மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8

This entry is part of 32 in the series 20060210_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அவள் கணவன் தாசரதி சின்னக்குளத்தில் மதுரை மீனாட்சி பாடசாலையில் ஆசிரியராக இருந்தான். கல்வி கற்பிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் விதைக்க வேண்டியவன் நியாயம் தெரியாதவனாக இருக்க முடியாது. பெண் குழந்தைகளை வரிசையாகப் பெற்றாள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொருத்திக்குத் தாலி கட்டுவது மிகப் பெரிய அநியாயம் என்பது ஒரு பள்ளி ஆசிரியருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் ?

அவனது கொடுமையை நினைக்க நினைக்க, இப்போதும் கூடப் பங்கஜத்துக்கு ஆத்திரத்தைக் காட்டிலும் வியப்பே அதிக அளவில் ஏற்பட்டது. துணிப்பையும் கையுமாக ஒரு நாள் பிற்பகலில் தனியாக வந்து நின்று, ‘அப்பா!’ என்கிற ஒற்றைச் சொல்லுக்குப் பிறகு வேறு எதுவுமே சொல்லாது தரையில் விழுந்து மடங்கிக் கதறத் தொடங்கிய அவளைப் பார்த்து அவள் அப்பா பதறிய பதற்றம் இப்போது நினைத்துப் பார்த்த போதும் அவளை என்னவோ செய்தது.

முதலில் அவரது பார்வை அவளது நெற்றியில் தான் விழுந்தது.

‘என்னம்மா, கொழந்தே ? மாப்பிள்ளை நன்னாருக்கார்தானே ? எதுக்கு இப்படிப் பொங்கிப் பொங்கி அழறே ? என்ன ஆச்சு ? ஏன் தனியாப் பொறப்பட்டு வந்திருக்கே ? அழறதை நிறுத்திட்டுச் சொல்லும்மா.’

அவளால் உடனே அழுகையை நிறுத்த முடியவில்லை. சில நொடிகளுக்கு அழுது மாய்ந்த பிறகு, எழுந்து உட்கார்ந்தாள். ‘உங்க மாப்பிள்ளைக்கு ஒரு கேடுமில்லேப்பா. நன்னா குந்துக்கல்லாத்தான் இருக்கார். வந்திருக்கிற கேடெல்லாம் நேக்கும் உங்களுக்கும்தான்!’

‘என்னம்மா சொல்றே ?’

‘உங்க மாப்பிள்ளை ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்ப்பா.’

‘என்னது! ரெண்டாங்கல்யாணமா! அடி செருப்பால. எதுக்காம் கேடு ? கிளியாட்டமா அழகும், சாவித்திரியாட்டமா கொணமும் இருக்கிற நீ உசிரோட இருக்கறச்சே இன்னொரு கல்யாணமா!’

‘ஆமாம்ப்பா. நான் வரிசையா மூணும் பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்டேனாம். அவா வம்சம் வெளங்கற மாதிரிப் பிள்ளைக் கொழந்தை பெத்துத் தரல்லியாம். நேக்குப் பொறக்கவும் பொறக்காதாம். என்னோட வயிறு வாசி அப்படியாம். அதனால அவருக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாளாம்ப்பா.’

‘அட, பாவிகளா! நான் போய் நறுக்னு நாலு வார்த்தை சொல்லிட்டு வறேன். இன்னிக்கே, இந்த நிமிஷமே கெளம்பறேன்.’

‘வேணாம்ப்பா. போய் அவமானப் பட்டுண்டு வந்து நிக்காதங்கோ. காசைச் செலவழிச்சுண்டு நீங்க போறதுதான் மிச்சமா யிருக்கும். பலன் ஒண்ணும் ஏற்படப் போறதில்லே. அவா முடிவு பண்ணியாச்சு. அதை மாத்தவே முடியாது. அவாளோட வாக்குவாதம் பண்றதும் சரி, குட்டிச் சொவர்ல முட்டிக்கிறதும் சரி, ரெண்டும் ஒண்ணுதான்.’

‘உன்னை இப்படி வெரட்றதுக்கு மாப்பிள்ளைக்கு எப்படிம்மா மனசு வந்தது ?

நம்பவே முடியல்லியேம்மா!’

‘உங்க மாப்பிள்ளை, போனாப் போறதுன்னுட்டு, நானும் அவாத்துலயே ஒரு ஓரமா இருந்துக்கலாம்னார். எவ்வளவு கருணை, பாருங்கோ. ஆனா மாமினார் அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுட்டா. தவிர, நேக்கும் பிச்சைக்காரியாட்டமா அந்தாத்துல ஒண்டிண்டு இருக்கிறதுக்குச் சம்மதமில்லே.’

‘உங்க மாமனார் என்ன சொன்னார் ?’

‘அவரும் அதே குட்டையில ஊறின மட்டைதான். உங்க அருமந்த மாப்பிள்ளை சொல்றார்- நானும் அங்கே இருந்தா வீட்டு வேலயில எங்க மாமியார்க்கு ஒத்தாசையா யிருப்பேனாம். ஆக மொத்தம் ஒரு வேலைக்காரி ஸ்தானத்துல இருந்துட்டுப் போகட்டும்கறார்! அவாத்துல நான் எதுக்குப்பா வேலை செய்யணும் ? அந்த வேலையை வேற யாராத்துலயாவது செஞ்சு என் வயித்தைக் கழுவிண்டுட்டுப் போறேன்! இல்லியா ?’

பஞ்சாட்சரம் மேல்துண்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு தோள்கள் குலுங்க விம்மினார்.

‘அழாதங்கோப்பா. எது ஒண்ணும் அவாவா தலை எழுத்துப்படிதான் நடக்கும்னு நீங்கதானேப்பா சொல்லுவேள் ? ஏம்ப்பா ? நீங்களே ஒரு ஜோசியர். கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுண்டுதானே நேக்கு ஜாதகம் பாத்தேள் ? கடேசில இப்ப என்ன ஆச்சு ? என்னமோ அமோகமா வாழ்வேன்னு சொல்லித்தே உங்க ஜோசியம் ?’

‘ஜோசியம் பொய்யில்லேம்மா. மாப்பிள்ளையோட பொறந்த நேரத்தை அவா தப்பாக் குறிசிருந்திருக்கலாம். சரி விடு. இப்ப அதைப் பத்தி என்ன ?.. ..அப்போ, அவாளைப் பாத்துப் பேசிப் பிரயோஜனம் இல்லேங்கறே ?’

‘ஆமாம்ப்பா. போய் அவமானப் பட்டுண்டு வந்து நிக்காதங்கோ. நம்ம கவுரவத்தை நாம காப்பாத்திக்கணுமோல்லியோ ? என்னோட கண்ணீருக்கு மனசு எளகாத கல்நெஞ்சுக்காரா உங்க பேச்சையா மதிக்கப் போறா ? விடுங்கோ.’

பஞ்சாட்சரம் ஒரு சோதிடர். அந்த ஊரில் மட்டுமின்றி, அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கும் சென்று சோதிடம் பார்த்துச் சொல்லிச் சம்பாதிப்பவர். அதனின்று கிடைத்த மிகச் சொற்ப வருவாயில், இழுத்துக்கொள், பறித்துக்கொள் என்று எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார். இப்போது மகளின் வருகையால்- இனி நிரந்தரமாக அவரோடு அவள் இருக்கப் போகும் சாத்தியக்கூற்றால்- அவரது சுமை இரு மடங்காகிவிட்டது.

பங்கஜம் தன் அப்பாவிடம் வந்து சேர்ந்தது 1920 ஆம் ஆண்டில். அப்போது அவளுக்கு இருபத்திரண்டு வயதுதான். ‘அழகும் இளமையும் நிறைந்த மகளை எப்படிக் கட்டிக் காக்கப் போகிறோம்’ எனும் திகில் உடனே பஞ்சாட்சரத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

‘சரிம்மா. உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நான் அவாளைச் சந்திக்கிறது வீண்கிறது உன்னோட அபிப்பிராயம்னா, நான் அங்க போகல்லே. .. ..ஆனா.. .. அங்க இருந்த வரைக்கும் மாப்பிள்ளையும் அவாளும் உன்னை சந்தோஷமா வெச்சிண்டிருந்தாளாம்மா ? இல்லே, கொடுமைப் படுத்தினாளா ?”

பங்கஜத்துக்குச் சிரிப்புத்தான் வந்தது. வரிசையாகப் பெண்குழந்தைகளைப் பெற்றாள் என்பதற்காகப் பிள்ளைக்கு மற்றுமொரு திருமணம் செய்துவைக்க முற்படுவோர் எவ்வாறு முதல் மருமகளை அன்பாக நடத்தி யிருந்திருக்க முடியும் என்கிற சாதாரண ஊகம் கூடவா இந்த அப்பாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்றெண்ணித்தான்!

‘அதைப் பத்தி இப்ப என்னப்பா ? அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறேள் ? இருபத்துநாலு மணி நேரமும் சரீரப்பாடுதான். அவாத்துல ரெண்டு பசுமாடு இருக்கு. மூணாவதா நான் ஒரு பசுமாடு. ஆத்துல மாடு இருந்தா எவ்வளவு வேலைகள் இருக்கும்! தெரியுமோல்லியோ ? சாணி உருண்டை பிடிக்கிறது, வரட்டி தட்றது எல்லாமே நாந்தான். நல்ல வேளை. பால் கறக்குறதுக்கு மட்டும் ஒரு ஆள் வருவான். சுருக்கமாச் சொல்லணும்னா, சாணி தட்றதுலேர்ந்து போளி தட்ற வரைக்கும் நாந்தான்! பம்பரமாச் சுத்தினேன். என்னத்தைக் கண்டேன் ? கடேசில, இப்படி வாழாவெட்டியா உங்க கிட்ட வந்து சேந்திருக்கேன். உங்க உயிரை வாங்கறதுக்கு!”

‘அப்படி யெல்லாம் சொல்லாதேம்மா, என் தங்கமே! ஏதோ உருப்படியா உன்னைத் திருப்பி யனுப்பிவெச்சாளே, அந்த மட்டுக்கும் க்ஷேமம்! அதுக்கு அவாளுக்கு நான் வந்தனம்தான் சொல்லணும்.’

‘நான் ரெண்டு மூணு ஆங்கள்லே (அகங்களில்) வேலை செஞ்சு சம்பாதிச்சா உங்க சொமை கொஞ்சம் கொறையுமேப்பா. செய்யட்டுமா ?’

அந்த வேதனையான நேரத்திலும் பஞ்சட்சரம் குபீரென்று சிரித்தார்: ‘என்னது! நீ வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிறதா! சரியாப் போச்சு, போ. இந்த ஊர் அக்கிரகாரத்தைப் பத்தி நோக்குத் தெரியாதா என்ன! உன் எதிர்லயே இல்லாதது பொல்லாத தெல்லாம் பேசுவா. சிலர் உன்னையே நேரடியாக் கேள்விகள் கேட்டு உன்னைச் சங்கடப் படுத்துற அளவுக்கே போவா. உன்னோட வருத்தத்தை அதெல்லாம் இன்னும் ஜாஸ்திதான் பண்ணும். அணைஞ்சிண்டிருக்கிற நெருப்புச் சாம்பலைக் கெளறி மறுபடியும் எரிய விட்டது மாதிரி ஆயிடும். நான் இன்னும் அதிகப்படியா ஏதாவது வேலை பண்றேம்மா. பாக்கலாம். நீ உள்ள போய் ஏதாவது டிஃபன் பண்ணு. அரிசி உப்புமாவுக்கு உடைச்சு வெச்சிருக்கேன். மிளகு, சீரகம், நெய் எல்லாமே தோதாயிருக்கு. போய் உப்புமா பண்ணு. உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!’

பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டு பின்கட்டுக்குப் போய் முகம் கழுவிய பின் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

.. .. தாசரதி இரண்டாம் கலியாணம் செய்துகொண்ட செய்தி சரியாக இரண்டு மாதங்கள் கழித்துத் தெரியவந்தது. சின்னக்குளத்துக்கு ஏதோ வேலையாய்ப் போயிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் கொண்டுவந்த சேதி. எதிர்பார்த்த செய்திதானென்றாலும், அதன் நிதரிசனம் பங்கஜத்தை அழச்செய்தது. தாசரதி தன்னோடு எப்படி, எப்படியெல்லாம் உறவுகொண்டு பழகினானோ அப்படியெல்லாம் அந்த இரண்டாமவளோடு பழகுவான் எனும் உண்மை அவளைச் சுட்டுப் பொசுக்கியது. அவளால் தாங்கவே முடியவில்லை.

அந்தச் செய்தி முதலில் பஞ்சாட்சரத்துக்குத்தான் தெரியவந்தது. பங்கஜத்திடம் அதை வாய்விட்டுச் சொல்லத் துணிச்சல் வராமல் அவர் அதை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அது வேறொரு பெண்மணியின் வாயிலாக அவளுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

பஞ்சாட்சரம் தமது வருவாயில் ஏதோ கொஞ்சம் சேமித்து வைத்திருந்தார். அதெல்லாம் பங்கஜம் அவரிடம் அதிகப்படியான சுமையாக வந்து சேர்ந்ததன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் தொடங்கிவிட்டது. அதனால், மேலும் ஏதாவது வேலை செய்து சாம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளானர். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உடனே அவருக்குத் தோன்றியது திவசச் சாப்பாடு சாப்பிடும் பிராமணனாக இனிப் போக வேண்டும் என்பதுதான். திவசங்கள் அடிக்கடி நடக்கும் சடங்கன்றெனினும், ஏதோ வாய்ப்புக் கிடைக்கிற நாள்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணி அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்தார். அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கும் போக முடிவு செய்ததால், வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டார்.

பங்கஜத்தைப் பொறுத்தவரை அவர் அவளை வேளியே எந்த வேலைக்கும் அனுப்பத் தயாராக இல்லை. வீட்டில் இருந்தவாறே என்ன செய்து அவளைச் சம்பாதிக்க வைக்கலாம் என்று அவர் யோசிக்கத் தலைப்பட்டார். இது மாதிரியான வீடுகளில்- தள்ளிவைக்கப்பட்டவளோ, ‘தாலியறுத்தவ’ளோ- பெண்கள் அப்பளம், வடகம் இட்டு விற்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால், செங்கல்பாளையத்தில் ஏற்கெனவே ஓர் அம்மாள் அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருந்ததால், அவளுக்குப் போட்டியாகத் தங்களால் அதே தொழிலைச் செய்து குப்பைகொட்ட முடியாது என்பதைப் பஞ்சாட்சரம் உணர்ந்திருந்தார். எனவே, வேறு என்ன தொழில் செய்யலாம் என்பது பற்றியே எப்போதும் யோசிததபடி அவர் இருந்தார்.

நாங்கு மாதங்களுக்குப் பிறகு, உருப்படியான ஒரு யோசனை பங்கஜத்துக்குத்தான் வந்தது.

‘அப்பா! நாம ஆத்துல இருந்தபடியே பஜ்ஜி, பக்கோடா, வடை இந்த மாதிரி ஏதாவது பண்ணி வியாபாரம் பண்ணினா என்ன ?’

‘செய்யலாம். நானும் அதைப் பத்தி யோசிச்சேன். ஆனா, இது கிராமாந்தரம். எல்லாராத்துலேயும் பொம்மனாட்டிகள் இட்லி, தோசை, வடை, பஜ்ஜின்னு ஏதாவது டிஃபன் பண்ணிடுவாளே தினத்துக்கும் ? அப்புறம் நாம பண்றதை யாரு வாங்கிக்கப்போறா ? யாரும் சீந்த மாட்டாளேம்மா ?’

பங்கஜம் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்: ‘அதுக்கு ஒரு வழி இருக்குப்பா. இந்த ஊர் சினிமாக் கொட்டகைக்குக் கொண்டுபோய் வித்துப் பாக்கலாம்.’

‘நீ அங்கே யெல்லாம் போகப்படாதும்மா. நிறையப் பொறுக்கிப் பசங்க இருப்பா. ஏதானும் வாய்க்கு வந்ததைப் பேசுவானுக. நான் வேணாப் போறேம்மா.’

‘சரிப்பா.’

அவர்களது சிற்றுண்டித் தொழில் அப்படித்தான் தொடங்கியது. கொஞ்ச காலத்துக்கு ஓரளவு வெற்றிகரமாகவே அந்தத் தொழில் நடந்தது எனலாம். ஆனால், சில நாள் கழித்து, அருகிலேயே ஒரு புது ஓட்டல் வந்துவிட, இவர்களது சிற்றுண்டி வியாபாரம் படுத்துவிட்டது. அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.

அதன் பிறகு கொஞ்ச காலத்துக்கு அவள் மறுபடியும் பஞ்சாட்சரத்துக்குப் பிரச்சினை யானாள்.

போனால் போகிறது என்று விட்டு விட்டாளோ, இல்லாவிட்டால், தோன்றாததால் விட்டு விட்டாளோ தெரியவில்லை, பங்கஜத்தின் மாமியார் அவள் நகைகளைப் பறித்துக்கொண்டு விட்டிருக்கவில்லை. அவற்றைப் பஞ்சாட்சரம் விற்றுக் காசாக்கிக் கொண்டுவந்தார்.

‘தாலி மட்டும் அப்படியே கழுத்தில இருக்கட்டும்மா. இத்தனூண்டுத் தங்கம்தானே தாலியில கோத்துப் போட்டுண்டிருக்கே ? அதைத் தாலிக்கயித்திலேருந்து எடுக்கவேண்டாம்.’

‘அவரே நேக்கு இல்லேனு ஆயிட்டதுக்கு அப்புறம், அவர் கட்டின தாலி மட்டும் என் கழுத்துல எதுக்குப்பா இருக்கணும் ?’

‘அடியம்மாடி! அப்படி யெல்லாம் அபசாரமாப் பேசாதேம்மா. என்ன இருந்தாலும், உன்னைத் தொட்டுத் தாலி கட்டின புருஷன் இல்லியா ? அப்படி யெல்லாம் அவமரியாதையாப் பேசப்படாதும்மா.’

‘அந்த மனுஷன் மேல நேக்கு மரியாதையே வரமாட்டேன்கிறதேப்பா ? எங்கிட்ட இயற்கையா இல்லாத ஒண்ணை எப்படி வரவழைச்சுக்கறதாம் ?’

அவரால் பதில் சொல்ல முடியாத போதிலும், ‘ அப்படியெல்லாம் அதிகப் பிரசங்கித்தனமாப் பேசாதேம்மா. அது நோக்கு நல்லதில்லே. போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினியோ, இந்த ஜென்மத்துல இப்படி வாழாவெட்டியா வந்து நிக்கறே. இன்னும் கொஞ்சம் பாவத்தைச் சேத்துக்காதே!’ என்றார் கடுமையாக.

தான் அவரிடம் வந்து சேர்ந்ததிலிருந்து அவர் தன்னைக் கடிந்து ஒரு சொல் கூடச் சொன்னதில்லை என்பதால் பங்கஜம் அவரது குரலில் ஒலித்த கடுமையையும், தனக்கு அறவே பிடிக்காத உபதேசமொழிகளையும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. இருந்தாலும், குரலை உயர்த்திக்கூடத் தன்னுடன் பேசும் வழக்கமில்லாத அவர் கடுமையாகச் சொன்ன சொற்களால் அவள் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.

முழுப்பட்டினி, அரைப்பட்டினி, வறுமை என்று நாள்கள் நகரத் தொடங்கின. எத்தனையோ ஏழைகளைப்போல் அவர்களும் வாழ்ந்தார்கள். நாள்கள் எப்படி ஓடின என்பது தெரியாமலேயே, சில ஆண்டுகள் கடந்துவிட்டன.

பங்கஜத்தின் கணவனது இரண்டாம் திருமணம் பற்றிய செய்தியைக் கொண்டுவந்த அதே மனிதர் மூலம் அவன் மனைவி இன்னமும் கருத்தரிக்கவில்லை என்கிற சேதியும் அவர்களுக்குத் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும், பங்கஜத்துக்குக் குரூரமான ஒரு மனநிறைவு ஏற்பட்டது. ‘வேணும் நன்னா! ஒரு அப்பாவிப் பொண்ணோட மனசை நோகடிச்சு துரோகம் செஞ்சது வீணாப் போகுமா என்ன! இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் அவருக்குப் புத்திர பாக்கியமே இருக்காது!‘ என்று பற்களைக் கடித்தபடி சபித்தாள்!

‘ரெண்டாவது பொண்டாட்டிக்கும் கொழந்தை பொறக்கல்லேன்றதுக்காக, மூணாவதா ஒரு கல்யாணத்தை என்னோட மாமனார்-மாமியார் அந்த மனுஷனுக்குப் பண்ணிவைப்பாளோ என்னமோ! ஒவ்வொரு பொண்ணா ருசி பார்க்குற ஆசையில இந்த ஆம்பளை ஜென்மங்களும் அம்மாவுக்குத் தலையாட்றதுகளே!’

பழைய நினைவுகளை அசை போட்டு முடித்த பங்கஜம் அப்படியே சாப்பாட்டையும் முடித்துவிட்டுக் கூடத்துக்கு வந்தாள். பஞ்சாட்சரம் சன்னமாய்க் குறட்டை விட்டவாறு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். கள்ளமற்ற அவரது முகத்தில் ஆழ்ந்த அந்த உறக்கத்தையும் கடந்து கவலைக் கோடுகள் தெரிந்ததைப் பார்த்து அவள் உருகிப் போனாள்.

கடந்த ஓராண்டுக் காலமாகவே பஞ்சாட்சரத்துக்கு உடம்பில் அதற்கு முன்னர் இருந்திராத ஓய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ‘பிச்சை’ என்று சொல்லிக் கேட்டு வாங்காத குறையாக அக்கிரகாரத்து மனிதர்களிடமெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் கையேந்தி எப்படியோ காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அதனால்தான் பாகீரதியின் உதவியால் பக்கத்து ஊரில் கிடைத்த சமையல் வேலையைப் பங்கஜம் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டு ஏற்றாள். நாகலிங்கம் மட்டும் அசடு வழியாதவனாக இருந்தால்- தன் அசட்டுத்தனத்தை வெறும் பார்வை, பேச்சு ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுபவனாக இருந்தால்- அவையும் ஆத்திரமும் எரிச்சலும் ஊட்டும் செயல்களேயானாலும்- தொடுகை என்பது தவிர்க்கப்படுகிற வரை அவற்றைப் பொறுத்துக்கொண்டு விதியே என்று காலந்தள்ள அவள் தயாராக இருந்தாள். ஆனால், அவனைப் பார்த்தால் அப்ப்டி நிறுத்திக்கொள்ளக் கூடியவனாக அவளுக்குத் தெரியவில்லை.

அவள் வேலையில் அமர்ந்த முதல் நாளே தன் விகாரங்களை வெட்கமற்று வெளிப்படுத்துகிறவன், போகப் போக என்னதான் செய்யத் துணியமாட்டான் எனும் அச்சமே அவளுக்கு ஏற்பட்டது. எனினும், தன் கணவன் எப்பேர்ப்பட்டவன் என்பதைக் காமாட்சி நன்றாகவே தெரிந்துவைத்துக் கொண்டிருந்ததும் புலப்பட்டதால், அந்த அச்சத்தினூடே அவளுக்குச் சற்று நிம்மதியும் உண்டாயிற்று. சமையலறையையே கண்கொட்டாது பார்த்தவாறு அதன் கதவுக்குச் சற்றே தள்ளிப் படுத்திருக்கும் காமாட்சி தனக்கு ஓர் அரண்தான் என்று நினைத்து அவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

தன்னைப் பொறுத்தவரையில், தற்செயலாகவும் கூட, காமம் ததும்பும் அவன் விழிகளைச் சந்தித்துவிடக்கூடாது என்று அவள் கவலைப்பட்டாள். அவனது பார்வை இரையின் மீது பாயத் தயாராக உள்ள புலியையே அவளுக்கு நினைவூட்டியது. தக்க நேரத்துக்குக் காத்துக்கிடக்கும் பசித்த புலி அவன். அவளும் ஒரு பெண்புலியாக ஆனாலல்லாது, அவனிடமிருந்து தான் தப்புவது கடினம் என்று அவளுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. அது முடியுமா ? அவளுக்குத் தெரியவில்லை. அவளிடமிருந்து பெருமூச்சொன்று சீறிப் பாய்ந்தது.

அவள் ஒரு புடைவைக் கிழிசலை எடுத்துத் தரையில் விரித்துக்கொண்டு அதில் முடங்கிப் படுத்துக் கண்ணயர முயன்றாள். ஆனால் தூக்கம் வருவேனா என்றது. மறக்க எவ்வளவு முயன்றாலும், நாகலிங்கத்தின் அழுக்குப் பார்வைதான் அவள் மனத்திரையில் மறுபடி மறுபடி நிழலாடிக்கொண்டிருந்தது. தான் அஞ்சியது மறு நாளே நிகழவிருந்தது தெரியாமல் அவள் மன அமைதிக்காக விநாயகர் அகவலை முனகலாய்ச் சொல்லத் தொடங்கினாள்.

அன்றிரவே பஞ்சாட்சரத்துக்கு உடம்பு பெருமளவு சரியாய்ப் போய்விட்டது. தலைக்காயம் மட்டும் இலேசாக வலிஹ்துக்கொண்டிருந்தது. அது மெதுவாகத்தான் ஆறும் என்பதால், அவள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறி, அவர் அவளை வேலைக்குப் போகப் பணித்தார்.

.. .. .. பங்கஜம் அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தபோது அது அமைதியில் ஆழ்ந்திருந்தது. தாழிடப்படாமல் சாத்திவைக்கப்பட்டிருந்த கதவைத் தள்ளித் திறந்துகொண்டு அவள் உள்ளே சென்றாள். காமாட்சியும் அவள் குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். நாகலிங்கமும் தென்படவில்லை. கழிவறையும் த்ிறந்து கிடந்தது. உள்ளுணர்வாய்த் தன்னுள் பரவிய அச்சத்துடன் அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation