மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29

This entry is part of 33 in the series 20060714_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தாசரதியின் பார்வை பங்கஜத்தின் மீது படிந்திருக்கவில்லை. அவன் காந்தியடிகளைப் பார்த்தபடி இருந்தான். பங்கஜம் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் அவனை மூன்று கணங்கள் போல் கவனித்தாள். அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அவன் தன்னைப் பார்த்திருக்கவில்லை என்பது உறுதிப்பட, அவள் சட்டெனக் கழுத்தைத் திருப்பிப் புடைவையின் மேல் தலைப்பை இழுத்துத் தலை மீது முக்காடாய்ப் போட்டுப் பெருமளவு முகத்தை மறைத்துக்கொண்டாள். காந்தியடிகள் பேசியதில் எதுவும் அதன் பின் அவள் மூளையில் பதியல்லை. அவளருகே இருந்த துர்க்கா முக்காடிட்டுக்கொண்ட பங்கஜத்தின் திடீர்ச் செய்கையால் திகைத்து அவளை உற்று நோக்கினாள்.

இதற்குள் காந்தியடிகள் தமது பேச்சை முடித்துவிட்டிருந்தார். அவரிடம் சில பெண்கள் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்க முனைந்தார்கள். கூட்டம் சளசளத்துக்கொண்டிருந்தது. பங்கஜம் தனக்கு அருகே இருந்த சிஸ்டர் முத்துலட்சுமியிடம், “சிஸ்டர்! அந்தாளு.. .. அதான் நான் சொல்லியிருக்கேனே, என்னோட ·பர்ஸ்ட் ஹஸ்பண்ட் (first husband) தாசரதி – அதோ பாருங்கோ – நீலச் சட்டை – இந்தக் கூட்டத்திலே நமக்குப் பின்னால நின்னுண்டிருக்கார். அவர் என்னைக் கவனிக்கல்லேன்னுதான் தோண்றது. அதான் முக்காடு போட்டுண்டுட்டேன். அவர் கண்ணுல பட்றதுக்கு முந்தி நாம இங்கேர்ந்து போயிட்டா நன்னாருக்கும், சிஸ்டர்!” என்று கிசுகிசுப்பாய்க் கூறியது மிக அண்மையில் நின்றிருந்த துர்க்காவின் செவிகளில் துல்லியமான தெளிவுடன் விழுந்து அவள் மயிர்க்கால்களைச் சிலுப்பிக் குத்திடச் செய்தது. பங்கஜம் தன்னிடம் கூறாமல் விட்டவை எல்லாம் அந்தக் கணத்தில் அவளுக்குச் சுருக்கமாய்ப் புரிந்துவிட்டன.

திரும்பி, தாசரதியைக் கவனித்த சிஸ்டர் முத்துலட்சுமி பங்கஜத்தின் வேண்டுகோளை உடனே ஏற்றார். அதற்கிணங்க, அவர் உடனே புறப்பட்டார். அவரது கையை நடுங்கிக்கொண்டிருந்த தன் விரல்களால் பற்றியபடி பங்கஜம் நகர, “வாங்க, போகலாம்!” என்ற சிஸ்டருக்குப் பின்னால் அவருடன் வந்திருந்தவர்களும் கிளம்பினார்கள்.

மோட்டார்காரில் ஏறி அமர்ந்த பங்கஜத்துக்கு அது கிளம்பிய பின்னரே சீராக மூச்சுவிட முடிந்தது.. .. ‘அம்மாடி! தப்பினேன்!’

“அவன் உன்னைப் பாக்கல்லேதானே? ஆர் யூ ஷ்யூர்? (Are you sure?)”

“ஐ’ம் ஷ்யூர் (I’m sure) , சிஸ்டர். இப்ப நாம திரும்பி நடந்தப்ப அவர் காந்தி கிட்ட ஆட்டோகிரா·ப் (autograph) வாங்கற கும்பல்லே இருந்தார். நம்ம பக்கம் தப்பித் தவறியும் கவனிக்கல்லே. அதனால, பாக்கல்லேன்னு நிச்சயமாத் தோண்றது. பாத்திருந்தா அந்தக் கூட்டத்திலே ரசாபாசமா எதுவும் பேசாட்டாலும், நம்ம பின்னாடியே தொரத்திண்டு வந்திருப்பாரில்லையா?”

ஏதோ சிக்கல் என்பதைப் புரிந்துகொண்ட மற்ற பெண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். துர்க்காவுக்குத்தான் படபடப்பா யிருந்தது. தன்னருகே அமர்ந்து கொண்டிருந்த பங்கஜத்தின் உடலை அதிகமாய் உராய்ந்தபடி உட்கார்ந்தாள். பங்கஜம் உடனே பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். துர்க்கா கவனியாதவள் போல் இருந்தாள். துர்க்காவின் அந்த உராய்வால் பங்கஜத்தின் உடல்¢ல் ஒரு சிலிர்ப்பு அவளது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவி ஓடியது.

ஒரு சொந்தத் தாய்க்கு ஈடான பாசத்துடன் தனக்காக எல்லாவற்றையும் துறந்த தன் வளர்ப்புத் தாய் காவேரியின் நினைப்பும் துர்க்காவுக்கு அப்போது வந்தது. . .. .. ‘நான் ஒரு வகையில் பாக்கியசாலிதான். எனக்கு இரண்டு அம்மாக்கள்! ’ என்று எண்ணிய அ வள் இதழ்க்கடையில் சின்னதாய் ஒரு சிரிப்புத் தோன்றியது.

“என்னடி, துர்க்கா, நீயே சிரிச்சுக்கறே?” என்று அவளுக்கு அருகே மறுபுறம் இருந்த பெண் கேட்க, “பொண்ணுகளோட நகை ஆசையைப் பத்தி காந்தி சொன்னதை நினைச்சுண்டேன்!” என்று பதில் சொல்லி அவள் சமாளித்தாள்.

“ஆட்டுக்கும் மாட்டுக்கும் நகை போட்டுப் பாருங்கோ, அப்ப புரியும் அது எவ்வளவு அசிங்கம் அப்படின்னு சொன்னாரே, அதை நெனைச்சா?”

“ஆமா.”

சிஸ்டர் தங்களுக்கு அருகே இருந்ததை மறந்துவிட்டவள் போல் ஒரு பெண் கட்டுப்பாடிழந்து குபீரென்று சிரித்தாள்.

“எதுக்குடி திடீர்னு சிரிப்பு?”

“இல்லே, ஒரு மனுஷக் கொரங்குக்குக் காதுல தோடு, லோலாக்கு, மூக்குல மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்துல காசுமாலை, நெத்திச்சுட்டி, வங்கி, வளையல் கொலுசு, ஒட்டியாணம்னு மனசுக்குள்ள மாட்டிப் பாத்தேன். அதான்!”

சிஸ்டர் முத்துலட்சுமி உட்பட அனைவரும் சிரித்தார்கள். துர்க்காவுக்கும் சிரிப்பு வந்தாலும், அவளது சிந்தனை எல்லாம் பங்கஜத்தை எப்போது தனியாகப் பார்த்துத் தான் அவளுடைய மகள் என்பதைச் சொல்லப் போகிறாள் என்கிற ஒரே எண்ணத்தால் பரபரப்பா யிருந்தது. தாங்கள் இருவரும் தாயும் மகளும் எனும் உண்மை தெரியாத போதிலும், இருவரும் ஒருவர்பால் ஒருவர் பெரிதும் ஈர்க்கப்பட்டு அன்பு செலுத்தி வருவதையும் இல்லத்தின் உறுப்பினர்கள் எல்லாருமே பங்கஜத்திடம் துர்க்காவைப் பற்றிப் பேசுகையில், ‘ஒங்களோட செல்லப் பொண்ணு’ என்று வேடிக்கையாய்க் குறிப்பிட்டு வருவதையும் எண்ணிப் பார்த்த துர்க்கா, இருவரும் உண்மையாகவே அப்படித்தான் என்பது தெரியவந்தால் எல்லாருக்கும் எப்படிப்பட்ட வியப்பு ஏற்படும் என்கிற நினைப்பால் தானும் வியப்படைந்தாள். அவளது கை தன்னையும் உணராது பங்கஜத்தின் தொடை மீது படர்ந்து அழுந்தியது. பங்கஜம் இரண்டாம் தடவையாகப் பக்கவாட்டில் தலை திருப்பித் துர்க்காவை வியப்புடன் கவனித்தாள்.

.. .. இல்லத்தை அடைந்த பின்னர், தமது அறையில் பங்கஜத்தை வரச்சொல்லி அவளைத் தனியாய்ச் சந்தித்த சிஸ்டர் முத்துலட்சுமி, “ஏன், பங்கஜம்! அந்த ஆளு காந்தியோட மீட்டிங்குக்கு வந்திருக்கானே! அப்படின்னா, அவன்கிட்ட மனமாற்றம் ஏற்பட்டிருக்கும்னு வச்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

“அதைப் பத்தி நேக்கென்ன வந்தது, சிஸ்டர்? என்னோட கொழந்தையை ஈவிரக்கமே இல்லாம கொன்னுட்டு, என்னையும் கொல்லணும்கிற வெறியோட இருந்த ஆளு அவர். இப்ப அவர் திருந்தி யிருந்தாலும் சரி , இனிமே திருந்தினாலும் சரி, அதுக்காக என் மனசு ஒண்ணும் அந்த மனுஷனுக்காக உருகப் போறதில்லே. என்னோட உண்மையான கணவர் சாமிநாதன்தான். . . ஆனா, சிஸ்டர், பகவானோட கிருபையால, அவரும் நானும் சந்திக்க வாய்ச்சா, என்னை இந்த ஹோம்லேர்ந்து போகச் சொல்லிடுவேளா?” என்று வினவிய பங்கஜம் கண் கலங்கினாள்.

“சீச்சீ! அசடு. கண்ணைத் தொடைச்சுக்கோ. நீயாவே அப்படி ஒரு முடிவு எடுத்தா நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் கூடாது. ஆனா, எனக்குப் பின்னாடி இந்த ஹோம் உன்னோட மேனேஜ்மென்ட்டுக்குக் (management) கீழேதான் வரணும்கிறது என்னோட ஆசை. அதனாலதான் உன்னை ஒரு ஆல்ரவுண்டரா (all-rounder) ட்ரெய்ன் (train) பண்ணி யிருக்கேன். இந்த என்னோட சுயநலத்துனால, அந்த மிஸ்டர் சாமிநாதன் திரும்பி வந்து உன்னைக் கூட்டிண்டு போயிடக் கூடாதே, பகவானே, அப்படின்னுன்னா நான் வேண்டிண்டிருக்கேன்? உன்னை அனுப்பி வைக்கிறதா! நானா அதைச் செய்யவே மாட்டேன்! நெவெர் (never)!”

“அவர் திரும்பி வந்தாலும் கூட, நாம எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுகக் கூடியவர்தான், சிஸ்டர். நான் இங்கேயே இருந்துட்றேன். அவர் வந்து போயிண்டிருக்கட்டுமே. என்ன சொல்றேள்?”

சிஸ்டர் முத்துலட்சுமி மவுனமாக அவளைக் கணம் போல் ஏறிட்ட பின், “அப்படின்னா, அவரோட வாழ்க்கை நடத்தணும்கிற ஆசை நோக்கில்லையா, பங்கஜம்?” என்று கேட்டார்.

