சந்திரமுக அந்நியன்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பத்ரிநாத்


வழக்கத்திற்கு மாறாகவோ என்னவோ இப்போது மழை வருவதைப் போல இருக்கிறது.. ஐப்பசி கார்த்திகை அடைமழை என்றுதான் சொல்லுவார்கள்.. முழுக்க கவிழ்ந்திருக்கும் மேகக் கூட்டம் மாலைப் பொழதின் அழகையே மேலும் மெருகூட்டிக் கொண்டிருக்கிறது.. மொபட் வண்டியின் வேகத்தைக் கூட்டினான் சந்திரன்..

சில்லென்ற காற்று முகத்தை ஆரத் தழுவிக்கொண்டது.. எத்தனை இன்பம்.. கண்மணி நினைவைப் போல.. அவனைப் பார்த்ததும் முகம் மலரும் கண்மணி.. பளிச்சென்ற பூவைப் போல அந்த முகம்.. காலம் முழுவதும் என்னுடன் கூடவே வரும் அந்த மலர்ச்சி.. அந்த மலர்ச்சியின் மொத்த உரிமையாளன் நான்தான்.. நினைக்க நினைக்க இன்பமாகவும், சற்று அச்சமாகவும் இருக்கிறது.. ஏன் இந்த இனம் புரியாத அச்சம்.. விளங்கிக் கொள்ள முடியவில்லை..

கண்படும் என்று பெரியவர்கள் கூறகிறார்களே.. அதை அவன் நம்பியதில்லை.. புரியவும் புரியாது.. ஆனால் கண்மணி அவன் வாழ்க்கைத் துணையாக ஆனதிலிருந்து பலர் – சொந்தங்கள், நண்பர்கள் – அவன் அதிருஷ்டசாலி என்று கூறிக் கொண்டே இருப்பது காதில் விழுந்த போது, தாயாரிடம் சற்று மகிழ்ச்சி கலந்த வருத்தமாகச் சொன்னான், சந்திரன்.. ‘ ‘பின்ன.. அதான் பெரியவக சொல்வாகளே.. கண் படும்னு.. சுத்திப் போட்றணும் மருமவளுக்கு.. ‘ ‘, என்றார்.. அதைவிட வேறு ஏதோ ஒன்று அவனை உறுத்திக் கொள்டே இருந்தது.. அது என்ன.. ?

கண்மணி பளீர் வெள்ளை இல்லைதான்.. அவனுக்கு அப்படிப்பட்ட நிறம் சுத்தமாகவே பிடிக்காது.. அதற்காக கருப்பும் இல்லை.. மேகக்கூட்டம் கவிந்த இந்த மாலைப் பொழுதைப் போல குளிர்ச்சியான கலவை அவள்.. அவள் வரிசைப் பற்கள் சிரிப்பு அவள் காலில் இருக்கும் வெள்ளிக் கொலுசைப் போல மினுமினுப்பு.. அளவெடுத்ததைப் போல உடலமைப்பு.. எனக்கு இவள் வாய்ததது என் முன் சென்மப் புண்ணியம்.. இறைவன் திருவருள்.. இந்த ஆறு மாதங்களில் – இவளைக் கரம் பற்றியதும் எத்தனை மாறுதல்கள்.. உலகமே மாறிவிட்டதே.. எதைப் பாத்தாலும் புதிதாகவும், பயங்கலந்த உணர்வாகவும் இருக்கிறதே.. ஏன் அம்மாதிரியான உணர்வு.. இதுவரை ஏற்படாத உணர்வு. யாரோ என்னைப் பொறாமைக் கண்களுடன் பார்ப்பதாகவே தோன்றிக் கொண்டேயிருக்கிறதே..

இவளின் அழகிற்கு நான் ஈடா.. ? என்னிடம் என்ன இருக்கிறது.. அப்படிச் சொல்லிக் கொள்வதைப் போல.. ம்ஹீம்.. என்னைவிட அழகு, தகுதி, வளமை மிக்கவனுக்கு வாய்க்கப் பட வேண்டியவள் – இவள்.. இன்று என்னையே ‘ ‘அத்தான்.. ‘ ‘ என்று வளைய வருகிறாள்.. இவளின் அன்பு.. தெளிந்த நீரோடைப் போன்று எத்தனை சுத்தமானது.. அதில் எந்தக் கரையும் இல்லையே.. நானும் அதே அன்பைக் காட்டுகிறேன்.. எந்தக் குறையும் இல்லை.. காலம் முழுவதும் அவளும் நானும் – எந்தக் காலத்திலும் நானும் அவளும் இப்படியே.. இருக்க வேண்டும்.. இருப்போமா.. ? இருப்போம்.. எதுவும் நடக்காதே.. நடக்காது.. அந்த அழகு முகம் சுணங்க ஒரு நாளும் விடமாட்டேன்..

ஆனால் காலத்தின் ஓட்டம் நம் கையில் இல்லையே.. எத்தனையோ பார்க்கிறோம்.. படிக்கிறோம்.. சின்னச் சின்ன விசயங்கள், உரசல்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகப் போய்ப் பிரிந்து சென்ற அவன் அத்தையும் மாமனும்.. மாமன் யாருடனோ, அத்தை யாருடனோ குடும்பம் நடத்துகிறார்கள்..

கொஞ்சம் அழகாக இருந்தால் போதும், வைத்த கண் வாங்காமல் விழுங்குதைப் போலப் பார்க்கும் அவன் சகலை கமலக்கண்ணன்.. கண்மணியை விட்டு வைப்பானா.. அப்படித்தான் பார்த்தான்.. எங்கே கை மீறிப் போய் அடித்துவிடுவோமா என்று தோன்றிவிட்டது.. அடக்கிக் கொண்டான்.. அவன் அப்படிப் பார்ப்பதுகூட கண்மணிக்குத் தெரியவில்லை.. எத்தனை வெள்ளந்தியாக இருக்கிறாள்.. ஒரு வேளை தான் ஒரு அழகு என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை.. ஆம் அதுதான் உண்மை.. பாவம்.. அது அவனுக்குப் புரிந்த போது கண்மணி மேல் பிரியம் மேலும் கூடிற்று..

ஆனால் கண்மணியிடம் சொல்லி வைக்க வேண்டும்.. ‘ ‘கண்ணு.. நாம எப்படிப் பட்ட

உலகத்தில இருக்கோம்.. ‘ ‘, என்று சொல்ல வேண்டும்.. ‘ ‘ கண்ணால கற்பழிக்கிற கயவாளிப் பசங்க இருக்கற உலகத்தில் இருக்கோம் கண்ணு.. ‘ ‘, என்று சொல்ல வேண்டும்.. ‘ ‘சாக்கிரதையா இருக்கணும் கண்ணு. ‘ ‘ என்றும் சொல்ல வேண்டும்..

அவளிடம் எப்படிச் சொல்வது.. நேரடியாகச் சொல்லச் சற்றுத் தயங்கினான்.. ஒரு வேளை அவள் விநோதமாகப் பார்க்கலாம்.. அல்லது என்னையே தவறாக எண்ணிவிடக் கூடும்.. என்ன இவன் ஒரு சந்தேகப் பேர்வழியோ என்று நினைக்கக் கூடும்.. எங்கோ படித்த ஞாபகம்.. சந்தேகப் படும் கணவனைச் சில பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று.. அய்யோ.. நான் என்ன கட்டியவளை நம்பாமல் சந்தேகப்படும் கொடுமைக்கார ஆளா… சேச்சே அதுவும் என் கண்மணியைச் சந்தேகப் படுவேனா.. சொக்கத் தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனா.. அடக் கடவுளே.. நான் சொல்ல வந்தது அதுவல்ல.. எப்படிப் புரிய வைக்கப் போகிறேன்.. ஒரே தவிப்பாகவே இருக்கிறதே.. இந்த உலகம் ஒரு கொடுமைக்கார உலகம் என்று அவளிடம் சொல்லியே தீரவேண்டும்.. நன்றாக வாழ்ந்தால் பொறாமைப் பிடித்தலையும் என்று.. சகிக்காது என்று.. அழுக்கு நிறைந்த உலகம் என்று.. இந்தச் சாதாரண குமாஸ்தாவிற்கு இப்படியொரு ராஜாத்தியா என்று பொருமும் உலகம் என்று..

‘அப்படியொரு வெறிபிடித்த ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம் கண்ணு.. பால் மனதாக இருக்கிறாயே கண்ணு.. உன் மனதை பாழ் படுத்திவிடுமோ இந்த உலகம் என்று கவலையாக இருக்குது கண்ணு.. என்னைச் சரியாகப் புரிந்து கொள்வாயா கண்ணு.. ‘,

‘ ‘ஏன்டா.. ஒஞ் சகல கமலக்கண்ணன் நாளைக்கி சாயங்காலம் வர்றானாம்.. ஃபோன் வந்ததா உம் பொஞ்சாதி சொன்னா.. ‘ ‘, என்றார் தாயார்..

கொள்ளிக் கண்ணன்.. இவன் ஏன் இங்கு வருகிறான்.. சே.. இப்போது என்ன செய்வது.. ‘ ‘என்ன வேலயாம்.. ? ‘ ‘,

‘ ‘ஏதோ வேலையாம்.. நண்பர்களோட சாயங்காலம் வர்றேன்னு சகலகிட்டச் சொல்லிடு கண்மணின்னு சொன்னாரு.. ‘ ‘,

‘ ‘அய்யய்யோ.. ‘ ‘, விலாவில் குத்து பட்டதைப் போலத் துடித்தான், சந்திரன்.. ‘ ‘சொல்லவே மறந்துட்டேன்.. நாளைக்கி எங்க மேலதிகாரி ஹோட்டல் ப்ளு டைமண்டில் பார்ட்டி கொடுக்கிறார்.. ஏற்பாடு பண்ணிட்டாராம்.. நா ஃபேமலியோட வர்றேன்னு வாக்கு கொடுத்துட்டேன்.. நாம போயே ஆகணும் கண்ணு.. இல்லைன்னா மேலதிகாரி தப்பா எடுத்துகிடுவார்.. அம்மா.. நீ சகலகிட்டச் சொல்லிடு, வேற வளியில்லை.. ‘ ‘, யாருக்கும் சந்தேகம் வராமல் சொல்லவே, இருவரும் மெளனமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர்..

****

‘ ‘யாரோ ஆபிஸ் அதிகாரி வருவார்னுதான் போனோம் அத்த.. என்னய ஃமேமிலி ரூம்ல ஒக்கார வச்சுட்டு, கொஞ்ச நேரம் இவரு வெளியே போயி ஃபோன் போட்டுட்டு வந்து சொல்றாரு.. அதிகாரி வீட்ல ஏதோ விபத்து ஆயிருச்சாம்.. அதனால வரலைன்னு வந்து சொல்றாரு.. வாங்க உடனே வூட்டுக்குத் திரும்பலாம்னு சொல்றேன்.. வந்தததுக்கு சாப்டுட்டுப் போயிறலாம்னு சொன்னாரு.. சாப்டப் பிறகு சீக்கிரம் வா.. சகலை காத்துட்டு இருப்பாருனு ஆட்டோவில கூட்டிட்டு வந்தாரு.. கடசியில பாக்க முடியாம போயிருச்சு.. சே.. ஏங்க நாம சாப்பிடாம வந்திருந்தாகூட வீடு தேடி வந்தவங்கள பாத்திருக்கலாம்.. ‘ ‘,

‘ ‘அட.. நீ வேற கண்மணி.. அவரு இருந்ததே கொஞ்ச நேரம்தான்.. வந்தாரு.. அஞ்சு நிமிசத்துல கெளம்பிட்டாரு.. நா இவன்கிட்ட போன்ல சொன்னேனே.. ‘ ‘, தாயார் வேறு குட்டை உடைத்துவிடுவார் போலயிருந்தது.. ஏதோ பேசி சிரமத்துடன் பேச்சை திசை திருப்பிவிட்டான்..

‘ ‘அதுக்கு என்ன கண்ணு.. ஒரு நா ஊருக்கு நேரா போயி பாத்துறலாம்.. போனா போவுது.. விடேன்.. என்னப்ப.. ‘ ‘,

ஸ்ஸ்.. இயன்றவரை முகத்தைச் சோகமாக வைத்திருக்க முயன்றான், சந்திரன்.. மனதில் ஏற்படும் குரூர மகிழ்ச்சி வெளியே தெரியக்கூடாது.. சில சமயங்களில் கண்மணியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. சே.. கட்டியவளிடமும், சொந்தங்களிடமும் இப்படி நடந்து கொள்கிறோமே.. என்னை மன்னித்துவிடு கண்மணி.. எனக்கு வேறு வழி தெரியவில்லை.. என் மனது இப்படித்தான் நடந்து கொள்ள வைக்கிறது.. வெளியே செல்லும்போது உன்னை பிறர் பார்க்கிறார்களே.. அதை என்னால் என்ன செய்துவிட முடிகிறது.. ஆனால் இந்தச் சொந்தங்கள், தெரிந்தவர்களைத்தான் நம்ப முடிவதில்லை.. காரணம் அவர்கள்தான் எதையாவது

கூறிக் கொண்டு உன்னிடம் பழகுவார்கள்.. பெரும்பாலும் அவர்களிடமிருந்துதான் ஒரு பெண்ணிற்குப் பிரச்சனை என்று எந்தப் பத்திரிகையிலோ படித்த ஞாபகம் அவனுக்கு… ஒரு விதத்தில் நம் மன அவஸ்தைக்காக இப்படி பிறரை அலைக்கழிக்கிறோமே.. சரியா.. புரியவில்லை.. சரியோ தவறோ.. ‘ஆனால் என்னைப் பொருத்தவரையில் நான் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று அறுதியிட்டுக் கூறுவேன்… ‘

எங்காவது தினசரிகளில், இதழ்களில் எதையாவது பார்க்க நேரிடும் போது மன உளச்சலாகவே இருக்கிறது.. இப்போதெல்லாம் எந்தப் பத்திரிகைகளைத் திறந்தாலும் கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்.. குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் பயங்கரம் போன்ற பாலியில் குற்றங்களைப் பற்றியே படிக்க நேரிடுகிறது.. மெல்லப் பரவும் கள்ளக் காதல் என்று பெரிய போஸ்டரே போடுகிறார்களே.. ஒரு வேளை நான்தான் அதைத் தேடிப் படிக்கிறேனோ இல்லை அவ்வாறுதான் உலகமே மாறிவிட்டதா.. புரியவில்லை..

‘ ‘என்னங்க இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிக்கிட்டு வர்றிங்க.. ‘ ‘, என்று சன்னலிருந்து எட்டிப் பார்த்துக் கேட்டது நிலவு..

‘ ‘இன்னிக்கு சீக்கிரமாகவே வந்துட்டே.. வந்தது நல்லதாப் போச்சு.. ‘ ‘, என்றார் தாயார்.

‘ ‘ஏம்மா.. ‘ ‘, என்று வினவினான் சந்திரன்..

‘ ‘நம்ம பெரியசாமி இருக்கார்ல.. அதாண்டா உங்கப்பா தூரத்து உறவுக்காரர்.. அவரு, அவரு ரெண்டு பசங்க, மருமவ எல்லாரும் நம்ம வீட்டுக்கு வர்றாங்க.. குடும்பத்தோட இந்தவூருக்கு வந்தாங்களாம்.. அவங்க ஒன் கல்யாணத்துக்கு வேற வரலியா.. அதான் அப்படியே ஒரு எட்டுப் பாத்துட்டுப் போவலாம்னு வர்றாங்க.. ‘ ‘,

‘ ‘ஓகோ.. சந்தோசம்.. அப்ப நாங்க இருக்கணும்னு அவசியம் இல்லையே.. ‘ ‘,

‘ ‘அதெப்படி.. நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா.. அவங்க ஒங் கலியாணத்த விசாரிக்க வர்றாங்க.. புது மருமவள வேற பாக்கணும்.. என்னடா.. கொளப்பற.. ‘ ‘,

‘ ‘என்னம்மா… இன்னிக்கிப் பாத்து அந்தப் புதுப் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிக் கொடுத்தான் என் ஃபிரண்டு.. நாம போய்த்தான் ஆகணும் கண்மணி.. ஐநூறு ரூபா கொடுத்து வாங்கிருக்கேன்.. ‘ ‘, என்று ஆரம்பித்தான் சந்திரன்..

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்