மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7

This entry is part of 48 in the series 20060203_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும் ஏமாற்றங்கள்.

‘என்னன்னா! சிரிச்சுண்டே சொல்றேள் ? இன்னொருத்தியைப் பண்ணிக்க மாட்டேள்தானே ?’ -இவ்வாறு கேட்டபோதே அவள் குரல் தடுமாறியது. துயரம் தொண்டையை அடைத்தது.

‘பங்கஜம்! எதுக்குடி இப்ப அழுகை ? நீயே யோசிச்சுப் பாரு. என்னோட வம்சம் விளங்க ஒரு பிள்ளைக் கொழந்தையாவது- எங்கம்மா ஆசைப்பட்றாப்ல- வேண்டாமா ? உன் வயித்து ராசி- இது வரையில பொறந்த எல்லாமே பொண்ணாவே இருந்துடுத்து. நல்ல வேளை! எல்லாமே போய்ச் சேந்துடுத்துகள்!.. ..”

‘அய்யோ! உங்க வாயால அப்படிச் சொல்லாதங்கோன்னா. பத்து மாசம் அதுகளைச் சொமந்தேன். ஒடம்பு நோக ஆசையாப் பெத்து எடுத்த தாய் நான். என் காது படவே இப்பிடிப் பேசறேளே! அதுகள் செத்துப் போயிட்டதுக்கு சந்தோஷம் வேற பட்றேளே! நியாயமா ?’

‘சரி. தப்புதான். அதை விடு. வரிசையாப் பொண்ணாவே பெத்துண்டிருக்கியே ? அதுக்கு என்ன சொல்றே ?’

‘அது நம்ம கையிலயா இருக்கு ? எல்லாம் கடவுளோட செயல். பொண்ணாவோ பிள்ளையாவோ பெத்துக்கிறது என்ன, பொம்மனாட்டிகள், எங்க கையிலயான்னா இருக்கு ?’

‘பண்றதையும் பண்ணிட்டுக் கடவுள் மேல ஏண்டி பழி போட்றே ? உன்னோட ஒடம்பு வாகு அப்படி. அதுக்காக நான் பிள்ளைக் கொழந்தை இல்லாமயே காலத்தை ஓட்டிட முடியுமா ? என்னோட வம்சம் வெளங்க வேண்டாமா என்ன ? அதுக்குத்தான் அம்மாவும் அப்பாவும் சொல்ற வழி இது!’

‘அப்படின்னா அதுக்கு ஒத்துண்டுட்டேளா ?’ -பங்கஜம் உடைந்து போய் அழலானாள்.

‘ஏண்டி அழுது மாஞ்சு போறே ? நான் என்னிக்கோ ஒத்துண்டாச்சு. உன்கிட்ட சொல்றதுக்குத்தான் கொஞ்சம் தயங்கிண்டிருந்தேன். இன்னைக்கு நீயாவே அந்தப் பேச்சை எடுத்தே. சொல்லிட்டேன். இத பாரு. இந்த அழுது ஆகாத்தியம் பண்ணி நீலிக் கண்ணீர் வடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. என்ன, தெரிஞ்சுதா ? நேக்குப் பிள்ளைக் கொழந்தை வேணும். ஆஊன்னு இப்ப என்னத்துக்கு அழறே ? உலகத்துல எந்த ஆம்பளை பிள்ளைக் கொழந்தைக்கு ஆசைப்பட்டு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லே ? உன்னை உங்கப்பா கிட்ட கொண்டுபோய் ரெண்டொரு மாசத்துல விட்டுடுவேன். இனிமே நீ அங்கதான் இருக்கணும். தெரிஞ்சுதா ?’

பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் குரலில் வெளிப்பட்ட அழுத்தமும் சொற்களில் தெறித்த வெறுப்பும் அவளைத் தள்ளிவைக்கத் தான் போகிறான் என்பதைத் திட்டவட்டமாக அவளுக்கு அறிவுறுத்தின. அன்றிரவு முழுவதும் அவள் இமைகொட்டவில்லை.