“.. .. .. அப்படின்னும் சொல்லிட முடியாது, சிஸ்டர். ஆனா, எல்லாத்தையும் நாம யோசிச்சுப் பாக்கணும், இல்லியா? அவர் விடுதலை இயக்கத்துல ஈடு பட்டிருக்கிற போராட்டக்காரர். திடீர் திடீர்னு ஜெயிலுக்குப் போகும்படி நேரும். மறுபடியும் நான் தனியாவேன். இந்த ரெண்டுங்கெட்டான் அக்கப் போரெல்லாம் என்னத்துக்கு, சிஸ்டர்?”

“நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்.. .. ..”

“தவிர, அவரும் புரிஞ்சுப்பார், நாங்க ஒண்ணு சேந்தா `எங்க ரெண்டு பேருக்குமே துன்பம்தான்கிறதை!”

.. .. .. சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. துர்க்கா பங்கஜத்தைத் தனியாய்ப் பார்த்துப் பேசும் வாய்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள்.

.. .. .. “பங்கஜம் சிஸ்டர்! உங்களோட நான் கொஞ்சம் தனியாப் பேசணும்.”

“காந்தியைப் பாத்துட்டு வந்ததுலேர்ந்தே நீ எக்ஸைட்டெடாத் (excited) தெரியறே. என்னன்னு என்னால ஊகிக்க முடியல்லே. ஒருக்கா, காங்கிரஸ் கட்சியில சேரப் போறியா? அது பத்தி என் அபிப்பிராயத்தைக் கேக்கப் போறே. அதானே?”

“இல்லே, இது வேற விஷயம்.. .. ..”

“சரி, வா. அந்த மரத்தடிக்குப் போலாமா?”

“நாம வெளியில போனா நன்னாருக்கும்.”

“வெளியிலேயா!” என்று தயக்கமாய் வினவிய பங்கஜத்துக்குத் தாசரதி தற்செயலாய் அந்த இடத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சம் ஏற்பட்டது.

“வெளியிலே யெல்லாம் போகவேண்டாம், துர்க்கா. என்னோட ரூமுக்கே போயிடலாம். நேத்துலேர்ந்து சிஸ்டர்தான் நேக்குத் தனி ரூம் குடுத்திருக்காரே!”

“சரி.”

.. .. .. இருவரும் அறைக்குள் நுழைந்ததும், பங்கஜம் கதவைச் சாத்தினாள். துர்க்கா அவளது வியப்பை மிகச் செய்யும் வண்ணமாய்க் கதவுத் தாழ்ப்பாளைப் போட்டாள்.

இருவரும் உட்கார்ந்தார்கள்.

“சொல்லும்மா.”

“. . . உங்களுக்கு ரெண்டு ஹஸ்பண்ட்ஸா (husbands) ?”

“ஆமா. ஆனா அதுக்கென்ன இப்ப?”

“மொத ஆளு பேரு தாசரதியா?”

“ஆமா?”

“உங்க மாமனாரும் மாமியாரும் அந்த தாசரதியும் சேந்து வேலைக்காரி சின்னப்பொண்ணு கிட்ட மூணாவதாப் பொறந்த உங்க பொண் கொழந்தையை ஆத்து வெள்ளத்துல போட்டுடச் சொல்லித் தூக்கிக் குடுத்தது உங்களுக்குத் தெரியுமா?”

பங்கஜத்தின் விழிகள் அகன்றன.

“பிரசவத்துக்கு அப்புறம் நீங்க மயக்க மாயிட்டேள், இல்லியா?”

“ஆமா! ஆனா இதெல்லாம் நோக்கெப்படித் தெரியும்?”

“கொஞ்ச நாளுக்கு முந்தித் தெரிய வந்துது. கொழந்தை பொறந்ததும் அது செத்துப் போயிடுத்துன்னு உங்ககிட்ட சொன்னா, இல்லியா?”

“ஆமா?”

“அந்தக் கொழந்தை சாகல்லே.”

“.. .. .. ..?!”

“இன்னைத் தேதியிலே உசிரோடதான் இருக்கு அந்தப் பொண்ணு!”

பங்கஜம் எழுந்து நின்றுவிட்டாள். நடந்து அவளருகே வந்து சின்று, “என்ன சொல்றே, துர்க்கா? எங்க இருக்கா இப்ப அந்தப் பொண்ணு? நான் அவளைப் பாக்க முடியுமா? அவளுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“தெரியும். ஆனா, தன்னோட அம்மா யாருங்கிறதை இன்னிக்குத்தான் அவளால தெரிஞ்சுக்க முடிஞ்சுது. தாசரதிங்கிற அந்த ராட்சசனோட பேரை இன்னிக்குத்தான் அவளோட அம்மா வாயிலேர்ந்து வந்தப்ப, அவளால கேக்க முடிஞ்சுது!”

“என்னம்மா சொல்றே சீ? நான் கனவு கினவு காணலியே?”

“நேக்கும் அந்தச் சந்தேகம் வருதுதான். ஆனா நாம ரெண்டு பேருமே கனவு காணல்லே. அன்னைக்கு, உங்க ஹஸ்பண்ட் (husband) பேரு என்னன்னு நான் கேட்டப்ப, நீங்க சாமிநாதன்னு சொன்னேள். எங்கம்மா பேரு பங்கஜம்னு நேக்குத் தெரியும். ஆனா, அப்பா பேரு தாசரதின்னு தெரிய வந்திருந்ததால, நீங்க வேற யாரோ ஒரு பங்கஜம்னு நான் முடிவு பண்ண வேண்டியதாச்சு!”

பங்கஜம் கண்ணீருடன் துர்க்காவின் தோள்களைப் பற்ற, அவளும் அடக்க முடியாத கண்ணீருடன் எழுந்து நின்றாள். பங்கஜம் காணாதது கண்டவள் போன்று தன் மகளை அணைத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டாள். அடுத்த கணத்தில், அங்கே, உலகத்து அன்புகளிலெல்லாம் மிகத் தூய்மையான அன்பின் சங்கமம் விளைந்து அந்த அறை கடவுள் என்று சொல்லப்படுகிற மகாசக்தியின் சந்நிதானம் போல் அமைதியில் ஆழ்ந்தது.

அழுகை நின்றதும், பங்கஜம், “துர்க்கா, துர்க்கா! என் கண்ணே! அதான் உன் மேல மட்டும் தனியா நேக்கு ஒரு பாசம் ஏற்பட்டிருந்திருக்கு! எப்படியோ. நாம ஒண்ணு சேந்துட்டோம். சிஸ்டரைத் தவிர வேற யாருக்கும் இது தெரியக்கூடது. ஏற்கெனவே எல்லாரும் உன்னை என்னோட செல்லப் பொண்ணுன்னு கேலி பண்ணிண்டிருக்கா. இப்ப வெளையாட்டுக்குத்தான் கேலி பண்ணிண்டிருக்கான்னாலும், இந்தப் புது உண்மை பரவித்துன்னா, ஏற்கெனவே தெரிஞ்சுண்டுதான் நான் உங்கிட்ட தனி அபிமானம் வெச்சிருந்ததா நெனைச்சுப்பா. நாளைக்கு நான் உன் விஷயத்துல நியாயமா ஏதாவது செஞ்சாக்கூட ஒரு அம்மாக்காரியோட பாரபட்சம்னு எம்மேல சந்தேகப் படுவா எல்லாரும். நேக்கும் பேரு கெட்டுடும். அதனால, இப்ப இது யாருக்குமே தெரியப்படாது – சிஸ்டரைத் தவர. என்ன?” என்றாள்.

கண்ணீர் நின்றதும் இருவரும் முகத்தைத் துடைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார்கள். . . .

பல்லாண்டுகள் கழித்து நேர்ந்த அவ் விணைப்பால் பங்கஜம் அதிக மகிழ்வுற்றாளா, இன்றேல் துர்க்கா அதிக மகிழ்வுற்றாளா என்று எடை போடுவது மிகக் கடினம்! எனினும், மொத்தத்தில், இருவரும் பரவசமுற்று மிதந்தார்கள் என்பதில் மிகையே இருக்க முடியாது!

மூடிய அறையினுள்ளே தாயும் மகளும் சொன்ன வியப்பான கதையைக் கேட்டுவிட்டு சிஸ்டர் முத்துலட்சுமி மகிழ்ந்து போனார்.

“உங்க ரெண்டு பேரையும் விட, நேக்குத்தான் இதிலே அதிகமான சந்தோஷம்னு தோண்றது. எப்படின்னா, நேக்கு வயசாயிண்டிருக்கு. என்னோட காலத்துக்குப் பிற்பாடு இந்த ஹோமை நடத்தி நிர்வகிக்கிறதுக்கு ஒரு நல்ல ஆளா அமையணுமேன்னு கவலைப் பட்டுண்டிருக்கேன். அந்தக் கவலையை, பங்கஜம், நீ எப்பவோ போக்கிட்டே. உனக்குப் பிற்பாடு யாருங்கிற கவலையும் இனிமே நான் பட வேண்டியதில்லே! ஆக, இந்த ஹோம் பன்னெடுங்காலம் வளரப்போறது! பகவானுடைய அனுக்கிரகம் மட்டும் அதுக்கு வேணும். .. .. ஆனா, பகவானுடைய அனுக்கிரகம் இந்த ஹோமுக்கு நிறையவே இருக்குன்னுதான் தோண்றது. இல்லேன்னா, நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்து சேந்திருப்பேளா!”

புன்னகை செய்த பங்கஜம், “ .. .. சிஸ்டர்! ஒரு வேண்டுகோள். எங்க நிஜமான உறவு யாருக்கும் தெரிய வேண்டாம். . .” என்று கேட்டுக்கொண்டு, அதற்கான காரணங்களையும் விளக்கியதும், சிஸ்டர் முத்துலட்சுமி அதற்கு ஒத்துக்கொண்டார்.

.. .. .. சிறையிலிருந்து வெளிவந்த சாமிநாதன் முதலில் சென்னைக்குத் தான் போனான். அவனுடைய நண்பர்களில் எவரும் கிடைக்கவில்லை. எல்லாருமே வெவ்வேறு சிறைகளில் இருந்தது மட்டும் தெரிய வந்தது. சாமிநாதனின் தண்டனைக் காலம் உண்மையில் முடிந்திருக்கவில்லை. சிறைக்காவலர் ஒருவரின் உதவியால் தப்பி அவன் வெளிவந்திருந்தான். தேடப்படுகிற கைதி என்கிற முறையில், கவனமாக நடமாட வேண்டிய இக்கட்டில் அவன் இருந்தான். எனவே, தாடி, நீண்ட தலைமுடி வளர்த்துத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்னைத் தெருக்களைச் சில நாள் சுற்றியும் பங்கஜத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் மறுபடியும் தேசிய இயக்கத்தில் முனைப்பாக ஈடுபட்டான்.

தீவிரவாதம் பெருமளவுக்கு நீர்த்துப் போயிருந்ததாலும், இயக்கத் தலைவர்கள் இந்தியச் சிறைகளிலும், அந்தமான் சிறையிலும் அடைபட்டிருந்ததாலும், உறுப்பினர்களை வழிநடத்திச்செல்ல ஆற்றல் மிக்க தலைவர்கள் இல்லாததாலும், சாமிநாதன் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தான்.

.. .. .. தாசரதி ஒன்றும் பெரிதாக மனமாற்றம் அடைந்திருக்கவில்லை. இப்போதும் ஒரு திருமணத்துக்காகப் பட்டணத்துக்கு வந்திருந்த அவன் உறவினர் ஒருவர் கூப்பிட்டார் என்பதற்காகக் காந்தியைப் பார்க்க அவருடன் போனான் என்பதுதான் உண்மை. காந்தியின் அடுத்த கூட்டத்துக்கும் தாம் போகப் போவதாக அவர் தெரிவிக்க, காந்தியிடம் எந்தக் கவர்ச்சியையும் காணாத அவன் தான் அவசரமாக வேறிடத்துக்குப் போக வேண்டி யிருப்பதாய்ச் சொல்லிக் கழற்றிக்கொண்டான்.

.. .. .. தன்னுடையது போன்றே துர்க்காவின் மண வாழ்க்கையும் ஒரு வகையில் துயரம் நிறைந்ததா யிருந்தது பங்கஜத்தை வருத்திய போதிலும், ஆண்டவன் தங்களை ஒன்று சேர்த்துவைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவள் எதையும் பொருட்படுத்தாதிருக்க முற்பட்டாள்.

துர்க்காவைக் கடலிலிருந்து மீனவர்கள் மீட்ட பின்னர் அவள் தெரிவித்த வாழ்க்கை வரலாறு தான் என்றாலும், இப்போது அவள் தன் மகள் என்பதால், பங்கஜம் அதைப் பற்றி யோசிக்கலானாள்.

“உன் ஆம்படையான் ஒரு வேளை திருந்தியிருந்தா, மறுபடியும் அவன்கிட்ட போகலாம்கிறாப்ல ஒரு எண்ணாம் இருக்கா, துர்க்கா?” என்று அவள் மறு நாள் அவளைக் கேட்ட போது, “செத்தாலும் சாவேனே தவிர, மறுபடியும் அந்த மனுஷனோட வாழ மாட்டேன். இதே மாதிரி நான் நடந்திருந்தா – வேற எவனோடவாவது கும்மாளம் அடிச்சிருந்தா – அந்த மனுஷன் என்னை ஏத்துப்பானா?” என்று ஆத்திரமாக ஒருமைக்குத் தாவிய மகளைப் பங்கஜம் ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள். தனக்கு இருந்திராத – அல்லது தன்னை விடவும் அவளிடம் அதிக மிருந்த – தன்மானம் அவளை மகிழ்வுறச் செய்தது என்று கூடச் சொல்லலாம்.

.. .. .. அன்று காலையில் வந்த சுதேசமித்திரன் நாளிதழைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் சிஸ்டர் முத்துலட்சுமியின் கண்களில் அந்தச் செய்தி பட்டது.

‘நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் தண்டவாளத்தைக் கடந்த போது, அவரது கால் தண்டவாளத்துக்கு அடியில் மாட்டிக்கொள்ள, டிரெயினில் அடிபட்டுத் தலை வேறு, முண்டம் வேறாய்ச் சிதறினார். அவரது சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒன்றிலிருந்து அவரது பெயர் தாசரதி என்பதும், அவர் சின்னக்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளன. மதறாஸ் உறவினரின் விலாசமும் இருந்தது. அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.. .. ..’ – சிஸ்டர் முத்துலட்சுமி தாசரதியின் புகைப்படத்துடன் வெளியாகி யிருந்த அந்தச் செய்திப் பகுதியைக் கத்தரிக்கோலால் வெட்டி எடுத்துக் கிழித்துக் கசக்கிக் குப்பைகூடையில் போட்டார். ‘என்னதான் இருந்தாலும், கொஞ்ச நாள் அவனோட வாழ்ந்தவ பங்கஜம். அவ கண்ணுல இது பட வேண்டாமே!’ என்று அவரது வாய் முனகியது. சட்டென்று ஞாபகம் வந்தவராய், ‘அன்னைக்குப் பங்கஜத்தோட கொழந்தையைத் தண்டவாளத்துல போட்டுக் கொன்னவன்தானே இவன்! சரியான தீர்ப்புதான்!’ என்றும் அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

jothigirija@vsnl.net.
தொடரும்

Series Navigation