உறவின் முறிவு

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

ஜோஸப்


“உங்க இரண்டு பேருக்கும் நடுவில இனி ஒன்னுமேயில்லேன்னு முடிவு பண்ணிட்டாங்களா உமா ?”

கேள்வியின் பின்னாலிருந்த ஆதங்கத்தை தெளிவாய் உணர்ந்திருந்தும் வெகு நேரம் வரை மேசையின் மேல கிடந்த பேப்பர்வெய்ட்டை உருட்டியவாறே பதில் பேசாமல் தலை குனிந்திருந்தாள் உமா மகேஸ்வரி.

மாரேஜ் கவுன்சிலர் சுச்சித்ராவுக்கு இதொன்றும் புதிதல்ல. அவளுடைய ஐந்தாண்டு அனுபவத்தில் இதுபோன்ற மேல்வாரியான (superfluous) கோபதாபங்களுக்காக பிரிந்துவிடுவது என்று தீர்மானித்து விவாகரத்து மன்றம் வரையிலும் சென்று அவளுடைய தலையீட்டால் மீண்டும் இணைந்து வாழ்வது என்று முடிவெடுத்த எத்தனையோ தம்பதியரில் ஒன்றுதான் உமா மகேஸ்வரி-கணேஷ் தம்பதியரும்.

விவாகரத்து என்ற உறவினுடைய முறிவின் பின்னே உள்ள கசப்பான விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் மிகச்சாதாரணமான கருத்து பேதங்களுக்காக, உணர்ச்சிபூர்வமாக, சரியான வழிகாட்டுதல் இல்லாமல், பிரிவின் விளிம்பை அடைந்த பிறகு தங்களுடைய இயலாமையை நினைத்து வேதனைப்பட்டு, மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் தனிமை பாரமாய் அழுத்த … கடந்த ஐந்தாண்டு காலத்தில் இப்படி எத்தனை தம்பதியரை அவள் சந்தித்திருக்கிறாள்!

சுசீத்ராவின் வாழ்க்கையும் அப்படி கனவாய் கலைந்துபோன ஒன்றுதானே!

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சுசீத்ராவின் பெற்றோர் மகளின் பட்டப்படிப்பு முடிந்த கையோடு திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு உறவினர் வட்டாரத்தில் தகுந்த வரனைத் தேடிக்கொண்டிருந்த சமயம் சென்னையிலிருந்த உறவினர் ஒருவர் மூலமாய் வந்த மகேஷின் ஜாதகம் அம்சமாய் பொருந்த அடுத்த முகூர்த்தத்திலேயே சிறப்பாய் நடந்து முடிந்தது சுசீத்ரா-மகேஷ் திருமணம்.

மீதமிருந்த பட்டப்படிப்பை – ஆறே மாதங்கள்தான் – முடித்துவிட்டு வருகிறேன் என்று அவளுடைய நியாயமான ஆசையைப் பொருட்படுத்தாமல் ‘படிச்சிட்டு என்னம்மா பண்ணப்போறே ? படிச்சவரைக்கும் போறும். மகேஷோட கிளினிக்கை பாத்துக்கறதுக்கே நாங்க வேலைக்கி ஆள் வச்சிருக்கறப்போ நீ படிச்சிட்டு வேலைக்கா போகப்போற ?’ என்று மகேஷின் தாய் கூற அதை ஆமோதிப்பவன்போல் மெளனம் சாதித்த மகேஷை குழப்பத்துடன் பார்த்தாள் சுசீத்ரா.

‘மகேஷ், நான் எம்.எஸ்.டபிள்யூ பண்ணிட்டு சோஷியல் சர்வீஸ் செய்யணும்கற ஆசையில இருக்கேன். ப்ளீஸ் லெட் மி கம்ப்ளீட் மை டிகிரி.’ என்றவளை கேலியுடன் பார்த்தான் மகேஷ்.

‘என்னது, சோஷியல் சர்வீசா! நான் பாக்கற மருத்துவதொழிலே ஒருமாதிரி பொதுசேவைதானே. வேணும்னா என்கிட்ட வர்ற பேஷண்ட்ஸுக்கு சேவைப்பண்ணு. அது போதும். அதுக்குன்னு பெரிசா படிக்கவேண்டியதில்லை. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட். லட்சக்கணக்குல செலவு பண்ணி க்ளினிக்கைக் கட்டி நாங்க நடத்திக்கிட்டிருக்கறப்போ நீ சேரியில போய் சோஷியல் சர்வீஸ்னு அலைஞ்சிக்கிட்டிருந்தா நல்லாருக்காது சுசீ. •பர்கெட் இட்.”

