வ ழ க் கு வா ய் தா

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

ம.ந.ராமசாமி


உரிமை-இயல் (சிவில்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக மாடசாமி முடிவு மேற்கொண்டான்.

பக்கத்து வீட்டுக்காரன் ரங்கசாமி தன்வீட்டைப் புதுப்பித்துக் கொண்டான். இரு வீடுகளுக்கும் இடையே நீண்ட ஒரே சுவர். அப்படித் தன்வீட்டை அவன் புதுப்பித்ததில் நடுச்சுவர் சிதலமடைந்தது. பழங்காலத்துச் சுவர். மாடசாமி வீட்டின் பக்கமாக ஒருபகுதி இடிந்து பாறையாக விழுந்தது. நல்ல காலமாக எவருக்கும் விபத்து இல்லை. பொருள் ஏதும் சேதமடையவில்லை.

வேட்டியை உயர்த்தி டப்பாக் கட்டாகக் கட்டிக் கொண்டு மாடசாமி சண்டைக்குப் போனான்.

”கோவிச்சுக்காதே மாடசாமி. வீட்டை இடிச்சுக் கட்டறதோ கட்டறேன். புதுச்சுவர் கட்டிடறறேன்” என்று ரங்கசாமி சாத்வீகமாகச் சொன்னான்.

நல்லதுதானே! பழைய சுவர் வெறும் சண்ணாம்புக் காரையால் கட்டப் பட்டது. சிமிண்ட் என்னும் சாம்பல் நிறத் து¡ள் காணாத காலத்தில் எழுந்தது. மாடசாமி பகுதிச் சுவர் பாளம் பாளமாகப் பெயர்ந்து உதிர்ந்து செங்கல் தெரிந்தது. புதிய சுவர் என்றால் நல்லதுதான். சமாதானமாகித் திரும்பினான் மாடசாமி.

புராதான வீடு அது. வீடுகள் அவை. தன் ஆசைநாயகிக்கு அந்தக் கால ஜமீந்தார் ஒருவர் ஆசை ஆசையாகக் கட்டித்தந்த வீடு. ஜமீந்தார் காலமாகிப் போய்ச்சேர்ந்து, ஆசைநாயகி நீண்டநாள் வாழ்ந்தவரை, பிள்ளைகளும் பேரன் பேத்திகளுமாக வீடு கலகலவென்று இருந்தது. கூட்டுக் குடும்பம். பாட்டி கண்களை மூடியதும், பேரன்மார் இருவர் மோதிக் கொண்டனர். வீட்டின் நடுவே நீண்ட சுவர் எழுந்து கூரையை முட்டியது. இப்போது அந்தப் பேரன்மார்களின் பேரன்கள் பிளவுபட்டு இரண்டான வீடுகளில் அடுத்தடுத்து வாழ்ந்து வருகின்றனர்.

தன்பகுதி வீட்டை ரங்கசாமி இடித்துப் புதுப்பித்ததில், அந்தப் பழைய சுவர் இடிந்ததில் நியாயம் உண்டு. சொன்னபடி ரங்கசாமியும் புதுச்சுவர் எழுப்பி விட்டான். பழைய சண்ணாம்புக் காரைச் சுவருக்கு பதிலாக, இப்போது சிமிண்ட் காரைச் சுவர். தாற்காலிகமாகத் தென்னோலைத் தடுக்குகள் வைத்து மறைத்தபிறகு புதுச்செங்கல் வைத்துக் கட்டிய சுவர். சிமிண்ட் கலவை சரியாய் இருக்கிறதா, மணலைக் கூட்டி சிமிண்டைக் குறைத்து ரங்கசாமி மிச்சம் பிடிக்கிறானா என்பதைக் கண்கொத்திப் பாம்பாக மாடசாமி கவனித்தான். கொத்தனார் யோக்கியமான மனிதர். அப்படியெல்லாம் செய்யவில்லை.

சுவர் எழுப்பி வெளிப்புறக் காரையும் பூசியாகி விட்டது. நெருங்கிப் பார்த்தால் புரியாத மணம். பெயிண்ட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி. அந்தக் காலமாக இருந்தால் சுண்ணாம்பால் சுவருக்கு வெள்ளையடிப்பார்கள். இப்போது பெயின்ட்கள் என்று டின் டின்காக வந்து விட்டன. வண்ண வண்ண பெயின்ட்கள். ரங்கசாமி தன் பக்கத்துக்கு வெளிர்நீல பெயின்ட் அடித்துக் கொண்டான். அதே வெளிர்நீல வண்ணத்தைத் தன் பக்கத்துக்கும் ஆளனுப்பி அடிக்கச் செய்வான் என்று மாடசாமி எதிர்பார்த்தான். நடக்கவில்லை.

வேலையெல்லாம் முடிந்து தமது சாமக்ரியைகளை எடுத்துக் கொண்டு, பேசிய கூலியை முபதுமாகப் பெற்று, ஆள் பரிவாரங்களுடன் கொத்தனார் போய்விட்டார். அப்பன்னா நம்ம பக்கத்துச் சுவருக்கு ரங்கசாமி பெயின்ட் அடிக்க மாட்டானா? ஏன்? மாடசாமி தனக்குள் கேட்டுக் கொண்டான். நேரிலேயே கேட்டுவிடுவது என்று ஓர் இரவு மணி எட்டு அளவில் பக்கத்து வீட்டினுள் நுழைந்தான்.

****
மேஜை நாற்காலி என்று போட்டுக் கொண்டு குழல் விளக்கொளியில் ரங்கசாமியும் அவனது இரு மக்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நின்றபடி ரங்கசாமியின் மனைவி ரங்கசாமியின் மனைவி முகத்தில் முறுவலோடு பரிமாறிக் கொண்டிருந்தாள். அவள் அசையும் போது வைர மூக்குத்தி ஒளியை வாரி வீசியது. புதுப்பணம்… என்று மாடசாமி தனக்குள் சொல்லிக் கொண்டான். கவிந்திருந்த வெங்காய மணம் பிண வாடையாகப் பட்டது.

”வா வா மாடசாமி, உட்காரு சாப்பிடலாம்…” என்று கூப்பிட்டான்

”இல்லே அண்ணே வேணாம்” – மாடசாமி ஒரு இரும்பு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். புதுப் பெயிண்டின் மணம் மூக்கை நெருடியது. காத்திருந்தான்.

சாப்பிட்டுக் கைகழுவி தோள்த்துண்டில் துடைத்தபடி ரங்கசாமி வந்தான். ”என்ன சமாச்சாரம்?” என்று கேட்டுவிட்டு இன்னொரு நாற்காலியை இழுத்து அவன் அருகில் உட்கார்ந்தான். ”சொல்லு.”

”என் பக்கத்துச் சுவருக்கு இன்னம் பெயிண்ட் அடிக்கல்லியே? அதுபத்திக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்.”

வியப்புடன் மாடசாமியை ரங்கசாமி பார்த்தான். அவன் இப்படியரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

”ஏன்?” என்றான் விறைப்புடன் மாடசாமி. ”என் பக்கத்துக்கும் அடிக்கணுமில்லே? இதோ உன் சைடுக்கு அடிக்கலே? அதே போல…?”

ரங்கசாமி லேசாகச் சிரித்தான். ”மாடசாமி, நீ ஒண்ணைப் புரிஞ்சுக் கிடணும். இடிஞ்சு போன சுவரு அருதப் பழசு. சுண்ணாம்பு காணாச் சுவரு. எந்தக் காலத்துல கட்டியதோ? அது விரிசல் விட்டு காரை பெயர்ந்து அசிங்கமா இருந்திச்சு. வீட்டை நான் புதுப்பிச்சதுலே உனக்கும் சேர்த்து சிமிண்டாலே சுவர் கட்டித் தந்திருக்கேன். செங்கல் தெரியறாப்ல விடாமல், சிமிண்ட் காரை பூசியிருக்கேன். இவ்வளவு செஞ்சது போதாதுன்னு பெயிண்ட் வேற அடிக்கச் சொல்றியே! அதை நீ செய்திடக் வடாதா?”

”அதான் ஏன் அண்ணே?” ரங்கசாமி சொல்வதில் நியாயம் இருப்பதாக்த் தெரிந்தாலும், விட்டுக் கொடுக்க முடியாத மனோபாவம். ”காரியம்னு ஒண்ணு தொடங்கினா அதை முழுசாப் பண்ணணும் இல்லியா?”

”முடிச்சிட்டதாத்தான் நான் நினைக்கிறேன்,” என்றான் ரங்கசாமி முக இறுக்கத்துடன்.

”இதோ பார் ரங்கசாமி அண்ணே. சுவர் பொது. அதை இடிக்கிறதுக்கு முன்னாடி என்ட்ட ஒரு வார்த்தை நீ கேட்டிருக்கணும். செய்யல. இடிச்சதும் நான் வந்து கேட்டேன். புதுச் சுவரு கட்டறதாச் சொன்னே. கட்டியும் ஆச்சு. சுவர் இப்பவும் ரெண்டு பேர்த்துக்கும் சொந்தம். உன் பக்கம் எப்பிடி பெயின்ட் அடிச்சியோ என் சைடுக்கும் அப்டியே பெயிண்ட் அடிக்கறதுதானே நியாயம்? அடிக்க வேணான்றியா? எனக்குப் புரியல்லே.”

நியாயம் என்ற சொல் கேட்க ரங்கசாமியின் முகம் மேலும் இறுகியது. தான் எதோ அநியாயம் இழைத்து விட்டதாக அல்லவா இவன் கருதுகிறான்?- ”என்ன மாடசாமி நியாயம் பேச வந்துருக்கியா?” அவன் குரலில் கடுமை தெரிந்தது.

”நியாயத்தை எடுத்துச் சொல்றேன். என் பக்கத்துச் சுவருக்கு பெயிண்ட் வேணான்றியா? அதான் உன் நியாயமா?”

”ச், ஏன் நீயே பெயிண்ட் அடிச்சுக்க வேண்டிதுதானே? சுவர் கட்டித் தந்திருக்கிறேன், பலமான சுவரு. ஏழு தலைமுறைக்குத் தாங்கும். நீயே பெயிண்ட் அடிச்சுக்கயேன். அதிலேன்ன தப்பு?”

”நான் ஏன் அடிக்கணும்? சுவரை இடிச்சது நீ!”

”அந்தப் பழைய சுவரை விட இந்த பெயிண்ட் அடிக்காத புதுச் சுவரு எவ்வளவோ ஒஸ்தி. உன் பக்கத்துச் சுவரு சண்ணாம்பைக் கண்டே பல மாமாங்கம் ஆயிருக்கும்!”

”அப்ப பெயிண்ட் அடிக்க மாட்டியா?” மாடசாமி எழுந்தான்.

”உன் பக்கத்துச் சுவருக்கு நான் ஏன் பெயிண்ட் அடிக்கணும்?”

”அப்பிடியா?” ஹ்ரும், செருமியபடியே மாடசாமி நடந்தான்.

****
வழக்குப் போட்டுவிட வேண்டியதுதான்!

வழக்கு என்றால் வக்கீலைப் பிடிக்க வேண்டும். பாண்டியன் பி. எ., எல்.எல்.பி., என்று பலகை அவன் மனசில் எழுந்தது. அவன் ஆங்கிலம் வாசிக்க அறிந்தவன். பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். ரங்கசாமி? அவன் பன்னிரண்டு. பாஸ்!

வழக்கு என்றால் செலவாகும். என்ன செய்வது? மனிதனுக்குள் மானம் ரோஷம் என்று இருக்கின்றனவே. அத்தனை ஆவேசத்தோடு எழுந்து வந்தபின் வெறுமனே விட்டு விட்டால் பிறகு ரங்கசாமி முகத்தில் எப்படி விழிப்பது? போக வர ஒரு பார்வை, ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பானே.

மனைவியிடம் சொன்னான். ”வேணாங்க. கோர்ட்டு கேஸ¤ன்னு ஆளையே முபங்கிரும்” என்றாள் அவள்… அவள் அப்படிச் சொல்கிறாள் என்றால் வழக்கு தொடுத்துதான் ஆகவேண்டும், என அவன் உடனே முடிவெடுத்தான். அவர்கள் இருவருக்கும் அப்படியரு நல்லுறவு! மற்ற பாடமெலலாம் மறந்து போனாலும், ஒளவையாரின் ‘தையல் சொல் கேளேல்’ – அது ஞாபகம் இருந்தது.

வக்கீலைச் சந்திக்க மாடசாமி நகரத்துக்கு பஸ்ஸில் போனான்.

”என்னப்பா?” என்று அலுத்துக் கொள்பவர் போலக் கேட்டார் பாண்டியன். சற்று வயதானவர். தேய்த்துக் கழுவ உதவும் பிரஷ் போல குட்டைத் தலைமுடி. வயதா? அனுபவம் அது! ·பீஸ் என அவசரப் படமாட்டார்!

”ஒரு கேஸ் போடணுங்க!”

”அதுக்குத்தான் வந்திருக்கேன்னு தெரியும். சொல்லு.”

விவரத்தை மாடசாமி சொன்னான்.

”கேஸ் போடவேண்டிய விவகாரம்தான்!” என்றார் பாண்டியன்.

”அப்ப கேஸை எடுத்துக்கிடறீங்களா?”

”பின்ன எதுக்கு நான் இருக்கேன்? நீதிமன்றங்கள் எதுக்கு இருக்கு? இந்த நீதிமன்றங்கள் இருக்கிறதோ நாடு பிழைக்கிறதோ. இல்லைன்னு வெச்சிக்க…?”

”என்னாவுங்க?”

”உலகமே சுடுகாடாகும்!”

”என்னிக்குங்க வழக்கு தொடுக்கலாம்?”

”ஏன் நாளைக்கே தொடுக்கலாம்?” – எதோ பூக்களைச் சரமாகத் தொடுப்பதுதான் வழக்கு தொடுப்பது, என்பதுபோலச் சொன்னார். ”நாள் நட்சத்திரம் திதி பார்க்கணுங்கறியா? அதெல்லா ஒண்ணும் வேணாம். என்னிக்கு நீ வழக்கு தொடுக்கறியோ அந்த நாள் நல்ல நாள்னு நினைச்சுக்க.”

யாருக்கு, என அவர் சொல்லவில்லை.

”சரிங்க” என்றான்.

மேஜைமேல் இருந்த படிவங்களில் ஒன்றை வக்கீல் உருவினார். ”இதுலே ஒரு கையெழுத்து போடு.”

”வெறுங் காகிதத்துலே எப்டிங்க கையெழுத்துப் போடுறது?”

”வெறுங் காகிதமா இது? அச்சடித்த காகிதம். பாரு. இதுக்கு வக்காலத்து நாமான்னு பேரு. உன் வழக்கை நடத்த நீ என்னை நியமித்திருக்கிறாய் என்கிறதை உறுதி செய்யும் பத்திரம். கெட்டிக்காரன்தான்! பொழைச்சுக்குவே! அட இங்கிலீஷ்ல கையெழுத்து போடுறே? படிச்சிருக்கியா?”

”பத்தாவது வரை” என்றான்.

”சரி” நிதானித்தார். ”வழக்குன்னா செலவாகும் தெரியுமில்லே?”

”தெரியுங்க. எவ்வளவு ஆகும்னு சொன்னீங்கன்னா தந்திடறேன்.”

”முடியாது. ஒரு வழக்குன்னா இவ்ள செலவாகும்னு சொல்ல முடியாது. வாய்தாவைப் பொறுத்தது.”

வாய்தா! கேள்விப் பட்டிருக்கிறான். என்ன என்று தெரியாது. கோர்ட்டு பாஷை. சட்டம் படித்தவர்களுக்குத்தான் அது தெரியும். ரெண்டு வருஷம் சட்டம் படிக்கிறதென்றால் சும்மாவா? கருப்பு கோட்டு – அதுக்குள் காக்காக் குஞ்சாக நீதி மறைந்திருக்கிறது. கையை உள்ளே விட்டு வெளியே எடுத்துப் பறக்க விடுகிறவர் வக்கீல்!

”இப்ப ஏதாவது பணம் கொணாந்திருக்கீங்களா?”

”இல்லே ஐயா!”

”ரைட். நாளை காலை ஒம்பது மணிக்குள்ளாற எடுத்திட்டு வா.”

”எவ்வளவுங்க?”

”முன்னு¡று ரூவா கொண்டா. இந்தப் பத்திரம் வாங்கத்தான். பத்திரத்தாள்னா தெரியும்லே? முத்திரைத்தாள்.”

”தெரியுங்க. பாத்திருக்கேன். வீட்டுக்கான பத்திரம் இருக்குது. ராஜா படம் போட்டிருக்கும்.”

”அதேதான். அது வாங்கணும். அ·பிடவிட் டைப் பண்ணணும். அப்றம் என் ·பீஸ் இருக்கு. வாய்தாவைப் பொறுத்தது அது.”

”எவ்ளவுங்க ஆவும்?”

”அதான் சொன்னேனேய்யா… அது வாய்தாவைப் பொறுத்தது! சரி, நீ பணத்தை எடுத்துக்கிட்டு நாளைக்கு வா. இன்னிக்கு என்ன கிழமை?” சுபா காலண்டரை வக்கீல் பார்த்தார். ”புதனா? நாளை வியாழன். அ·பிடவிட்டை டைப் பண்ணி வைக்கிறேன். விவரம் எல்லாம் சொல்லிட்டுப் போ. வர்ற திங்கள் வந்து கையெழுத்துப் போடு. சாட்சிக்கு இங்கே யாரைச்சும் பாத்துக் கிடலாம்…”

****
மாடசாமி வீடு திரும்பினான். மனசு நிரம்பி வழிந்தது. வக்கீலிடம் வழக்கைக் கொடுத்தாகி விட்டது. பெரிய வக்கீல். பின்னே இல்லையா? தலை நரை. அனுபவஸ்தர் என்று முகம் சொல்கிறது. பேச்சு சொல்கிறது. வழக்கு வெற்றி பெற்றுவிடும், என நம்பிக்கை வந்தது. நியாயம் அவன் பக்கம். சுவர் என்றால் முழுச்சுவர். இருமருங்கும் பெயிண்ட் அடித்த சுவர் – அதுதானே அர்த்தம்? ஒருபக்கம் பெயிண்ட் அடிக்காத சுவர் முழுமை ஆகவே ஆகாது! ரங்கசாமி நன்றாக மாட்டிக் கொண்டான்! கேள்விமேல் கேள்வி கேட்டு அவனை மூச்சுத்திணற அடிக்க மாட்டாரோ என் வக்கீல்? சிரிப்பாய் வந்தது… அவன் சார்பாய் நீதிபதி தீர்ப்புச் சொல்லித்தானே தீர வேண்டும்? ஆ, அப்பிடிச் சொல்லாவிட்டால்… மாடசாமி மனதில் மற்றொரு ஒளவையார் பாடல். எசகுபிசகான நேரத்தில் ஞாபகம் வந்தது. பள்ளியில் மனப்பாடப் பகுதி என ஏற்றி விட்டிருந்தார்கள்…

‘வேதாளம் சேருமே, வெள்ளருக்கு பூக்குமே
பாதாள மூலி¢ படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே, சேரன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னவர் மனை’

மன்றோரம் சொன்னவர், என்றால் நீதியை பட்சபாதமாகத் தீர்ப்பு சொன்னவர் என்று பொருள். பேய் பிசாசு சேரும், எருக்கஞ்செடி பூக்கும். அருகம்புல் படரும். தரித்திரம் எழ்மையைத் தரும் மூதேவி வந்து வாழ்வாள்… அதனால் மகா கனம் பொருந்திய நீதிபதி தன் பக்கமாகவே நியாயமான தீர்ப்பு வழங்குவார் என மாடசாமி நம்பினான்.

என்ன செலவாகும் தெரியவில்லை. முன்னு¡று ரூபாய் கேட்டிருக்கிறார். மேற்கொண்டு இருநு¡று ஆகலாம். அவனுடைய போக்குவரத்துச் செலவு, சாப்பாடு இத்யாதிகள் என கணக்கு பார்த்தாலும் எழுநு¡று எண்ணு¡றைத் தாண்டாது.

இந்த எண்ணு¡று ரூபாய்க்கு நாமே பெயிண்ட் வாங்கி, பிரஷ் வாங்கி, ஆள்வைத்து பெயிண்ட் அடித்திருக்கலாமே, என்று தோன்றியது. ஆ அப்படிச் செய்தால் அந்த ரங்கசாமி முகத்தில் கரி பூசுவது, கறுப்பு பெயிண்ட் அடிப்பது எப்படி? செலவு ஆனாலும் பரவாயில்லை. ரங்கசாமியை நம் பக்கத்துச் சுவருக்கு ஊரறியப் பெயிண்ட் அடிக்க வைக்க வேண்டும்! நினைக்கவே ஆனந்தம்!

எனக்கு மாத்திரம் கெளரவம் இல்லையா!

****
பணத்தை எடுத்துச் சென்று வக்கீல் பாண்டியனிடம் எதோ காணிக்கை செலுத்துவதுபோல் கொடுத்துவிட்டு வந்தான். வாக்குமூலப் பத்திரத்தில் கையெழுத்திட்டான். காத்திருந்தான். மகப்பேறு உற்றவளின் காத்திருப்பு.

ரங்கசாமிக்கு விஷயம் ஒன்றும் தெரியாது. திடீரென்று அவன் முகத்தில் வந்து விழும் அந்த அம்பு! பாருடா பார்!

ஒருநாள் அஞ்சலட்டை ஒன்று வக்கீலிடமிருந்து வந்தது. பிரதிவாதியான ரங்கசாமிக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், அதற்கு நீதிமன்றச் செலவு என ரூபாய் அறுபது ஆகும், எதுக்கும் ஒரு நு¡று ரூபாய் எடுத்துவருமாறு அதில் கண்டிருந்தது.

போய்ப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

சில நாட்களிலேயே ரங்கசாமி மீது மாடசாமி வழக்கு போட்ட சேதி ஊர் முழுக்க பரவியது. ரங்கசாமிமேல் பாய்ந்து விட்டது அந்த அம்பு. குறிபார்த்து மாரில்! அமீனாவோ டபேதாரோ நேரில் வந்து தந்து கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கலாம். தபாலில் வந்தால் இந்த சுவாரஸ்யம் இராது. ரங்கசாமி பயந்திருப்பான். நாயை அடிப்பானேன் பீயச் சுமப்பானேன்… அவனுக்குக் கிறுகிறுப்பாய் இருந்தது.

”மாடசாமி ரங்கசாமி மேலே கேஸ் போட்ருக்கானாமே? எதுக்கு இதெல்லாம்?” என்று செல்லம்மாள், முத்துராக்கு கேட்டார்கள். ”இதையெல்லாம் பேசித் தீர்த்துக்கிறதை விட்டுட்டு ஏன் மாடசாமி கோர்ட்டு கேசுன்னு அலையிறே? என்ட்ட ஒரு வார்த்தை சொல்லீர்ந்தா, நானே ரங்கசாமிட்ட நல்லவார்த்தை சொல்லி உன்பக்கத்துக்கும் சேர்த்து பெயிண்ட் அடிக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருப்பேனே?” என்றார் ஊர்ப் பெரியவர் நமசிவாயம்… அவருக்கு நான் பட்ட அவமானம் தெரியுமா?

காலை பத்துக்கு நீதிமன்றங்கள் திறக்கப் படும் நியதி என்று வக்கீல் அவனிடம் சொல்லியிருந்தார். காலை ஒன்பது மணிக்கே சிவப்பு கட்டட வாசல்கதவுப் பக்கம் வந்து விட்டான். காவலர் ஒருவர் சும்மாவாச்சும் சுற்றிக் கொண்டிருந்தார். இவனைக் கண்டும் காணாமலும் நடந்தார். இவனைப் போல எத்தனை அப்பிராணி சுப்ரமணிகளைப் பார்த்திருக்கிறாரோ! விளக்குமார், பிளாஸ்டிக் வாளி, ·பினைல் புட்டி, துடைக்கும் துணி என்று வேலைக்காரி ஒருத்தி வந்தாள் நீதிமன்ற வளாகத்தில். ஆச்சரியம்! பளபளப்பான சேலை ரவிக்கை அணிந்திருந்தாள். அரசாங்க வேலைக்காரி! மாசம் அவளுக்கு குறைந்தது ஐயாயிரமாவது சம்பளம் வரும். அது அவனுக்குத் தெரியாது.

நீதிமன்ற வளாகம் மெல்ல உயிர்த்துடிப்பு பெறலாயிற்று. புரண்டு படுக்கிறாப் போலிருந்தது. அவனைப் போன்ற கட்சிக் காரர்கள், வாதி – பிரதிவாதிகள் வரத் தொடங்கினர். யார் யார் என்னென்ன வழக்கு தொடுத்திருக்கிறார்களோ! எதை எதிர்கொள்கிறார்களோ!… தீர்ப்பு சாதகமா பாதகமா… என சிக்கலாகிக் கிடந்த மனத்துக்காரர்கள்!

இடதுகையை மார்போடு இணைத்து, வலது கையைக் கன்னத்தோடு பதித்து ஒரு ஒரமாக நின்றபடி மாடசாமி எல்லாம் கவனித்தான். நீதிமன்ற சேவகர்கள் வந்தனர். டவாலி அணிந்திருந்தார்கள். கருப்பு கோட்டு அணிந்து யானைகள்போல வக்கீல்கள் வந்தார்கள். ஸ்கூட்டர்கள் மோட்டார் பைக்குள் என அந்த வளாகத்தில் ஒலி சீறியது. கார்களில் வந்து சிலர் இறங்கினர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வளாகம் பரபரப்பு அடையத் தொடங்கியது. லேசாக வீசிய காலை இளங் கடற்காற்று… வளாகத்து மரங்களில் இருந்து மஞ்சளும் சிவப்புமான வாகைப்பூக்கள் உதிர்ந்தன. இவற்றையெல்லாம் நாளைதான் பெருக்குவார்கள். சந்தைபோல் கூட்டம் இல்லை. இது வேறு மாதிரியான கூட்டம். சந்தை என்றால் இரைச்சல், அது தனி அடையாளம்.

வக்கீல் பாண்டியன் வந்தார். கருப்பு கோட்டு கண்ணாடி அணிந்திருந்தார். தெய்வமே! மணி பத்தேகால். கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி விறுவிறுவென்று அவரைப் பார்க்க நடந்தான். இப்பிடியா லேட்டா வாறது? நீதிமன்றம் திறப்பதற்குள் ஆஜர் ஆக வேணாமோ? அதிலும் இந்த மெத்தனமான சாவகாசமான நடை, அவனால் தாளவியலாமல் இருந்தது. உயிர்ப்பு இழந்த கணங்கள். அருதப் பழசாகி நைந்துபோன வெளிறிப்போன கருப்பு அங்கி. கஷ்கத்தில் கேஸ் கட்டுகளை இடுக்கியிருந்தார்.

அவனைப் பார்த்ததும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் தலையாட்டி அருகே வரப் பணித்தார். இவன் கைகூப்பியதற்கு ஒரு பதில் மரியாதை செலுத்தத் தெரியாத மனுஷன். படிகள், நீதிமன்றப் படிகள்! வலதுகாலை வைத்து ஏறினான்! எல்லாம் நல்லபடியா முடியணுமே. முதன்முதலாய் நீதிமன்றப் படிகளில் கால் வைக்கிறான். மணமக்கள் கால் பதிப்பது போல அது முக்கிய கணமாகப் பட்டது. இது நல்லதுக்கா கெட்டதுக்கா, என மனசில் ஊசலாடும் சிறு கேள்வி. கட்டடத்துள் மேலாக பக் பக் என்று புறாக்கள் சப்தமெழுப்பிப் பறந்தன.

ஓர் அறையுள் பாண்டியன் நுழைந்தார். உரிமை-இயல் நீதிமன்றம் என்ற பலகை கண்ணில் பட்டது. உள்ளே சென்றான். அறை அல்ல அது. கூடம். பரந்த கூடம். மரத்தாலான மேஜைகள். நாற்காலிகள் இருந்தன. நான்கு விசிறிகள் ஒன்று மட்டும் லேசாகச் சுழன்றது. சுவரை ஒட்டி மரபெஞ்சுகள் காணப்பட்டன. மேஜைகள் நாற்காலிகள் பெஞ்சுகள் எல்லாமே கருப்படித்த பழங்காலத்து சமாச்சாரங்கள். கிளைவ், வாரன்ஹேஸ்டிங்ஸ் என்றெல்லாம் எப்பவோ படித்த பேர்களை ஞாபகப் படுத்தின.

அவனது இடது தோளில் அழுத்தி ஒரு பெஞ்சில் அவனை உட்கார வைத்தார் பாண்டியன். வாயால் ‘உட்கார்’ அல்லது சற்று மரியாதையாய் ‘உட்காருப்பா’ என்று சொல்லப்டாதா! நான் கூப்பிடும்வரை எழுந்துக்கப்டாது, என்கிற கறார் பாவனையா! பெஞ்சில் ஒடுங்கி மற்றவர்களுடன் உட்கார்ந்து கொண்டான். பூனையிடம் அகப்பட்ட சுண்டெலி! உடனடியாக பூனை அதைத் தின்றுவிடாது. இங்கும அங்கும் அலைக்கழித்து பரிதவிக்க ஓடவிட்டு ஓடிப்பிடித்து விளையாடும் குரூரம்!

வக்கீல் பாண்டியன் போனார். போனார். போனவர்தான்! அந்த நீதிமன்றக் கூடத்துள் யார் யாரோ வந்தார்கள். போனார்கள். கிசுகிசுவென்று பேசிக் கொண்டார்கள். வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள், கட்சிக்காரர்கள், சாட்சிகள். டவாலி அணிந்த சேவகர்கள்… அனைத்து மின்விசிறிகளும் இப்போது சுழன்றன.

ஆ, சாட்சிகள்! இவர்களை நம்பித்தான் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றன. தீர்ப்பும் இவர்களை ஒட்டியே அமைகின்றன. ஆனால் இவர்களை நம்பக் கூடாது, என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறான். நிதிமன்றத்தைச் சுற்றி சாட்சி சொல்லியே பணம் பெற்றுப் பிழைப்பவர் உண்டு, என்று கேள்விப் பட்டிருக்கிறான்.

எனக்கும் ஒரு சாட்சி தயார் செய்ய பாண்டியன் போயிருப்பாரோ!

ஆ, அந்தப் பாவி ரங்கசாமி? இன்னும் வரவில்லை! என் வரவில்லை? சம்மன் கிடைத்தும் வரவில்லை. சம்மனை அவமதித்தால் சும்மா விட்டு விடுவார்களா!…

>><< ''சைலன்ஸ்!'' குரல் கேட்டது. கருப்பு கோட் போட்ட நீதிமன்ற உதவியாளர் எழுந்து நின்றார். கூட்டம் ஆரம்பிக்குமுன் கடவுள் வாழ்த்து பாட எழுந்து நிற்கிறாப் போல! டவாலி அணிந்த சேவகன் உலக்கை போன்ற தடியால் மேடையில் தட்டினார். அனைவரும் எழுந்து நின்றனர். மாடசாமியும் நின்றான். அமைதி. நீதிபதி வந்தார். இருக்கையில் அமர்ந்தார். உதவியாளர் ஏதோ எண் சொல்லி, வாதி - பிரதிவாதி, என அழைக்கவும், இரண்டு வக்கீல்கள் நிதிபதிக்கு வணக்கம் தெரிவித்தனர். நீதிபதி இளைஞர். கல்லு¡ரி மாணவர் போலத் தெரிந்தார். கருப்பு கோட்டு. படிய வாரிய தலை மினுமினுத்தது. முகத்தில் அறிவுக்களை. நெற்றியில் லேசான திருநீற்றுக் கீற்று. என்ன கேஸ் விசாரணைக்கு வருகிறது, என அறிய அவன் ஆர்வப்பட்டான். வக்கீல்கள் எழுந்து எழுந்து மாற்றி மாற்றிப் பேசினார்கள். ஆங்கிலம் கலந்த மணிப்ரவாளப் பேச்சு. புரியவில்லை. வாதி பிரதிவாதிகளுக்கே புரியுமோ புரியாதோ! நீதிபதி அவ்வப்போது குனிந்து பார்த்துக் கொண்டார். வழக்கு மனு, எதிர்மனு என்று பார்க்கிறாராய் இருக்கும். கூடவே தடதடவென்று யா§¡ தட்டச்சு செய்கிற ஓசை... வாய்தா வேண்டும் என்றார் ஒரு வக்கீல். அடுத்த வக்கீலை நீதிபதி பார்த்தார். சம்மதம் என்பதாக அவர் தலையசைத்தார். மேடைக்குக் கீழாக அமர்ந்திருந்த உதவியாளரிடம் நீதிபதி ஏதோ கேட்டார். அவர் ஏதோ சொல்ல நீதிபதி குறித்துக் கொண்டார். வாதி பிரதிவாதி வராமலே வழக்கு மறுதேதிக்கு மாற்றப் பட்டு விட்டது. அஞ்சலட்டை புதிய நாள் தெரிவித்து அனுப்புவார்களாய் இருக்கும்! இப்படி வழக்குகள் தொடர்ந்தன. விக்டோரியா மகாராணியார் காலத்து கடிகாரம். மணி ஒன்று. அவன் வழக்கு எப்போது வரும் தெரியவில்லை. இந்த மனுஷன் பாண்டியனையும் காணவில்லை. என்னை ஒருவேளை மறந்துட்டாரா, என்று பயமாய் இருந்தது. திடீரென்று இப்போது என்னைக் கூப்பிட்டு விடுவார்களா, என்று திகைப்பாய் இருந்தது. ஆ அதோ. வக்கீல் பாண்டியன். அதே மெத்தனமான அவசரம் இல்லாத நடை! அவனைப் பார்க்க வந்தார். ''வா போகலாம்!'' ''எங்கே!'' என்று புரியாமல் எழுந்து நின்றான். ''சாப்பிட! சாப்பாட்டு நேரம் இது. ரெண்டரை மணிக்குதான் நீதிபதி திரும்ப வருவார். அவரும் சாப்பிடணும், இல்லையா?'' ''நம்ம வழக்கை எப்பங்க எடுத்துப்பாங்க? உங்களைக் காணமே?'' என்று தயங்கிக் கேட்டான். ''எப்ப நம்ம கேஸ் வரும்னு எனக்குத் தெரியும். மதியம் முச்சூடும் இங்கதான் இருப்பேன்... காலைல வேற கேஸ் கீஸ் வந்தா நான் எடுத்துக்க வேணாமா?'' ''வந்ததா?'' ''வரல'' என்றவர் ''வா சாப்பிடப் போகலாம்'' என்றார். ஓட்டலில் இறக்கை விழுந்த ஈசல் புழுக்களாக ஒரே கூட்டம். மொசைக் காணாத சிமிட்டி பெயர்ந்த தரை பாளமும் பொந்துமாய். கிளைவும் வாரன்ஹேஸ்டிங்சும் இங்கேதான் சாப்பிட்டார்களா! 'கிருஷ்ண விலாஸ்' பெயர்ப்பலகையே வர்ணம் போய் துருவேறிக் கிடந்தது. கிருஷ்ண விலாசுக்கு அடுத்த சொல் தாரால் அழிக்கப் பட்டிருந்தது. இந்தி எதிர்ப்புக் கால பழைய ஓட்டல். ''ரெண்டு சாப்பாட்டு டோக்கன், தயிரும் சேத்து... வாங்கிக்க'' என்றார் பாண்டியன். திடுக்கிடலுடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். அவர் அவன்பக்கம் திரும்பவேயில்லை. வாழ்நாளில் எத்தனை கட்சிக்காரரைப் பார்த்திருப்பார்! தினப்படி மதியப்படி கட்சிக்காரன்தானோ என்னமோ? மனசில் சபித்தபடி டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டான். மேஜைகள் அனைத்தும் நிறைந்திருந்தன. அவனுக்கும் இத்தனை நேர உள்க்கலவரத்தில் பசி அதிகமாகி யிருந்தது. மேஜையருகில் நின்றாலும் முட்டைக்கோஸ், சாம்பார், சூடான சோறு என மணம் கிளர்த்தியது. சாப்பிட்ட இலை எடுக்குமுன் அந்த நாற்காலியைப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் சேர்த்து அவன் காத்திருந்தான். அவர்பாட்டுக்கு லேட்டா வந்தால், கேஸ் நடக்க வேணாமா! கஷ்கத்தில் கேஸ் கட்டுகளுடன் வக்கீல் பாண்டியன் நின்றார். இப்படி நின்று நின்று பழக்கப் பட்டவராக இருக்க வேண்டும். சேர்ந்தாற்போல நால்வர் எழுந்தனர். அவசரமாக இருவரும் முன்னேறி எழுந்தவர்களைப் போகவிடாமல் மறித்து நாற்காலிகளுக்குப் பாய்ந்தனர். ''பரதேசிகள்'' என அவர்களில் ஒருவன் திட்டியபடி, குஸ்திபயில்வான் போல எச்சில்கையை உயர்த்திக் கொண்டு சென்றான். அவன் கேசில் என்ன நிலைமையோ! ரொம்பச் சண்டை போடாதேய்யா! அடுத்த கேஸ் எழுதிறப் போறானுங்க... புதுப்புது அனுபவங்கள். காசு கொடுத்துப் பெற்ற கசப்பான அனுபவங்கள். சாப்பாடு படு மோசம். வாய்க்கு விளங்கவில்லை. சாம்பார் என்றால் பருப்பு இருக்க வேணாமோ? நெற்றிப் பொட்டாய் வெந்து கையால் மசித்தால் மாவாக மசிகிற பருப்பு. முட்டைக்கோஸ் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளை அதிகம் வேக வைக்கக் கூடாது. சத்து போயிரும், என்பாள் மனைவி. இருப்புச்சட்டியில் கருக வதக்கியிருந்தார்கள். ரசம் என்ற பெயரில் வெந்நீரை ஊற்றினான். சாப்பிடுவதை நிறுத்தி பாண்டியனைப் பார்த்தான். ஒரு கப்பில் அந்த ரசத்தைக் கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். ரசங்கெட்ட ரசனை கெட்ட ஜென்மம் என்றிருந்தது. நல்லவேளை சாமி தயிர் கேட்டாய். பிழைத்தேன். புளிச்ச தயிர். பரவாயில்லை. சாம்பாரில் புளியேயில்¨! சுற்றிலும் ஆவேசமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பழகி விட்டதா? அல்லது வீட்டு மகாராணி கை இதைவிட மோசமா, தெரியவில்லை. ''ஏவ்'' என்றார் பாண்டியன். யோவ், என்று கத்த வேண்டும் போலிருந்தது! வயது ஐம்பத்தியைந்து அறுபது இருக்கும். ஒரு முப்பது வருட அளவு இதே ஓட்டல், இதே மதியச் சாப்பாடு, என வாழ்கிறாரோ பாவம்? அவருக்கு முன்பாகவே எழுந்து கைகழுவிவிட்டுக் காத்திருந்தான். பீடா, சிகெரெட் கடைகளை கவனித்து சற்று தள்ளி அவர் பார்வையில் படாதபடி நின்றான். கர்ச்சீப்பில் கைகளைத் துடைத்தபடி வந்த பாண்டியன் அவனைத் தேடினார். தேடட்டும் என்று காத்திருந்தான். அவர் நீதிமன்றத்தைப் பார்க்க நடந்ததும் பின்னே சென்றான். திரும்பிப் பார்த்தார். ''எங்க போயிட்டே? அங்க போயி உக்காந்திரு. சரியா ரெண்டரை மணிக்கு வரேன்.'' என்றுவிட்டுப் போனார். >><< அவனுடைய வழக்கு மூணரை மணி வாக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது. பரபரப்பாய் இருந்தது. அந்த ரங்கசாமிக் கடங்காரன் வரவேயில்லை. மனு, எதிர்மனுக்களை நீதிபதி புரட்டிப் பார்ப்பதை மாடசாமி கண்டான். வக்கீல் பாண்டியன் வழக்கின் சாராம்சத்தை விவரித்தார். தமிழில்தான். கவுத்தீராதீருமய்யா, என நினைத்துக் கொண்டான். இரு வீடுகளுக்கும் பொதுவான சுவரை பிரதிவாதி இடித்ததையும், இருவீட்டுக்கும் இடையே சுவரை எழுப்பியதையும், ஆனால் சுவரின் தன் பக்கம் மாத்திரம் பிரதிவாதி பெயிண்ட் செய்து கொண்டதையும், கேட்டபோது கூட வாதியின் பகுதியை பெயிண்ட் செய்ய மறுத்து விட்டதையும், அப்படிப் பெயிண்ட் பூசாதது தவறு, கனம் கோர்ட்டார் அவர்கள் பூசித்தர உத்தரவிட வேண்டும்... இந்த வழக்குக்காக வாதி செலவு செய்த தொகையை பிரதிவாதி தர வேண்டும் என்றும் பாண்டியன் தெரிவித்தார். நீ3திபதி தற்செயலாக மாடசாமியைப் பார்த்தபோது, பெரிசாய் ஆமாங்க, என்று தலையாட்டினான். பிரதிவாதியின் வக்கீல் வந்திருந்தார்! நீதிபதி அவரைப் பார்த்தார். ''வாதி தன் மனுவில் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒன்று, இடிபட்ட சுவர் மிகப் பழமையானது. ஏற்கனவே சிதிலமடைந்தது. காரை விழுந்து செங்கல்கள் தெரிந்தன. பிரதிவாதி இடித்தது உண்மை. ஆனால் புது செங்கல்களுடன் சிமிண்ட் காரைகொண்டு புதுச்சுவர் எழுப்பி விட்டார். பழைய சுவரைவிட இந்தப் புதிய சுவர் பலமானது. உறுதியானது. வலிமையானது. இவ்வளவு நல்ல சுவரைக் கட்டித் தந்திருக்க, வாதி என் தன் செலவில் பெயிண்ட் செய்துகொள்ளக் கூடாது, என்பது பிரதிவாதியின் வாதம்...'' அதையும் கேட்டுக் கொண்டார் அந்த இளம் நீதிபதி. இந்த சந்தர்ப்பத்தில் வக்கீல் பாண்டியன் குறுக்கிட்டார். ''கனம் நீதிபதி அவர்கள் மன்னிக்க வேண்டும். மனுவில் குறிப்பிடப் பட்ட வீடு மனுதாரருக்குத்தான் சொந்தம் என்பதற்கான சான்றை சமர்ப்பிக்கத் தவறிவிட்டேன். சான்றை சமர்ப்பிப்பதற்காக வாய்தா வேண்டும்..'' நீதிபதி ஏதும் பேசவில்லை. உதவியாளரைக் கண்ணாடியுள்ளிருந்து கீழ்ப்பார்வையால் நோக்கினார். உதவியாளர் மேஜைமேலிருந்த நோட்டுப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து விட்டு ஏதோ சொல்ல, நீதிபதி குறித்துக் கொண்டு, ''வரும் இருபத்திமூன்றாம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,'' என்று கூறி வழக்கு தாஸ்தாவேஜுகளை மேஜையில் ஒதுக்கி வைத்தார். மாடசாமிக்குத் திக்கென்றிருந்தது. வழக்கு இன்று முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்தான். வாய்தா என்றால் என்ன என்று இப்போது புரிந்தது. விசாரணைநாளை மற்றொரு நாளுக்கு ஒத்திப் போடுவது வாய்தா. வெளியே வந்ததும் ''ஏங்க வீட்டுப் பத்திரம் வேணுமின்னு ஒரு வார்த்தை சொல்லீர்ந்தீங்கன்னா கொணாந்திருப்பேனில்லே?'' என்றான் வக்கீலிடம். ''நம்ம விருப்பத்துக்கு எதையும் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடாது. நீதிபதியின் அனுமதியின் பேரில்தான் தரணும்.'' ''சட்டம் அப்டீங்களா?'' ''சட்டம்னில்லை. வழக்கம் அது. ஒழுக்கம். சம்பிரதாயம். அதை நாம மீறக் கூடாது. அப்பிடி அதிகப் பிரசங்கித் தனம் பண்ணி நிறைய கேஸ் தோத்திருக்கு. நீ ஒண்ணு பண்ணு. வீட்டுப் பத்திரத்தை ஜெராக்ஸ் காபி எடுத்துக்கிட்டு வா. ஒரிஜினலை நீதிபதி கேட்பாரு. சட்னு அதையும் காண்பிக்கத் தயாரா இருக்கணும். அப்ப நீதிபதி திருப்திப்படுவாரு. வழக்கு அப்பவே நம்ம பக்கம்னு ஒரு இது கிடைச்சிரும்... இருபத்திமூணாந் தேதி வாய்தா போட்டிருக்கு. வரச்சிலே ஒரு இர்நு¡று கொண்ட்டு வா.'' ''அன்னியோட வழக்கு முடிஞ்சிருங்களா?'' ''பாக்கலாம்.'' பாண்டியன் போய்விட்டார். ஏதோ பொறியில் மாட்டிக் கொண்டதாகப் பட்டது மாடசாமிக்கு. கரும்பு மிஷினிக்குள் உடம்பைக் கொடுத்தாப் போல. மனம் சோர்வு தட்டியது. மவனே, வேற கேஸ் அந்தாளுக்கு சிக்கும் வரை உனக்கு வாய்தா மேல் வாய்தாதான்! **** இருபத்தி மூன்றாம் தேதி பணத்துடன் சென்றான். முக்கால் பவுன் மோதிரத்தை அடகு வைத்து அவசரமாய்ப் பணம் புரட்ட வேண்டியிருந்தது. அடகு வைக்கு முன்பாக கண்ணாத்தாவிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். ''ஏங் கல்யாணத்துக்கு ஐயா போட்ட மோதிரம்'' என்றாள் அவள். சொல்லி வைத்தாப் போல இப்போதும் மூணரை மணியளவில் வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நீதிமன்ற உதவியாளரிடம் பேசி வைத்துக் கொண்டு பாண்டியன் வழக்கை இப்படி எடுத்துக் கொள்ள வைக்கிறாரோ என்று தோன்றியது. மதியச் சாப்பாட்டுக்கு இப்படியரு ஏற்பாடா!... இன்றைக்காவது வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப் பட்டால் போதும் என்றிருந்தது. ரங்கசாமியைக் காணவில்லை. அவனுடைய வக்கீலும் இல்லை, ஆச்சர்யமாக இருந்தது. வழக்கு எண் கூறப்பட்டு அவன் பெயர் கூப்பிடப் படவும் நீதிபதி அவன் வழக்குக் கட்டைத் தன் பக்கம் நகர்த்திக் கொண்டார். எதிர்மனுதாரரின் பெயர் மொழியப் பட்டபோது மன்றத்தில் அமைதி நிலவியது. ''எதிர்மனுதாரர் வரவில்லையா?'' நீதிபதி கேட்டார். ''காணோம்'' என்றார் பாண்டியன். சுற்று முற்றும் பார்த்தார் ''அவரது வழக்குரைஞரையும் காணோம்.'' ''சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்தீர்களா?'' ''இல்லை'' என்றார் பாண்டியன் விழித்தபடி. ''ஏன்?'' ''மன்னிக்கணும். மறந்து விட்டேன்.'' ''இன்னொரு வாய்தாவா?'' ''வேறென்ன செய்வது?'' முகத்தில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு பாண்டியன் சொன்னார். ''இது நல்லது இல்லை மிஸ்டர் பாண்டியன். இப்படி வாய்தா கொடுத்துக் கொண்டே இருந்தால், § தங்கியுள்ள வழக்குகள் மேலும் சேர்ந்து விடும். வழக்குகளை நாம் எப்போது முடிப்பது?'' அழகாய்த் தமிழில் பேசினார் நீதிபதி. நீதிபதியின் மேஜையை நெருங்கி தணிவாய்ப் பாண்டியன் சொன்னார். ''வழக்குகள் எல்லாம் முடிஞ்சிட்டால் நாங்கள் எப்பிடிப் பிழைக்கிறது? நீதிமன்ற பீரோவில் உள்ள கட்டுகள் எல்லாம் பைசலாயிட்டா, அப்புறம் நீதிபதிக்கே வேலை இல்லாமல் போகும்!'' நீதிபதி நகைத்தார். ''வாய்தா வேணுமா!'' தலையசைத்தார் பாண்டியன். மாடசாமி முன்னேறினான். ''வேணாங்க!'' என்றான். நீதிமன்றம் முழுதும் அவன் பக்கம் திரும்பியது. ''நீங்கள் யார்? மனுதாரரா?'' நீதிபதியான இளைஞர் கேட்டார். ''ஆமாங்க, வாய்தா வேணாங்க.'' பாண்டியனைப் பார்த்தார் நீதிபதி. ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மனுதாரர் வாய்தா வேணாம் என்கிறார்...'' ''வாய்தாவும் வேணாம், வழக்கும் வேணாம். தெரியாமல் மாட்டிக்கிட்டேங்க. புத்தி வந்திருச்சு'' என்றான் மாடசாமி. நீதிமன்றத்தில் எல்லாருமே சிரித்தார்கள். ''வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், என்கிறீர்களா?'' ''ஆமாங்க.'' ''சரி.'' குறித்துக் கொண்டார் நீதிபதி. பாண்டியனைப் பார்த்தார். ''எதற்கும் நீங்கள் வழக்கை வாபஸ் பெறுவதாக மனு தாக்கல் செய்யுங்கள்'' என்று கூறி வழக்குக் கட்டை மேஜையில் புறந்தள்ளினார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த நீதிமன்ற வளாகத்தில் அந்தப் புரட்சி நடந்தேறியது. வக்கீல் பாண்டியனிடம் சொல்லிக் கொள்ளாமல் மாடசாமி நடந்தான். இந்தப் பிறவியில் மட்டுமல்ல, ஏழு பிறவியிலும் அவன் நீதிமன்றப் படிகளில் பாதங்களைப் பதிக்க மாட்டான். அவன் சந்ததியினரும் நீதிமன்றம் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். **** அடுத்த ஞாயிறு காலையில் இரண்டு ஆண்களை ஏணி, பெயிண்ட் டின்கள், பிரஷ்கள் வகையறாக்களுடன் அழைத்துக்கொண்டு ரங்கசாமி மாடசாமி வீட்டுக்கு வந்தான். ''என்னா?'' என்றான் மாடசாமி வீறாப்புடன். ''சுவருக்கு பெயிண்ட் அடிச்சுடறேன்.'' ''வேணாம்.'' ''இதோ பாரு மாடசாமி. எதோ தவறு நடந்திட்டது. நீயும் கோர்ட்டு கேசுன்னு போயிட்டே. வழக்கை நீ வாபஸ் வாங்கிக்கிட்டதாக் கேள்விப்பட்டேன். ஒரே ரத்தம், நமக்குள்ள எதுக்கு வீண்தகராறு? நம்ம வீடுகள்லே நாளை நல்லது பொல்லது நடந்திச்சின்னா ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறணும், கூடிக்கிறணும். நானே தப்பு பண்ணினதா இருக்கட்டும். என்னை மன்னிச்சிரு...'' ''அடேடே பெரிய வார்த்தைல்லா பேசாதப்பா. உள்ள வா'' என்றான் மாடசாமி நெகிழ்ந்து. **** mnrwriter@ gmail.com

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி