ஒரு இந்தியக் கனவு

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

என்.கணேசன்


‘இது மினிஸ்டரோட பர்சனல் விஸிட். அதனால் தான் கட்சிக்காரங்களுக்கும், பிரஸ்ஸுக்கும் தகவல் தரல. ஆனா நம்ம போலீஸ் பாதுகாப்பு மட்டும் வழக்கம் போல இருக்கட்டும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு ‘

‘அவர் எங்கே போறார் ? ‘

‘கருவலூர் கிராமத்திற்கு ‘

‘அங்கேயா…அங்கே சாதாரணமா அரசியல்வாதிங்க போக மாட்டாங்களே ‘

‘அந்தப் பெரியவரும், மினிஸ்டரும் அந்தக் காலத்து நண்பர்களாம் ‘

விமானம் வந்திறங்கியதும் போலீஸ்காரர்களின் பேச்சு நின்றது. மத்திய மந்திரி சுந்தரேசன் விமானத்தை விட்டு இறங்கியதும் போலீஸ் உயர் அதிகாரிகளின் சல்யூட்டைப் பொருட்படுத்தாமல் நேராக தனது நண்பர் சீனிவாசனிடம் சென்று விசாரித்தார்.

‘எப்படியிருக்கான் ? ‘

‘சீரியஸ் தான். ஆனா பேச முடியுது. பேசறப்ப எப்பவும் போல் தெளிவாய்ப் பேசறான் ‘

சுந்தரேசன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அவரது கார் முன்னும் பின்னும் போலீஸ் கார்கள் வர, கருவலூர் புறப்பட்டது.

சுந்தரேசன் வேதமூர்த்தியைப் பார்த்து முப்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. வேதமூர்த்தியைப் பற்றி சீனிவாசன் மூலமாகவும், மற்றவர்கள் மூலமாகவும் அவ்வப்போது தகவல் சேகரித்தாலும் நேரில் சென்று பார்ப்பதை அவர் இத்தனை வருடங்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். வாழ்வில் அவர் வேதமூர்த்தியைப் போல வேறொரு மனிதரை மதித்ததோ, நேசித்ததோ இல்லை. ஆனால் வேதமூர்த்தியை நேரில் சந்திப்பது மனசாட்சியை நேரில் சந்தித்துப் பேசுவது போல மிகவும் சங்கடமான விஷயமாக இருந்தது. எனவே அதை முடிந்த வரை தவிர்த்து வந்தார். வேதமூர்த்தி மரணத்தை நெருங்குகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் சுந்தரேசன் கிளம்பி விட்டார்.

‘சீனி… ‘

‘என்ன சுந்தர் ? ‘

ஒன்றுமில்லை என்று சுந்தரேசன் தலையசைத்தார். இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை சீனிவாசனிடம் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை இப்போதும் அவரால் கேட்க முடியவில்லை. பதில் என்ன வருமோ என்ற பயமே பல முறை கேள்வி கேட்பதை நிறுத்தி வைக்கிறது.

‘வேதமூர்த்தி என்னைப் பற்றி ஏதாவது கேட்டானா, என்னைப் பற்றி ஏதாவது சொன்னானா ? ‘ என்று கேட்க நினைத்தவர் மறுபடி கேள்வியை நிறுத்தி வைத்தார்.

அந்த மூவரும் முதல் முறை ஒருவரை ஒருவர் சந்தித்தது சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற போது. ஒரே சிறையறையில் அடைக்கப் பட்ட ஒரு கூட்டத்தில் மூவரும் இருந்தார்கள். எல்லோரும் பேசிக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டிருந்த போது, அமைதியாகப் படித்துக் கொண்டும், யோகப் பயிற்சி செய்து கொண்டும் இருந்த வேதமூர்த்தி என்கிற அந்த இளைஞன் சீனிவாசனையும், சுந்தரேசனையும் நிறையவே கவர்ந்தான். பேச்சுக் கொடுத்த போதும் தேவையானதைத் தேவையான அளவு மட்டுமே வேதமூர்த்தி பேசினான். ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே இருக்கவில்லை. தெரிந்த விஷயங்களில் கூட மிகத் தெளிவாய் இருந்தான். அப்போது ஆரம்பித்தது அவர்கள் இருவருக்கும் வேதமூர்த்தி மீதிருந்த ‘ஹீரோ வர்ஷிப் ‘. அந்த மூவரும் சீக்கிரமாகவே நெருக்கமாகி விட்டார்கள்.

அவர்கள் பல விஷயங்கள் பற்றிப் பேசினாலும் அதிகமாய்ப் பேசியது சுதந்திர இந்தியாவைப் பற்றித் தான். வேதமூர்த்தி அது பற்றிப் பேசும் போது மட்டும் ஒரு புதிய மனிதனாக மாறி விடுவான். ஒரு தன்னிகரற்ற பாரதத்தைப் பற்றிப் பேசுவான். அப்போதெல்லாம் அவனது கண்களில் ஒரு பிரத்தியேக அக்னி ஜொலிக்கும். அந்தக் கனவின் பிரம்மாண்டத்தில் மூவரும் மூழ்கித் திளைப்பார்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் சுதந்திரம் ஒரு தீர்வாக அந்த இளைஞர்களுக்குத் தோன்றியது.

அவர்களது நட்பு சிறையில் இருந்து விடுதலையான பின்பும் தொடர்ந்தது. சுதந்திர நாளில் அந்த மூவரும் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அந்த நாள் இன்னும் சுந்தரேசனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. வேதமூர்த்தியின் சந்தோஷம் வற்றிப் போய் சிந்தனை ஆரம்பித்த அந்தக் கணத்தில் அவரும் உடன் இருந்திருக்கிறார்.

அன்று அவர்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த ஒருவன் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ‘என்னது.. டிக்கெட் வாங்கினியா. எதுக்கு ? நமக்குத் தான் சுதந்திரம் கிடைச்சாச்சே. இனி எதுக்கு வாங்கணும் ‘

வேதமூர்த்தி அன்று அடைந்த அதிர்ச்சி, தொடர்ந்த நாட்களில் மக்களை உன்னிப்பாக கவனித்த போது அதிகரிக்கத் தான் செய்தது. அவர்கள் மூவரில் முதலில் விழித்துக் கொண்டது வேதமூர்த்தி தான். ‘சுந்தர் நாம் நினைச்ச மாதிரி இல்லை. இந்த சுதந்திரம் நம்ம ஜனங்களுக்குப் பெருசா எதையும் செய்துடப் போறதில்லை ‘.

சுந்தரேசனுக்கு வேதமூர்த்தி தேவையில்லாமல் பயப்படுவதாகத் தோன்றியது. ‘வேதா நீ முதல் முறையா ஒரு ‘பெசிமிஸ்ட் ‘ மாதிரிப் பேசறே. என்ன ஆச்சு உனக்கு ? ‘

வேதமூர்த்தி பதில் சொல்லவில்லை. ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்து போன வேதமூர்த்தியைப் புரிந்து கொள்ள முடியாமல் இளைஞன் சுந்தரேசன் குழம்பினான். தொடர்ந்து வேதமூர்த்தியின் கவலைக்குக் காரணம் கேட்ட போது வேதமூர்த்தி சொன்ன பதில் இப்போதும் சுந்தரேசன் காதில் ஒலிக்கிறது. ‘வெள்ளைக் காரன் போயிட்டான். ஆனா அவனை விடப் பெரிய எதிரியை, ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த எதிரியை நாம் இன்னும் நம்மோட வச்சிருக்கோம். அது நம்ம ஜனங்களோட அறியாமைங்கிற எதிரி. அதிருக்கிற வரை நாம கனவு கண்ட பாரதம் சாத்தியமில்லை சுந்தர் ‘

பாரதியின் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ வேதமூர்த்திக்கு மிகவும் பிடித்த பாடல். பாரதி முன்னமே இந்த மக்களின் நாடி பிடித்து விட்டுப் பாடிய பாடல் அது என்று அடிக்கடி வேதமூர்த்தி கூறுவதுண்டு.

எல்லோருக்கும் கல்வி கிடைத்து விட்டால் இந்த அறியாமை எதிரி காணாமல் போய் விடும் என்ற நம்பிக்கை அந்த நாட்களில் சுந்தரேசனுக்கு இருந்தது. ஆனால் அது ஏட்டுக் கல்வியால் சாதிக்கக் கூடிய காரியம் இல்லை என்பது வேதமூர்த்தியின் வாதமாக இருந்தது.

சீனிவாசனைப் பொருத்த வரை சுதந்திரம் கிடைத்தவுடன் தனது பணி முடிந்து விட்ட திருப்தி இருந்தது. வியாபாரம் செய்வதில் முழு மூச்சாக இறங்கி விட்டார். சுந்தரேசனுக்கும், வேதமூர்த்திக்கும் சிறையில் கண்ட அந்த பாரதக் கனவை மறக்க முடியவில்லை. சுந்தரேசன் அரசியலில் இறங்கத் தீர்மானித்தார். வேதமூர்த்தியையும் அழைத்தார். வேதமூர்த்தி ஒத்துக் கொள்ளவில்லை.

‘ஏன் வேதா ‘

‘எந்த மாற்றமும் மேலேயிருந்து திணிக்க முடியாது சுந்தர். நல்ல நிர்வாகம், நல்ல சட்டங்கள் இதெல்லாம் முக்கியம் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா ஜனங்கள் மாறும் வரை அதனாலும் பெரிய மாறுதல் வந்து விடாது சுந்தர். ‘

‘அப்ப என்ன தான் செய்யப் போறே வேதா ‘

‘நான் கிராமத்துக்குப் போகப் போகிறேன் ‘

‘போய்… ? ‘

‘நம்ம கனவுப் படி தேசத்தை மாத்த முடியாட்டியும் ஒரு கிராமத்தையாவது மாத்திப் பார்க்க ஆசைப் படறேன் ‘

சுந்தரேசனுக்குச் சப்பென்று போய் விட்டது. இத்தனை பெரிய அறிவுஜீவி தன் கனவை இப்படிச் சுருக்கியதில் அவருக்குப் பெரிய ஏமாற்றம். நண்பர்கள் தத்தம் திசைகளில் பயணம் துவங்கினார்கள்.

சுந்தரேசன் வெற்றி மீது வெற்றி கண்டார். எம்.பி ஆனார். பின்பு மந்திரி, அயல்நாட்டு தூதர், கவர்னர் என்று ஏதாவது ஒரு பதவியில் தொடர்ந்து இருந்தார். முடிந்த வரை மக்களுக்கு நல்லது செய்தார். பத்திரிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் அரசியலில் தொடர்ந்து நீடிக்க எத்தனையோ ‘காம்ப்ரமைஸ் ‘ செய்ய வேண்டியிருந்தது. ஊழல், சொத்து சேர்த்தல் செய்யா விட்டாலும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் கஷ்டமாய் இருந்தது. பின்பு மனம் பக்குவப் பட்டது.

வேதமூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே தனது பணியின் பளுவை உணர்ந்தே இருந்தார். ஆங்கிலேயர்களை அனுப்புவதற்கும், ஆட்சிகளை மாற்றுவதற்கும் மக்களை ஒன்று திரட்டுவது எளிதாக இருந்தது. ஆனால் அவர்களே மாற வேண்டும் என்று இதுவரை யாரும் சொல்லி வென்றதில்லை. அப்படிச் சொல்லாமல் சொல்லி, உதாரணமாகத் தானும் அவர்கள் முன் வாழ்ந்து காட்ட ஒரு மாமனிதன் அங்கு வந்த போது ஆரம்பத்தில் பெரிய எதிர்ப்பிருந்தது. வேதமூர்த்தி அதற்கெல்லாம் அசரவில்லை. வேதமூர்த்தி சிறுவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து தன் பணியை ஆரம்பித்தார்.

அவ்வப்போது அவரை வந்து கண்ட சீனிவாசன் அவருக்கு பண உதவி செய்யத் தயாராக இருந்தார்.

‘வேண்டாம் சீனி. பிரச்னை பணப் பற்றாக் குறை அல்ல. மனப் பற்றாக்குறை. அதை சரி செய்ய நிறைய பொறுமையும், கொஞ்சம் புத்திசாலித் தனமும் தான் வேணும் ‘

ஒவ்வொரு முறை அந்தக் கிராமத்திற்கு வரும் போதும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தையாவது சீனிவாசனுக்குப் பார்க்க முடிந்தது. ஆரம்ப காலத்தில் ஒரு முறை அங்கு சென்று ஏதோ யோசனையில் ஒரு காகிதத்தை கிழித்துத் தெருவில் போட்ட போது பின்னால் வந்து கொண்டிருந்த சிறுமி ஒருத்தி அவரை ஒரு முறை முறைத்து அந்தக் காகிதத்தை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போனாள். பின்பு தான் அந்தத் தெரு பளிச்சென்று இருந்ததைக் கண்டார். முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. சிறிது சிறிதாக ஒரு புதிய கிராமம் அங்கு உருவாகத் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ரோடு போட்டுக் கொண்டிருந்ததை அக்கிராமத்து இளைஞர்கள் கண்காணித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் கேட்டார். ‘வேதா, அவங்க என்ன பார்க்கிறாங்க ‘

‘சரியான அளவு ஜல்லி, தார் எல்லாம் கலந்து போடுகிறார்களான்னு

பார்க்கிறாங்க ‘

‘போடாட்டி… ? ‘

‘வேலையைத் தொடர விட மாட்டாங்க. அரசாங்கக் கணக்குப் படி என்ன

விகிதத்தில் எதை எவ்வளவு கலக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு தான்

நிற்கிறார்கள் ‘

இது போன்ற ஒரு சங்கதியை இது வரை கேள்விப் பட்டிராத சீனிவாசன் வாயைப் பிளந்தார்.

‘இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது, சீனி. நம்ம வரிப் பணம். நம்ம தெரு. நாம அஜாக்கிரதையாக இருக்க முடியுமா ? ‘

யாராவது அரசாங்க ஊழியர் லஞ்சம் கேட்டால் அடுத்த கணம் ஊரே கூடி அந்த அலுவலகம் முன் நின்றது. தாங்களே செய்து கொள்ள முடிந்ததை அரசாங்கத்திற்காகக் காத்திராமல் தாங்களே செய்து கொண்டார்கள். விவசாயத்தில் ஏதாவது புதிய கண்டு பிடிப்பு இருந்தால் அது உடனே அங்கு பயன்படுத்தப் பட்டது. அங்கு ஆஸ்பத்திரி ஆகட்டும், பள்ளிக் கூடமாகட்டும், கிராம நிர்வாகமாகட்டும் குறையில்லாமல் நடக்கும் படி பார்த்துக் கொள்ளப் பட்டது. ஒரு புதிய சட்டம் வந்தால் அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசி எந்த வகையில் எல்லாம் தங்களுக்குப் பயன்படும் அல்லது பாதிக்கப் படும் என்று பெரும்பாலானவர்கள் அறிந்திருந்தனர். புதிய பலன் அளிக்கக் கூடிய விஷயங்களை அலசுவதற்கென்றே ஒவ்வொரு ஞாயிறு மாலையும் சரியாக நான்கு மணிக்கு ஊர் கூடும். அநீதி ஒன்று நடந்தால் ஒருவர் மட்டும் போய்க் கேட்கும் பழக்கம் இருக்கவில்லை. மாறாக கணிசமான எண்ணிக்கையுடன் ஒரு கூட்டமே போய்க் கேட்டது.

வேதமூர்த்தி திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மனதில் பதித்திருந்தார். ‘ஒற்றுமையாய் ஒன்றாக நின்று போராடினால் ஒவ்வொருவரும் உங்களது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். தனிதனியாகப் போராடினால் ஒருவர் தேவை கூடப் பூர்த்தி ஆகாது. மதம், மொழி, ஜாதின்னு என்னென்னவோ சொல்லி உங்களைப் பிரிக்கப் பார்ப்பார்கள். அவர்களால் உங்களைப் பிரிக்க முடிந்தால் நீங்கள் தோற்பது உறுதி ‘. ஆகவே அங்கு மதம் தனிப்பட்ட நம்பிக்கையாகவும், கலவரத்துக்கு உட்படாத விஷயமாகவும் இருந்தது.

எப்போதுமே தேர்தலின் போது 95 சதத்திற்குக் குறையாமல் ஓட்டுப் போட்டார்கள். கள்ள ஓட்டு என்பது அங்கு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. அரசியல்வாதிகள் சுலபமாக அங்கு போய்ப் பேசிக் கை தட்டல் வாங்க முடியாமல் இருந்தது. மக்கள் பல கேள்விகள் கேட்டார்கள். முன்பு பேசியதை நினைவு படுத்தினார்கள். ஒரு அரசியல்வாதி சுந்தரேசனிடம் சொன்னார்: ‘அங்கே போனால் நாம என்னவோ அவங்க வச்ச வேலைக்காரன் மாதிரியும் அவனுக என்னவோ முதலாளி மாதிரியும் நடந்துக்கறானுக. திமிர் பிடிச்சவங்க ‘.

சிறிது சிறிதாக அந்தக் கிராமம் ஒரு மாதிரிக் கிராமமாகியது. வளமான, வசதியான கிராமம் என்ற பெயரெடுத்தது. ஒட்டியிருந்த கிராமங்களும் அதைப் பின் பற்ற ஆரம்பித்தன. பத்திரிக்கைகள் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தன. பலர் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். வேதமூர்த்தி பிரபலமாகவே, அரசாங்கம் அவருக்கு ஒரு விருது வழங்கத் தீர்மானித்தது. ஆனால் வேதமூர்த்தி வாங்க மறுத்து விட்டார்.

ஒரு பத்திரிக்கையாளர் காரணம் கேட்ட போது வேதமூர்த்தி சொன்னார்: ‘இதை நான் பெரிய சாதனையாக நினைக்கவில்லை. தேசத்தையே இப்படிப் பார்க்கணும்கிறது என்னை மாதிரி நிறைய பேர் சுதந்திரப் போராட்டத்தின் போது கனவு கண்டிருக்கோம். அதற்கு இது ஒரு பிள்ளையார் சுழின்னு வேணும்னா சொல்லலாம். பின்னே இது நான் பாகிஸ்தான் போய் அங்கேயிருக்கிறவங்களுக்குச் செய்ததல்ல. நம்ம தேசத்திற்கு நாம் செய்ய வேண்டியவங்க தானே. இதுக்கெல்லாம் விருது வாங்கறது சிறுபிள்ளைத் தனமாய் எனக்குத் தோன்றுகிறது ‘

சுந்தரேசன் அதைப் படிக்கையில் கண்கலங்கினார். அந்த வார்த்தைகள் வேதமூர்த்தியின் இதய ஆழத்திலிருந்து வந்தது என்பதை அவர் அறிவார். அந்த விருது தனக்கு ஒரு தூசு என்கிற ரீதியில் சிலர் செய்வது போலப் பாசாங்கல்ல.

ஒரு முறை சீனிவாசன் சுந்தரேசனிடம் கேட்டே விட்டார். ‘ஒவ்வொரு தடவையும் அவனைப் பற்றியே கேட்கிறாய், பேசுகிறாய். ஏன் நீயே போய் அவனைப் பார்க்கக் கூடாது ? ‘

‘அவன் கனவு ஒரு காலத்தில் என் கனவாய்க் கூட இருந்ததுன்னு உனக்குத் தெரியும் சீனி. அரசியலில் நான் தாக்குப் பிடிக்க நிறைய ‘காம்ப்ரமைஸ் ‘ செய்துட்டேன். ஆனா அவன் வாழ்க்கையில் ‘காம்ப்ரமைஸ் ‘ங்கிற வார்த்தையே இருந்ததில்லை. நான் அவன் முன்னால் போய் நின்று எப்படி நேருக்கு நேர் பார்ப்பேன் ‘

அப்படி ஒரு கட்டத்தில் நண்பனைச் சந்திப்பதை நிறுத்திய சுந்தரேசன் இனி ஒரு சந்தர்ப்பம் இனிக் கிடைக்காது என்றான பின் தான் கிளம்பியிருக்கிறார்.

‘சுந்தர். வந்து சேர்ந்துட்டோம் ‘ என்று சீனிவாசன் சொன்னவுடன் சுந்தரேசன் நிகழ்காலத்திற்கு வந்தார். காரில் இருந்து அவர்கள் இறங்கிய போது அந்தச் சிறிய வீட்டுக்கு முன் பெரிய கூட்டமே பெரும் துக்கத்துடன் நின்றிருந்தது.

‘ஆனா லேட்டாயிடுச்சுன்னு நினைக்கிறேன் ‘ என்று சீனிவாசன் குரல் கம்மத் தன் நண்பரிடம் சொன்னார். அங்கிருந்தவர்கள் வேதமூர்த்தியின் மரணம் சம்பவித்து அரை மணி நேரம் ஆயிற்று என்றார்கள். சுந்தரேசன் கனத்த மனத்துடன் உள்ளே நுழைந்தார். வேதமூர்த்தியின் உடலைக் கீழே கிடத்தியிருந்தார்கள். அவரது முகத்தில் பேரமைதி நிலவியது. அது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து முடித்த திருப்தியின் விளைவாக சுந்தரேசன் கண்டார். இப்படி இருந்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று மரணப் படுக்கையில் அந்த மாமனிதனுக்குத் தோன்றியிருக்கக் காரணமே இல்லை என்று தோன்றியது.

வேதமூர்த்தியின் உடல் அருகே இளைஞர்கள் நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்களில் பலரது கண்களிலும் ஒரு காலத்தில் வேதமூர்த்தியின் கண்களில் இருந்த உறுதியையும், ஜொலிப்பையும் சுந்தரேசன் கண்டார். வேதமூர்த்தி தன் கனவை அவர்களிடம் விதைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை சுந்தரேசன் உணர்ந்தார். மனிதர்கள் மாண்டு போகலாம். அவர்களோடு அவர்கள் கண்ட கனவும் சேர்ந்து போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற கட்டாயமில்லை அல்லவா ?

தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போய் விட்ட வேதமூர்த்தியைப் பார்க்கப் பார்க்க அவர் மனதில் கனம் கூடிக் கொண்டே வந்தது. கடைசியாக ஒரு முறை பெரும் துக்கத்துடன் சீனிவாசனைக் கேட்க நினைத்தார். ‘அவன் என்னைப் பற்றி ஏதாவது கேட்டானா, ஏதாவது சொன்னானா ? ‘

அவரால் ஏனோ இப்போதும் அதைக் கேட்க முடியவில்லை. இறந்து போயும் கனவைப் பிழைக்க வைத்து விட்டுப் போன அந்த மனிதர் முன், கனவை இறக்க விட்டுத் தான் பிழைத்திருக்கும் இந்த மனிதர் சிலையாக நிறைய நேரம் நின்றார். கடைசியில் அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. அந்தக் கண்ணீர் சுய பச்சாதாபமே என்பது அங்கிருந்த யாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

—- என்.கணேசன்

—-

nganezen at

yahoo dot com

நன்றி: maraththadi.com

Series Navigation

என்.கணேசன்

என்.கணேசன்