தந்தையாய் உணர்தல்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

எஸ்.ஷங்கரநாராயணன்



குழந்தை இறந்து விட்டது. உள்ளே மின்னலென ஒரு பயச் சிலிர்ப்பு தாக்கியது. “ஹலோ? என்ன சொல்றீங்க?” என்றான் பதறி.
இவன் யாரோ புது மனிதன். “ரொம்ப சாரி மிஸ்டர் அருணாசலம். நீங்க எப்ப வரீங்கன்னு உங்க மாமனாரிடம் சொல்லட்டும்?”
“உடனே. இப்பவே கிளம்பறேன்.”
திரும்பித் தன் இடத்திற்கு வந்து உட்கார முடியவில்லை. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஆகாவென்று ஒரு சோக அலை எழுந்து ஆளையே முழுங்கி மூழ்கடித்தது. இப்போது என்ன செய்வது? இனி வாழ என்ன இருக்கிறது? அழக்கூட முடியாமல், தொண்டை விக்கிய குழந்தை மாதிரி உணர்ந்தான்.
“என்ன? என்ன?” என்று அலுவலக சகாக்கள் உலுக்குகிறார்கள். கையை விலக்கி விட்டான். சிறிது வெறித்து எல்லாரையும் பேதலித்த பார்வை பார்த்தான். “குழந்தை…. என் குழந்தை….” என்னுமுன் உள்ளே பாறைகள் உருண்டு தொண்டையை அடைத்தது.
திரும்ப லாட்ஜ்வரை போக, உடைகளை எடுத்துக் கொள்ள, என்றெல்லாம் யோசிக்கவே முடியவில்லை…. யாராவது என்னை வழிநடத்தினால் நல்லது. யார் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டும். யார் மடியிலாவது தஞ்சமாய்க் கிடந்து மனம் கரையக் கரைய அழ வேண்டும்.
அவனுக்கு இப்போது யாருமே இல்லை. இந்தப் பிள்ளை…. பிரபுவை இவன் கையில் தந்துவிட்டு பிருந்தா இறந்து விட்டாள். பிரசவ டாக்டர் வெளியே வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு “ஒரு நல்ல சேதி ஒரு கெட்ட சேதி” என்றது ஞாபகம் வந்தது.
மானேஜரே ஆயிரம் ரூபாய் பணம் தந்து, பியூனை கூட பஸ் நிலையம் வரை அனுப்பி வைத்தார். மகாலிங்கம், அவனே எந்த பஸ் முதலில் கிளம்பும் எனக் கேட்டு உட்கார்த்தி வைத்து.விட்டுக் காத்திருந்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய்த் தலையை உதறிக்கொண்டு “நீ கிளம்பு மகா. எல்லாருக்கும் ரொம்ப தேங்ஸ். உங்களுக்கெல்லாம் ரொம்ப சிரமம்” என்று கைகூப்பினான் அருணாசலம். “ஐய என்ன சார் நீங்க?” என்றான் மகாலிங்கம்.
பஸ் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. அதுவரை உள்ளே உட்கார முடியவில்லை. கண்ணை மூடிக் கொண்டாலும் திறந்து கொண்டாலும் பிரபுவின் முகம். என்ன மிருதுவான பூவுடம்பு. என்ன வாசனை. என்ன சிரிப்பு சிரிக்கும். சிரிப்பை ஊற்றெனப் பெருக்கி உள்ளெலாம் நிறைத்துக் கொண்டு வெளியேயும் வாரியிறைக்கும். அதன் உடம்பே அத்தனை வழவழ. குளுகுளு. அதன் குழைந்த வயிறில் மூக்கை அழுத்தி வாசனை பிடிப்பான். ஒருமாதிரி… பால்கலந்த, வியர்வையும் அழுக்கும் மூச்சாவும் கலந்த வாசனை அது.
இருந்த பதட்டத்தில் எதுவுமே கேட்கத் தோணவில்லை. குழந்தைக்கு என்னாயிற்று? குப்புறப் படுத்தபடி எங்கும் எக்கி எக்கிப் போய் எதையும் எட்டிக் கொண்டிருந்தது அது… என்று ரத்னா தொலைபேசியில் சொன்னாள். சொலலும்போதே அவளுக்கு அத்தனை சிரிப்பு. கண்ணால் பார்த்து வர்ணிப்பதுபோல ஓர் உற்சாகக் குரல். “அத்தான் நீங்க எப்ப வரீங்க?”
அப்போதே குழந்தையைப் போய்ப் பார்க்க வேண்டுமாய்ப் பரபரத்தது. போனமுறை போயிருந்தபோது இந்த விளையாட்டு இல்லை. ஆள்பார்த்துச் சிரிப்பது, கையை அசைப்பது, ரத்னா சொன்னால் சட்டென்று கண்ணடிப்பது…. என்றிருந்தது அதன் உலகம். விறுவிறுப்பான வாழ்வின் நிமிடங்கள் அவை. கணந்தொறும் மூளை சுறுசுறுப்பாக எதையாவது கற்றுக் கொள்ள ஆவேசம் வந்து தாகித்துக் கிடந்த பருவம்.
ஒவ்வொரு முறை புதுசாய் எதைக் கற்றுக் கொள்ளும்போதும் அதற்கு உடம்பு படுத்தவே செய்கிறது. அவனுக்கு பயமாய்ப் போகும். அது புட்டிப்பால் குடிப்பதைப் பார்க்கவே அழுகை வந்தது…. வயிறு நிறைந்த நிலையில் தூக்கி அணைத்துக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுக்க வேண்டும். உள்ளே வெடித்தாற்போல ஒரு விக்கல் வரும். கொஞ்சநேரம் பால் எதிர்த்து வருகிறாப்போல விக்கல் தொடர்ந்து வரும். “மாப்ள இதுக்கெல்லாம் பதறப்டாது. விக்க விக்கத்தான் குடல் விரியும். உடம்பு வளரும்….” என்று சிரிப்பார் மாமனார்.
அம்மா இல்லாமல் வளர்கிற குழந்தை. அதற்கு எதும் அவசரம் என்றால் அவனால் பார்த்துக் கொள்ளக்கூடத் தெரியாது. வீட்டில் பெரியவர்களும் இல்லை. இரண்டு பெண்கள் மாமனாருக்கு. மாமியார் தவறிப்போய் மூத்தவள் பிருந்தா சிறு வயது முதலே குடும்பத்தைத் தலைமேல் ஏற்றிக் கொண்டாள். ஐயா இன்னொரு கல்யாணம் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. பிள்ளைங்களைக் கரையேற்ற குடும்பத்தில் மேலும் குழப்பங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாய் இருந்தார்.
அந்த சுயபொறுப்பு, மனசு பிடித்துப் போனது அருணாசலத்துக்கு. பெண்பார்க்க வந்தவன் மாமனாரிடம் தன்மையாய்ப் பேசிக் கொண்டிருந்தான். அதில் பிருந்தாவுக்கு ரொம்ப சந்தோஷம். அப்பவே கல்யாணம் முடிந்தாற் போல நினைத்துக் கொண்டார்கள் எல்லாரும்.
அவனுக்கு நன்றாய் நினைவிருக்கிறது. பிரசவித்து அவனிடம் பிள்ளையை ஒப்படைத்த நிலையில் பிருந்தாவின் வாழ்க்கை அந்தப் பிரசவ அறையிலேயே முடிந்து போனது. அவளது கடைசி நிமிடங்களில் அவனே அவள் அருகில் இல்லை. அன்றைக்கு ராத்திரி தலைமாட்டில் அவள் வந்து நின்று அழுகிறாப்போல ஒரு பிரமை. “பிள்ளையைத் தனியா உங்க கைல கொடுத்திட்டுப் போறேய்யா. பாத்திக்கிடுங்க. பாத்துக்கிடுங்க” என்று ஒரு முறையிடல் காதிரைச்சலாய்க் கேட்டுக் கொண்டே யிருந்தது. சரி சரி என்று மனம் யானையாய்த் தலையாட்டினாலும், அவனுக்கு என்ன தெரியும் என்கிற திகைப்பே பெரிசாய் இருந்தது.
தலையை கனக்கிறாற் போலிருந்தது. வயிற்றுக்குள் ஐஸ்கட்டி. பிரபுவுக்கு என்னாயிற்று? இதுவரை வயிறு அமுங்காமல் கிடந்த குழந்தை. சட்டென்று குப்புறப் படுப்பதும், வயிறு அமுங்க அமுங்க நாலு இடம் தவழ்ந்து போவதும் என உடல் படுத்தி, அஜீரண உபத்திரவம் இருக்கும்தான். எதையாவது எட்டிப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டிருக்குமோ?
மனைவியின் கடைசிநிமிடங்களில்தான் கூட இல்லை. இப்போது குழந்தையின் கடைசிநிமிடங்களிலும் இல்லாமல் ஆகிவிட்டது.
ஹாவென்று பெருமூச்சுடன் அப்படியே பஸ்சீட்டில் கழுத்தைச் சாய்த்துக் கொண்டான். எப்போது கிளம்பும் தெரியவில்லை. உள்ளே புழுக்கமாய் இருந்தது. வெளியிரைச்சலுக்கு உள்ளே இப்படி உட்கார்ந்திருப்பது பரவாயில்லை என்று வரவேண்டியதாயிற்று. கண்ணை மூடிக்கொண்டு நெற்றிப்பொட்டுகளை அழுத்திக் கொண்டான்.
அழ வேண்டும். அழுதுவிடு, அழுதுவிடு என்றது மனசு. சளிக்கட்டுபோல உள்ளே அடைத்துக் கிடந்தது அழுகை. சரியாய் நிறுத்தம் பார்த்து இறங்க வேண்டும். அதுவேறு. கண்டக்டரிடம், குரல்கொடுத்து இறக்கிவிடச் சொல்லிவைப்பது நல்லது.
பரபரப்புகள் துவங்கின. அதுவரை கீழே நின்றிருந்தவர்கள் வேகமாய் உள்ளே வந்து அடங்கினார்கள். பஸ் திடுக்கென்று சிற்றசைவுடன் உரும ஆரம்பித்தது.
வீட்டை நெருங்கத் தெம்பே இல்லை. பிரபுவின் முகத்தை இப்போது பார்க்க முடியுமா? உடம்பு அதிர்ந்து தேராய்க் குலுங்கியது. தள்ளாடி நடந்து போனான். எங்காவது மண்டையை மோதிக் கொண்டு உள்பாறையைக் கரைத்து விட ஆவேசமாய் வந்தது. அதைச் சுமந்துகொண்டு நடக்க முடியவில்லை. நான் என்ன செய்வேன் பிருந்தா?… எனக்கு எதுவும் புரியவில்லையே பிருந்தா?… நான் செத்துப் போயிருந்தால் கூட இத்தனை கஷ்டம் இருக்காது. ரத்னா இருக்கிறாள். குழந்தையை அப்படிப் பார்த்துக் கொள்கிறாள். அதன் தேவைகளை அப்படி கவனித்துக் கொள்கிறாள்.
எனக்கு இப்போது யாருமே இல்லை. கூட என்னுடன், என் அழுகையைப் பகிர்ந்துகொள்ள யாருமே இல்லை பிருந்தா…
திடீரென்று வீடு வந்து விட்டது. நெஞ்சில் யாரோ வாளைச் செருகினாற்போல இருந்தது.
கதவு திறந்தே இருக்கிறது. உள்ளே நுழைந்து செருப்பை உதறிய கணம் உள்ளேயிருந்து ரத்னா வருகிறாள். “அத்தான்” என்று அவனைக் கட்டிக் கொள்கிறாள். பெற்றவள் போய்விட்டால் என்ன? பிரபுவின் அம்மையல்லவா இவள்? பாவம் இந்தச் சின்ன வயசில் இதை இவள் எப்படித் தாங்கிக் கொண்டாள்? தோளணைத்து மாலையாய்க் கிடந்த அவள் கைகளை விலக்கிக் கொண்டான்.
தள்ளாடி உள்ளே போனான். அத்தனை உறவினர்களும் தூங்காமல் அந்த இரவில் அமைதியாய், பக்கத்து வீட்டுக்கு இடைஞ்சல் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். மாமனார் தலையை ஆட்டியபடி எழுந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
பேச எதுவும் இல்லை. உள்ளறைக்குப் போகும்போதே நிலைப்படி தடுக்கி மண்டையில் ணங்கென்று சப்தித்தது. குனிந்து போனான். நுழைந்ததும் குழந்தை பார்வையில் பட்டது. சாட்டையாய் அவனை அறைந்தது அந்தக் காட்சி. ஆ, நான் அழக்கூடாது. தள்ளாடி அருகில் போனான். விழுந்துவிடக் கூடாது. நிதானமாய் உட்கார்ந்தான். மல்லாக்கக் கிடந்தது குழந்தை. கண்மூடிக் கிடந்தது. நெற்றியில் திருநீறு பூசியிருந்தார்கள். தானே எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். ஒரு நிமிடம் அதன் முகத்தைப் பார்த்தான். எப்பவும் அவனைப் பார்த்ததும் பார்த்த கணம் கண்பொங்கிச் சிரிக்கும் அது. உடம்பு தானறியாமல் குலுங்கக் குலுங்க நீர்க்குடம் அதிர்ந்து சரிந்தாற்போல குழந்தைமேல் அவன் கண்ணீர் வழிந்தது. ஆ, என் மகனே. எத்தனை கனவுகள் வைத்திருந்தாயோ? தூங்கும்போதே உன் கண்ணுக்குள் கருவிழி துடித்து அலைவதைப் பார்த்திருக்கிறேனடா. அமைதியாய்க் கிடந்தன அவை. அதன் கண்களை முகத்தை கன்னங்களை உடம்பெங்கும் வருடிக் கொடுத்தான். சில்லிட்டுக் கிடந்தது உடல். வயிற்றில் வாசனை பிடித்தபோது மீண்டும் தன்னுடம்பு அதிர ஆரம்பித்தது. முதுகில் யாரோ பிடித்துக் கொள்கிறார்கள்.
குழந்தையை யாரோ வாங்கிக் கொண்டார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ஓ, எழுந்துகொள்ள வேண்டும். சரி, என எழுந்து கொண்டான். வெளியே வந்தான். மாமனாரிடம் கையைப் பிடித்துக் கொண்டு “எல்லா ஏற்பாடுகளும்…..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்குமுன் குரலை முந்திக் கொண்டு ஒரு விசும்பல் தளும்பியது. அவர் அவன் தோளை அமுக்கினார். யாரோ நாற்காலி கொண்டு வருகிறார்கள். உட்கார்ந்து கொண்டான்.
சடங்குகள் விறுவிறுவென்று நிகழ்ந்தன. அதெல்லாம் அவன் கவனத்திலேயே இல்லை. நீளவாக்கில் இடுகாட்டில் பள்ளம் பார்த்தான். அதில் குழந்தையை மெல்லக் கிடத்தினான். சரசரவென்று பையில் இருந்து சில்லரைகள் விழுந்தன. யாரோ எடுக்கக் குனிந்தார்கள். வேண்டாம், போகட்டும் எனத் தடுத்தான். முகத்தை மூடிவிட்டு, மேலே மண்ணைப் போட்டபோது பெருங்கேவல் கிளம்பி மயக்கமாய் வந்தது. தலைக்குள் ஹெலிகாப்டர் இரைச்சல். யாரோ பிடித்துக் கொண்டார்கள்.
ஹாவென முழு பிரக்ஞையும் திரட்டி மூச்சு ஒன்றை இழுத்துக் கொண்டான். ஆக, இதையும் நான் அனுபவிக்க வேண்டியதாயிற்று… அட, அறிவாளி நாயே அழுது தொலையேன்… விரக்தியாய் உள்ளேயே இன்னொரு மனம் சிரித்துக் கொண்டது.
திரும்பி மாமனாரைப் பார்த்தான். “போகலாம்” என்றான்.
வீட்டுக்கு வந்தபோதும் யாரோடும் பேச முடியவில்லை. மனம் திறக்க முடியவில்லை. ரத்னா முகத்தைத்தான் பார்க்க சகிக்க முடியாதிருந்தது. என்ன அழுகை. கரைந்து உருகிப் பெருகுகிறாள். அவன் முகத்தைப் பார்த்து சட்டென்று கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.
வீட்டில் பெரிய விளக்கு ஒன்று, அருகிலேயே சிறு விளக்கு ஒன்று என ஏற்றி வைத்திருக்கிறார்கள். என் விளக்கு ஏற்றப்படும் வரை நான் காத்திருக்க வேண்டும், என ஓர் அலட்டலான சிந்தனை எழுந்தது. யாரோடும் பேச அவனுக்கு எதுவும் இல்லாதிருந்தது. பகிர்ந்து கொள்ள அவனுக்கு யாருமே இல்லை. பரவாயில்லை, பரவாயில்லை…. எனத் தலையை உதறிக் கொண்டான்.
என்றாலும் அந்தக் கண்கள்…. அதன் வெறிச்சிட்ட வெறுமை…. ரத்னாவின் பார்வை அவனை ஊடுருவி உட்புகுந்தது. அவன் நரம்புகள் அவளைச் சந்திக்கையில் அதிர்ந்தன. அட அம்மையல்லவா இவள்? யாரிடம் தன் அந்தரங்க துக்கத்தை இவளால் பகிர்ந்து கொள்ள முடியும்.
மாடியறையில் தனியே கொஞ்சநேரம் உடலைச் சாய்த்து முதுகு ஓயக் கிடக்கலாமாய் இருந்தது. நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அவனை ஒரு ரஸ்தாவாக்கி வாழ்க்கை, யானை ஊர்வலம்போல அவன்மேல் போகிறது. கண்கள் எரிந்தன. சிலீர் சிலீரென்று மனசில், அவன் குழந்தைமேல் மண்மூடும் காட்சி வருகிறது.
திடுமென ஒரு வெளிச்சம் கண்ணில் குத்துகிறது. சிறு சப்தங்கள். அறைக்கதவு திறந்து யாரோ நுழைகிறார்கள். அது ரத்னாவின் ஒலிதான் என்கிறது சூட்சுமம். சுதாரிக்குமுன் அவன்மேல் சரிந்தழுகிறது அவள் உடல். ரகசியக் கிசுகிசுப்பாய் அவன் கன்னத்தில் உரசி, தழுதழுக்கிறாள். அழுகை. ஈரக்கூந்தலின் பிரிகள் அவனில் தடவிக் குலுங்கின. “அழுதுருங்க அத்தான்.” அவன் இரு கன்னங்களையும் தாங்கி அழுத்தமாய் அவன் உதடுகளில் முத்தமிட்டாள் ரத்னா. எழ முயன்றான். முடியவில்லை. சரி, என அனுமதித்தான். அவள் ஆவேசம் அடங்கட்டும். காத்திருந்தான்.
அவளைப் பிரித்து நெற்றியில் இதமான பதில் முத்தமொன்றைப் பதித்தான். அவளைக் கட்டிக் கொண்டு தடவிக் கொடுத்தான். எதுவும் பேசவில்லை. திகைப்பாய் இருக்கிறது.
சட்டென்று பம்பரக் கயிறை அவிழ்த்துக் கொண்டு அவன்மேல் வந்து விழுந்தாள். திரும்பவும் கயிறின் உட்சுருட்டலுக்குள் போலப் பின்வாங்கினாள் ரத்னா. எழுந்து உட்கார்ந்து அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்லக் கீழே இறங்கித் தெருவுக்கு வந்தான். சட்டென்று அந்த வெளிச்சம் பார்க்க கண் கூசியது. மாமனார் இல்லை. பரவாயில்லை. இனி நான் தனிமைக்குப் பழகிக் கொள்ள வேண்டும் …. விரக்தியாய்ச் சிரித்துக் கொண்டான். கால் போனபோக்கில் கொள்கையில்லாத நடை. வெயில் அதிகம்தான். கண்கள் எரிந்தன. பரவாயில்லை. குனிந்த தலையின் ஈரக்கூந்தல் உரசல்கள். அந்த அழுத்தமான முத்தம்… உதடுகளைத் துடைத்துக் கொண்டான்.
வயல்வெளிகளில் காற்று வித்தியாசப்பட்டது. ஒரு ஈரக்குளுமை பழகிய நாயாய் வாலும் உடம்பும் பரவசப்பட அவன் காலை வந்து தழுவியது. நெல்லடி களத்தின் பூவரசடி. பூவரச மடி. போய் உட்கார்ந்து கொண்டான். வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஒருகணம் அவனைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டது தெரிந்தது. கவனியாதது போல் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டபோது உதடுகளில் திரும்ப அந்தக் குறுகுறுப்பு.
“என்ன மாப்ள இங்க உக்காந்துட்டீங்க?” கண்ணைத் திறந்து பார்த்தான். திருநீறு பூசிய முன்வழுக்கை முகம். மாமனார். “-ச்சும்மா…” என்றான். “இந்தப் பக்கம் காத்து நல்லாருக்கு…. வாங்க உக்காருங்க” என்றான்.
“வயக்காட்டுப் பக்கமாப் போய்வந்தேன். எப்பா ஈஸ்வரா….” என முனகியபடி உட்கார்ந்தார் அவர். தொடர்ந்து என்ன பேச என்று அவரும் திகைத்தாற் போலிருந்தது.
சரியென்று அவனே “நான் ஒரு தப்பு பண்ணிட்டேம் மாமா, ” என்று ஆரம்பித்தான். “இந்தப்பிள்ளை…. பிரபுவை வளர்க்க, உங்ககிட்ட நான் விட்ருக்கப்டாது” என்றான். “என்னய்யா சொல்ற?” என்றார் அவர் பதறி. “நம்ப ரத்னா ஒரு குறையும் இல்லாமக் குழந்தையைப் பாத்துக்கிட்டாய்யா…” அழுதுவிடுவார் போலிருந்தது.
“ஐயோ மாமா. உங்க கவனிப்பை சந்தேகப்பட்டா நான் பாவி. நான் உங்களைக் குத்தம் சொல்லல. ‘நான்’ விட்ருக்கப்டாதுன்னு…. என்னைப் பத்திச் சொல்ல வந்தேன்” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.
“பாவம் சின்னப் பொண்ணு ரத்னா. அவளை நான், இத்தனை நாள் என் பையனை வளர்க்க, என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கிட்டேன்…” அழுதான் அவன். “அவளுக்கேயான அந்த இளமை, கனவுகள், ஆசை…. எதையும் நான் கவனிக்கவேயில்லை” தலையை உதறிக் கொண்டான்.
“அப்படியெல்லாம் இல்லய்யா. கூடப் பொறந்த அக்காவுக்கு இதுகூட அவ செய்யலயின்னா எப்பிடி?” என்றவரைத் தலையாட்டி மறுத்தான் அவன்.
“அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை, ஒரு உலகம் இருக்கு மாமா. அதை நான் மதிச்சி வழி விட்ருக்கணும். எத்தனை சுயநலவாதி நான்….” அவர்மேலே பேசுமுன் அவனே தொடர்ந்தான்.
“அதுக்காக நான் உங்ககிட்டயும், ரத்னாகிட்டயும் இப்பவாவது மன்னிப்பு கேட்டாகணும்…” என்று அவர் உள்ளங்கையில் முகத்தைப் பதித்து வணங்கினான். “இப்ப அவளும் பிரபுவைத் தொலைச்சிட்டுத் தவிக்கறா…. எல்லாம் என்னாலதானே? இப்ப அவ தேவை ஒரு குழந்தை மாமா…. அது தெரியுது எனக்கு….”
அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“பிருந்தாவோட நகையெல்லாம் அப்படியே இருக்கு. அதை ரத்னாவுக்கு எடுத்துக்கலாம் நீங்க. உடனே ஒரு நல்ல மாப்ளையப் பாத்து அவ கல்யாணத்தை முடிங்க மாமா. செலவைப் பத்தி யோசிக்க வேணாம். ரத்னா கல்யாணம் என் பொறுப்பு…. என் கடமை” என்றான் அவன்.

—–
பின்குறிப்பு –
டபிள்யூ. சாமர்சட் மாம் எழுதிய நாவல்களில் ‘கேக்ஸ் அன்ட் ஏல்’ எனக்கு மிகவும் பிடித்தது. ஓர் எழுத்தாளன் பற்றிய கதை அது. அந்த எழுத்தாளனது சிறந்த கதை – ‘தி கப் ஆ·ப் லை·ப்’ என ஒரு கதை சொல்வார் மாம். குழந்தை இறந்துபோன அன்று உறவனர்களுக்கு மத்தியில் செயற்கையான அந்த ஒட்டுமொத்த ஒப்பாரியெடுப்புக்கு மத்தியில், மனம் வெதும்பிய பெற்றோர், தனித்த அந்நாள் இரவில் மனமொன்றிக் கரைந்தபடி, ஆறுதலாக ஒருவரை ஒருவர் தழுவி, உடலுறவு கொள்வதாகக் கதை. நம் மரபுக்கு ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தால் என்ன? – ஆகவேதான் /தந்தையாய் உணர்ந்தேன்!/

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்