மடியில் நெருப்பு – 3

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அனந்தநாயக்கு மூச்சு வாங்கியது. தலை வேறு சுற்றியது. பித்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொத்துமல்லிக் கஷாயம் வைத்துக் குடித்தாள். இரண்டு தடவைகள் குடித்தும் முன்னேற்றம் இல்லை. மாறாக அவளது நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. உடனே மகளை யழைத்துத் தன்னை டாக்டரிடம் கூட்டிப்போகச் செய்யவேண்டும் என்று அவளக்குத் தோன்றிவிட்டது. இளைய
மகள் சுகன்யா கல்லூரியிலிருந்து திரும்பி யிருக்கவில்லை. பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் அவள் கணவர் பார்த்தசாரதியால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அவளேதான் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்கிற திகைப்போடு அவள் வாசல் பக்கம் பார்த்த போது, எதிர்வீட்டுத் தம்பி தன் சைக்கிளுக்குக் காற்று அடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்து வாசலுக்குப் போய் அவனைக் கூப்பிட்டாள்.
“என்னங்கம்மா?” என்றவாறு அவன் வந்து நின்றான்.
“கொஞ்ச நேரமா எனக்கு ரொம்பவும் தலை சுத்தலா யிருக்கு, தம்பி. சுகன்யா இன்னும் காலேஜ்லேருந்து வரல்லே. அதனால, சூர்யாவை ·போன்ல கூப்பிட்டு அவளை பெர்மிஷன் போட்டுட்டு உடனே வரச் சொல்லணும்..”
“·போன் நம்பர் சொல்லுங்க.”
அவள் சொல்ல, அவன் தன் சட்டைப் பையில் இருந்த சிறிய நாள்குறிப்பேட்டில் அதைக் குறித்துக்கொண்டான். உடனே அருகில் இருந்த கடைக்குப் போனான்.
போய்ப் பத்தே நிமிடங்களில் திரும்பி வந்தான்.
“என்னப்பா சொல்லிச்சு சூர்யா? வருதாமா?”
“அக்கா இல்லேம்மா. ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்தித்தான், உங்களுக்கு உடம்பு சரி யில்லைன்னு சொல்லிட்டுப் பெர்மிஷன் போட்டுட்டுக் கெளம்பிப் போச்சாம்…அநேகமாக் கொஞ்ச நேரத்துல வந்துடும்…” என்ற மாரியப்பனை அவள் யோசனையுடன் பார்த்தாள்.
“காலையிலேயே உங்களுக்கு மேலுக்குச் சொகமில்லையாம்மா? அக்கா பெர்மிஷன் போட்டிருக்குதே?”
கணம் போல் திகைத்த பின், அனந்தநாயகி, “ஆமாம்ப்பா. அதான் இப்ப எப்படி இருக்கோ ஏதோங்கிற கவலையில பெர்மிஷன் போட்டிருக்குது,.” என்று சமாளித்தாள்.
மாரியப்பனுக்கு நன்றி கூறி அவனை அனுப்பிவைத்த பின் அவள் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தாள். காரணம் இன்றி அவளுள் ஒரு கலக்கம் தோன்றியது. அவள் காலை நீட்டிப் படுத்தாள். என்ன முயன்றும் கவலைப் படாதிருக்க முடியவில்லை. கண்கொள்ளா அழகும் கண்ணைப் பறிக்கிற தங்க நிறமும், ஒளி உமிழும் கண்களும், செழுமையான உடல்வளமும் கொண்ட சூர்யா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்தே அவள் வயிறு நெருப்பாய்த்தான் கனன்று கொண்டிருந்தது.
‘சூர்யா பெர்மிஷன் போட்டுட்டு எங்கே போயிருப்பா? எவளாச்சும் சிநேகிதப் பொண்ணோட போயிருப்பாளோ? ஏன்? அது சிநேகிதப் பையனாக் கூட இருக்கலாம். யாரு கண்டா? இந்தக் காலத்துப் பொண்ணுங்களை நம்புறதுக்கே இல்லே! சூர்யா அடக்கமான பொண்ணுதான். ஆனாலும் வயசுன்னு ஒண்ணு இருக்கே! வயசு வந்துட்டா, ஆம்பளைப் பிள்ளைங்களுக்கும் சரி, பொம்பளைப் பிள்ளைங்களுக்கும் சரி தப்புப் பண்ற புத்திதானே வரும்? நானே கூட சின்ன வயசிலே முன்னே பின்னே இருந்தவதானே? சத்தம் போட்டுச் சிரிச்சா பாட்டி நறுக்னு குட்டும்! அதனால வீட்டுக்குள்ள சத்தம் போடாம சிரிச்சுட்டு, வெளியே என் சினேகிதப் பொண்ணுங்களோட – பாட்டியோட பாஷையிலே, அடக்கமே இல்லாம – சத்தம் போட்டுச் சிரிச்சுக்கிட்டு இருந்தவதானே நானும்!’….
அனந்தநாயகிக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. வயசுக் கோளறு என்பது எல்லாருக்கும் பொதுவானதுதான். ஆனால், ஒரு தாய் என்னும் முறையில் மகள்களைப் பற்றிய கவலை வந்து விடுகறது. அதிலும் மிதமிஞ்சிய அழகுள்ள பெண்ணைப் பற்றி ஒரு தாயால் எவ்வாறு கவலைப்படாமல் இருக்க முடியும் என்று அவள் தன்னைத் தானே வினவிக்கொண்டு பெருமூச்செறிந்தாள்.
எது எப்படியானாலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவளது திருமணம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. கல்யாணத்துக்குப் பணம் சேமித்தாக வேண்டுமே! குடும்பம் இருக்கிற இருப்பில் சூர்யா பாட்டுக்குக் காதல் ஊதல் என்று உளறிக்கொண்டு வந்து நின்றால் குடும்பமே நாறிப் போகும். ஒரு மகளைப் பார்த்து, ‘இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு உனக்குத் திருமணம் கிடையாது’ என்று ஒரு தாய் சொல்லுவது அநாகரிகம்தான்! ஆனாலும், எல்லா நாகரிகங்களையும் துரத்தி யடிக்கிற வலிமை இந்த வயிற்றுக்கு இருக்கிறதே!… அனந்தநாயகி பெருமூச்சுவிட்டபடி வாசல் பக்கம் பார்வையைப் பதித்தாள்
… அவன் வாய்விட்டுச் சிரித்தபடியே காரைக் கிளப்பினான். பிறகு குறும்பு கொப்பளித்த குரலில் கேட்டான்: “ஏன்? முன் சீட்டிலே எனக்குப் பக்கத்துல உக்காந்தா என்னவாம்? கடிச்சா தின்னுடுவேன்? அதிலேயும் இந்த மவுண்ட் ரோட்லே! உம்? நான் சுத்த சைவம்னு காலையில்தானே சொன்னேன்?”
சூர்யா வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். ஒரே விநாடிக்குப் பிறகு தலையை உயர்த்திக் கண்ணாடி வழியே அவனைப் பார்த்து, “அது சரி, உங்க பேரை நீங்க சொல்லவே இல்லையே? எங்கே வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.
“நீங்க எங்கே கேட்டீங்க என் பேரை?”
“நான் ஒரே குழப்பத்துலே இருந்தேன்.”
அவன் புரிந்துகொண்டே, “அப்படியா? அப்படி என்ன குழப்பமாம்?” என்றான். பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்பது போல் அவள் மவுனமாக இருந்தாள். இறுகிய உதடுகளும் அரைப் புன்சிரிப்புமாக அவள் அமர்ந்திருந்த தோரணையிலிருந்து அவனுக்கும் அது புரிந்தது.
அவன் வாய்விட்டுச் சிரித்து, ” என் பேரு, ராஜாதிராஜன்,” என்று கூறிப் பின்புறம் தலையைத் திருப்பி அவளைப் பார்த்துவிட்டுத் தெருவில் கவனத்தைப் பதித்தான்.
“என்ன! ராஜாதிராஜனா! இதென்ன புதுப் பேரா இருக்கு! நான் கேள்விப்பட்டதே இல்லே!”
“ஏன்? பேரு பொருத்தமா யில்லையா? அதைச் சொல்லுங்க!” – அவன் குரலில் ஒலித்த செருக்கு அவள் கவனத்துக்குத் தப்பவில்லை.
‘நியாயமான கர்வம்தானே?’ என்றெண்ணி அவனது செருக்கை மன்னித்துவிட்ட அவள், “பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா, சும்மாவானும் ஒரு பொய்ப் பெயரைச் சொல்லி என்னைச் சீண்டுறீங்களோன்னும் தோணுது…” என்றாள்.
அவன் உடனே இயக்கு கருவி (steering) யிலிருந்து ஒரு கையை மட்டும் அகற்றிக்கொண்டு அதனால் தன் சட்டைப் பையிலிருந்து தனது முகவரி அட்டையை எடுத்துப் பின்புறமாக நீட்டினான். அவள் கை நீட்டி அதைப் பெற்றுக்கொண்டாள். அப்போது அவன் விரல்கள் தேவைக்கு மேல் நீண்டு அவள் விரல்களைத் தீண்டியதைத் தற்செயலாக அவளால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. எனினும் ஒரு தடுமாற்றம் மட்டும் ஏற்படாமல் இல்லை. அவள் விரல்கள் சற்றே ஆடிவிட்டன. அதை அவன் கவனித்துவிட்டது அவனது குறும்புப் பார்வையிலிருந்து புரிய, அவளது தடுமாற்றம் மேலும் அதிகரித்தது.
அந்த முகவரி அட்டையைப் பார்த்து அவள் அதிர்ந்து போனாள். ‘ராஜாதிராஜன், ஜே.., பங்குதாரர், பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அது அச்சாகி யிருந்தது. அவள் விழிகள் அவளையும் அறியாது விரிந்துகொண்டன.
“இதை நானே வெச்சுக்கட்டுமா?”
‘இல்லே. குடுத்துடுங்க. புதுசு ப்ரின்ட் ஆகி வந்ததும் தறேன்…” என்ற அவன் இடக்கையை நீட்டினான். அவள் அதைத் திருப்பிக் கொடுத்தபோதும் அவன் விரல்கள் அவளுடையவற்றோடு அளவுக்கு மேல் உரசின.
“அப்படின்னா, கம்பெனி முதலாளி மிஸ்டர் ஜகந்நாதனுக்கு… நீங்க…” என்று அவள் முடிக்காமல் விட்டதை, “அவரு என்னோட அப்பா!” என்று அவன் முடித்துவிட்டுச் சிரித்தான்.
‘அடியம்மா! எப்பேர்ப்பட்ட தொழிலதிபர் அவர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! அவருடைய மகனா இவர்! … இவ்வளவு பெரிய அதிருஷ்டமா என்னைத் தேடி வந்திருக்கு?’
“என்ன யோசிக்கிறீங்க?”
அவள் பதில் சொல்லவில்லை. அவளது பிரமிப்பைப் புரிந்துகொண்ட அவன், “நம்பிக்கை வர மாட்டேங்குதா? இவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ! இவனை நம்பிக் கார்ல ஏறி இருக்கமே அப்படின்னு பயப்பட்றீங்களா? என் மேல நம்பிக்கை இல்லேன்னா இப்ப கூட நீங்க இறங்கிக்கலாம். உள்ளது உள்ளபடி சொல்லிடுங்க. பளிச்னு பேசுறவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும்!” என்றான்.
காரின் விரைவையும் அவன் உடனே மிகவும் குறைத்தான். அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. “அய்யய்யோ! அப்படி யெல்லாம் இல்லீங்க. இம்புட்டுப் பெரிய அதிருஷ்டமா நம்மைத் தேடி வந்த்டிருக்குன்ற பிரமிப்புலே நான் வாயடைச்சுப் போயிட்டேன்! இது கனவா, நெனவாங்குற சந்தேகம் வந்துக்கிட்டே இருக்குது!”
அவன் அடுத்த கணமே காரின் விரைவை அதிகப்படுத்தினான். அந்த விரைவில் ஓர் உற்சாகம் பீரிட்டதாய் அவளுக்குத் தோன்றியது.
காரை அவன் ஓட்டல் சோளாவுக்கு எதிரே நிறுத்த, இருவரும் இறங்கினார்கள். அவன் உரிமையுடன் அவளை உரசியவாறு அவளை ஓட்டலுக்குள் இட்டுச் சென்றான். அவள் பெருமையுடன் தன் பார்வையைச் சுழலவிட்ட போது, பலருடைய பார்வைகளும் தங்கள் மீது படிந்திருந்ததைக் கண்டாள். ‘சரியான ஜோடிதான்!’ எனும் கணிப்பு அவர்கள் பார்வைகளில் தென்பட்டது உள்ளுணர்வாய் அவளுக்குப் புரிய, அவளது பெருமை இன்னும் அதிகமாயிற்று!

– தொடரும்
jothigirija@vsn.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா