எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)
சி. ஜெயபாரதன், கனடா
“எனக்குத் தொழில் விடுதலையாக வாழ்ந்து வருவது.”
“நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]
“நீ தெரிந்த கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும் போது, நீ உணர்ந்து கொள்ள வேண்டிவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்!”
கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]
விதியே! அறிவோம் நினது கேளிக்களை!
ஒருநாள் மடிவோம் என்று அறிவோம்!
நேரம் வரும் தருணம் ஒன்றை அறியோம்!
நீடிக்கும் ஆயுளை யாம் மிதித்து முறிப்போம்! … [புரூட்டஸ்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ஆண்டனி குழப்ப மடைந்து வீட்டுக்கு ஓடினார்!
மானிடரே! மாதரே! சிறுவரே! நீவீரும் ஓடுவீர்!
வானை நோக்கிக் கதறுவீர், அழுவீர், அலறுவீர்,
வையக மின்று அழியப் போகுதென! .. [செனட்டர்: டிரிபோனஸ்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மண்டியிட வைத்தார் என்னை என் பிரபு புரூட்டஸ்!
மண்ணில் விழ வைத்தார் என்னை மார்க் ஆண்டனி!
நேர்மையாளி, பண்பாளி, அறிவாளி, தீரர் எனக்கூற
ஆணை யிட்டவர் புரூட்டஸ், நான் பணிபவன் ஆதலால்!
வல்லவர், வாஞ்சை உள்ளவர், அஞ்சாதவர் சீஸர்
மாட்சிமை மிக்க அரச கம்பீரம் கொண்டவர், சீஸர்!
புரூட்டஸை நேசிப்பவன் நான்! மதிப்பவன் நான்!
ஆனால் சீஸர் ஒருவருக்கு அஞ்சுகிறேன்! …. [புரூட்டஸின் வேலையாள்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
எகிப்தில் மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].
அங்கம்:3 காட்சி:3
நேரம், இடம்: பகல் நேரம், ரோமாபுரியின் செனட் மாளிகை.
நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், ஆண்டனி, காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன், கல்பூர்ணியா.
காட்சி அமைப்பு: ரோம் செனட் மாளிகைப் படிகளில் செனட்டர்கள், புரூட்டஸ், காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன் ஆகியோர் நின்று உரையாடிக் கொண்டிருக்கிறார். காஸியஸ், காஸ்கா இருவரும் ஆங்காரத்துடன் காணப்படுகிறார். சீஸரை அறவே வெறுக்கும் காஸியஸ், காஸ்கா ஆகியோர் வாக்குவாதத்தில், சீஸரின் நெருங்கிய ஆதரவாளிகளை, எதிர்ப்பாளிகளாய் மாற்ற முனைகிறார்கள். சற்று தொலைவில் ஆண்டனியும், கல்பூர்ணியாவும் செனட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
காஸியஸ்: [கோபத்துடன் நடந்து கொண்டு] பண்புமிகு புரூட்டஸ்! ரோமிதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது! கேட்டீரா சீஸருக்கு ஆண்மகவு பிறந்துள்ளதாம்! எகிப்தை ஆளப் போகும் எதிர்கால ஆண்வாரிசு! ரோமானியரை ஆளப் போகும் அடிமை ராணியின் அற்புத மகன்! ஆண்பிள்ளைக்கு வெகுநாட்களாய் ஆசைபட்டார் சீஸர்! கல்பூர்ணியா பெற்றத் தர முடியவில்லை! ரோமானியப் பெண் பெற்றுத் தர முடியாத பிள்ளைச் செல்வத்தை, எகிப்த் ஆசைக் காதலி பெற்றுத் தந்தாள்! அடிமை நாட்டு எழிரசி பெற்றுத் தந்திருக்கிறாள்! புரூட்டஸ்! உங்களைத் தன் மகனாகப் பாவித்தார் சீஸர்! அந்த மதிப்பு உங்களை விட்டு நீங்கப் போகிறது! அந்த அடிமையின் பிள்ளை உங்களுக்கு ஈடாகுமா?
புரூட்டஸ்: [மனம் கலங்காமல்] ஆத்திரப் படாதே, காஸியஸ்! பிறந்து பல் முளைக்காத பிள்ளைக்கு யாராவது அஞ்சுவாரா? சீஸருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி எனக்குப் பூரிப்பை அளிக்கிறது! சீஸர் என்னைத் தன் மகன் என்று மதிப்பது என்றும் மாறப் போவதில்லை! சீஸரின் மூத்த மகன் நான்! கிளியோபாத்ராவின் மகனை என் செல்லத் தம்பியாகக் கருதுகிறேன்!
காஸ்கா: [ஆங்காரமாக, துச்சமாக] கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவள் பெற்ற பிள்ளைக்கு நீ எப்படித் தமையன் ஆவாய்! அவன் பாதி எகிப்தியன்!
புரூட்டஸ்: [வெகுண்டு] அவன் பாதி ரோமானியன் என்பதை மறக்காதே, காஸ்கா! கிளியோபாத்ரா சீஸரின் மனைவி! எகிப்த் ராணியைப் பரத்தை என்று எள்ளி நகையாடுவது, ரோமானியத் தளபதிச் சீஸரைப் பழிப்பதாகும்! அப்படிச் சொன்ன அந்த நாக்கை அறுப்பது சட்டப்படிக் குற்ற மாகாது! உன் நாக்கைக் கட்டுப்படுத்து! காஸ்கா! நீ எப்படிப் பட்டவன் என்பதை மறந்து விட்டாயா? சூதாடி! கொலைகாரன்! களவாடி! புளுகன்! போதுமா, இன்னும் நான் அடுக்கவா?
காஸியஸ்: காஸ்கா! நீ கவனத்துடன் பேச வேண்டும்! கிளியோபாத்ராவை எகிப்தின் ராணியாக ஆக்கியவர் சீஸர்! சீஸரை எகிப்தின் மன்னராய் ஆக்கியவள் கிளியோபாத்ரா! அவளை நீ தாழ்வாகப் பேசலாமா? புரூட்டஸ் சொன்னதில் பொருள் உள்ளது!
சிசெரோ: [குறுக்கிட்டு] எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா! ரோமின் குடியரசை ஒழிக்க சீஸர் முடிவெடுத்து விட்டார்! அறிந்து கொள்வீர்!
காஸியஸ்: ஆமாம், புரூட்டஸ்! சீஸரின் பேராசைக்கோர் அளவில்லை! எல்லை யில்லை! அரணில்லை! அதை முளையிலே களை எடுப்பது செனட்டரின் கடமை! அதைத் தடுத்து நிறுத்துவது நமது பணி! சீஸர் மன்னரானால், செனட்டர்களை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விடுவார்! செனட்டரின் சொற்கள் அவரது செவியில் ஏறா!
புரூட்டஸ்: [கேலியாக] அதென்ன நமது கடமை என்று சொல்கிறீர்! உங்கள் சதிக் கூட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்! அதோ வருகிறார், ரோமானிய ஆட்சித் தளபதி, ஆண்டனி! அவர் காதில் உமது சங்கொலி முதலில் ஒலிக்கட்டும்!
[ஆண்டனி சீஸர் பெயரைக் கேட்டதும் செனட்டர் அருகே வருகிறார். கூடவே கல்பூர்ணியாவும் வருகிறாள்]
காஸ்கா: [கேலியாக] ஆண்டனி! நினைவில் வைத்துக்கொள்! உனது பொற்காலம் கற்காலமாகப் போகுது! சீஸர் வரப் போவதாய்க் கேள்விப் பட்டோம்! சீக்கிரம் நீ ரோமாபுரித் தலைமை பதவியைத் துறக்க வேண்டி திருக்கும்! சீஸர் வருகிறார்! எப்போதென்று தெரியுமா? எகிப்தின் கடவுள் வரப் போகிறார்! வரவேற்பு பலமாய் இருக்கட்டும்!
கல்பூர்ணியா: [மிக்க மகிழ்ச்சியுடன்] என் பதி வரப் போகிறாரா? எப்போது வருகிறார்? காஸ்கா! அவரை ஏன் எகிப்தின் கடவுள் என்று ஏளனமாகச் சொல்கிறாய்?
காஸ்கா: கல்பூர்ணியா! சீஸர் வரப் போகிறார். எப்போதென்று என்னைக் கேட்காதே! கிளியோபாத்ராவைக் கேட்டால் தெரியும்! அந்த நாள் சீஸருக்கே தெரியுமா என்பது என் சந்தேகம்! கிளியோபாத்ரா ஐஸிஸ் தெய்வத்தின் அவதாரமாம்! அவளைத் திருமணம் செய்த சீஸரை எகிப்தியர் தேவனாகக் கொண்டாடுவதில் தவறில்லை! மேலும் ·பாரோ பரம்பரையில் வந்தவள் கிளியோபாத்ரா! அவளை மனைவியாக ஏற்றுக் கொண்ட சீஸருக்கு, ·பாரோ சந்ததியைப் பெற்றவர் என்று வரலாறு பாராட்டும்!
கல்பூர்ணியா: என் பதி முழுக்க முழுக்க ஒரு ரோமானியர்! எத்தனை மத்திய ஆசியப் பெண்களை அவர் மணந்தாலும், அவரது முகவரி மாறாது! அவரை எகிப்தியக் கடவுள் என்று ஏளனம் செய்யாதே!
காஸியஸ்: கல்பூர்ணியா! சீஸர் ரோமாபுரிக்கு மீளாத வேளையில், ரோமானியரும் அவரைக் கடவுளாக மதிக்கிறார் தெரியுமா? பிற்கால வரலாறு சீஸர் கிளியோபாத்ராவின் பதி என்று சொல்லுமே தவிர, கல்பூர்ணியாவின் பதி என்று சொல்லப் போவதில்லை!
ஆண்டனி: காஸியஸ்! உன்னைப் போல் ஒருவனும் சொல்லப் போவதில்லை! சீஸரின் முதல் மனைவி கல்பூர்ணியா வென்பதை வரலாறு மாற்ற முடியாது! சீஸரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் நான்! அவர் வெற்றியைப் பங்கீட்டு ஆளுபவன் நான்! எங்கிருந்தாலும் அவர்தான் ரோமானிய சாம்ராஜியத்தின் அதிபதி!
சிசெரோ: ஆனால் அவர் ரோமாபுரியின் ஏதேட்சை அதிகாரி என்பது உனக்குத் தெரியாதா? ரோமானிய சாம்ராஜியத்தின் வேந்தர் அவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் குடியரசை சிதைக்கப் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் மன்னராக சீஸர் முடிசூடப் போவது உனக்குத் தெரியாதா?
ஆண்டனி: தெரியாது! ரோமாபுரியின் மன்னராகப் பதவி ஏற்கச் சீஸர் எப்போதும் விரும்பிய தில்லை! நான் சொல்கிறேன், கேட்பீர்! ரோமின் குடியரைச் சீஸர் ஒருபோதும் முறிக்கப் போவதில்லை! மாற்றப் போவதில்லை! செனட்டர்களை எப்போதும் வரவேற்பவர் சீஸர்!
சிசெரோ: ஆண்டனி! நீ சீஸரை மிகவும் நேசிப்பதால், உன் கண்ணுக்கு அவரது சூழ்ச்சிகள் புரிவதில்லை! அவரது தவறுகள் தெரிவதில்லை! வெளிநின்று நோக்கும் எங்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது!
அக்டேவியன்: நான் ஒன்று கேட்கிறேன், கல்பூர்ணியா! கிளியோபாத்ராவுக்குப் பிறந்த சீஸரின் மகனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
கல்பூர்ணியா: ஆண்மகவைப் பற்றி எனக்குப் பூரண திருப்தியே! என் பதியின் ஆண்பிள்ளை அது! என் பதியின் அன்புக் குழந்தை அது! என் பதி ஏற்றுக் கொண்ட ஆண்மகவு யாருக்குப் பிறந்திருந்தால் என்ன! அந்த பிள்ளை எனக்கும் சொந்தப் பிள்ளைதான்! சீஸரின் பெயரைச் சொல்லப் பிறந்த ஆண்பிள்ளை அது! என் பதியின் காதலி என் மதிப்புக்கும், வரவேற்பிற்கும் உரியவள்! சீஸரின் வாரிசு அந்த சிறுவன் என்பது நன்றாகத் தெரியும் எனக்கு. அந்தச் சின்னஞ் சிறு குழந்தை மீது உங்களுக்கு ஏன் வெறுப்பென்று தெரியவில்லை எனக்கு!
அக்டேவியன்: எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது, சீஸரின் வாரிசை ஒழிக்க நான் முனைவேன் என்பதை அறிந்துகொள், கல்பூர்ணியா? யானைகொரு காலம்! பூனைக்கொரு காலம்! பூனை ஆட்சிக்கு வரும்போது அந்த எலியைப் பிடித்து விழுங்கி விடும் என்று அறிந்துகொள் கல்பூர்ணியா! அது ஒரு விஷப் பாம்பு! பாலைவன நச்சுப் பாம்பு! கிளியோபாத்ராவே ஒரு நாகப் பாம்பு! அவள் வயிற்றில் பாம்பு பிறக்காமல் பிறகு வேறென்ன பிறக்கும்? ஒருநாள் என் வாளுக்கிரையாகும் அந்த நாகம்! அந்த நாகத்தின் குட்டியை நான் விட்டு வைக்கப் போவதில்லை.
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan September 18, 2006]
- என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)
- இரவில் கனவில் வானவில் – 2
- கர்வம்
- இந்தக் கடிதம் கிடைத்த…..
- உலகு புகத் திறந்த வாயில்
- கொசப்பாடியும் சமுதாய நல்லிணக்கமும்
- 25 வது பெண்கள் சந்திப்பு
- கவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை
- அன்னை காளி துதி பாடல்கள்
- கீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை!
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)
- வெளிச்சம் தேடும் இரவு
- எனது இருப்பு
- மடியில் நெருப்பு – 4
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3
- ஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்
- கடித இலக்கியம் – 23
- முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
- பெரியார் – உலகை நோக்கியப் பயணம்.
- ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8
- சோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்
- இறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை
- சிறப்புச் செய்திகள்-1
- இராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1
- மத விவாதம் – ஒரு கோரிக்கை
- ”Human rights in Sri Lankan Tamil Literature” – London on Sept 23rd-24th 2006
- முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!
- அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை