நாலு வயது

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

இரா. குருராகவேந்திரன்


கொஞ்சம் தூக்கம் கலைந்த மாதிரி இருந்தது. புரண்டுபடுக்கையில் அம்மாவின் கை மெல்ல அணைத்தபடி தட்டிக்கொடுத்தது கனவில் நடப்பதுபோல் இருந்தது. அம்மாவின் அணைப்பில் மறுபடியும் தூக்கம் ஆழமானது. ராத்திரி அப்பா சொன்ன கதையால் கனவில் அவ்வப்போது ஏதோ வந்தது. விட்டுவிட்டு வந்ததால் ஏதும் புரியவில்லை. ஆனால் கதையில் வந்த சுண்டெலி கனவில் கிச்சுகிச்சு மூட்டியது. நான் தூக்கத்தில் சிரித்தேன். இவ்வளவு நல்ல சுண்டெலியுடன் பூனை ஏன் சண்டை போடுகிறது ?. அப்பாவிடம் கேட்கவேண்டும். சுண்டெலி தலைமீது ஏறி விளையாடிக்கொண்டு இருந்தது.

அச்சுக்குட்டி தூக்கத்தில் சிரிப்பதை பார்த்து ஆசையுடன் தலையை வருடிக்கொண்டிருந்தாள் காஞ்சனா. மணி காலை ஆறு இருக்கும். எழுந்து காபி போட நினைக்கையில் குழந்தையின் நிர்மலமான பிஞ்சு முகத்தில் தெரிந்த மோகன புன்னகையை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து அம்மா மெல்ல தட்டி எழுப்பினாள். ‘அச்சுக்குட்டி, எழுந்திரும்மா!. இன்னிக்கு புதுசா பட்டுப் பாவாடை சட்டை போட்டுண்டு ஸ்கூலுக்கு போகப்போகிறோமே!. எழுந்திரும்மா செல்லம் ‘.

அம்மாவின் குரல் கேட்டதால் எழுந்து பேசவேண்டும் போல் இருந்தது. ஆனால் தூக்கம் இன்னும் அழுத்திக்கொண்டிருந்தது. சுண்டெலி இப்போது இரண்டு கால்களில் உட்கார்ந்துகொண்டு ஒரு கையால் அதன் வாயை தடவிக்கொண்டு ஏதோ சொன்னது. அதற்கு இரண்டு சின்ன முன்பற்கள் இருந்தன, அப்பா டிவியில் காட்டியதுபோல. சுண்டெலி பல் தேய்க்குமா ?. தெரியவில்லை. ஆனால் நான் தினமும் பல் தேய்க்கவேண்டும் என்று அப்பா சொல்கிறார். தேய்ப்பதைவிட பேஸ்டை சாப்பிடத்தான் பிடிக்கிறது. கொஞ்சம் சூடமிட்டாய் மாதிரி இருக்கும். எனக்கு புது பிரஷ் வாங்கி இருப்பதாய் ராத்திரி அப்பா சொன்னார். அப்பா பல்தேய்க்கும்போது மேலே பார்த்தபடி வாயால் கலகலவென ஏதோ செய்கிறார். எனக்கு அந்தமாதிரி வரமாட்டேன் என்கிறது. அம்மா தன் குழித்த கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து எனது வாயில் கொடுத்தால் பாதி தண்ணீர் பேஸ்டுடன் வாய்க்குள்ளே போய்விடுகிறது. மீதியை உடனே துப்பிவிடுகிறேன்.

அம்மா மெல்ல பேசிக்கொண்டே என்னை வென்னீரில் குளிப்பாட்டினாள். நான் வாளித்தண்ணீரில் கை நனைத்தபடி விளையாடிக்கொண்டிருந்தேன். அம்மாவின் கை என்னுடையதைவிட பெரியதாக இருக்கிறது. சோப்பை கீழே விழாதபடி சுலபமாக கைக்குள் வைத்து எனக்கு சோப்பு போட்டுவிடுகிறாள். என் கைக்குள் சோப்பு வராது உடனே வழுக்கி விழுந்துவிடுகிறது. கொஞ்சம் பெரியவாளானவுடன் சோப்பை நானே எடுத்து நானே போட்டுக்கொள்ளவேண்டும். சோப்பு வாசனை நன்றாக இருக்கிறது. கண்ணில் பட்டால்தான் எரிகிறது.

கண்ணில் படாமல் காஞ்சனா சோப்புப்போட்டு குழந்தையை குளிப்பாட்டி புதிதாய் வாங்கின பச்சைக்கலர் பட்டுப்பாவாடையை போட்டுவிட்டாள். தலையை சீராக வகிடெடுத்து இரண்டுபக்கம் எலிவால் சடைபோட்டு பச்சைக்கலர் ரிப்பன் கட்டிவிட்டாள். கொஞ்சம் மல்லிகைப்பூ சரத்தை இரண்டு சடைகளுக்கிடையில் சொருகினாள். ஜாதிப்பூ சரம் இன்னும் வாசனையாக இருக்கும். ஆனால் மத்தியானம்வரைகூட தாங்காது. சரம் லூஸாகி ஆங்காங்கே பூ உதிர்ந்துவிடும். அதுவும் அச்சுக்குட்டி போடுகின்ற ஆட்டத்திற்கு கொஞ்சநேரம் நின்றாலே பெரியது.

எனக்கு பட்டுப்பாவாடையும் பூவும் பிடித்திருக்கிறது. ஆனால் அம்மா அழுத்திக்கட்டிய ரெட்டைஜடையும் ரிப்பனும் பிடிக்கவில்லை. பின்னால் கட்டிய பூச்சரம் பின்னங்கழுத்தில் அவ்வப்போது குறுகுறுத்தது. பூ கட்டியிருக்கும்போது பின்னந்தலையை அடிக்கடி சொறியக்கூடாதாம். பூ கையோடு வந்துவிடுமாம். அம்மா சொன்னாள்.

ஒன்பது மணிக்கு அம்மா, அப்பா இருவரும் என்னை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருக்கும் நர்ஸரி ஸ்கூலுக்கு கூட்டிப்போனார்கள். பக்கத்து வீட்டு ராமுவும் புவனாவும் காலையில் யூனிபார்ம், ஷூ போட்டுக்கொண்டு காலையில் போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் அதுமாதிரி போகவேண்டும் என நினைக்கவில்லை. நான் இதுவரை அம்மாவை விட்டு இருந்ததில்லை.

ஸ்கூலில் முதலில் ஒரு பெரிய ரூம்முக்குள் நாங்கள் போனோம். ஒரு பெரிய மேஜைக்கு பின்பு ஒர் மாமி உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் போட்டிருந்த கண்ணாடி கொஞ்சம் இறங்கி மூக்கின் மேல் உட்கார்ந்திருந்தது. இடைவெளியில் எங்களை பார்த்த்ததும் ‘வாங்க வாங்க. இதுதான் உங்க குழந்தையா ? ரொம்ப அழகா சமத்தா இருக்கே. ‘ என்றார்கள். எனக்கு அந்த மாமியை பிடித்த மாதிரி இருந்தது. ஆனால் பயமாகவும் இருந்தது.

‘உன் பேர் என்னம்மா ‘ என கேட்டார்கள்.

‘அச்சயா, அச்சுகுட்டின்னு அம்மா கூப்பிடுவாங்க ‘ என்றேன்.

‘இவ்வளவு அழகா பேசறயே, தினமும் எங்ககூட இங்க கொஞ்சநேரம் இருக்கியா ? ‘ என கேட்டார்கள். நான் உடனே அம்மாவிடம் சென்று கட்டிக்கொண்டேன். எனக்கு சொல்லத்தெரியவில்லை.

நோட்டுபுத்தகத்தில் ஏதோ எழுதினார்கள். அப்பா நிறைய பணமெல்லாம் கொடுத்தார். எனக்கு மிட்டாய் வாங்கும்போதோ, சட்டை வாங்கும்போதோ இவ்வளவு கொடுத்ததில்லை.

அப்புறம் என்னைக் கூட்டிக்கொண்டு இன்னொரு ரூமுக்குப் போனார்கள். அங்கே என்னை மாதிரி நிறைய குழந்தைகள் இருந்தார்கள். சிலபேர் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். சிலபேர் உம்மென்று மலங்கமலங்க விழித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். இன்னும் சிலபேர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கேயும் ஒரு மாமி நின்றுகொண்டிருந்தார்கள். அம்மா என்னை மெல்ல கூட்டிச்சென்று மற்ற குழந்தைகளுக்கு நடுவில் உட்காரவைத்தாள். ஒரு குட்டிப்பையன் என் பட்டுப்பாவாடையை தொட்டுப்பார்த்தான். அம்மாவும் அப்பாவும் கொஞ்சநேரம் அந்த மாமியிடம் பேசிவிட்டு என்னைப்பார்த்து ‘அச்சுக்குட்டி, இங்க சமத்தா இருக்கனும், சரியா ? ‘ என்றார்கள். எனக்கு நான் ஏன் இங்கே இருக்கவேண்டும் என புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அம்மாவும் அப்பாவும் என்னை விட்டுவிட்டு வெளியே போய்விட்டார்கள். எனக்கு ஒரே அழுகையாக வந்தது. ரொம்ப நேரம் அழுதுகொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் என்னை விட்டு ஏன் போனார்கள் என புரியவில்லை. இரண்டுமுறை மூச்சா போய்விட்டேன். அந்த மாமிதான் துடைத்துவிட்டார்கள்.

மத்தியானம்போல் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். நான் அம்மாவை போய் கட்டிக்கொண்டேன். வீட்டிற்க்கு போனாலும் அழுதுகொண்டிருந்தேன். எனக்குள் இருப்பதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் அம்மாவும் அப்பாவும் என்முகத்தையும் அழுகையும் பார்த்து யோசித்தார்கள். என்னால் சொல்ல முடியாத விஷயத்தை என் முகம் சொன்னது போலும். ‘நான் இப்பவே அந்த இடத்துக்குப் போகனுமா ? கொஞ்சம் பெரியவளானதும் போககூடாதா ‘ என்றது என் முகம்.

என் நல்ல அம்மாவும் அப்பாவும் என்முகத்தை பார்த்து மேலும் யோசித்தார்கள். இந்த பால்மணம் மாறாத வயதில் தாயின் மடியிலும் கதகதப்பிலும் இருக்கவேண்டிய குழந்தை நம்மைவிட்டு பிரிந்திருக்க வேண்டுமா ? மிருகங்கள்கூட ஓரளவு வளரும்வரை குட்டிகளையோ குஞ்சுகளையோ விட்டுப்பிரிவதில்லை. பசு இல்லாத இளங்கன்றை யாராவது எங்கேயாவது பார்த்ததுண்டா ? குழந்தை வளர்ப்பில் போட்டிபோட்டுக்கொண்டு போட்டியின் ஆரம்பத்தை மிகஅருகில் கொண்டுவந்துவிட்டோம். குழந்தையின் முதல் குரு தாய்தந்தையரே. இந்த முதல் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுக்கவேண்டுமா ?

அம்மா யோசிப்பதை மலங்கநின்று பார்த்தேன். நான் மறுபடியும் அந்த இடத்திற்கு போவேனா ? தெரியவில்லை. படுத்துத் தூங்கிவிட்டேன். இன்று கனவில் சுண்டெலி வரவில்லை.

இரா. குருராகவேந்திரன்

gururagav@gmail.com

Series Navigation

இரா. குரு ராகவேந்திரன்.

இரா. குரு ராகவேந்திரன்.