தேவை இந்த மனங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அ. முஹம்மது இஸ்மாயில்


மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது ‘என்ன நடக்கப் போறதோ ? ஏது நடக்கப் போறதோ ? ‘ என்று

மணியனின் தந்தை சங்கரய்யருக்கு சென்னையில் இருந்து வேலை நாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி இருந்தது. சங்கரய்யர் நாகையில் சிறிது காலம் தனியாகத் தான் இருந்தார். மனைவி ஜானகி, மூத்த மகன் மணியன், மகள் லலிதா எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருந்தனர்.

அதன் பிறகு பிள்ளைகளுக்கு பரீட்சை முடிந்ததும் நாகையிலேயே மேற்கொண்டு படிக்க வைக்கலாம் என முடிவு செய்து வீடு பார்த்து குடும்பத்தை அழைத்தும் கொண்டார். மூன்றாவது வரை சென்னையில் படித்து விட்டு நான்காவது நாகையில் படிக்க வேண்டிய நிலைமை மணியனுக்கு. அவனுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பயத்திற்கு காரணம் முதல் நாள் பள்ளிகூடம் செல்வது பற்றியது.

பிரியமான நண்பர்களான சதீஷ், ஹரி இவர்களை விட்டு பிரிந்த துயரம், பழக்கமில்லாத நண்பர்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம், புதிய ஆசிரியைகள் எப்படி இருப்பார்களோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து கொண்டு அவனை காய்ச்சலில் போட்டு விட்டது. மருத்துவர் ராஜேந்திரனிடம் மணியனை அழைத்துச் சென்று காட்டி மருந்து மாத்திரைகள் சாப்பிட கொடுத்து அவனை தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனது பெற்றோர்களுக்கு.

சங்கர், ஜானகி எல்லாம் மணியனை ஒரு வழியாக சமாதானப் படுத்தி ‘லலிதாவ பார்த்தியோ ?.. எப்படி சமர்த்தா போறா பாரு ?.. ‘ என்றெல்லாம் கூறி ஒரு வழியாக ஜானகியே பள்ளிகூடம் வரை கூட்டி வந்து விட்டுவிட்டும் சென்றார். மணியன் வகுப்பறையை தேடிக் கண்டுபிடித்து அதில் நுழைந்தவுடன் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான். கடைசி வரிசைக்கும் முன் வரிசையில் இரு இடம் காலியாக இருந்தது. அங்கே போய் அமர்ந்துக் கொண்டான். அருகில் அமர்ந்து காகிதத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த சக மாணவன் ஒருவன் கிறுக்குவதை நிறுத்தி விட்டு திரும்பினான்.

அவன் கேட்டான், ‘உம்பர் பேரென்னா ? ‘

மணீயன் புரியாமல் கேட்டான், ‘என்ன ? ‘ என்று

சக மாணவன் அதட்டலாக கேட்டான், ‘என்னங்கணி.. என்னா ?.. உம்பருக்கு காது செவுடா ? ‘ என்றான்.

மணியனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. பேசாமல் அழுது விடலாமா என்று தோன்றியது. கண்கள் கலங்கியது.

சக மாணவன், ‘அதுக்கு ஏங்கணி அழுவுறீயோம்.. உம்பர என்ன அடிச்சா புட்டாஹா ? ‘ என்றதும்

மணியன். ‘இல்ல.. நா அழல.. நீங்க பேசறது நேக்கு புரியல.. ‘ என்றான்.

சக மாணவனான அவன் ஏதோ கேக்க நினைத்த விநாடி மணி அடித்து ஆசிரியை உள்ளே வந்தார்கள். ஆசிரியை ஆரம்ப உரை எல்லாம் நிகழ்த்தி விட்டு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். கரும்பலகையில் பாடம் சம்மந்தப்பட்ட செய்திகளை எழுதி போட்டு விட்டு அதை அப்படியே பார்த்து எழுதிக் கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். மணியன் எழுதுகோலை எடுத்து எழுதிக் கொண்டு இருந்தான். பாதியில் அந்த எழுதுகோல் எழுத மறுத்தது. பக்கத்தில் இருந்த அந்த சக மாணவன் கவனித்து விட்டு இவனிடம் கேட்டான், ‘என்ன ஆச்சு.. ‘ என்று.

மணியன், ‘பேனா எழுத மாட்டேங்கறது.. ‘ என்றான்.

அந்த சக மாணவன் தன் பைக்குள் கையை விட்ட்ய் எழுதுகோலை எடுத்து மணியனிடம் நீட்டி, ‘இது ஹீரோ பேனா.. இதுல எழுதும்.. ‘ என்றான்.

மணியன் சிறிது நேரம் யோசித்து விட்டு அந்த சக மாணவன் நீட்டிய எழுதுகோலை வாங்கிக் கொண்டே, ‘நன்னா தான் எழுதும்.. இப்ப என்னவோ எழுத மாட்டேங்கறது.. ஏன்னே நேக்கு தெரியல.. எழுதி முடிச்சதும் உங்க பேனாவ திரும்ப தந்துடறேன்.. ‘ என்றான்.

மரைக்கான், ‘இப்ப யாரு இதெல்லாம் கேட்டா.. ஏங்கணி.. ம்.. ? ‘ என்றான். அடன் பிறகு மணியன் அவனிடம் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

‘உங்க பேரு என்ன.. ? ‘ என்றான்.

சக மாணவன் சொன்னான், ‘எம் பேரா.. மரைக்கான் ‘

மணியன் முதன் முதலாக இப்பொழுது தான் இந்த பெயரை கேள்விப்படுகிறான், ‘என்னது மர கானா ? ‘ என்று ஆர்வமாக கேட்டான்.

மரைக்கான், ‘ஏங்கணி நான் தானே மொதோ உம்பர் பேரென்னன்னு கேட்டேன் ? ‘ என்றான்

மணியன், ‘என் பேரா.. ‘ என்றான்

மரைக்கான், ‘ஆமாங்கணி.. உம்பர்ட பேர் தான் வேறென்ன.. உம்பர்ட வாப்பாட பேரயா கேட்டாஹா ? ‘ என்றான்.

மரைக்கான் உடனே, ‘அப்ப.. உம்பர்ட வாப்பா பேரென்ன ? ‘ என்று கேட்டுவிட்டு சிரித்தான்.

அன்று இரவு ஜானகி மணியனை அழைத்து ‘இன்று என்னென்ன பாடம் நடத்தினா ? ‘ என்று கேட்டு புஸ்தக பையை பிரித்த போது அந்த ‘ஹீரோ ‘ எழுடுகோல் இருப்பதை பார்த்தார்.

மணியனிடம் ‘இது ஏது ? ‘ என்று விசாரித்ததும் மணியன், ‘அச்சச்சோ.. இத மரைக்காண்ட்ட திரும்ப தராமே எடுத்துட்டு வந்துட்டோமே ‘ என்று வருத்தப்பட்டான்.

தனது தாயிடம் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் மரைக்கான் பற்றியும் எடுத்துக் கூரினான்.

ஜான்கி சொன்னார், ‘இப்பெல்லாம் நோக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து.. ‘ என்று

அடுத்த நாள் மணியன், ‘மரைக்கான்.. உங்க பேனாவ கொடுக்க மறந்துட்டேன்.. சாரி.. அம்மா உங்கள்ட்டேயே கொடுத்துட சொன்னா.. ‘ என்றதும், மரைக்கான், ‘எங்க அம்மா உம்பர்ட்டேயே கொடுத்துட சொல்லிட்டாஹா ‘ என்றான்.

மணியன் பயந்தாவாறு, ‘அம்மா வைவா.. ‘ என்றான்.

மரைக்கானுக்கு புரியவில்லை, ‘வைவாண்டா என்னா.. ? ‘ என்றான்

மணியன், ‘அம்மா திட்டுவா.. ‘ விளக்கினான்

மரைக்கானுக்கு புரிந்து விட்டது, ‘ஓஹோ.. ஏசுவாஹாலா.. ‘ என்றான்

அன்று மதியம் ஜானகி சாப்பாட்டு இடைவேளைக்காக மணியனை அழைத்துச் செல்ல வந்த போது மணியன் தனது தாயிடம் மரைக்கான் எழுதுகோலை வாங்க மறுத்தது பற்றி எடுத்துக் கூறினான். ஜானகிக்கு மரைக்கானை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஜானகி மரைக்கான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு மரைக்கான் கோழி கறியை வெட்டெ வெட்டென்று வெட்டிக் கொண்டிருந்தான். மணியன் தன் அம்மாவுடன் வருவதை பார்த்தவுடன் தன் சாப்பாட்டை எடுத்து முதுகுக்கு பின்னால் மறைத்துக் கொண்டான்.

ஜானகி அருகில் வந்தவுடன் மரைக்கானிடம் கேட்டார், ‘நான் தான் மணியத்தோட அம்மா.. ஜானகி.. சித்த நாழி முன்னாடி எதையோ மறைச்சியோன்னோ என்னது அது ? ‘ என்றார்.

மரைக்கான், ‘இல்ல.. உங்களுக்கு புடிக்காது.. சாப்ட மாட்டாங்க.. அதான் மறறச்சேன்.. ‘ என்றான்.

ஜானகி சிரித்து விட்டு, ‘ஏன்ப்பா நீ ஆத்துக்கு போலயா ? நோக்கு எந்த ஊரு ? ‘ என்றார்.

மரைக்கான் விளங்கிக் கொண்டு, ‘நான் பவலைக்கி இங்கேயே சாப்டுடுவேன்.. எனக்கு நாகூர்.. சாயங்காலம் பள்ளிகூடம் உட்டத்தோட ஹலிம் வந்து கூட்டிட்டு போயிடுவாரு ‘ என்றான்.

ஒரு முறை பள்ளிக்கூடம் அரைநாள் தான் என்று திடாரென்று அறிவித்தார்கள். மரைக்கான் தன்னை அழைத்துச் செல்ல ஹலிம் வெயில் சாயும் காலம் அல்லவா வருவார் என்று வருந்திய வேளையில் ஒரு யோசனை தோன்றியது. மணியனிடம் தன் வீட்டு தொலைபேசி எண்களை கொடுத்து ஹலிமை உடனடியாக அழைத்துச் செல்ல வருமாறு சொல் என்று கேட்டுக் கொண்டான். மணியன் அவனது வீட்டிற்கு சென்றவுடன் முதல் வேலையாக மரைக்கான் வீட்டுற்கு தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னான். அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஹலிம் வந்து விட்டார் மரைக்கானை அழைத்துச் செல்ல.

அன்றிலிருந்து மரைக்கானுக்கு மணியத்தின் மேலிருந்த பிரியம் கூடியது. அழகாக மட்டுமே இருந்த நட்பு ஆழமாக மாற தொடங்கியது.

ஒரு முறை மரைக்கான் கண்டதையும் வைத்து சாப்பிட்டிருப்பான் போலிருக்கிறது. வயிறு சரியில்லாமல் போய் விட்டது. அதன் காரணமாக மரைக்கான் மதியம் ஜானகியின் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் செல்லாமல் மணியன் வீட்டிற்கு சென்றான். அவனது ஆடைகள் எல்லாம் கெட்டு விட்டதால் ஜானகி மரைக்கானின் ஆடைகளை களைய சொல்லி மணியத்தின் ஆடைகளை கொடுத்து அணியச் சொன்னார். மரைக்கான் மணியத்தின் ஆடைகளை அணிந்து வந்து சட்டையை பிடித்துக் கொண்டு, ‘அச்சடிச்ச மாதிரி இருக்கு ‘ என்றான்

ஜானகி மரைக்கானிடம் ‘மதியம் என்ன சாப்ட போறே ? ‘ என்று விசாரித்தார்.

மரைக்கான், ‘பல்லு குத்தி ‘ என்றான்

ஜானகி ஆச்சர்யமாக, ‘பல்ல குத்திட்டு என்ன சாப்ட போறே நீ ? ‘ என்றார்

மரைக்கான், ‘பல்ல குத்திட்டு எதுவும் சாப்ட போவல.. பல்லுகுத்திய தான் சாப்ட போறேன் ‘ என்றான்.

ஜானகி, ‘பல் குத்தின்னு ஒரு சாப்பாடா ? ‘ என்றார்.

மரைக்கான், ‘ஆமா.. சூப்பரா இருக்கும்.. வாப்பா தான் வாங்கிட்டு வந்தாஹா.. கடைல நொரையீரல் வாங்கும் போது கேட்டா கொடுப்பாஹா.. ‘ என்றான்

ஜானகி ஒரு வித எரிச்சலுடன், ‘இந்த கர்மத்தெல்லாம் எப்படி சாப்பிடறேள் ? நினைச்சாலே குமட்டறது ? ‘ என்றார்

மரைக்கான், ‘நீங்க வேறம்மா.. பல்லுகுத்தின்னா எனக்கும் எங்க வாப்பாக்கும் உயிரு ‘ என்றான்.

ஜானகி, ‘சரி.. சரி.. ஒனக்கு தான் வயிறு சரியில்லையோன்னோ.. இந்த பல்லுகுத்தி மூக்குகுத்தியெல்லாம் தூக்கி கடாசிட்டு எங்க ஆத்துல தயிர் சாதம் செஞ்சிருக்கேன்.. நன்னா இருக்கும்.. சாப்ட்டு பார்க்கறீயா ? ‘ என்றார்.

மரைக்கான், ‘தயிர்சாதமா ? ‘ என்று மயங்கி விழ பார்த்தவன் கடைசியில் அதை தான் சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்ததும் மரைக்கான் கேட்டான், ‘மணியன் இத தான் டெய்லியும் சாப்டுறானா ? ‘ என்று

மரைக்கானின் ஆடைகளை துவைத்து சலவை செய்து திரும்பவும் அவனுக்கே போட்டு விட்டு அனுப்பினார்கள். மரைக்கானின் அம்மா நேரிலேயே காரை பிடித்து மணியத்தின் வீட்டிற்கு வந்து இறங்கி விட்டார்கள்.

மரைக்கானின் அம்மா ஹாஜிரா மணியத்தின் அம்மாவின் கைகளை பற்றி பிடிட்துக் கொண்டு, ‘யாரு செய்வா இப்படியெல்லாம்.. அல்லாட்ட உங்களுக்காக ரொம்ப துஆ செஞ்சேன்.. அல்லா உங்கள்ட காரியம் எல்லாத்தையும் ராஹத்தாக்கி வப்பான்.. எஜமான் ராஹத்தாக்கி வப்பாங்க.. ‘ என்று நாகூர் பக்கம் கையை காட்டினார்.

—-

மணியன் அன்று ரொம்ப சோகமாக இருந்தான். மரைக்கான் உள்பட யாரிடமும் சரியாக பேசவேயில்லை. மரைக்கான் கவலையுடன் ‘ஏங்கணி.. காலைலேந்து ஒரு மாதிரியா இருக்கியோம் ? ‘ என்றான்.

மணியன், ‘ஆமா.. அம்மா யார்ட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா.. ? ‘ என்றான்.

மரைக்கான், ‘அப்படி என்ன சொல்ல கூடாது.. சொல்லும் இல்லன்னா அம்மாகிட்டேயே நான் கேட்டுக்குறேன் ‘ என்றான்

மணியன் ரொம்ப யோசித்து விட்டு, ‘சரி.. நானே சொல்றேன்.. ஆனா யார்கிட்டேயும் சொல்லாதீயோம் ‘ என்றான்

மரைக்கான், ‘அதெல்லாம் சொல்ல மாட்டாஹங்கணி.. சீக்கிரம் சொல்லும் ‘ என்றான் ஆர்வமாக

மணியன் சுற்றும் முற்றும் பார்ட்து விட்டு, ‘நேத்து ஒரு ஜோசியக்காரர் ஆத்துக்கு எங்க ஊர்லேந்து வந்திருந்தார்.. ‘ என்றான்

மரைக்கான், ‘வந்துட்டாரா.. ‘ என்றான்.

மணியன், ‘சொல்றத கேளும்.. ‘ என்றான்

மரைக்கான், ‘கேட்டுட்டு தானேங்கணி இருக்கேன்.. ‘ என்றான்

மணியன், ‘ஜோசியக்காரர் வந்து.. வந்து.. ‘ என்று இழுத்தான்.

மரைக்கான், ‘அதான் வந்துட்டாரே.. அப்புறம் சொல்லும்.. ‘ என்றான்.

மணியன், ‘இல்ல.. அவா சொல்றா.. எனக்கு அல்பாய்சாம்.. நான் சீக்கிரமே செத்து போய்டுவேனாம் ‘ என்று அழுதான்.

மரைக்கான், ‘அழுவாதியோங்கணி.. ஜோசியக்காரர் என்ன அல்லாவா.. இவர் யாரு சொல்றதுக்கு.. ? ‘ என்றான்

மணியன், ‘நாலு ரோடு சந்திக்கிற இடத்துல தான் நான் செத்து போவேனாம்.. ‘ என்றான்.

மரைக்கான், ‘அல்லா.. அல்லா.. அப்படியெல்லாம் இல்லங்கணி.. ‘

மணியன், ‘இல்ல.. இல்ல.. நான் ஆம்புடையானா பொறப்பேன்னு இவா தான் சொன்னா.. எங்க குடும்பத்துக்கு மட்டும் இவா சொல்றது எப்பவுமே சரியா தான் இருக்கும் ‘ என்றான்.

மரைக்கான், ‘சரி மொதோ நாளு நீம்பர் இந்த பள்ளிகூடத்துக்கு வந்தப்ப எங்கிட்ட பேனா வாங்குனியமே அது எதுக்கு வாங்குனீயோம் ? ‘ என்று கேட்டான்

மணியன் ‘என் பேனா சரியா எழுதல்.. ‘ என்றான்

மரைக்கான், ‘அந்த பேனா நல்லா தானே எழுதும்.. ‘ என்றான்

மணியன், ‘அது நன்னா தான் எழுதும்.. ஆனா அன்னக்கி மட்டும்.. ‘ என்று நிறுத்தினான்

மரைக்கான் தொடர்ந்தான், ‘உம்பர்ட பேனா மாதிரி தான் அந்த ஜோசியக்காரரும்.. நல்லா தான் சொல்வார் ஆனா அன்னைக்கி மட்டும் சரியா சொல்லல.. சரியா.. ‘ என்றவன் மணியத்தின் கண்களை துடைத்து விட்டு, ‘கவலைப்படாதீயோம்.. என் ‘ஹீரோ ‘ பேனா உதவி செஞ்ச மாதிரி நானே ‘ஹீரோ ‘ மாதிரி வந்து உதவி செய்வேன் ‘ என்று சொன்னதும் மணியன் அன்று முதன்முறையாக சிரித்தான்.

மதியம் உணவு இடைவேளையின் போது கவலையுடன் வந்த ஜானகி மணியன் அங்கு மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து விட்டு ஆச்சர்யப்பட்டு போனார். மணியன் மரைக்கான் சொன்னதை எல்லாம் சொல்லி கான்பித்தான். ஜானகி உளம் மகிழ்ந்து கண்ணீர் வடித்தார்.

ஜானகி மணியத்திடம், ‘மரைக்கான் இப்ப எங்கே ? ‘ என்றார்.

மணியன், ‘அவனுக்கு பசிக்கிறதாம்.. சாப்ட போயிட்டான்.. ‘ என்றான்.

ஜானகி, ‘அவன ஒரு முறை பார்க்கணும் ‘ என்றார்

அதே நேரத்தில் மரைக்கான் இறைச்சி கறியை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.

—-

சங்கரய்யர் எப்போதும் வேலை முடிந்து கலைப்பாக வருபவர் அன்று உற்சாகமாக ‘ஜானகி.. ஜானகி.. ‘ என்று கத்திக் கொண்டே வந்தார்.

ஜானகி, ‘ஏன்னா.. என்ன ரொம்ப உற்சாகமாக இருக்கேள்.. ஏதாவது புரோமஷனா.. ? ‘ என்றார்

சங்கர், ‘இல்லடி.. எனக்கு மறுபடியும் டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு.. ‘ என்றார்

ஜானகி, ‘அதுக்கா சந்தோஷப்பட்டேள்.. ‘ என்று அலுத்துக் கொண்டார்.

சங்கர், ‘அதில்லடி அசடு.. இந்த முறை நம்ம சொந்த ஊருக்கே மாத்தி போறோம்.. தெரியுமோன்னோ.. ‘ என்றார்.

ஜானகி, ‘ஏன்னா.. என்ன சொல்றேள்.. ரொம்ப சந்தோஷமான்னா இருக்கு.. எப்போ போற மாதிரி இருக்கும்.. ? ‘ என்று கேட்டார்.

சங்கர், ‘இன்னும் ரெண்டு நாள்ல.. ‘ என்றார்

ஜானகி, ‘அச்சச்சோ.. அப்ப பிள்ளைங்க படிப்பு என்னாறது.. ? ‘ என்றார்

சங்கர், ‘கவலைப்படாதே.. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.. ‘ என்றார்

ஜானகி ஆச்சர்யப்பட்டு ‘நல்ல சேதி கொண்டாந்திருக்கேள்.. மொகம் கை கால் அழம்பிட்டு வாங்கோ.. அதுக்குள்ள அருமையான் காப்பி கலந்துடறேன்.. ‘ என்றார்.

—-

மரைக்கானுக்கு அந்த செய்தியை கேட்டதும் ஏற்பட்ட கவலையில் மணி பத்தரைக்கு மேல் ஆகியும் அன்று இரவு தூக்கம் வரவில்லை. இடையில் வந்து பார்த்த ஹாஜிரா மரைக்கான் தூங்காமல் இருப்பதை பார்த்து விட்டு, ‘மரைக்கான்.. தூங்கு.. நாளைக்கு ஸ்கூல் போவனும்.. அல்லா-உன்-தவக்கல்.. தூங்கு.. ‘ என்றார்

அதே நேரத்தில் அந்த ஊரில் உள்ள மருத்துவமனை வாசலில் ஒரு மத கூட்டம் என்ற பெயரில் தங்களுடைய மதத்தில் உள்ள உயர்ந்த கருத்துக்களை பற்றி கூறாமல் தாங்கள் ஏற்காத மற்ற மதத்தை பற்றியும் அந்த மதத்தின் தலைவர் பற்றியும் குடும்பத்தார் பற்றியும் அவதூறாக தகாத வார்த்தைகளில் எடுத்துக் கூற அப்படி பேசியவர் மீது கல்லை விட்டு எறிகிறார்கள் அதை பொறுக்க முடியாத பாதிக்கப்பட்ட மதத்திற்குறியவர்கள்.

அவ்வளவு தான்.. கலவரம் வெடிக்கிறது. வெட்டு குத்து என்று இரத்த ஆறு ஓடுகிறது. கடைகள் தீக்கிரையாகிறது. வீடுகள் தாக்கப்படுகின்றது. அமைதிக்கும் மத ஒற்றுமைக்கும் ஓர் எடுத்துக் காட்டு என்று இருந்த ஊர் இன்று அந்த நல்ல பேர் அழிந்து நாசப்படுத்தப்படுகிறது.

காலையிலிருந்து பேருந்து ஒட வில்லை. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.

ஊரடங்கு சட்டம். நான்கு பேராக சேர்ந்து இருக்க கூடாது. இரவு ஆறு மணிக்கு மேல் வெளியேயே யாரும் இருக்கக்கூடாது.

—-

மரைக்கானுக்கு பெரிதும் கவலையாகி விட்டது. தனது தாயிடம், ‘மணியன் இன்னைக்கி ஊருக்கு போறான்.. நான் நாகப்பட்டணம் போவா ? ‘ என்றான்

ஹாஜிரா, ‘ஏன் ஒரு நாய்க் குட்டியும் சேர்த்து கூட்டிட்டு போயேன் ‘ என்றார்.

மரைக்கான் பொறுக்காமல், ‘நான் மணியத்துகிட்ட போன் பேசப் போறேன் ‘ என்று தொலைபேசியை கையில் எடுத்தவன் அதிர்ந்தான். தொலைபேசியில் இயக்கமில்லை.

—-

மணியன் மரைக்கான் வீட்டு எண்கள் எழுதி வைத்திருந்த தாளை பார்த்து பார்த்து எண்கள் சுழற்றி பார்த்து விட்டு, ‘போன்ல எங்கேஜ்ட் சவுண்டே வர்ரது.. ‘ என்றான்.

ஜானகி, ‘இரு நான் டிரை பண்றேன்.. ‘ என்று முயன்றவர் தோற்றார்.

சங்கர் முயன்று பார்த்து விட்டு, ‘அங்க போன் டெட்டா இருக்கு ‘ என்றார்.

சொந்த ஊர் செல்ல சாமான்கள் தயாராக இருந்தன. சாமான்கள் எல்லாம் அதற்குரிய வாகனத்தில் ஏற்றப்பட்டது.

சங்கர், ஜானகி, மணியன், லலிதா எல்லோரும் சங்கர் அவர்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்து தந்திருந்த சீருந்தில் ஏறினர். சீருந்து அந்த பள்ளிகூடத்தை கடந்த போது மணியனுக்கு மரைக்கானின் ஞாபகம் வந்து கண்களை நனைத்தது. சீருந்து திருவாரூரை அடைந்தது. ஒரு உணவகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டது. தேநீர் அருந்த எல்லோரும் இறங்கிய போது மணியன் மட்டும் இறங்கவில்லை.

ஜானகி கேட்டார், ‘என்ன ? வயித்துக்கு ஏதாவது எடுத்துக்கலைன்னா உடம்புன்னா கெட்டு போயிடும் ‘ என்றார்.

மணியன் எதுவும் சொல்லவில்லை.

ஜானகி, ‘மரைக்காண்ட்ட சொல்லணும்.. இல்லையா ?.. சரி அந்த போன் நம்பர் எழுதுன பேப்பர் எங்கே ? ‘ என்றார்

மணியன் உற்சாகத்தில், ‘இதோ ‘ என்று தேட ஆரம்பித்தான். தேடிக் கொண்டே இருந்தான்.

ஜானகி கேட்டார், ‘என்ன.. வழக்கம் போல் மறந்து ஆத்துலேயே வச்சுட்டியா ? ‘ என்றார்

மணியன் ‘ஆமாம் ‘ என்று அழுதான்.

நல்ல மனங்களை தேடும்..

அ.முஹம்மது இஸ்மாயில்

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்