சென்று வா நேசமலரே!

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
”அந்தப் பையன்தான் அவள்கூட விமானத்தில் வந்தவன்…” என்றாள் பெண்டாட்டி. ”போங்கப்பா போய்த் து¡ங்குவீங்க.”

படுக்கை ஜன்னலுக்கு வெளியே மெத்தென்ற வில்லோ இலைகள், பெளர்ணமியின் ஜ்வலிப்பில், பசுஞ்சாம்பல் மீன்களின் துடுப்புகள் போல, தனித்தனி அடுக்காய் நீச்சலடிக்கின்றன. கோடைக்கால நிர்மலமான வானம். மெலிசான வில்லோக் கிளைகள் நெளிந்த கம்பிகளைப் போலிருந்தன.

”அந்த விமானத்தில் ஒருபையன் வந்தான்றதையே நான் இப்பதான் கேள்விப்படறேன்…” என்றார் கார்ட்டரெட்.

”அவனை நீங்க பாத்தீங்கப்பா” என்றாள் மனைவி. ”நாம அவளைப் பார்த்தப்ப, கூட அவனும் இருந்தான். கஸ்டம்ஸ்லேர்ந்து ரெண்டுபேருமாத்தான் வந்தாங்க, நீங்களும் பாத்தீங்க.”

”ஞாபகம் இல்ல.”

”பாத்தீங்க நீங்க. எனக்கு நல்லாத் தெரியும். அட, நீங்க அவன் தொப்பியப் பத்திக்கூடச் சொல்லல? ஒருமாதிரி… ஏத்தியிறக்கி விட்டுக்கறாப்ல, புதினாக்கலர்த் தொப்பி…”

”அட கடவுளே!” என்றார் அவர். ”அவனா!… ஆளைப் பார்த்தா ஒரு நாற்பது, நாற்பத்திரெண்டு வயசுக்காரனாட்டம்ல இருந்தது… என் வயசு!”

”இருபத்தெட்டு. அவ்ளதான்! நீங்க எந்தப்பக்கமாப் படுக்கப் போறீங்க?”

”சித்த சாய்ஞ்சிட்டுக் கெடப்பம்,” அவர் சொன்னார். ”து¡க்கம் வரல. மணி அப்பமே மூணு அடிச்சது கேட்டிச்சு.”

”அசையாமக் கொள்ளாமக் கெடந்தீங்கன்னா உறக்கம் வந்திரும்”, என்றாள் பெண்டாட்டி.

சலசலக்கும் நீரோட்டம் போல, சிலசமயம் ஈரக்காற்று சலனப்படும். உள்மடிப்பான பளபளப்பான மெலிந்த வில்லோ இலைகளை மரத்தோடு அசைக்கும். அந்தச் சப்தத்தை அவர் கார் எதும் வருகிறாப் போலக் கேட்டார். பிறகு, காற்றின் மூச்சு சட்டென்று தடம்மாறி, இரவுத்திடலில் குறுக்காக இலைகளூடாக தொடர்கிசுகிசுப்புடன் கடந்து, தனி மரங்களைக் குலுக்கி து¡ரத்தில் தாண்டும்போதுதான், எப்போதுமே கார் எதுவும் இல்லை, என்றும், நடுக்கோடையின் விம்மியடங்கும் அமைதியான நீண்ட பெருமூச்சே அது, எனவும் அறிந்தார்.

”இப்ப கீழ போயி அங்க எதைக் குடையப் போறீங்கப்பா?” என்று கேட்டாள் அவள்.

”தண்ணி குடிச்சிட்டு வாரேன்…”

”தேமேன படுத்துக் கண்ணை மூடிக் கிடந்தீங்கன்னாத் தேவலாம்…” என்றாள் அவள். ”ஏம்ப்பா நீங்க படுக்கவே இல்லியா?”

”பெளர்ணமின்னா எனக்கு உறக்கங் கொள்ளாது,” அவர் சொன்னார். ”எப்டி தெரியல. மனசு அடங்கிக் கிடக்க மாட்டேங்குது. மாத்திரமில்ல, அசாத்திய சூடு வேறயா…”

”சொன்னாக் கேளுங்க. கால்ல எதாச்சும் மாட்டிக்கிடலாமில்ல?”

இறங்கிப் போகிற வழியிலும், மாடிப் படிகளிலும், கீழே சமையற்கட்டிலும் நிலா வெளிச்சத்தின் பிசிரற்ற கெட்டி வெண்மை. தரை இளஞ்சூடாய் இருந்தது. குழாய்த் தண்ணீர் வெதுவெதுவென்று வந்தது. குடிக்கிற குளுமைக்காக தண்ணீர் பிடித்து, இருமுறை பாத்திரங் கழுவும் தொட்டியில் கொட்டிவிட்டு, பிடித்துக் குடித்தார். செருப்புகளை எங்கேயோ விட்டிருந்தார். ஞாபகம் இல்லை. வெறுங்காலாய் இருந்தார். மகள் சூ பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். சட்டென்று செருப்பை விட்ட இடத்தை, அடுப்பின் கரிபோடும் பக்கம் விட்டு விட்டு வந்ததை நினைவுகூர்ந்தார்.

செருப்புகளை மாட்டிக்கொண்டு, சமையல்கூடக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து தோட்டத்தில் நின்றார். பிரமிக்கத்தக்க து¡ய தெளிவுடன் அவரால் எல்லா ரோஜாக்களையும் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. அடர்சிவப்பு ரோஜாக்களையுங் கூட. இது மஞ்சள், இது வெள்ளை, என வித்தியாசம் தெரிந்தது. பூத்துக் குலுங்கும் பூக்களில் மட்டுமல்ல, ஜுலையின் உக்கிரப் பகலில் உதிர்ந்து விழுந்திருந்த பூவிதழ்களில் கூட நிறங்களை கவனிக்க முடிந்தது.

நடந்தபடி புல்தரையின் நடுப்பகுதிக்கு வந்து நின்றார். நட்சத்திரமே இல்லாத வெறும் வானம். மொத்தையான பல்ப் போல நிலா. கோடைமரங்களின் பச்சையிருளில் அதன் வெளிச்சம் கண்ணைக் கடுமையாய் உறுத்தியது.

வில்லோ இலைகளூடே காற்று கடக்கிற நீரோட்ட சலசலப்பு இரவுவெளியில் து¡ர விலகிப் போனது. காரின் ஓசையாகவே திரும்பவும் குழப்பிக் கொண்டார். பைஜாமா அணிந்த கால்களில் ஈரக்காற்று ஜில்லிப்பாய் உறைத்தது. சற்று நடுங்கியது. கேசச்சுருளில் விரல்களை ஓட்டிக் கொண்டார்.

திடீரெனத் தன்னை அனாதைபோலும், பரிதாபத்துக்குரிய ஜீவன்போலும் உணர்ந்தார்…

”சூ…” அவர் சொல்லிக் கொண்டார். ”சூசி, எங்க இருக்க? இவ்ள நாள் நானறிஞ்ச சூசிதானா இதுன்னே தெரிலியே…”

அவள் செல்லப்பேர் சூசி. சாதாரணமாய் சூ. அபூர்வமாய், ரொம்ப ஆயாசமாய் எப்போதாச்சும் சூசன். விடுமுறை என்று அவள் சுவிட்சர்லாந்து போகுமுன்னால், அப்ப பத்தொன்பதாவது பிறந்தநாள் அவளுக்கு, இப்ப எவ்ளவு பெரியாளாத் தோணறா பார்வைக்கு – உடம்பே எப்படிப் பூரிச்சு செழிப்பா ஆயிட்டு வருது – தனியாளா துணிச்சலா, அதும் விமானத்தில் போகப்போறா… அமர்க்களம்தான்! – என்றெல்லாம் நினைத்தார்கள் எல்லாரும். சூசி, சூசி என்று வாய்நிறையக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். எப்போதையும்விட, இப்ப இந்த வயசுநிலையில், மென்மையாயும், பெண்மைத்தனமுமாகவே நினைத்திருந்தார். உதட்டுச்சாயம் பூசியும் கூட அந்த முகம் ஒட்டி குழந்தைத்தனத்துடன் இருந்தது. கிண்ணங் கிண்ணமாய் செர்ரியைக் காலி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆச்சரியமாய் இருந்தது. நான் நினைச்சாப்ல இல்லியோ? விமானப் பயணம்லியா? உள்ளூற ஒரு உதறல் இருக்குமோ, என்றிருந்தது.

