மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25

This entry is part of 41 in the series 20060616_Issue

ஜோதிர்லதா கிரிஜாஅரையாய்ச் சாத்தியிருந்த கூடத்து அறையினுள் துர்க்கா தன் சாமான்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது காவேரிக்குத் தெரியாது. அவள் பின்கட்டுக்குப் போயிருந்ததாக அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். இருப்பினும், தாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவள் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தால்தான் விழிகளை மலர்த்தியும், உதடுகளுக்குக் குறுக்கே விரல் வைத்தும் எதுவும் பேசவேண்டாம் என்று அவள் சின்னக்கண்ணுவை எச்சரித்தாள். ஆனால், கதவிடுக்கின் வழியே துர்க்கா அதைக் கவனித்துவிட்டாள். அவளுள் சொல்லிமாளாத வியப்புப் பெருகியது.

‘ராத்திரி நேரம்’, ‘ஆற்றங்கரை’, ‘குழந்தையை வாங்கிக்கொண்டு போனது’, ‘அதற்கு விலை போல் மோதிரம் தந்தது’ ஆகிய தகவல்கள் ஏதோ மர்மத்தை உள்ளடக்கியவையாக அவளுக்குத் தோன்றின. ஒரு திகில் தன் தாயின் முகத்தில் வந்து உட்கார்ந்ததைக் கதவிடுக்கின் வழியே பார்த்து அவள் தெரிந்துகொண்டாள். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், ‘மேலே எதுவும் பேசாதே’ என்பது போல் காவேரி அந்தப் பெண்ணுக்குச் சாடை செய்ததுதான் அவளுக்குள் அளவிடமுடியாத ஆவலைக் கிளர்த்திவிட்டது.

‘இதற்கு என்ன அர்த்தம்? எந்தக் குழந்தை? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் ஒரே குழந்தை என்றுதானே சொல்லி வந்திருக்கிறார்கள்? .. .. .. கண் அகற்றி, உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கிறாள் அம்மா என்றால், மேற்கொண்டு அவள் பேசக் கூடாது, அப்படிப் பேசினாலும் என் காதில் விழுந்துவிடக் கூடாது’ என்பதற்காகத் தானே? .. .. .. அவரோ கடைத் தெருவுக்குப் போயிருக்கிறார். வீட்டில் தற்போது இருப்பவர்கள் அம்மாவும் நானும் மட்டும்தானே? தன் மாப்பிள்ளைக்குத் தெரியக்கூடாத விஷயம் என்று மட்டும் அது இருக்க முடியாது. அது எனக்கே தெரிந்துவிடக் கூடாது அன்று அம்மா நினைக்கிறாள்! அப்படிப்பட்ட மர்மம் என்னவாக இருக்கும்? .. .. ..’ – இவ்வாறெல்லாம் அவள் எண்ணங்கள் ஓடின.

கதவிடுக்கின் வழியாக அவள் அந்தப் பெண்ணை நன்கு கவனித்து அவளது முகச்சாயலையும், தோற்றத்தையும் தன் உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டாள்.

இதற்குள் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டிருந்த வள்ளி, “இவ என்னோட அக்காதாம்மா. சின்னக்கண்ணுன்னு பேரு. சின்னக்கொளத்துல இருக்குது. அங்கே தாசரதின்னு ஒரு அய்யா வீட்டில வேலை செய்யுது. எம் மகளுக்குக் கலியாணம் நிச்சியமா யிருக்கு. .. .. சாவுக்கு வந்த எடத்துலேர்ந்து கெளம்புறப்ப, ‘போய்ட்டு வாரேன்’ னு சொல்லக்கூடாதும்பாங்க. ..” என்றவாறு சின்னக்கண்ணுவை நோக்கித் தலையசைத்தாள்.

இருவரும் கிளம்பினார்கள்.

“உம் மக கல்யாணத்துக்கு உதவி செய்யணும்னு அவர் இருந்தப்போ சொல்லிண்டே இருந்தார். இப்ப நாங்க ரொம்ப நொடிச்சுப் போய்ட்டோம். குடுக்கிறதுக்குப் பெரிசா எதுவும் இல்லே. இருந்தாலும், என்னால முடிஞ்சதைத் தறேன், வள்ளி. சந்தோஷமா வாங்கிண்டு போ!” என்ற காவேரி அடுக்களைக்குப் போய் அஞ்சறைப் பெட்டியிலிருந்து நூறு ரூபாய் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.

