மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30

This entry is part of 20 in the series 20060721_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சிஸ்டர் முத்துலட்சுமி காலமாகிப் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. இந்தப் பத்தாண்டு இடைவெளியில் பங்கஜத்தின் வாழ்க்கையிலோ அல்லது துர்க்காவின் வாழ்க்கையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. எனினும், பங்கஜத்தின் இடைவிடாத உழைப்பாலும், துர்க்காவின் ஒத்துழைப்பாலும் ஸ்திரீ சேவா மண்டலி பெரிதும் விரிவடைந்திருந்தது. பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் இரண்டும், தொழிற்கல்விக் கூடம் ஒன்றும் கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கிவந்தன. உணவு, உடை, உறைவிடம் ஆகிய தலையாய தேவைகளுக்காக ஆண்பாலரைச் சார்ந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்து பெண்களை விடுவித்தலே அவர்களின் துயர் துடைக்கும் என்பதும், தங்களை அண்டி வாழ்ந்தாக வேண்டியவர்கள் என்பதாலேயே பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற கேள்வி கேட்பாடற்ற அராஜக மனப்பான்மையைச் சிறிது சிறிதாகவேனும் ஆண்களிடமிருந்து அது அகற்றும் என்பதும் சிஸ்டர் முத்துலட்சுமியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வந்தது.

அதே நேரத்தில், பெண் விடுதலை என்பதன் பெயரால் பெண்கள் அசட்டுத்தனமான – தங்களுக்கு ஆபத்தைத் தரக்கூடிய – துணிச்சல்களில் ஈடுபடக்கூடாது என்பது அவரது கொள்கையா யிருந்தது. எந்தக் கூட்டததை அவர் நடத்தினாலும் சரி, பிற துறையினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் போதும் சரி அவர் தமது பேச்சிடையே இந்தக் கூற்றை வலியுறுத்தத் தவறியதே கிடையாது. பெண்களில் நிறையப் பேர் சட்டத் துறைக் கல்வியைப் பெற வேண்டும் என்பதும் அவரது விருப்பம். அவ்வாறு சட்டம் படித்துத் தேறியவர்களில் மாதருக்காக உழைக்கும் சேவை மனப்பான்மை கொண்டவர்களை வைத்து ஓர் அமைப்பை ஏற்படுத்திப் பெண் விடுதலைக்காகவும், அநீதிகளின் பிடியிலிருந்து பெண்களை விடுவிக்கவும், அக்கிரமங்கள் செய்யும் ஆண்களுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தரவும் பாடுபட வேண்டும் என்பது அவரது குறிக்கோளா யிருந்து வந்தது. அதைப் பற்றி அவர் அடிக்கடி சொல்லி வந்ததால், பங்கஜத்தின் இடையறாத முயற்சியால் அப்படி ஓர் அமைப்பு உருவாகியது. அவ்வமைப்பில் எல்லாருமே வக்கீல்களாக இல்லாவிடினும், சட்டம் படித்த சிலருடன் பட்டதாரிப் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் அதில் இருந்தனர்.

சிஸ்டர் முத்துலட்சுமி மறைந்த பிறகுதான் பங்கஜத்தால் அப்படி ஓர் அமைப்பை உருவாக்க முடிந்தது. அவரது எண்ணம் செயல்படுத்தப்பட்ட போது அவர் இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான்.

மகாத்மா காந்தியின் அறைகூவலுக்கிணங்க, ஏராளமான உயர்குடிப் பெண்கள் நாட்டின் விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்துக் கைதாகி வந்தனர். படிப்பறிவு என்பது அறவே அற்ற கீழ் மட்டத்துப் பெண்களில் சிலரும் காந்தியடிகளின் அழைப்புக்குச் செவி சாய்த்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டனர்!

ஒரு முறை அது பற்றிய பேச்சு வந்த போது, பங்கஜம், “பாத்தியா, துர்க்கா! எந்தக் குடும்பத்துல புருஷா, பொம்மனாட்டிகள் ரெண்டு பேருமே உயர் படிப்புப் படிக்கிறாளோ, அந்தக் குடும்பத்துல ஆண்கள் பெண்களை ரொம்பவும் அதிகாரமெல்லாம் பண்றதில்லே. அடக்கி வைக்கிறதுமில்லே. அதாவது, வேற வார்த்தைகள்லே சொல்லணும்னா, படிச்ச பெண்கள் ஆண்களோட அக்கிரமக் கட்டுப்பாடுகளுக்கு படிக்காத பெண்களைப் போல முன்ன மாதிரி அடங்கிப் போறதில்லேன்னு வெச்சுக்கயேன்!” என்று சிரித்தாள்.

ஸ்திரீ சேவா மண்டலியின் மூன்று கிளைகளிலும் சேர்ந்த ஆதரவற்ற பெண்களில் முக்கால்வாசிப் பேருக்கும் மேல் பாலிய மணம் செய்விக்கப்பட்டுப் பின் மிக இளம் கணவனின் மறைவால் விதவைகள் ஆன பெண் குழந்தைகள், கணவனால் கொடுமைப்படுத்தப் பட்டுத் தள்ளிவைக்கப்பட்டவர்கள் ஆகியோரே இருந்தனர். மீதிப் பேர்களில், வயதில் மூத்த கைம்பெண்கள், யாருமற்ற அநாதைகள், உடலில் ஊனமுள்ளவர்கள், சற்றே மனநிலை சரியில்லாதவர்கள் ஆகியோர் இருந்தனர்.

ஒரு நாள் அது பற்றிப் பேசிய போது, “துர்க்கா! இப்ப நான் இந்த மூணு மண்டலிகளுக்கும் தலைவி! நீ உப தலைவி! ஆனா, நாம ரெண்டு பேரும் இங்கே என்ன நெலைமையிலெ வந்து சேந்தோம்? நெனைச்சுப் பாத்தாலே ஆச்சரியமா யிருக்கில்லே? .. .. இங்க இருக்குற இன்மேட்ஸ் (inmates) இப்பல்லாம் நிறைய கைவேலை யெல்லாம் செஞ்சு பலவிதாமான பொருள்கள் தயாரிச்சுப் பணம் சம்பாதிச்சுக் குடுக்க முடியறது. அதனால, நம்ம ஆக்டிவிட்டீஸ் (activities) பெருகிண்டே போறது. ஆனா, பெண்களோட பிரச்னைகளுக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வு ஆகாது. இது மாதிரியான ஸ்திரீ சேவா மண்டலிகளுக்கு அவசியமே இல்லாத ஒரு நாடா நம்ம நாட்டை நாம உருவாக்கணும்! என்ன சொல்றே?”

துர்க்கா சிரித்தாள்: “இதெல்லாம் பேசறதுக்கும் கற்பனை பண்றதுக்கும் நன்னாத்தான் இருக்கு. ஆனா, சாத்தியமா? ஆம்பளைகள் மனசு மாறித் தப்பை உணர்ந்து திருந்தினாத்தானே அது நடக்கும்? அது இப்போதைக்கு நடக்கிற காரியம் இல்லையே!”

“அப்படிச் சொல்லிட முடியாது. புருஷாளை அவாளோட அப்பா-அம்மாக்கள் வளத்த விதம் அப்பிடி! அதனால சட்னு மாறிட மாட்டா. ஆனா, அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகருமே! இல்லியா? அந்த சத்தியபாமா இருக்காளே – நம்ம சேத்துப்பட்டு சேவா மண்டலியோட இன்சார்ஜ் (in-charge) – அவளோட அப்பா தன்னோட பொண்ணுக்குப் பிரச்னை வந்ததும்தான் யோசிக்க ஆரம்பிச்சார். அது மாதிரி யோசிக்கிற புருஷாளோட எண்ணிக்கை – அதாவது பொண் கொழந்தைகளுக்குத் தோப்பனார்மார்கள் – நிறைய அதிகரிச்சா, பொண்ணுகளை ஆண்கள் கொடுமைப்படுத்தற வழக்கம் கொஞ்சங் கொஞ்சமாவாவது கொறையும். .. .. முழுக்க முழுக்கப் போகும்னு இல்லாட்டாலும்!”

“காங்கிரஸ்ல பெரிய அளவில சேந்து பொம்மனாட்டிகள்ளாம் தேச விடுதலைப் போராட்டத்துல கலந்துக்கணும்னு காந்தி சொல்றாரே, அது சரின்னு நேக்குத் தோணல்லே.”

“எதை வச்சு அப்படிச் சொ§றே, துர்க்கா?”

“நேத்து சேத்துப்பட்டு ப்ரான்ச்சு (branch) க்கு நான் போயிருந்தப்ப ஒரு ஆள் அங்க வந்திருந்தான். தன்னோட தங்கையை அங்க சேக்கிறதுக்காக. அவன் சமீபத்துல தான் வேலூர் ஜெயில்லேர்ந்து விடுதலை யாகி வந்திருக்கான். அவன் சொல்றான் – ஜெயில்ல பொண்ணுகளைப் பல வழிகள்லேயும் போலீஸ்காரா உபத்திரவிக்கிறாளாம். ‘ரேப்’ (rape) உள்பட.. .. இதுக்கு என்ன சொல்றேள்?”

“இதெல்லாம் காந்திக்குத் தெரியாம இருக்குமா?”

“தெரிஞ்சிருக்காதுன்னு தான் நான் நெனைக்கறேன். அவர் காதுக்கு எட்டி யிருக்காது. அவரும்தான் அடிக்கடி ஜெயிலுக்குப் போறாரே! அவர் வெளியில வர்றச்சே, அது மாதிரிக் கொடுமைக்கு ஆளான பொண்ணுகள் அவருக்கு லெட்டர் எழுதத் துணிவாளா! இப்பிடி ஒரு அசிங்கம் தனக்கு நடந்துதுன்னு எந்தப் பொண்ணுதான் வெளியிலெ சொல்லுவா? அப்படி ரெண்டொருத்தர் துணிஞ்சு எழுதினாலும், அது மாதிரியான லெட்டர்ஸ் காந்தி கைக்குப் போகுமா? போலீஸ் தான் வழியிலேயே இண்டர்செப்ட் (intercept) பண்ணிடுவாளே ! அப்புறம், ஜெயில்ல பொம்மனாட்டிகளுக்கு நடக்கிற கொடுமை யெல்லாம் அவருக்கு எப்பிடித் தெரியப் போறது?”

“நீ சொல்றது சரிதான். இத்தனைக்கும் போலீஸ் டிபார்ட்மென்ட்ல (Police Department) ஆ·பீசர்ஸ் (Officers) தவிர மத்தவாலாம் இண்டியன்ஸ் (Indians) தான்!”

“இண்டியன்ஸாவது, ·பாரீனர்ஸாவது (foreigners) ! புருஷா எல்லாருமே பெரும்பாலும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள்தான்! நிராதரவா நிக்கற பொண்ணுகளைப் பாத்தா ஒடனே அவாளுக்கு வேட்டையாடணும்! அது புருஷாளோட பெறவிக்கொணம். அது என்னைக்குத்தான் மாறுமோ, தெரியல்லே! நம்மளோட சுயாட்சி வந்தாத்தான் அதெல்லாம் சாத்தியம் – ஓரளவுக்காவது!”

“சுதந்திரம் வந்த பிற்பாடு மட்டும் என்ன வாழப் போறதாம்! நம்ம தேசத்துப் பொண்ணுகள்ங்கிறதுக்காக நம்ம தேசத்துப் புருஷாள்ளாம் ஒழுங்காவும் பொண்ணுகளுக்கு நியாயம் கிடைக்கிறாப்லேயும் நடந்துப்பாங்கிறதை என்னால ஏத்துக்கவோ நம்பவோ முடியல்லே! அப்படி அவா நடந்திருந்தா, இது மாதிரி ஸ்திரீ சேவா மண்டலிகளுக்கு அவசியமே ஏற்படாதே! நம்ம பொம்மனாட்டிகள்ளாம் அநாவசியமா – ஏன்? அவசியமாக் கூடத்தான் – வெளியிலெ போகக்கூடாதுன்னு சட்டம் போட்டு வெச்சிருக்குறதே வெளிப் புருஷாள்கிட்டேர்ந்து அவாளைப் பாதுகாக்கிறதுக்காகத்தானோன்னுதான் தோண்றது1”

“நீ சொல்றது சரிதான், துர்க்கா. ஆழ்ந்து யோசிசுப் பாத்தோம்னா, பொம்மனாட்டிகளை நாசம் பண்றதும், அவா புடவையை உருவி அவாளை அவமானப் படுத்தறதும் மகாபாரத காலத்துலேர்ந்து நடந்துண்டிருக்கு! “

“கரெக்ட்! திரௌபதியை மானபங்கப் படுத்தறதுக்கு அந்தக் கட்டேல போற துச்சாதனன் , தான் வீட்டுக்கு விலக்கா யிருக்கிறதா அவ சொல்லியும், கெஞ்சியும் , கதறியும், கேக்காம ஏராளமான பேர் இருந்த சபைக்கு அவளைத் தர தரன்னு இழுத்துண்டு வந்து புடவையை உருவினானே, அவனென்ன வெள்ளைக்காரன் ஆண்டப்போ போலீஸ்காரனா யிருந்தவனா! இல்லியே!”

“அது மட்டுமா? பொண்டாட்டியைப் பணயம் வைக்கிற உரிமை தங்களுக்கு இருக்குன்னுல்லே புருஷா இன்னமும் நெனைக்கிறா? நேத்து பேப்பர் படிச்சியோ, துர்க்கா?”

“இல்லேம்மா. நேத்து நான் ரொம்ப பிஸி (busy). இன்னைத்ததைப் படிக்கிறப்போ அதையும் சேத்து இனிமேதன் படிக்கணும். ஏண்? நேத்தைய சுதேசமித்திரன்லே என்ன விசேஷம்?”

“கல்கத்தாவில ஒருத்தன் தன் பொண்டாட்டியை வித்து அந்தக் காசுல சீட்டாடி யிருக்கான். ஆக மொத்தம், மகாபாரதக் காலத்துலேர்ந்து மனுஷா இன்னும் எறங்கி வரல்லேன்னு தோண்றது.”

“கல்கத்தாவுக்குப் போயிட்டியேம்மா? இந்தப் பக்கத்துலே கூட – ஏன்? இந்தியாவோட எந்தப் பகுதியிலேயும் – பொண்டாட்டின்னாலே, மத்த ஸ்தாவர, ஜங்கம சொத்துகளாட்டமா அவளும் ஒரு சொத்து, அவளை என்ன வேணா பண்ணலாம் அப்படிங்கிற எண்ணந்தான் புருஷாளுக்கு இருக்கு! ஏதோ குறிப்பிட்ட சிலர் கிட்ட அப்படி ஒரு எண்ணம் இல்லாம இருக்கலாமே தவிர, அந்த மனப்பான்மை ரொம்பப் பேரு கிட்ட இருக்கத்தான் செய்யறது. ரெண்டு மாசத்துக்கு முந்தி மதுரையிலே ஒருத்தன் தான் கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதிலாக் கடன் பட்டவனுக்குத் தன் பொண்டாட்டியையே குடுத்துட்டான்! நீ பேப்பர்ல படிக்கல்லே?”

“படிச்சேன், படிச்சேன். அது மட்டுமா? கொஞ்ச நாளுக்கு அவளை எவன் கிட்டயாவது வாடகைக்கு விட்டு வெச்சுட்டு, அப்புறமாத் திருப்பி அழைச்சுக்குறது! அவளுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு, அவளுக்கு அது பிடிக்குமா, பிடிக்காதான்னு கேக்கணும்கிற எண்ணமே இல்லியே அவாளுக்கு! என்ன ஜென்மங்களோ!”

“அவ்வளவுக்குப் போவானேன்? பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கிறப்ப, அதுல அவளுக்கு இஷ்டமா, பையனைப் பிடிச்சிருக்கான்னு கூட அவளைப் பெத்தவாளே ஒரு வார்த்தை கேக்கறதில்லியே! கொஞ்ச நாளுக்கு முந்தி ‘யங் இண்டியா’ பத்திரிகையில காந்தி எழுதி யிருந்தார் – வயசான கெழவன்களுக்கெல்லாம் சின்னச் சின்னப் பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கிற கொடுமையைப் பத்தி. தள்ளிவிட்டாப் போறும்னு ஒரு அவசரம் பொண்ணைப் பெத்தவாளுக்கு.”

“அதுக்குப் பெத்தவாளை எப்பிடிக் கொறை சொல்ல முடியும்? நம்ம சமுதாய அமைப்பு அப்படி இருக்கு!”

“அப்பிடி ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்தினதும் நாமதானே! குறிப்பிட்ட ஒரு சமுதாய அமைப்பினால பொண்ணுகள் கண்ணீர் விட வேண்டி வருதுங்கிறப்போ, அதை மாத்தணும்கிற அறிவோ இரக்கமோ இருக்கவேண்டாமா மனுஷாளுக்கு?தனி மனுஷனோட விஷயத்துல இந்த அளவுக்குக் குறுக்கிட்ற தேசம் இந்த உலகத்துலேயே நம்ம தேசத்தைத் தவிர வேற எந்த தேசமும் இருக்காதுன்னு தோண்றது.”

“என்ன பண்றது? காலங்காலமா வழக்கத்துல இருந்துண்டிருக்கிற அமைப்பு. காந்தி மாதிரி சீர்திருத்தவாதிகளால கொஞ்சங் கொஞ்சமாத்தான் மாறணும். . .. மாறும்! .. .. .. ஆனா, பொண்ணுகள் விஷயத்துல புருஷாளோட துனை, ஆதரவு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருந்தாத்தான் அப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவர முடியும். அதைத்தான் காந்தி பண்ணிண்டிருக்கார். புருஷா திருந்தாத ஒரு தேசத்துல பொண்ணுகளைப் பாத்து நீ மாறணும்னு சொல்றதுல என்ன அர்த்தமிருக்கு? இவா மாறாம அவா மட்டும் மாறினா, அதனால எந்தப் பிரயோஜனமும் இல்லே. இன்னும் சொல்லப் போனால், அதனால பொண்ணுகளுக்குத் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகும்.”

“கரெக்ட்! யஷாளோட மனப்பான்மை மாறணும்னா, காந்தி மாதிரி சக்தியுள்ள மகாத்மாக்களோட பிரசாரத்துனாலதான் அது சாத்தியம். இந்த நாடு இருக்கிற சீரழிஞ்ச நெலமையைப் பாத்தா, ஒவ்வொரு ராஜதானிக்கும் ஒரு காந்தி பொறந்து வந்தாகணும்னுதான் தோண்றது!”

அப்போது இலேசாய்க் கதவு தட்டப்பட, “யெஸ்? கமின்!” என்றாள் பங்கஜம்.

வந்தவர் பணியாள் மாயாண்டி.

“என்னப்பா, மாயாண்டி?”

“யாரோ சாமிநாதன்னு ஒருத்தர் வந்திருக்காரும்மா. உங்களைப் பாக்காணுமாம். ரிசப்சன்லே குந்த வெச்சிருக்குறேன். இங்கிட்டுக் கூட்டியாரட்டா?”

துர்க்காவின் பார்வையைக் கணம் போல் சந்தித்த பின், “வரச்சொல்லு!” என்ற பங்கஜத்துக்குப் பதற்றமாகவும் படபடப்பாகவும் இருந்தது.

துர்க்கா எழுந்துகொண்டாள் “நான் அப்புறமா வறேன்.. ..”

“இல்லே, துர்க்கா. உக்காரு. தனியா அவரோட இருந்தா அழுதுடுவேன். அவரும் உணர்ச்சிவசப்படுவார். அப்புறம் ஒரு சீன் (scene) க்ரியேட் (create) ஆயிடும். பாக்காறவாளுக்கு, என்ன, ஏதுன்னு க்யூரியாசிட்டி (curiosity) வரும். நாங்க என்ன சின்னஞ்சிறிசுகளா – தனிமையில சந்திக்கிறதுக்கும் பக்கத்துல யாரும் இருக்கப் படாதுங்கிறதுக்கும்!”

“”என்? வயசாயிட்டா மட்டும் மனசு பொங்காதா!”

“இல்லே, துர்க்கா. ப்ளீஸ். உக்காரு.”

துர்க்கா உட்கார்ந்த நேரத்தில், கதவைத் திறந்துகொண்டு சாமிநாதன் உள்ளே வந்தான். அறையில் பங்கஜம் மட்டுமே இருப்பாள் என்றெண்ணியவன் போல் விரைவாக வந்தவன் துர்க்காவைக் கண்டதும் தனது விரைவைக் குறைத்துக்கொண்டது இருவருக்கும் புரிந்தது.

பங்கஜம் எழுந்து நின்று, “வாங்கோ. உக்காருங்கோ. நான் இங்கே இருக்கேன்னு எப்பிடித் தெரிஞ்சுது?” என்றாள். அவள் கண்களில் நீர் ததும்பி நின்றது.

சாமிநாதன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

துர்க்கா எழுந்துகொண்டாள்: “நான் அப்புறமா வறேன்.”

“துர்க்கா! ப்ளீஸ், உக்காரு. உனக்குத் தெரியாம நாங்க என்ன ரகசியம் பேசப் போறோம்?”

“ரகசியம்னு பரிமாறிண்டாத்தானா? நீங்க பேசி முடிச்சுட்டு, அப்புறமா என்னைக் கூப்பிடுங்கோ. வறேன். வெளியில இருக்கேன்.” – துர்க்கா போய்விட்டாள்.

“சுதேசமித்திரன்லே ஸ்திரீ சேவா மண்டலி பத்தின ஆர்ட்டிகிளும் உன்னோட ·போட்டோவும் பாத்தேன். நீ இங்க எப்படி வந்து சேந்தே? இங்கிலீஷ்ல நீ பிரசங்கம் பண்ணினேன்னு வேற போட்டிருந்துது. எனக்கு ஒரே ஆச்சரியம்!”

“அதெல்லாம் அப்புறம். மொதல்லெ உங்களைப் பத்திச் சொல்லுங்கோ. நீங்க இத்தனை நாளும் எங்கே இருந்தேள், என்ன பண்ணினேள், நாம புரசைவாக்கத்துல இருந்தப்போ நீங்க அரெஸ்ட் ஆனேளே, அப்ப எத்தனை நாள் ஜெயில்லே இருந்தேள், எப்ப ரிலீஸ் ஆனேள், எல்லா விவரத்தையும் சொல்லுங்கோ.”

புரட்சி இயக்கங்கள் பல இடங்களிலும் ஓய்ந்து விட்டதால், தான் காங்கிரஸில் சேர்ந்துவிட்டது பற்றியும் அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டதையும் அவன் தெரிவித்தான். விடுதலையாகி வெளியில் இருந்த இடைவெளிகளின் போதெல்லாம் அவளைத் தேடி யலைந்ததைப் பற்றிச் சொன்னான்.

சாமிநாதன் மிகச் சுருக்கமாய்ச் சில வாக்கியங்களில் தன்னைப் பற்றிச் சொல்லிமுடித்துவிட்டு, “பதஞ்சலி இப்ப எங்கே இருக்கான்? என்ன பண்ணிண்டிருக்கான்?” என்று ஆவலுடன் கேட்டான்.

கண்களைப் பொத்திக்கொண்டு அவள் அழத் தொடங்கியதுமே அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது.

எழுந்து நின்று, மேசையைச் சுற்றிவந்து அவள் தோளில் தொட்டு, “என்ன ஆச்சு, பங்கஜம்? எப்போ? எப்பிடி?” என்றவன் கண் கலங்கிப்போய்ச் சட்டென்று விலகி மறுபடியும் தனது நாற்காலிக்குச் சென்று உட்கார்ந்தான்.

பங்கஜம் நடந்தவற்றை அவனுக்குச் சொன்னாள். சாமிநாதன் துடித்துப் போனான். அவன் உதடுகள் அவன் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் துடித்தன. தாசரதிக்குப் பிறந்த தன் மகள் கடவுளின் அருளால் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளது பற்றியும் பங்கஜம் அவனுக்குத் தெரிவித்தாள்.

“நீங்க இங்க வந்ததும் எழுந்து போனாளே, அவதான்.”

“அவளா! உன் சாயலா இருக்காளேன்னு அவளைப் பாத்ததுமே நெனைச்சேன். கூப்பிடு அவளை.”

பங்கஜம் எழுந்து சென்று, வெளியே மரத்தடியில் உட்கார்ந்திருந்த துர்க்காவை அழைக்க, அவள் வந்தாள்.

“வாம்மா! உக்காரு. பங்கஜம் எல்லாம் சொன்னா. ஏதோ எங்க பிள்ளை போயிட்டாலும், நீயாவது கிடைச்சியே எங்களுக்கு! அது பெரிய வரம்தான். நீ எனக்கும் டாட்டர் (daughter) தாம்மா!” என்று அவன் புன்னகை பூத்த தினுசில் அவனது ஆளுமை முழுவதும் வெளிப்பட்டதாய்த் துர்க்காவுக்குத் தோன்றியது. அவள் விழிகளில் நீர் மல்கிற்று. ‘இப்படியும் சில ஆண்கள் – தாசரதி மாதிரியான அரக்கர்களுக்கு நடுவில்! குப்பையிலே குருக்கத்தி மாதிரி!’

அவளும் பதிலுக்குப் புன்னகை செய்தபின், “ அம்மா உங்களைப் பத்தி எனக்கு நிறையச் சொல்லியிருக்கா. போன ஜென்மத்துப் பாவத்தால அம்மாவுக்கு மொதல்ல அந்த தாசரதி கிடைச்சார். புண்ணியத்தால நீங்க கிடைச்சேள்! .. .. ஆனா, இங்க யாருக்குமே நாங்க அம்மா-பொண்ணுங்கிற விஷயம் தெரியாது. சிஸ்டர் முத்துலட்சுமி அம்மாக்கு மட்டும் சொன்னோம்.. .. உங்களைப் பத்தியும் இங்கே யாருக்கும் தெரியவேண்டாம்.. .. இது என்னோட அபிப்பிராயம். ஆனா அம்மா என்ன சொல்றாளோ, அப்பிடி! இப்பவும் பங்கஜம் சிஸ்டர்னுதான் நான் அம்மாவைக் கூப்பிட்டிண்டிருக்கேன். நாங்க தனியா இருக்கிறப்போ அம்மான்னு ஆசை தீரக் கூப்பிடுவேன்! மத்தப்படி, எப்பவுமே அம்மான்னு கூப்பிட்றதுக்கு எனக்குக் குடுத்து வைக்கல்லே.”

“அது சரி, இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைக்கும்?” என்றாள் பங்கஜம்.

“எதுவும் நிச்சியமாச் சொல்றதுக்கில்லே. சில சமயங்கள்ளே, கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்னு தோண்றது. வேற சில சமயங்கள்ளே, இன்னும் ஒரு நூறு வருஷத்துக்கு இழுத்தடிச்சாலும் இழுத்தடிக்கும்னும் தோண்றது. ஒண்ணுமே சொல்றமாதிரி இல்லே.”

“நாட்டுலே இருக்கிற மனுஷாளுக்கு சுதந்திரம் கிடைச்சாலும், வீட்டுலே இருக்கிற பொம்மனாட்டிகளுக் கென்னவோ அது கிடைக்கப் போறதில்லே!” என்றாள் துர்க்கா.

“அது தானாக் கிடைக்கும்னு பொண்ணுகள்ளாம் கையைக் கட்டிண்டு காத்துண்டிருந்தா, காலம் முழுக்கவும் காத்துண்டே இருக்க வேண்டியதுதான்! இப்ப பங்கஜம் இல்லே? அவ மாதிரி அதை நாமளேதான் எடுத்துக்கணும். புருஷாளுக்கெல்லாம், ‘இந்தா உன்னோட சுதந்திரம். எடுத்துக்கோ’ ன்னு யாரு தூக்கிக் குடுத்தாளாம்! அது எங்களோட பிறப்புரிமைன்னு சொல்லாம சொல்லிண்டு அவாளேதானே மனம் போன படியெல்லாம் நடந்துண்டு வறா! அதே மாதிரி, எல்லாப் பொண்ணுகளும் பண்ண வேண்டியதுதான்! அவா என்ன குடுக்கிறது, நீங்க என்ன வாங்கிக்கிறது! அது உங்களோடவும் பிறப்புரிமை! உங்களுக்குச் சொந்தமானதையே ‘இந்தா வெச்சுக்கோ’ ன்னு உங்ககிட்ட குடுக்கிறதுக்கு அவா யாரு? அவா யாருன்னு கேக்கறேன்! என்ன சொல்றே?” என்ற சாமிநாதன் துர்க்காவைப் பார்த்துச் சிரித்தான்.

“நீங்க சொல்றது ஒரு விதத்துல சரிதான்னாலும், முழுக்கவும் சரின்னு ஒத்துக்க முடியாது. இப்ப எங்கம்மாக்கு நீங்க கிடைச்ச மாதிரி, ஒரு நல்ல ஆம்பளையோட தயவும் ஒரு பொண்ணுக்குக் கிடைச்சாத்தான் அது சாத்தியம். அதாவது, நான் என்ன சொல்ல வறேன்னா, ‘பொண்ணுகளை நாம அநியாயமா அடிமைப்படுத்தி, அவாளோட அடிப்படை உரிமைகளையெல்லாம் பறிச்சு வெச்சிருக்கோம், அது தப்பு. அதனால அவாளை இனிமேயும் அடக்கி ஒடுக்கக்கூடாது’ங்கிற ஞானமும், நேர்மையும் புருஷாளுக்கு வரணும். அப்பதான், பொண்ணுகள் தங்களோட சுதந்திரத்தை நிலையாத் தக்க வெச்சிண்டு அனுபவிக்க முடியும்!”

“சரி. ஆனா, அதே சமயத்துலே, புருஷா தாங்களாவே மாறுவா, தப்பைப் புரிஞ்சுக்குவான்னெல்லாம் நம்பி அந்த நாளுக்காகக் காத்திண்டிருக்கப்படாது! ஆயிரக் கணக்கான வருஷங்களா மவுனக் கண்ணீர் வடிச்சிண்டு, தாங்கள்ளாம் அடிமைகளா யிருக்கோம்கிற உணர்வு கூட இல்லாம போயிட்ட அவாளை அடக்கி யாண்டுண்டிருக்கிற புருஷாளோட, பொண்ணுகள் சண்டை போட்டுப் போராடித்தான் அதைப் பிடுங்கிக்கணும்! இத்தனை காலமும் நீங்க பொறுமையா யிருந்து வந்திண்டிருக்கிறதை அவா கொஞ்சங்கூடப் புரிஞ்சுக்கவே இல்லியே! ‘பொறுமை என்னும் நகை யணிந்துகொண்டு வாழ வேண்டும் பெண்கள்’ னு பாட்டுன்னா எழுதிண்டிருக்கானுக! அந்தப் பாட்டு எப்ப ரேடியோவில வந்தாலும் நான் டக்னு அதை மூடிடுவேன்! என்ன நான் சொல்றது?”

“நீங்க சொல்றது சரிதான். நாங்க கூட அடிக்கடி இது பத்தி விவாதிக்கிறதுண்டு. ஆனா, ஆண்பிள்ளைகளோட ஒத்துழைப்போட கிடைக்கிற உரிமைகள்தான் நிலைச்சு நிக்கும். இல்லேன்னா, வீணாய்ப் பொண்ணூகள் மேல புருஷாளுக்கு வெறுப்பு வரலாம். .. .. சரி. காப்பி குடிக்கிறேளா?”

“குடிச்சாப் போச்சு!”

துர்க்கா எழுந்து போய்க் காப்பிக்குச் சொல்லிவிட்டு வந்தாள்.

“நமக்கு சுதந்திரம் கிடைச்ச பிற்பாடு ஒரு விழிப்பு உணர்ச்சிப் பத்திரிகை ஆரம்பிக்கணும்கிற எண்ணம் இருக்கு,” என்று சாமிநாதன் சொன்னதும், “நல்ல யோசனை! நாம எல்லாரும் சேந்தே அதைச் செய்யலாம்!” என்று பங்கஜம் ஆமோதித்தாள்.

காப்பி வந்ததும் மூவரும் மவுனமாய்ப் பருகினார்கள்.

குடித்து முடித்ததும், “பாத்தேளா, கேக்க மறந்தே போயிடுத்து. இப்ப நீங்க எங்க தங்கி யிருக்கேள்? சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செஞ்சேள், இப்ப என்ன செய்யறேள்?” என்று பங்கஜம் விசாரித்தாள்.

“அதை யெல்லாம் கேக்காதே. .. .. மூட்டை தூக்குறதுலேர்ந்து ட்யூஷன் (tuition) சொல்லிக் குடுக்கிறது வரைக்கும், எப்பெப்போ, எங்கெங்கே, என்னென்ன வேலை கிடைக்கிறதோ, அது எல்லாத்தையும் செஞ்சேன், செய்யறேன். எப்பிடியோ ஓடிண்டிருக்கு. பெரும்பாலும் தங்கறது ரெயில்வே ஸ்டேஷன்கள்ளே தான். கையில ஒரே ஒரு துணிப்பை! கொஞ்ச நாள் இப்பிடிக் கழியும். அதுக்குப் பிற்பாடு அரெஸ்ட் ஆயி, கொஞ்ச நாள் ஜெயில் வாசம். இதே கதைதான் – மாத்தி மாத்தி!”

“இப்ப எங்கே தங்கி யிருக்கேள்னு கேட்டேனே?”

“கேர் அவ் ரெயில்வே ப்ளேட்·பார்ம் (care of railway platform) . சில சமயம் சென் ட்ரல்ல, சில சமயம் எக்மோர்ல.. அப்புறம் சின்னச் சின்ன ஸ்டேஷன்கள்ளே! ஸோ (so), ‘அந்த’ ஸ்டேஷன்கள்ளே அடைபடாதபடி ‘இந்த’ ஸ்டேஷன்கள் காப்பாத்திண்டிருக்கு!”

“நீங்க என்னோட கெஸ்ட்டா (guest) இங்கே தங்கிக்கலாம். நோ ப்ராப்ளெம் (No problem). யாரும் எதுவும் சந்தேகப்படாதபடி உங்களுக்கு இங்கே ஒரு வேலையும் போட்டுக் குடுத்துட்றோம்.”

சாமிநாதன் சிரித்தான்

“அது முடியாது, பங்கஜம். 1942 லே, ஆகஸ்ட் புரட்சியப்போ, பண்ணின ரெயில் கொள்ளைக்காக நான் பயங்கரவாதிகளோட பட்டியல்லே வேற இருக்கேன். அதானாலதான் நான் தாடி மீசை யெல்லாம் வெச்சிண்டிருக்கேன். நான் இங்கே அடிக்கடி வந்து போயிண்டிருந்தாலே கூட, உனக்கு அதனால தொல்லைதான். அப்படி இருக்கிறப்போ, நிரந்தரமா இங்க தங்கறது சரிப்பட்டு வராது, பங்கஜம். எப்பவாவது வந்து பாத்துட்டுப் போறேன். சரியா? அப்ப நான் வரட்டுமா? “

சாமிநாதன் பங்கஜத்தின் கைபற்றிக் குலுக்கிவிட்டு, துர்க்காவை நோக்கித் தலை யசைத்த பின் நகரலானான். எழுந்து நின்றிருந்த இருவரும் அவன் முதுகுப்புறம் பார்த்தவாறு இருந்தார்கள். பங்கஜக்தின் விழிகள் நீரில் மூழ்கின. கண்ணீர் முத்துகள் ஒவ்வொன்றாக அவள் கண்களிலிருந்து உருண்டு விழலாயின. துர்க்கா ஆதரவுடன் அவளது இடுப்பை வளைத்துக்கொண்டு தானும் கண் கலங்கினாள்.

– தொடரும்

jothirigija@vsnl.net

Series Navigation