அப்பா
எஸ்ஸார்சி
அவனுக்கு எல்லோரும் பரீட்சை வைத்திருக்கிறார்கள். அவனுக்கு எங்கே தெரிந்தது விஷயம். யார் சொல்வதைத்தான் கேட்கிறான் அவன் பார்த்துவிடுவோம் என்பதே அது.
அவனுடைய அம்மா ஆரம்பித்தாள். தம்பி, தம்பி என்பது அவனைத்தான்.
உனக்கு கல்யாணம் ஆயி வருஷம் ஒண்ணுக்கு மேல ஆச்சி. உன்ன செதம்பரம் காலேஜில படிக்கவச்ச உன் பெரியம்மா நெனப்பு இருக்குதா இல்லயான்னு தெரியல்ல
போயி நீயும் பாக்கருது இல்ல கடுதாசி போடுறது இல்ல ஏம்பா என்னா ஆச்சி உனக்கு
சொல்லுடா இதெல்லாம் நல்லதுக்குத்தானா ? கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.
&nbs p; மனைவி வருவதற்குள்ளாக பேசிமுடித்தாக வேண்டுமே என்பதில் அவன் தாய் குறியாக இருந்தாள்.
அவ வர்ர நேரம்ல
இல்லப்பா அவ வர இன்னும் நேரம் ஆவும்
எப்படி சொல்றம்மா. அவன் அச்சத்தோடு கேட்டான்.
எல்லாம் ஏற்பாடுதான். கூட போற எதிர் வீட்டுப்பொண்ணுகிட்ட சொல்லித்தான் அனுப்பிருக்கேன்
மணிக்கூண்டு சங்கு புடிச்சப்பறம் தான் அவங்க வருவாங்க நீ விஷயத்துக்கு வா, இப்ப எல்லாம் ரெம்ப நடிக்கிறயாடா தம்பி,
என்னம்மா என்ன புரிஞ்க மாட்டங்கறே. நா உன் புள்ளத்தானே
யாரு இல்லங்கரா அதனாலதான் கேக்குறன். பிரதோஷம் முடிஞ்சி அவ கோவில்லேந்து வர்ரத்துகுள்ள சொல்லிடு நீனும் நானும் என் அக்காவை பாக்கப் போறம் தெரிதா
சரிம்மா போறம் ? யோசித்தான் என்றாலும் வாக்கு கொடுத்து விட்டான்.
நினைத்துப்பார்க்கிறான். இதெல்லாம் என்ன விஷயமோ கொஞ்சம் கூட புரியவேமாட்டேன் என்கிறது அவனுக்கு. திருவள்ளுவரும் திருவிகவும்,அந்த முவவும்கூட மறைந்துபோய் விட்டார்கள் என்பதால் தப்பித்துக்கொண்டுவிட்டார்கள் இல்லாவிட்டால் அவ்வளவுதான் அனிச்சம் மலர் ஆகா ஒகோ என்றீர்களே கொஞ்சம் வந்து பாருங்களேன் என்று தரதரவென இழுத்து வந்து விடலாம். வாசுகிக்கும் ஜென்னிமார்க்சுக்கும் அந்த செல்லாம்மாவிற்கும் எங்கே போவது அவன்.
கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய மனைவி வீட்டின் உள்ளாக வந்துகொண்டிருந்தாள்.
எதிர் வீட்டுப்பெண் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
ஆயா அதிகார நந்திக்கு இன்னைக்கு வெள்ளிகவசம் சாத்தி இருக்கு. நீங்க கூட வந்திருக்கலாம்.
அப்பிடியா சேதி தெரியாதும்மா எனக்கு நீ சொல்லலயே
இப்பகூடம் நீங்க போய்வருலாம் ஆயா
சரி பாப்பா நானு போயிதான் வந்துட்டுமா
கெளம்புங்க ஆயா
நமக்கு எண்ணக்கி நேரம் ஒழியுது. இதெல்லாம் பாத்தா ஆவுமா. நானு போயி வந்துடறேன்
ஒருக்கால் இது மருமகளின் யோசனையோ. பெரிசை வீட்டை விட்டு கிளப்பி ஏதும் தோது மாது செய்கிறார்களோ. எப்பிடிப்போனால் தான் என்ன என்று
அம்மா கிளம்பினாள்.
அவ்வளவுதான் தாமதம் மனைவியே ஆரம்பித்தாள்,
என்னசொன்னாங்க ஒண்ணும்இல்ல
சொல்லுங்க தெரியாமலாபொயிடும்
அம்மாவொட அக்காவ போயி பாத்து வரோணும்னாங்க
அப்பிடி போடுன்னே என்னடா எலி எட்டு மொழம் வெட்டி கட்டுதேன்னு பாத்தேன்.
சும்மா எதுக்கு பேசுற. அவங்க சொல்லுறது சரிதான்
‘ என்னா சரின்ற. ‘ சடக்கென்று ஒருமையில். மரியாதை குைறைவதின் தொடக்கம் இது. அவனுக்கு இப்போதுதான் இந்த அரோகண அவரோகண சம்பாஷணைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத்தொடங்கி இருக்கிறது.
&n bsp; அப்ப நாம ஊருக்கு போவுறம்
போனது மோசம் என்று நினைத்தான். இவளும் வந்துவிடுவாளோ என்று
ஐயம் எழுந்தது அவனுக்கு. அம்மா அந்தப்பிடியும் கொடுக்கலையே. விபரீதம் தான் விஷயம்.
‘ நீ வர்ரதுன்னா அம்மாகிட்ட கேக்குணும் ‘
எதுக்கு கேக்குணும் நீ சொல்லு நா வருணுமா வேண்டாமா
அம்மாதான் சொல்லிச்சி நாம ரெண்டு பேரும் போறம்னு
அதான் கேட்டேன் யாரு ரெண்டு பேர்
நானும் அம்மாவும்தான்
அதயும் பாத்துடுவும் நீனும் ஒன் ஆத்தாளும் ஊரு கோலம் போவுறதை
மரியாதை கடகட என பரமபத சோபன படத்தில் வரும் ஆதிசேடனாய் இறங்கிக்கொண்டது.
அம்மாவும், அவனும் சென்னைக்குப்புறப்பட்டார்கள். அம்மா தான் வென்றுவிட்டதாக நினைத்துக்கொண்டாள். தன் அக்காவுடனும்,அவர் கணவருடனும் அம்மா எதோ தொண தொண எனப்பேசிகொண்டே இருந்தாள். ஆனால் அம்மாவின் அழகு முகம் வாடிப்போய்தான் இருந்தது. அம்மாவின் அக்கா ஏதும் சொல்லி இருக்கலாம் அவன் ஊகித்தான்.
ஏன் அம்மா ஒரு மாத ிரியாய் இருக்கிறாய்
‘அதெல்லாம் ஒன்றும் இல்லை ‘ என சமாளித்துக்கொண்டாள். அவன் இதில் எதோ ஒரு சமாசாரம் ஒளிந்தும் இருக்கக்கூடும் என நினைத்தான்.
பெரியம்மாதான் அவனைக்கேட்டாள்
‘ ஏம்பா உன் வீட்டுக்காரியெ கூட்டினு வரலாம் இல்லயா. சின்ன பொண்ணுதானே அவளுக்கும் கூட வரணும்னு ஆசை இருக்கும் தானே ‘
அவன் தான் பதில் சொன்னான். ‘மூணு பேரா எதுக்கு வர்ரதுன்னுதான் இப்பிடி ‘
‘அழகுதான் போடா ‘
சொல்லிய பெரியஅம்மா அத்தோடு அதை நிறுத்திக்கொன்டாள். ஒரு வேளைக்குமேல் சென்னையில் தங்கவும் இல்லை புறப்பட்டுவிட்டார்கள்.
வண்டி பிடிக்க மாம்பலம் ரெயில் அடிக்குத்தான் வரவேண்டும் புறப்பட்ட இருவரும் ரெங்கனாதன் தெரு வழியே நடந்துகொண்டிருந்தார்கள். தரையில் பரப்பி வைத்திருந்த தஞ்சாவூர் குட்டிபொம்மைகளை பார்த்து நின்றான் அவன். அழகான ஒரு பொம்மையை கையில் எடுத்துக்கொண்டான்.
இத ஒண்ணு வாங்கிகுவோம் அம்மா
ஏண்டா இது
நல்லாத்தானே அம்மா இருக்கு
பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கினான்.
ஒன்ன சொல்லி குற்றம் இல்லே. நீ என்னடா பண்ணுவே.
அம்மா லேசாக சிரித்து முடித்தாள். அவனுக்கு அம்மாவின் சிரிப்பு என்னமோ செய்தது.
ஊர் வந்து சேர்ந்த இருவரும் தெருவில் ஒருவர்பின் ஒருவராய் பைய நடந்து கொண்டிருந்தனர். அவனுக்கு இந்தப்பயணம் வெட்டிப்பயணமாகவே தெரிந்தது. அம்மாதான் என்ன சாதித்துவிட்டாள்
என்று நினைத்துக்கொண்டான். ‘நான் சொல்ல என் மகன் கேட்டு நடந்து கொள்கிறான் பார் ‘ அவனின் தாய் மகிழ்ச்சி மேலிடத்தான் நடந்கொண்டிருந்தாள்.
பயணம் எப்பிடி ஆயா ஊர்ல எல்லாரும் செளக்கியமா
எதிர் வீட்டுப்பெண்தான் கேட்டாள்.
எப்பிடி இருக்கே பாப்பா. உன் செனேகிதி எப்பிடி இருக்குது
அம்மா பதிலுக்கு கேட்டு முடித்தாள்.
ஊருக்குப்போனாலும் உன் மருமவ நெனப்பு செமந்து கிட்டுத்தான் போவபோல ஆயா ?
அவனுடைய தாய் புன்னகை செய்தாள்.பயணம் முடித்துத்திரும்பிய அன்றிலிருந்து அவன் புதிய தரிசனங்களுக்குத்தயாரானான்.
வீட்டின் மையமாக உள்ள அலமாரியின் மேல்தட்டில் அந்த தஞ்சாவூர் பொம்மை புதிய விஷயமாய்க் கொலுக்கொண்டது.
அவன் மனைவி சண்டைகளை புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றாள்.
நா குத்து க்கல்லாட்டம் இருப்பானே உன் ஆத்தாளொட நீ சோடி போட்டிக்கிட்டு
போவானே. இனி உன் கத என்கிட்ட ஆவாது. அதுக்கு நீ வேற ஆள பாத்துக்கலாம்.
நல்லா இருக்குது சமாசாரம். நாலு பேர் கேட்டா கொழகொழன்னு உன் மொகறைல காரித்துப்பமாட்டாங்க ?
அம்மா அங்கு நடப்பதைக்கண்ணுற்றாள். அதிர்ந்துதான் போனாள்.
எம் மின்னாடி சண்டை வேணாம். கழுதவுளா நா போயி அந்த கெழவன் கிட்டபெசிக்கிறேன் கொற கதயை ? என்று தன் துனிமணிகளை தேடி ஒரு பையில் நுழைத்துக்கொண்டாள்.
வேணாம்மா. எல்லாம் சரிப்பண்ணிக்கிலாம். உடும்மா
எத சரிப்பண்ணறதுப்பா என் சாமி சிறுக்கிக்கு ராங்கி தலைக்கில்ல ஏறி கெடக்கு ?
‘அது உனக்கா இல்ல எனக்கா ‘ குறுக்கே பாய்ந்தாள் மனைவி.
அவன் கண்களை மூடிக்கொண்டான்.
அழுதுக்கொண்டே அன்று கிளம்பியதுதான் அம்மா.அவனும்போகட்டுமே என்றுதான் சும்மாஇருந்தான். சரியோ தப்போ மனத்தைக்கல் ஆக்கிக்கொண்டான். எதிர் வீட்டுப்பெண் அவ்வப்போது வந்து போனாள். அம்மா ஊருக்குப்போய்விட்டால் எத்தனை அழகாய் அமைதியாய் குடும்பம் மாறி விடுகிறது. அந்த தேவ ரகசியங்கள் தாம் எத்தனை புனிதமானவை. மனம் கள்ளத்தனம் பேசியது.
ஊரிலிருந்து அப்பா கடிதம் எழுதி இருந்தார். எப்போதேனும் எழுது வார்தான் அப்பா. ஆசையோடு கடிதம் பிரித்தான். ஊரில் மழை எப்படி,வயல் பயிர் எப்படி, எந்தக்கோவிலில்என்ன உற்சவம் புதியதாய் இறந்தவர்களின் பட்டியலில் யார் யார் சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் விடாமல் கடித்தில் வழக்கமாய் எழுதி முடிப்பார்.
அன்பு தம்பி (அப்பாவுக்கும் தம்பிதான் நான்)
ஊர்திரும்பிய உன் அம்மா செய்திகள் சில சொல்லி என்னிடம்அழுதாள். நானும் உனக்கு எழுத வேண்டாமென்று நினைத்தது உண்டு. ஆனாலும் பாழும் மனம் கேட்டால்தானே. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதைதான். உன் அம்மா எனக்கும் மனைவி. மணமான புதிதில் நானும் நீ படுவது சிலதுகள் பட்டிருக்கிறேன். உன் அப்பாத்தாவைத்தான் நீ பார்த்தது இல்லையே. ஆக புத்தியாய் இரு. நீ படித்தவன்.
ஆனாலும் படிப்புக்கும் வாழ்க்கையில் அந்த சிலதுகளுக்கும் தொடர்பு கிடையாது என்பதை அனுபவித்துத்தான் அறிய வேண்டும். புத்தியை மாத்திரம் இறவல் கொடுக்காதிரு.
இப்படிக்கு பிரியமான உன் தந்தை.
கடித்தை இரண்டு முறை படித்துக்கொண்டான். அம்மாவும் இப்படித்தான் அப்பாவுக்கு ஏதும் பிரச்சனை தந்திருக்கலாம். அதையே கடித்தில் சொல்லாமல் சொல்கிறார் அப்பா என சரியாகவே நினைத்தான். அப்படி இருக்க சாத்யமே இல்லை என ஆழ்மனம் புது
சண்டைக்கு வந்தது. அப்பாவின் கடிதத்தை சுக்கல் சுக்கலாய் கிழித்து எறிந்தான். இது ஏதும் மனைவியின் கண்களில் பட்டுவிட்டால் ஆபத்து .ஆக செய்தது சரி என்று மனதிற்குள் சொல்லிக்கொன்டான்.
பொங்கல் சமீபிக்க அவளோடு ஊருக்குக்கிளம்பினான். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ராகு கேதுக்கள் விட்டால்தானே. அம்மாவும் தானும் தனித்து இருக்கும் சமயம்பார்த்து ஆரம்பித்தான்.
அம்மா நீயும் கல்யாணமான புதுசுல அப்பாவுக்கு ஏதும் பிரச்சினை கொடுத்தியா
என்னடா உளர்ர என்ன ஆச்சி
இல்லை கேட்டேன்
யார்ரா சொன்னா. கேள்வியே ஒரு தினுசா இருக்கு. பொண்டாட்டி வந்துட்டால்ல
அப்பா ஒரு கடுதாசி போட்டாரு.
என்ன எதாவது உளறி வச்சிருப்பாரு வேறென்ன
இல்ல அத வுடும்மா சும்மா கேட்டேன்
அவ்வளவுதான் பேசினார்கள். அதற்குள்ளாக யார் யாரோ வந்தனர். பொங்கல் முடிந்து அவனும் ஊர் திரும்பினான்.
ஒரு வாரம் முழுசாக முடிந்து போயிற்று. தன் அப்பாவிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வரும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ஆனால் வந்ததுதான் உண்மை. இக்கடிதமும் அலுவலக விலாசத்திற்கே.. ஒருமனிதனுக்கே பல முகங்களும் பல விலாசங்களும் தேவையாய்தான் இருக்கிறது. இல்லை இல்லை என்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.
கடித்தைப்பிரித்தான்.
அன்பு தம்பி
பொங்கலுக்கு வந்த சமயம் நீ அம்மாவிடம் என்ன பேசினாயோ. போதுமப்பா போதும்
இவ்வளவு வெவரம் இல்லாது நீ இருப்பாய் என்று நான் எண்ணியது இல்லை. ஒரு விதத்தில் உன்னைப்பார்த்தால் எனக்கு பரிதாபமாகவே இருக்கிறது. கஷ்டம்தான். இப்படிக்கு உன் பிரியமான தந்தை. அந்தக் கடித்தில் தன் அப்பாவின் முகம் தெரிவதாய் உணர கிழிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். கிழித்து எறிந்து விடுவது விடுதலை. கிழிக்காமல் விட்டால்தானே அவன்.
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3
- அப்பா
- தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ?
- பிறவழிப்பாதைகள் – குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ?
- எடின்பரோ குறிப்புகள் – 5
- விடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்
- புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்
- ஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.
- இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை
- காசிப் பாட்டி
- பந்தயக் குதிரை
- சுயசரிதை
- புத்தாண்டில் நான் வேண்டுகிறேன்
- ஒன்பதாம் திசை
- குலக்கல்வி சில சிந்தனைகள்
- புத்தாண்டும் எனிஇந்தியனும்
- ஏப்பம் விட்டுப் பார்த்தபோது
- எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்
- உன்னதம்
- பேசாநாடகம் பிறந்ததுவே
- ஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005
- தமிழின் முதல் இசை நாடகம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.
- ‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்
- தெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1
- கடிதம்