சுசீத்ராவின் பெற்றோரும் வேறு வழியில்லாமல் மெளனம் சாதிக்க படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு மகேஷோடு சென்னையில் குடிபுகுந்தாள் மனதில் மிஞ்சிய நிராசையுடன்.

அடுத்து வந்த பிரச்சினைகள் நிறைந்த அந்த இரண்டாண்டுகள் … இப்போது நினைத்தாலும் அவளுடைய மனதில் துயரம் வந்து மண்டிக்கொண்டது.

சுசீத்ராவின் குடும்பம் நடுத்தர குடும்பம்தான் என்றாலும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரே குழந்தை என்பதால் அவளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து அவளுடைய மகிழ்ச்சியையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் அவளுடைய பெற்றோர். அவளுடைய விருப்பத்திற்கு எதிராய் நினைத்துக்கூட பார்த்திராத அந்த அப்பாவி பெற்றோர் அவளுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததுதான் விதிவிணை.

நிச்சயம் முடிந்த கையோடு, ‘தலைச்சன் ஆணும் தலைச்சன் பெண்ணும் ஜோடி சேரக்கூடாதுமா. அதெப்படி உங்களுக்கு இதுகூட தெரியாம போயிருச்சி ? ஜாதகம் பொருந்தினா போறுமா.. என்ன ஒரு வார்த்த கேட்டிருந்தா இந்த சம்மந்தமே வேணாம்னு தடுத்தி நிறுத்தியிருப்பேனே.’ என்று அவர்களுடைய உறவினர்களுள் மூத்த பெரியவர் ஒருவர் தன் பெற்றோரிடம் கூறியது எத்தனை உண்மை!

‘நிச்சயமெல்லாம் முடிஞ்சப்பிறகு இதப்பத்தி யோசிச்சி என்ன பிரயோசனம் ? எல்லாம் கடவுள் விட்ட வழி. நம்ம சுசீத்ராவுக்கு கடவுள் ஒண்ணும் வரவிடமாட்டாருங்க. மனச போட்டு அலையவிடாம கல்யாண காரியத்த பாருங்க. இந்த விஷயம் சுசீத்ராவுக்கு தெரிய வேணாம்’ என்று சமாதானம் சொன்ன அவளுடைய அம்மா, அவ்வளவையும் கூடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தன் மகளைக் கவனிக்கவில்லை.

அந்த தாத்தா சொன்னது எத்தனைச் சரியாயிருந்தது ? எந்த ஒரு விஷயத்திலும் உமாவின் கருத்துக்கு ஒத்துப்போனதில்லை மகேஷ். அவனும் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாயிருந்ததால் சிறு வயது முதலிருந்தே அவன் வைத்ததுதான் அந்த குடும்பத்தில் சட்டமாயிருந்தது.

எத்தனை வாக்குவாதங்கள்! எத்தனை மனக்கசப்புகள்! கணவன், மாமனார், மாமியார் என நான்கே பேர் கொண்ட அந்த குடும்பத்தில் சுசீத்ராவின் மனதை முழுவதுமாய் புரிந்திருந்தவர் அவளுடைய மாமனார் மட்டும்தான். இருப்பினும் இயற்கையாகவே சாதுவான அவரால் அவளுக்கு ஆறுதலாக மாத்திரமே இருக்க முடிந்தது.

தன் பெற்றோரிடம் அவள் முறையிட்டபோதும் அவர்களால் அனுதாபப்படத்தான் முடிந்தது. மூர்க்கத்தனமும் பிடிவாதமும் நிறைந்திருந்த மருமகனை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாமல் போயிற்று. ‘நீ தாம்மா அனுசரிச்சி போகணும். அப்பாவுக்கு உன்னை நினைச்சே இப்பல்லாம் மறுபடியும் அடிக்கடி நெஞ்சு வலி வந்துடுதும்மா. அதனால.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் இடையிலிருக்கற விரிசல அப்பா காதுல போடாம இருக்கறதுதான் நல்லது சுசீ.’ என்று அம்மா சொன்னபோது ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்திருந்த தன் தந்தையின் உடல் நிலையின் பொருட்டு அன்றோடு தன் வீட்டுக்கு தொலைப்பேசியில் பேசுவதை வெகுவாய் குறைத்துக்கொண்டாள் சுசீத்ரா.

இச்சூழ்நிலையில் ஒரு நாள் தன் கல்லூரித் தோழியைத் தற்செயலாய் சென்ையைில் சந்திக்க நேர்ந்து அவளுடைய ஆலோசனையின் பேரில் குடும்பநல ஆலோசகர் ஒருவரை சந்திக்கலாம் என்று தீர்மானித்து ‘என்னதான் சொல்கிறார், போய் பார்ப்போமே’ என்று மகேஷிடம் கூறினாள் அதன் பின்விளைவுகளை அறியாதவளாய்.

‘என்ன சுசீ, உனக்கென்ன பைத்தியமா ? இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்பிடி முட்டாள்தனமா சஜ்ஜஸ்ட் பண்றே ? ஒன்னுமில்லாததையெல்லாம் கற்பனைப் பண்ணிக்கிட்டு .. ஐ டோண்ட் வாண்ட் டு டாக் அபெளட் இட். ஜஸ்ட் •பர்கெட் இட்.’

அத்தோடு நில்லாமல் மகேஷ் தன் தாயிடம் போய் சுசீத்ரா கூறியதைச் சொல்ல அவர்கள் அவளுடைய பெற்றோரைத் தொலைப்பேசியில், ‘என்ன வளர்ப்பு வளர்த்திருக்கீங்க ? வீட்டு விஷயத்தை மூனாம் மனுஷங்கக்கிட்ட டிஸ்கஸ் செய்யணுங்கறது நல்லாவாயிருக்கு ?’ என்று கோபத்துடன் முறையிட இருதய நோயாளியான அவளுடைய தந்தைக்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு அவள் தன் மாமனாருடன் சென்று சேருவதற்குமுன் மருத்துவமனையிலேயே மரணமடைந்த தன் தந்தையின் உயிரற்ற உடலைத்தான் காண முடிந்தது அவளால்.

தன் தந்தையின் சவ அடக்கத்துக்கு கடைசி நேரத்தில் வந்த மகேஷும் அவனுடைய தாயும் மறுநாளே அவளை ஊர் திரும்ப நிர்பந்தித்தபோதுதான் தன் தாயையும் மீறிக்கொண்டு சீறினாள் சுசீத்ரா.

‘நான் இப்போ உங்களோட வர்றதாயில்ல மகேஷ். எங்கம்மாவுக்குன்னு இனி என்னை விட்டா யாருமில்ல. அவங்கள இப்பிடியே விட்டுட்டு வர முடியாது. ஐ ஆம் சாரி.’

‘என்ன சொல்றே நீ! உங்கம்மாவ பாத்துக்கறதுக்கு ஒரு வேலைக்காரிய பாத்து வச்சிட்டா போச்சி. உங்கப்பா அவங்களுக்குன்னு ஒன்னும் சேத்து வைக்காம போயிருக்க மாட்டாரு. இல்லேன்னா சொல்லு, அம்மா கிட்ட சொல்லி ஏதாச்சும் ஏற்பாடு பண்றேன். உன்ன இங்க விட்டுட்டு போனா அங்க அம்மாவோட தேவைகளை யார் பாத்துக்கறது ? உங்கம்மாவுக்கு செய்யவேண்டிய சடங்குகளைப் பாத்துக்கறதுக்குத்தான் அவங்க ரிலேட்டிவ்ஸ் இருக்காங்கள்ளே. நீ புறப்படு.’

மகேஷின் பதிலைக் கேட்ட சுசீத்ராவின் உறவினர்களில் ஒருவர் கோபத்துடன் குறுக்கிட்டு ‘என்ன தம்பி, நீங்க பேசறது நல்லாவாயிருக்கு ? தகப்பனை இழந்துட்டு நிக்கற ஒரு பொண்ண பாத்து பேசற பேச்சா இது ? கொஞ்சம் கூட நல்லாயில்ல. நீங்களும் கூட இருந்து காரியங்களையெல்லாம் முடிச்சிட்டு சுசீயோட அம்மாவையும் கூடவே கூட்டிக்கிட்டு போயிருங்க. அதான் நியாயம்.’ என்று அவளுக்கு பரிந்துகொண்டு வர கோபத்தின் உச்சிக்கே போய் கத்தினான் மகேஷ்.

‘ஹு ஈஸ் திஸ் ஓல்ட் மேன் சுசீ ? நீங்கல்லாரும் பேசி வச்சிக்கிட்டு டிராமா பண்றீங்களா ? இங்க பார் சுசீ, உங்கம்மாவை நம்மோட கூட்டிக்கிட்டு போற பேச்சுக்கே இடமில்லை. •பர்கெட் இட். நீ வேணும்னா ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வா. அப்பா இருந்து கூட்டிக்கிட்டு வரச்சொல்றேன். தட்ஸ் ஆல். நோ மோர் ஆர்க்யூமெண்ட்ஸ்.’

மகேஷின் குரலில் தொனித்த ஆணவம் இதுவரை சுசீத்ராவின் மனதில் அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் அடக்கமாட்டாமல் கொட்ட வைத்தது.

“ஹவ் டேர் யூ டாக் லைக் தட் ? உங்க மனசுல நீங்க எங்கம்மாவைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க ? ஐ ஆம் நாட் கமிங். நாட் ஒன்லி நவ், பட் •பார் எவர். மாமா எனக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. யு கேன் ஆல் லீவ்.’

கோபத்தில் உதடுகள் துடிக்க தன் முன் நின்ற தன் மனைவியைப் பார்த்து அதிர்ந்து போய் அருகிலிருந்த தன் தாயையும் தந்தையையும் சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சுசீத்ராவின் உறவினர்களையும் மாறி மாறிப் பார்த்த மகேஷ் இனியும் பேசிக்கொண்டிருந்தால் தனக்குத்தான் அவமானம் என்ற நினைவுடன், ‘கமான் டாட், இதுக்கும் மேல என்னால அவமானப்பட முடியாது. நீங்க வர்றீங்களா. இல்ல நான் போகட்டுமா ?’

அவர்கள் மூவரும் போவதைத் தடுக்கக்கூட முடியாமல் தன் கணவையைிழந்த துயரத்தில் முழ்கியிருந்த சுசீத்ராவின் தாய் தனக்குள்ளேயே அழுதாள்.

மீதமிருந்த சடங்குகளையெல்லாம் முடிக்கும்வரை குழுமியிருந்த உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றபின் தாயும் மகளும் அனாதரவாய் நிற்பதுபோல் உணர்ந்தனர்.

இரண்டொரு நாளுக்குப் பிறகு ‘இனி என்ன பண்றதா முடிவு பண்ணியிருக்கே சுசீ ? மகேஷ் ஊருக்கு போய் இதுவரை •போன் கூட பண்ணலையே. எனக்கு பயமாயிருக்குமா. நீயாவது •போன் பண்ணி பாரேன்.’ என்ற தன் தாயை தீர்க்கமாய் பார்த்தாள் சுசீத்ரா.

‘அப்பாவோட ஆ•பீஸ்ல எனக்கு ஒரு வேலை குடுக்கறேன்னு சொல்லியிருக்காங்கம்மா. அடுத்த திங்கட்கிழமையிலருந்து போகணும்.’

அதிர்ச்சியுடன் தன்னைப் பார்த்த தன் தாயைப் பார்த்து ஆறுதலாய் புன்னகைத்தாள் சுசீத்ரா. ‘ஆமாம்மா. இப்படியொரு சந்தர்ப்பத்துக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன். அப்பாவோட மரணம்தான் எனக்கு அந்த பொருத்தமில்லாத பந்தத்திலேருந்து விடுதலையக் குடுத்திருக்கு. அதுமட்டுமில்லேம்மா. ஒரு சின்ன விஷயத்துக்காக அப்பாவ •போன்ல கூப்பிட்டு அவர் ஹார்ட் பேஷண்ட்டுன்னு தெரிஞ்சிருந்தும் அவர் கிட்ட தாறுமாறா பேசி அவரோட மரணத்துக்கே காரணமாயிருந்த மகேஷையும் அவரோட அம்மாவையும் என்னால மன்னிக்கவே முடியாதும்மா. அதனால..”

“அதனால.. ? நீ என்ன சொல்ல வர்றே சுசீ ?”

‘நான் கொஞ்ச நாளைக்கு உங்க கூடவே இருக்கறதா முடிவு பண்ணிட்டேன்.”

‘கொஞ்ச நாளைக்குன்னா, எத்தனை நாளைக்கு ? அதுக்கு ஏன் வேலைக்கு போறேன்னு சொல்றே ? நான் வேணும்னா மெட்றாஸ் போய் சம்மந்தியம்மாக்கிட்ட பேசி பாக்கறேன் சுசீ. அவசரப்பட்டு எதையாவது செய்துராதே. என்ன இங்க இல்லன்னா மெட்றாஸ்லருக்கற முதியோர் இல்லத்துல எதுலயாவது சேத்துரு..”

அவளை முடிக்கவிடாமல் தன் கரங்களால் வாயைப் பொத்திய சுசீத்ரா கலங்கிய கண்களுடன் தன் தாயை இறுக அணைத்துக்கொண்டாள்.

‘என்ன வார்த்தை சொல்லிட்டாங்கம்மா ? நான் குத்துக்கல்லாட்டமா இருக்கறப்போ உங்களை அனாதையாட்டம்மா எங்கயாவது விட்டுட முடியுமா ? இங்க பாருங்கம்மா. இது நான் போன ஆறு மாசமாவே யோசித்து யோசித்து எடுத்த முடிவுதான். எனக்கும் மகேஷுக்கும் எந்த விதத்திலும் ஒத்துப் போகமாட்டேங்குது. இவ்வளவுக்கு ஏன், அவருக்கு குழந்தைப் பெத்துக்க மருத்துவ ரீதியா முடியாதுன்னு தெரிஞ்சும் அதை அவரோட குடும்பத்திலிருந்தே மறைச்சி என்னைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டு என்னை மலடிங்கறா மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்தி.. வேணாம்மா விட்டுடுங்க.. இன்னும் என்னவெல்லாமோ இருக்கு. உங்களால அதையெல்லாம் தாங்கிக்க முடியாது.. அம்மா என்னாச்சி.. ? ஏன் இப்படி பாக்கறீங்க ? அம்மா… அம்மா… என்னாச்சிம்மா… ?”

***

‘அளவுக்கு அதிகமான அதிர்ச்சியால அவங்களுக்கு மூளைல ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு இடது பக்க மூளை செயலிழந்துவிட்டது சுசீத்ரா. ஐ ஆம் சாரி. அவங்களால இனி நார்மல் நிலைக்கு வரமுடியும்னு எனக்குத் தோணலை.. ஏன்னா..’

எதிரேயிருந்த தன் தந்தையின் நண்பரும் தன்னுடைய குடும்ப மருத்துவருமான வேதாச்சலத்தை வேதனையுடன் பார்த்தாள் சுசீத்ரா ‘ஏன் டாக்டர் தயங்குறீங்க ? சொல்லுங்க. என்னால இனி எந்த அதிர்ச்சியையும் தாங்க்கிக்க முடியும். ப்ளீஸ் டெல் மீ.’

‘ஐ ஆம் சாரி டு டெல் யூ திஸ். அவங்களுக்கு தான் சுகமடையணுங்கற விருப்பமேயில்லைன்னு நினைக்கறேன் சுசீத்ரா. ஷி வாண்ட்ஸ் டு டை சோ தட் யூ கான் கோ பேக் டு யுவர் ஹஸ்பெண்ட்.’

தன் முன்னே மேசையின் மீது கவிழ்ந்து குலுங்கி குலுங்கியழும் தன் மகளின் வயதையொத்த சுசீத்ராவைப் பார்த்து வேதனையடைந்த வேதாச்சலம் அவளைச் சிறிது நேரம் தனியே விடுவதுதான் நல்லது என தீர்மானித்து அறையை விட்டு அவர் வெளியேறினார்.

சுசீத்ராவின் தந்தைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய மருத்துவமனையில் வைத்தியம் பார்த்த நாளிலிருந்து சுசீத்ராவின் குடும்பத்தாரை வெகுவாய் பிடித்துவிட அந்த சிறிய குடும்பத்தின் நெருங்கிய நண்பரானார் வேதாச்சலம். சுசீத்ராவின் திருமணம், அதன் பிறகு அவளும் அவளுடைய பெற்றோரும் சம்பந்தி வீட்டில் பட்ட அவமானங்கள் என எல்லாவற்றையும் அறிந்திருந்தார்.

சுசீத்ராவின் தாய் இரண்டு வார மருத்துவமனை வாசத்திற்கு பிறகு அனாதரவாய் நிற்கும் தன் மகளை அலங்க மலங்க பார்த்தவாறே ஒன்றும் பேச முடியாமல் மரணமடைய என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள் சுசீத்ரா.

‘கவலைப்படாதே சுசீத்ரா, ஐ வில் டேக் கேர் ஆ•ப் எவிரிதிங். மகேஷோட •போன் நம்பர் மட்டும் நீ குடு. நான் •போன் பண்ணிப் பேசறேன். உங்கப்பாவோட ரிலேடிவ்ஸ்சுக்கும் சொல்லிடறேன்.’

வேதாச்சலத்தின் தொலைப்பேசி அழைப்பை எடுத்து பேசிய மகேஷின் தந்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் உடனே புறப்பட்டு வந்து சுசீத்ராவின் தந்தை ஸ்தானத்திலிருந்து சடங்குகளில் ஒன்றையும் பாக்கி வைக்காமல் செய்து முடிக்க இதை முற்றிலும் எதிர்பார்க்காத சுசீத்ரா அவர் கைகளை பிடித்துக்கொண்டு நன்றியுடன் கண்கலங்கினாள்.

‘தாங்க்யூ மாமா. நான் இதைக் கொஞ்சவும் எதிர்பார்க்கலை. மகேஷ் ஏன் மாமா வரவேயில்ல ?’

‘வீட்ல நிலமை இப்ப ரொம்ப மோசம்மா. அதனால நான் வீட்ல யாருக்கிட்டயும் சொல்லாமத்தான் கிளம்பி வந்தேன். மகேஷுக்கோ அவன் அம்மாவுக்கோ விஷயம் தெரியாது. இன்னைக்கித்தான் வீட்டுக்கு •போன் பண்ணணும்.’

அவருடைய குரலிலிருந்த விரக்தி அவளுக்கு நிலைமையைப் புரிய வைத்தது.

‘வேண்டாம் மாமா. நீங்க இங்கருந்து •போன் பண்ண வேணாம். நீங்க புறப்பட்டு போங்க. ஐ கேன் மானேஜ் மைசெல்•ப். கொஞ்ச நாள் போகட்டும். நானே மகேஷ் கிட்ட பேசறேன்.’

மகேஷ் தன் பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவளை விவாகரத்து செய்துவிட முடிவு செய்திருப்பதை இந்த சூழ்நிலையில் சுசீத்ராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் அவர் புறப்பட்டு செல்ல இரண்டொரு நாளில் மகேஷின் வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து வந்த விவாகரத்து நோட்டாஸ் அவருடைய அன்றைய தயக்கத்தின் காரணத்தை அவளுக்குப் புரிய வைத்தது.

தன் தந்தையின் நண்பர்களுடைய அறிவுரையின் பேரில் வழக்கறிஞர் ஒருவரை அணுகி மகேஷின் நோட்டாசுக்கு காரசாரமாய் அவள் அனுப்பிய பதில் நோட்டாஸ் அவனை வெகுவாய் உசுப்பிவிட தீப்பொறியாய் ஆரம்பித்த விஷயம் கொழுந்துவிட்டு எரியும் ஆவேச ஜ்வாலையாய் மாறி இருதரப்பினரின் உணர்வுகளையும் உறவையும் எரித்துவிட்டுதான் அடங்கியது.

அதன் பிறகு தனிமையின் கசப்பை மறக்க நினைத்து மதுரையிலேயே தங்கி இடையில் விட்டுப்போன பட்டப்படிப்பை முடித்தாள் சுசீத்ரா. சென்னையில் முன்பு தனக்கு குடும்பநல ஆலோசனைக்கு சிபாரிசு செய்த கல்லூரி தோழியின் உதவியுடன் குடும்பநல ஆலோசனை மையத்தில் ஆலோசகராக பயிற்சிபெற்று பிறகு அதே மையத்தில் முழுநேர ஆலோசகராக …

இன்றோடு ஐந்து ஆண்டுகள் மூன்று மாதம் ..

***

‘நீங்க நினைக்கறா மாதிரி விவாகரத்து கிடைக்கறதுக்கு வக்கீல்களோட சர்வீசஸ் வேணுங்கற கட்டாயம் ஒன்னுமில்லை உமா. பெரும்பாலான கேஸ்ல தம்பதியர்ங்க ரெண்டு பேரும் சமரசமா போயிடலாம்னு விரும்பினாகூட வக்கீல்ங்க விடமாட்டாங்க. தாம்பத்தியிலருக்கற இலை மறைவு காய் மறைவு விஷயங்களக்கூட வெளியே கொண்டு வந்து கொச்சைப்படுத்தி மனசை ரணகளப்படுத்திடுவாங்க. விவாகரத்து கிடைச்சி பிரிஞ்சதுக்கப்புறமும் நல்லதொரு நண்பர்களா ரிலேஷன்ஷிப்பை மெயிண்டெயின் பண்ற எத்தனையோ தம்பதியரை நான் பார்த்திருக்கறேன். வக்கீல்களோட குறுக்கீடு இதையெல்லாம் ஸ்பாய்ல் பண்ணிடும். உங்க கேசையே எடுத்துக்குவோம். உங்களுக்கு இருக்கற குழந்தைகளோட கஸ்டடி பிரச்சினனயில கோர்ட் என்ன முடிவு எடுக்கும்னு சொல்ல முடியாது. உங்களுக்கு கஸ்டடி கிடைச்சாலும் உங்க கணவருக்கு விசிட்டிங் ரைட்ஸ் கண்டிப்பா கிடைச்சுரும். குழந்தைங்களோட நலனை மனசுல வச்சாவது உங்க ரெண்டு பேருக்கும் மத்தியில அநாவசிய மனக்கசப்பை ஏற்படுத்திக்கக் கூடாது. அதுக்குத்தான் சொல்றேன். உங்க கணவரையும் நான் பார்க்கணும், பேசணும். என்ன சொல்றீங்க ?”

‘என்னால மறுபடியும் போய் அந்த ஆள் முன்னால நிக்கமுடியாதுங்க. சாரி.’

‘நீங்க அவரோட அட்ரசை என்கிட்ட குடுத்துடுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.’

‘சாரிங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க போய் அவர்கிட்ட பேசினீங்கனா உங்க மனசையே மாத்திடுவாருங்க. உங்க கவுன்சிலிங்க்கு வந்ததே தப்போன்னு நினைக்கறேன்.’

சுசீத்ரா தன் எதிரில் கடந்த சில மணி நேரங்களாக உரையாடிக்கொண்டிருந்த உமாவை முதல் முறையாக புரிந்துக்கொண்டு பார்த்தாள். ஆக, பிரிவில் முனைப்பாயிருப்பது இவள்தான், கணவனில்லை. இன்னும் சிறிதளவு முயன்றால் இந்த தம்பதியரை இந்த தவறான பாதையிலிருந்து மீட்க முடியும் என்று நினைத்தவளாய் மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி உமாவின் வலது கரத்தைப் பிடித்து ஆதரவாய் அழுத்தினாள்.

‘உமா உங்க உணர்வுகளை நான் புரிஞ்சிக்கலைன்னு மாத்திரம் நினைச்சிராதீங்க. ஒவ்வொரு விவாகரத்திலும் மூன்று முக்கியமான காரணங்கள் இருக்குன்னு எங்க மாரேஜ் கவுன்சிலிங் க்ளாஸ்ல சொல்லிக் குடுத்துருக்காங்க. நான் சொல்லப் போறத ஒரு அஞ்சி நிமிஷம் கேட்டுட்டு அப்புறம் நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு ஒத்துழைக்கறேன். என்ன சொல்றீங்க உமா ?’

கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் தன்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டவளின் கரங்களை ஆதரவாய் தட்டிக்கொடுத்துவிட்டு தொடர்ந்தாள் சுசீத்ரா.

‘நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கு மட்டுமில்லீங்க, உங்க கணவருக்கும் பொருந்தும். ஏன், இந்த எல்லை வரை வந்து இனி என்ன செய்யப்போறோம் குழம்பி நிக்கற எல்லா தம்பதியருக்கும் இது பொருந்தும் :

முதலாவது: தம்பதியருக்கிடையே இருக்கற தன்மான போராட்டம் (Ego clash) மற்றும் அதனால ஏற்படற வாக்குவாதங்கள் (Verbal clashes).

கணவன் – மனைவி உறவுக்கிடையில் அவங்களையும் அறியாம நுழையற இந்த ஈகோ பிரச்சினை நாளடைவில பெரிசாகி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட ஒத்துப்போக முடியாம verbal clashes ல துவங்கி physical abuse வரைக்கும் கொண்டுபோயிடறத நான் நிறைய பேர் விஷயத்துல பார்த்திருக்கிறேன்.

இரண்டாவது: தனிமனித உரிமைகளைப்பற்றிய விவரமில்லாமை (Lack of information) அல்லது தவறான தகவல்கள் (misinformation)

திருமணப் பந்தத்திலிருக்கற ஆண், பெண் இருவருக்கும் சமமான உரிமைகள் இருக்கு. ஆனா, அதுபோலவே கடமைகளும் இருக்கு. உரிமை மட்டும்தான் வேணும் கடமைகள் ஒன்றுமில்லை என்கின்ற முடிவை கணவனோ அல்லது மனைவி எடுக்கும்போதுதான் குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன.

மூன்றாவது: விவாகரத்து பற்றிய தவறான எண்ணங்கள்.

இந்திய விவாகரத்து சட்டத்தின்படி விவாகரத்து மேலை நாடுகளைப் போன்று எளிதாகக் கிடைக்கக்கூடியதில்லீங்க. நம்முடைய இந்து திருமண சட்டத்திலும், இந்திய விவாகரத்து சட்டத்திலும் குறிப்பிட்டிருக்கற மிகக் குறைந்த காரணங்களுக்காக மட்டுமே நம் நாட்டில ஒரு திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவரமுடியும்.

உங்க திருமண வாழ்க்கையில ஏற்பட்டுள்ள வெறும் அபிப்பிராய வித்தியாசங்களுக்காக ஒரு திருமணத்தை ரத்து செய்ய நம்ம நாட்டுல இடமில்லை. அதுக்காகத்தான் எங்களை மாதிரி குடும்பநல, மற்றும் திருமணநல நிறுவனங்கள் தொண்டு அடிப்படையில முழுநேர பணியாளர்களை நியமிச்சி உங்கள மாதிரி தம்பதியர்களுக்கு மத்தியிலிருக்கற மனத்தளவிலுள்ள வேற்றுமைகளை ஆராய்ஞ்சி அவைகளை போக்கி தம்பதியர்களுக்கு இடையில சுமூக உறவை மறுபடியும் ஏற்படுத்தணும்கற நோக்கத்தோட இயங்கிக்கிட்டிருக்கு.

அதனாலத்தான் நான் உங்க கணவரையும் சந்திச்சி பேசணும்னு சொல்றேன். என்ன சொல்றீங்க உமா ?’

சுசீத்ரா பேசி முடிக்கும்வரை பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த உமா சில நிமிட மெளனத்திற்குப் பிறகு தன் அருகிலிருந்த தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து நின்று அவளைப் பார்த்து புன்னகைத்தாள். அவளுடைய முகத்திலிருந்த தெளிவு சுசீத்ராவுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

புன்னகையுடன், ‘என்ன எழுந்திட்டாங்க உமா ?’ என்றாள் தானும் எழுந்தவாறு.

‘ஐ வில் திங் அபெளட் வாட் யு செட் சுசீத்ரா அண்ட் கெட் பேக் டு யூ. தாங்ஸ் •பார் யுவர் அட்வைஸ்.”

‘வெல்கம். நல்ல முடிவா எடுப்பீங்கன்னு நம்பறேன். ஆல் தி பெஸ்ட்.’

கடந்த ஐந்தாண்டுகளில் தன்னால் காப்பாற்றப்பட்ட திருமணங்களில் இதுவும் ஒன்றாயிருக்கும் என்ற நிச்சயமான நம்பிக்கையுடன் வாசல் வரை வந்து அவளை வழியனுப்பினாள் சுசீத்ரா.

***

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோஸப்

ஜோஸப்