• Home »
  • கதைகள் »
  • எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-8)

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-8)

This entry is part of 30 in the series 20060707_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மற்ற யாரோடும் ஒப்பிட முடியாதபடி அவளது மெய்யான எழில் உன்னதமாக இல்லை என்றாலும், அவளை நோக்கியவர் எவரும் அவளது நெருக்கக் கவர்ச்சியால் தாக்காதபடி தப்பிக் கொள்ள இயலாது! அவளுடன் வாழ்பவர் ஒருவர் அந்த காந்த சக்திக்குப் பலியாகாமல் அவளை எதிர்க்க முடியாது! அவளுடைய பண்பியல்போடு உடன்பட்டுப் பிணைந்து போய் அவளது சொற்களும், செயல்களும் ஆடவரை வசீகரப் படுத்துபவை! வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகளைத் தட்டுவதுபோல் அவள் ஒரு மொழியிலிருத்து அடுத்தொரு மொழிக்குத் தாவிப் பேசும் அவளது கனிவு வார்த்தைகளைக் கேட்பதே ஒருவருக்குத் தனிச்சுவை அளிக்க வல்லது!

புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

தைபர் நதிக்கரை மீதுள்ள
ரோமாபுரி எரிந்து உருகிடலாம்!
சாம்ராஜி யத்தின் விரிந்த
தோரண வளையம் கவிழ்ந்திடலாம்!
நானாடும் அரங்கவெளி இங்குளது!
பேரரசுகள் வெறுங் களிமண்! நம்மிருண்ட
தாரணியும் மண்ணே!
எதிர்த் திசையில் அதுவும்
மனித ரெனக் கருதி,
காட்டு விலங்குக்கு ஊட்டும் உணவு!
ஆண்பெண் இருவர் சேர்ந்து புரியும்
வாழ்வின் மகத்துவம் அதுவே!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

அங்கம்: 2 பாகம்: 8

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான். கம்பளச் சுருளிலிருந்து எழுந்த கிளியோபாத்ரா, தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார்.

[முன்வாரத் தொடர்ச்சி]

ரூபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]

போதினஸ்: [தயக்கத்துடன்] எங்கள் எதிரி கிளியோபாத்ரா மட்டுமே! அவரைக் கைது செய்து சிறையில் அடைப்போம்! ரோமாபுரியின் ஜெனரல் எங்கள் சிறப்பு விருந்தினர்! எங்கள் இனிய நண்பர்! எங்கள் மதிப்பிற்கும், துதிப்பிற்கும் உரிய ரோமாபுரித் தளபதி!

ரூபியோ: [அழுத்தமாக] அதைப் போல கிளியோபாத்ரா ரோமாபுரியின் நண்பர்! ஜெனரல் சீஸர் எகிப்துக்குப் பேரரசியாக மகுடம் சூடப் போகும் மாண்புமிகு மாது! ரோமாபுரியின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் உரியவர்! அவரைச் சிறை செய்வது, சீஸரைச் சிறைப்படுத்தியதற்குச் சமம்!

போதினஸ்: எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி! இன்றைக்கு அவர் உங்கள் நேரடிப் பாதுகாப்பில் தப்பி வாழ்கிறார். ஆனால் அவளைக் கைது செய்ய யாம் என்றும் தயங்க மாட்டோம்!

பிரிட்டானஸ்: நீங்கள் யாவரும் தற்போது சீஸரின் அரசியல் கைதிகள்!

ஜூலியஸ் சீஸர்: [முகத்தில் முறுவலுடன்] ஓ! இல்லை!இல்லை!இல்லை! நீங்கள் அனைவரும் சீஸரின் விருந்தாளிகள்.

கிளியோபத்ரா: [ஆத்திரமோடு] ஜெனரல் அவர்களே! பிரிட்டானஸ் சொல்வதுதான் சரி! டாலமி, டாலமியின் குரு, டாலமியின் படை அதிபதி அத்தனை பேரும் மூர்க்கவாதிகள்! அவரைச் சிறையிலிட்டு என்ன செய்வீர்! அறுசுவை உண்டி அளித்து உடலைக் கொழுக்க வைக்கப் போகிறீரா? உங்கள் நிலையில் நானிருந்தால் அத்தனை தலைகளும் இப்போது அறுக்கப்பட்டுத் தரையில் உருண்டோடிக் கொண்டிருக்கும்! அவரை எல்லாம் நீங்கள் சிரச்சேதம் செய்யப் போவதில்லையா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று அவளை உற்று நோக்கி] என்ன? உன் தமையன் பாலகன் டாலமியின் தலையைத் துண்டிக்கச் சொல்கிறாயா?

கிளியோபாத்ரா: ஏன் துண்டிக்கக் கூடாது! வாய்ப்புக் கிடைத்தால் டாலமி என் தலையை வாளால் சீவி எறிய மாட்டானா? கேளுங்கள்! ..[டாலமியைப் பார்த்து] டாலமி! எல்லோர் முன்பாக உண்மையைச் சொல்! என்னைச் சிரச்சேதம் செய்யாமல் பிழைத்து வாழ விட்டுவிடுவாயா?

டாலமி: [சற்று மிரட்சியுடன்] பாம்பும், பாவையும் என் பக்கத்தே தீண்ட வந்தால், பாம்பை விட்டுவிட்டு நான் பாவையைத்தான் முதலில் அடித்துக் கொல்வேன்! ஏன்! பெரியவனானால் நானே அவள் தலையைத் வாளால் துண்டிக்கவும் தயங்க மாட்டேன்!

கிளியோபாத்ரா: பார்த்தீரா? ஆல கால விஷம் கக்கும் டாலமிப் பாலகனை!

ஜூலியஸ் சீஸர்: [தீர்மானமாக] டாலமி! போதினஸ்! தியோடோடஸ்! நீங்கள் யாவரும் போகலாம். விடுதலை உங்களுக்கு! போகும் போது உங்கள் படைகளையும் கூட்டிச் செல்லுங்கள்.

போதினஸ்: [தயக்கமுடன்] ஏன் நாங்கள் போக வேண்டும்! எங்கள் அரண்மனை யிது! போக வேண்டியது கிளியோபாத்ரா!

ஜூலியஸ் சீஸர்: [சற்று கடுமையாக] போதினஸ்! கிளியோபாத்ரா எகிப்தின் பேரரசியாகப் போகிறவள்! அவள் கையில் பிடிபட்டு உங்கள் தலையை யிழக்க விரும்புகிறீரா? அல்லது உங்கள் தலையை உடம்பில் ஒட்டியபடித் தூக்கித் தப்பிச் செல்ல விரும்புகிறீரா? உயிர் பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறேன் உமக்கு! ஒப்புக் கொண்டு உடனே வெளியேறுங்கள். அல்லது மறுத்துக் கொண்டு கியோபாத்ராவிடம் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மைத் தோழர்கள் வெளியே தெருவிலும் உள்ளார்! அதுதான் உங்கள் உலகம்! வெளியேறுவீர் சீக்கிரம்!

தியோடோடஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! மறந்து விட்டீரா, உமது ஆருயிரைக் காப்பாற்றியவர் யாமென்று?

ஜூலியஸ் சீஸர்: என்ன? என்ன? புதிராக உள்ளதே! என்னுயிரைக் காப்பாற்றியவர் நீங்களா? எங்கே எப்போது என்னுயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்? அதுவும் எனக்குத் தெரியாமல்! வியப்பாக உள்ளதே!

தியோடோடஸ்: ஆம், அது உண்மைதான். உங்கள் இனிய உயிருக்குப் பாதுகாப்பு! உங்கள் மகத்தான வெற்றிகளுக்குப் பாதுகாப்பு! உங்கள் பொன்மயமான எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு! அந்த மூன்றையும் நீங்கள் அறியாமலே பாதுகாத்தோம்.

போதினஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! அதை நிரூபிக்க நானொரு சாட்சியை வரவழைக்கப் போகிறேன். [எகிப்தியர் படையாட்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி] அதோ! அங்கே நிற்கிறார், லூசியஸ் ஸெப்டிமியஸ். அவரது தலைமையில்தான் அப்பணி நிறைவேறியது. [லூசியஸை நோக்கி] லூசியஸ்! நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? சீஸர் முன்வந்து நீ நடந்ததைச் சொல்வாயா?

[நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட 40 வயது வாலிபன், ரோமன் உடை அணிந்தவன் சீஸர் முன் வருகிறான்.]

போதினஸ்: உண்மையைச் சொல், லூசியஸ்! ஜெனரல் சீஸர் எகிப்துக்கு ஏன் வந்தார்? தன் பகைவன் ரோமாபுரி பாம்ப்பியை தேடிப் பிடிக்க வந்தாரில்லியா? எகிப்தியர் நாம் என்ன செய்தோம்? பாம்ப்பியை எகிப்தில் ஒளித்து வைத்தோமா?

லூசியஸ்: [அழுத்தமாக] ஜெனரல் சீஸர் அவர்களே! பாம்ப்பியின் காற்தடம் எகிப்தின் கரையில் பட்டவுடன், அவரது தலையை என் வாளால் வெட்டித் துண்டித்து விட்டவன் நான்!

தியோடோடஸ்: [ஆணித்தரமாக] அவரது மனைவி, பிள்ளை இருவர் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப் பட்டான் பாம்ப்பி! நினைவிருக்கட்டும் ஜெனரல் சீஸர்! கப்பலை விட்டுக் கரையில் கால் வைக்கும் போது அவரிருவரும் கண்வலிக்கக் கண்ட காட்சி! நீங்கள் பலிவாங்கக் காத்திருந்ததை, நாங்கள் செய்தோம். ரோமாபுரி ஜெனரலுக்காக, எகிப்தியர் செய்த நன்றிக் கொலை! உங்கள் அன்பைக் கவர நாங்கள் செய்வத நல்ல காரியம், பாம்ப்பியைக் கொன்றது!

ஜூலியஸ் சீஸர்: [மனவேதனை யுற்று, தடுமாறி அங்குமிங்கும் நடந்து] பாவிக் கொலைகாரர்களா! நீவீர் புரிந்தது படுகொலை! நன்றிக் கொலையா அது? நரபலிக் கொலை! ரோமாபுரித் தளபதி பாம்ப்பி வீரத்தில் எனக்கு நேரானவன்! போரிடுவதில் எனக்கு நிகரானவன்! போரிட்டுக் கொல்லாமல் வீரனை படுகொலை செய்த நீவீர் அனைவரும் கொலைகாரர்கள்! குற்றவாளிகள்! உம்மைச் சும்மா விட்டுவிட மாட்டேன்! பகைவனாயினும் ஒரு ரோமனைப் போரிடாமல் கொல்வது, என்னெறிப்படி ஒரு படுகொலை! யாரிந்த சதியைத் திட்டமிட்டது? ஏ! லூசியஸ்! யாருனக்கு ஆணை யிட்டது? யாருன்னை அனுப்பிக் கொலை செய்யத் தூண்டியது? என் மனத்தைத் துடிக்கச் செய்த அந்த பயங்கரவாதி யார்? .. யார்? …யார்?

போதினஸ்: துணிச்சலான அச்செயல் ஜெனரல் சீஸருக்காகச் செய்யப் பட்டது! அதைத் திட்டமிட்டவன் நான்தான்! நினைத்ததை முடித்த நான் அதற்குப் பெருமைப் படுகிறேன்! பயங்கரத் தளபதி பாம்ப்பியைக் கொன்றதற்குச் சான்றுகள் இன்னும் உள. [அக்கில்லஸைப் பார்த்து] அக்கில்லஸ்! கொண்டுவா அடுத்த குடத்தை! ஜெனரல் சீஸருக்குக் காட்டு அடுத்த சான்றை!

[அக்கில்லஸ் முன்வர இரண்டு அடிமைகள் மூடிய ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்து தரையில் வைக்கிறார்கள்.]

அக்கில்லஸ்: [பானை மூடியைத் திறந்து] ஜெனரல் சீஸர் அவர்களே! இதோ, பாம்ப்பியின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! பார்க்க விரும்புகிறீரா? உங்கள் பகைவனை ஒழித்து விட்டோம்! [அடிமைகள் மூடியைத் திறந்து தலையை எடுக்க முனைகிறார்கள்]

ஜூலியஸ் சீஸர்: [மனமுடைந்து, அலறிக் கொண்டு] கொலைகாரரே! நிறுத்துங்கள்! நானதைக் காண விரும்பவில்லை! அயோக்கியர்களே! முரடர்களே! பாம்ப்பி என்னும் ரோமாபுரி வீரன் என் பகையாளி என்று மட்டுமா நினைத்தீர்? அவன் என் மகள் ஜூலியாவை மணந்தவன். என் மருமகன் அவன்! காலமான பாம்ப்பியின் முதல் மனைவி எனது ஒரே மகள் ஜூலியா! அவளும் என்றோ காலமாகி விட்டாள்! கடவுளே! என்ன கொடுமை யிது? ஓ! பாம்ப்பி! நீ இப்படியா இந்த மூர்க்கர் கையில் அறுபட்டுச் சாவாய்?

அக்கில்லஸ்: [சீஸரை அணுகி, வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!

ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூபியோ! பிரிட்டானஸ்! விலங்கோடு வாருங்கள்! கொலைகாரர் யாவரையும் கைது செய்யுங்கள்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்துங்கள்! கிளியோபாத்ராவுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திடுங்கள்!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 4, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா