திருவண்டம் – 3

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

ஜாவா குமார்


‘மூளை என்ற அமைப்பே, நியூரான் கட்டமைப்பே இல்லாத உயிர்களிலும், குறிப்பாய் ஒரு செல் உயிரிகளிலும் இந்த மைக்ரோட்யூபுள் என்ற சுமார் பதினான்கு நானோமீட்டர் உட்புறஅகலம் கொண்ட நுண்வெளிமண்டலமே அவற்றைச் செலுத்தும் சக்தியாக அமைந்திருப்பதும் ஒரு விந்தை. ஆக இது மானுடர்க்கு மட்டும் ஏன் மூளையில் நிகழ்வதாய்க் கருத வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறோம் ஐயா. ‘

‘இந்த அதிநுண்குழலைப் பற்றி மேலும் சொல்லும் யோகரே! ‘

‘இந்த மைக்ரோட்யூபுள் என்ற அதிநுண்குழல் பதிமூன்று அடுக்குகளால் ஆன கூரையால் வேயப்பட்டது. இந்தக் குழலின் கூரைகள் வலமாய்ச் சுருளும் ஐந்து அடுக்குகளாலும், இடமாய்ச் சுருளும் எட்டு அடுக்குகளாலும் ஆனவை. இதுதான் இயற்கையின் மிகப்பெரிய புதிர் ஐயா! ‘

‘அஃதென்ன புதிர் ? ‘

‘இந்த ஐந்து, எட்டு, பதிமூன்று என்ற எண்வரிசையை ஃபிபோனச்சி வரிசை என்பர். மலர்களுக்கும், மானிடர்க்கும் ஏன் உலகின் அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பொதுவான வரிசை இது. இதை ஒருவகையில் இயற்கையின் கையெழுத்து என்றும் சொல்லலாம். ஏனிப்படி அமைகின்றன என்பது இது வரை அறிவியலார்க்குப் புரியாத மர்மம். ‘

‘சக்தி திருக்கூத்து! ‘ முதியவரின் குரல் சன்னமாய் ஒலித்தது.

‘இந்த அதிநுண்குழலைப் பிரித்துப் பார்த்துள்ளீரா யோகரே. ‘

‘இப்படியே ஐயா ? இந்தக் குழலைப் பிரித்து பதிமூன்று அடுக்குகளைப் பக்கவாட்டில் அடுக்கியது போன்ற படமிது. பாருங்கள். ‘

‘இந்தப் படத்துக்குள் ஒரு வடிவம் எழுவதைக் கண்டாரோ, யோகரே! மேலும் கீழுமாய் இரு முக்கோணங்கள் பிணைவதைக் காண்கிறீரா ? மேலும் இந்தக் குழலே குறுக்குவெட்டிலும் அறுகோணத்தில் அமைந்திருப்பதைக் கண்டாரா ? ‘

‘ஆம் ஐயா! அதற்கென்ன ? ‘

‘இதுதான் சிவசக்தி ஐக்கியம். ஒன்றேயானது ஆணும் பெண்ணுமாகி உலகைக் கட்டும் அதிசயம். யோகரே! இதைப் பிரணவக்கூபமென்பர் சித்தர். ‘

‘இந்த நுண்வெளிமண்டலத்தை இயக்கும் சக்தியை மற்ற உயிர்கள் தம்முள் உணரவல்ல அருள் கொண்டவை அல்ல. ஏனைய உயிர்கள் யாவும் தத்தம் பொறிகளால் இன்பதுன்பங்களை நுகர வல்லவையே ஆயினும், நுகர்வது எது என்று மேலும் குறுகிச் சிந்தனை செலுத்த வல்லமை அருளப் பெற்றவை அல்ல. மண்ணுலக உயிர்களுக்கு மட்டுமின்றி, விண்ணுலக உயிர்களுக்கும் இது பொருந்தும். எம்முடன் இங்கு வந்திருக்கும் தோழர் சொல்வதுபோல் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த மானிடர்க்கு மட்டுமே அமைந்தருளும் சக்திநிபாதம் இது. ‘

‘இப்படி அண்டங்கள் அனைத்தையும் இயக்கியிருக்கும் அருட்பெருஞ்சோதியை புருவமத்தியில் காணவல்லோன் மரணத்தை வெல்வோன் ஆவான். எங்கும் நிறை அகண்டாகார சோதியை ஆக்கினைச் சக்கரத்தில் காணவல்லோன், கூற்றை உதைப்போனாகிறான். பேரண்டப் பிரதிநிதியாய் அவனுள் இருக்கும் ஒளித்துளி பின்னர் துரியப்பரியிலேறி எங்கும் செல்லுவியலும். எதுவும் ஆகவியலும். ‘

இனியகுரலில் தொடர்ந்து பாடினார் முதியவர்.

‘அணுவுள் அவனும்

அவனுள் அணுவும்

கணுவற நின்ற

கலப்பது உணரார்

இஇணையிலி ஈசன்

அவன்எங்கும் ஆகித்

தணிவற நின்றான்

சராசரம் தானே. ‘

‘துரியம் கடந்து

துரியாதீதத்தே

அரிய வியோகம் கொண்டு

அம்பலத்து ஆடும்

பெரிய பிரானைப்

பிரணவக் கூபத்தே

துரியவல்லார்க்குத்

துரிசில்லைதானே. ‘

‘நனவிலேயே கனவும், உறக்கமும், துரியமெனும் பேருறக்கமும் கண்டுபின், உயிர்வளியும் வேண்டாநிற்கும் உயிர்ப்படக்க நிலையது. ‘

பின்னால் நின்ற முதியவர் ‘கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி! நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி! ‘ என்று வணங்கி நின்றார்.

தொடரும்..

****

This life of yours which you are living is not merely a piece of this

entire existence, but in a certain sense the ‘whole ‘; only

this ‘whole ‘ is not so constituted that it can be surveyed in one

single glance.

– Erwin Schrodinger, 1925.

கண்டதை அன்றுஅன்று என விட்டுக் கண்ட சத்தாய்

அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் பண்டணைந்த

ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட

சானத்தில் தீர்விடம் போற்றான்.

– மெய்கண்டதேவர் (சிவஞானபோதம் – புருவமத்தியில் தேனித்துத் தெளியும்

பதிஞானத்தைச் சுட்டவந்த ஒன்பதாம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

(தொடரும்)

Series Navigation

ஜாவா குமார்

ஜாவா குமார்