பட்டணத்திலிருந்து கேட்டது அரைமணிக்கான கடிகார சங்கீத ஒலி. கிட்டத்ததட்ட அதேநேரம் கார் ஒன்றின் இரைச்சலும். இப்ப அவர் புரிஞ்சிக்கிட்டதில் எந்தத் தவறும் இல்லை. கால் மைல் து¡ரத்தில், பார்சல் ஆபிஸ் பக்கப் பள்ளத்தில் இருந்து, பெரிய அரைவட்டமாய்க் கார் ஒன்று திரும்பியது. முன்விளக்குகள் வட்டமடித்தன.

‘எவ்ளோ நேரமாச்சி சின்னப்பெண்ணே’ என்று நினைத்துக் கொண்டார். ஒரு சுய பச்சாதாபமும், கூடவே குழப்பமும் வந்தது தன்மேலேயே. கார் விரைந்து வருகிறது. அவர் புல்வெளியில் வீட்டைப் பார்க்க ஓடினார். சூசன் அவரைப் பார்க்குமுன்னால், வீட்டுக்குள் எட்டி, அவள் வரும்போது படுக்கையில் இருக்கிறாப் போல காட்டிக் கொள்ளலாமாய், இறங்கிவந்து கதவைத் திறக்கிறாப்போல காட்டிக் கொள்ளலாமாய் இருந்தது. அவளிடம் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. தொளதொள பைஜாமாக் கால்கள். புல்லின் பனியில் அவை நனைந்து கிடந்தன. ஸ்கர்ட்டைப் போல து¡க்கிப் பிடித்துக்கொண்டு ஓடினார்.

நிலைமை ரொம்ப எக்கச்சக்கமா, கேலிக்கூத்தா ஆயிப் போச்சி, என நினைத்துக் கொண்டார். சமயங்கள்ல பசங்க நம்மை எப்படி முட்டாளா அடிச்சிர்றாங்க… எப்படித் தடுமாறிப் போகுது!

சமைற்கட்டின் கதவுப்பக்கம் நழுவியது ஒரு செருப்பு. எடுப்பதற்காக நின்றவர் கவனித்தார். ஆ கார்ச்சத்தம்… இப்போது கேட்கவில்லை. கார்விளக்கையும் காணோம்! திரும்பவும் பிரம்மாண்டான நிசப்த வெளி. கிசுகிசுத்து அடங்கும் காற்று. தவிர, தவிர எதுவுமில்லை!

அந்தக் காலத்துல நாமகூட இப்படி நடனத்துக்குப் போயிட்டு காலாற வந்ததில்லையா, எழவு, என நினைத்துக் கொண்டார். பார்சல் ஆபிஸ் பக்கமான அந்த நீண்ட திருப்பம்… ஆபத்தான வளைவு அது, என பயத்துடன் நினைத்தார். எக்குத்தப்பான இடம். லேசா ஸ்பீடெடுத்து வந்தாலும் அந்த வளைவை சிலசமயம் கவனிக்க முடியாமல் போய்விடும். வாராவாரம் அங்கே விபத்துகள் நேர்கின்றன… எது எப்பிடி யிருந்தாலும்… கடவுளே, அந்தப் பையனைப் பத்தி அவளுக்கு என்ன தெரியும்? பொண்ணுகளைக் கண்டால் காரில் ஏத்திக்கிட்டுச் சுத்துறவனோ என்னமோ? ஒருவேளை கல்யாணமே ஆனவனோ? யாராவும் இருக்கலாம், ஒரு அயோக்கியனாக் கூட.

புளியைக் கரைத்தது உள்ளே. அவள் விமானத்தில் ஏறும்போதும், அந்த விமானம் மேலே உயரும்போதும் அவருள் ஏற்பட்ட அதே பீதி. ஆளையே சுத்தமா இருட்டிட்டது அது. இவ திரும்பியே வரப்போறதில்லையோன்னு அன்னிக்கு ஒரு திடுக். இப்பத்தைய பதட்டத்தில் உடம்பில் இரத்தம் குழாய்க்குள் உறைந்து சிலீரென்று திகிலை உண்டு பண்ணியது. எல்லாம் ஒரே குளறுபடி…

ரோஜாத்தோட்டத்தின் வழியே, வெளிக் கதவைப் பார்க்க வந்ததே அவருக்குத் தெரியவில்லை. இருந்த பதட்டத்தில் பைஜாமா நாடாவை இறுக்கியபடியே ரஸ்தாவில் மேலுங் கீழுமாய் நடந்து கொண்டிருந்தார்.

