மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3

This entry is part of 28 in the series 20060106_Issue

ஜோதிர்லதா கிரிஜா


வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து ‘இளித்த’- அவளுக்கு அப்படித்தான் தோன்றியது- வள்ளியைக் காவேரி ஓர் எரிச்சலுடன நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப் போய்விட்டிருந்தது.

“என்ன, வள்ளி ? எதுக்கு வந்தே ?” என்ற காவேரியின் கேள்விக்கு, “வேற எதுக்கும்மா நான் வருவேன் ? அஞ்சு ரூவா குடுத்தீங்கன்னா சவுகரியமா யிருக்கும், எம் மவளுக்கு மேலுக்குச் சொகமில்லே. அதுக்குத்தான் வத்தலப் பாளையத்துலேருந்து இம்மாந் தொலவு வந்தேன்.”

பத்மநாபனும் காவேரியும் உள்ளே சென்று குசுகுசுவென்று சற்று நேரம் பேசினார்கள். பிறகு, பத்மநாபன் தமது இடுப்பிலிருந்து ஓர் ஐந்து ரூபாய்த் தாளை எடுத்ததைக் கவனித்த துர்க்கா வியப்படைந்தாள். ‘யார் இந்த வள்ளி ? எதுக்காக அடிக்கடி வந்து அப்பாட்டேருந்து பணம் வாங்கிண்டு போறா ?’

“அம்மா! தாயீ ! எங்க வீட்டுக்கு ஒரு நாளு வாறியா ?” என்று வள்ளி துர்க்காவைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கேட்டாள்.

வள்ளி துர்க்காவிடம் ஏதோ பேசுவதைக் கவனித்த காவேரி, “ஏய்! துர்க்கா! வாடி இங்கே.. ..” என்று மிரட்டாத குறையாக அழைத்தாள்.

“உங்காத்துக்கெல்லாம் வந்தா எங்காத்துல திட்டுவா!” என்று சுருக்கமாய்ப் பதில் சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடினாள். கூடத்துக்கு வந்த அவள் ஊஞ்சலில் உட்கார்ந்த போது காவேரியும் பத்மநாபனும் இரேழியை நோக்கி நடந்தனர்.

காவேரி நீட்டிய பணத்தைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்ட வள்ளி, “நீங்க நல்லாருக்கணும், தாயீ ! யாரோ செஞ்ச தப்புக்கு நீங்க இப்பிடிப் பலியாடு ஆனீங்க! எனக்குப் புரியுதும்மா. ஆனா எனக்கு உங்கள விட்டா வேற யாரும்மா இருக்காங்க ?.. .. உடம்பும் மோசமாயிருச்சு .. அப்புறமேப்பட்டு, இன்னொரு வெசயஞ்சாமி!” என்றவாறு பத்மநாபனை நோக்கிய பின் சற்றே தயக்கம் காட்டினாள்.

“சொல்லு.”

“போன வெசாளக் கெளமையன்னிக்கு எம்மவ வயசுக்கு வந்திரிச்சு.. .. அதுக்கு ஒரு நல்ல துணி கூட இல்லே.. .. கிளிசச் சேலை ஏதாச்சும் குடுத்தீங்கன்னா, அது மானமாப் போத்திக்கும். நான் பெத்த மவ வயசுக்கு வந்துட்ட சந்தோசத்தைக் கொண்டாட முடியாத பாவியா இருக்குறேன்!” என்ற வள்ளி அழத் தொடங்கினாள்.

“இத பாரு, வள்ளி. இன்னைக்கு நல்ல நாளு. நல்ல நாளும் அதுவுமா ஆத்து வாசல்ல நின்னுண்டு அழாதே. இரு, வறேன்,” என்ற காவேரி உள்ளெ சென்றாள்.

பத்மநாபன் அவளைப் பின்தொடர்ந்தார்.“` டிரங்குப் பெட்டியிலிருந்து ஒரு பழைய புடைவையை எடுத்துக்கொண்டு காவேரி வள்ளியிடம் போனாள்.

“இந்தா. பதினெட்டு மொழப் பொடவை. ரெண்டாக் கிழிச்சு மேலாக்குப் போட்டுக்கலாம். கரையில ஒரே ஒரு இடத்துல சின்னக் கிழிசல் இருக்கு. தெச்சுண்டுடு. அடிக்கடி வந்து எங்க உசிரை வாங்காதேடி, வள்ளி!”

“ரொம்ப சந்தோசந் தாயீ. .. .. எம்மவளுக்கு எப்பிடிக் கலியாணத்தை முடிப்பேனோ தெரியல்ல.”

“நோக்கென்னடி, வள்ளி ? எவனாவது பரிசம் போட்டுட்டு உம் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான். எங்களாட்டமாவா, ஆயிரக் கணக்குல வரதட்சிணை கேட்டுப் பிடுங்குறதுக்கு ? உம் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சியமானதும் வந்து சொல்லு. அய்யா பணம் தருவாரு.”

“சரிங்கம்மா. சாமிகிட்ட சொல்லிருங்க. பாப்பா! நான் போயாரேம்மா.”- வள்ளி உள்ளே தலை திருப்பிக் குரல் கொடுத்தாள்.

“சரி. போயிட்டு வாங்கோ.”

உள்ளே ஊஞ்சலில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மநாபன் தாம் முதுகு சொறிந்துகொண்டிருந்த விசிறிக் காம்பால் துர்க்காவின் தலையில் இலேசாக ஒரு போடு போட்டுவிட்டு, மிகச் சன்னமான குரலில், “அவாளுக்கெல்லாம் என்னடி மரியாதை ? அசட்டுக் கழுதை! வாங்கோவாம், வாங்கோ!” என்று அழகு காட்டினார்.

“நீங்கதானேப்பா நேத்திக்குச் சொன்னேள், பெரியவாளை யெல்லாம் வா, போன்னு பேசப்படாதுன்னு ?”

‘சொன்னேந்தான். ஆனா, அதுக்குன்னு தராதரம் இல்லியா ? குப்பை அள்ற சுப்பம்மா, வாசல் தெளிக்கிற வள்ளியம்மா இவாளையெல்லாமா வாங்கோ, போங்கோன்னு சொல்றது ? மண்டூகமே! ”

துர்க்காவுக்கு ஏதோ புரிந்தது மாதிரியும் இருந்தது, எதுவுமே புரியாதது போலவும் இருந்தது. எனினும் மேற்கொண்டு அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நாளாகவே அவளுக்கு வள்ளியைப் பற்றி அறியும் அவா இருந்து வந்தது.

“அப்பா!”

“என்ன ?” – அந்த ‘என்ன’ வின் தோரணையே அவளது வாயை அடைத்துவிட்டது.

“என்னன்னு கேட்டேனோன்னோ ?”

“ஒண்ணுமில்லேப்பா.”

துர்க்கா கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டது வள்ளியைப் பற்றியது என்பதை அவரால் ஊகிக்க முடிந்ததால், அதை விரும்பாத நிலையில், அவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேட்கவில்லை.

வள்ளியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த காவேரி, “என்னன்னா! இவளோட படுத்தல் வரவர ஜாஸ்தி யாயிண்டே இருக்கே ? இதுக்கு ஏதானும் ஒரு வழி பண்ணுங்கோ. இவளோட வாயை எத்தனை நாளுக்கு நாம அடைச்சு வைக்க முடியும் ? ஏற்கெனவே என்னத்தையானும் சொல்லிண்டு அலையறாளோ என்னமோ ?” என்றாள்.

“அதை யாருடி கண்டது ? அவ வாய்க்கு நாம பூட்டுப் போட முடியுமா என்ன ?”

“அது சரி. .. பொண்ணு பெரியவளாயிட்டது இவளுக்கு சந்தோஷ சமாச்சாரமாமே ? கஷ்டம், கஷ்டம்! பொம்மனாட்டிகளுக்குள்ள சாபக்கேடு இல்லியோ அது ? பொண்ணு பெரியவளாயிட்டா தாயார்க்காரி வயித்துல நெருப்பைன்னா கட்டிக்கணும் ? இவளுக்கு சந்தோஷமாமே, சந்தோஷம்! அழகுதான்!”

“காலம் காலமா அப்படித்தானே சொல்லிண்டிருக்கோம் ? அவ மட்டும் வேற மாதிரியவா சொல்லுவா ? கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டு வந்தான்னா கையில கொஞ்சம் பணம் குடுப்போம்.”

“நானும் சொன்னேன். என்ன இருந்தாலும் பாவம்தான். இப்பிடி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிருக்க வேண்டாம். அவளைச் சொல்லியும் குத்தமில்லே. நம்மாத்து மனுஷாளுக்கும் புத்தி இல்லே!”- இவ்வாறு சொன்னபடியே காவேரி விருட்டென்று அங்கிருந்து அகன்றாள்.

இதை யெல்லாம் கவனியாதவள் போல் கவனித்துக்கொண்டிருந்த துர்க்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் ஓரத்து விழிகளால் பத்மநாபனை ஏறிட்டாள்.அவர் முகம் சிறுத்துவிட்டிருந்தது. துர்க்காவின் மனத்தில் வியப்பு ஏற்பட்டது. அம்மா அப்பவைக் கடிந்து அவள் கேட்டதே இல்லை. அப்படி அவள் கடிந்தாலும், அவர் அதற்குப் பதிலடி தராமல் சும்மா இருந்தும் அவள் பார்த்ததில்லை!

வள்ளி வருகிற போதுகளில் மட்டுந்தான் அம்மாவின் கை ஓங்கி இருப்பதாகவும் அப்பா கொஞ்சம் குரல் தாழப் பேசுவதாகவும் கூட அவள் நினைத்தாள். வள்ளிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவும் கூட அவளுக்குத் தோன்றியது. பதினொரு வயதுதான் என்றாலும், வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்த துர்க்கா, ‘அதை எப்படிக் கண்டு பிடிக்கிறது ?’ என்றும் கூட அவ்வப்போது யோசித்ததுண்டு. ‘அம்மாவையே கேட்டுப் பார்த்துவிட்டால்தான் என்ன ?’ என்று இன்று நினைத்தாள். வள்ளி வரும் போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் குசுகுசுவென்று பேசுவது நினைவுக்கு வந்ததும், தன் கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்காது என்று அவளுக்கு உள்ளுணர்வாய்ப் பட்டாலும், இன்று தலை வெடிக்கும் போல் ஆனதால் அப்படி ஒரு முடிவுக்கு அவள் வந்தாள்.

அடக்க மாட்டாத ஆவலுடன் ஊஞ்சலிலிருந்து இறங்கிய அவள் சமையற்கட்டை யடைந்து, “அம்மா! சாம்பாருக்கு அரைச்சுத் தரட்டுமா, அம்மா ?” என்றாள் கரிசனமாக.

“வா, வா. பாவாடையை நன்னாத் தூக்கிச் சொருகிண்டு பாங்கப் பணிய அம்மிக்கு முன்னால உக்காரு.”

துர்க்கா அப்படியே செய்தாள். பிறகு குழவியை உருட்டி உருட்டி அம்மி மீதிருந்தவற்றை அரைக்கலானாள்.

“வெறுமன உருட்டினா மசியாதுடி, மக்கு! நன்னா ஆழுத்தி அழுத்தி உருட்டணும். கைக்கு வலிக்குமோ, குழவிக்கு வலிக்குமோங்கிறாப்ல பந்து உருட்றாப்ல உருட்டாதே.. என்ன ? புரிஞ்சுதா ?”

“சரிம்மா.”

“ஆங்! அப்பிடித்தான். இன்னும் ரெண்டே மாசத்துல நீ பத்துப் பேருக்குச் சமையல் பண்ற அளவுக்குக் கத்துண்டுடணும்.”

“சரிம்மா, .. அம்மா!”

“என்னடி ?”

“அந்த வள்ளி எதுக்கும்மா சும்மாச் சும்மா நம்மகிட்டேருந்து காசு வாங்கிண்டு போறா ?”

“ரொம்ப நாளுக்கு முந்தி -அதாவது உங்க பாட்டி காலத்துல- அவ இந்தாத்துல வேலை செஞ்சவடி. அந்த இதுல வந்து தொல்லை பண்றா.”

“பாட்டி காலத்துல வேலை செஞ்சதுக்கு இப்ப எதுக்கும்மா நாம காசு குடுக்கணும் ?”

“அந்த அறிவு உங்கப்பாக்குன்னாடி இருக்கணும் ? போய் உங்கப்பா கிட்ட கேளு.”

இவ்வாறு சொன்ன மறு கணமே, “நான் சொன்னேனேன்னு உங்கப்பாட்ட போய்க் கேட்டுக் கீட்டு வைக்காதே. உன் முதுகப் பொளந்துடுவா. சரி, சரி. அம்மியைப் பாத்து அரை. ஜலம் வழியறது பாரு.”

“சரிம்மா.” – காவேரியின் பதிலால் துர்க்காவின் மனம் சமாதானம் அடையவில்லை. அம்மாவும் அப்பாவும் சேர்ந்துகொண்டு எதையோ மறைப்பதாய் அவளுக்குத் தோன்றியது.

“நகரு, சொல்றேன். பாக்கியை நான் அரைக்கிறேன். நீ அரைச்சு முடிக்கிறதுக்குள்ள பொழுது சாஞ்சுடும். இன்னும் நாலஞ்சு தரம் அரைச்சுப் பழகினா சரியா வந்துடும். எந்திரு, எந்திரு.”

துர்க்கா மகிழ்ச்சியுடன் எழுந்துகொண்டாள். .. ..

.. .. .. ரங்கநாத சாஸ்திரிகள் படை பதைக்கிற வெயிலில் தாழங்குடையைப் பிடித்தவாறு லொங்கு லொங்கென்று வத்தலப்பாளையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார். ‘நாளைக்குப் போய்ப் பத்மநாபன் தேவராஜ அய்யரோட பேசறதுக்குமுந்தி நான் அவரைப் பாத்துப் பேசிடணும். பத்மநாபன் தன்னோட வண்டவாளம் வத்தலப் பாளயம் வரைக்கும் எங்கே போயிருக்கப் போறதுன்னு நினைச்சிண்டிருப்பான்.. ..அதைச் சொல்லி ரெண்டு துட்டு சம்பாதிச்சுடணும். நேக்கும் ஒரு பொண்ணு இருக்காளே கல்யாணத்துக்கு!’

.. .. .. “வாங்கோ, வாங்கோ, சாஸ்திரிகளே! உக்காருங்கோ. அடியே, பார்வதி! சாஸ்திரிகளுக்கு மோரு கொண்டா.!” என்றபடி தேவராஜன் ரங்கநாத சாஸ்திரிகளை வரவேற்று உட்காரப் பணித்தார்.

“அப்பனே ஷண்முகா, நமச்சிவாயம், அம்மா, காமாட்சி! என்ன வெய்யில்! என்ன வெய்யில்! வெய்யிலைப் பாக்காம நான் வந்திருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.. ..” என்றவாறு சாஸ்திரிகள் பலகையில் அமர்ந்துகொண்டார்.

“என்ன அப்படி முக்கியமான விஷயம், இந்த சுட்டுப் பொசுக்குற வெய்யில்ல வரும்படியா ? அப்ப, அது ரொம்பவே முக்கியமானதாத்தான் இருக்கணும்.”

“பின்னே ? ரொம்பவே முக்கியமான விஷயந்தான்.” -ரங்கநாத சாஸ்திரிகள் உடனே பேச்சைத் தொடராமல் தேவராஜனின் பரபரப்பை அதிகமாக்கும் முயற்சியில் தொண்டையைக் கனைப்பதில் சில நொடிகளைக் கடத்தினார்.

“சொல்லுங்கோ, சாஸ்திரிகளே!”

“சொல்றேன், சொல்றேன்.. .. ..க்க்கும்.. க்கும்.. சிலுக்குப்பட்டியில பத்மநாபன்னு ஒரு ஆசாமி. அவருக்கு ஒரே பொண்ணு. பதினொரு வயசு ஆறது. வரன் தேடிண்டிருக்கான். நாளைக்கு உங்காத்துக்கு வந்து நம்ம சிவகுருவுக்குக் குடுக்கிறதுக்கு சம்பந்தம் பேச வர்றதா யிருக்கான். மனுஷன் தங்கம்னா தங்கம். அவனோட தர்மபத்தினியும் அப்படியே. ஆனா ஒரு சின்னச் சிக்கல் இருக்கு! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே. இருந்தாலும் உங்க காதுல போட்டுடணு மில்லியா! எத்தனை நாளத்துப் பழக்கம் நமக்குள்ள! உண்மையை மறைக்கிறது கூடப் பொய் சொறதுக்குச் சமானந்தானே ? என்ன சொல்றேள் ?”

தேவராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தார். விழிகள் விரிவு கொண்டன. இமைக்காமல் அவரைப் பார்த்தபடி, “என்ன சிக்கல் ?” என்றார்.

“சொல்றேன், சொல்றேன். ஆனா அது ஒண்ணும் அவா சம்பந்தம் வேண்டாம்னு சொல்ற அளவுக்குப் பெரிய விஷயம் இல்லே. இருந்தாலும் வரதட்சிணை அமவுண்ட்டை ஏத்திக் கேக்குறதுக்கும் சீர்செனத்திகளை அதிகப்படியாப் பேசுறதுக்கும் பிரயோஜனமாயிருக்கும். அதான். வேற ஒண்ணுமில்லே, ” என்ற ரங்கநாத சாஸ்திரிகள் தம் வெற்றிலைக்கறைப் பற்கள் வெளியே துருத்தப் பெரிதாய்ப் புன்னகை செய்தார்.

—-

தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation