எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)

This entry is part of 29 in the series 20060915_Issue

சி. ஜெயபாரதன், கனடா


“ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார். ஆனால் அவர் நிற்கும் பூமி தடத்தை விட்டு அகலும் போது, அவர்கள் மேலுலகை நோக்கிச் சரண் அடைகிறார்.”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

“ஒரு நாட்டில் உன்னத ஒழுக்கமாகக் கருதப்படும் ஒரு பண்பு, மற்றோர் நாட்டில் மிகச் துச்சமாக எண்ணப் பட்டு ஒதுக்கப் படலாம். .. மனித இச்சை வாழ்க்கைப் போக்கில் ஒரு பாதியாவைப் போல், கவனமின்மை என்பது மரணத்தின் ஒரு பாதியாகும். .. இரவின் பாதை வழியாக நடக்காது, ஒருவன் காலை உதயத்தை அணுக முடியாது.”

கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]

“மெய்யான ஒரு கலைப் படைப்பு, தெய்வீகப் பூரணத்தின் ஒரு நிழலே தவிர வேறில்லை. .. என் கையில் உளி ஒன்று உள்ள போதுதான், என் மனம் எனக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. … செதுக்கப் படாத ஒரு பளிங்குக் கல், மகத்தான ஒரு சிற்பியின் பல்வேறு கற்பனை வடிவங்களைக் காட்டுகிறது!”

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

“எனது படைப்பு பெறக் கூடிய உன்னத தரத்தை எட்டாது போனால், கடவுளையும், மனித சமூகத்தையும் அவமதித்தாக நான் கருதுகிறேன்!”

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

“புலால் உண்ண மாட்டேன் நான்!
மதுபானம் அருந்த மாட்டேன் நான்!
பொருளற்ற வார்த்தைகள் புகல நேர்ந்தால்,
உறக்கம் வாரா தெனக்கு!
என் அரண்மனையின் பேர் நாசமாகும்!
எது வேண்டினும் செய்யட்டும், அக்டேவியஸ்!
உன் அதிபதியின் நீதி மன்றத்தில்
என் கால்கள் ஒருகணமும் நிற்க மாட்டா!” … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.

எகிப்தில் மற்றும்:

பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].

அங்கம்: 3 காட்சி: 2

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனையில் தனியிடம். காலை வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மருத்துவச்சி, சேடியர், மற்றும் ஜோதிடர் எதிர்பார்ப்போடு பரபரப்பில் உள்ளார். கிளியோபாத்ராவின் ஆயா பிதாதீதா இங்கும் அங்கும் கவலையோடு ஓடிக்கொண்டிருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, ரோமானியப் போர்த் தளபதிகள் வெளியே காத்திருக்கிறார்.

காட்சி அமைப்பு: [கிளியோபாத்ரா தனிப்பட்ட பிரசவ அறையில் படுத்திருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறக்கப் போவதை எதிர்பார்த்து ஜூலியஸ் சீஸர் ஆர்வமுடன் அறை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். கிளியோபாத்ராவைச் சுற்றி மருத்துவச்சி மூன்று பேர் அருகில் கண்காணிப்புடன் நிற்கிறார். திரைமறைவுக்கு அடுத்த அறையில் எகிப்திய ஜோதிட நிபுணர் வானநூல் ஏடுகளுடன் குழந்தை பிறக்கும் நேரத்தின் அம்சங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ரோமானிய தளபதிகள் வெளியே மதுவருந்திய வண்ணம் கேலிக்கையில் உரையாடிக் கொண்டுள்ளார்.]

அங்கம்: 3 காட்சி: 2

பிதாதீதா: [ஆவேசமாய் அறை வாசல் முன்பு] மாண்புமிகு அதிபதி அவர்களே! கிளியோபாத்ராவுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. மகாராணிக்கு வேதனை அதிகம். எனக்குப் பயமாய் உள்ளது! அவருக்கு முதல் குழந்தை அல்லவா? ஐஸிஸ் தெய்வம் அருகில் நின்று மகாராணிக்குச் சுகப் பிரசவத்தை அளிக்கும். [மேலே நோக்கி கைகளை உயர்த்தி] ஐஸிஸ் தெய்வமே! எங்கள் ராணிக்குச் சுகப் பிரசவத்தைக் கொடு. தாயும், சேயும் நலமாக வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: மாதே, நீ யார்? அநேக முறை உன்னை அரண்மனையில் பார்த்திருக்கிறேன். நீ யார்? உன் வேலை என்ன? நீ தந்த தகவல் இனிய தகவல். கிளியோபாத்ராவுக்கு எப்போது குழந்தை பிறக்கும், சொல்?

பிதாதீதா: மதிப்புக்குரிய அதிபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! மகாராணியின் வளர்ப்பு ஆயா நான். பொழுது சாய்வதற்குள் குழந்தை பிறந்து விடும்.

ஜூலியஸ் சீஸர்: பேத்தா தூத்தா, என்ன பெயரிது? வாயிலே கூட வரமாட்டாது போல் தெரியுது! நீ வளர்ப்புத் தாயா?

பிதாதீதா: என்னை பிதாதீதா என்றுதான் அழைக்கிறார்! எனக்கு வைத்த உண்மையான பெயர் ·பிடாடாடீட்டா! என் வயிலே கூட என் உண்மைப் பெயர் வருவதில்லை! அதனாலே என்னை பிதாதீதா என்று விளித்தாலே போதும், நான் துள்ளி ஓடி வந்து விடுவேன்! ஆமாம் நான் வளர்ப்புத் தாய். மகாராணி குழந்தையாக உள்ள போதே நான் தாலாட்டுப் பாடி வளர்த்தவள்.

ஜூலியஸ் சீஸர்: நானுன்னைச் சுருக்கமாக எப்படி அழைப்பது? உன் உண்மைப் பெயரை நீ நூறு முறைச் சொன்னாலும், என் நாக்கால் அதைக் கூற முடியாது! … அது சரி, கிளியோபாத்ரா எப்படி இருக்கிறார்? குழந்தை பிறக்கும் வேளை நெருங்கி விட்டதா?

பிதாதீதா: குழந்தை மெதுவாகத்தான் இறங்குகிறது. மகாராணியாருக்கு வேதனை மிகுதி! ஐஸிஸ் தெய்வம்தான் அருள் புரிய வேண்டும்.

[அப்போது பிரசவ அறையிலிருந்து சேடி ஒருத்தி ஓடி வருகிறாள்]

சேடி: பிதாதீதா! வா, சீக்கிரம் உள்ளே வா! மகாராணி உன்னை அழைத்து வரச் சொன்னார். மிக்க அவசரம். வா!

[பிதாதீத்தா சேடியுடன் பிரசவ அறைக்குள் விரைவாக நுழைகிறாள்]

கிளியோபாத்ரா: [கட்டிலில் படுத்துக் கொண்டே, சற்று வேதனையுடன்] பிதாதீதா! வா என்னருகில். சொல்வதைக் கவனித்துக் கேள்! குழந்தை பிறந்ததும், அதைத் துடைத்து ஆடை, ஆபரணம் எல்லாம் அணிந்து தூக்கிக் கொண்டு சீஸரிடம் செல்ல வேண்டும்! அவரது அருகில் நிற்கும் ரோமாபுரி அதிகாரிகள் அனைவர் கண்களில் தெரியும்படிக் குழந்தையைக் காட்ட வேண்டும். அனைவர் காதிலும் கேட்கும்படி உரக்கக் குழந்தை, சீஸரின் குழந்தை என்று சொல்ல வேண்டும். குழந்தை ஆண்மகவு என்று உரைக்க வேண்டும். உலகை ஆளப் பிறந்த குழந்தை என்று மொழிய வேண்டும். புரிகிறாதா உனக்கு!

பிதாதீதா: மகாராணி! உங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன். [வெளியே போகிறாள்]

கிளியோபாத்ரா: [அருகில் நின்ற ஜோதிடரைப் பார்த்து] ஜோதிட குருவே! பிள்ளை பிறக்கும் நேரத்தைக் குறித்து, அலெக்ஸாண்டர் போல அவன் உலகை ஆளுவானா என்பதைப் பார்க்க வேண்டும். [ஜோதிடர் வெளியே போகிறார்]

ஜூலியஸ் சீஸர்: [அறை வெளியே முணுமுணுப்புடன், பரபரப்புடன்] கிளியோபாத்ராவுக்கு என்ன மகவு பிறக்கப் போகிறதோ? பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை ரோமில் வைத்து நான் வளர்க்கலாம். அப்படி யில்லாமல் பெண் குழந்தையாகப் போனால் என்ன செய்வது? எகிப்திலே விட்டுச் செல்வேன்! கிளியோபாத்ராதான் அவளை வளர்க்க வேண்டும். பெண் குழந்தைக்குத் தாயின் துணை வேண்டும் எப்போதும். ஆனால் ஆண் மகனை என் கண்காணிப்பில் நான் வளர்த்து வருவேன். கிளியோபாத்ராவின் மன உறுதி, ஞானம், ஆட்சித் திறம் அவனுக்கு உடன்பிறக்கும்! சீஸரின் கம்பீரத் தோற்றம் அவனுக்கு முகக்களை உண்டாக்கும்! அலெக்ஸாண்டரின் பேராசைக் குணம் அவனுக்கு உண்டாக வேண்டும்! என் மகன் இந்தியாவையும் தாண்டிச் சென்று சைனாவின் மீது படையெடுப்பான்! உலக வரலாற்றில் எனக்குக் கிடைக்காத புகழை அவன் பெறுவான். அலெக்ஸாண்டரைப் போல உன்னதப் போர்வீரன் என்று பெயர் எடுப்பான்.

[அப்போது ஓர் எச்சரிக்கை மணியோசை கேட்க சீஸரும், ரோமானியப் போர் அதிகாரிகளும் திரும்பிப் பிரசவ அறைமீது கண்ணோட்டம் விடுகிறார்கள். பிதாதீதா தனது கைகளில் அலங்கரித்த குழந்தை ஒன்றைத் தொட்டிலில் தூக்கி வருகிறாள். அவளைப் பின் தொடர்ந்து குலாவிப் பாடிக் கொண்டு சேடியர் பலர் வருகிறார். அனைவரும் சீஸரை நோக்கி அருகில் வருகிறார்.]

பிதாதீதா: மாண்புமிகு சீஸர் அவர்களே! உங்களுக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது! விலை மதிப்பில்லா வெகுமதியை எங்கள் மகாராணி தந்திருக்கிறார். மகுடத்தைச் சூட்டினீர் எங்கள் மகாராணிக்கு! அந்த மகத்தான செயலுக்கு, ஆண் மகனைப் பரிசாக அளித்துள்ளார் உங்களூக்கு! உலகாளப் பிறந்த குழந்தை இது! ·பாரோ மன்னரின் பரம்பரைக் குழந்தை இது!

ஜூலியஸ் சீஸர்: [முன்னோக்கி வந்து இரு கரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன்] ஆண்மகவு! எல்லோரும் பாருங்கள் ஆண்மகவு! எனக்கு மகன் பிறந்திருக்கிறான்! [கைகளில் பிள்ளையை மேலே தூக்கிய வண்ணம் சுற்றுகிறார். அருகில் நிற்கும் ரோமானியர் அவைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.]

பிரிட்டானஸ்: [பூரிப்புடன்] களிப்புடன் வாழ்த்துக்கள். வாழ்க, வாழ்க உங்கள் ஆண் குழந்தை நீடூழி வாழ்க!

ரூ·பியோ: ரோமின் எதிர்காலப் போர்த் தளபதி! ரோமின் வருங்கால அதிபதி! வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!

ஜூலியஸ் சீஸர்: [குழந்தையைத் தொட்டிலில் வைத்து விட்டு, மகிழ்ச்சியுடன்] பெயர் மறந்து போச்சே! தீத்தா பீத்தா! மகாராணி கிளியோபாத்ரா எப்படி உள்ளார்? நான் பார்க்கலாமா?

பிதாதீதா: மகாராணி நலமாக உள்ளார்! ஐஸிஸ் தெய்வீகமுள்ள எங்கள் அரசிக்குச் சுகப் பிரசவமே! கவலை கொள்ளாதீர் தளபதி. ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது. நான் கேட்டு வந்து உங்களை அழைத்துச் செல்வேன். … என் பெயர், பிதாதீதா. … பிதா..தீதா!

ஜூலியஸ் சீஸர்: சீக்கிரம் உள்ளே போய்க் கேட்டுவா, பீத்தா தீத்தா!

பிதாதீதா: உடனே உள்ளே போய்க் கேட்டு வருகிறேன் தளபதியாரே! சிறிது பொறுங்கள். [குழந்தையைத் தூக்கிக் கொண்டு எல்லாரும் திரும்பி உள்ளே போகிறார்.] (முணுமுணுத்துக் கொண்டு) அட தெய்வமே! ரோமானிய தீரருக்கு என் பெயரைக் கூட உச்சரிக்க முடிய வில்லையே! …. (பிரசவ அறைக்கு முன்னால் நின்று திரும்பி உரத்த குரலில்) தளபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! பிதாதீதா! பிதாதீதா! (உள்ளே நுழைந்து முணுமுணுத்துக் கொண்டு) படுக்கும் போது பத்துத் தடவைச் சொல்லிப் பழகுங்கள் தளபதி! பிதாதீதா வென்று சொல்லத் தெரியாதா? ரோமானியர் நாக்கிலே என்ன நரம்புதான் நெளியுமோ? என் பெயரை விட நீளமான மகாராணி பெயரை எப்படிக் கிளியோபாத்ரா வென்று நாக்கு விளிக்கிறது! ஆடவர் ஒரு பெண்ணை நேசித்தால் கனவில் கூட அந்தப் பெயர் சரியாக வந்துவிடுதே! [குழந்தையுடன் உள்ளே நுழைகிறாள்]

[சிறிது நேரம் கழித்து பிதாதீதா வெளியே சீஸரிடம் ஓடி வருகிறாள்]

பிதாதீதா: மாண்புமிகு தளபதியாரே! வாருங்கள் உள்ளே! வாருங்கள்! எங்கள் மகாராணியை இப்போது காணலாம். என்னுடன் வாருங்கள். மகாராணி காத்திருக்கிறார்.

ஜூலியஸ் சீஸர்: என் ஆண்மகவின் அன்னைக்கு நன்றி கூற வேண்டும். என் மனைவி கல்பூர்ணியா பெற்றுத் தர முடியாத உயிர்க்கனியை கிளியோபாத்ரா எனக்குத் தந்திருக்கிறாள். நான் வழிதவறி எகிப்துக்கு வந்தது நல்லதாய்ப் போயிற்று! மருமகன் பாம்ப்பியை விரட்டி எகிப்துக்கு வந்தது பலனை அளித்து விட்டது. சீஸரின் பெயரைச் சொல்ல ஓர் ஆண்மகன் பிறந்து விட்டான்! வருகிறேன் பீத்தா தீத்தா [சீஸர் பிதாதீதாவின் பின்னே செல்கிறார்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan September 12, 2006]

Series Navigation