மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14

This entry is part of 46 in the series 20060331_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற பாசாங்கில் ஈடுபட்டாள்.

“பங்கஜம்!”

“என்னப்பா ?”

“அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் காதுல விழுந்துதா ?” என்று அவர் தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு வினவினார்.

“விழந்துதுப்பா!”

“அவரோாட அம்மா ஒத்துண்டா நீ வேணா அவாத்துக்கு வேலைக்குப் போறியாம்மா ? முடியுமா ?”

தனக்குச் சம்மதமெனில் அப்பாவுக்கும் அப்படியே என்பதை அவரது கேள்வியிலிருந்து புரிந்துகொண்ட பங்கஜம், “அது முடியும், இது முடியாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கெல்லாம் வக்கு இருக்காப்பா ?” என்றாள்.

“அது சரி. ஆனா அப்படி அவரோட அம்மா சம்மதிச்சா நோக்குப் போறதுக்கு இஷ்டமா ? ஏன்னா, அந்தக் கட்டேல போறவன் இருக்குற ஊரா யிருக்கேங்கிறதுனால கேக்கறேன்.”

“அடுத்தடுத்த வீடுன்னா பயமாத்தான் இருக்கும். ஆனா, அவர்தான் வேற வீட்டுக்குப் போறதாச் சொல்றாரேப்பா ? ஆனா நான் அவன் கண்ணுல படாம இருக்கணுமேன்னு மட்டுந்தான் கவலையா யிருக்கு.”

அவள் சன்னமாய்த்தான் பேசினா ளென்றாலும், அவள் சொன்னவை சாமிநாதனின் செவிகளில் விழுந்தன. அவன் கூடத்தில் இருந்தபடியே, “அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்னு அவா கிட்ட சொல்லுங்கோ, மாமா. அவா எங்காத்தோடவே இருக்கட்டும். இங்கேர்ந்து அங்கேயும், அங்கேர்ந்து இங்கேயும்னு தினமும் வேலைக்கு வந்து போய் அலைஞ்சாத்தானே வம்பு ? நீங்க அப்பப்ப எங்காத்துக்கு வந்து அவாளைப் பாத்துட்டுப் போலாம். தினமும் வேணாலும் வாங்கோ. அது உங்களால முடியும்னா!” என்று இரைந்த குரலில் பதில் சொன்னான்.

“என்ன சொல்றே, பங்கஜம் ?”

“நன்னா யோசிச்சுட்டுத்தாம்ப்பா இதுக்கு பதில் சொல்லணும். ஆனா இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தான். இதை நழுவவிட்றதும் புத்திசாலித்தனமாத் தெரியல்லே. அப்புறம், வேற யாராவது வேலையைத் தட்டிண்டு போயிடுவா.”

“வேற யாரும் தட்டிண்டு போகமாட்டா. நீங்க எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்குங்கோ. என்னிக்கு வரச் சொல்றேளோ அன்னிக்கு வந்து பாக்கறேன். அதுக்குள்ள எங்கம்மாவோட சம்மதத்தையும் வாங்கிட்றேன்.” – சாமிநாதன் இரைந்து பதிலிறுத்தான்.

“ஒத்துக்கலாம்னுதான் தோண்றதும்மா. எவ்வளவு டைம் வேணும் யோசிக்கிறதுக்கு ?”

“உங்களுக்குச் சரின்னு தோணித்துன்னா நேக்கும் சம்மதந்தாம்ப்பா. அப்புறமா உங்களோட கலந்து பேசிட்டுப் பதில் சொல்லலாமேன்னு நினைச்சேம்ப்பா. அதனாலதான் டைம் கேட்டேன். மத்தப்படி நேக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே”

“அப்ப சரின்னு சொல்லிடட்டுமாம்மா ?”

“சொல்லிடுங்கோப்பா.”

பஞ்சாட்சரம் கூடத்துக்குப் போய்ச் சாமிநாதனின் எதிரில் உட்கார்ந்தார்: “அவ சரின்னுட்டா. உங்க காதுல விழுந்திருக்குமே ?. .. அதனால, நீங்க உங்கம்மாவைக் கேட்டுட்டு, வீடு மாத்தறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, தகவல் சொல்லுங்கோ. நீங்களே வந்து சொல்றேளா, இல்லேன்னா நான் வரட்டுமா – நீங்க என்னிக்கு வரச்சொல்றேளோ அன்னிக்கு ?”

“நீங்க சிரமப்பட வேண்டாம், மாமா. நானே வந்து சொல்றேன். அதுக்கு ஒரு அஞ்சாறு நாளாகலாம். வாடகை வீட்டுல இருக்கிறவாளை எங்க வீட்டுக்கு மாத்தணும். நாங்க அங்க போகணும் இல்லியா ?”

“ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. ஒரு வாய்க் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்.. .. அம்மா, பங்கஜம்!”

எழ முயன்ற அவரைத் தோள் தொட்டு அமர்த்திய சாமிநாதன், “இப்பதான் ஒரு சிநேகிதன் ஆத்துல குடிச்சேன். அதனால வேணாம். தப்பா எடுத்துக்காதங்கோ. .. .. இந்தாங்கோ! இதை வாங்கிக்குங்கோ!” என்ற சாமிநாதன் தான் கொண்டுவந்திருந்த துணிப்பையை அவரிடம் நீட்டினான். அதில் வாழைப் பழங்களும் மாம்பழங்களும் இருந்தன.

“எதுக்கு இதெல்லாம் ?”

“சாப்பிட்றதுக்குத்தான்!.. .. சரி. அப்ப நான் வரட்டுமா ?”

பையை வாங்கிக்கொண்ட பஞ்சாட்சரம், “ஒரு நிமிஷம். பையைக் காலி பண்ணிக் குடுத்துட்றேனே ?” என்றார்.

“வேண்டாம். சாதாரணத் துணிப்பை தானே ?” என்ற சாமிநாதன் எழுந்து நின்று கை கூப்பிப் புன்னகை செய்து விடை பெறுவதற்கு அடையாளமாய்த் தலை யசைத்துப் புறப்பட்டான். அவர் அவனுக்குப் பின்னாலேயே வாசல் வரை சென்றார்.

கால்களில் செருப்புகளை அணிந்தவாறு, “அப்ப, நான் ஒரு அஞ்சாறு நாள் கழிச்சு வறேன். சரியா ?” என்று திரும்பவும் கும்பிட்ட பின் சாமிநாதன் வீட்டினுள் பார்வையைச் செலுத்திப் பங்கஜத்தைப் பார்க்கும் ஆவலைப் பெரும்பாடு பட்டு அடக்கிய வண்ணம் தெருவில் இறங்கி நடந்தான். தெருத் திருப்பத்தில் அவனது தலை மறைகிற வரையில் பார்த்துக்கொண்டிருந்த பிறகு பஞ்சாட்சரம் உள்ளே போனார்.

“பங்கஜம்! பங்கஜம்!”

“இதோ வந்துட்டேம்ப்பா!”

அவள் அவருக்கு முன்னால் வந்து நின்றாள்.

“நாம சொப்பனம் ஒண்ணும் காணலியே ? ஒரே ஆச்சரியமா யிருக்கு! கதைகள்ள கூட இப்படி நடக்குமான்னு தெரியல்ல.”

பங்கஜம் புன்னகை செய்தாள். மகளின் முகத்தில் ஒரு தெளிவு, ஒரு நிம்மதி, ஒரு மகிழ்ச்சி எல்லாம் வந்து அமர்ந்துகொண்டு விட்டதாக அவருக்குத் தோன்றியது.

“ஏம்மா! இந்தப் பையனை இதுக்கு முன்னால நீ பாத்திருக்கியா ?”

“இல்லேப்பா. காமாட்சி யாத்துக்கு வேலைக்குப் போனதுக்கு அப்புறம் கூட இந்த ரெண்டு நாள்ல அவர் என் கண்ணுல படவே இல்லேப்பா. .. .. ஆனாலும், சின்னதா ஒரு நெருடல்ப்பா.”

“என்னம்மா ?”

“அவருக்கு ஏம்ப்பா நம்ம மேல இப்படி ஒரு அக்கறை ?”

“எனக்கும் அந்த நெருடல் வரத்தாம்மா செஞ்சுது. ஆனா அவனே சொல்லிட்டானே ? அவன் ஒரு காந்தி பக்தன், பிரும்மசரிய விரதம் பூண்டவன் அப்படின்னெல்லாம். நமக்கு அவன் மேல சந்தேகம் வந்துடுமோங்கிறதுக்காகவே மன்சு விட்டு அவன் தன்னைப் பத்திச் சொல்லிண்டான்னு நெனைக்கறேன். அவன் சொன்னது உன்னோட காதுலயும் விழுந்ததில்லியா ?”