ஒரு மணிக்கு அவன் எழுந்து அவளை எழுப்பினான். தூங்காமல் ஒருக்களித்துப் படுத்திருந்த பங்கஜம் அவனது நோக்கம் புரிந்து திரும்பினாள். அவளுக்குத் தாங்க முடியாத அருவருப்பு ஏற்பட்டது. அவனது கையை வலுவாக விலக்கினாள். அவன் முரட்டுத்தனமாக அவளைக் கையாண்டு சிரித்தான்.

‘இப்படியெல்லாம் முரண்டு பிடிச்சா நோக்குத்தான் நஷ்டம்! இன்னும் ரெண்டே மாசத்துல நேக்குக் கல்யாணம். அது வரையில முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சுக்கோடி, முட்டாளே!’ என்றானே.

தனது வலுவின்மை, செயலின்மை, கோழைத்தனம் ஆகியவற்றின் மேல் அந்த நேரத்தில் அவளுக்கு வந்த வருத்தம் சொற்களின் விவரித்தலுக்கு அப்பாற்பட்டது. அந்த வருத்தத்தினூடே, ‘ஒருவேளை இங்கேருந்து போறச்சே நேக்குப் பிள்ளை உண்டானா, அந்த ஆறுதலாவது கிட்டுமே!’ என்னும் எண்ணமும் அவளுக்கு வந்தது.

மறுநாள் அவள் மாமனார், மாமியார் ஆகிய இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். வழக்கம் போல் அவளைக் கூப்பிடவில்லை. மீனாட்சியம்மனின் அருட்பார்வை தங்கள் மருமகளின் மீது பட்டுவிடக் கூடாது என விரும்பினார்கள் போலும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.’அட, மூடங்களா! மீனாட்சி அந்தக் கோவில்ல மட்டுந்தான் இருக்காளா என்ன ? ஆத்துல இருந்த படியே அவளை என்னால வேண்டிக்க முடியாதா ?’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவர்கள் கோவிலுக்குப் போன நேரத்தில் தாசரதி தனது அறையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் போய் அரை மணி கழித்துத் தாசரதியின் நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவனை அவள் அதற்கு முன்னால் இரண்டு` தடவைகள் பார்த்திருந்தாள். அவள் உள்ளே போய்த் தாசரதியை எழுப்பினாள். அவள் எழுந்து சென்று ராகவன் எனும் அந்த நண்பனை வரவேற்றுத் தனது அறைக்கு இட்டுச் சென்று உட்காரச் செய்தான். பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

‘பங்கஜம்! ரெண்டு கப் காப்பி கொண்டா.’

அவள் பத்து நிமிடங்கள் கழித்துக் காப்பித் தம்ளர்களுடன் அவனது அறையை நெருங்கிய போது தாசரதி தன் இரண்டாம் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போகாமல் நின்று ஒற்றுக்கேட்டாள்.

‘என்னடா! மூணு கொழந்தைகளும் செத்துப் போயிடுத்தே ? ரொம்ப வருத்தமா யிருக்கு. இப்ப மறுபடியும் ஏதானும் விசேஷம் உண்டா ?’

‘இல்லேடா, ராகவா. வரிசையாப் பொண்ணாப் பொறந்துண்டிருக்குறதால அம்மாவும் அப்பாவும் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா என்னை! அவளுக்குப் பொண்ணாவே பெத்துத் தள்ற வயித்துவாகுங்கறா!’

“சில பொண்ணுகள் அப்படித்தாண்டா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது. அவா சொல்றது சரின்னுதான் நேக்கும் தோண்றது. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ – அந்த நண்பனின் குரலில் விரசம் வழிந்தது.

‘அது நடக்காதுடா, ராகவா. அவளைத் தள்ளித்தான் வைக்கவேண்டி வரும். அம்மா-அப்பா ஒத்துக்க மாட்டா.’

‘டேய்! நான் சொல்றதைக் கேளு. அப்படிச் செஞ்சா அதுல நோக்கு ஒரு லாபம் இருக்குடா. சிநேகிதனோட பொண்டாட்டி அழகைப் புகழ்ந்து பேசறது தர்மம் இல்லேதான். இருந்தாலும் சொல்றேன். உன் பொண்டாட்டி பயங்கர அழகுடா. அவளை விட்டுடாதே. அடுத்து வரப் போறவ எப்படி இருப்பாளோ ? இவ பாட்டுக்கு உங்க ஆத்துலேயே ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டுமே! உங்கம்மாவுக்கு ஆத்துக் காரியத்துல ஒத்தாசையாவும் இருப்பா. அவளுக்குச் சோறு போட்ற புண்ணியம் உனக்குக் கிடைக்கும். உன்னை அவளும் அவ அப்பாவும் ரொம்பவும் சபிக்க மாட்டா. அவளுக்கும் தான் வாழாவெட்டி யாயிடல்லேன்னு ஒரு திருப்தி இருக்கும். இல்லியா ? என்ன சொல்றே ? யோசிச்சுப் பாரு.’

‘நீ சொல்றது ரொம்பவே நல்ல யோசனைதான். அப்படியே செஞ்சுடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.’

‘ஆமா ? போன வாரம் கிளப்புக்கு வறேன்னுட்டு நீ ஏன் வரவே யில்லே ?’

அவர்களது பேச்சு இலக்கு மாறிய பின் இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அவனது அறைக்குள் நுழைந்து காப்பியை மேசை மீது வைத்துவிட்டு வெளியேறினாள்.

அடுக்களைக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் இதயம் சிதற அழத் தொடங்கினாள். ஒருகால் தன்னையும் இருத்திக்கொள்ள அவர்கள் முற்படுவார்களோ எனும் எண்ணம் வந்த போது அவளுள் பொறுத்துக்கொள்ள முடியாத அருவருப்பு விளைந்தது. இன்னொருத்தியோடு கணவனைப் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வதை விட எங்கேயாவது விழுந்து அல்லது விஷம் எதையாவது குடித்து ஒரேயடியாய் உயிரையே விட்டுவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

‘கடவுளே! எல்லாக் கொழந்தைகளையும் பொண்ணாவே பெத்துக்குற மாதிரியான உடல்வாகை நேக்கு ஏன் குடுத்தே ? .. .. இவாளுக்கும்தான் கொஞ்சம் பொறுமை வேண்டாமா ? ஒரு வேளை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பொறக்குற கொழந்தை பிள்ளையா யிருக்குமோ என்னமோ! நேக்கென்ன வயசாயிடுத்தா ? கொஞ்ச நாள் காத்திண்டிருக்கப் படாதா ?.. .. அப்பாக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! இருந்த ஒரே வீட்டையும் குமரேசன் செட்டியாருக்கு என் கல்யாணச் செலவுக்காக விக்கும்படி ஆச்சு. செட்டியார் நல்லவர். அதனால அதுலேயே ரொம்பவே குறைச்சலான வாடகைக்கு அப்பா காலம் முடியற வரைக்கும் இருந்துக்கலாம்னுட்டார். எவ்வளவு நல்ல மனசு இருந்தா செட்டியார் மாமா அப்படி ஒரு தாராளத்தோட நடந்திருப்பார்! கடவுள் எப்பவும் தாங்க முடியாத கஷ்டத்தைக் குடுத்துட மாட்டார். நடு நடுவில இது மாதிரி நல்லதுகளையும்தான் செய்வார்! அதை நினைச்சுத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் புத்திசாலித்தனம். சும்மா அழுதா ஒடம்புதான் கெட்டுப் போகும்.. .. ..’

ராகவன் கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பிப் போன பிறகு தாசரதி அவளை யழைத்தான்.

‘இத பாரு, பங்கஜம்! என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இந்த ஆத்துலேயே இருந்துக்கலாம். நான் அம்மா கிட்ட சொல்லிப் பாக்கறேன். உங்கப்பாவுக்கும் வயசாயிடுத்து. அவருக்கு நீ ஒரு சுமையா இருக்க வேண்டாம்.’

இவ்வாறு சொன்ன போது அவனது பார்வை- ஏதோ அப்போதுதான் முதன் முறையாக அவளை ஆராய்பவனுடையது போன்று- குறுகுறுவென்று தன் மீது படிந்ததை உணர்ந்து அவளுக்கு அளவுகடந்த வெறுப்பு ஏற்பட்டது. அந்த ராகவனின் மதிப்பீட்டால் அவன் தன் அழகை ஆராய்கிறான் என்பது புரிய, கெட்டது சொல்லிக் கொடுக்க வந்த அந்த நண்பன், ‘அடேய்! பெண் பாவம் பொல்லாதுடா. அப்படியெல்லாம் பண்ணாதே. இன்னொருத்திக்கு மட்டும் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்கிறது என்ன நிச்சயம் ? அவளுக்கு எதுவும் பொறக்காமலேயே கூடப் போகலாமோல்லியோ ? அப்படி ஆனா மூணாவதா ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிப்பியா ? வேண்டாண்டா. அது தப்பு’ என்று நியாயத்தை எடுத்துச் சொல்லி யிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். நண்பன் அப்படிச் சொல்லி யிருந்தால், அதை அவன் கேட்பானா இல்லையா என்பது வேறு விஷயமாக இருப்பினும் கூட!

‘என்ன, பேசாம இருக்கே ?’

‘எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்யறேளாக்கும்! நேக்குப் பிடிக்கிறது பிடிக்காததுன்னு பாத்தா, நீங்க நேக்கு துரோகம் பண்ணாம இருக்கிறதைத்தான் நான் விரும்புவேன். எல்லாத்தையும் தீர்மானிக்கப் போறது உங்கம்மா. கேக்கப் போறது நீங்க. நடுவில இதென்ன நாடகமும் வேஷமும் வேண்டிக்கிடகு ?’

‘ஏண்டி! எதித்தா பேசறே ? அம்புட்டுக்கு ஆயிடுத்தா ?’ என்று அவளை நோக்கிக் கையை ஓங்கியபடி எழுந்தவன், ஏனோ அவளை அடிக்காமல் விட்டான்.

‘நோக்கு வாய்டி. அதான் பகவான் இப்படிப் பொட்டைகளாப் பெத்துப் போட்ற வயித்தைக் குடுத்துட்டான். இல்லேன்னா பொறந்த மூணுல ஒண்ணாவது பிள்ளைக் கொழந்தையா யிருக்காதா என்ன ?’

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தலையைக் குனிந்து உதடுகளை உள்மடித்து அதை அடக்க முயன்று தோற்றாள்.

‘இத பாருடி. அம்மா கிட்ட கேளு- நானும் ஒரு ஓரமா இந்தாத்துலேயே இருந்துக்கறேன்னு சொல்லிப் பாரு. நானும் சொல்றேன்.’

அவள் பதிலேதும் சொல்லாமல் காப்பித் தம்ளர்களை எடுத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனாள். .. .. ..

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் மாமியார் மெதுவாக ‘அந்தப் பேச்சை’ எடுத்தாள். மங்காத சித்திரமாய் அந்தக் காட்சி பங்கஜத்தின் மனத் திரையில் பதிந்திருந்தது. அவள் அடுக்களையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள். கூடத்தில் மாமனார் ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். மாமியார் சற்றுத் தள்ளித் தரையில் சுவரோரமாய்ச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். தாசரதி தன் அப்பாவுக்கு அருகே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

‘இத பாருடி, பங்கஜம்! நாங்க மூணு பேரும் சேந்து ஒரு தீர்மானம் பண்ணியிருக்கோம்.’

‘என்னம்மா ?’ என்றபடி அவள் கூடத்துக்குச் சென்றாள்.

‘உன்னோட வயிறு பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்ற வயிறா யிருக்கு. எங்க வம்சம் விளங்குறதுக்குப் பிள்ளைக் கொழந்தை வேணுமோன்னோ ? அதனால தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கிறதுன்னு தீர்மானம் பண்ணி யிருக்கோம். அவனும் சரின்னுட்டான். அதனால நீ நாளைக்கே உங்க ஊரைப் பாக்கப் போய்ச் சேரு.’

பங்கஜம் பதிலே சொல்லாமல் இருந்தாள். அவள் எதுவும் பேசப் போவதில்லை என்பதாகச் சில நொடிகள் காத்திருந்த பின் ஊகித்த தாசரதி, ‘அம்மா!’ என்றான் குழைந்த குரலில்.

‘என்னடா ?’

‘அவ பாட்டுக்கு இந்தாத்துலேயே ஒரு மூலையில இருந்துட்டுப் போட்டுமேம்மா ?’

‘அது சரிப்பட்டு வராதுடா.’

‘ஏம்மா சரிப்பட்டு வராதுங்கறே ? ஆத்துக் காரியங்கள்ளே நோக்குக் கூடமாட ஒத்தாசையா யிருப்பாளேம்மா ?’

‘அதுக்குத்தான் இன்னொருத்தி வராளேடா ? இவளுக்கு வேற சோறு போடணுமா நாம ?’

‘அப்படி இல்லேம்மா. அது நமக்கும் லாபந்தானேம்மா ? பொண்பாவமும் வராதில்ல ?’

‘எதுடா பொண்பாவம் ? பொண்ணு பொண்ணாப் பெத்துத் தள்றவளைப் பின்ன வேற என்ன செய்யறதாம் ? ஊர்ல ஒலகத்துல செய்யாத பாவத்தையா நாம பண்ணப் போறோம் ? இது ஒண்ணும் பாவமே இல்லே. நியாயமான முடிவுதான்.’

‘ரெண்டு பொண்டாட்டிகள் ஒரே ஆத்துல இருந்தா அது குடுமிப்பிடிச் சண்டையிலதாண்டா முடியும். ரெண்டாவது, அந்த இன்னொருத்தியும் இவ இங்க இருக்கிறதுக்குச் சம்மதிக்கணுமோன்னோ ?’ என்று மாமனார் குறுக்கிட்டார்.

‘உங்கப்பா சொல்றதுதாண்டா சரி. இவளைக் கொண்டு போய் அவ அப்பா கிட்ட விட்டுடலாம்.’

‘நாம என்ன கொண்டுபோய் விட்றது ? வண்டியில ஏத்திவிட்டா தானே போய்க்கிறா! அவ ஊரென்ன டில்லியா, பம்பாயா கொண்டுபோய் விட்றதுக்கு ?’ என்று மாமனார் மறுபடியும் இடைமறித்தார்.

‘சரிப்பா. உங்க ரெண்டு பேரோடவும் இஷ்டம். நீங்க சொல்றாப்ல, அந்தப் பொண்ணும் அவா மனுஷாளும் சம்மதிக்கணுமே ?’

அன்றிரவு அழுதது போல் பங்கஜம் அதற்கு முன்னாலும் அழுததில்லை, பின்னாலும் அழுததில்லை. தன் வயிற்றில் மூன்று குழந்தைகள் உற்பத்தியாவதற்குக் காரணனாக இருந்த கணவனுக்குத் தன் மேல் அன்பு என்பது கொஞ்சமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவான அழுகை! ‘ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். பெண் இன்றி ஆணால் அது இயலாது, ஆணின்றிப் பெண்ணால் அது இயலாது என்கிற கண்கூடான நிலையில், உற்பத்தியாவது ஆணானாலும், பெண்ணானாலும் அதை வமிசவிருத்தியின் அடையாளமாய்க் கொள்ள வேண்டியதுதானே நியாயம் ? ஆண்தான் வமிச விருத்திக்கு அவசியம் என்பது என்ன நியயம் ? ஆண் குழந்தையைப் பெற்றுத் தராதவள் மனைவியாக இருப்பதற்குத் தகுதியற்றவள் என்பது எவ்வாறு சரியாகும் ? கடவுளே! நான் ஏன் தான் பிறந்தேனோ ? எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை ? போன ஜென்மத்தில் நான் ஓர் ஆணாக இருந்து ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை இப்படி யெல்லாம் செய்து கொட்டிக்கொண்டிருந்திருப்பேனோ ? அப்படித்தான் இருக்க வேண்டும். பாவம், அப்பா! இந்த அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கப் போகிறரோ!’

‘அம்மா!’

‘என்னடா ?’

‘ஒருவேளை அந்தப் பொண்ணாத்துல இவளும் இங்க இருக்கிறதுக்குச் சரின்னுட்டா, வெச்சுண்டுடலாமா ?’

மாமியார் தாசரதியை முறைத்தாள்: ‘அதெல்லாம் சரியா வராதுடா. முட்டாள்தனமாப் பேசிண்டிருக்காதே. இவளை விட அழகா ரதி மாதிரி ஒரு பொண்ணை நோக்குப் பாக்கறேன்’

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்த்த மகனின் ஆசையைப் புரிந்துகொண்டு மாமியார்க்காரி பதில் சொல்லிவிட்டாள்.

பங்கஜம் எனும் ஒரு பெண்- தாசரதியின் மனைவி- மிக அருகே அங்கு இருப்பதைப் பற்றிய உணர்வே இல்லாதவர்கள் மாதிரி- அல்லது அவளுக்கு உணர்ச்சி ஏதும் இருக்காது- அல்லது இருக்கலாகாது- என நினைத்தவர்கள் போன்று -அவர்கள் அவ்வளவு வெளிப்படையாய், ஏதோ, ‘இன்னிக்கு என்ன சமையல் பண்ணலாம் ?’ எனும் அற்ப விஷயத்தை விவாதிப்பது போல்- சர்வ சாதாரணமாய் உரையாடியது அவளுள் சகிக்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘சே! என்ன மனிதர்கள்! முதலில் மனிதர்களா இவர்கள் ? இவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை. அதுதான் இப்படி இன்னொரு பெண்ணுக்குக் கூசாது தீங்கிழைக்கிறார்கள். .. .. ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே. அதற்கு இந்த மாமியார் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவளே ஒரு பெண்தானே! இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகள் புரியாதவளாக இவள் இருப்பாளா என்ன ? எனவே, பெண் குழந்தை ஒன்றுக்கு இவள் தாயாக இல்லாததற்கும் இவளது கல்நெஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை. இவள் கெட்டவள். அவ்வளவுதான்! கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே.. .. ..’

‘என்னடி, பங்கஜம்! நாங்க பேசினதையெல்லாம் கேட்டுண்டிருந்தியோல்லியோ ? உன்னோட பொடவை, துணிமணியெல்லாம் எடுத்து ஒரு பையில வெச்சுக்கோ. இன்னும் ரெண்டே நாள்ள கெளம்பணும்.’

பொங்கிவந்த கண்ணீருடன் அவள் உதடுகள் துடிக்கத் தலை திருப்பி அவர்கள் புறம் நோக்கிய போது, அவள் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், மூவரும் மூன்று திசைகளில் பார்த்தார்கள்.

பங்கஜம் மறு நாளுக்கு மறு நாள் சின்னக்குளத்திலிருந்து புறப்பட்டுத் தன் ஏழைத் தகப்பனாரிடம் வந்து சேர்ந்தது இப்படித்தான்.

.. .. .. பழைய நினைவுகளில் மூழ்கியபடி அவள் சிந்திய கண்ணீர் மணிகள் உதிர்ந்து அவளது சாப்பாட்டுத் தட்டில் விழுந்து சிதறின.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation