பா த் தி ர ம்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

ஐ. சாந்தன்


படலைத் திறந்த சத்தம்கேட்டு நிமிர்ந்தான். ஒரு பெண். யாரென்று தெரியவில்லை. திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை. நெருங்கி வர வர, மனுசியின் முகத்தை எங்கேயும் பார்த்ததில்லை என்பது தெளிவாயிற்று.

கிட்ட வந்தபுடன் கையிலிருந்த பேப்பரை மடித்தவாறே எழுந்து,

”யாரைப் பார்க்கறீங்க?” என்றான்.

அவள் இன்னும் நெருங்கி வந்தாள். படியில் பிள்ளையை இறக்கி விட்டு,

”அம்மன் கோயிலடியிலிருந்து வாறேன்…” என்றபோது கண்கள் கலங்கின.

”கலவரத்துக்குள்ளை நாங்கள் தெமட்டக்கொடையிலை இருந்தோம்…” சொல்லிவிட்டு லேசாக விம்மத் தொடங்கினாள்.

இவன் உள்ளே திரும்பி,

”அம்மா…” என்றான்.

”எங்கட அவர், அப்பா செத்துப் போனார்…”

”யார்?”

”தகப்பன்…” – அவள் குழந்தையைச் சுட்டியவாறே கண்களைத் துடைத்தாள்.

பொடியன் இவனை வடிவாகப் பார்த்துக்கொண்டு நின்றது. ஐந்து வயதிருக்கும். உருண்டைக் கண்கள். உருண்டை முகம். அதைப் பார்த்து மெல்லச் சிரித்தான். தாயின் பின்னால் ஒளிந்து கொண்டது.

”என்னவாம்?” என்றாள் அம்மா. மனுசி திருப்பிச் சொன்னது.

”ஐயோ பாவம்…”

இங்கே, ஊரில் வீடில்லை. காணி மட்டுந்தான். அம்மன் கோவிலுக்குக் கிட்ட, அம்பல வாத்தியார் வீட்டடியில் இருக்கிறது. வாத்தியார், சொந்தமில்லை. ஊரைவிட்டுப் போய்க் கனகாலமென்றாலும் அவரை விசாரித்தால் இவர்களைப் பற்றித் தெரியும். உள்ள காணியில் ஒரு கொட்டிலாவது போட காசு தேவை…. அதுதான்…

அம்மா உள்ளே திரும்பினார்.

”தெமட்டக்கொடையிலை எங்கே இருந்தீங்க?”

”வெள்ளவெத்தைப் போற ரோட்டிலை…”

”என்னது?” மீண்டும் கேட்டான்.

”முகாமிலை இருந்தது நீங்களா?”

”ஓம்” தலையாட்டினாள்.

”எந்த முகாம்?”

”வியாங்கொடையிலை…”

”இதென்ன சொல்லுறீங்க…?”

குழந்தை முன்னால் ஓடிவந்து சிரித்தது.

உள்ளே இருந்து வந்த அம்மா, ”இந்தா…” என்று கொடுத்தார்.

தாளைக் கும்பிட்டு வாங்கினாள். பிள்ளையைத் து¡க்கி இடுப்பில் வைத்தாள். போகப்போக அது இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

”ஏன் குடுத்த நீங்கள்?… சொன்னதெல்லாம் பொய்” – மெல்லிய எரிச்சலுடன் கேட்டதைச் சொன்னான்.

”சீ பாவம்… அவள் வீட்டைவிட்டு அதிகம் வெளிக்கிடாமலிருந்திருக்கலாம்…” என்றாள் அம்மா.

அப்படித்தானிருக்கும்.

—-
1984

Series Navigation

ஐ. சாந்தன்

ஐ. சாந்தன்