ஜாதியில்லை, வர்ணமுண்டு

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

மலர் மன்னன்


( ‘அமுத சுரபி ‘ 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது)

கங்கைக் கரைப் படித்துறையின் கடைசிப் படியில் மார்பளவு நீரில் சிரசு அமிழ மூழ்கியெழுந்தான், சுப்பையா. அப்படி மூழ்கியெழுகிற ஒவ்வொரு முறையும் சங்கற்பம் மாதிரி தனக்குள் ‘எனக்கு ஜாதி ஏதுமில்லை. அதற்குத் தலை முழுகினேன் ‘ என்று சொல்லிக் கொண்டான். மூன்றாம் முறை மூழ்கியெழும்போது மார்பில் கிடந்த புரிநூல் தோள் வழியே நழுவி, நீரில் அடித்துச் சென்று அவன் சங்கற்பத்தை அங்கீகரித்தது.

சொட்டச் சொட்ட நனைந்த உடம்போடு அவன் படியேறி மேலே வருவதை உச்சாணி மேடையின் நிழற்குடை அடியில் சம்ஸ்காரங்களைச் செய்வித்துக் கொண்டிருந்த அந்தணர் கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சிலருக்கு அவனை அடையாளமே தெரியவில்லை. கூர்ந்து நோக்கி இனங்கண்ட சிலர், ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதுபோன்ற திகைப்பைப் பிரதிபலித்தனர்.

‘நம்ம சிவன்வாள் மருமான் சுப்பையா மாதிரின்னா இருக்கு ? பங்காளிக்காரா மாதிரி கிராப்புத் தலையும், கருகருன்னு மீசையுமா இதென்ன கூத்து ? கலி ரொம்பத்தான் வேகமா முத்திண்டு போறது ‘ என்றார் ஒரு முதியவர், தம் காரியத்தில் கவனம் விலக்கி.

சுப்பையா புறச் சூழலைச் சிறிதும் லட்சியம் செய்யாதவனாய் அரையில் கோவணம் தெரிய, ஈர வேட்டி விசிற, விசிறப் படியேறி மேலே வரலானான். அருகிலுள்ள ஆலயத்துள் பக்திப் பரவசத்துடன் எவரும் நெருங்கி உறவாட இணங்கும் விசுவ நாத அருவுருவை மனதால் உள்வாங்கிய மெய் சிலிர்ப்பில் மேலேறி வந்தவன், திரும்பி நின்று மறுகரையே தெரியாதவாறு பிரவாகமெடுத்து ஓடும் கங்கையைப் பார்த்து இரு கரங்களையும் சிரசுக்கு

மே லுயர்த்திக் கூப்பினான்:

‘உன்னில் மூழ்கி உன் பிரவாகத்தில் என் ஜாதி என்னைவிட்டு அடித்துக்கொண்டு போகச்செய்தேன். அம்மா, என்னை ஆசீர்வதி. சகல ஜீவராசிகளுக்கும் பொதுவான மாதாவான உனக்குப் பொருத்தமான மகனாய் வழி நடக்க எனக்கு அருள் செய். ‘

சுப்பையா கோயிலை நோக்கி நடந்தான். ஆலயத்தையொட்டியிருக்கிற ஞானவாபியைத் தொட்டுக்கொண்டு ஒரு மாபெரும் ஜன சமூகத்தின் தலையாய புண்ணியத் தலத்திற்கு வலிந்துவைத்த திருஷ்டிப் பொட்டு மாதிரி கண்ணை உறுத்திய முரணை மனதால் விலக்கி விரைந்தான்.

குப்பு அத்தையின் கணவர் கிருஷ்ண சிவன் ஊரெல்லாம் பிரசித்தம். இங்கே மட்டுமின்றி பிரயாகையிலும் கயையிலுங்கூட மடங்களைக் கட்டிவைத்துத் தெற்கேயிருந்து வருகிற யாத்ரிகர்களின் ஆசார அனுஷ்டானங்களுக்கும் உணவுப் பழக்கங்களுக்கும் உதவுவதாலேயே தென்னாடு முழுவதும் பிரபலமாகிவிட்டவர். ‘காசி யாத்திரையா ? ஒரு சிரமமும் இல்லே, தங்கறதுக்கும் நம்ம பழக்க வழக்கங்களுக்குப் பாதகமில்லாமப் பாத்துக்கறதுக்கும் கிருஷ்ண சிவன்தான் இருக்காரே! அப்புறமென்ன ? ‘ என்பார்கள். அதன் காரணமாகவே அவர் வீட்டோடு வந்திருக்கும் சுப்பையாவும் சீக்கிரமே ஊரறிந்தவனாகி விட்டான்.

‘சிவன்வாளோட மருமான் சுப்பையாவா ? பிள்ளையாண்டான் லட்சணமாத்தான் இருக்கான். கண்ணு ரெண்டும் தீபச் சுடராட்டம் ஜொலிக்கிறது. ஒடம்பு ஒல்லியா இருந்தாலும் வத்தலும் தொத்தலுமா இல்லாம நெஞ்சை நிமிர்த்திண்டு அவன் நடக்கற நடையப் பாத்தா அடிக்க வராப்பலன்னா இருக்கு ? எல்லாஞ் சரிதான். ஆனா பிராமணப் பிள்ளையா லட்சணமாத் தெரியலையே! காலமெயும் சாயரட்சையும் சந்தியா வந்தனம் பண்றதுல எல்லாம் கொறைச்சல் ஒண்ணுமில்லே. ஏன், மாத்தியானம் கூடத்தான் பண்ணறான். ஆனா அதெல்லாம் நாம பண்ணற மாதிரி சாஸ்த்ரோக்தமாவா இருக்கு ? அவம்பாட்டுக்கு வரான், கங்கையில எறங்கறான், ஜலத்தை அள்ளி அள்ளி விடறான். அதட்டற மாதிரி என்னமோ சொல்லறான். போயிண்டே இருக்கான்! ‘ என்று பார்த்தவர்கள் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

இப்போது முற்றிலும் புதிய கோலத்தில் நடந்துவரும் சுப்பையாவை எதிர்கொண்டவர்கள் அதிசயித்து நின்றார்கள்.

‘கொஞ்ச நாளாவே தாடியுந் தலையுமா க்ஷவரம் பண்ணிக்காம திரிஞ்சிண்டிருந்தான். சந்நியாசியாப் போயிடப் போறானா என்னன்னு தோணித்து. இப்பன்னா தெரியறது, குடுமிய அறுத்துண்டு வெள்ளக்காரன் மாதிரி கிராப்பும் மராட்டிப் பிராமணாளாட்டம் நறுக்கு மீசையும் வெச்சுக்கத்தான் இப்படி முடியக் காடா வளத்திருக்கான்! ‘ என்று சொல்லிக் கொண்டு, சுப்பையா போவதையே ஓர் ஓரமாய் நின்று பார்த்த சங்கர ராம கனபாடிகள், எதற்காக வெளியே புறப்பட்டோம் என்பதைக் கூட மறந்துவிட்டு கிருஷ்ண சிவனைப் பார்க்க விரைந்தார். சுப்பையா வீடு போய்ச் சேருவதற்குள் அவன் தரித்த புதிய கோலத்தைச் சிவனுக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவரது நடை சிறு ஓட்டமாகவே மாறிவிட்டிருந்தது.

‘தெரியுமாவோய், உம்ம மருமான் புதுசா ஒரு வேஷங் கட்டிண்டிருக்கறது ? ‘ என்றவாறு உள்ளே நுழைந்த கனபாடிகளை நிமிர்ந்து பார்த்தார், மடத்தின் அலுவலக அறையில் பேரேட்டைப் புரட்டிக்கொண்டிருந்த கிருஷ்ண சிவன். ‘புதுசா என்ன அக்கப்போர் கொண்டு வந்திருக்கீர் இப்ப ? ‘ என்று விசாரித்தார்.

‘அக்கப்போரா ? அநியாயங்காணும்! போயும் போயும் இப்பிடியொரு மருமான் வந்து சேரணுமா ஒமக்கு ? உம்ம குலமென்ன, கோத்திரமென்ன, அதயெல்லாம் அசிங்கப்படுத்தறதுக்குன்னே வந்தான் பாரும் தென்கோடியில இருக்கற எட்டயாபுரத்துலேர்ந்து இவ்வளவு தூரம் காசிப் பட்டணத்துக்கு! ஒடனே அவனை ஊரப் பாக்கத் திருப்பி அனுப்பி வையும். இல்லேன்னா மானம் மரியாதை இல்லாமப் போயிடும் ஒமக்கு! ‘

‘என்ன ஒரேயடியா பயமுறுத்தறீர் ? அப்பிடி என்னதான் பண்ணிப்புட்டான் சுப்பையா ? ‘

‘இன்னும் என்ன பண்ணணும் ? கொஞ்ச நேரத்துல அவனே வந்து நிப்பன், பாத்து ரசியும் ‘ என்று இளக்காரமாகக் கூறினார், கனபாடிகள்.

‘அப்ப நீங்க எதுக்கு இப்பிடிப் பதறப் பதற ஒடி வந்து சங்கூதணும் ? ‘ என்று மடக்கினார், சிவன்.

சங்கர ராம கனபாடிகள் முகத்தில் அசட்டுக் களை தட்டியது. ‘ஓே ?ா, என்னயே மடக்கியாறதா ? எதுக்கு என் வாயால சொல்லணும்னு பார்த்தேன். சரி, சொல்லிப்புடறேன். உம்ம அருமை மருமான் தட்சிண தேசத்து ஸ்மார்த்த பிராமணனா லட்சணமா இல்லாம குடுமிய அறுத்துக் கிராப்பு வெச்சுண்டு மராட்டி பிராமணன் மாதிரி முறுக்கு மீசையும் வெச்சுண்டு ஆளே உருமாறிப் போயிருக்கான் ஓய்! முடிஞ்சா திருத்தப் பாரும். இல்லாட்டா வெரட்டிவிட்டுடும் ‘ என்றவர், பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்தார். வத்தி வைத்துவிட்ட திருப்தி அவர் முகம் முழுக்கப் பரவிக் கிடந்ததை சிவனால் பார்க்கவியலாது போயிற்று.

மருமான் சுப்பையாவின் போக்கு எல்லாரையும்போல் இல்லை என்பது சிவனுக்குத் தெரியுந்தான். அவன் பேச்சும் செய்கையும் இயல்பாக இல்லாவிடினும் அவற்றுக்கெல்லாம் எங்கிருந்தோ அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருப்பதுபோலப் பட்டது. கண்ணுக்குப் புலனாகாத ஏதோவொரு சக்தி அவனை ஊக்குவித்து உற்சாகப் படுத்துகிற மாதிரி பிரமை தட்டியது. மற்றவர்களின் வாய் வெற்றிலை பாக்கை மெல்லுவதற்காக அசைந்தது என்றால், இவன் உதடுகள் எப்போதும் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பதுபோல் துடிதுடித்தன. வித்தியாசமானவன், நிச்சயமாக இவன் வித்தியாசமானவன். விசுவநாத லிங்கத்தை அவன் ஆராதிப்பதிலும், விசாலாட்சியம்மையின் நடையில் பக்தி செய்வதிலுங் கூட இந்த வித்தியாசம் தெரிந்தது.

ஊர்ப்பக்கம் ஒரு தடவை மனைவி குப்பம்மாவுடன் போயிருந்தபோதே அவளுடைய சகோதரன் சின்னசாமியின் மகன் சுப்பையா அவர் கவனத்தை ஈர்த்திருந்தான். தந்தையை இழந்தவனாய் சுப்பையா நிர்க்கதியாக நின்றபோது அவனைத் தங்களிடம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று குப்பம்மா ஆசைப் பட்டதும் உடனே அதற்கு இணங்கினார்.

காசிக்கு வந்து சேர்ந்த மருமான் கலாசாலயில் சேர்ந்து சமஸ்கிருதத்திலும் ?ிந்தியிலும் மள மள வென்று தேர்ந்தது மகிழ்ச்சியளித்த போதிலும் எப்போதும் மகா ஸ்மசானத்தில் அலைவதும், சகல ஜாதிப் பிள்ளைகளோடும் தோளில் கை போட்டுத் திரிவதும், கங்கையாற்றின் படகோட்டிகளைச் சினேகம் பிடித்துக்கொண்டு அவர்களின் படகில் குறுக்கும் நெடுக்குமாய் நதியைக் கடப்பதும், சமயங்களில் தானே துடுப்பு வலிப்பதுமாக அவன் பொழுதைக் கழித்தது சங்கடமளித்தது.

சங்கர ராம கனபாடிகள் எச்சரிக்கை செய்துவிட்டுப் போன தாக்கத்தில் இப்போதும் தம் மருமானைப்பற்றிக் கிருஷ்ண சிவன் கவலைப் படத் தொடங்கியிருந்தபோது, அந்த மருமானே வாசல் குறட்டில் வந்து நிற்பதைக் கண்டார்.

மடத்தின் பின்கட்டுதான் குடும்பத்தார் வசிப்பதற்கான அகம். மடத்து வாசல் வழியாகத்தான் உள்ளே சென்றாக வேண்டும். பாதங்களில் படிந்த மன்ணை வாசற் குறட்டில் உதிர்த்து விடுவதற்காக குறட்டை மிதித்துக் கொண்டு நின்ற சுப்பையாவை உற்றுப் பார்த்தார் கிருஷ்ண சிவன். சங்கர ராம கனபாடிகள் சொன்னது சரிதான். பையன் உருமாறித்தான் வந்து நிற்கிறான். ஆனால் அதுவுங் கூட அவனுக்கு அழகாய்த்தான் இருப்பதாகத் தம்மையும் அறியாமல் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல், ‘சுப்பையா, இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ ‘ என்றார், சிறிது கண்டிப்பாக.

சுப்பையா முகம் மலரச் சிரித்தவாறு அவரிடம் வந்தான். அவன் வாய் திறக்குமுன், ‘என்ன கோலம் இது சுப்பையா ? ‘ என்று சிறிது கோபமாகவும் சற்றுக் கவலையோடும் கேட்டார், சிவன்.

‘ஏன், மனுஷக் கோலந்தான் ‘ என்று புன்னகை செய்தான் சுப்பையா.

‘அப்படியா ? சரிதான். நல்ல வேளை, வேற வேஷம் எதுவும் போட்டுக்கணும்னு தோணிடலையே. ஆனா இந்த வேஷம் ஜாதி ஆசாரம் கெட்டுப் போன கோலமான்னா இருக்கு ? ‘

‘ஜாதி ஆசாரமா ? அப்பிடியொண்ணு எனக்கு இல்லயே! ‘

‘என்னது, ஜாதியில்லயா ? ‘

‘ஆமா. ஜாதியில்லை. ஆனா வர்ணமுண்டு. ‘

‘ஜாதியில்லே, வர்ணமுண்டு! என்ன சொல்றே நீ ? ‘

‘ஜாதி வேறே, வர்ணம் வேறேன்னு சொல்றேன். அதனாலதான் எனக்கு ஜாதியில்லே ஆனா வர்ணமுண்டுங்கறேன். ஒங்களுக்குத் தெரியாததில்லே. ரொம்பப்பேர் ஜாதிக்கும் வர்ணத்துக்கும் வித்தியாசம் தெரியாம ரெண்டையும் போட்டுக் கொழப்பிக்கறது ஒங்களுக்குத் தெரியாதா ? ‘

‘ஆனா நீ சொல்றது எனக்கே சரியாப் புரிபடலே சுப்பையா! ‘

‘ஜாதிகள் எதனால சல்லி வேர்கள் மாதிரிப் பலதாப் பிரிஞ்சு கெடக்கு ? ஏன்னா அது வெறும் ஜனக் கட்டுகள்தான். ஒரே வீட்டுல இருக்கற பல குடித்தனங்கள் மாதிரி. இங்கிலீஷிலே அதுக்கு க்ளான்னு ஒரு பேர் இருக்கு. நாம ஜனக் கட்டுன்னு வெச்சுக்கலாம். நம்ம ஊர்ப்பக்கம் சாதிசனம்னு சேத்துச் சொல்றது அதனாலதான். ஜாதிக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தமில்லே. சிலபேருக்கு வர்ணங்கறது சருமத்தோட நிறம்னு என்ணம். ஆரியன்னா சிவப்பா இருப்பான். மத்தவா நிறம் மட்டா இருப்பான்னு வேற அடையாளம் சொல்லுவான். அப்பிடிப் பாத்தா ராமனும் கிருஷ்ணனுமே ஆரியர்கள் இல்லைன்னு ஆயிடும். தென்னாடுடைய சிவனுக்கோ ஒங்களை மாதிரி செக்கச் சிவந்த மேனி! ‘

கிருஷ்ண சிவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். சுப்பையா அதைக் கவனிக்காததுபோல் தொடர்ந்தான்:

வர்ணாசிரமங்கறது குணாம்சத்துக்காக உள்ளது. வர்ணங்கறது குணம். ஆசிரமம் அந்த குணத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கற ஒழுக்கம். ஆனா இதைப் புரிஞ்சுக்கறதே பலபேருக்குச் சிரமமா இருக்கு. விதண்டா வாதம்னா சந்தோஷமா வரமுடியறது. அதுவே நியாய விளக்கம்னா கேக்கப் பிடிக்கறதில்லே. விதண்டாவாதம் இருந்தாத்தானே சண்டை சச்சரவெல்லாம் வரும் ? பொழுதும் சுவாரசியமாப் போகும் ? ‘

‘சுப்பையா, நீ வயசுக்கு மீறின பேச்செல்லாம் பேசறே, பாத்துக்கோ. ‘

‘இல்லே. விஷயம் புரிபடறதுக்கு வயசாகியிருக்கணுங்கற கட்டாயம் எதுவுமில்லே. ஆற அமர யோசிச்சு விகல்பமில்லாம பாக்கத் தெரிஞ்சிருந்தாலே போதும். கடைப்பிடிக்கிற ஒழுக்கத்தை கிரு ?ஸ்தாசிரமம், வானப்பிரஸ்தாசிரமம்னெல்லாம் சொல்ற மாதிரிதான் வர்ணாசிரமம். நான் ஒருத்தனே ஒரே நாள்ல தகப்பனாவும், மகனாவும், சகோதரனாவும், எஜமானாவும் வேலையாளாவும் இருக்கற மாதிரியே பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன்னு நாலு வர்ணத்தானாவும் இருக்க முடியும். சாந்த சொரூபியா எனக்குத் தெரிஞ்சதை மறு வாசிப்புப் பண்ணிண்டு, மத்தவாளுக்கும் எடுத்துச் சொல்றபோது எனக்கு பிராமண வர்ணம். கண்ணுக்கு எதிரே நடக்கற தப்பைக் கோபத்தோட கண்டிக்கறப்ப நான் க்ஷத்திரியன். குடும்பதைப் பராமரிக்கறதுக்காகச் சாமர்த்தியமா சம்பாதிக்கும்போது வைசியன். எல்லாருக்கும் ஆனந்தமா ஜனசேவை செய்யும்போது நானே சூத்திரன்! அந்தந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி நம்ம குணமும் மாறும். ஜாதிங்கறது ஏராளமாப் பிரிஞ்சு கெடக்கு. வர்ணாசிரமமும் ஜாதிகளும் ஒண்ணுதான்னா சூத்திராள் என்கிற வர்ணத்தில மட்டுமில்லாம மத்த வர்ணங்கள்ளகூடப் பிரிவுகள் இருக்கே, அது எதனால ? ஏன்னா, ஜாதிங்கறது வேறே, வர்ணங்கறது வேறே. ஜாதிகள் ஜனக் கூட்டத்தைப் பிரிச்சு வைக்கும். ஒண்ணோட ஒன்ணு மோதவைக்கும். வர்ணாசிரமம் ஒரு மனுஷனுக்குள்ள இருந்துண்டு ஒவ்வொரு நேரத்துக்கும் பொருத்தமா அவனை இயங்கவைக்கும். அதனாலதான் எனக்கு ஜாதியில்லே, வர்ணமுண்டு. ‘

கிருஷ்ண சிவன் சுப்பையாவையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். விழிகளின் ஓரத்தில் நீர் கட்டத் தொடங்கியது.

‘சுப்பையா, வயசிலே நீ சின்னவன். ஆனா ஞானத்திலே பெரியவன். ஒன்னை நான் நமஸ்கரிச்சா அதுல தப்பேயில்லே. நமஸ்கரிக்கணும். ஆனா அதுக்கு நீ பால சந்நியாசியா இருக்கணும். அதனால ஒன்னை நான் நமஸ்கரிக்கறது பிரத்தியட்ச நெலமைக்குப் பொருத்தமில்லே. அதே மாதிரிதான் இப்ப நான் சொல்லப் போறதும். எனக்குன்னு ஒரு ஆசாரத்தை வெச்சுண்டு மடங்களைக் கட்டி நம்ம ஊர்ப் பக்கத்திலேயிருந்து வரவாளுக்கு ஒத்தாசை பண்ணறவன் நான். அதனால எனக்குன்னு சில கட்டுப்பாடுகளை வெச்சிண்டாகணும். அப்பத்தான் யாத்ரிகாளும் சங்கடப்படாம வந்துபோக முடியும். ஒனக்கு இந்தக் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லேதான். நீ ஞானி. ஒனக்கு எதுக்குக் குடுமியும் பூணூலும் ? நீ நெஜமான பிராமணன். நெஜமான க்ஷத்திரியன். நெஜமான வைசியன். நெஜமான சூத்திரன். நமக்குள்ளே பஞ்சமன்னும் இருக்கறதா சொல்றாளே, அப்பிடியிருந்தா பரம பஞ்சமனும் நீதான். ஒனக்கு எந்த ஜாதி அடையாளமும் அவசியமில்லேன்னாலும் இங்க இருக்கற சம்பிரதாயத்துக்காக இனிமே நீ எங்ககூடப் பந்தியிலே உக்கார வேண்டாம். மச்சிலேதான் உள் இருக்கே, அங்க இருந்துக்கோ. அத்தை ஒனக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கொண்டு வந்து தருவா. ஒன்னோட துணிமணி, புஸ்தகங்களையும் அவளே மச்சிலே கொண்டு வந்து வெச்சுடுவா. ஸ்ரீராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பி வெக்கலையா, அது மாதிரிதான் இதுவும். நீ புரிஞ்சுக்குவே. ஒனக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லே. ஒனக்கு என் நமஸ்காரம். ‘ சிவன் தம்மை மறந்தவராய்க் கையெடுத்துத் தொழுதுவிட்டார்.

சுப்பையா புன்சிரிப்புடன் தலையசைத்தான். அவரை விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். மாடிப்படிகளைத் தேடி நடந்தான். மனதில் மீண்டும், ‘கங்கா தேவீ, எல்லாக் கசடுகளையும் கழுவித் தொலைப்பதுபோல் உனது பவித்ர நீரில் எனது ஜாதியை அலம்பிவிட்டேன். இனி எனக்கு ஜாதியில்லை. ஆனால் வர்ணமுண்டு. சூரியன் வேளைப்படி நிறமும் இயல்பும் மாறிக் கடமை செய்வதுபோல் நானும் நான்கு வர்ணக் கடமைகளைச் சரிவரச் செய்துவர அருள் செய்வாய் மாதாவே ‘ என்று கூறிக்கொண்டான்.

(தம் சுற்றத்தாரால் ‘சுப்பையா ‘ என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய பாரதியின் இளமைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

( ‘அமுத சுரபி ‘ 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது)

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்