கிரேக்க இதிகாசப்படி, ட்ராய்(Troy) மன்னன் பிரியாம்(Priam)முடைய மகள். நடக்கவிருந்ததை – ட்ராய் போர் உட்பட- அவளால் துல்லியமாக சொல்லமுடிந்தபோதும், ஒருவரும் நம்பியதில்லை..

Series Navigation