வாடகைத்தாய்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

டிபிஆர் ஜோஸப்


To me you are special.

Special because you belong

to me and you are mine.

The fact that I didn ‘t give birth

to you doesn ‘t make me less

of a mother

Or you my daughter.

For mothering is far more

than birth.

by Claire Short

கலங்கிய கண்களுடன் தன் எதிரே அமர்ந்திருந்த ஸ்வர்ணாவைப் பார்க்கப் பாவமாயிருந்தது மகப்பேறு மருத்துவர் சந்திராவுக்கு.

கடந்த மூன்று மாதங்களாக அவளிடம் ஆலோசனைக்காக வந்து போகும் ராபர்ட்-ஸ்வர்ணா தம்பதியரை அவளுக்கு வெகுவாய் பிடித்துவிடவே மருத்துவர்-நோயாளி உறவை மீறி அவர்களுக்கிடையில் ஒரு நட்பு ஏற்பட்டுப்போனது.

அவர்களிருவரும் அவளை அணுகிய முதல் நாளிலேயே அவர்களிடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டது ஸ்வர்ணாவின் கலகலப்பான சுபாவம் காரணமாயிருக்கலாம். ஸ்வர்ணாவின் கணவர் ராபர்ட்டோ பரம சாதுவாயிருந்தார். ஸ்வர்ணா சொல்வதெற்கெல்லாம் மவுனப் புன்னகையுடன் தலையசைத்ததைத் தவிர ஒன்றும் பேசாதிருந்தது அவர்களுக்கு மகப்பேறு இல்லாமல் போனது அவர்தான் காரணமாயிருக்கவேண்டும் என சந்திராவை எண்ண வைத்தது.

ஆனால் கடந்த வாரம் இறுதியாய் அவள் மேற்கொண்ட பரிசோதனைகள் ஸ்வர்ணாவின் முழு வளர்ச்சியைடைந்திராத கருப்பைதான் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்பதை உறுதிப்படுத்தின.

ஆனால் அதை எப்படி அவளிடம் சொல்வது என்பது தெரியாமல் அவள் குழம்பிபோயிருந்தாள். சந்திராவின் முகம் அவளுடைய குழப்பத்தைத் தெளிவாக காண்பித்துவிட்டதோ என்னவோ ஸ்வர்ணாவின் கண்கள் கலங்கி குளமாயின.

“ஐ ஆம் சாரி ஸ்வர்ணா. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. உன்னோட கருப்பை முழு வளர்ச்சியடையாம இருக்கறதுனால…”

ஸ்வர்ணா மெளனமாய் தலையசைத்துவிட்டு தன் அருகில் அமர்ந்திருந்த ராபர்ட்டைப் பார்த்தாள்.

“என்னை மன்னிச்சிருங்க ராபர்ட்..” சொல்ல வந்ததை முடிக்க இயலாமல் தன் தோளின் மீது சாய்ந்துக்கொண்டு விம்மும் தன் மனைவியின் தலையை தடவி விட்டவாறே சந்திராவைப் பார்த்தான் ராபர்ட்.

“இது தான் கடைசி முடிவா டாக்டர் ? இல்லேன்னா.. டெஸ்ட் ட்யூப் பேபின்னு சொல்றாங்களே.. அதுமாதிரி ஏதாச்சும் ட்ரை பண்ணி பாக்கலாமா ?”

சந்திரா சோகத்துடன் ‘இல்லை ‘ என்றவாறு தலையை அசைத்தாள். “சாரி ராபர்ட். உங்களுக்கு ப்ராப்ளம் இருந்து ஸ்வர்ணாவோட கருப்பை நல்லா ஹெல்த்தியாயிருந்திருந்தா ட்ரை பண்ணி பார்த்திருக்கலாம். ஆனா அதுலயே ப்ராப்ளமா இருக்கறதுனால.. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.. பட் இதுக்கு ஒரு வழி இருக்கு..”

ராபர்ட்டின் தோளில் சாய்ந்திருந்த ஸ்வர்ணா சட்டென நிமிர்ந்து சந்திராவைப் பார்த்தாள். “என்ன டாக்டர் ? சொல்லுங்க.. எதுவானாலும் பரவாயில்லை.”

சந்திரா மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தாள். “ஏய், டோண்ட் கெட் எக்ஸைட்டட்! நான் சொல்ல வந்ததை முழுசா கேளு.”

“சொல்லுங்க டாக்டர்.” என்றான் ராபர்ட்.

“Surrogate Motherனு கேள்விப்பட்டிருக்கீங்களா ?”

“யு மீன் வாடகைத்தாய் ?” என்றவாறு தன் கணவனைப் பார்த்தாள் ஸ்வர்ணா, “வாட் டு யூ திங்க் ராபர்ட் ?”

ராபர்ட் சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்திராவைப் பார்த்தான். “நம்ம நாட்டுல அது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கா டாக்டர் ?”

‘இல்லை ‘ என்று தலையை அசைத்தாள் சந்திரா. “யூ ஆர் ரைட். நம்ம நாட்டுல இன்னும் தெளிவான சட்டமோ, வரைமுறையோ இல்லை. ஆனாலும் சில தம்பதிகள் சட்டத்துக்கு வெளியே இதை செய்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அதனாலதான் கேட்டேன்.”

“இன் தட் கேஸ், வீ யார் நாட் ஃபார் இட் டாக்டர். என்ன சொல்றே ஸ்வர்ணா ?”

“நான் எதுக்கும் தயார் ராபர்ட். எனக்கு ஒரு குழந்தை வேணும். அவ்வளவு தான்.”

சந்திரா ராபர்ட்டைப் பார்த்தாள். “அப்புறமென்ன ராபர்ட் ? ஸ்வர்ணாவுக்கு மறுப்பு இல்லேன்னா ட்ரை பண்ணிப்பார்க்கலாமே!”

ராபர்ட் வேண்டாம் என்று தலையை அசைத்தான். “எனக்கு தெரிஞ்சி அதுல பிரச்சினைகள் இருக்கு. வாடகைத்தாயா வருவதெற்கு ஒரு பெண்ணை செலக்ட் பண்றதுங்கறது அவ்வளவு ஈசியா எனக்குப் படலை. அதுவுமில்லாம குழந்தை பிறந்தவுடனே அந்த பெண் குழந்தையைக் குடுக்க முடியாதுன்னு வாதாடலாமில்லையா ? அல்லது குழந்தையைப் பெத்துக்குடுத்தக்கப்புறமும் சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்து நின்னா… ? வேண்டாம் டாக்டர். லெட் அஸ் நாட் திங்க் இன் தட் ரூட்.”

“யூ ஆர் ரைட்.” என்றாள் சந்திரா. “ஆனா ஒரு முழுமையான ஒப்பந்த டாக்குமெண்ட் மூலம் அதையெல்லாம் தவிர்த்துக்கலாம்.”

ஒரு மெல்லிய புன்னகையுடன் ராபர்ட் தலையசைத்து மறுக்கவே, “ஒகே, லெட் அஸ் ட்ராப் தி சப்ஜெக்ட்.” என்ற சந்திரா எழுந்து நிற்க ராபர்ட்டும் எழுந்து நின்று ‘வி வில் மீட் அகெய்ன் டாக்டர். வா ஸ்வர்ணா, லெட் அஸ் கோ.” என்றான்.

எதிரில் இருந்த இருவரையும் மாறி மாறி பார்த்த ஸ்வர்ணா மெளனத்துடன் எழுந்து ராபர்ட்டைத் தொடர்ந்து தன்னிடம் ஒன்றும் பேசாமல் வெளியேறுவதைப் பார்த்தவாறு நின்றாள் சந்திரா.

****

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை பொறுமை காத்த ஸ்வர்ணா காரிலேறி அமர்ந்ததும், “சந்திரா சொன்ன யோசனையை ஏன் வேணாம்னுட்டாங்க ராபர்ட் ?” என்றாள்.

ஒன்றும் பதிலளிக்காமல் காரை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்த ராபர்ட் திரும்பி ஸ்வாதியைப் பார்த்தான். “வீட்டுக்கு போய் நிதானமா யோசிக்கலாம். எனக்கென்னவோ குழந்தையில்லாம இருக்கறது ஒரு பெரிய பிரச்சினையா படலை. உன்னுடைய விருப்பத்துக்காகத்தான் இந்த டெஸ்ட்டுக்கு சம்மதிச்சேன். எனக்கு நீ, உனக்கு நான். அது போதும் எனக்கு.”

“எனக்கு அது போதாது ராபர்ட். நமக்கு ஒரு குழந்தை வேணும். இதுல நான் பிடிவாதமா இருக்கேன். என் மனசை உங்களால மாத்த முடியாது.”

“ஓ கே, ஓ கே. வீட்டுக்கு போய் பேசலாம். என்னை ட்ரைவ் பண்ண விடு. அப்படியே சீட்ல சாஞ்சி கண்ணை மூடு.”

கண்களை மூடி சீட்டில் சாய்ந்தமர்ந்த ஸ்வர்ணா கண்களின் ஓரங்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரைக் கண்டு அவளுக்காக வருந்தினான் ராபர்ட்.

ஐந்து வருடங்களுக்கு முன் அவளை சந்தித்த அந்த நாள் இன்னும் அவனுக்கு நன்றாய் நினைவிருந்தது.

சென்னை மயிலை கடற்கரையை ஒட்டியிருந்த தேவாலயத்தில் நடந்த தன் உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தான் ராபர்ட். ஆலயத்தில் நடந்துக்கொண்டிருந்த திருமண வழிபாட்டின் இடையில் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு எதிரே சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகன வரிசையை சுவாரசியமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அசம்பாவிதம் நடந்தது.

என்ன நடந்ததென்று நிதானிக்கும் முன்பே இரு சக்கர வாகனம் ஒன்று மற்றொரு வாகனத்தில் மோதி சரிந்து விழ அதிலிருந்து விழுந்த இளம்பெண்ணைச் சுற்றி ஒரு சிறு கும்பலே சூழ்ந்துக்கொண்டது.

ராபர்ட்டும் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு ஆலய வாயிலைக்கடந்து சாலைக்கு ஓடினான். அவனுடன் திருமணத்திற்கு வந்திருந்த சிலரும் அவன் பின்னால் விரைந்து ஓடினர்.

அவன் கும்பலை விலக்கிக்கொண்டு செல்வதற்குள் அந்த பெண் எழுந்து நின்று கீழே விழுந்துக் கிடந்த வாகனத்தை தூக்க முடியாமல் சிரமப்பட கூட்டத்தில் நின்றிருந்த சில இளஞர்கள் உதவி செய்வதைப் பார்த்தான்.

அங்குமிங்கும் சிறு சிராய்ப்புகளைத் தவிர வேறு பலத்த காயமோ வாகனத்திற்கு பெருத்த சேதமோ இல்லாததால் கும்பல் சுவாரசியமிழந்து கலைந்து செல்ல அந்த பெண் வாகனத்தை உருட்டிக்கொண்டு சாலையைக் கடந்து ஆலயத்தினுள் நுழைவதைப் பார்த்துவிட்டு ‘இவளும் திருமணத்திற்குத்தான் வந்திருக்கிறாள் போலும் ‘ என்று நினைத்தவாறு அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அவனும் ஆலய வளாகத்தினுள் நுழைந்தான்.

சிறிது நேரத்தில் ஆலயத்தில் வழிபாடு முடிவடைந்து எல்லோரும் வெளியேறி அருகிலிருந்த திருமண மண்டபத்தை சென்றடைய ஆலய வளாகம் சில மணித்துளிகளில் காலியானது.

“டேய் என்ன இங்கேயே நின்னுட்டே.” என்ற குரல் கேட்டு திரும்பிய ராபர்ட் தன் தந்தை நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“என்னப்பா ?” என்றான் சுவாரசியமில்லாமல். “நீங்க போங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்.”

அவரோ அவனை விட்டு விட்டு செல்வதாயில்லை. “அம்மா அங்க உன்னைத் தேடிக்கிட்டிருக்காடா. உனக்கு பார்த்து வச்சிருக்கற அந்த பெண்ணும் அம்மா, அப்பாவோட வந்திருக்கு. வா, வந்து பார்த்துட்டு சொல்லு. மேல்கொண்டு பேசிக்கலாம்.”

அருகில் நின்றுக்கொண்டிருந்த உறவினர் ஒருசிலர் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைக்க அவனுக்கு எரிச்சலாயிருந்தது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்தியிருந்த வரிசையில் சற்று முன் கண்ட அந்த இளம்பெண் வாகனத்தின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தான். ‘என்ன செய்கிறாள் ? இஸ் ஷி ஆல்ரைட் ? ‘

தன் தந்தையைத் திரும்பி பார்த்தவன் அவர் அவனுடைய பதிலுக்கு காத்திருப்பதை கண்டான். “நீங்க போங்கப்பா, வரேன். ப்ளீஸ்..”

“சீக்கிரம் வந்துடு. இல்லன்னா உங்கம்மா என்னை சும்மா விடமாட்டா.” முணுமுணுத்தாவாறே செல்லும் தன் தந்தையைப் பார்த்தவாறே சிகரெட் ஒன்றை எடுத்து பற்றவைத்தான். அந்த பெண்ணை மீண்டும் திரும்பிப் பார்த்தான்.

‘ஷி இஸ் நாட் ஓகே. சம்திங் ராங் ‘ என்று தனக்குள் கூறிக்கொண்டே அவளை நோக்கிச் சென்றவன் அந்த பெண் அப்படியே வாகனத்தின் மேல் சரிந்து விழுவதைக் கண்டு விரைந்து சென்று அவளை கீழே விழவிடாமல் தாங்கிப் பிடித்தான்.

கண்களை மூடி சுயநினைவிழந்தவளை அப்படியே மண்தரையில் படுக்க வைத்தவன் திருமண வீட்டில் குழப்பம் விளைவிக்கக் கூடாது என்ற முடிவுடன் திரும்பி ஆலய வாயிலைக் கடந்து சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை வழிமறித்து அவளை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.

**

“கவலைப் படறா மாதிரி இஞ்சுரி ஒன்னுமில்லைன்னு நினைக்கிறேன். ஷி இஸ் ஓகே நவ். நீங்க அவங்களுக்கு உறவா மிஸ்டர் ?”

ராபர்ட் எதிரில் நின்ற இளம் டாக்டரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். “இல்லை டாக்டர். நான் கல்யாணத்திற்கு வந்த இடத்துல இவங்க கீழே விழுறதைப் பார்த்திட்டு..”

“அப்படியா குட். நமக்கென்ன வந்திருச்சின்னு போகாம அக்கரையோட கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க. அழகான பொண்ணுங்கறதுனாலயோ..”

கேலியுடன் கேட்ட டாக்டரை உற்றுப் பார்த்தான் ராபர்ட். ‘நீங்க கூட அழகாத்தான் இருக்கீங்க. ‘ என்று மனதுக்குள் நினைத்தான். ‘யங் அண்ட் ப்யூட்டிஃபுல். இந்த பெண்களுக்கு கடவுள் ஏன் தான் இவ்வளவு கலரையும் அழகையும் குடுக்கறாரோ ? அந்த திமிர்தான் இவளுகளை இப்படி பேச வைக்குது. ‘

“என்ன மிஸ்டர்.. உங்க பேர் என்னன்னு சொன்னீங்க ?”

“இன்னும் சொல்லலை. பேஷண்டோட பேரைத்தான் கேட்டாங்க. தெரியாதுன்னு சொன்னேன்.”

அவன் குரலில் இருந்த முரட்டுத்தனம் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. “நீங்க கோபமாயிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இட் இஸ் ஓகே. அவங்க வண்டியோட ஆர்.சி புக்ல அவங்க பேர், விலாசமெல்லாம் இருக்கும்னு நினைக்கறேன். இவ்வளவு தூரம் உதவி பண்ண நீங்க அவங்களை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுவிடுவீங்கன்னு நினைக்கறேன். டு யூ மைண்ட் மிஸ்டர்.. உங்க பேர்…”

“ராபர்ட்..”

“ஓகே மிஸ்டர் ராபர்ட். தாங்க்ஸ் ஃபார் யுவர் குட் சமாரிட்டன் ஆக்ட். வீட்லயும் கொண்டு போய் விட்டுட்டாங்கன்னா..”

“டோண்ட் ஒர்ரி. கொண்டுபோய் விட்டுடறேன். உங்க ஃபீஸ் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா…”

தன்னை நோக்கி உயர்ந்த புருவங்களுடன் பார்த்தவளின் அழகில் ஒரு நொடி மயங்கி நின்றவன் சுதாரித்துக்கொண்டு, “என்ன டாக்டர், நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா ?” என்றான்.

“நோ நோ. இரண்டாயிரம்.. டு தவ்ஸண்ட். கேஷா குடுத்திட்டா பரவாயில்லை.”

படு சீரியசாய் தன் முன்னே கைகளை நீட்டிக்கொண்டு நின்ற அந்த அழகான இளம் மருத்துவரைப் பார்த்து திகைத்து நின்றான் ராபர்ட். “வாட் ? இரண்டாயிரமா ? அவ்வளவு பணம் என்கிட்ட.. இப்ப..”

“இல்லேல்லே ? பின்னே ஏன் கேக்கறீங்க ? ஹூம் ? அஞ்சோ, பத்தோன்னு நினைச்சீங்க போலிருக்குது! என்ன சார் ?” அவள் குரலில் ஒலித்தது கேலியா, கோபமா என்பது தெரியாமல் திகைத்து நின்றவனைப் பார்த்து கலகலவென சிரித்தாள் அந்த இளம் பெண்.

“மிஸ்டர் ராபர்ட்.. டோண்ட் ஒர்றி. நான் டாக்டரே இல்லை. இந்த நர்ஸின் ஹோம் எங்க சித்தப்பாவோடதாக்கும். அவரோட கோட்டைப் போட்டுக்கிட்டு அவரோட ரூம்லருந்து வந்ததால என்னையும் ஒரு டாக்டர்னு நினைச்சிக்கிட்டு.. நீங்க ரொம்பவும்தான் கலங்கி போயிட்டாங்க. சித்தப்பா உங்க ஃப்ரெண்டை பாத்து முடிச்சிட்டாரு. இப்ப வெளியில வருவாரு. ஒன்னும் சீரியசா இல்லையாம். அவங்க பேசறதைக் கேட்டுட்டுத்தான் வந்து உங்ககிட்ட புருடா விட்டேன். சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க.”

அழகான பல்வரிசை பளிச்சிட புன்னகையுடன் தன்னை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவளைப் (சரியான குட்டை.. ஐந்தடி இருக்குமா ?) பார்த்து கோபப்படவும் முடியாமல் ராபர்ட் நிற்க.. “ஏய் ஸ்வர்ணா. உன்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன் ? என் கோட்டைப் போட்டுக்கிட்டு ஆக்ட பண்ணாதேன்னு..” என்ற குரலுடன் ரூமிலிருந்து வெளியே வந்த மருத்துவரைப் பார்த்து திரும்பினான்.

“டாக்டர் நீங்கதான்…”

“எஸ் எஸ் நான் தான் டாக்டர். டோண்ட் மிஸ்டேக் ஹர். அட் டைம்ஸ் ஷி பிகேவ்ஸ் லைக் அ சைல்ட். என்ன பண்றது ? நீங்க வாங்க. நீங்க தான் அந்த பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்தீங்களா மிஸ்டர் ?”

“எஸ் டாக்டர். அவங்க யாருன்னு தெரியாது. ஆக்ஸிடண்ட் ஸ்பாட்லருந்து..”

“ஐ அண்டர்ஸ்டாண்ட். ஷி இஸ் ஓகே நவ். ஆனாலும் இரண்டு மூனு நாளைக்கப்புறம் ஸ்கான் எடுத்து பாத்திடறது நல்லதுன்னு நினைக்கறேன். உங்களால முடிஞ்சா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போங்க. ஷி நீட்ஸ் சம் ஹெல்ப் டு ரீச் ஹோம். தனியா போறது நல்லதில்லைன்னு நினைக்கறேன். இஸ் இட் ஓகே வித் யூ ?”

“ஐ வில் டூ தட் டாக்டர். உங்க ஃபீஸ்..”

“இட் இஸ் ஓகே. அந்த பொண்ணே இரண்டு நாளைக்கப்புறம் வந்து குடுத்திடறேன் சொல்லியிருக்கா. டோண்ட் ட்ரபுள் யுவர்செல்ஃப். நீங்க அழைச்சிக்கிட்டு போகலாம்.”

“தாங்ஸ் டாக்டர்.”

மரத்தடுப்பின் பின்னாலிருந்து வந்த அந்த பெண் அவனை நன்றியுடன் பார்த்து புன்னகைத்து, “தாங்ஸ்” என்றாள் மெல்லிய குரலில். “எனக்கு ஒரு ஆட்டோ மாத்திரம் பிடிச்சி குடுத்துருங்க. நான் போய்க்கறேன்.”

“நோ.. நோ.. சாரே உங்களைக் கொண்டு விட்டுட்டுத்தான் போவார். அதவிட அவருக்கென்ன வேலை ? என்ன ராபர்ட் சார் ? நான் சொல்றது சரிதானே ?” தன் பின்னாலிருந்து வந்த அந்த குரலுக்கு சொந்தமானவளை மீண்டும் ஒருமுறை பார்க்க ஆசையுடன் திரும்பியவன் யாரும் காணாமல் திகைக்க, “நீங்க வாங்க சிஸ்டர். நான் இங்க சும்மாத்தான் இருக்கேன். உங்க வீடு வரைக்கும் வரேன். சித்தப்பாவோட வண்டி சும்மாத்தான் இருக்கு.” என்றவாறே அறையில் நுழைந்த ஸ்வர்ணா என்ற அந்த பெண் மேசையின் மேலிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு தன் சித்தப்பாவைப் பார்த்து சிரித்தாள்.

“உங்களுக்கு ஆட்சேபனையொன்னுமில்லையே சித்தப்பா.. ?”

“நீ என்னை எங்க கேட்டே ? சாவியை எடுத்திக்கிட்டாச்சி. எனக்கு ஆட்சேபனையிருக்குன்னு சொன்னா சாவியை குடுத்திருவியா.. ? போய் விட்டுட்டு வா. பத்திரம். நீங்க போங்க தம்பி. ஷி வில் ட்ராப் ஹர். இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ்னா அவளுக்கு அல்வா சாப்பிடறா மாதிரி. நீ போம்மா. டோண்ட் ஒர்ரி. நத்திங் சீரியஸ். வீட்டு பக்கத்துலருக்குற டாக்டர்கிட்ட கன்ஸல்ட் பண்ணு. ஆல் தி பெஸ்ட்.”

காயமடைந்த பெண்ணைக் கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு சென்ற ஸ்வாதி திரும்பி தன்னைப் பார்த்து குறும்புடன் புன்னைகைப்பதைக் கண்ட ராபர்ட அதைக் காணாததுபோல் விரைந்து வெளியேறி சாலையில் காத்திருந்த ஆட்டோவில் ஏறினான். “சாந்தோம் சர்ச்சுல விட்டுருப்பா. சீக்கிரம்.”

ஆலய வாசலில் வந்திறங்கிய ராபர்ட் தன் பின்னாலேயே வந்த காரிலிருந்து இறங்கிய ஸ்வர்ணாவை வியப்புடன் பார்த்தான்.

“என்ன பாக்கறீங்க ? உங்க பின்னாலேயே வந்து வேவு பார்க்கறேன் நினைச்சிட்டாங்களா. உங்க ஃப்ரெண்டோட வண்டி இங்க நிக்கறதுன்னு சொன்னாங்க அதான்.. ஒரு பையனைக் கொண்டுட்டு வந்திருக்கேன். ஹி வில் டேக் தி வெஹிக்கில் டு ஹெர் ஹவுஸ்.”

“ஓகே. நான் இங்கே மேரேஜுக்கு வந்தேன்.”

“நான் ஒன்னும் இங்க என்ன பண்றீங்கன்னு கேக்கலையே ? யூ கோ அஹெட். வண்டி நம்பர் எங்கிட்ட இருக்கு. நான் பார்த்துக்கறேன்.”

ராபர்ட் அவளுடைய பதிலிலிருந்த அலட்சியத்தால் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு திரும்பி திருமண மண்டபத்திலிருந்து தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த தன் தந்தையை நோக்கி விரைந்தான்.

அவன் தன் தந்தையை நெருங்குவதற்குள் அவனை நெருங்கிய அவனுடைய தந்தை, “எங்கடா போயிட்டே ? யார் அந்த பொண்ணு, இப்பிடி உன் பின்னால ஓடி வருது ?” என சட்டென்று திரும்பி தன்னை நோக்கி ஸ்வர்ணா மூச்சிரைக்க ஓடி வருவதைக் கண்டான்.

“ஒன்னுமில்லேப்பா. நீங்க போங்க. உங்க பின்னாலேயே வர்றேன்.” என்று பதிலளித்துவிட்டு தன்னை வந்தடைந்தும் பேச முடியாமல் மூச்சு வாங்க நின்ற ஸ்வர்ணாவைப் பார்த்து, “என்னங்க என்ன விஷயம் ? ஏன் இப்படி ஓடி வந்தீங்க ?” என்றான்.

“தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க யாரு, உங்க டாடியா ?”

“ஆமா. இதை கேட்கவா இப்படி ஓடி வந்தீங்க ?”

“இல்ல. உங்க விசிட்டிங் கார்டு இருக்குமான்னு உங்க ஃப்ரெண்ட் கேட்க சொன்னாங்க. அதான்.. இஃப் யூ டோண்ட் மைண்ட்..”

“யெஸ். இந்தாங்க. நான் போகட்டுமா ? இல்ல, இன்னும் ஏதாவது வேணுமா ?”

ஸ்வர்ணா அவனுடைய குரலிலிருந்த எரிச்சலைக் கண்டுக்கொள்ளாதவள்போல் அவன் நீட்டிய விசிட்டிங் கார்டை பெற்றுக்கொண்டு அவனை நோக்கி குறும்புடன் புன்னகைத்தாள். பிறகு, திரும்பி காரை நோக்கி விரைய அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த ராபர்ட், “பார்த்தது போறும், வாடா. அவங்கல்லாம் உனக்காகத்தான் வெய்ட் பண்றாங்க..” என்ற தன் தந்தையின் குரல் கேட்டு அவர் பின்னால் விரைந்தான்.

தனக்காக தன் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த மாநிறத்தில் சுமாரான அழகுடன் இருந்த பெண்ணை பார்த்த ராபர்ட் அவளுடன் ஸ்வர்ணாவை தன்னையும் அறியாமல் ஒப்பிட்டுப் பார்த்து சலிப்படைந்தான்.

அவன் கண்களில் சில நொடிகளே தோன்றி மறைந்த சலிப்பு பெரியவர்களுக்கு தெரிந்ததோ இல்லையோ அந்த பெண்ணுக்கு தெளிவாய் புரிந்தது.

“எனக்கு தலைய வலிக்குதும்மா. நான் காருக்கு போறேன். ரொம்ப டிலே பண்ணாம சீக்கிரம் வாங்க.” என கூறியவாறு அருகிலிருந்த ராபர்ட்டை சிறிதும் லட்சியம் செய்யாமல் கடந்து செல்ல ராபர்ட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் ‘ஓகே அங்கிள் வி வில் மீட் லேட்டர் ‘ என தன் நண்பர் குழுவை நோக்கி நகர ‘என்ன நடக்கிறது ‘ என புரியாமல் திகைத்து நின்றனர் இரு தரப்பு பெற்றோரும்.

***

“ராபர்ட். என்ன இறங்கலையா! வெளியே எங்கயாவது போறீங்களா ?” ஸ்வர்ணாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய ராபர்ட் தன் வீட்டு போர்டிகோவை அடைந்துவிட்டதை உணர்ந்து இன்ஜினை அனைத்துவிட்டு இறங்கினான்.

இருவரும் பூட்டியிருந்த கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்ததும் ராபர்ட் ஹாலிலிருந்த சோபாவில் அமர ஸ்வர்ணா அவனருகிலமர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்ன ராபர்ட் ஏதோ பயங்கர சிந்தனை போலிருக்கு. வீடு வந்தது கூட தெரியாம அப்படி என்ன நினைச்சிக்கிட்டிருந்தீங்க ? சித்ரா சொன்னதைப் பத்தியா ?”

“சே சே. உன்னை முதன் முதலா பார்த்த நாளை நினைச்சிப் பார்த்தேன். எப்படித்தான் சுயநினைவு சுத்தமா இல்லாம காரை வீடு வரை ஓட்டிக்கிட்டு வந்தேன்னு நினைச்சுப் பார்த்தா ஒரு பக்கம் பயமாவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாவும் இருக்கு ஸ்வர்ணா.”

“நல்ல ஆளுதான் நீங்க. உங்களை நம்பி கார்ல வர்றது டேஞ்சர்தான் போலிருக்கு. அது போகட்டும், நான் சொன்னதைப் பத்தி ஏதாவது டிசைட் செஞ்சீங்களா ?”

ராபர்ட் ஒரு சில நிமிஷங்கள் ஒன்றும் பேசாமல் தன் மணைவியையே பார்த்துக்கொண்டிருந்தான். தன் மனதிலிருந்ததை சொன்னால் இவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்று யோசித்தான்.

“என்னாச்சி ராபர்ட் ? என்ன அப்படி பார்க்கறீங்க ?”

“ஸ்வர்ணா. நீ தத்து எடுக்கறதைப் பத்தி என்ன நினைக்கறே ?”

ஸ்வர்ணா தான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து அவனருகில் வந்தமர்ந்தாள். “என்ன சொல்ல வர்றீங்க ராபர்ட் ?” என்றா அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு.

ராபர்ட் தன் கரங்களைப் பற்றிக்கொண்டிருந்த ஸ்வர்ணாவின் கரங்களை எடுத்துத் தன் கரங்களில் பொதிந்துக்கொண்டு சிறிது நேரம் எதிலிருந்த சுவரில் தொங்கும் தங்களுடைய திருமண புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அழகான பல்வரிசைப் பளிச்சிட ஸ்வர்ணாவின் இதழ்களில் தவழும் அந்த புன்னகை.. அதில் மயங்கிப்போய்தான் பெற்று வளர்த்த தன் பெற்றோர், தன் ஒரே தங்கை என்ற பாசம் மிகுந்த தன் குடும்பத்தைப் பகைத்துக்கொண்டு அவள் கரம் பிடித்ததை இப்போது நினைத்தாலும் தன்னால் எப்படி முடிந்தது என மாய்ந்து போனான் ராபர்ட்.

அவளும்தான் எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது! எத்தனை வசதி படைத்த வாழ்க்கையை அவள் அவனுக்காக விட்டுவிட்டு வரவேண்டியிருந்தது!

அந்த முதல் நாள் சந்திப்பிற்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று நினைப்பு அவனுடைய மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தது. சிறிது நேரமே சந்தித்திருந்தாலும் அவளுடைய அழகும் துடுக்குத்தனமும் அவனை வெகுவாய் கவர்ந்துவிட அவளை எளிதில் மறக்க முடியாமல் தடுமாறினான் ராபர்ட்.

ஆனால் அவளை எப்படி தொடர்புக்கொள்வது என்று தெரியாமல் அவன் குழம்பிக்கொண்டிருக்கையில் அவனுடைய கைத்தொலைப்பேசி சிணுங்க அழைத்தவரின் தொலைப்பேசி எண் அவனுக்கு அறிமுகமில்லாததாயிருக்கவே தயக்கத்துடன் ‘ஹலோ ‘ என்றான்.

“என்ன சார். ரொம்ப ஜாக்கிரதையா ஹலோங்கறீங்க ?” என்று வந்த அந்த இனிமையான குரல் அவளை அடையாளம் காண்பித்தாலும் வேண்டுமென்றே, “யார் நீங்க ? உங்களுக்கு இந்த நம்பர் எப்படி கிடைச்சது ?” என்றான்.

“நீங்கதானே சார் அன்றைக்கு ஏங்கிட்ட குடுத்தீங்க ?”

“நானா ?”

“ஆமா. நீங்கதானே குட்சமாரிட்டன் மிஸ்டர் ராபர்ட் ? சாஃப்ட்வேர் என்ஜினியர் இன் பியூப்பில் சாஃப்ட், சென்னை ? என்னை உங்களுக்கு தெரியும். ஆனா தெரியாதமாதிரி நடிக்கறீங்க ?”

இன்னும் கொஞ்சம் விளையாடிப்பார்த்தால் என்ன என்று தோன்றியது அவனுக்கு. “ஐஆம் சாரி. நீங்க யாருன்னு சொன்னா தேவலை. எனக்கு பரிச்சயமான குரலா தெரியலை. அதான் ஐ ஆம் அனேபிள் டு ப்ளேஸ் யூ.”

எதிருமுனையிலிருந்து வந்த அந்த கலகலவென்ற சிரிப்பொலி அவனை சீண்டி விட்டுவிட்டு மெளனமானது.

இணைப்பு துண்டிக்கப்பட்ட தன் கைத்தொலைப்பேசியையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்ற ராபர்ட், “என்ன ராபர்ட் சார். திகைச்சிப்போய் நிக்கறீங்க. உங்க முகத்தைப் பார்க்க சகிக்கலை.” என்று தன் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.

அழகான பல்வரிசை தெரிய விரிந்து நின்ற புன்னகையுடன் தன் முன்னே அழகுடன் நின்றிருந்த ஸ்வர்ணாவைப் பார்த்தவுடன் அவன் மனதில் அவனையுமறியாமல் துளிர்த்த மகிழ்ச்சி புன்னகையாய் அவன் முகத்தில் படர்ந்தது.

“ஓ! நீங்களா. உங்க பேர்.. ஐ ஆம் சாரி..”

குறும்பு சிரிப்புடன் அவனைப் பார்த்தாள் ஸ்வர்ணா. “வேணாம் மிஸ்டர். உங்களுக்கு பொய் சொல்லக்கூட தெரியாதுங்கறதை நல்லா காமிக்கறீங்க..”

“சாரி ஸ்வர்ணா. ஐ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங்.”

“தெரியும். லீவ் இட். ஹெள ஈஸ் ஷி ?”

“ஹவ் ஈஸ் ஹூ ?”

“அதான் அன்றைக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்களே, ட்ரீட்மெண்டுக்கு ?”

“சத்தியமா அவங்களை யாருன்னே தெரியாது. ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்ல தான் முதன் முதலா பார்த்தேன். நீங்க தானே வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டாங்க ? என்னோட விசிட்டிங் கார்டைக் கேட்டு வாங்குனவங்க இதுவரை என்னைக் காண்டாக்ட் பன்னவேயில்லை.”

“உண்மையிலேயே அவங்களை உங்களுக்கு தெரியாது. ஆனா அவங்க அப்படி சொல்லலையே ?”

குழப்பத்துடன் அவளைப் பார்த்தான் ராபர்ட். “நீங்க என்ன சொல்றீங்க ? ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்..”

“நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பன்றீங்கன்னு..”

“அவங்க கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டாங்க…நீங்களா கற்பனை பன்றீங்க ?”

“எப்படி சொல்றீங்க ?”

“நாங்க ரெண்டு பேரும் லவ்வர்சா இருந்திருந்தா அவங்க என்னோட விசிட்டிங்கார்ட அன்றைக்கு கேட்டிருக்க மாட்டாங்க.”

“அவங்க கேட்டதா யார் சொன்னா ?”

“நீங்கதானே என் கிட்ட கேட்டு வாங்கிக்கிட்டு போனீங்க. மூச்சிறைக்க ஓடி வந்தீங்களே, மறந்துட்டாங்களா ?”

“ஓ ஆமா இல்லை! யூ ஆர் ரைட். ஆனா அவங்க கிட்ட இருந்து ஃபோன் வரும்னு எதிர்பார்த்தீங்க. அப்படித்தானே ?”

“யெஸ்.”

“எதுக்கு ?”

‘சும்மாத்தான். அதுல ஏதாவது தப்பிருக்கா என்ன ? ஆனா அதே சமயம் அவங்க கூப்பிடாததனால எனக்கு ஏமாற்றம் ஒன்னுமில்லை.”

“ஐ ஸீ. ஆனா நான் கூப்பிடுவேன்னு நினைக்கவேயில்லை. இல்லே ?”

அவளுடைய அழகான முகத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்படாமலிருப்பதே கடினமாயிருந்தது ராபர்ட்டுக்கு. “இப்ப எதுக்கு என்னை இப்படி க்ராஸ் எக்ஸாமின் பன்றீங்க ? உங்களுக்கு இப்ப என்ன வேணும் ?”

கலகலவென உரக்க சிரித்தவளை நோக்கி சாலையிலிருந்த சில பல தலைகள் திரும்ப அவனுக்கு தர்மசங்கடமாயிருந்தது.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். அன்றைக்கி என் ஹாண்ட்பேக்ல வச்ச உங்க விசிட்டிங் கார்டை இன்றைக்கித்தான் பார்த்தேன். உங்களோட பேசினால் என்னன்னு தோணிச்சிது. அதான்…”

அவனையுமறியாமல் சிரிப்பு வர முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தான் ராபர்ட். ஆக, விசிட்டிங் கார்டை இவள்தான் தன்னிடம் கேட்டு பெற்றிருக்கிறாள். எதுக்காக.. ? ‘என்னைப் போலவே இவளுக்கும் என்னை… ‘

“எதுக்கு முகத்தைத் திருப்பிக்கிட்டு சிரிக்கறீங்க ? என் முகம் உங்களுக்கு பிடிக்கலையா ராபர்ட் ?”

திடாரென்று அவளுடைய குரலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த சட்டென்று திரும்பி அவளுடைய முகத்தை கூர்ந்து பார்த்தான்.

“நீங்க என்ன கேக்கறீங்க ஸ்வர்ணா… ?”

“என் முகத்தைப் பிடிச்சிருக்கா.. ?”

“அப்படான்னா.. ?”

“என் முகத்தைப் பிடிச்சிருந்தா என்னையும் பிடிச்சிருக்கும். எனக்கு உங்களைப் பார்த்த முதல் நாளே பிடிச்சிப் போச்சி. ஏன்னு கேக்காதீங்க. தெரியலை. இந்த ஒரு வாரமா நான் இதைப்பத்தி யோசிச்சி யோசிச்சி ஒரு முடிவுக்கு வர முடியாம தவிச்சிப் போயிட்டேன்.”

அவள்பால் தனக்கிருந்த ஈர்ப்பை எப்படி சொல்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் லேசாய் துளிர்க்கவாரம்பித்த கண்ணீரை மறைக்க அவன் முயற்சிக்க.. அவன் கரங்களைத் தாபத்துடன் பற்றினாள் ஸ்வர்ணா.

“நாம எங்கயாவது உக்கார்ந்து கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசலாம் ராபர்ட்.. ப்ளீஸ்..”

அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து வெகு நேரம் அவரவர் குடும்பங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிந்தபோது அவர்களின் இரு மனங்களிலும் ஒரு சிந்தனனயே மிஞ்சியிருந்தது. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு திருமணம் செய்துகொள்வது..

அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவரின் குடும்பங்களும் அவர்களுடைய முடிவை எதிர்க்கத்தான் செய்தன. எத்தனை முயன்றும் அவர்களை சமாதானப்படுத்தவியலாமல் போகவே குடும்பத்தினரை எதிர்த்துக்கொண்டு பதிவுத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

அவர்களுடைய திருமணம் முடிந்து இந்த ஐந்தாண்டுகாலத்தில் பல முறை ராபர்ட்டின் தங்கையும் தந்தையும் அவனை அவனுடைய அலுவலகத்திலும் சில முறை அவர்களிருவரும் குடியிருந்த வீட்டிலும் சந்தித்து பேசியிருந்தாலும் அவனுடைய தாய் மட்டும் அவனை அறவே ஒதுக்கி வைத்திருந்தது அவனைப் பலமுறை வேதனை அடைய வைத்தது. அப்போதெல்லாம் அவனுடைய தந்தை, “அவ கிடக்கறாடா. நீ ஒரு குழந்தையை மட்டும் பெத்துக்குடு. அப்புறம் பார். தன்னால பேரன், பேத்தின்னு வருவா..”

‘நீ ஒரு குழந்தையை மட்டும் பெத்துக்குடு… ‘

அதுதான் பிரச்சினை … கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் ஏறி இறங்காத மருத்துவர்களில்லை. வேண்டாத தெய்வங்களில்லை..

“என்ன ராபர்ட் மறுபடியும் ஏதாவது ஃப்ளாஷ்பேக்கா.. நான் கேட்டதுக்கு பதிலையே காணோம் ?”

ஸ்வர்ணாவின் குரல் அவனை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது.

தன் எதிரில் அமர்ந்தவளை சிறிது நேரம் மவுனமாய் பார்த்துக்கொண்டிருந்தான் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என புரியாமல்.

“ஏதோ தத்துப்பிள்ளைன்னு சொன்னீங்களே.. நீங்க ஏதாவது குழந்தையைப் பார்த்து வச்சிட்டுதான் சந்திரா சொன்ன யோசனையை வேண்டாம்னு சொன்னீங்களா ராபர்ட் ?”

“இல்லே ஸ்வர்ணா. நான் எந்த முடிவுக்கும் இதுவரை வரலை. உன்னோட அபிப்ராயத்தைக் கேட்டுட்டு ட்ரை செய்யலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்றே ?”

“அதுல மட்டும் பிரச்சினை இருக்காதா ?”

“தெரியலை. எங்க கம்பெனி லீகல் அட்வைசரை எனக்கு நல்லா தெரியும். அவர்கிட்டயோ அல்லது அவருக்கு தெரிஞ்ச லாயர் ஒருத்தர் கிட்டயோ அட்வைஸ் கேட்கலாமான்னு யோசிக்கறேன். நம்ம ரெண்டு பேரும் வேணும்னா ஒரு நாள் போய் பாக்கலாம்.”

“சரி. நீங்க சொல்றமாதிரியே செய்யலாம். நீங்க போய் கேட்டுக்கிட்டு வாங்க. இப்போ போய் கை, கால் கழுவிக்கிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கறேன். காலைலயும் சாப்பிடாம பசி வைத்தைக் கிள்ளுது.”

இருவரும் மவுனமாய் உண்டு முடிக்க, ராபர்ட், “நான் ஆஃபீஸ் போய்ட்டு வர்ற வழியில வக்கீலைப் பார்த்திட்டு வரேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்று கூறிவிட்டு காரை விடுத்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல ஸ்வர்ணா கேட்டை மூடிவிட்டு படுக்கையறையை நோக்கி சென்றாள்.

****

தன்னுடைய அலுவலக சட்ட ஆலோசகரின் அலுவலகத்திலிருந்து வெளியேறிய ராபர்ட் வளாகத்தில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்க மனமில்லாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

“ஐ ஆம் சாரி மிஸ்டர் ராபர்ட். ஒரு குழந்தையை சட்ட பூர்வமா தத்து எடுத்து அந்த குழந்தைக்கு இயற்கையாக பிறக்கற ஒரு குழந்தைக்கு கிடைக்கற எல்லாவித உரிமைகளும் கிடைக்கணும்னா தத்து எடுக்கற தம்பதியர்கள் இந்து, புத்த மதம் மற்றும் ஜெயின் அல்லது சீக்கிய இனத்தை சார்ந்தவர்களாயிருக்கணும்னு நம்ம நாட்டோட THE HINDU ADOPTION AND MAINTENANCE ACT (HAMA) ல சொல்லப்பட்டிருக்கு.

அதுக்காக மத்த மதத்தையோ அல்லது இனத்தையோ சார்ந்தவங்க தத்து எடுக்க முடியாதுன்னு இல்லை. ஆனா அந்த குழந்தைகளுக்கு இயற்கையாக பிறக்கற குழந்தைகளுக்கு சமமான உரிமைகள் இருக்காது. உதாரணமா அந்த குழந்தைகள் தன் பெற்றோரின் பெயரை – ஐ மீன் பேரண்ட்சோட இனிஷியலை அவர்களுடைய பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள முடியாது. அத்துடன் பெற்றோர்களின் சொத்தில் உரிமையும் கோரமுடியாது.

இத்தகைய பெற்றோர்-குழந்தைக்கிடையே ஏற்படுகிற உறவு இந்திய The Guardian and Wards Act, 1890. சட்டத்திலுள்ள ஷரத்துக்களின்படி ஒரு கார்டியன்-வார்ட் உறவை சார்ந்தே இருக்கும்.”

“பட் சார், என் மனைவி ஒரு இந்து தானே ?”

வழக்கறிஞர் ஆமோதிப்பது போல் தலையசைத்தார். “யூ ஆர் ரைட். நீங்க இந்துவாயிருந்து உங்க மனைவி கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்தவராயிருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. கலப்புத் திருமண தம்பதியர் விஷயத்தில் ஆண் எந்த மதம் அல்லது பிரிவினைச் சார்ந்தவர் என்பதைத்தான் சட்டம் கவனிக்கும். அல்லது இந்து பெண் ஒரு விதவையாகவோ, விவாகரத்து பெற்றவராகவோ இருக்க வேண்டும். உங்க விஷயத்துல இது பொருந்தாதே.”

“இதுக்கு ஏதாவது வழி இருக்கா சார் ?”

“மிஸ்டர் ராபர்ட், லுக் அட் திஸ் வே. நீங்க தத்தெடுக்கப்போகிற குழந்தை உங்களுடைய குழந்தையாகத்தானிருக்கும். உங்கள் இனிஷியலை உபயோகிக்கற உரிமை மட்டும்தான் இல்லாமலிருக்கும். பள்ளியில் சேர்க்கும்போது உங்கள் பெயரை கார்டியன் என்று பதிவு செய்துக்கொள்ளலாம். பிரச்சினையிருக்காது. மற்றபடி சொத்துரிமை இல்லையென்பது ஒரு பிரச்சினையேயில்லை. உங்களுடைய சொத்தை உங்கள் குழந்தையின் பேருக்கு எழுதிவைப்பதன் மூலம் அந்த பிரச்சினையையும் சால்வ் செய்ய முடியும். யூ கேன் கோ அஹெட் வித் யுவர் அடாப்ஷன். வேணும்னா உங்க மனைவியையும் கூட்டிக்கிட்டு ஒரு நாள் வாங்க. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் டு ஹர். ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் ராபர்ட். எனக்கு வேறொரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு..”

சட்டத்தின் பார்வையிலிருந்து பார்க்கும்போது வழக்கறிஞரின் வாதம் சரியாயிருக்கலாம். ஆனால் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போதே தான் அக்குழந்தையின் தந்தை இல்லை வெறும் கார்டியன் தான் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்குமே. அதை அந்த பச்சிளம் குழந்தையால் தாங்கிக்கொள்ள முடியுமா ?

வாடகைத்தாய்..! மருத்துவர் சித்ரா அறிவுரையின் படி .. அது ஒன்றுதான் வழி.

ஸ்வர்ணாவின் விருப்பமும் அதுதானே..

வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து தான் வெகு தூரம் வந்துவிட்டதை உணர்ந்தவனாய் திரும்பி தன் வாகனத்தை நோக்கி விரைந்தான் மனதில் எழுந்த தீர்மானத்தை செயல்படுத்தும் நோக்கத்துடன்…

****

Series Navigation

டிபிஆர் ஜோஸப்

டிபிஆர் ஜோஸப்