அவள் கொடுத்த பணத்தைத் தன் கண்களில் நன்றி தெரிய வாங்கிக்கொண்ட வள்ளி அடுத்த கணம் படியிறங்கி நடந்தாள். தன் தாய் அடுக்களைக்குப் போய்விட்டது தெரிந்த பின் துர்க்கா கூடத்துக்கு வந்தாள்.

பிறகு தண்ணீர் குடிக்க அடுக்களைக்குப் போனாள்.

“வள்ளி வந்திருந்தா – துக்கம் கேக்கறதுக்கோசரம்.. .. நீ எங்கே போயிருந்தே?” என்று காவேரி கேட்டதற்கு, “நான் பின் கட்டுக்குப் போயிருந்தேம்மா,” என்று பதிலிறுத்த துர்க்கா, காவேரி அறியாதபடி அவளைக் கூர்ந்து பார்த்தாள்.

காவேரியின் முகம் இருளடித்துக் கிடந்ததாய் அவளுக்குப் பட்டது. ஏதோ பழைய நினைவுகள் கிளறப் பெற்றதற்கான சிந்தனைக் கோடுகளுடன் அவள் முகம் காணப் பட்டதாய்த் துர்க்காவுக்குத் தோன்றியது.

“ஏம்மா ஒரு மாதிரி இருக்கே?”

“புதுசா ஒரு மாதிரியும் இல்லேம்மா. இனிமே என் மூஞ்சி எப்பவுமே இப்பிடித்தான் இருக்கும். பழைய களை வராதுடி, துர்க்கா!”

சின்னக்கண்ணுவுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் தன் காதில் விழுந்துவிட்டது பற்றி அம்மாவிடம் கேட்டுக் கிளறக்கூடாதென்றுதான் துர்க்கா முதலில் நினைத்திருந்தாள். தன் மகளுக்குக் கூடத் தெரியக் கூடாதென்ற காவேரியின் எண்ணத்தைக் கவுரவிக்கவும் அவள் விரும்பினாள்தான். ஆனால், அவளது இருண்ட முகத்தைப் பார்த்ததும், சட்டென்று எழுந்த ஓர் உந்துதலில் கேட்டுவிட்டாள்: “அந்தப் பொண்ணு என்னம்மா, ஏதோ ஆத்தங்கரை, இருட்டு நேரம், கொழந்தை அது இதுன்னு என்னென்னவோ சொன்னாளே, என்ன அது? நீ ஏன் ஜாடை காட்டித் தடுத்துட்டே? அப்ப நான் கூடத்து ரூம்லதான் இருந்தேன். பின்கட்டுல இருந்தேன்னு பொய் சொன்னேன். கதவிடுக்கு வழியாவும் கவனிச்சேன். அப்படி என்னம்மா ரகசியம்? எதுவானாலும் ஏங்கிட்ட சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் குறையுமோன்னோ?”

காவேரி தலை உயர்த்தித் துர்க்காவைப் பார்த்தாள். அடுத்த நொடியில் அவள் விழிகள் நிறைந்துவிட்டன. அப்படியே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து அழத் தொடங்கினாள்.

பதறிப் போன துர்க்கா, “என்னம்மா இது! எதுக்கு இப்பிடி அழறே? உன் மாப்பிள்ளை கடைக்குப் போயிருக்கார். திடீர்னு வந்து நாம பேசறதைக் கேட்டுட்டா – அது அவாளுக்குத் தெரியக்கூடாதுன்னா – வீண் வம்பு! நான் போய் முதல்ல வாசக் கதவைச் சாத்தித் தாப்பாப் போட்டுட்டு வறேன்.. .. ..” என்ற துர்க்கா எழுந்து சென்றாள்.

கதவைத் தாளிட்டுவிட்டு வந்த துர்க்கா காவேரி தரையில் விழுந்து கிடந்ததைப் பார்த்தாள். அவள் மயக்கமாகி யிருந்ததைப் புரிந்துகொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைத் தன்னினைவுக்குத் துர்க்கா கொண்டுவந்ததும், “துர்க்கா! என்னன்னு சொல்றது, எப்பிடிச் சொல்றதுன்னே தெரியல்லே.. ..” என்று குழறிய பின் மறுபடியும் காவேரி அழலானாள்.

“அம்மா! நீ ஏற்கெனவே பெரிய துக்கத்துலே இருக்கே. அந்த விஷயத்தைச் சொல்றதுனால உன்னோட பாரம் கொறையுமோன்னுதான் என்னன்னு கேட்டேன். மத்தப்படி, உன்னோட ரகசியத்தைத் தெரிஞ்சுக்கணும்கிற ஆவலாதியினால இல்லே. அதைச் சொல்றதுனால உன்னோட துக்கம் ஜாஸ்திதான் ஆகும்னா நீ சொல்ல வேண்டாம்.”

”அப்படின்னு இல்லேம்மா, துர்க்கா. அதைத் தெரிஞ்சுக்கிறதுனால நோக்கு எந்த லாபமும் இல்லேங்கிறதுனாலதான் அதை இத்தனை நாளும் நாங்க – அதாவது உங்கப்பாவும் நானும் – மறைச்சு வெச்சோம். அது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமேம்மா? .. .. ஆனா, அதைத் தெரிஞ்சுண்டுதான் ஆகணும்னா, சொல்றேன். என்ன சொல்றே? நேக்கும் வயசாயிடுத்து. நான் இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள்.. ..”

“அப்படி யெல்லாம் பேசாதேம்மா.. ..”

“உள்ளதைத் தானே சொல்றேன்? .. .. நான் சொல்லாமயே இருந்துடலாந்தான். ஆனா, ‘இந்தம்மா எதையோ மறைச்சுட்டா – அது ஒருக்கா அவ சம்பந்தப்பட்ட அசிங்கமோ என்னமோ – அப்படின்னு நோக்கு ஒரு சந்தேகம் வந்துட்டா, அதை என்னால தாங்கிக்க முடியாதும்மா! ஆனா என் கவுரவப் பிரச்னை எதுவும் அந்த ரகசியத்துலே கெடையாதுன்னு மட்டும் என்னால சத்தியம் பண்ண முடியும். சூடம் கொளுத்தி உள்ளங்கையில வெச்சுண்டு வேணாலும் சத்தியம் பண்றேன்.. .. “

“வேணம்மா. அதைத் தெரிஞ்சுக்காட்டா என் மண்டை வெடிச்சுடும்கிறாப்ல நேக்கொண்ணும் ஆவலாதி இல்லேம்மா. அது ஏதோ அற்ப ரகசியம்னா அதை விட்டுடு. .. .. கொஞ்சமாக் காப்பி கலந்து குடுக்கறேம்மா. குடிச்சுட்டுப் படுத்துக்கோ. நான் என்னவானும் தப்பா உன்னப் பத்தி நெனைக்கிறேனோன்ற கற்பனையெல்லாம் நோக்கு வேணாம்மா.. ..” என்ற துர்க்கா காப்பி கலந்து எடுத்து வர எழுந்தாள்.

நில நிமிடங்களில் அவள் கொண்டுவந்த காப்பியைக் குடித்த காவேரி, “ஒண்ணு மட்டும் சொல்றேன், துர்க்கா! ஒரு தாயாருடைய எந்தக் கடமையிலேர்ந்தும் நான் தவறல்லே. உங்கப்பாவுக்கு மனசால கூட துரோகம் பண்ணாமதான் இருந்து வந்திருக்கேன்! அதை மட்டும் நீ நம்பினாப் போறும்!” என்றாள் குரல் உடைந்து.

“அம்மா! அதைப் பத்தி நாம இனிமே பேசவே வேண்டாம்மா. நேக்கு உம்மேல எந்த விதமான சந்தேகமும் வரவே இல்லே. விடு. அதை மறந்துடு. நானும் மறந்துட்றேன். சரியா?” என்று தாய்க்கு ஆறுதலாய்ப் பேசிவிட்டு எழுந்தாளானாலும், துர்க்காவின் உள்ளம் அமைதி யடையவில்லை. அந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவளை அந்தக் கணமே அரிக்கலாயிற்று. என்னென்னவோ கோணங்களில் யோசித்தும், என்னதான் நடந்திருக்கும் என்பதை அவளால் ஊகிக்கவோ தீர்மானிக்கவோ முடியவில்லை. எனினும் அதனைத் தான் அறிவது அம்மாவுக்கு அவமானத்தையோ, துயரத்தையோ ஏற்படுத்தக்கூடும் என்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. அப்படியாயின், அம்மாவுக்குத் தெரியாமல் அந்த வள்ளியை எப்படியாவது தனியாய்ப் பார்த்துப் பேசி உண்மையை அறியவேண்டும் என்று அவள் முடிவு செய்துகொண்டாள். அதன் பிறகுதான் அவள் மனம் ஓரளவு சமாதான மடைந்தது. வாசற்கதவு தட்டப்பட, அவள் சிவகுருவுக்குக் கதவு திறக்க எழுந்து போனாள்.

சாப்பிட்டுவிட்டு அவன் மறுபடியும் வெளியே சென்றான். அதற்குப் பிறகு துர்க்காவும் காவேரியும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

“அம்மா!”

“சொல்லு.!”

“அவர் பட்டணத்துல பிசினெஸ் பண்றதுக்கான ஏற்பாடுகள்ளாம் தன்னோட சிநேகிதாள் மூலமாப் பண்ணியாச்சு. ஏதோ கண்ணாடித் தொழிற்சாலையாம்.”

“உங்காத்துக்காரரும் அவாளும் சேந்து கண்ணாடி தயாரிக்கப் போறாளாமா?”

“இல்லே. ஐரோப்பாவிலெ ஒரு நாடு. அதுக்கு பெல்ஜியம்னு பேராம். அங்கேர்ந்து பலவிதமான கண்ணாடிகள் தருவிச்சு வியாபாரம் பண்றதா இருக்கா. இங்கே சட்டம் மட்டும் பண்ணுவா. அப்புறம் வேணுங்கிற அளவுக்கு அறுத்துக் குடுப்பாளாம். மொகம் பாக்கற கண்ணாடி, பீரோக்களுக்கான கண்ணாடி, ஜன்னல்களுக்கான கண்ணாடி, பாட்டில்கள் ஜாடிகள் இதெல்லாம் பண்றது அந்த மாதிரி.. ..”

“என்னமோடியம்மா! சிநேகிதாள்னு இந்தக் காலத்துலே யாரையும் நம்பிடப்படாதுடியம்மா. ஜாக்கிரதையா யிருக்கச் சொல்லு உங்காத்துக்காரரை.. .. அப்புறம்?.. ..”

“உன்னையும் பட்டணத்துக்குக் கூட்டிண்டு போய்க் கூட வெச்சுக்கணும்னு நேக்கு இருக்கு. ஆனா.. .. அவர் அப்பப்போ பணம் அனுப்பினாப் போறும்கறார்ம்மா! எவ்வளவோ வாதாடிப் பாத்துட்டேன்.. .. என்னை மன்னிச்சுடும்மா! “ என்ற துர்க்கா அழத் தொடங்கினாள்.

“அசடு! அசடு! சாப்பாட்டுக் கலத்துக்கு எதிர்ல உக்காந்துண்டு எதுக்கு அழறே? அதான் பணம் அனுப்பலாம்னுட்டாரோன்னோ? அப்புறம் எதுக்குடி அழறே? சாப்பிட்றச்சே அழப்படாது.. .. ஸ்ஸ்ஸ்! கண்ணத் தொடைச்சுக்கோ!”

“நானே பிள்ளையாப் பொறந்திருந்தா கதையே வேற மாதிரி இருக்குமோன்னோ?”

“அதுக்கென்ன பண்ண முடியும், துர்க்கா? அழாதே. பணம் அனுப்பலாம்னு மாப்பிள்ளை சொன்னதே பெரிசுதான்.”

“என்னம்மா கல்யாணமும் கருமாதியும் வேண்டிக் கெடக்கு? இப்ப பாரு. என்னால எல்லாச் சொத்தையும் அப்பா விக்கும்படி ஆச்சு. உனக்குன்னு அப்பா வெச்சுட்டுப் போக ஆசைப்பட்ட வீட்டையும் எழுதி வாங்கிண்டு அதை அவர் வித்தும் ஆச்சு. “

“அதைப் பத்தி இப்ப என்னடி, துர்க்கா? சந்தோஷமாப் பட்ணத்துக்குப் போ. உங்க மாமியார் பிடுங்கல்லேர்ந்து தப்பிக்கப் போறதை நெனைச்சு நீ சந்தோஷமே பட்டுக்கலாம்.. .. மாப்பிள்ளையோட வியாபாரம் அமோகமா நடக்கட்டும். நிறையப் பணம் சேத்து வித்ததுக்கு மேலேயே வாங்கிட்டாப் போச்சு.”

“ஆ.. .. ..மா! வாங்கி நோக்குத்தான் குடுக்கப் போறாளாக்கும், உன்னோட மாப்பிள்ளை!”

“நேக்கென்னத்துக்குடி இனிமே வீடும் வாசலும்? நான் இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள்தான். உங்கப்பா போனதுக்கு அப்புறம் அரை உசிரு ஏற்கெனவே போயாச்சு.. .. ..” – காவேரி கண்ணீர் விடலானாள்.

“என்னம்மா இது? என்னை அழாதேன்னு சொல்லிட்டு நீ சோத்துக் கலத்துக்கு முன்னாடி உக்காந்துண்டு அழறே? நன்னாருக்கு, போ! நிறுத்தும்மா.”

இருவரும் கண்களைத்துடைத்துக்கொண்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்.

.. .. .. ‘த மெட்றாஸ் ஸ்திரீ சேவா மண்டலி’ யின் தலைவி சிஸ்டர் முத்துலட்சுமியின் அறையில் அவருக்கு எதிரே தன் மகள் சத்தியபாமாவுடன் ராகவன் அமர்ந்துகொண்டிருந்தான்.

“யாருமே இல்லாத அநாதைகளுக்குத்தான் நாங்க இந்த ஹோம்லே சேத்துக்க ப்ரி·பெரென்ஸ் (preference) குடுக்கிறது. அதனால உங்க பொண்ணு மாதிரியானவா மாசாமாசம் பணம் குடுத்துடணும். அவாவா சக்திக்கு ஏத்தபடி நாங்க அந்தத் தொகையை நிர்ணயிப்போம். இங்க வந்து சேர்றவா யாராயிருந்தாலும் நாங்க அவாளுக்குப் படிப்பு, தொழில் கல்வி ரெண்டும் சொல்லிக் குடுக்கிறதுண்டு. தையல், எம்ப்ராய்டரி, நெசவு, காகிதக் கூடைகள் பண்றது, பொம்மைகள் பண்றது, ராட்டையில நூல் நூக்கறது இது மாதிரியான வேலைகள்.. .. எந்த ஒரு பொண்ணும் சுயமாச் சம்பாதிச்சு யாரோட தயவும் இல்லாம வாழணும்கிறது எங்களோட லட்சியம்! ஒண்ணு மாத்தி இன்னொண்ணுன்னு இங்கே வேலை செய்யறதுக்குத் தயாரா யிருக்கணும்.. .. இங்கே யாரும் சொகுசு கொண்டாட முடியாது.. .. ..”

அவர் பேசிக் கொண்டிருக்கையில் பங்கஜம் அங்கு வந்தாள். முதலில் அவள் ராகவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவனது பார்வை அவள் அங்கு வந்து நின்ற கணத்திலேயே அவள் மீது பதிந்துவிட்டது. அவன் திகைத்துப் போனான்.

“இதோ, இவா கூட உங்க ஊர்ல வாக்கப்பட்டவாதான். எனக்கு அடுத்தபடியா இந்த ஹோமை நிர்வகிக்கக்கூடிய அளவுக்கு இப்ப திறமைசாலியாயிட்டா.. .. ப்ரைவேட்டா (private) பரீட்சை எழுதறதுக்கெல்லாம் கூட நாங்க ஏற்பாடு பண்றோம். இப்ப பங்கஜத்துக்கு – அதான் அவங்க பேரு – இங்கிலீஷ்ல வொர்க்கிங் நாலெட்ஜ் (working knowledge) இருக்கு! ஒவ்வொரு பரீட்சையாப் பாஸ் பண்ணிண்டு வரா!”

‘இவாளை நேக்குத் தெரியும்’ என்று சொல்லுவதா வேண்டாமா என்று ராகவன் திகைத்து முடிப்பதற்குள், “இவரை நேக்குத் தெரியும், சிஸ்டர்! .. .. சவுக்கியமா?” என்று அவனைப் பார்த்துப் பங்கஜம் புன்சிரிப்புடன் வினவினாள்.

ஓர் ஆணைப் பார்த்ததுமே தலை குனிந்து ஓடி ஒளிகிற பழைய பங்கஜமாக அவள் தற்போது இல்லை என்பதை ராகவன் புரிந்துகொண்டான் – புன்சிரிப்புடன் ‘சவுக்கியமா?’ என்று அவள் விசாரித்தது அவள் பிறந்து வளர்ந்த கிராம வழக்கத்துக்கு அதிகப்படியானதுதான் என்பதால்!

“நீநீ.. .. நீங்க எஎ.. .. எப்பிடி இஇ.. .. இருக்கேள்?”

“அதான் பாக்கறேளே?”

“நீங்க அனுமதிச்சா, அப்புறமா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“ஓ! பேசலாமே! அது சரி, இவ உங்க பொண்ணா?” என்று அவள் கேட்டதும் அவன் விழிகளில் நீர் திரையிட்டது. தலை யசைத்தான்.

“சரி. மத்தியானச் சாப்பட்டு இண்டர்வெல்லப்போ (interval) என்னைப் பார்க்கலாம் நீங்க – சிஸ்டர் மேடம் பெர்மிட் பண்ணினா.. ..”

“ தாராளமா!” என்று சிஸ்டர் முத்துலட்சுமி அனுமதி யளித்தார்.

“இப்ப நான் வந்த விஷயத்தை சொல்றேன், சிஸ்டர். உங்களைப் பாக்கிறதுக்காக ஒரு பொண்ணு – மெட்ராஸ்காரப் பொண்ணுதான் – வந்திருக்கா. இவர் கெளம்பிப் போனதும் அனுப்பலாமான்னு கேக்கறதுக்குத்தான் வந்தேன், சிஸ்டர்.”

“சரி, பங்கஜம்.. ..”

.. .. .. மகள் சத்தியபாமாவை அந்த இல்லத்தில் சேர்த்த பிறகு, வரவேற்புக் கூடத்தில் ராகவன் பங்கஜத்தைச் சந்தித்தான்.

“சத்தியபாமா! நீ இங்கேயே இப்பிடி உக்காந்திண்டிரு. நான் இவாளோட கொஞ்சம் பேசிட்டு வந்துட்றேன்.. ..” என்று அவன் தன் மகளிடம் சொன்னதன் குறிப்பறிந்து பங்கஜம் அந்தக் கூடத்தின் மறு ஓரத்துக்கு அவனை இட்டுச் சென்றாள்.

இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். பங்கஜத்திட மிருந்து அவளது பழைய கூச்சம், மிரட்சி, தயக்கம் எல்லாம் காணாமற் போயிருந்ததை ராகவன் மனத்தில் வாங்கிக் கொண்டான். நடை, உடை மாறா விட்டாலும், பாவனை மாறி யிருந்ததைப் புரிந்துகொண்டான்.

“.. .. ..எல்லாம் கேள்விப்பட்டேன். உங்க தைரியத்தைப் பாராட்றேன். நானும் ஒரு காலத்துல பழமைவாதியாத்தான் இருந்தேன். பொண்ணுகளுக்கு எவ்வளவு அநியாயங்களை நாங்க பண்ணிண்டு வந்திண்டிருக்கோம்கிறதைப் பத்தின பிரக்ஞையே நேக்கு இல்லாமதான் இருந்துது. .. .. அந்தப் பிரக்ஞை நேக்கு எப்ப வந்துது, தெரியுமா” – இவ்வாறு கேட்டுவிட்டு ராகவன் கசப்பாய்ப் புன்னகை புரிந்தவாறு பங்கஜத்தைக் கண்களின் கலக்கத்துடன் ஏறிட்டான்.

பங்கஜம் ஒன்றும் சொல்லாமல் வியப்புடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

அவன் தொடர்ந்தான்: “என்னோட சொந்தப் பொண்ணு வாழாவெட்டியா எங்கிட்ட வந்து சேந்ததுக்கு அப்புறந்தான் அந்தத் தப்பே நேக்குப் புரிஞ்சுது. என் பொண்ணுக்கு விவாகரத்து வாங்கித் தரணும், அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னெல்லாம் என் மனசு இப்ப துடிக்கிறது. ஆனா நம்ம தேசத்துல அதுக்கெல்லாம் வழியே இல்லே. கோர்ட்டுப் படி யேறித் தாலி கட்டினவனுக்கு எதிராக் கேஸ் போட்ட பொண்ணை யாரும் சீந்த மாட்டா! வெள்ளைக்காரன் சட்டம் போட்டாலும், நம்ம புருஷா அதையெல்லாம் ஒத்துக்கவே மாட்டா. நம்மள்ள எவன் ஒரு தரம் கல்யாணம் ஆனவளை ஏத்துக்க முன்வருவான்? அப்படியே எவனாவது வந்தாலும் அது அவளோட பணத்துக்காகத்தான் இருக்கும். இல்லேன்னா அழகுக்காக இருக்கும். அப்படியே கல்யாணம்னு பண்ணிண்டா¡லும், அவ இன்னொருத்தனோட வாழ்ந்த வாழ்க்கை பத்திக் கேட்டு அவளைக் கொடுமைப் படுத்த மாட்டான்கிற நிச்சியமும் இல்லே. இல்லியா?”

பங்கஜம் கண்ணிமைக்காது அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

– தொடரும்

Series Navigation