சாமி, எத்தனை சுலபமாய் அது நடந்துருது! ஒரு விமானத்துலயோ, ரயில்லயோ, ஏன் பஸ்சுலயோ… எதுலயாவது ஒரு பொண்ணு போறா. என்னாச்சின்னு சுதாரிக்கு முன்னால்… காட்டுத்தனமா எதாவது ஆரம்பிச்சிருது.

ஜில்லிப்பான கெட்டி இரத்தம் துளித்துளியாய்க் காலுக்கும் பாதத்துக்கும் திகிலை இறக்குவதாக உணர்ந்தவாறே அவர் தெருவில் மேடேறினார். கீழ்வானத்தின் மஞ்சள் பரவல் பகல் ஆரம்பிக்கிறதாய் அவரைத் திகைக்க வைத்தது. அதை நம்ப முடியாதவராய், தளர்ந்துபோய் ஓட ஆரம்பித்தார்.

சில விநாடிகளில், நு¡றடி பின்னால் இரண்டு மஞ்சள் கண்கள் வெறிக்கிறதாக முதுகில் உணர்ந்து, திரும்பிப் பார்த்தார். காலைச் செய்தித்தாள் எடுத்துவரும் கார் ஒன்று நின்றிருந்தது. என்ன செய்ய, புரியவில்லை. கிட்டே போய், கார் ஜன்னலைத் தட்டி, பெண்ணின் அப்பா நான், என்ற கண்டிப்புடன், ‘எம் பொண்ணு சூசன் உள்ள இருக்காளா?… சூசன், வா போலாம் வீட்டுக்கு’ – என்று என்னால்… முடியாது. அது ஒருவேளை வேற பொண்ணா இருந்தால்? அந்தப் பொண்ணுக்கும் தான் செய்யிறது சரி,ன்னு இருந்தால்? பைஜாமா போட்ட நடுத்தர வயதுக் கிழவன் அவளுக்கு சகிக்க முடியாமல் போகலாம்!

அப்படியே நின்றார். பகலின் உதடு விரிந்த வெளிச்சம். தொடுவானத்தில் மஞ்சள் பரப்பு ஆழ்ந்து விரிந்து பரந்தது. அவருக்கு அந்தக் காட்சி அழுகையை வரவழைத்தது. எவ்வளவு அசடாய் நடந்து கொள்கிறேன் நான், என்றபடி தன்னையே தேற்றிக்கொள்ள முயன்றார்.

எய்யா, ஒரு நர்ஸ் மாதிரியான கண்டிப்பான பார்வையை நீ முதல்ல நிறுத்தணும்… தனக்குள் சொல்லிக் கொண்டார். போய்ப்படு போ. என்ன நீ. உனக்கு அவ மேல நம்பிக்கை இல்லியா? பிரச்னை எங்க ஆரம்பிக்குது தெரியுமா? நாம அவங்களை நம்பாதபோதுதான்! நம்பாம அதைப்பத்தி நாம கேள்வி கேட்கும் போதுதான்!… சீ அவங்களை நம்பாமல் எப்பிடி?…

வீட்டைப் பார்க்கத் திரும்பும்போது ஒரு கார் கிளம்பும் ஓசை கேட்டது. சுற்றிலுமாய்ப் பார்த்தார். பள்ளத்திலிருந்து ஒரு கார் அவரைப்பார்க்க வந்துகொண்டிருந்தது. தன்னை இதுவரை இல்லாத அளவு பைத்தாரனாய் உணர்ந்து படபடத்தார். தெருவின் இருமருங்குகளிலும் கத்தரித்து விடப்பட்டிருந்த குற்றுமர வரிசை… அந்த வேலிக்குப் பின்னால் பம்மிக்கொள்ள மாத்திரமே அவகாசம் இருந்தது. பாத்தி ரொம்ப உயரம் என்று சொல்ல முடியாது. சாணியும், வெட்டிப்போட்ட புல்லும், முட்புதருமாய்க் குப்பையாய்க் கிடந்தது. ஒடுங்கிக் கொண்டதில் அவர் பைஜாமா நெஞ்சுவரை தோள்வரை நனைந்து விட்டது. தகதகப்பான வானம். பகலின் நிற அடையாளங்கள் தெளிவுபட்டிருந்தன. பாத்தியில் படர்ந்திருந்த கொடியின் வாசனையும் பனியும்…

கார் தாண்டிப்போகக் காத்திருந்து, தலையைத் து¡க்கிப் பார்த்தார். உள்ளே சூசி இருந்தாளா தெரியவில்லை. காரைப் பார்க்க தெருவில் இறங்கிப் போனார். திரும்பவும் அவநம்பிக்கையும் மகா அலுப்புமாய் இருந்தார். பைஜாமா தண்ணி சொட்டியது. போய்ப்படுக்கு முன்னால் இதை மாத்திக்கிட்டாகணும். காலைப் பரபரன்னு சூடுபறக்கத் தேச்சிக்கிடணும்.

கடவுளே, நம்மளை இவங்க எப்பிடிக் கிராக்கா ஆக்கிப்பிடறாங்க… என நினைத்துக் கொண்டார். கொஞ்சநேரங் கழித்து, அது அவளா இருக்காது, என்று தலையாட்டிக் கொண்டார். உடனே, ஆ, அதுமட்டும் அவளா இல்லாட்டி?… என்றும் தோன்றியது.

கால் ஓய்ந்து விரைத்து விட்டது. இரத்தமே இல்லை. மாரிலும் தோளிலும் உணர்ச்சியே இல்லை. ஆஸ்பத்திரி அலுப்பு. லேசான மயக்கத் தள்ளாட்டம். தேகத்தில் எதிர்ப்புசக்தியே இல்லை.

ஓ சூசி, இன்னொருவாட்டி இந்தமாதிரி எங்களுக்கு எதுவும் பண்ணிறாதே. உனக்குப் புண்ணியமாப் போகட்டும்…

வீட்டுவாசலில் ஒரு கார் நிற்கிறது. நன்றாக விடிந்துவிட்டதில் கார்ப் பின் விளக்குகள் அணைக்கப் பட்டதை கவனித்தபோது, கார் நிற்கிறதையும் பார்த்தார்.

அதோ சூசி. நீண்ட அங்கி போன்ற சாயந்தர உடை. ஸ்கர்ட் போல லேசா அதைத் து¡க்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். இந்த து¡ரத்தில் கூட அவள்தான் எத்தனை அழகாய் இருந்தாள். பட்சி சப்தங்களற்ற கோடைகாலக் காலை அமைதி. காற்றும் அடங்கிக் கிடந்தது. அவளது குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது. குழல்கொஞ்சம் பெண்மைத்தனமான வாஞ்சைக் சிணுக்கம். ”குட்பை… ஆமா. நல்லாருந்துச்சு. தேங்ஸ்!”

இப்ப என்னால முடிஞ்சதெல்லாம்… அவ கண்ணுல மாட்டிக்காமல்… எங்க ஒளிஞ்சிக்கிறலாம்… பக்கவாட்டுக் கதவுவழியா உள்ள போயிற முடியுமா? குளியல் அறைக்குள் மெல்ல நழுவி, உடை மாத்திக்கிட்டு… குளிச்சிட்டாக் கூடத் தாவல.

அதற்குள் கார் திரும்பி, மேடேறி அவரைப் பார்க்க வந்து கொண்டிருந்தது. எங்க ஒளிய, வேணுன்னா இந்த மரச்சட்டங்கள்க்குள்ளாற புகுந்துகிட்டு, கார் தாண்டிப்போகக் காத்திருக்கலாம். பகல்வெளிச்சத்தில் நிர்வாணமாக நிற்கிறதாக ஒரு கூச்சம். காரை கவனிக்காத மாதிரி முகத்தைத் திருப்பி நின்றுகொண்டார். ஆ! பயப்பட்டாப் போலவே நடந்தது! பத்து பன்னிரண்டடி கடந்துபோன கார் தயங்கியது. உள்ளேயிருந்து ஒரு குரல்!

”அடேடே, சார்!… ஷமிக்கணும். நீங்க…. திரு மார்ட்டரெட்தானே?”

”ம்” என்றார்.

இனி நாம செய்ய ஒண்ணுமில்லை. கிட்ட போயி அந்த எழவெடுத்த பயலைப் பார்த்திற வேண்டிதான்.

”ஆமா, நாந்தான்.” பட்டுக்கொள்ளாத உணர்ச்சியில்லாத கெளரவமான அமைதியுடன் அவனைப் பார்த்துப் பேச அவர் முயற்சித்தார்.

”என் பேர் பில் ஜோர்டன் சார்!” இரா உணவுக்கான கருப்பு ஸ்லாக். அழகான மிருதுவான படியக் கிடந்த கேசம். இளைஞன்தான்.

”ரொம்ப லேட்டாயிட்டது சார். ஷமிக்கணும். சூசி பத்தி நீங்க கவலைப்படலேன்னு நினைக்கிறேன்…”

”சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லே.”

”ச், எல்லாம் அம்மா பண்ணின தப்பு. அவதான் எங்களை விடவேயில்லை…”

”நீங்க நடனமாடிட்டிருந்தீங்கன்னு நினைச்சேன்…”

”ஓகோ. இல்ல சார். ராத்திரி அம்மாகூட சாப்பிட்டோமா, கொஞ்சம் புல்வெளில நடனம் ஆடினோம். எங்கம்மா ஒரு சீட்டுப் பைத்தியம் சார்! அவளாலதான்…”

”பரவால்ல பரவால்ல… நீங்க ஜாலியா இருந்தாச் சரிதான்.”

”ரொம்ப ஜாலியா இருந்திச்சு சார்! என்ன, நீங்க கவலைப்படுவீங்களேன்னு எனக்குள்ள ஒரு இது…”

”அப்டில்லா ஒண்ணில்லப்பா!”

”ஒண்ணில்லன்னா சந்தோஷம் சார்!” முழுக்க நனைந்திருந்த பைஜாமாக்களை உற்று உற்று அவன் பார்த்தான். ”அருமையான வெதுவெதுப்பான ராத்திரி, இல்லிங்களா சார்!”

”ஓரளவு சரிதான். என்னால து¡ங்க முடியல…”

”து¡க்கம்… நானும் து¡ங்கணும்!…” பளிச்சென்ற பெரிய பற்கள் தெரிய அவன் பிரியமாய்ச் சிரித்தான். அழகாய் இளமையான புன்சிரிப்பு. ”நான் கிளம்பறேன். அப்பறம் சாப்பாட்டு நேரமே ஆயிரும்… வரேன் சார்!”

”போயிட்டு வா.”

கார் நகர ஆரம்பித்தது. இளைஞன் டாடா காட்டி விடைபெற்றபோது அவனைக் கூப்பிட்டுச் சொன்னார்.

”ஒரு சாயந்தரம் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வாப்பா.”

”வர ஆசைப்படறேன் சார்! பார்க்கலாம், குட்நைட்!”

அவர் தெருவில் இறங்கி நடந்தார். சார், சார்-னு கூப்பிடறது நல்லாத்தான் இருந்தது. பளிச்சென்று இனிமையாய்ப் பேசினான். இயல்பான பேச்சு. அப்டிதான் பேசணும்… ரொம்ப ஆசுவாசமாய், எப்பத்தையும்விட திருப்தியாய் உணர்ந்தார்.

தோட்டவாசலை எட்டினார். பகல் உக்கிரமாகி விட்டிருந்தது. ராத்திரி பூத்திருந்த அத்தனை ரோஜாக்களிலும் புத்துணர்ச்சி தெரிகிறது. செங்கல் வண்ணதில் ஒரு பூ. என்ன அடர் சிவப்பு… கருப்புன்னுகூடச் சொல்லலாம் போல. உடனே அந்த ரோஜாவைப் பறித்துக்கொண்டு போய் மாடியில் பெண்டாட்டியிடம் நீட்டலாமா!, என்று நினைத்தார். உடனே அந்த நினைப்பைக் கைவிட்டார்.

நிலா தேய ஆரம்பித்திருந்தது. வானத்தில் பறவைகள் பறக்க ஆரம்பித்திருந்தன.

Go Lovely Rose! – shortstory by H E Bates
(from his collection, The Doffodil sky)

எந்த ஊர் எந்த நாடானா என்ன, அப்பாக்கள் ஒரே மாதிரி, என்று இநதக் கதை அழுத்திச் சொல்கிறது. எவ்வளவு பாவம் இந்த அப்பா, என்றிருந்தது வாசிக்கையில். நல்லவேளை, சுப முடிவு தந்து விட்டார். இந்த அப்பா பார்வையில், அந்தப் பெண் ‘ஏமாற்றப் பட்டவளாக’ ஆகியிருந்தால், என் மனசு தாங்காது! அத்தனை யதார்த்த வீர்யமான கதை அல்லவா? அதிலும் அந்த மாமி – சூசியின் அம்மா! செம து¡க்கம்! மகள் பற்றி கடைசிவரை அவ அல்ட்டிக்கவே இல்லை! மகள்மேல் அபார நம்பிக்கைதான்! என்னமோ! நல்லாருந்தாச் சரி.

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்