காதல்
காசிகணேசன் ரங்கநாதன்
—-
‘ஐயாம் ரித்து க்ஹர்பந்தா.. ‘
நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினேன்.
‘யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ் ? ‘ என்ற என் கேள்விக்கு பதிலாய் மேற்படி பதில்
விளைந்தது.
‘க்ஹர்பந்தா.. என்ற பெயர் ஒரு மாதிரி இருந்தாலும், என்னத்தையாவது
ஏடாகூடமாகச் சொல்லித் தொலைத்து இந்த அழகான பஞ்சாபிப் பெண்ணின்
விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நான் தயாரில்லை. ‘
எனவே கொஞ்சம் அளவுக்கதிகமாகப் பல்லிளித்தபடியே சொல்லி வைத்தேன்.
‘வெரி நைஸ் நேம். ‘
அந்தப் பிரபல கணிணிப் பயிலகத்தில் அன்றுதான் புதிதாகச்
சேர்ந்திருந்தேன். முதல் நாள் முதல் வகுப்பில் என் ஆசிரியையோடு நடந்த
முதல் உரையாடல்தான் மேற்படி உரையாடல்.
இயந்திரவியற் பொறியியல் பட்டம் பெற்றபின் ஏகப்பட்ட கனவுகளோடு
தொழிற்சாலையில் சேர்ந்த எனக்கு மிஞ்சியதென்னவோ ஏமாற்றம்தான்.
என்னுடைய ஏகப்பட்ட கனவுகளை எழுதியும் வரைந்தும் திட்ட வரைவுகளை மிகப்
பெருமையாக என் அன்பான துறை இயக்குனரிடம் நீட்ட,
கிடைத்ததென்னமோ ஒரு அன்பான அறிவுறை,
‘கண்ணு.. ராசா.. மெக்கானிக்கல் இண்டஸ்ட்ரீ நீ நெனக்கற மாதிரி
அவ்வளவு ஃப்ளக்ஸிபிள் இல்லப்பா. ஒரு எண்ணம் திட்டமாகணும்னாலும், திட்டம்
செயல்பாட்டுக்கு வரணும்னாலும் பல படிகளைக் கடந்தாகணும். அது மட்டுமில்லாம
இதுக்கு ஆகக் கூடிய செலவு இன்ன பிற பிரச்சினைகள்னு நெறயவே இருக்கு.
குறிப்பா திட்டமிடுதல், டிஸைன், மாடலிங்க், சேம்பிள், ப்ரொடக்ஷன் என்று
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி டாம்களின் அப்ரூவல் வாங்கவேண்டும்…. ‘
ஒரு இரவு முழுவதும் நன்றாக யோசித்துப் பார்த்து, இனி இது சரிப்பட்டு வராது
என்று தீர்மானித்து வேலைக்கு முழுக்குப் போட்டேன். பிறகு கணிணித் துறையில்
என் பாச்சா பலிக்கக் கூடும் என்று தோன்றவே இரண்டு மூன்று பயிலகங்களில்
சில தொழில் நுட்பங்களைப் பயின்ற பிறகு ஒரு குறிப்பிட்ட தொழில்
நுட்பத்தின்மேல் மிகுந்த ஆர்வம் செல்ல, ஒருவழியாக இந்தப் பயிலகத்தில்
வந்து விழுந்தேன்.
முதல் நாள் வழக்கம் போலவே அறிமுகப் படலம், பிறகு அறிமுக வகுப்பு.
ஆசிரியை மிகவும் உற்சாகமாகப் பாடம் நடத்துபவளாய் இருந்தாள். என்
பக்கத்தில் அமர்ந்திருந்த, தடிமனான கண்ணாடி அணிந்திருந்த, என்னை விட
வயது மூத்த, என் சக மாணவி, மூச்சுக்கு முந்நூறு முறை மேடம், மேடம், என்றபடி
சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘நானாவது அவளை மேடம் என்பதாவது ? ம்ஹும்… எப்படிப் பார்த்தாலும்
அவளுக்கு என்னை விட இரண்டு மூன்று வயது குறைவாகவே இருக்கும். ‘
ஒரு வழியாக முதல் வகுப்பு முடிந்தது. என் சக மாணவியிடம் கணிணிப்
பயிற்சி அறையில் வைத்துச் சிறிது நேரம் பேசவும், அவளும் என் அண்டை
மாநிலத்தைச் சேர்ந்தவள் என்று தெரியவரவும், நாங்கள் மிகவும்
நெருங்கிவிட்டோம். டா சாப்பிடும் தருணத்தில் அவள் தன் கணவர் குழந்தை என்று
தன் குடும்ப விபரங்களையும் பகிர்ந்து கொண்டாள். உற்சாகம் நிரம்பி
வழிய அவரவர்கள் பஸ் பிடித்து வீடுகளுக்குத் திரும்பினோம்.
அடுத்தடுத்த வகுப்புகளில் என் ஆசிரியையின் அறிவுத்திறனை அறிய முடிந்தது.
நான் எழுதிய ப்ரோக்ராம்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகளோடு கணிணியில்
பல்லிளிக்க.. அவள் அதனை நாலு தட்டு தட்டி வெகுவிரைவில் சரிசெய்த
லாகவம் என்னைக் கவர்ந்தது. அவள் திறமையால் எனக்கு அவள் மீதிருந்த
மதிப்பு கூடியது. ஆனாலும் அவளை மேடம் என்று நான் கூப்பிடாமல் இருந்ததை என்
திமிர் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. ஆனாலும் நானும் பாடத்தை
வேகமாகப் புரிந்து கொண்டு முன்னேறியுள்ளேன் என்பதையும் அதன் மூலம் என்
அன்பான ஆசிரியையின் மனதில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளேன் என்பதையும்
அவள் நடவடிக்கை மூலம் அவ்வப்போது அறிந்து கொள்ள முடிந்தது.
ஒருமுறை வகுப்பில் அவள் பில் கேட்ஸைப் பற்றி ஒரு நீண்ட லெக்சர் அடித்து
விட்டு, அவரைப் போல நாமும் முன்னேறவேண்டும் என்று சொல்ல என் வகுப்பு
நண்பி,
‘ரித்து அதெப்புடி முடியும் அவரு எவ்வளவு பெரிய ஆளூ ?… ‘ நான்
இடைமறித்தேன்.
‘ஏன் ? ஏன் முடியாது ? பானூ.. பில் கேட்ஸுக்கு மட்டும் ரெண்டு கொம்பா
மொளச்சிருக்கு. அவரும் நம்மள மாதிரி மனுஷர் தானே ? என்னைக் கேட்டா
நாம பில் கேட்ஸா ஆகக் கூடாது. ஏன்னா அது அவர் செய்து முடிச்சிட்ட
சாதனை. இனிமே நாம செய்யக் கூடியது, அவர் சாதனைய முறியடிச்சு, அவருக்கு
மேல உயர்ந்து, நமக்குன்னு ஒரு சாதனை இடத்த உண்டு பண்ணறது. காலங்காலமா
உலகத்துல இருக்கற எல்லா ட்ரெண்ட் செட்டர்களும் செஞ்சது இதுதான். ஒங்க பில்
கேட்ஸ் உள்பட… ‘
‘டப்.. டப்.. டப்.. டப்.. ‘
என் பேச்சை இடைமறித்தபடி கைத்தட்டல் ஒலி கேட்டது. க்யூபிக்கிள் என்று
அழைக்கப் படும் அந்த மரத்தால் செய்து இன்டாரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட
அந்த கான்ஃப்ரன்ஸ் ஹால் அந்த கைத்தட்டலைப் பன்மடங்காகப் பெருக்கிக்
காட்டியது. திரும்பிப் பார்த்தேன். என் ஆசிரியை ரித்துதான் கையைத் தட்டிக்
கொண்டிருந்தாள்.
‘எக்ஸலண்ட் ரமேஷ்.. வெல் செட்ட்.. ‘ கையை நீட்டினாள். பற்றிக்
குலுக்கினேன். நான் ஒரு வித்தையைக் கற்றுக் கொண்டதாகத் தோன்றியது.
ஆனாலும் என் தோழி பானுவுக்கு இதெல்லாம் புரிந்திருக்க ஞாயமில்லை. அன்று
மாலை பயிலகத்திலிருந்து கீழே இறங்கி நடந்தபோது அருகாமையிலுள்ள
கடையில், ரித்து, ஒரு ரூபாய் கொடுத்து தொலைபேசியில் யாருடனோ
பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘யாருடன் பேசுகிறாள் ? இவள் வீட்டிலே தொலைபேசி நிச்சயம் இருக்கும்.
எனில், கடையிலிருந்து பேச வேண்டிய அவசியம் என்ன ? ‘
நான் அடுத்தவர் சொந்த விடயத்தில் மூக்கை நுழைக்கிற அளவுக்கு
அநாகரீகமான ஆசாமி இல்லைதான் இருந்தாலும் என் ஆர்வத்தை அடக்கிக்
கொள்ள முடியாமல் ஒரு சிகரெட் வாங்குகிற சாக்கில் அந்தக் கடைக்குள்
நுழைந்தேன். என் மூளை முழுவதையும் என் இரண்டு காதுகளிலும் வைத்தபடி எதுவும்
பேசாமல் ஒரு சிகரெட் வாங்கிக் கொண்டு, அவள் பேசிய சில வார்த்தைகளை
மனதில் வாங்கிக் கொண்டு, சிகரெட்டைப் பற்றவைக்காமல், சட்டைப் பையில்
போட்டபடி, வெளியே வந்தேன். அவள் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டபடி
நடக்க.. அது நிச்சயமாக தன் வீட்டிலிருந்து பேசமுடியாத யாருடனோ
பேசப்பட்டதாகத் தோன்றியது. ஒருவேளை அவள் தன் காதலனோடு
பேசியிருக்கக் கூடும், என்று தோன்றியது. இப்போது சாலையைக் கடப்பதற்காக
நாற்சந்தியில் சிகப்பு விளக்கைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
‘ஹலோ ரமேஷ்… ‘ என் இடப்புறமிருந்து பெண்குரல், ரித்துதான்
நின்றிருந்தாள்.
‘ஹாய் நீங்க எப்படி இங்க ? ‘ வழக்கம்போல ஒன்றும் தெரியாதமாதிரி உளறி
வைத்தேன்.
‘நான் தினந்தோரும் இந்த வழியாத்தான் போவேன். ‘
‘அப்படியா ?. ‘ ஒருவழியாக எனக்கு ஒரு வழி கிடைத்தாற்போல் தோன்றியது.
‘ரமேஷ்.. உங்க வீட்ல கம்ப்யூட்டர் இருக்கா ? ‘
‘யெஸ்.. ம்ம்ம்.. ‘
‘பரவால்ல என்னை ரித்துன்னே கூப்புடலாம். ‘
‘தேங்க் யூ! உங்க பேர் ரொம்ப வித்யாசமா இருக்கு. ‘
‘இது இந்த ஊர்ல ரொம்ப காமனான பெயர்தான். ரித்துன்னா ‘மெளஸம் ‘
அதாவது, தட்ப வெப்ப நிலைன்னு அர்த்தம். அதாவது கோடை, குளிர், மழை
இப்படி. ‘
‘ஓஹோ.. அப்படியும் இருக்கா ? இட் இஸ் ஸம்திங்க் கிரேட். ‘
மனதுக்குள் ‘என்ன எழவுடா இது ‘ ன்னு தோன்றினாலும் வெளியே சொல்ல
முடியுமா ?
புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்த ஒரு பேரூந்தில் அவள்
ஏறத்தயாராகியபோது,
‘என்ன இந்த வண்டில ஏற்றீங்க ?! ‘
‘நான் தினமும் இந்த வண்டிலதான் போவேன். நான் ஷாலிமார் பாக்லதான்
இருக்கேன். ‘
‘ரொம்ப நல்லதாப் போச்சி. அதுக்காகத்தானே கேட்டது. ‘
‘ஓ தட்ஸ் நைஸ்! பை. ‘
‘ஓ.கே பை. ‘
என்னுடைய இந்த பேச்சுகள், என் நண்பர்களிடம் அமளிதுமளிப்பட்டுக்
கொண்டிருந்தது. அவனவனுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்து போல்
ஆயிற்று. ஆளாளுக்கு என்னைப் பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
‘டேய் மாப்ள கூடிய சீக்கிரம் உனக்குத் தலப்பாக் கட்டுதாண்டா.. பாத்து
நடந்துக்க. ‘
எங்காவது ஒரு சர்தார்ஜீயைப் பார்த்துவிட்டால் போதும்.
‘யே மாப்ள ஒன் சொந்தக்காரன் வராம்பா பாத்து. ‘
எங்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் கூடியது. தினமும் அவளைப் பேரூந்தில்
ஏற்றி விடுவதும் தொடர்ந்தது. அவள் கையில் அணிந்திருந்த ஒரு அலங்கார
ஸ்டால் வளையத்தை அவள் ஞாபகமாகக் கேட்டு வாங்கி என் கையில் அணிந்து
கொண்டேன். நான் இருக்கும் நாட்களில் அவள் உற்சாகம் கூடுவது தெரிந்தது.
அவள் என்னைக் காதலிக்கிறாள், என்ற சந்தேகம் என்னுள் நாளுக்கு நாள்
வலுத்தது. இது இப்படியே போய்க் கொண்டிருந்தபோது ஒருநாளின் ஒரு
பொன்மாலைப் பொழுதில் என் மனதிலும் காதல் என்று சொல்லப்படும் அந்த
உணர்வானது அப்பிக் கொண்டது. என் மரபணுக்களில் ஒட்டிக் கொண்டிருந்த என்
மூதாதையரின் பழைய கனவுகள், கை கால் முளைத்து என் முன்னே வந்து நின்று
கதை பேச ஆரம்பித்தன. காலத்திற்கு ஒவ்வாதது என்று அறிவு, அலறி அலறிச்
சொன்னபோதும், புறா விடு தூது, அன்னம் விடு தூது, காற்று விடு தூது என என்
மரபணுக்கள் மேல் மரபுக் கவிதைகள் ஆடிய நர்த்தனத்தை, என்னால் தடுக்க
முடியாமல் போனது, என்பதுதான் உண்மை. அவளை நினைக்கும் போதெல்லாம்
பார்க்கத் தோன்றியது. பார்க்கும் போதெல்லாம் நினைப்பு கண்ணில்
திரைபோல் மூடியது. பூகம்பம், பெருவெள்ளம் பொன்றவை வந்து இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்ட நகரம் போலானது என் நிலை.
ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் சிகரெட் வீதம் நான்கு நாட்களுக்குக் குடித்துத்
தீர்த்திருந்தேன். வாய் கசந்தது. வியர்வையின் வழி நிக்கோடின் மணம்
வந்தது. காலைச் செஞ்சூரியன் பளாரென முகத்திலறைந்த அதே விநாடி,
விவேகானந்தர், ஸ்ரீ. ராமகிருஷ்ணர் மற்றும் உலகிலுள்ள அனைத்து குருமார்களும்
வானத்திலிருந்து என் தலைமேல் குதித்து என் நெற்றிப் பொட்டின் மேல் இறங்கி
டமாரமடித்தார்கள்.
‘ஏ முட்டாளே என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?!
ஆதலினால் காதல் செய்வீர், எல்லாம் சரி, முதலில் அவள் உன்னைக்
காதலிக்கிறாளா ? என்பதை முழுமையாகத் தெரிந்து கொள். ஆம்! என்றால் அது
உன் தலையெழுத்து, அதை நீ அனுபவித்துத் தான் தீர வேண்டும். இல்லையென்றால்
ரொம்ப நல்லதாகப் போகும் நீ பிழைத்துக் கொள்வாய். ஒழுங்காக உன்
வேலையைக் கவனி. உன் எதிர்காலத்தைக் கவனி.
புரியுதாஆஆஆ…. ‘
மறுபடியும் பறந்து வானத்தை நோக்கி கிளம்பினார்கள். போகிறவர்கள்
சும்மாப் போகக் கூடாது ? போகிற போக்கில் என்னை நோக்கிக் கையை
நீட்டி,
‘லூசாடா நீ…. ‘ என்று கத்தி விட்டுப் போனது தான் என்னை மகா
எரிச்சல் படுத்தியது.
சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். தவுர் கடையில் பரோட்டா
சாப்பிட்டு. நேரே அவள் முன்னால் போய் நின்றேன்.
‘என்ன ? ‘ என்றாள்.
‘உன்னைப் பார்க்காம இருக்க முடியல. ‘
‘இவ்வளவு தானே ? தெனமும் என்னை வந்து பாரு. ‘
‘கோர்ஸ் முடிஞ்ச பிறகு.. ‘
‘அப்பவும் நான் இங்கதான் வேலை செய்வேன். நீ தினமும் என்னை வந்து
பார்க்கலாம். ‘
‘யமகாதகி! பிடி கொடுக்காமல் பேசுகிறாளே ? இது சரிப்படாது. ‘
‘ம்ம்க்க்கூம்.. நான் உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். ‘
‘சரி வா.. ‘
ஜெனரேட்டர் அறைக்கு அழைத்துச் சென்றாள். என் முகம் பார்க்க அஞ்சியவளாக,
பால்கனியின் கைப்பிடிச் சுவரின் மேல் கைவைத்தவளாக, வெளியே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
‘இனிமேல் காத்திருக்க நேரமில்லை. ‘ பளிச்சென்று சொன்னேன்.
‘ஐ லவ் யூ. ‘
அவளிடமிருந்து ஆமென்றோ இல்லையென்றோ எந்த பதிலும் இல்லை. ஒரு
ம்ம்ம்.., ம்க்கூம்.. கூட இல்லை. நானும் விடத்தயாராக இல்லை.
‘இந்த சால்ஜாப்புகளுக்கெல்லாம் மயங்கினாயோ ? தொலைந்தாய்! ‘ என் உள்
மனம் என்னை
மிரட்டிக் கொண்டிருந்தது.
‘நீ என்னைக் காதலிக்கிறாயா ? இல்லையா ? ‘ தெளிவாகக் கேட்டுவிட்டேன்.
அவள் பதில் சொல்லவில்லை. அங்கிருந்து ஓடினாள். நான் துரத்தினேன்.
கடைசியில் கண்ணிப்
பயிற்சி அறையில் புகுந்து கொண்டாள். அவள் ஒரு கணிணி முன் அமர்ந்து
கொள்ள நான் அவளுக்கு அருகிலுள்ள கண்ணியின் முன் அமர்ந்து கொண்டேன்.
அவளிடம் மறுபடியும் கேட்டதில் வழக்கம் போலவே எந்த பதிலும் இல்லை.
அறையில் உள்ள மற்ற யாருக்கும் இந்த சங்கதிகள் தெரியக் கூடாது என்பதற்காக
ஏதோ கணிணியில் வேலையிருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தாள். நான்
மெதுவாக ஒரு ஜென்டில்மேல் அக்ரிமெண்ட்டைப் போட்டேன்,
‘இதப்பாரும்மா! எனக்கு இந்த மெளனம் சம்மதம் சமாச்சாரத்துல எல்லாம்
நம்பிக்கை இல்ல. என் வாழ்க்கைய பலிகடா ஆக்க முடியாது. உனக்கு இருபது
செகண்ட் டைம் தரேன். அதுக்குள்ள உனக்கு சம்மதமானா சம்மதம்னு சொல்லிடு.
இல்லன்னா உன் மெளனம் சம்மதமில்லன்னு எடுத்துக்கிட்டு எந்திரிச்சுப்
போய்டுவன். அதுக்கப்புறம் நான் உன்னத் தொந்தரவு செய்ய மாட்டேன். நாம
வழக்கம் போல நம்ம வேலயப் பார்க்கலாம். சரியா ? அதற்கு அவள் சரி என்று
தலையையும் அசைக்கவில்லை. ‘
நான் என் கணிணியின் டைமரை ஆன் செய்தேன் நொடிகளின் எண்ணிக்கையைக்
கவனிக்க ஆரம்பித்தேன். சரியாக இருபது விநாடிகள் முடிந்ததும் எழுந்தேன்.
மிகப் பணிவாய்க்
குனிந்து அவளுக்கு,
‘தேங்க் யூ! அண்ட் ஸாரி ?!.. ‘ சொல்லிவிட்டு வெளியே வந்தேன். விடுதலை
பெற்றதுபோல் உணர்ந்தேன்.
****
ஒழுங்காகப் படிப்பைக் கவனித்தேன். என் தொழில் நுட்பத்துக்குள் என்னாலியன்ற
சில
வித்தைகளைச் செய்து நண்பர்களின் ‘சபாஷ்!.. ‘ களைப் பெற்று வந்தேன். நான்
பயிலும்
நிறுவனத்தின் வேறொரு கிளையில் என்னைப் போன்ற ஒரு விஷுவல் தொழில்
நுட்ப
ஆசாமிக்கான ஒரு பணியிடம் காலியிருப்பதை அறிந்து, ஒரு கொளுத்தும்
மதியத்தில் அவசர அவசரமாக என் பயோடேட்டாவை அச்செடுத்துக் கொண்டு
போய் அவர்களைச் சந்தித்தேன். இன்ஸ்டென்ட் காபி போல், அவர்கள் உடனடி
இன்டெர்வியூ வைக்க, என் திறமையில் மகிழ்ந்ததில் உடனடியாக வேலையில்
சேர்ந்தேன். எடுத்த
எடுப்பிலேயே விட்டுப் போன அவர்கள் வேலைகள் சிலவற்றைக் கொடுத்துச்
செய்ய வைத்து
விட்டார்கள்.
கணிணித்துறையில் நாளொரு தொழில் நுட்பமும் பொழுதொரு மென்பொருளுமாக
வந்து கொண்டிருந்தது. தினமும் படிக்க வேண்டியிருந்தது. பல சமயங்களில்
வேலையை விடப் படிப்பு அதிகமாக இருந்தது. திடாரென ஒருநாள்! இதே
நிறுவனத்தின் ஒரு பிரிவான, முன்பு நான் படித்த பயிலகத்திலிருந்து, எனக்கு
அழைப்பு வந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். ஒரு
சிறப்பு கார்ப்பொரேட் ட்ரெயினிங் நடத்தப் போவதாகவும். அதற்கு
டி.எச்.டி.எம்.எல், எக்ஸ்.எம்.எல் மற்றும் பிஸ்டாக் போன்ற தொழில்
நுட்பங்களைப் பயிற்றுவிக்க வல்லுனர்கள் தேவைப் படுவதாகவும்
தெரிவித்திருந்தார்கள். நாளை முதல் ஒரு மாதத்திற்கு, என் அலுவலகத்தில்
நான் ரிப்போட் செய்ய வேண்டியதில்லை. நேராக அங்கே ரிப்போட் செய்தால்
போதும். எனக்கு ஏனோ! நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியில் படித்து,
அங்கேயே ஆசிரியராக
பணியில் சேர்ந்த மகாகவி பாரதியார் திடாரென்று நினைவுக்கு வந்தார்.
அடுத்த நாள், என் பைக்கை வட்டமாகச் சுழற்றி பார்க்கிங்கில் நிறுத்தினேன்.
படிகளின் வழி மேலேறி உள்ளே நுழைந்தபோது மேடம் ஹண்டா என்னை
ஆரவாரமாக வரவேற்றாள்.
‘என்ன மேன் கோர்ஸை முடிக்காமலேயே போயிட்டயே ?!.. ‘ என்று என்
தோளில் தட்டியவள் என்னை பதில் கூற விடாமல் அவளே தொடர்ந்தாள்.
‘சரி வேலை கெடச்ச பின்னாலே, சர்டிஃபிகெட்டை மட்டும் வெச்சு என்ன
பண்ணப்போற ?… ‘ நகர்ந்தாள்.
மெதுவாகச் சென்று ஸ்டாஃப் ரூமில் அமர்ந்தேன். டா கொண்டு வந்த அட்டண்டர்
என்னை அடையாளம் கண்டு கொண்டு,
‘நீங்க! நீங்க! ‘
‘ஆமாம். நான் இங்க படிச்சவன்தான். ‘ அவன் நட்பாகச் சிரித்தபடியே
நகர்ந்தான். போவதற்கு முன் எனக்குத் தெரிந்த பலர், வேலையை விட்டு விட்டு
வேறு வேலைக்கும், சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று விட்டதைச் சொல்ல
மறக்கவில்லை.
இரண்டு மணி நேரம் பயிற்சி வகுப்பு முடித்து அனைவரிடமும் தனித்தனியாகக்
கைகுலுக்கியபடி பயிற்சி அறைக்குள் அனுப்பினேன். அனைவரும் வெவ்வேறு
தொழில் நுட்பங்களில் பத்துப்
பதினைந்தாண்டு அனுபவம் உள்ளவர்கள். புதிய தொழில் நுட்பங்களைப்
பயில்வதற்காகச்
சிறப்புப் பயிற்சிக்காய் வந்தவர்கள்.
வெளியில் வந்து, இடப்புறம் திரும்பி, ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தேன்.
‘ஹாய் ரமேஷ்! ஹவ் ஆர் யூ ?.. ‘ சுனிதா சத்தமாக வரவேற்றாள்.
‘சுனிதா டிக்கு ‘ என்பது அவள் முழுப் பெயர். காஷ்மீரி பண்டிட் ஆன அவள் நான்
மாணவனாக இருக்கும் போதே ஆசிரியையாக இருந்தவள். அவள் கொண்டுவந்த
வீட்டு உணவை ஒரு வாய் ருசித்தபடியே, அட்டண்டரிடம் ஒரு மிக்ஸ்ட்
வெஜிடபிள் கர்ரியும், சில ரொட்டிகளும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தேன்.
சாப்பிட்டபடியே மெதுவாகப் பேச்சு தொடங்கியது. பழைய
விடயங்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். நான் மாணவனாக இருந்தபோது
நடந்தவை, அப்போது என் ஆசிரியர்களாக இருந்தவர்கள் எனப்
பேசிக் கொண்டிருந்த போது திடாரென! என் முகத்தைப் பார்த்து என் கண்களை
ஊடுறுவிக் கேட்டாள்.
‘நீ ரித்துவைப் ப்ரப்போஸ் செஞ்சியாமே ?.. ‘
நான் ஆமாம் என்னும்படியாக மெளனமாகத் தலையாட்டினேன்.
‘அவள் என்னிடம் சொன்னாள். ‘
‘வேறெதும் சொல்லவில்லையா ? ‘
‘வேறென்ன ?.. ‘
‘எனக்குள் பலமுறை அவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் தோன்றும்படி
நடந்துகொண்டது. நான் சில முறை ஜாடை மாடையாகக் கேட்டபோது சரியாகப்
பதில் கூறாமல் மழுப்பியது. ஏன் கடைசியில் நீ கூறியதுபோல் ப்ரப்போஸ்
செய்தபோது கூட, நீ விரும்புகிறாயா இல்லையா
எனப் பலமுறைக் கேட்டுக் கேட்டுக் கடைசியில் நானே எடுத்துக் கொண்ட
முடிவுதான் அவள்
விரும்பவில்லை என்பது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சக தோழிகளான
உங்களிடம் வந்து அதோ அவன் என்னைப் ப்ரப்போஸ் செய்தான், என்று பீற்றிக்
கொண்டதுதான் மிகக் கொடுமை. ‘
‘ஓ மை காட் இதில் இவ்வளவு நடந்திருக்கிறதா ? உனக்கு இன்னொரு விஷயம்
தெரியுமா ? அவள் ஏற்கெனவே ஒரு பையனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். ‘
‘ஓ! போதாக் குறைக்கு இது வேறயா ? இதை என்னிடம் அவள் எப்போதோ
சொல்லியிருக்கலாம் அதற்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்கள் அவளுக்கு
இருந்தன. சரி விடு. ‘ பேச்சு வாக்கில் கையைத் தூக்கியபோது என் இடது
கையிலிருந்த அந்த ஸ்டால் வளையம் அவள் கண்ணில் பட்டுவிட்டது. என் கையைப்
பிடித்துப் பார்த்தாள்.
‘இது ரித்துவுடையது போலே ?…. ‘
‘அதுவேதான். சரி விடு. வெளியே போனதும் முதல் வேலையாக இதைக்
கழற்றி விடப் போறேன். ‘
‘ரமேஷ்!.. ஒரு விஷயத்தப் புரிஞ்சிக்கோ. நாமெல்லாம்
பட்டிக்காட்டுக்காரங்க. இந்த நகரத்துப் பெண்கள்லாம் வேறமாதிரி. நாமதான்
ஜாக்கிரதையா நடந்துக்கணும். ‘
‘நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி. ஓகே யார்.. நான் வரேன். பை. ‘
‘ஓகே. பை. ஹேவ் எ நைஸ் டே. ‘
வண்டியைக் கிளப்பினேன். நகர சந்தடி தாண்டி ஆளரவமில்லாத ஒரு சாலையில்
ஒரு ஆலமரத்தடியில் சிறு சிவலிங்கம் தென்பட்டது. வண்டியை ஓரங்கட்டி, ஆஃப்
செய்துவிட்டு, அமைதியாக நெருங்கி, என் கையில் அணிந்திருந்த ஸ்டால்
வளையத்தைக் கழற்றி மூலையில் வைத்தேன். ஒரு கும்பிடு போட்டு திரும்பி
வந்து வண்டியைக் கிளப்பினேன். வழியெங்கும் என் மனதில் அடுத்த நாளுக்கான
திட்டங்கள் அப்பிக் கொள்ள பிறகு அந்த விடயத்தை மறந்தே போனேன்.
அடுத்தடுத்த நாட்களில் சுனிதாவும் நானும் நல்ல நண்பர்களானோம். அவள்
அடக்கமும், பணிவும், வெகுளித்தனமான பேச்சும், எனக்குப் பிடித்திருந்தது. என்
ஒளிவு மறைவில்லாத தன்மையும், மனதில் பட்டதை முகத்துக்கு நேராகச்
சொல்லும் பழக்கமும் அவளுக்குப் பிடித்திருந்தது. எனக்கு ஷாப்பிங் விஷயங்களில்
அவ்வளவு பழக்கமில்லாததால் என்னைக் கடைகளுக்குக் கூட்டிச் சென்று
அறிமுகப்படுத்தி நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். அவள்
வீட்டு விசேடங்களுக்கு அழைத்துச் சென்றாள். அவள் குடும்பத்தாருடன் எனக்கு நல்ல
நட்பு ஏற்பட்டது. நானும், அவளும், உடன் பணிபுரியும் நண்பன் சஞ்சீவும் சேர்ந்து
ஒரு சிறிய மென்பொருள் நிறுவனம் ஆரம்பிதற்கான திட்டங்களையும் தீட்டி
வந்தோம்.
இந்த நிலையில் ஒருநாள் மாலை, சுனிதா டிக்குவின் மேல் ஒரு நல்ல
அபிப்ராயமாக, நல்ல நட்பாக இருந்த அந்த உணர்வு திடாரெனக் காதலாக
மாறியது. அவள் மீது இன்னும் நெருக்கத்தோடு, பாசமாக, அன்பாக,
மரியாதையாக அந்த உணர்வு தோன்றியது. அன்றிரவே தீர்மானித்துக்
கொண்டேன்.
‘நாளை அவளைச் சந்திக்கும்போது ஜாடை மாடையாக இது குறித்துக் கேட்க
வேண்டும். ‘
வழக்கம்போல அடுத்த நாள் காலை, பணிக்காக, என் பைக்கில் விரைந்து
கொண்டிருந்தேன்.
திடாரென என் மார்பில் குறுகுறுப்பு ஏற்ப்பட்டது. செல்ஃபோன் வைப்ரேட்டர் தான்
அது. வண்டியை ஓரங்கட்டினேன். எதிர் முனையில் சஞ்சீவ்,
‘யார் குஷி கி பாத் ஹை!.. ‘ ‘மிக சந்தோஷமான விஷயம். ‘
‘அப்படியா ?! சொல்லு.. ‘
‘டிக்குக்கு ஷாதி ஹோனேவாலி ஹை… ‘ ‘சுனிதாவுக்குத் திருமணம்
நிச்சயமாகிவிட்டது. ‘
நான் மிடறு விழுங்கினேன். மறு வினாடி வெகு வேகமாக சுதாரித்துக்
கொண்டேன்.
‘இந்த வினாடி சமாளித்துக் கொள்வோம். பிறகு பார்த்துக்கொள்வோம் ‘ என
என் முதிர்ந்த
அறிவு முழங்கியது. உற்சாகமாக உள்ளவனைப்போல் வேக வேகமாகப்
பேசினேன்.
‘வாவ்! எக்ஸலன்ட்! அவகிட்ட நாம ஒரு பெரிய பார்ட்டி வாங்காம
விடக்கூடாது. என்னாங்குற ?.. ‘
‘பின்ன! சும்மா வுட்டுறுவமா ? நம்ம டிக்குவாச்சே ? நீ சீக்கிரமா வா.
நாமெல்லோரும் சேர்ந்து அவள கலாய்ப்போம். ‘
ஃபஸ்ட் கியரில் மெதுவே வண்டியை நகர்த்தினேன். சில வினாடிகளில் ஒரு
பெரிய சிவன் கோவில் வந்தது. வண்டியை நிறுத்திப் பூட்டி உள்ளே
நுழைந்தேன். ஒரு சிறுவன் ஓங்கி! ஓங்கி! மணியடித்துக் கொண்டிருந்தான்.
ஸ்வாமி தரிசனம் செய்தபோது பூசாரி நெற்றியில் நீளமான பொட்டு
வைத்துவிட்டார். வெளியே வந்து வண்டியைக் கிளப்பினேன். இன்னும் சிறுவன்
மணியடித்துக் கொண்டுதான் இருந்தான். இன்னும் என் அலுவலகம் சென்று வேலையை
ஆரம்பிக்க
பதினைந்து நிமிடம்தான் மிச்சமிருந்தது. யாரிடமும் சாரி கேட்க விருப்பம்
இல்லாதவனாக வண்டியை வேகமாகக் கிளப்பினேன்.
‘வ்ர்ர்ரூரூம்ம்ம்…. ‘
====
ranganath73@yahoo.co.uk
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மின்சாரப்பூக்கள்…
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- காசாம்பு
- அந்த நாள்
- அமைதியுறுவாய்
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- நனையத்துணியும் பூனைகள்
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
- தவமாய் தவமிருந்து
- கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்
- பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை
- கடிதம்
- ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- ஒரு திருத்தம்