“ஆமாம்ப்பா. காதுல விழுந்தது. குப்பையில குருக்கத்தி முளைச்சாப்ல இவரை மாதிரியும் மனுஷா இருக்கா!”

“இதுல சூது எதுவும் இருக்காதேம்மா ?”

பங்கஜத்துக்குச் சிரிப்பு வந்தது: “மனுஷா நல்லது பண்ண நெனைச்சாலும் அவா மேல இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வருது, பாத்தேளா ? நேக்கென்னவோ மோசமா எதுவும் தோணல்லே. நல்லவர்னுதான் தோண்றது. “

“நேக்கும் அப்படித்தான் தோண்றது. பாக்கலாம். ஈஸ்வரோ ரட்சது! ஆனா நீயும்தான் கேட்டே – அவருக்கென்ன நம்ம மேல அப்படி ஒரு அக்கறைன்னு!”

“தப்புதான்!.. .. அங்கேயும் போய் இருந்து பாக்கறேன். சரிப்பட்டு வரல்லேன்னா விட்டுட்டாப் போச்சு. அவ்வளவுதானே ?”

“ஆமாமா.. .. அது சரி, காமாட்சி யாத்துல நடந்ததை நீ இன்னும் பாகீரதி மாமி கிட்ட சொல்லல்லேல்ல ?”

“இல்லேப்பா. “

“சொல்லிடு. அந்த மாமிதானே உன்னை அவாத்துல வேலைக்கு அமத்திவிட்டா ? அப்புறம், தப்பா எடுத்துக்கப் போறா.”

“ இப்பவே போய்ச் சொல்லிட்றேம்ப்பா,” என்ற பங்கஜம் கிளம்பினாள்.

“பங்கஜம்! ஒரு நிமிஷம்.”

அவள் திரும்பி, “என்னப்பா ?” என்றாள்.

“சித்த முந்தி அந்தப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் நம்மாத்துக்கு வந்து பேசினதைப் பத்தி யெல்லாம் இப்ப அதுவும் அந்த மாமிகிட்ட சொல்லவேண்டாம்.”

“சரிப்பா. நானும் அப்படித்தான் நெனைச்சேன்.”

“சரி. போயிட்டு வா.”

அவள் போனாள். பாகீரதி இரேழியிலேயெ எதிர்ப்பட்டாள்.

“வா, வா. நானே வரணும்னு இருந்தேன். மத்தியானமே வந்துட்டே போலிருக்கே ?”

“ஆமா, மாமி. ஒரு அசம்பாவிதம். ஆனா எசகு பிசகா ஒண்ணும் நடக்கல்லே. நடக்கறதுக்கு முந்தி நான் தப்பிச்சிண்டு ஓடி வந்துட்டேன்.”

“என்னடி பொண்ணே சொல்றே ? உங்காத்துலெ உன் கொரலைக் கேட்டதும், அப்பாக்கு ஒடம்பு சரியில்லேங்கிறதுக்கோசரம் ரெண்டு மூணு நாளுக்கு சீக்கிரமா ஆத்துக்குப் போகணும்னு கேட்டுண்டு வந்துட்டியோன்னுன்னா நெனச்சேன் ? என்னமோ அசம்பாவிதம், அது, இதுங்கறியே! என்ன நடந்தது ?” என்று விழிகளை மலர்த்தி வினவிய பாகீரதி, “வா, வா. உள்ள போய் உக்கந்துண்டு பேசலாம்,” என்று உள்ளே செல்ல, பங்கஜம் அவளைப் பின்தொடர்ந்தாள்.

“உக்காரு.”

இருவரும் உட்கார்ந்தார்கள்.

“சொல்லு. என்ன நடந்தது ?”

“.. .. காமாட்சியோட ஆத்துக்காரர் சரியில்லே, மாமி.”

“அய்யய்யோ! அப்படின்னா ?”

“இன்னிக்குக் காலம்பர நான் அவாத்துக்குப் போனப்போ காமாட்சியும் அவ கொழந்தையும் அசந்து தூங்கிண்டிருந்தா. அப்பவே நேக்கு ஏதோ நெரடித்து. அவனையும் காணோம். ஆத்துல சந்தடியே இல்லே. நான் அடுக்குளுக்குள்ள போய்க் காப்பிக்கு அடுப்பு மூட்டி ஜலத்தையும் கொதிக்க வெச்சேன். கொஞ்சங் கழிச்சு அந்தக் கட்டேல போறவன் அடுக்குள் வாசலை மறைக்கிற மாதிரி வந்து நின்னான். அது வரைக்கும் மாடியில இருந்திருக்கான் போலேருக்கு. நேக்கு அவன் சிரிச்ச தோரணையைப் பாத்ததுமே சொரேர்னுது.”

“அட கண்ராவியே! கையைக் கிய்யைப் பிடிச்சு இழுத்தானா ?”

“அவனோட நோக்கம் அதுதான். ‘பயப்படாதே, பங்கஜம் – இவன் தான் நேக்குப் பேரு வெச்சவன் மாதிரிக் கூப்பிட்றான் மாமின்னா ?- நான் ஒண்ணும் மொரடன் இல்லே.. .. நீ மனசோட சம்மதிச்சா ஒரு பூவைக் கையாள்ற மாதிரி உன்னைக் கையாளுவேன். வா, மொட்டை மாடி ரூமுக்குப் போயிடலாம். காமாட்சி இப்போதைகு முழிச்சுக்க மாட்டா’ அப்படின்னான்.”

“அட, படு பாவி! சண்டாளா! அவன் நாசமாப் போக!”

“.. .. ‘அதனால பயப்படாம வா. புருஷனை விட்டுட்டு எத்தனை நாளாச்சு! ஏங்கிப் போயிருப்பேல்லே ?’ அப்படின்னான். “

“கட்டேல போக அவன்!”

“அவ்வளவு பச்சையா அவன் பேசினதை என்னால தாங்கவே முடியல்லே, மாமி. கை, காலெல்லாம் கழண்டுண்டு விட்டுப் போன மாதிரி ஆயிடுத்து. மனசு தடக் தடக்னு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுத்து. கூச்சல் போட்டு அக்கம்பக்கத்து மனுஷாளைக் கூட்டணும் போல இருந்துது. ஆனா கொரலே எழும்பல்லே. சுபாவத்துலெ நான் பயந்தாங்கொள்ளியா யிருந்தாலும், அவன் கிட்டேர்ந்து எப்படியாவது தப்பிச்சுடணும்குற வெறி எங்கிட்ட அதிகமா யிருந்ததால, திடார்னு என் மனசில ஒரு தந்திரம் தோணித்து.”

இவ்வாறு சொல்லி நிறுத்திய பங்கஜத்தின் முகத்தில் ஒரு சிறுநகை தோன்றியது.

“சொல்லு, சொல்லு! அப்புறம் ? என்ன தந்திரம் பண்ணி அந்த நாசகாரன் கிட்டேர்ந்து தப்பிச்சே ? தப்பிச்சுட்டே தானே ?”

“கடவுள் கிருபையால தப்பிச்சுட்டேன்தான்! இல்லேன்னா, இந்த நேரம் எங்கப்பா எங்காத்துக் கெணத்துல மிதக்கிற என்னோட பொணத்தைப் பாத்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சு, அழுதுண்டுன்னா இருப்பா ?”

“சரி. சொல்லு. என்ன தந்திரம் பண்ணித் தப்பிச்சே ?”

“.. .. அவன்கிட்டேர்ந்து தப்பினாப் போறும்கிற ஒண்ணுதான் அப்ப என் மனசில இருந்துது. அதனால நான் நடந்துண்டதை நெனைச்சா நேக்கே என் மேல அருவருப்பாயிருக்கு. ஆனாலும் அப்படிப் பண்றதைத் தவிர வேற வழியே தெரியல்ல நேக்கு.. .. வெக்கப்பட்ற மாதிரி லேசாச் சிரிச்சுட்டு, ‘மாடியில எல்லாம் வேண்டாம். யார் கண்ணுலயாவது பட்டுடும்’ அப்படின்னேன். .. நேக்கு இஷ்டம்கிறதா அந்த மண்டூகம் நம்பிட்டான். அடுக்குள் வாசப்படியைத் தாண்டிக் கூடத்துக்குப் போய்க் காமாட்சியோட படுக்கைக்குப் பக்கத்துல நின்னான். அவளை உலுக்கிப் பாத்து நன்னாத் தூங்கிண்டிருந்தாளான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக இருக்கலாம். அவன் அப்பால போன அந்த ஒரு நிமிஷத்தை நான் பிரயோஜனப் படுத்திண்டேன், மாமி. கிட்ட வந்தான்னா எதுக்கும் இருக்கட்டும்னு அடுப்பில தகதகன்னு எரிஞ்சிண்டிருந்த கொள்ளிக்கட்டையைக் கையில எடுத்துண்டேன். அந்த அடுக்குள்ளுக்குப் பக்கவாட்டுல ஒரு கதவு இருக்கு. உங்களுக்குத்தான் தெரியுமே ? அந்த வாசல் வழியா எடுத்தேன் ஓட்டம்! அவன் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கொல்லைக் கதவைத் தொறந்துண்டு தெருவுக்குப் போயிட்டேன்னாப் பாத்துக்குங்களேன்! தெருவுக்கு வந்ததுமே அந்தக் கொள்ளிக்கட்டையைத் தூக்கி எறியணும்கிற பிரக்ஞை கூட நேக்கு வரல்லே. அதைக் கையில ஒசத்திப் பிடிச்சுண்டே ஒரு பைத்தியக்காரியாட்டமா ஒரு ஓட்டம் ஓடியிருக்கேன் பாருங்கோ, மாமி, அந்தக் கோலத்துல யாரு என்னைப் பாத்திருந்தாலும் என்னைக் கிறுக்கச்சின்னுதான் நெனைச்சிருப்பா. அப்படி ஒரு ஓட்டம்! ரொம்ப தூரம் வந்ததுக்கு அப்புறந்தான் – எதிர்ல வந்தவாள்ளாம் என்னை உத்து உத்துப் பாத்து ஏதோ பேசிண்டது மண்டையில உறைச்சதும்தான் – அதை வீசித் தெருவோரமாப் போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்!.. .. அதை இப்ப நெனைச்சாலும் சர்வாங்கமும் நடுங்கறது!.. .. ..” – மூச்சுவிடாமல் சொல்லிமுடித்துவிட்டுப் பங்கஜம் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு அழலானாள்.

“நீ சொன்னதைக் கேட்டதும் நேக்கே ஒடம்பெல்லாம் நடுங்கறதுடியம்மா! இப்ப எதுக்கு அழறே ? அதான் தெய்வாதீனமாத் தப்பிச்சுண்டு வந்துட்டியே! விட்டுத்தள்ளு. ஒரு கெட்ட சொப்பனம்னு நெனைச்சு மறக்கறதுக்குப் பாரு.. .. .. அந்தக் கட்டேல போற கடன்காரன் இப்படி ஒரு அடுமாளின்னு தெரிஞ்சிருந்தா அங்க உன்னை வேலைக்குச் சேத்துவிட்டிருப்பேனா ?”

‘அய்யோ, மாமி! நீங்க என்ன பண்ணுவேள் ? உங்க மேல எந்தத் தப்பும் இல்லே, மாமி. மனுஷா மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும் ? நீங்க செஞ்சதென்னமோ ஒரு நல்ல எண்ணத்தோடதான். இப்பிடி யெல்லாம் அந்தக் கொடும்பாவி நடந்துப்பான்னு நீங்க கண்டேளா என்ன ? “ – பாகீரதிக்குப் பதில் சொல்லுவதற்காக அழுகையை நிறுத்தி யிருந்த பங்கஜம் மறுபடியும் உடைந்து அழத் தொடங்கினாள்.

“அழாதேடியம்மா, அழாதே. அதான் தப்பிச்சுட்டியே!”

“ஆனா – ஒரு தேவ.. .. வேண்டாம் அந்த வார்த்தை – அவனுக்கு இணங்கப் போறவ மாதிரி நான் சிரிச்சு நடிச்சது என்னைக் கொல்றது, மாமி! அது பொய்யாத்தான்னாலும், நெனைச்சுப் பாக்கறச்சே எவ்வளவு அருவருப்பா யிருக்கு! எவ்வளவு அவமானமா யிருக்கு! .. .. லோகத்துல பொண்ணாவே பொறக்கப்படாது, மாமி! பொறந்து, கல்யாணமும் பண்ணிண்டா, ஆம்படையானோட வாழணும். இப்பிடி வாழாவெட்டியாப் பெத்தவா கிட்டவே திரும்பி வந்து அவாளுக்கு உபத்திரவம் தரக்கூடாது, மாமி. அதுலேயும், ஏழைக் குடும்பத்துல பொறக்கவே படாது, மாமி.”

“கண்ணைத் தொடச்சுக்கோடியம்மா. வெளக்கு வெக்கற நேரத்துல சுமங்கலிகள் இப்படிப் பொங்கிப் பொங்கி அழப்படாது.”

“சுமங்கலி!” என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பங்கஜம் கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

“ஆம்படையானோட வாழறவளுக்குப் பேருதான், மாமி, சுமங்கலி. ஆம்படையான் உசிரோட இருந்தாலே அவ சுமங்கலின்னு ஆயிடுமா ?”

இவ்வாறு கேட்டுப் புன்னகை செய்த பங்கஜத்தைப் பாகீரதி வியப்பாகப் பார்த்தாள்.

“அப்படித்தாண்டியம்மா சொல்றது! ஆம்படையான் உசிரோட இருந்தாப் போறும். அவன் இருக்கிற எடம் கூடத் தெரிய வேண்டாம். அவ சுமங்கலிதான்! அது மட்டுமில்லே. பிரிஞ்ச ஆம்படையான் செத்துப் போயிட்டதாத் தகவல் வர்ற வரைக்கும் அவ சுமங்கலிதான்! அப்படித்தான் காலம் காலமா நடந்துண்டிருக்கு.”

“என்னமோ, மாமி. இதெல்லாம் வேடிக்கையா யிருக்கு. ‘நீ வேண்டாம்’னு ஒருத்தன் வெரட்டியடிச்சுட்டதுக்கு அப்புறமும் அவன் கட்டின தாலிக்கு மதிப்புக் குடுத்து அதைக் கழட்டாம பொண்ணுகள் ஆயுசு முழுக்க வாழணும்கிறதெல்லாம் நேக்கு அபத்தமாத் தோண்றது!”

“சொன்னா, நீ நம்ப மாட்டேடி, பங்கஜம்! என்னோட ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி இருக்கா. கொஞ்சம் படிச்சவ. பட்டணத்துல இருக்கா. அவளுக்குக் கொழந்தையே பொறக்கல்லேன்னு அவ ஆம்படையான் அவளைத் தள்ளி வெச்சுட்டான். அவ என்ன செஞ்சா தெரியுமோ ? தாலியைக் கழட்டித் தங்கத்தை அழிச்சு ஒரு மோதரம் பண்ணிப் போட்டுண்டுட்டா! அந்த மஞ்சக் கயித்தைச் சாக்கடையிலெ வீசி எறிஞ்சுட்டா! இந்தப் புருஷா பண்ற அட்டூழியங்களை நெனைச்சா சில சமயம் அப்பிடித்தான் ஒரு கோவம் வருது. திருமாங்கல்யம் ரொம்பப் பவித்திரம்தான்! ஆனா, அதைக் கட்டினவன் அதோட பவித்திரத்துக்கு மதிப்புக் குடுக்காதப்ப நாம மட்டும் குடுக்கணும்கிறது என்ன நியாயம்’ னு கேட்டா என்னோட அந்த நாத்தனார். என்னமோடியம்மா, தப்போ சரியோ, நமக்கெல்லாம் அந்த அளவுக்குத் தைரியம் வரவே வராது.”

சில நொடிகள் போல் இருவரும் மவுனமா யிருந்தார்கள்.

பின்னர், பாகீரதி, சட்டென்று நினைவுக்கு வந்தவளுக்குரிய முக மாற்றத்துடன், “ஆமா ? கொஞ்ச நேரத்துக்கு முந்தி உங்காத்துக்கு வந்துட்டுப் போனானே ஒரு பிள்ளையாண்டான் – அதான் அந்தக் காமாட்சியாத்துக்குப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் – தங்கம்மா மாமி பிள்ளை – அவன் எதுக்கு வந்தான் ?” என்று ஆவலுடன் வினவினாள்.

இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பங்கஜம் அதிர்ந்து போனாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation