வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3

This entry is part of 35 in the series 20060922_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வணக்கம் துயரமே!

பிரான்சுவாஸ் சகன்
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

அத்தியாயம் – 3

மறுநாள் காலை, கீழ்வானத்து தகிக்கும் கதிரொளி வெள்ளமெனப் பாய்ந்து அறையை நிரப்ப, நான் படுத்திருந்த கட்டிலும் வெப்பத்திலும், ஒளியிலும் சிக்கித் தத்தளித்தது, விழித்துக்கொண்டேன். இரவு முழுக்க, என்னுடன் மல்லுக்குநின்ற அர்த்தமற்ற அதிசய கனவுகளும் அதனால் முடிவுக்கு வந்தன. தூக்கக் கலக்கத்துடன், முகத்திற் படிந்திருந்த வெக்கையை, கைகொண்டு வழித்தெறியமுயன்று தோற்றேன். காலை மணி பத்து. பைஜாமா உடையில் பால்கணிக்கு இறங்கிவந்தேன். ஆன்(Anne) நாளேட்டின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தாள். முகத்தில் அளவாய் ஒப்பனை. ஆன்(Anne) எல்லோரையும்போல விடுமுறையை விடுமுறையாகக் கழிக்கும் பெண்மணியல்ல என்பதை மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தாள். அவளது கவனம் முழுக்க செய்தித் தாளிலிருக்க, நான் ஒரு கோப்பை காப்பியும், ஆரஞ்சு பழமுமாக, படிகட்டொன்றிலமர்ந்து காலைப்பொழுதின் இனிமையை மெல்ல ருசிக்கத் தொடங்கினேன்: ஆரஞ்சை வாய்கொள்ள கடித்தேன், பீறிட்ட இனிய சாறு, வாயை நிரப்பியது; ஒரு மிடறு காப்பியை சூடானபதத்துடன் விழுங்கினேன், அச் சூட்டினை தணிப்பதுபோல மீண்டும் வாய்கொள்ள ஆரஞ்சுப்பழம். அதிகாலை சூரியனால் எனது தலை கொதித்தது. போர்வை உடலில் ஏற்படுத்தியிருந்த சுவடுகளை வெப்பம் நீவிக்கொண்டிருந்தது. இன்னும் அய்ந்து நிமிடத்திற்குள் குளிப்பதற்கு இறங்கவேண்டுமென்று நினைக்கையில், ஆன்(Anne)னுடைய குரல் திடுக்கிடவைத்தது.

-” செசில்(Cecile), நீ காலையில் சாப்பபிடுவதில்லையா?

– இல்லை, காலைவேளைகளில் பழச்சாறு, காப்பிமாத்திரம் எடுத்துக்கொள்கிறேன்.

– எடையில் மூன்று கிலோவை கூட்டுவது அவசியம். உடம்பு கொஞ்சம் பூசினாபோல இருக்கணும். கன்னத்தில் குழிவிழுந்து, எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க சகிக்கலை. ரொட்டியிருந்தால் கொண்டுவா..வெண்ணெய், ஜாம் தடவி சாப்பிடு”

உணவு விஷயத்தில் வற்புறுத்தவேண்டாமென்று நான் கெஞ்ச, அவளோ, காலைவேளையில் வெறும் வயிற்றோடு இருக்கக்கூடாதென்கிறாள். அச்சமயம், அப்பா தனது ஆடம்பரம்பான புள்ளிபோட்ட டிரெஸ்சிங் கவுனில் அங்கு வந்தார்.

– “அடடா.. இதமான காலை வெயில்; உடல் நிறத்தை போதுமான அளவு குறைத்துக்கொண்டு அழகாய் இரண்டு இளம்பெண்கள்; ரொட்டி, வெண்ணெய் ஜாமென்று பேசிக்கொண்டிருப்பது; உண்மையில் கண்கொள்ளா காட்சி.

– ரெமோன்(Raymond) இங்கே இளம்பெண்ணென்றால் செசில்(Cecil) ஒருத்திதான். எனக்கு உங்கள் வயது.”

அப்பா, குனிந்து அவள் கைகளிரண்டையும் தமது கைகளில் வாங்கிக்கொண்டவர், “கடுகடுவென்றிருப்பதை எப்போது நிறுத்தபோகிறாயோ?, என்றார். பொய்க்கோபமும், கொஞ்சலும் சமவிகிதத்திலிருந்தன. அப்பாவின் எதிர்பாராத வார்த்தைத் தீண்டல்களால், ஆன்(Anne)னுடைய இமைகளிரண்டும் துடிப்பதைக் கவனித்தேன்.

இதுதான் சரியான நெரமென்று தீர்மானித்தவளாய், அங்கிருந்து தப்பித்தேன். மாடிபடிகளில் ஏறியபொழுது, எல்ஸா(Elsa) எதிர்ப்பட்டாள். நித்திரை கலைந்து அப்பொழுதுதான் எழுந்திருந்தாளென்பதுபோல விழிகளில் வீக்கமிருந்தது. அதரங்கள் வெளுத்திருக்க, கடுமையான வெயிலிற் படுத்துப்படுத்து உடலும் மோசமாக கண்றியிருந்தது. கீழே இறங்கவிருந்தவளை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆன்(Anne) முகத்தைக் கவனமாகத் திருத்திக்கொண்டு, அளவான ஒப்பனையுடன் ஆன்(Anne) அங்கே இருப்பதையும், உடலை சேதப்படுத்திக்கொள்ளாமல், சூரிய வெப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்கிற அவளது சாதுரியத்தையும் சொல்லி, எல்சாவை(Elsa) எச்சரிக்கவேண்டுமென்றும் நினைத்தேன். ஆனால், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ? எல்சாவுக்கு இருபத்தொன்பது வயது, ஆன்னைக்(Anne)காட்டிலும் பதின்மூன்று வயது இளையவள், தனதுடலை அக்கறையெடுத்துக் கவனிக்கவேண்டிய அவசியமேதுமில்லையென நினைக்கலாம்.

நீச்சல் உடையை எடுத்துக்கொண்டு, கடலுக்காய் ஓடினேன். சிரில்(Cyril), தனது படகுடன் அங்கிருப்பானென எதிர்பார்க்கவில்லை. என்னைப்பார்த்ததும் இறங்கிவந்தான், முகத்தில் வருத்தம் தெரிந்தது. எனது கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டவன்,

-“நேற்று நான் அப்படி நடந்துகொண்டிருக்கக்கூடாது. என்னை மன்னிக்கணும், .

– அது என்னோட தப்பு,”- என்றேன்.

நடந்ததைச் சுத்தமாய் மறந்திருந்தேன், உண்மையில் எவ்வித வருத்தமுமில்லை. அவனைப்பார்க்க, பரிதாபமாக இருந்தது, ஏதோ அபயம் கேட்டுவந்தவனைபோல.

-“என்னை மன்னித்தேனென்று சொன்னால்தான் நிம்மதி, படகை நீரில் தள்ளிக்கொண்டே பேசினான்.

– நான் எப்பவோ மறந்தாச்சு, விடுங்க வேறெதாச்சுமிருந்தால் சொல்லுங்க.

– என்னால மறக்க முடியலை.”

இதற்குள் படகில் ஏறி இருந்தேன். நீதிமன்றத்து சாட்சிக்கூண்டினைப் பிடித்தபடி நிற்பவன்போல, சிரில்(Cyril) முழங்கால் அளவு தண்ணீரில், படகைப் பிடித்துக்கொண்டு நின்றான். மனதிலிருப்பதை சொல்லிமுடிக்காமல் படகில் ஏறமாட்டானென்று தோன்றியது. எனது முழுக்கவனமும் அவன் மீதிருந்தது. கடந்த சில தினங்களில் அவன் மனதைப் ஓரளவு படித்திருந்தேன். அடுத்தது என்ன நடக்குமென்றும் தெரியும். தனது இருப்பந்தைந்து வயது இளமைக்கு, பிறரைக் கவரக்கூடிய வல்லமையுண்டென்று அவன் நம்பிக்கொண்டிருக்கிறான். கடவுளே! வாய்விட்டுச் சிரித்தேன்.

– “சிரிக்காதே. நேற்று, ஏதோவொரு தீர்மானத்தோடத்தான் நெருங்கினேன்பது, உனக்குத் தெரியும். என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியாது; அது உனது அப்பாவாக இருக்கட்டும், அந்தப் பெண்மணியாக இருக்கட்டும் அல்லது வேறு எவராகக்கூட இருக்கட்டும்… நானொன்றும் மோசமான ஆசாமி இல்லையென்கிறபோதும், நேற்றைக்கு அப்படித்தான் நடந்துகொண்டிருப்பேன்; அதன்பிறகு நீயும் என்னை…”

அவனுடைய பேச்சினை வெற்றுப் பிதற்றல்களாகக் கொள்வதற்கில்லை. நல்லவனென்பதும், என்னைக் காதலிக்க அவன் தயார் நிலையிலிருப்பதும், அவனைக் காதலிக்க எனது மனமும் விழைகிறதென்பதும், நான் புரிந்துகொண்ட உண்மைகள். எனது கரங்கள் அவனது கழுத்தைப் பின்னிக்கொண்டன, அவனது கன்னத்தில் எனது கன்னம், பிறகு அவனது பரந்த தோள்களில், அவனது உரம்வாய்ந்த உடலோடு உடலாக…

– “சிரில்! நீங்கள் மிகவும் நல்லவர், முணுமுணுத்தேன். நீங்கள் எனக்குச் சகோதரனாக பிறந்திருக்கணும்.”

ஆச்சரியம்கலந்த கோபத்துடன் என்னை வளைத்துப் பிடித்தவன், படகிலிருந்து மெல்ல என்னை விடுவித்தான். இறுகத் தழுவினான். நிமிர்த்தினான். எனது சிரத்தினை அவனது தோளில் வாங்கிக்கொண்ட அந்தக் கணத்தில், எனது மனதை அவனிடத்தில் முழுமையாக இழந்திருந்தேன். காலைநேர சூரிய ஒளியில் என்னிலும் பொன்னிறமாக, என்னிலும் மேம்பட்டவனாக, என்னிலும் மென்மையானவனாக இருந்தான். எனது உயிர்க்கு இரட்சகனாகவும் தெரிந்தான். அவனது அதரங்கள் என்னுடையதைத் தேடிவர, அவனது சரீரத்தைப் போலவே எனது சரீரத்திலும் அதிர்வுகள். எங்களிருவரின் முத்தபரிமாற்றங்களில் சஞ்சலமோ, தயக்கமோ இல்லை. அவ்வப்போது நாங்கள் முனகிக்கொண்டபோதும், ஆழ்ந்த பரிசோதனையில் எங்கள் முழுக்கவனமுமிருந்தது. அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். சற்று தொலைவில் மிதந்து கொண்டிருந்த படகை நீந்தி அடைந்தேன். குளிர்ந்த நீரில் முகத்தை அமிழ்த்தினேன், சுகமாகவிருந்தது. பலமுறைத் தொடர்ந்தேன். தண்ணீர் பச்சைவண்ணத்திலிருந்தது. மனதிலிருந்த பாரங்களெல்லாம் நீங்க, அவ்விடத்தை சந்தோஷம் நிரைத்தது.

மணி பதினொன்றரை, சிரில்(Cyril) புறப்பட்டுப் போயிருந்தான். அப்பா, அவரது இருபெண்சிநேகிதிகளை அணைத்தபடியும், அவர்கள் இருவரது கரத்தினையும், தமக்கேயுரிய குணத்தின்படி மாற்றிமாற்றி நாசூக்காய் பிடித்தபடியும் நடந்துவந்தார். ஆன்(Anne) குளிக்கும் அறை துவாலையுடனேயே வெளியில் வந்திருந்தாள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அவிழ்த்தவள், நீட்டிப்படுத்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தது, கச்சிதமான மெல்லிய உடல், அதற்கேற்ப நீண்ட கால்கள். ஆண்டுகள் பலவாக சரீரத்தின் மீது அவளுக்கிருந்த அக்கறையும் கவனிப்பும் உடல் வனப்பில் வெளிப்பட்டது. அதனை அங்கீகரித்தவளாக, எந்திரத்தனமாக, கண்கள் விரிய, பார்வையை, அப்பா பக்கமாகத் திருப்பினேன். நம்பமுடியவில்லை, அவளது அழகில் அக்கறையற்று கண்க¨ளை மூடிக்கொண்டிருந்தார். எல்சாவோ(Elsa)வோ, உடல் முழுக்க எண்ணெய் பூசிக்கொண்டு, சகித்துக்கொள்ளமுடியாதவாறிருந்தாள். இப்படியே இருந்தாளென்றாள், அப்பாவுக்கு ஒருவாரமெல்லாம் ரொம்பவும் அதிகமென்று தோன்றியது. ஆன்(Anne) என்பக்கம் தலையைத் திருப்பினாள்:

– “செசில்(Cecil)! இங்கே எதற்காக சீக்கிரம் எழுந்திடற? பாரீஸில், பகல் பன்னிரண்டு வரை தூங்கறதென்பது உனக்குத்தான் வழக்கமாச்சே?.

– அங்கே வேலைகள் அதிகம், அந்த அசதியிலெ தூங்கிடறேன்.

– அவள் புன்னகைக்கவில்லை. விரும்பினாலொழிய புன்னகைப்பவளல்ல. எல்லோரையும் போல, மரியாதைக்காக பல்லிளிப்பததெல்லாம், அவளிடத்தில் கிடையாது.

-” உன்னோட தேர்வு என்னாச்சு?

– கோட்டை விட்டுட்டேன் – நான். பதில் சட்டென்று வெளிப்பட்டது, எனக்கேதும் அதில் வருத்தமில்லை என்பதுபோல.

– அக்டோபரில் கண்டிப்பாக எழுது

– எதற்காக எழுதணும்? எங்கிட்ட எந்த பட்டமுமில்லை, பட்டயமுமில்லை. எனக்கென்ன சந்தோஷத்திற்கு குறைச்சலா? – என் தகப்பனார் குறுக்கிட்டார்.

– உங்க நிலைமை வேற. வேண்டிய அளவு உங்கக் கிட்ட ஆரம்பத்துலெயே பணமிருந்தது. அதனாலே படிப்பு அவசியமில்லாம இருந்திருக்கலாம்.

– அதனாலென்ன? வாழ்க்கையைக் அனுபவிக்கத் தெரிந்த ஆண்கள் எப்படியும் என் மகளுக்குத் தாராளமாக கிடைப்பார்கள், அப்பாவுடைய பதிலில் ஒருவித கர்வம்.

கலகலவென்று சிரித்த எல்சா(Elsa) எங்கள் மூவரையும் புரிந்துகொண்டு சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

-“இந்தக் கோடை விடுமுறையில், கொஞ்சமேனும் வேலைசெய்து அவள் சம்பாதித்தாகணும், கண்களை மூடியபடி ஆன்(Anne)கூறினாள். அவளது செய்கையில் உரையாடலை முடித்துக்கொள்ளும் எண்ணமிருந்தது.

ஏமாற்றத்துடன் அப்பாவைப் பார்த்தேன். அவர் சங்கடத்துடன் புன்னகைத்தார். மீண்டும் பெர்க்சனை(1) கையில் சுமந்துகொண்டு வாசிப்பதுபோலவும், சிரில்(Cyril) என்னை கேலிசெய்வதுபோலவும், கற்பனைசெய்துபார்க்கக் கொடுமையாக இருந்தது. மணலில் மெல்ல நகர்ந்து ஆன்(Anne) அருகிற் சென்றேன். குரலைத் தாழ்த்தி அழைத்தேன். அவள் கண் திறந்து பார்த்தாள். முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டேன், படித்துப் படித்து அலுத்துப்போன புத்திசாலியாக என்னைக்காண்பித்துக்கொண்டு, கெஞ்சுகிறேன்.

-” ஆன்! வேண்டாம் மறுபடியும் புத்தகங்களை கையிலெடுக்கிற தண்டனையெல்லாம் வேண்டாம், காயற வெய்யிலில் இது வேறயா…இந்த விடுமுறை நிறைய எனக்கு நல்லது பண்ணும்னு நம்பிக்கொண்டிருக்கிறேன், அதைக் கெடுத்திடாதே…”

வைத்தவிழி வாங்காமல் என்னையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவளின் இதழோரத்தில் மர்மமாய் ஒருவிதப்புன்னகை, பிறகு ஏதோ நினைத்தவள்போல தலையைத் திருப்பிக்கொள்கிறாள்.

– ” உன்னை விடப்போவதில்லை, நீ சொல்ற மாதிரி கொதிக்கும் கோடையென்றாலும், ‘அதை’க் கட்டாயம் செய்தாகணும். இரண்டு நாளைக்குமேலெ நானுனக்கு வேண்டியதில்லை, உன்னைப் புரிந்துவைத்திருக்கிறேன். எனவே அதற்குப் பிறகு தேர்வு முக்கியம்.

– ” சிலவிஷயங்களை பழக்கப்படுத்திக்கொள்ளகூடாது”, சிரித்துக்கொண்டே கூறினேன்.

அவளது எடுத்தெறிந்த பார்வையில் கேலியும், அலட்சியமும். நான் மீண்டும் மணலில் படுத்துக்கொண்டேன், மனம் கலவரப்பட்டிருந்தது. எல்சா(Elsa), அப்பகுதி கடற்கரைப் கொண்டாட்டங்களைக் குறித்து தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தாள், அப்பாவின் கவனம் அவளிடத்திலில்லை ஆன்(Anne)வசமிருந்தது. மூன்றுபேரும் அருகருகே படுத்து உருவாக்கியிருந்த முக்கோண சேர்மானத்தில், அப்பாவின் தலை மேலேயிருக்க, ஆன்(Anne) தலைகீழாகத் தெரிந்திருக்கவேண்டும். அவளது தோளுக்கு நேராக பார்வையைக் கொண்டுவந்தவர், ஒரு சிலவிநாடிகள் கண்சிமிட்டாமல் விறைத்துப் பார்ப்பதை நான் புரிந்துகொண்டேன். மணலிற் கிடந்த அவரது கை சீராக, மெல்லத் தொடர்ந்து திறப்பதும் மூடிக்கொள்வதுமாக இருக்கிறது. கடலுக்காய் ஓடினேன். எஞ்சியிருக்கும் விடுமுறைநாட்கள் மீதான நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை வெதும்பல்களுடன் நீரில் பாய்ந்தேன். ஒரு துன்பவியல் காட்சியை அரங்கேற்றப் போதுமானவை எங்களிடத்திலே இருந்தன: பெண்களைச் சுலபமாய் வசீகரிக்கவென்று ஒரு நாயகன், ஒரளவு மேட்டிமைத்தனத்தோடு ஒரு பெண்மணி, விஷயஞானத்தோடு இன்னொருத்தி. நீரின் ஆழத்தில் அழகாய் ஒரு கிளிஞ்சல், அடுத்து நீலமும் இளஞ்சிவப்புமாக ஒரு கல். அதை எடுப்பதற்காக மூழ்கினேன், மதிய உணவுவரை கையிலேயே பத்திரபடுத்திவைத்திருந்தில்,தேய்ந்து மிருதுவானது. கைவசம் இருக்கும்வரை நல்லதே நடக்குமென்று மனம் உறுதியாய் நம்பியதால், கோடைமுழுக்க அதைபிரியப்போவதில்லை. அது கையைவிட்டுப்போனால், எனக்குண்டானதனைத்தையும் இழந்துவிடுவேனென நினைத்ததாலோ என்னவோ, மிகவும் பத்திரமாக வைத்திருந்தேன். இன்றைக்குங்கூட இளஞ்சிவப்பு நிறத்தில், வெதுவெதுப்புடன் எனது கையிலிருப்பது அந்தக் ‘கல்’தான். ‘கல்’கொடுக்கும் தைரியத்தில், தேம்பி அழவேண்டுமென்கிற ஆசை மனதில் நிறையவே உண்டு.

————————————————————————————————————–
1. Henri Bergson(1859-1941)பிரெஞ்சு தத்துவஞானி, 1927ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்றவர்.

Series Navigation