கறுப்புப் பூனை

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

இளந்திரையன்


வீட்டில் ஒரு கறுப்புப் பூனை இருந்தது. என்னுடன் மிகவும் நெருக்கமாய் இருந்தது. அல்லது நான் அதனுடன் நெருக்கமாய் இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் என்னை ஒதுக்க ஒதுக்க அதனுடன் நெருங்கிப் போவது எனக்கும் இலகுவாயிருந்தது. அதனை முழுவதும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் என்னிடமே இருந்தது. செல்வத்தின் செழிப்பு அதனிடமும் சேரச் சேர மிகவும் கொழுப்புடன் காட்சியளித்தது. செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்வதற்காக என் மனைவி ஒருமுறை கொண்டு வந்திருந்தது. கொண்டு வந்ததுடன் அவள் கடமை முடிந்து விடும். வருவோர் போவோருக்கான காட்சிப் பொருளாக அங்கே வளைய வந்து கொண்டிருந்தது என்னைப் போலவே. ஆனாலும் எனக்கு மட்டும் அதனிடம் நிறைய விடயங்கள் பிடித்திருந்தது. அதனுடைய கூரிய நகங்கள், பல்லின் கூர்மை , கோபச் சிலிர்ப்பு எல்லாமே பிடித்திருந்தது. இரவில் பளபளக்கும் கண்களின் பளபளப்பு. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரம் எல்லாமே.

அதனை கோபப் படுத்தி ரசிப்பதே எனது பொழுது போக்காகியது. வேறு என்ன தான் செய்வது. வேலை வெட்டியில்லாது இருக்கும் எனக்கும் ஏதாவது வேலை வேண்டுமே. மனைவியின் பின்னால் கோட்டும் சூட்டுமாக போய் காட்சிப் பொருளாக நிற்பதை விடவேறு வேலையில்லாத நான் என்ன தான் செய்ய முடியும். எனக்கென்று எந்த அடையாளங்களும் இல்லாத அந்த இடங்களுக்குப் போவதையே வெறுக்கின்றேன். பணத்தின் செழிப்புடன் கண்களில் சதா போதையுடன் உலவும் அந்த இடங்களில் என்னால் ஒட்ட முடியாமல் போனது. தங்கள் ‘பெற் ‘களைப் போலவே என்னையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அது. பணத்தில் திமிர்த்த கனவான்களின் கொழுப்பெடுத்த பெண்களின் கூட்டம் அது. சிரித்தபடியே நிற்பதைதவிர வேறு வேலை எதுவும் எனக்குக் கிடையாது. அவர்களின் ‘பெற் ‘களின் கழுத்தில் ஒரு சங்கிலி இருக்கும், என்க்கு அது இல்லை என்பதைத் தவிர பெரிதாக வித்தியாசம் எதுவும் இருந்து விடாது. இந்த வேலை தீர்ந்த வேளைகளில் அந்தக் கறுத்தப் பூனையைக் கோபப்படுத்துவது தான் எனது வேலையாயிருக்கும். என்னாலும் ஒரு உயிரைச் சீண்ட முடியும் என்பதை நான் மறக்காமல் இருப்பதற்கும் இது ஒரு வகையில் எனக்கு உதவியாகத் தான் இருக்கின்றது. இல்லாவிட்டால் என் மனைவி சொல்வது போல் நான் ஒரு அப்பிராணி. அவளைப் பொறுத்த வரையில் அவளைச் சேர்ந்தவர்கள் சொல்லிக் கொள்வது போல் நான் ஒரு சாதுவான மனிதன் தான். எனது படிப்பும் தகமையும் ஒரு பொருட்டாக இல்லாத இந்தச் சூழலில் என்க்கு மிகவும் பொரு

ந்திய வேடம் இதுவாகத் தான் இருக்கின்றது. ஒருவரின் துன்பத்துக்கும் போகாது எல்லாத் துன்பத்துக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனதிற்கு சாது என்ற இந்த வேடம் நன்றாகவே பொருந்தி வருகின்றது. சாது என்ற வேடத்தை நான் துறந்து விட்டிருப்பது இந்த கறுத்தப் பூனையுடன் நான் இருக்கும் நேரங்களில் மட்டும் தான். அதனுடைய சிலிர்ப்பும் நகங்களின் நீட்சியும் என் மனதில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். இருட்டில் அதன் பளபளக்கும் கண்களைப் பார்ப்பதே சுகமாக இருக்கும்.

இப்படியான ஒரு காலையில் தான் அந்த செய்தி பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணைக் கொலை செய்து அவள் உடலுறுப்புக்களை கண்ட கண்ட இடங்களில் போடப்பட்டிருந்ததை பொலீஸ் கண்டு பிடித்து நகரம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. என் மனைவியும் அவள் நண்பிகளும் அதைப் பற்றியே மாங்கு மாங்கென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை அந்த நிகழ்வு பாதித்து விட்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குப்பைக் கூடையில் கையின் ஒரு பாகம் கிடைத்ததை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் பார்த்து தங்கள் கைகளையும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள் இந்தப் பெண்கள். அந்தக் கொடூரத்தை நேரிலேயே உணர்ந்தவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டிருந்தது தான் விந்தையாக இருந்தது. உண்மையில் அதைச் செய்த யாரோ ஒருவன் இவர்களையும் நிறையவ ? பயப்படுத்தி விட்டிருந்தான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அது எப்படி நடந்தது ? எங்கே நடந்தது என்பது கேள்வியல்ல. எதனால் நடந்தது என்பது தான் கேள்வியாக இருந்தது. ஒன்று மட்டும் எனக்கு நன்கு விளங்கியது . இதனைச் செய்தவன் நல்லதொரு நடிகன் இல்லையென்பது மட்டுமே. ஆனாலும் என் மனைவி போன்றவர்களைப் பயப்படுத்திய வகையில் அவன் நல்லதையே செய்திருந்ததாகவே எனக்குப் பட்டது. என்னைப் போல் வேடம் போடுவது அதுவும் தொடர்ந்து செய்வது அவனுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது பாவம். என்னைப் போல் இன்னும் ஒருவன் என்பதை மட்டுமே விளங்

கிக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கக் கூடும். என்னை எது மாற்றியதோ அதைப் போல் அவனையும் மாற்றியிருக்கக் கூடும். மலர்களையும் மனிதர்களையும் நேசித்த என்னால் பூனையின் நகங்களையும் பளபளக்கும் கண்களையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய கொடூரத்தையும் நேசிக்க முடிவதைப் போல மாற்றியிருக்கக் கூடும்.

மனதில் விழக்கூடிய அடிகளும் வேதனைகளும் கொடூரத்தை விதைத்துப் போகக் கூடும். பழி வாங்கும் எண்ணத்தை உசுப்பேத்தக் கூடும். இந்தக் கறுத்தப் பூனையைப் போல உடலைச் சிலிர்க்கச் செய்யும். பல்லைக் கூர் தீட்டி கழுத்தைக் கெளவச் சொல்லும். கண்களில் அத்தனை கொடூரத்தையும் தேக்கிப் பார்க்கச் சொல்லும். பழி வாங்கச் சொல்லும். என் மனைவியையும் நண்பிகளையும் பயப்படுத்திய அந்தச் செய்தி எனக்குப் பிடித்திருந்தது. என்னை மதிக்காத அவர்களை என் சார்பாக யாரோ பழி வாங்கியதாகவே நான் உணர்ந்தேன். அறையினுள் வந்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கட கடவென்று சிரித்தேன். பயங்கரமாகச் சிரித்தேன். பேய்ச்சிரிப்பு சிரித்தேன். பயித்தியக் காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த கறுத்தப் பூனையையே பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன ?. என் பார்வையிலிருந்து எதனை உணர்ந்ததோ அந்தப் பூனை பயந்து எழுந்து ஓடியது. பயந்து ஓடியதாகத் தான் பிறிதொரு வேளை சிந்தித்துப் பார்த்தபோது தோன்றியது.

அந்தப் பூனையும் அதிக நாள் என்னுடன் இருந்திருக்க முடியாமல் போனது. உடலில் கொழுப்பேறி ஒரு நாள் இறந்தே போய் விட்டது. ஆனாலும் அந்தப் பூனை என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது. கண்களின் பளபளப்பும் அதன் கோடூரமும் அறை எங்கும் நிறைந்திருப்பது போல தோன்றிக் கொண்டிருந்தது. சில வேளைகளில் என் மனதிற்குள்ளும் அந்தக் கண்களின் பளபளப்பு தோன்றத் தொடங்கிஊ ?து. இப்போதெல்லாம் அது அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டது.

முதல் முதல் எப்போது இப்படித் தோன்றியது. ஆம் நினைவின் சிடுக்குகளிலிருந்து அந்தச் சம்பவம் ஞாபகம் வந்தது. சின்ன வயதில் பள்ளிக் கூடத்தில் நடந்தது. வகுப்பிலேயே மிகவும் கெட்டிக் காரனான எனக்கு அன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. தந்த அத்தனை கணக்குகளின் விடைகளும் பிழைத்துப் போக பெரிய முட்டை ஒன்று கிடைத்தது. அது பொறுக்காத கணக்கு ஆசிரியை ஒவ்வொரு வகுப்பு வகுப்பாக கூட்டஊ ?ச் சென்று எனது முட்டையைக் காட்டிக் காட்டி என்னை துவைத்துப் போட்டது இன்னும் மாறாத வலியோடு நினைவில் நிற்கின்றது. அவருக்கு அன்று என்ன பிரச்சனையோ என்னவோ. அன்று தான் என் மனதில் இருக்கும் கறுத்தப் பூனை உடல் சிலிர்த்து விழித்துக் கொண்டது. கால் நகம் கூர் தீட்டி அவர் கழுத்து நோக்கிப் பாய்ந்தது. குதறிக் கிழித்தது. அடங்காமல் நாட்களை கடத்தியது.

பின்னர் ஒரு முறை நகரத்துக் கல்லூரியில் சிலிர்த்துக் கொண்டது. பிடித்த பழங்களைப் பற்றி எழுதும் படி சொல்லப் பட்டது. நான் எனக்குப் பிடித்த நாவல்ப் பழம் பற்றி எழுதினேன். அவ்வைப் பாட்டியும் முருகப் பெருமானும் விளையாடிய சுட்ட பழம் சுடாத பழம் விளையாட்டில் இருந்து நாவல்ப் பழத்தின் மேல் ஒரு தீராத காதல். நன்கு கனிந்த பழங்களைப் பறித்து மணலில் எறிந்து நானும் முருகனைப் போல் விளையாடியிருக்கின்றேன். செடியைப் போன்ற சிறு மரத்தின் பருவத்திலேயே பழுத்துக் குலுங்கத் தொடங்கும் நாவல் பெரு மரமாகிப் போய் பட்டுப் போகும் காலம் வரை பழுத்துப் பழம் தரும். தண்ணீர் கவனிப்பு என்று எந்தத் தேவையும் இல்லாத நாவல் மணல் பூமியிலும் செழித்துப் பழுக்கும். காயில் பச்சையாயிருந்து செஞ்சிவப்பு நாவல் என்று நிறம் மாறிக் கோலம் காட்டும் நாவல் ஏழைகளின் பழமாகவே எப்போதும் இருந்திருக்கின்றது. நாவல்ப்பழத்தைப் பற்றி அருமை பெருமையாக எழுதி கொடுத்த போது அந்த ஆசிரியருக்கு நாவல்ப் பழத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தமை தான் என் துயரமாகப் போய் விட்டது. பணக்காரப் பழங்களான அப்பிள் மா பலா என்று எதை பற்றியும் எழுதாத என் பிறப்புப் பற்றியும் அவருக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். ‘எங்கே கிடைக்கும் இது ‘ என்று கேள்விக்கு ‘காட்டில் ‘ எனொ ?று உற்சாகமாக பதிலளித்த என்னை நின்று நிதானித்துப் பார்த்து விட்டு ‘காட்டான் ‘ என்று கூறி விட்டு நகர்ந்த போது மீண்டும் உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி அவர் குரல் வளை கடித்துக் குதறியது.

மூன்றாவது முறையாக திருமணத்தின் பின். என் படிப்பின் பெருமையையும் திறமையையும் கூடவே வறுமையையும் அறிந்து தன் மகளுக்காக என்னை விலைக்கு வாங்கிய பின் அது நடந்தது. எவ்வளவு சம்பளம் என்று கேட்கப் பட்டபோது பத்து விரல்களுக்குள் உள்ள என் வருவாயைப்பற்றிச் சொல்ல அந்த வீட்டில் வேலை செய்பவர்களின் கூலிக்கே போதாமையாகச் சொல்லப்பட்ட போது எப்படிக் குடித்தனம் கொண்டு போவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது என் சம்பளமே தேவையில்லை என்று மறுக்கப் பட்டது. அதாவது என் கனவுகளுக்கு வடிகால் அமைத்துக் கொண்டிருந்த வேலையுடன் எதிர்காலம் பற்றிய ஆசைகளும் அடித்து நொருக்கப்பட்டது. அப்போது அது நிகழ்ந்தது.

அதன் பின் அது அடிக்கடி உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி குரல்வளை குதற தூண்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் மற்றவர்களின் பார்வையில் சாது என்ற என் வேடம் மட்டுமே தெரிய அதுவும் பிரியமுடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. கண்கள் பளபளக்க நினைவுகளைக் கொன்று கொண்டிருந்தேன். மனதிற்குள் பூனையின் கண்களும் அதன் பின்னான கொடூரமும் தெரிய கீழிருந்து அழைப்பு கிடைத்தது. இன்னமும் சந்தர்ப்பம் கிட்டாத எல்லோரையும் போல மற்றவர்களுக்காக வேடம் போட கறுப்புப் பூனையை ஒதுக்கி விட்டு விரைகின்றேன்

—-

ilan19thirayan@yahoo.ca

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்