மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6

This entry is part of 35 in the series 20060127_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜத்தின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், பாகீரதி மாமி சில நொடிகள் வரை தொண்டைக் குமிழ் ஏறி இறங்க மவுனமாக இருந்த பிறகு, “உங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லே, பங்கஜம். வாசல் திண்ணையில உக்காந்திண்டிருந்தவர் மயக்கமாயித் திடார்னு உருண்டு விழுந்திருக்கார். மண்டையில அடி.. .. நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். பொன்னுச்சாமி வைத்தியர் உடனே வந்து பாத்து தலைக் காயத்துக்கு ஏதோ பச்சிலையெல்லாம் வெச்சுக் கட்டியிருக்கார். ரத்தம் வர்றது நின்னுடுத்து. ஆனா கொஞ்சம் பினாத்திண்டிருக்கார். அதான் சேதியைச் சொல்லி உன்னைக் கையோட கூட்டிண்டு போலாம்னு ஓட்டமும் நடையுமா வந்தேண்டியம்மா!” என்று கூறிப் புடைவை முன்றானையால் முகத்து வேர்வையை ஒற்றித் துடைத்துக்கொண்டாள்.

“அவா ரெண்டு பேருக்கும் இப்பதான் சாதம் போட ஆரம்பிச்சேன், மாமி! ஒரே நிமிஷம். சொல்லிட்டு வந்துட்றேன். இல்லேன்னா போட்டு முடிச்சுட்டே வறேனே ? பாதி போட்டுண்டிருக்கிறச்சே எப்படிப் புறப்பட்றது ? .. உள்ள வந்து உக்காருங்கோ, மாமி!” என்ற பங்கஜம் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள்.

பாகீரதி மாமி உள்ளே வராமல் திண்ணையிலேயே உட்கார்ந்தாள்.

நாகலிங்கம், “யாரு வந்தது ?” என்றான்.

“பாகீரதி மாமி. என்னை இந்தாத்துல வேலைக்கு அமர்த்தி விட்டாளே, அந்த மாமி.”

“என்னவாம் ?” என்றாள் காமாட்சி.

“எங்கப்பாக்கு திடார்னு மயக்கம் போட்டுடுத்தாம். திண்ணையிலேர்ந்து உருண்டு விழுந்துட்டாராம். பினாத்திண்டிருக்காராம். அதான் கூப்பிட வந்திருக்கா.”

“அழாதீங்கோ, அழாதீங்கோ. நீங்க ஒடனே கெளம்புங்கோ, சொல்றேன். மோரை மட்டும் எடுத்து எதிர்ல வெச்சுட்டு நீங்க போயிட்டு வாங்கோ. அப்பா முக்கியம். அவரை மொதல்ல கவனியுங்கோ. என் அதிருஷ்டம் அவ்வளவுதான்.. .. மறுபடியும் நான்தான் இன்னும் கொஞ்ச நாளுக்குச் சமைக்கணும்னு விதிச்சிருக்கு!”

பங்கஜம், மோர்க்கிண்ணம், சாதம் ஆகியவற்றை எடுத்து வந்து அவர்களுக்கு முன்னால் வைத்த பின், “ நான் வரட்டுமா ? அப்பாக்குப் பெரிசா ஒண்ணும் இல்லேன்னா நாளைக்கு வேலைக்கு வந்துடுவேன். மன்னிச்சுக்குங்கோம்மா. மொத நாளே இந்த மாதிரி ஆயிடுத்து. எல்லாம் என்னோட ராசி!” என்றாள் கண்களைத் துடைத்தவாறு.

“உங்க அப்பாக்கு ஒண்ணும் இருக்காது. மாமி ஒரு பயத்துல வந்து கூப்பிட்றா. கவலைப்படாம போயிட்டு வாங்கோ. இருங்கோ. ஒரே நிமிஷம்.”

நாகலிங்கம் தன் பாதிச் சாப்பாட்டில் எழுந்து போய்க் கைகழுவிக்கொண்டு திரும்பிவந்து கூடத்து அலமாரியிலிருந்து கைப்பையை எடுத்து அதனின்று ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவிப் பங்கஜத்தை நோக்கி நீட்டினான்: “இந்தாங்கோ. இதை அவசரச் செலவுக்கு வெச்சுக்குங்கோ. அப்புறம் சம்பளத்துல கழிச்சுக்கலாம்.”

பங்கஜம் தயக்கத்துடன் காமாட்சியின் பக்கம் பார்த்தாள்.

“வாங்கிக்கோம்மா.”

அவள் அதை வாங்கிக்கொண்டாள். அவன் விரல்கள் அவளுடையவற்றுடன் அழுத்தமாக உரசின. வேண்டுமென்றெ செய்தது என்பது புரிந்தும், எதையும் புரிந்தகொண்ட அடையாளம் தன் முகத்தில் சிறிதுமின்றி அதைப் பெற்றுக்கொண்டபின் பங்கஜம் நன்றிக் கண்ணீருடன் வெளியேறினாள்.

வழியெல்லாம் பாகீரதி மாமி அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தாள். எதிர்வீட்டுப் பையனை அவள் அப்பாவுக்குத் துணையாக அவள் வீட்டில் தங்கவைத்திருப்பதாவும், கவலைப்பட எதுவும் இல்லை என்று வைத்தியர் சொல்லி யிருப்பதாகவும், தான்தான் ஒரு முன் ஜாக்கிரதைக்காக வந்ததாகவும் அவள் சொல்லிக்கொண்டு போனதை அப்படி எடுத்துக்கொள்ளப் பங்கஜத்தால் முடியவில்லை. துரதிருஷ்டம் தன்னைத் துரத்துவதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

“மாமி! எங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிட்டா நான் என்ன பண்ணுவேன் ? வேற யாரு இருக்கா நேக்கு ?”

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுடி, பங்கஜம்! தைரியமாயிரு. அப்படி ஏதோ ஆயிடுத்துன்னு வெச்சுக்கோ. சுண்ணாம்புன்னு சொன்னாலே வாய் வெந்துடாது. ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். அப்படி ஏதாவதுன்னா நீ எங்காத்துக்கு வந்து இருந்துடு. கூழோ கஞ்சியோ ரெண்டு பேரும் பங்கு போட்டுண்டு குடிச்சுக்கலாம். எங்காத்து மாமாவும் இருக்கிறதால மூணு பேருன்னு சொல்லணும். நான் பாட்டுக்கு ரெண்டு பேர்ங்கறேனே! எங்களுக்கென்ன, கொழந்தையா, குட்டியா ? ஓட்டல்ல அவர் பாட்டை அவர் பாத்துண்டுடறார். சம்பளத்தை அப்படியே எங்கிட்ட குடுத்துடுவார். ராத்திரி மட்டுந்தான் அவருக்கு ஆத்துல சாப்பாடு. காலம்பரச் சாப்பாடு, மத்தியானச் சாப்பாடு, சாயங்கால டிஃபன் எல்லாமே அவருக்கு ஓட்டல்லதானே ? அப்ப நீயும் நானும் மட்டுந்தானே ? எல்லாம் பாத்துக்கலாம்.. .. ஆனா உங்கப்பாக்கு விபரீதமா எதுவும் இருக்காதும்மா. அழாதே.”

வேர்க்க விறுவிறுக்க இருவரும் அந்தச் சின்ன வீட்டுக்குள் நுழைந்தபோது துணைக்கு இருக்க வைக்கப்பட்டிருந்த எதிர்வீட்டுப் பையனோடு பக்கத்து வீட்டு ராவுஜி மாமாவும் கூட அங்கே இருந்தார். பாயில் படுத்துக்கொண்டிருந்த பஞ்சாட்சரத்தின் உடம்பிலிருந்து கசிந்த வேர்வையில் அவரது மேல்துண்டு நனைந்திருந்தது.

“அப்பா!”

பஞ்சாட்சரம் கன்விழித்துப் பார்த்தார்: “வந்துட்டியாம்மா ? இன்னைக்குப் பாத்துத்தான் நேக்கு இப்படி மயக்கமும் இன்னொண்ணும் வரணுமா ? அவாத்துல ஒண்ணும் சொல்லல்லியா ?”

“இல்லேப்பா. என்னை ஒடனே அனுப்பி வெச்சுட்டா. நீங்க இப்ப எப்படிப்பா இருக்கேள் ? என்ன பண்றது இப்ப ? ஏன் க்ஷீணமாப் பேசறேள் ? கொரலே கெணத்துக்குள்ளேருந்து வராப்ல இருக்கே ? உங்களுக்குச் சமைச்சு வெச்சிருந்தேனே ? அதைச் சாப்பிட்டேளா, இல்லேன்னா பட்டினியா யிருந்துட்டேளா ?”

“சாப்பிட்டேம்மா. ஆனா எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்டேன். வயசாச்சு. சந்தோஷமாவும் இல்லே. நோயில விழறதுக்கு ஒரு மனுஷனுக்கு வேற என்னம்மா வேணும் ? இனிமே அவ்வளவுதான்!”

“அப்படியெல்லாம் சொல்லாதங்கோப்பா. நேக்கும் உங்களை விட்டா வேற யாருப்பா இருக்கா ? .. .. ராவுஜி மாமா! வைத்தியர் என்ன சொன்னார் ?”

“பலஹீனமா யிருக்கார்ங்கறார். நன்னா சாப்பிடணுமாம். கவலைப்படக் கூடாதாம்,” என்று ராவுஜி மாமா பதில் சொல்லிவிட்டு விட்டத்தை வெறித்தார்.

பஞ்சாட்சரம் பலவீனமாய்ச் சிரித்தார்: “ரெண்டுமே முடியாத காரியம். கனவில கூட அது நடக்காதுங்காணும்!”

“என்னமோம்மா! பகவான் ஏழைகளுக்குத்தான் மேல மேல கஷ்டம் குடுக்கறார். .. ..ம்!” என்று நெட்டுயிர்த்த பாகீரதி மாமி, “அப்ப நான் வரட்டுமா ? பாதிச் சமையல்ல அடுப்பை அணைச்சுட்டுக் கெளம்பினேன்.. .. ஆமா ? நீ சாப்பிட்டிருக்க மாட்டியே ?”

“இல்லே, மாமி. அவாளுக்குப் போட்டுட்டுத்தானே நான் சாப்பிட முடியும் ? ஆனா, அவாத்துல நல்ல காப்பியா ஒரு தம்ளர் குடிச்சேன். அது தாங்கும் பன்னண்டு மணி வரைக்கும். ரெண்டு வேளைக்கும் எங்கப்பாக்குச் சமையல் பண்ணி வெச்சிருக்கேனோல்லியோ ? அதை நாங்க ரெண்டு பேருமா கொஞ்ச நேரம் கழிச்சுச் சாப்பிட்டுக்கறோம்.”

“அப்ப, நான் வரட்டுமா ? . .. கவலைப்படாம இருங்கோ, மாமா. கவலைதான் உங்களை இப்படிப் படுத்தறது. கவலைப்பட்டு என்ன லாபம் ? எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ, அது நடந்தே தீரும். கவலைப் பட்றதால நடக்கப்போறது மாறிடுமா, இல்லே, நின்னுடுமா ? ரெண்டுமே இல்லே. நீங்க கவலைப்பட்டா, அப்புறம் பங்கஜமும் கவலைப்படுவா. ரெண்டு பேரோட ஒடம்பும் கெட்டுப் போறதுதான் மிஞ்சும்.”

“எல்லாம் தெரிஞ்சுதாம்மா இருக்கு நேக்கும். ஆனா, மனசில இருக்கிற கவலைகளைக் கட்டுப்படுத்த முடியல்லியே! ?” என்று பஞ்சாட்சரம் மறுபடியும் ஒரு தரம் பலவீனமாய்ச் சிரித்தார்.

பாகீரதி மாமி இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல், பங்கஜத்தை நோக்கித் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டுப் போனாள். ராவுஜி மாமாவும் எதிர்வீட்டுப் பையனும் கூட விடை பெற்றுக்கொண்டார்கள்.

எல்லாரும் போனதும், பஞ்சாட்சரத்துக்கு அருகே வந்து உட்கார்ந்துகொண்ட பங்கஜம், “இப்ப எப்படிப்பா இருக்கு ?” என்றாள். தொண்டையில் ஏதோ கெட்டியாக அடைத்துக்கொள்ள, அவள் கண்கள் நீரில் மிதந்தன.

“சீ ! அசடு, அசடு. இப்ப என்ன ஆயிடுத்துன்னு அழறே ? போது போக்கத்தவ அந்த பாகீரதி. அநாவசியமா பயந்து போய் அங்க வந்து உன்னைக் கெளப்பிண்டு வந்துட்டா. வெயில் ஆகல்லே. நேக்கு வேற ஒண்ணுமில்லே. அறுபது வயசு ஆயிடுத்தோல்லியோ ? இனிமே அப்படித்தான். ஒடம்பு எப்பவுமே ஒரே மாதிரி இருக்குமா ? நேக்கென்ன பால்யமா ?”

“பொன்னுச்சாமி வைத்தியர் மருந்து, மாத்திரை ஏதாவது குடுத்துட்டுப் போனாராப்பா ?”

“ஆமா. குடுத்தார். தலைமாட்டிலயே வெச்சிருக்கேன், பாரு. மூணு நாள்ள சரியாயிடும்னிருக்கார். நன்னா சாப்பிடணுமாம். சத்தான சாப்பாடு!” என்று கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

நான்கு நாள்களாக அவர் ஒரு வேளைதான் சாப்பிட்டார் என்பது அந்நேரத்தில் மிக அதிகமாக நினைவுக்கு வர, அவள் கண்கள் மறுபடியும் குபுக்கென்று கண்ணீரால் நிறைந்து போயின. அவளும் கூட ஒரு வேளைதான் சாப்பிட்டாள். ‘ஆனா நான் சின்னவ. இன்னும் முப்பது வயசு கூட நிரம்பாதவ. அவருக்கோ அறுபது வயசு ஆயிடுத்து! என்னைப் போல ரெண்டு மடங்கு வயசு. தாங்குமா என்ன ?’

“அப்பா! அவாத்துல பத்து ரூவா முன்பணம் குடுத்தாப்பா.”

“அப்படின்னா நல்லவாளாத்தான் இருக்கணும்.”

அவள் பதில் சொல்லாதிருந்தாள்.

“என்னம்மா, பேசாம இருக்கே ? நல்லவாதானே ?”

“அதெப்படிப்பா சொல்லமுடியும் ? அவா மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும் ?”

“பூந்து பாக்க முடியாதுதான். ஆனா பத்து ரூவாயைத் தூக்கிக் குடுத்திருக்காளே! அதை வெச்சு சொன்னேன்.”

“அப்படியெல்லாம் எதுவும் சொல்லிட முடியாதுப்பா.”

அவர் வியப்புடன் மகளைக் கூர்ந்து பார்த்தார்.

மிகுந்த அறிவுக்கூர்மை படைத்த பஞ்சாட்சரம் ஏதாவது ஊகித்துவிடப் போகிறாரே எனும் அச்சத்தில், “நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேம்ப்பா. நல்ல மனுஷாளாத்தான் தெரியறா. இன்னும் முழு விவரங்களும் போகப் போகத் தெரியும். .. .. இப்ப சாப்பிட்றேளாப்பா ? ஒரு கும்பாவில கொஞ்சமா ரசம் சாதம் கரைச்சு எடுத்துண்டு வரட்டுமா ?”

“எடுத்துண்டு வா. நீயும் அப்படியே உக்காந்து சாப்பிடும்மா. வேகற வெய்யில்ல வேகுவேகுன்னு நடந்து வந்திருக்கே. நேக்கு இப்ப சரியாப் போயிடுத்தும்மா. நீ பாட்டுக்கு நாளைக்கு வேலைக்கு அவாத்துக்குப் போலாம். வேலையில சேந்த மத்தா நாளே போகாம இருக்காதே. அப்புறம் வேற யாராவது அதைப் பறிச்சுண்டுடப் போறா.”

“சரிப்பா!” என்ற பங்கஜம் சாதம் எடுத்துவர அடுக்களைக்குப் போனாள்.

ரசம் சாதம் கரைத்தபடியே அவள் நாகலிங்கத்தைப் பற்றிய எண்ணங்களில் ஈடுபட்டாள். அவன் ஒரு பெண்பித்துப் பிடித்தவன் என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்படாத குறைதான் என்று அவளுக்குத் தோன்றியது. பகல் நேரம் மட்டுந்தான் வேலை செய்யப் போகிறாள்; காமாட்சி எப்போதும் கண்காணித்தபடி இருக்கத்தான் போகிறாள் என்றாலும், அவனது பார்வையில் நிறைந்திருந்த நஞ்சு நினைவுக்கு வந்து அவளைத் திடுக்குறச் செய்தது. ‘இப்படிப்பட்ட கயவர்கள் எப்படியாவது – அது பகலோ, இரவோ – தங்களுக்கு வாய்ப்பான நேரத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்’ என்று அவளுக்குத் தோன்றியது.

‘நான் ஒரு மகாபாவி! மூணு கொழந்தைகள் பொறந்துதே ? ஒண்ணாவது தக்கி யிருக்கப்படாதா ? இப்ப அது என்னோட வாழ்க்கையில ஒரு ஆறுதலா யிருக்குமோல்லியோ ?.. .. ஆனா ஒரு விதத்துல மூணும் செத்துப் போனதே நல்லதுக்குத்தான். மூணும் பொண்களான்னா பொறந்து தொலைச்சுதுகள்! புருஷனும் தள்ளி வெச்சுட்ட நெலமையில பொண் கொழந்தை ஒண்ணே ஒண்ணு தக்கி யிருந்தாலும் கூட அதை வெச்சிண்டு நான் எப்படிச் சமாளிக்க முடியும் ? அதுக்கும் சோறு போடணுமே ? கல்யாணம், காட்சின்னும் பண்ண வேண்டி வருமே ? அதுக்கெல்லாம் காசுக்கும் பணத்துக்கும் எங்கே போறது ? அந்தக் கொழந்தைகள்ளாம் புண்ணியம் பண்ணின கொழந்தைகள். அதான் பகவான் பிஞ்சிலயே பறிச்சுக் கூட்டிண்டுட்டார்! ஏதோ முந்தின ஜென்மத்துக் கடனைக் கழிக்கிறதுக்காக என் வயித்துல வந்து பொறந்ததுகள் போலேருக்கு!.. ..’

“அப்பா! தூங்கிட்டேளா ?”

“இல்லேம்மா. சும்மாத்தான் கண்ண மூடிண்டு படுத்திண்டிருக்கேன். ராத்திரியிலயே நேக்குத் தூக்கம் வர்றதில்லே. பகல்லயாவது, தூங்கறதாவது!”

“நான் வேணா மெதுவாப் பிடிச்சுத் தூக்கி உக்காத்தட்டுமாப்பா ?”

“வேணாம்மா. அந்த அளவுக்கு மோசமால்லே. நானே எழுந்து உக்கார்றேன்.”

மெதுவாக எழுந்து உட்கார்ந்த அவர் கையில் ரசஞ்சாதக் கரைசல் நிறைந்த தம்ளரைக் கொடுத்த பங்கஜம், “நீங்க குடிச்சதுக்கு அப்புறம் நான் சாப்பிடறேம்ப்பா. நேக்குப் பசியே இல்லே. இருந்தாலும் உங்க திருப்திக்காகச் சாப்பிட்றேங்கறேன்!” என்றபடி அவருக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டாள்.

அவர் அதைப் பருகினார். மேலும் ஒரு தம்ளரும் கேட்டு வாங்கி ஆவலுடன் பருகினார். முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. அதைப் பார்த்த பங்கஜமும் மன நிறைவுற்றாள்.

வெந்நீர் குடித்ததும், பஞ்சாட்சரம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, “போம்மா! நீயும் போய் ஒரு வாய் சாப்பிட்டுடு,” என்றவாறு உண்ட களைப்போடு கண்களை மூடிக்கொண்டு ஒரு குட்டித் தூக்கத்துக்கு ஆயத்தமானார்.

அடுக்களைக்குச் சென்று தட்டை வைத்துக்கொண்டு உட்கார்ந்த பங்கஜம் சாப்பிட்டவாறே தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசைபோடத் தொடங்கினாள்.

1898 ஆம் ஆண்டில் அவள் பிறந்தாள். 1910 இல் அவளுக்குத் திருமணம் நடந்தது. அதாவது, அவளது பன்னிரண்டாம் வயதில். மாப்பிள்ளைக்கு வயது பதினான்கு. பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். மதுரையில். அப்போது அவளுக்கு அம்மா இருந்தாள். அவள் பெரியவள் ஆனதும் ஒரு நல்ல நாளில் அவளை அவள் அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்று சம்பந்திமார் கேட்ட சீர்வரிசைகளோடு விட்டுவிட்டு வந்தார்கள். அப்போது பஞ்சாட்சரம் இந்த அளவுக்கு ஏழையாக இல்லை. ஏதோ கொஞ்சம் செயல் உள்ளவராகத்தான் இருந்தார். அவளுக்கு முதல் குழந்தை அவளது பதினாறாம் வயதில் பிறந்தபோது, அவள் அம்மா உயிருடன் இல்லை. கடுமையான மஞ்சள் காமாலை நோயில் அவளது மூன்றாம் மாதத்திலேயே இறந்துபோனாள். எனவே அவளது பிள்ளைப் பேறுகள் யாவும் மமியார் வீட்டில்தான் கொடுமையான சுடுசொற்களுடனும், சொல்லிக்காட்டுதல்களுடனும் நடந்தன. முதல் பெண் குழந்தை பிறந்த பின் மூன்று நாள்களுக்கு மேல் உயிருடன் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரண்டாம் பெண் குழந்தையும் மூன்று நாள்களுக்கு மேல் தக்கவில்லை. மூன்றாம் பெண் குழந்தையோ அவள் அதன் முகத்தைப் பார்ப்பதற்கும் முன்னாலேயே மரித்துவிட்டது. அவள் தன்னினைவு அற்றுக் கிடந்ததால், குழந்தையை அவள் பார்க்கவும் கொடுத்துவைக்கவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு அவள் தன்னுணர்வு பெற்றுக் குழந்தையைப் பார்க்க அவாவிய போது, பிறந்த ஒரு மணிப் பொழுதுக்குள் அது இறந்துவிட்டதாய் அறிந்து அளவுகடந்த துயருற்றாள்.

இரண்டிரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்த மூன்று குழந்தைகளுமே பெண்கள் என்பது பற்றி அவள் மாமியார் அதன் பின்னர் அடிக்கடி குத்திக் காட்டலானாள்.

‘சில பேரோட வயித்து வாகு- பொண் கொழந்தைகளாவேதான் பொறக்கும். நல்ல வேளை! மூணும் செத்து ஒழிஞ்சுதுகள்! இனிமே இவளுக்குப் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்னு நேக்குத் தோணலை. நம்மாத்து வம்சம் வெளங்கணும்னா, ஒரு பிள்ளைக் கொழந்தையாவது பொறக்க வேண்டாமா ? தினத்துக்கும் நேக்கு இதைப் பத்தின கவலைதான். என்ன செய்யறதுன்னே தெரியல்லே,’ என்று ஒரு நாள் அவளுடைய மாமியார் அவள் மாமனாரிடம் அலுத்துக்கொண்டபோது, அவர் தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘இதுக்குப் போய் எதுக்குடி கவலைப்பட்றே ? பேசாம தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டியதுதானே ? அன்னிக்கே சொன்னேனோல்லியோ ? இன்னொரு வரதட்சிணை, சீர் செனத்தி எல்லாமும் கிடைக்குமே!’ என்று திருவாய் மலர்ந்தருளினார். தற்செயலாக அவள் கூடத்தில் துணி உலர்த்திக்கொண்டிருந்ததால் -அறையின் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு இருவரும் பேசியதால்- அவர்களின் பேச்சை அவள் கேட்க நேர்ந்தது. அந்தக் கணத்தில் அவளுள் பொங்கிய ஆத்திரமும் ஏமாற்றமும் இன்றளவும் அவளுக்கு ஞாபகமிருந்தன.

அன்றிரவு அவள் தன் கணவனிடம் அது பற்றிச் சொன்னபோது- “ஏன்னா! என்னை விட்டுட்டு இன்னொருத்திக்கு மறுபடியும் தாலி கட்டுவேளா ?’ என்று பரிதாபமாக அவள் கண்ணீருடன் வினவியபோது- அவன் சிரித்த சிரிப்பு இப்போது அவள் செவிகளில் ஒலித்தது.

‘அப்பா ரெண்டு மாசமாவே சொல்லிண்டிருக்கா. நானும் உங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். நீயே கேட்டுட்டே!’ என்றான் தாசரதி!

-தொடரும்

jothigirija@vsnl.net

மறுபடியும் ஒரு மகாபாரதம்

ஜோதிர்லதா கிரிஜா

அத்தியாயம் – 7

தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும் ஏமாற்றங்கள்.

‘என்னன்னா! சிரிச்சுண்டே சொல்றேள் ? இன்னொருத்தியைப் பண்ணிக்க மாட்டேள்தானே ?’ -இவ்வாறு கேட்டபோதே அவள் குரல் தடுமாறியது. துயரம் தொண்டையை அடைத்தது.

‘பங்கஜம்! எதுக்குடி இப்ப அழுகை ? நீயே யோசிச்சுப் பாரு. என்னோட வம்சம் விளங்க ஒரு பிள்ளைக் கொழந்தையாவது- எங்கம்மா ஆசைப்பட்றாப்ல- வேண்டாமா ? உன் வயித்து ராசி- இது வரையில பொறந்த எல்லாமே பொண்ணாவே இருந்துடுத்து. நல்ல வேளை! எல்லாமே போய்ச் சேந்துடுத்துகள்!.. ..”

‘அய்யோ! உங்க வாயால அப்படிச் சொல்லாதங்கோன்னா. பத்து மாசம் அதுகளைச் சொமந்தேன். ஒடம்பு நோக ஆசையாப் பெத்து எடுத்த தாய் நான். என் காது படவே இப்பிடிப் பேசறேளே! அதுகள் செத்துப் போயிட்டதுக்கு சந்தோஷம் வேற பட்றேளே! நியாயமா ?’

‘சரி. தப்புதான். அதை விடு. வரிசையாப் பொண்ணாவே பெத்துண்டிருக்கியே ? அதுக்கு என்ன சொல்றே ?’

‘அது நம்ம கையிலயா இருக்கு ? எல்லாம் கடவுளோட செயல். பொண்ணாவோ பிள்ளையாவோ பெத்துக்கிறது என்ன, பொம்மனாட்டிகள், எங்க கையிலயான்னா இருக்கு ?’

‘பண்றதையும் பண்ணிட்டுக் கடவுள் மேல ஏண்டி பழி போட்றே ? உன்னோட ஒடம்பு வாகு அப்படி. அதுக்காக நான் பிள்ளைக் கொழந்தை இல்லாமயே காலத்தை ஓட்டிட முடியுமா ? என்னோட வம்சம் வெளங்க வேண்டாமா என்ன ? அதுக்குத்தான் அம்மாவும் அப்பாவும் சொல்ற வழி இது!’

‘அப்படின்னா அதுக்கு ஒத்துண்டுட்டேளா ?’ -பங்கஜம் உடைந்து போய் அழலானாள்.

‘ஏண்டி அழுது மாஞ்சு போறே ? நான் என்னிக்கோ ஒத்துண்டாச்சு. உன்கிட்ட சொல்றதுக்குத்தான் கொஞ்சம் தயங்கிண்டிருந்தேன். இன்னைக்கு நீயாவே அந்தப் பேச்சை எடுத்தே. சொல்லிட்டேன். இத பாரு. இந்த அழுது ஆகாத்தியம் பண்ணி நீலிக் கண்ணீர் வடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. என்ன, தெரிஞ்சுதா ? நேக்குப் பிள்ளைக் கொழந்தை வேணும். ஆஊன்னு இப்ப என்னத்துக்கு அழறே ? உலகத்துல எந்த ஆம்பளை பிள்ளைக் கொழந்தைக்கு ஆசைப்பட்டு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லே ? உன்னை உங்கப்பா கிட்ட கொண்டுபோய் ரெண்டொரு மாசத்துல விட்டுடுவேன். இனிமே நீ அங்கதான் இருக்கணும். தெரிஞ்சுதா ?’

பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் குரலில் வெளிப்பட்ட அழுத்தமும் சொற்களில் தெறித்த வெறுப்பும் அவளைத் தள்ளிவைக்கத் தான் போகிறான் என்பதைத் திட்டவட்டமாக அவளுக்கு அறிவுறுத்தின. அன்றிரவு முழுவதும் அவள் இமைகொட்டவில்லை.

ஒரு மணிக்கு அவன் எழுந்து அவளை எழுப்பினான். தூங்காமல் ஒருக்களித்துப் படுத்திருந்த பங்கஜம் அவனது நோக்கம் புரிந்து திரும்பினாள். அவளுக்குத் தாங்க முடியாத அருவருப்பு ஏற்பட்டது. அவனது கையை வலுவாக விலக்கினாள். அவன் முரட்டுத்தனமாக அவளைக் கையாண்டு சிரித்தான்.

‘இப்படியெல்லாம் முரண்டு பிடிச்சா நோக்குத்தான் நஷ்டம்! இன்னும் ரெண்டே மாசத்துல நேக்குக் கல்யாணம். அது வரையில முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சுக்கோடி, முட்டாளே!’ என்றானே.

தனது வலுவின்மை, செயலின்மை, கோழைத்தனம் ஆகியவற்றின் மேல் அந்த நேரத்தில் அவளுக்கு வந்த வருத்தம் சொற்களின் விவரித்தலுக்கு அப்பாற்பட்டது. அந்த வருத்தத்தினூடே, ‘ஒருவேளை இங்கேருந்து போறச்சே நேக்குப் பிள்ளை உண்டானா, அந்த ஆறுதலாவது கிட்டுமே!’ என்னும் எண்ணமும் அவளுக்கு வந்தது.

மறுநாள் அவள் மாமனார், மாமியார் ஆகிய இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். வழக்கம் போல் அவளைக் கூப்பிடவில்லை. மீனாட்சியம்மனின் அருட்பார்வை தங்கள் மருமகளின் மீது பட்டுவிடக் கூடாது என விரும்பினார்கள் போலும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.’அட, மூடங்களா! மீனாட்சி அந்தக் கோவில்ல மட்டுந்தான் இருக்காளா என்ன ? ஆத்துல இருந்த படியே அவளை என்னால வேண்டிக்க முடியாதா ?’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவர்கள் கோவிலுக்குப் போன நேரத்தில் தாசரதி தனது அறையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் போய் அரை மணி கழித்துத் தாசரதியின் நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவனை அவள் அதற்கு முன்னால் இரண்டு` தடவைகள் பார்த்திருந்தாள். அவள் உள்ளே போய்த் தாசரதியை எழுப்பினாள். அவள் எழுந்து சென்று ராகவன் எனும் அந்த நண்பனை வரவேற்றுத் தனது அறைக்கு இட்டுச் சென்று உட்காரச் செய்தான். பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

‘பங்கஜம்! ரெண்டு கப் காப்பி கொண்டா.’

அவள் பத்து நிமிடங்கள் கழித்துக் காப்பித் தம்ளர்களுடன் அவனது அறையை நெருங்கிய போது தாசரதி தன் இரண்டாம் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போகாமல் நின்று ஒற்றுக்கேட்டாள்.

‘என்னடா! மூணு கொழந்தைகளும் செத்துப் போயிடுத்தே ? ரொம்ப வருத்தமா யிருக்கு. இப்ப மறுபடியும் ஏதானும் விசேஷம் உண்டா ?’

‘இல்லேடா, ராகவா. வரிசையாப் பொண்ணாப் பொறந்துண்டிருக்குறதால அம்மாவும் அப்பாவும் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா என்னை! அவளுக்குப் பொண்ணாவே பெத்துத் தள்ற வயித்துவாகுங்கறா!’

“சில பொண்ணுகள் அப்படித்தாண்டா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது. அவா சொல்றது சரின்னுதான் நேக்கும் தோண்றது. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ – அந்த நண்பனின் குரலில் விரசம் வழிந்தது.

‘அது நடக்காதுடா, ராகவா. அவளைத் தள்ளித்தான் வைக்கவேண்டி வரும். அம்மா-அப்பா ஒத்துக்க மாட்டா.’

‘டேய்! நான் சொல்றதைக் கேளு. அப்படிச் செஞ்சா அதுல நோக்கு ஒரு லாபம் இருக்குடா. சிநேகிதனோட பொண்டாட்டி அழகைப் புகழ்ந்து பேசறது தர்மம் இல்லேதான். இருந்தாலும் சொல்றேன். உன் பொண்டாட்டி பயங்கர அழகுடா. அவளை விட்டுடாதே. அடுத்து வரப் போறவ எப்படி இருப்பாளோ ? இவ பாட்டுக்கு உங்க ஆத்துலேயே ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டுமே! உங்கம்மாவுக்கு ஆத்துக் காரியத்துல ஒத்தாசையாவும் இருப்பா. அவளுக்குச் சோறு போட்ற புண்ணியம் உனக்குக் கிடைக்கும். உன்னை அவளும் அவ அப்பாவும் ரொம்பவும் சபிக்க மாட்டா. அவளுக்கும் தான் வாழாவெட்டி யாயிடல்லேன்னு ஒரு திருப்தி இருக்கும். இல்லியா ? என்ன சொல்றே ? யோசிச்சுப் பாரு.’

‘நீ சொல்றது ரொம்பவே நல்ல யோசனைதான். அப்படியே செஞ்சுடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.’

‘ஆமா ? போன வாரம் கிளப்புக்கு வறேன்னுட்டு நீ ஏன் வரவே யில்லே ?’

அவர்களது பேச்சு இலக்கு மாறிய பின் இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அவனது அறைக்குள் நுழைந்து காப்பியை மேசை மீது வைத்துவிட்டு வெளியேறினாள்.

அடுக்களைக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் இதயம் சிதற அழத் தொடங்கினாள். ஒருகால் தன்னையும் இருத்திக்கொள்ள அவர்கள் முற்படுவார்களோ எனும் எண்ணம் வந்த போது அவளுள் பொறுத்துக்கொள்ள முடியாத அருவருப்பு விளைந்தது. இன்னொருத்தியோடு கணவனைப் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வதை விட எங்கேயாவது விழுந்து அல்லது விஷம் எதையாவது குடித்து ஒரேயடியாய் உயிரையே விட்டுவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

‘கடவுளே! எல்லாக் கொழந்தைகளையும் பொண்ணாவே பெத்துக்குற மாதிரியான உடல்வாகை நேக்கு ஏன் குடுத்தே ? .. .. இவாளுக்கும்தான் கொஞ்சம் பொறுமை வேண்டாமா ? ஒரு வேளை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பொறக்குற கொழந்தை பிள்ளையா யிருக்குமோ என்னமோ! நேக்கென்ன வயசாயிடுத்தா ? கொஞ்ச நாள் காத்திண்டிருக்கப் படாதா ?.. .. அப்பாக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! இருந்த ஒரே வீட்டையும் குமரேசன் செட்டியாருக்கு என் கல்யாணச் செலவுக்காக விக்கும்படி ஆச்சு. செட்டியார் நல்லவர். அதனால அதுலேயே ரொம்பவே குறைச்சலான வாடகைக்கு அப்பா காலம் முடியற வரைக்கும் இருந்துக்கலாம்னுட்டார். எவ்வளவு நல்ல மனசு இருந்தா செட்டியார் மாமா அப்படி ஒரு தாராளத்தோட நடந்திருப்பார்! கடவுள் எப்பவும் தாங்க முடியாத கஷ்டத்தைக் குடுத்துட மாட்டார். நடு நடுவில இது மாதிரி நல்லதுகளையும்தான் செய்வார்! அதை நினைச்சுத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் புத்திசாலித்தனம். சும்மா அழுதா ஒடம்புதான் கெட்டுப் போகும்.. .. ..’

ராகவன் கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பிப் போன பிறகு தாசரதி அவளை யழைத்தான்.

‘இத பாரு, பங்கஜம்! என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இந்த ஆத்துலேயே இருந்துக்கலாம். நான் அம்மா கிட்ட சொல்லிப் பாக்கறேன். உங்கப்பாவுக்கும் வயசாயிடுத்து. அவருக்கு நீ ஒரு சுமையா இருக்க வேண்டாம்.’

இவ்வாறு சொன்ன போது அவனது பார்வை- ஏதோ அப்போதுதான் முதன் முறையாக அவளை ஆராய்பவனுடையது போன்று- குறுகுறுவென்று தன் மீது படிந்ததை உணர்ந்து அவளுக்கு அளவுகடந்த வெறுப்பு ஏற்பட்டது. அந்த ராகவனின் மதிப்பீட்டால் அவன் தன் அழகை ஆராய்கிறான் என்பது புரிய, கெட்டது சொல்லிக் கொடுக்க வந்த அந்த நண்பன், ‘அடேய்! பெண் பாவம் பொல்லாதுடா. அப்படியெல்லாம் பண்ணாதே. இன்னொருத்திக்கு மட்டும் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்கிறது என்ன நிச்சயம் ? அவளுக்கு எதுவும் பொறக்காமலேயே கூடப் போகலாமோல்லியோ ? அப்படி ஆனா மூணாவதா ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிப்பியா ? வேண்டாண்டா. அது தப்பு’ என்று நியாயத்தை எடுத்துச் சொல்லி யிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். நண்பன் அப்படிச் சொல்லி யிருந்தால், அதை அவன் கேட்பானா இல்லையா என்பது வேறு விஷயமாக இருப்பினும் கூட!

‘என்ன, பேசாம இருக்கே ?’

‘எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்யறேளாக்கும்! நேக்குப் பிடிக்கிறது பிடிக்காததுன்னு பாத்தா, நீங்க நேக்கு துரோகம் பண்ணாம இருக்கிறதைத்தான் நான் விரும்புவேன். எல்லாத்தையும் தீர்மானிக்கப் போறது உங்கம்மா. கேக்கப் போறது நீங்க. நடுவில இதென்ன நாடகமும் வேஷமும் வேண்டிக்கிடகு ?’

‘ஏண்டி! எதித்தா பேசறே ? அம்புட்டுக்கு ஆயிடுத்தா ?’ என்று அவளை நோக்கிக் கையை ஓங்கியபடி எழுந்தவன், ஏனோ அவளை அடிக்காமல் விட்டான்.

‘நோக்கு வாய்டி. அதான் பகவான் இப்படிப் பொட்டைகளாப் பெத்துப் போட்ற வயித்தைக் குடுத்துட்டான். இல்லேன்னா பொறந்த மூணுல ஒண்ணாவது பிள்ளைக் கொழந்தையா யிருக்காதா என்ன ?’

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தலையைக் குனிந்து உதடுகளை உள்மடித்து அதை அடக்க முயன்று தோற்றாள்.

‘இத பாருடி. அம்மா கிட்ட கேளு- நானும் ஒரு ஓரமா இந்தாத்துலேயே இருந்துக்கறேன்னு சொல்லிப் பாரு. நானும் சொல்றேன்.’

அவள் பதிலேதும் சொல்லாமல் காப்பித் தம்ளர்களை எடுத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனாள். .. .. ..

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் மாமியார் மெதுவாக ‘அந்தப் பேச்சை’ எடுத்தாள். மங்காத சித்திரமாய் அந்தக் காட்சி பங்கஜத்தின் மனத் திரையில் பதிந்திருந்தது. அவள் அடுக்களையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள். கூடத்தில் மாமனார் ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். மாமியார் சற்றுத் தள்ளித் தரையில் சுவரோரமாய்ச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். தாசரதி தன் அப்பாவுக்கு அருகே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

‘இத பாருடி, பங்கஜம்! நாங்க மூணு பேரும் சேந்து ஒரு தீர்மானம் பண்ணியிருக்கோம்.’

‘என்னம்மா ?’ என்றபடி அவள் கூடத்துக்குச் சென்றாள்.

‘உன்னோட வயிறு பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்ற வயிறா யிருக்கு. எங்க வம்சம் விளங்குறதுக்குப் பிள்ளைக் கொழந்தை வேணுமோன்னோ ? அதனால தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கிறதுன்னு தீர்மானம் பண்ணி யிருக்கோம். அவனும் சரின்னுட்டான். அதனால நீ நாளைக்கே உங்க ஊரைப் பாக்கப் போய்ச் சேரு.’

பங்கஜம் பதிலே சொல்லாமல் இருந்தாள். அவள் எதுவும் பேசப் போவதில்லை என்பதாகச் சில நொடிகள் காத்திருந்த பின் ஊகித்த தாசரதி, ‘அம்மா!’ என்றான் குழைந்த குரலில்.

‘என்னடா ?’

‘அவ பாட்டுக்கு இந்தாத்துலேயே ஒரு மூலையில இருந்துட்டுப் போட்டுமேம்மா ?’

‘அது சரிப்பட்டு வராதுடா.’

‘ஏம்மா சரிப்பட்டு வராதுங்கறே ? ஆத்துக் காரியங்கள்ளே நோக்குக் கூடமாட ஒத்தாசையா யிருப்பாளேம்மா ?’

‘அதுக்குத்தான் இன்னொருத்தி வராளேடா ? இவளுக்கு வேற சோறு போடணுமா நாம ?’

‘அப்படி இல்லேம்மா. அது நமக்கும் லாபந்தானேம்மா ? பொண்பாவமும் வராதில்ல ?’

‘எதுடா பொண்பாவம் ? பொண்ணு பொண்ணாப் பெத்துத் தள்றவளைப் பின்ன வேற என்ன செய்யறதாம் ? ஊர்ல ஒலகத்துல செய்யாத பாவத்தையா நாம பண்ணப் போறோம் ? இது ஒண்ணும் பாவமே இல்லே. நியாயமான முடிவுதான்.’

‘ரெண்டு பொண்டாட்டிகள் ஒரே ஆத்துல இருந்தா அது குடுமிப்பிடிச் சண்டையிலதாண்டா முடியும். ரெண்டாவது, அந்த இன்னொருத்தியும் இவ இங்க இருக்கிறதுக்குச் சம்மதிக்கணுமோன்னோ ?’ என்று மாமனார் குறுக்கிட்டார்.

‘உங்கப்பா சொல்றதுதாண்டா சரி. இவளைக் கொண்டு போய் அவ அப்பா கிட்ட விட்டுடலாம்.’

‘நாம என்ன கொண்டுபோய் விட்றது ? வண்டியில ஏத்திவிட்டா தானே போய்க்கிறா! அவ ஊரென்ன டில்லியா, பம்பாயா கொண்டுபோய் விட்றதுக்கு ?’ என்று மாமனார் மறுபடியும் இடைமறித்தார்.

‘சரிப்பா. உங்க ரெண்டு பேரோடவும் இஷ்டம். நீங்க சொல்றாப்ல, அந்தப் பொண்ணும் அவா மனுஷாளும் சம்மதிக்கணுமே ?’

அன்றிரவு அழுதது போல் பங்கஜம் அதற்கு முன்னாலும் அழுததில்லை, பின்னாலும் அழுததில்லை. தன் வயிற்றில் மூன்று குழந்தைகள் உற்பத்தியாவதற்குக் காரணனாக இருந்த கணவனுக்குத் தன் மேல் அன்பு என்பது கொஞ்சமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவான அழுகை! ‘ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். பெண் இன்றி ஆணால் அது இயலாது, ஆணின்றிப் பெண்ணால் அது இயலாது என்கிற கண்கூடான நிலையில், உற்பத்தியாவது ஆணானாலும், பெண்ணானாலும் அதை வமிசவிருத்தியின் அடையாளமாய்க் கொள்ள வேண்டியதுதானே நியாயம் ? ஆண்தான் வமிச விருத்திக்கு அவசியம் என்பது என்ன நியயம் ? ஆண் குழந்தையைப் பெற்றுத் தராதவள் மனைவியாக இருப்பதற்குத் தகுதியற்றவள் என்பது எவ்வாறு சரியாகும் ? கடவுளே! நான் ஏன் தான் பிறந்தேனோ ? எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை ? போன ஜென்மத்தில் நான் ஓர் ஆணாக இருந்து ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை இப்படி யெல்லாம் செய்து கொட்டிக்கொண்டிருந்திருப்பேனோ ? அப்படித்தான் இருக்க வேண்டும். பாவம், அப்பா! இந்த அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கப் போகிறரோ!’

‘அம்மா!’

‘என்னடா ?’

‘ஒருவேளை அந்தப் பொண்ணாத்துல இவளும் இங்க இருக்கிறதுக்குச் சரின்னுட்டா, வெச்சுண்டுடலாமா ?’

மாமியார் தாசரதியை முறைத்தாள்: ‘அதெல்லாம் சரியா வராதுடா. முட்டாள்தனமாப் பேசிண்டிருக்காதே. இவளை விட அழகா ரதி மாதிரி ஒரு பொண்ணை நோக்குப் பாக்கறேன்’

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்த்த மகனின் ஆசையைப் புரிந்துகொண்டு மாமியார்க்காரி பதில் சொல்லிவிட்டாள்.

பங்கஜம் எனும் ஒரு பெண்- தாசரதியின் மனைவி- மிக அருகே அங்கு இருப்பதைப் பற்றிய உணர்வே இல்லாதவர்கள் மாதிரி- அல்லது அவளுக்கு உணர்ச்சி ஏதும் இருக்காது- அல்லது இருக்கலாகாது- என நினைத்தவர்கள் போன்று -அவர்கள் அவ்வளவு வெளிப்படையாய், ஏதோ, ‘இன்னிக்கு என்ன சமையல் பண்ணலாம் ?’ எனும் அற்ப விஷயத்தை விவாதிப்பது போல்- சர்வ சாதாரணமாய் உரையாடியது அவளுள் சகிக்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘சே! என்ன மனிதர்கள்! முதலில் மனிதர்களா இவர்கள் ? இவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை. அதுதான் இப்படி இன்னொரு பெண்ணுக்குக் கூசாது தீங்கிழைக்கிறார்கள். .. .. ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே. அதற்கு இந்த மாமியார் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவளே ஒரு பெண்தானே! இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகள் புரியாதவளாக இவள் இருப்பாளா என்ன ? எனவே, பெண் குழந்தை ஒன்றுக்கு இவள் தாயாக இல்லாததற்கும் இவளது கல்நெஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை. இவள் கெட்டவள். அவ்வளவுதான்! கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே.. .. ..’

‘என்னடி, பங்கஜம்! நாங்க பேசினதையெல்லாம் கேட்டுண்டிருந்தியோல்லியோ ? உன்னோட பொடவை, துணிமணியெல்லாம் எடுத்து ஒரு பையில வெச்சுக்கோ. இன்னும் ரெண்டே நாள்ள கெளம்பணும்.’

பொங்கிவந்த கண்ணீருடன் அவள் உதடுகள் துடிக்கத் தலை திருப்பி அவர்கள் புறம் நோக்கிய போது, அவள் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், மூவரும் மூன்று திசைகளில் பார்த்தார்கள்.

பங்கஜம் மறு நாளுக்கு மறு நாள் சின்னக்குளத்திலிருந்து புறப்பட்டுத் தன் ஏழைத் தகப்பனாரிடம் வந்து சேர்ந்தது இப்படித்தான்.

.. .. .. பழைய நினைவுகளில் மூழ்கியபடி அவள் சிந்திய கண்ணீர் மணிகள் உதிர்ந்து அவளது சாப்பாட்டுத் தட்டில் விழுந்து சிதறின.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation