• Home »
  • கதைகள் »
  • சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)

This entry is part of 24 in the series 20050520_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) [ஆங்கிலப் போர்த் தளபதி கிலாஸ்டேல் முன் கூறியது]

‘பத்தொன்பது வயது ஜோன் ஆஃப் ஆர்க் வெற்றி வீராங்கனை ஆனதற்கு, அவள் தன்னை ஒரு பெண் என்று கருதிப் பின்தங்காமல் முன்னேறி, கடவுள் அனுப்பிய படையாளி என்று மெய்யாக எண்ணிக் கொண்டு போரிட்டதே காரணம்! மேலும் படைவீரர்கள் ஜோன்தான் தங்களைக் காப்பாற்றப் பிறந்த லோரேன் பணிமங்கை என்று முற்றிலும் நம்பியதால், அவள் ஆணையைப் பின்பற்றி மெய்வருத்திப் போரிட்டு பிரான்ஸை விவிடுவித்தனர். அக்காலங்களில் எளிய கிராமத்து மாதர்களும், பிரான்ஸில் தம் கணவருடன் இணைந்தே போர் புரிந்தது, குறிப்பிடத் தகுந்தது! ஆர்லியன்ஸ் முற்றுகையை ஜோன் முறிக்கும் போது, ஊர்ப் பெண்கள் தாக்கும் பகைவர் மீது கொதிக்கும் எண்ணை, சூடான சாம்பலைக் கொட்டியாத அறியப்படுகின்றது. ‘

அமெரிக்க கலை மேதை: கிரிஸ்டபர் ரஸ்ஸல்

ஆங்கிலேயர் கைப்பற்றி நூறாண்டு அடிமை விலங்கில் பிணைக்கப்பட்ட பிரான்ஸை விடுவிக்க, லோரேன் பணிமங்கை ஒருத்தி வரப்போவதாக பிரென்ச் மக்கள் நம்பி வந்தனர்! ஆனால் எப்போது வரப் போகிறாள், எப்படி விடுவிக்கப் போகிறாள் என்பதை எவரும் அறிந்திருக்க வில்லை!

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைச் சூழ்ச்சியும், மக்களை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

இரண்டாம் காட்சி தொடர்ச்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. சார்லஸ் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]

2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]

3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.

4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.

5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.

6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்கள்.

7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் அரண்மனைக் கோட்டை. அரச முன்னவையில் ஜோன் ஆஃப் ஆர்க் சார்லஸ் மன்னரைச் சந்தித்துத் தான் வந்த காரணத்தைக் கூறுகிறாள். அடுத்து மண்டியிட்டு வணங்கிய ஜோனை, ஆர்ச்பிஷப் ஆசீர்வதிக்கிறார்.

ஜோன்: [வேகமாய் அதிர்ச்சியுடன் எழுந்து] மாண்புமிகு பாதிரியாரே! என்ன சொன்னீர்கள் ? மதப்பாசத்தில் தீங்கில்லை! ஆனால் அபாயம் இருக்கிறதா ? எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை! நான் அனுதினமும் போற்றும் மதப்பாசத்தில் அபாயம் உள்ளதா ? என்ன அபாயம் ? சொல்லுங்கள்! பிரபு! சொல்லுங்கள்!

ஆர்ச்பிஷப்: பெண்ணே! உன் மதப்பாசத்தில் உனக்குத் தீங்கில்லை, உண்மையாக! ஆனால் அபாயம் நேரப் போவது, அரசரின் படைகளுக்கு! அவரது குடிமக்களுக்கு! கடவுள் அனுப்பியதாகச் சொல்லும் உனது பணிகள் எல்லாம் அபாயம் தருபவை! பிறரை எப்படி பாதிக்கும் அவை என்று நீ சிறிதாவது சிந்தித்துப் பார்க்கிறாயா ?

ஜோன்: [புன்முறுவலுடன்] மாண்புமிகு பாதிரியாரே! இந்த மண்ணில் பிறந்தவர் இந்த மண்ணிலே இறக்கிறார்! அதற்காக நாம் அஞ்ச வேண்டுமா ? கடவுளுடைய சொர்க்க புரியில்தான் மரண மில்லை! நாம் போரிட்டு நம்முயிரைக் கொடுத்து, நமது பூமியை மீட்டுக் கொள்ள வேண்டும். அதுவே கடவுளின் ஆணை! அல்லாவிட்டால் உள்ளே புகுந்த கொள்ளைக் கூட்டம் நம்மைக் கொன்று நமது சொத்துக்களை திருடுகின்றன. விடுதலைப் போரில் பலர் உயிரிழந்தாலும், முடிவில் பிரான்ஸ் நம் கைவசப்படும். படைவீரர் தமது உயிரைப் பலியிடாமல், பிரான்சும் நமக்கு மீளாது! சார்லஸ் மன்னரும் மகுடம் சூட முடியாது! விடுதலைப் போராட்டமா உங்களுக்கு அபாயமாகத் தெரிகிறது ? அது நமக்குச் சுதந்திரம் அளிப்பது!

ஆர்ச்பிஷப்: [சற்று விழித்துக் கொண்டு] அந்தப் போரில் நீயும் உயிரிழக்கத் தயாரா ?

ஜோன்: [சிரித்துக் கொண்டு] மாண்புமிகு பாதிரியாரே! நான்தான் முன்னின்று படைவீரரை வழிநடத்தப் போகிறேன். பிரான்ஸ் நாட்டுக்கு என்னுயிரைக் கொடுக்க நான் தயார்! சார்லஸ் மன்னருக்கு முடி சூட்ட என்னுயிரைக் கொடுக்க நான் தயார்! கடவுள் இட்ட கட்டளை நிறைவேறுவதில் என்னுயிரை இழந்தால் நான் களிப்படைவேன். [சார்லஸ் மன்னரைப் பார்த்து] …. இதைப் பற்றி நான் பேச வேண்டும். மேன்மை தங்கிய வேந்தரே! நான் தனியாக உங்களுடன் உரையாற்ற விரும்புகிறேன். மற்றவரை சற்று வெளியே அனுப்புவீர்களா ? ‘

சார்லஸ் மன்னர்: [உடன்பாடாக தலை அசைத்து, மற்ற அனைவரையும் பார்த்து] லோரேன் பணிமங்கை என்னுடன் தனியாகப் பேச விரும்புகிறாள். எல்லோரும் வெளியேறுங்கள்! கடைசியில் போவோர் கதவை மூடிச் செல்ல வேண்டும்.

ராணி: [ஆத்திரமோடு முன்வந்து] சார்லஸ்! நான் உன்னுடன் இருக்கலாம் அல்லவா ?

சார்லஸ் மன்னர்: [அழுத்தமாக] இல்லை! நீங்களும் வெளியே போவது நல்லது.

ஆர்ச்பிஷப்: நான் தேவாலயத்தின் அதிபதி! கடவுள் இட்ட கட்டளையை ஜோன் விளக்கும் போது, நான் அவசியம் அரசருடன் இருக்க வேண்டும். கடவுளின் ஆணை எனக்கும் விளக்கப்பட வேண்டும்!

சார்லஸ் மன்னர்: [குரலை உயர்த்தி] ஆர்ச்பிஷப்! அவசியம் நீங்கள் வெளியே போக வேண்டும். ஜோன் இல்லாத போதே கூக்குரல் எழுப்பியர் நீங்கள்! ஜோன் இருக்கும் போது நீங்கள் வெடிப்பீர்! தயவு செய்து வெளியே செல்லுங்கள். … [சாம்பர்லைனைப் பார்த்து] … ஏன் நின்று கொண்டிருக்கிறீர் ? உங்களுக்கும் அதே உத்தரவுதான்! ஒன்று எரிமலை! அடுத்தது பூகம்பம்! யாருடைய குறுக்கீடு மில்லாது, நாங்கள் தனியே அமைதியாகப் பேச வேண்டும். எல்லாரும் வெளியே செல்லுங்கள்.

[ராணி, ஆர்ச்பிஷப், சாம்பர்லைன், லாஹயர் அனைவரும் வெளியேறுகிறார்கள். ராணி போகும் போது, ஜோனை முறைத்துச் பார்த்துச் செல்கிறார். கடைசில் போகும் லாஹயர் கதவைச் மூடி விட்டுப் போகிறான்.]

சார்லஸ் மன்னர்: ஜோன் உட்கார்! [ஜோன் ஆசனத்தில் அமர்கிறாள்] ஆங்கிலேருடன் போரிடுவதில் விருப்பம் இல்லை எனக்கு! தளபதிகள் அணியும் இரும்புக் கவசம் கனமாகத் தெரிகிறது எனக்கு! இப்போதுள்ள போர்வாளை தூக்கக் கூட முடியவில்லை என்னால்! ஆங்கிலேய மூர்க்கருக்குள்ள முரட்டுக் குணம், மூர்க்கக் குரல், முட்டிக் கை, முதிர்ந்த தோள் எனக்கில்லை! அவர்களுக்கு யுத்தம் என்பது ஒரு பொழுது போக்கு! மரணத்தோடு சாடுவது ஒரு விளையாட்டு! நான் அமைதியை விரும்புபவன். எனக்குப் போதிய வருமானம் இல்லை! பிறரிடம் கடன் வாங்கிப் பிழைத்து வருகிறேன்! ஆங்கிலேயருடன் போரிடா உடன்படிக்கை செய்து, சமாதானமாக வாழ விரும்கிறேன்.

ஜோன்: [ஆத்திரமடைந்து] மாண்புமிகு மன்னரே! இது மிக்க கோழைத்தனம்! மிக்க அடிமைத்தனம்! அடிமைகளாக நூறாண்டுகள் வாழ்ந்த பின்பு, அதுவே சுக வாழ்வாகத் தெரிகிறது உங்களுக்கு! எங்கள் பொன்னும், பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப் படுவதை வேடிக்கை பார்க்க விரும்புகிறீர்களா ? எங்கள் தங்கை, தமக்கை, தாய்மார் ஆங்கிலப் பிடாரிகளால் பலாத்காரம் செய்யப்பட்டு பலியாவை வேடிக்கை பார்க்க விரும்புகிறீர்களா ? அச்சத்தில் அடிமைகளாய் வாழ்வதை விடப் போரிட்டுத் துச்சமாக உயிரை இழப்பதே மேல்! பிரென்ச் மன்னரே! நீங்கள் பேராண்மை ஆத்மாவை இழந்து, பிச்சை எடுக்கும் ஆத்மாவைப் பிடித்துக் கொண்டது ஏன் ? இப்படிக் கையேந்தும் வாழ்வுக்கு முடிவு செய்யத்தான், கடவுள் என்னை அனுப்பி யிருக்கிறார்! போரிட்டுத்தான் நாம் விடுதலை பெற வேண்டும்! உயிர்களைப் பலி கொடுத்துதான் நாம் பிரான்ஸின் உயிரை மீட்க வேண்டும்! அற்புதம் நிகழ்ச்சியால் பிரான்ஸைக் காப்பாற்ற முடியாது! விடுதலைக்காக நாம் மெய்வருந்திப் போராடினால்தான், நமக்குக் கிடைக்கும் கடவுளின் உதவி!

சார்லஸ் மன்னர்: [பெரு மூச்சிட்டு ஆசனத்தில் சாய்ந்தபடி] போர்! போர்! போர்! இன்னுமா போர் ? நான் போருக்குப் போக மாட்டேன்! ஜோன்! உன்னைப் போன்ற நெஞ்சு உறுதி எனக்கில்லை! பிரான்ஸ் விடுதலையில் எனக்கு நம்பிக்கை யில்லை! மன்னராக முடி சூட்டிக் கொள்ள எனக்கு ஆசையும் இல்லை!

ஜோன்: [அதிர்ச்சி அடைந்து, எழுந்து நின்று அழுத்தமாக] மன்னரே! என்ன அதிர்ச்சியான வார்த்தைகள் அவை ? அவைதான் கடவுளின் கட்டளைகள்! அவற்றில் எனக்கு நம்பிக்கை உள்ளது! நான் லோரேன் பணிமங்கை! பிரான்ஸை விடுவிக்க போகும் என்னைத் தடுக்க வேண்டாம்! உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்! எனக்கு வேண்டியது உங்கள் உத்தரவு! எனக்கு வேண்டியது இப்போது தூங்கிக் கிடக்கும் உங்கள் படைகள்! ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்கப் பத்தாயிரம் பேர் போதும்! அந்தக் கோட்டையைக் கைப்பற்றாமல் திரும்பி உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன்!

சார்லஸ் மன்னர்: [கூர்ந்து நோக்கி] மறந்து விட்டேன், நீ லோரேன் பணிமங்கை என்பதை! பிரான்ஸைக் காப்பாற்ற ஒரு பணிமங்கை வருவாள் என்று பல்லாண்டுகளாகப் பாமர மக்கள் கனவு காண்கிறார்கள்! மெய்யாக அந்தப் பணிமங்கை நீதானா என்பது எனக்குத் தெரியவில்லை! நீதான் அந்தப் பணிமங்கை என்றால், போரிடத் துணிவது சரிதான்! நீ மெய்யாகப் பணிமங்கை இல்லாவிட்டாலும், பாமர மக்கள் உன்னைப் பணிமங்கை என்று நம்பி உன் பாதத்தில் விழுவார்! நீ காலால் இடும் கட்டளையை அவர் தலைமேற் கொண்டு செய்வார். [எழுந்து நின்று, அழுத்தமாய்] இப்போதே அறிவிக்கப் போகிறேன், நீதான் லோரேன் பணிமங்கை! பிரான்ஸை மீட்கப் பிறந்திருக்கும் லோரேன் பணிமங்கை நீதான்! புறப்படு! ஜோன் புறப்படு! ஆர்லியன்ஸ் கோட்டை நோக்கிப் புறப்படு!

ஜோன்: [ஆவேசமாய் வாளை உருவி] எனக்கு ஆலயமணி அடித்து விட்டது! எனக்கு உத்தரவு கிடைத்து விட்டது! மிக்க நன்றி மன்னரே! செல்கிறேன்! கடவுள் இட்ட கட்டளையை நிறைவேற்றச் செல்கிறேன்! …. நான் இப்போது கடவுளைத் துதிக்க வேண்டும். .. [மண்டியிட்டு கைகூப்பி மெளனமாய் முணுமுணுத்துக் கடவுளைத் தொழுகிறாள்]

சார்லஸ் மன்னர்: [சற்று வெறுப்புடன்] நிறுத்து ஜோன்! கடவுளைப் பற்றி அடிக்கடிப் பேசுவதும், அவர் மீது துதி பாடுவதும் எனக்குப் பிடிக்காது. முதலில் நானிட்ட கட்டளையை நிறைவேற்று! எட்டாயிரம் படைவீரர்களைத் தருகிறேன். சீக்கிரம் புறப்படு! நேரத்தை வீணாக்காதே!

ஜோன்: கடவுளிட்ட கட்டளையை நீங்களிட்ட கட்டளையாக உரிமை கொண்டாடுவது நியாயமில்லை. மாண்புமிகு மன்னரே! எனக்கு எட்டாயிரம் படைவீரர்களைத் தரும்போது அவருக்குப் போதிய உணவுகள், கவச உடைகள், குதிரைகள், வெடி வாகனங்கள் தேவை! உணவுதான் முக்கியம். பட்டினிப் பட்டாளம், பகவரை எதிர்த்துப் போரிடாது. கடவுள் கட்டளை நிறைவேறாது.

சார்லஸ் மன்னர்: எல்லாவற்றையும் சின்னான் கோட்டையிலிருந்து அனுப்புகிறேன். மறுபடியும் நான் கடன் வாங்கித்தான் உணவுப் பண்டங்கள் வாங்க வேண்டும். கவலைப் படாதே ஜோன்! கடன்தர சாம்பர்லைன் இருக்கிறார்! ஆர்ச்பிஷப் அளிக்க மாட்டார்!

ஜோன்: இனிமேல்தான் என் கவலை ஆரம்பமாகும் மன்னரே! ஆங்கிலக் கயவர் பிடித்து வைத்திருக்கும் நமது பிரான்ஸ், கடவுளுக்குச் சொந்தமானது. இந்த நாட்டின் மன்னர் கடவுளின் தொண்டர்! இந்தப் படைவீரர்கள் கடவுளின் பணிவீரர்! இப்போதல்ல! எப்போதும்! இவற்றில் எதுவும் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தில்லை! பிரான்ஸை மீட்டு தங்களுக்கு முடி சூட்டி, உலகப் பெரும் வேந்தராய் உங்களை ஆக்குவது என் கடமை! பிரான்ஸின் புழுதிக் களிமண்ணும் இனிமேல் புனிதமாகப் போகிறது! போராட்டத்தை வெறுக்கும் நமது டியூக் பிரபுக்கள் நமக்கு எதிராகக் கிளம்பலாம். ஆங்கிலேயரை மண்டியிட வைத்து, அவரது நாட்டுக்கு விரட்டுகிறேன், பாருங்கள்! ஆனால் …ராணி தன் மகளை ஆங்கில மன்னருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார்! … ஏசு நாதரைக் காட்டிக் கொடுத்த ஜூதாவைப் போல், எனக்கும் நமது தேவனுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்களா ?

சார்லஸ் மன்னர்: [அதிர்ச்சியுற்று] அது எங்கள் சொந்த பந்தம்! … அரசக் குடும்ப ஒப்பந்தம்! … ஆனால் அப்படிச் செய்ய எனக்குத் துணிச்சல் இருக்குமா ? … எனக்கே என்னைத் தெரியாது!

ஜோன்: [அழுத்தமாக] சொல்லுங்கள் மன்னரே! கடவுள் மீது ஆணையாகச் சொல்லுங்கள்! எனக்கு எதிராக நீங்கள் எதையும் துணிந்து செய்வீர்களா ?

சார்லஸ் மன்னர்: [ஆங்காரமாக] நான் உறுதி கூற முடியாது, ஜோன்! எங்கள் குடும்ப வாய்களை நான் கட்ட முடியாது! உன்னை நான் எச்சரிக்கிறேன். பகடை ஆடும் சூதாடி நான்! சமய சந்தர்ப்பவாதி நான்! நீரில் மூழ்கத் துணிந்தும், துணியாமல் மிதக்கும் தூண்டில் முள் போன்றவன் நான்! மீன் கிடைத்தாலும் சரி அல்லது தூண்டில் போனாலும் சரி என்று எதிலும் நீந்துபவன் நான்! இப்போதும் அப்படியே உன் சொற்படித் துணிகிறேன்! …. சரி! சரி! புறப்படு! நான் எனது முடிவை இப்போது அரசவையில் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும். வா, போகலாம். [கதவைத் திறந்து மன்னர் வெளியேற, ஜோனும் அவரைப் பின் தொடர்கிறாள்]

[கதவு திறக்கப்பட்டதும் அரசவையில் ஆரவாரம் ஒடுங்கி அனைவரும் மன்னரையும், ஜோனையும் நோக்குகித் திரும்புகிறார்கள். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் மன்னனின் இருபுறத்தில் நிற்க அணுகுகிறார்கள்.]

சார்லஸ் மன்னர்: [நடந்து கொண்டு கூக்குரலில்] எல்லோரும் வாருங்கள்! [ஆசனத்தின் முன்பாக நின்று கொண்டு] கேளுங்கள் என் முடிவை! வரலாற்றில் முக்கிய இடம் பெறுவது, எனது முடிவு! உங்கள் முன் நிற்கும் இளமங்கை, பிரான்ஸை விடுவிக்கப் போகும் லோரேன் பணிமங்கை! [ஜோனை அறிமுகப்படுத்தி] இதோ! .. பாருங்கள், உங்கள் லோரேன் மங்கை!

அரசவை மக்கள்: [ஆரவாரமுடன்] லோரேன் பணிமங்கை! [ராணி, ஆர்ச்பிஷப், சாம்பர்லைன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லாரும் தலை கவிழ்ந்து வணக்கம் செய்கிறார்கள்] [சிலர் மட்டும்] வந்து விட்டாள் நமது, பணிமங்கை! பிரென்ச் விடுதலை மங்கை, வீரமங்கை ஜோன் ஆஃப் ஆர்க்!

சார்லஸ் மன்னர்: அமைதி! அமைதி! … இராணுவப் படையின் ஆணைத் தளபதியாக லோரேன் பணிமங்கையை நியமித்திருக்கிறேன். பதவியைப் பணிமங்கையும் ஒப்புக்கொண்டிருக்கிறாள்.

[அரசவையில் ஆரவாரமும் கைதட்டல்களும் எழுகின்றன. ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் கண்கள் மிரள, மிரள விழிக்கிறர்கள். லாஹயர் ஆனந்தப்படுகிறார்]

சார்லஸ் மன்னர்: அமைதி! அமைதி! பணிமங்கையின் முதற்பணி, ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையை முறிப்பது! ஆங்கிலேயரை அங்கிருந்து விரட்டுவது!

சாம்பர்லைன்: [ஆத்திரப்பட்டு, மன்னரை நோக்கி] என்ன கோமாளித்தனம் இது ? நான் அல்லவா, இராணுவ ஆணைத் தளபதி ? எனக்குத் தெரியாமல் என் பதவியைப் பிடுங்குவதா ? இப்போது நான் யார் ஆணைப்படி நடப்பது ? [மன்னரைப் பார்த்து] உங்கள் கட்டளைப்படியா ? அல்லது அந்தப் பணிமங்கை ஆணைப்படியா ? படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பாவை ஆணைத் தளபதியா ?

ஜோன்: [கோபத்தோடு கண்களில் தீப்பறக்க, சாம்பர்லைன் அருகில் சென்று] வாயை அடக்கிப் பேசுங்கள்! இது என் முதல் எச்சரிக்கை! நீங்கள் பழைய ஆணைத் தளபதி! இப்போது நான் புதிய படைத் தளபதி! பட்டிக்காட்டுப் பாவை என்று இனி ஒருமுறை வாயில் வந்தால், உங்கள் பற்களை உடைத்து விடுவேன்! மனிதரை மதித்துப் பேசாத உங்கள் வாயைக் கிழித்து விடுவேன்! கவனம் இருக்கட்டும்!

சார்லஸ் மன்னர்: [பெரிதாகச் சிரிக்கிறார். மற்ற அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.]

சாம்பர்லைன்: [பதில் பேச முடியாமல் நடுங்கிக் கொண்டு] எனக்கு இங்கு இனி வேலை இல்லை! நான் போகிறேன். [விரைவாக வெளியேறுகிறார்]

ஆர்ச்பிஷப்: [மன்னரைப் பார்த்து] அவமானம்! அவமானம்! எத்தகைய அவமானம்! மன்னரே! சிரித்துக் கொண்டு எப்படி இதை உங்களால் வேடிக்கை பார்க்க முடிகிறது ? மேரி மாதா! என் கண்களை நம்ப முடிய வில்லை! என் காதையும் நம்ப முடியவில்லை!

சார்லஸ் மன்னர்: [உறுதியாக] நான் நியமித்த புதிய தளபதிக்கு மதிப்பளிக்கா விட்டால், தண்டனை கிடைக்கும் என்பது கூடத் தெரியாமல் இருப்பது மூடத்தனம்! சாம்பர்லைன் வெளியே போனது அவருக்கும் நல்லது! எனக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!

ஆர்ச்பிஷப்: [ஜோனைப் பார்த்து] லோரேன் பணிமங்கையே! உனக்கொரு பகைவரை நீயே இன்று தேடிக் கொண்டாய்! கடவுளிடம் மன்னிப்புக் கேள்!

ஜோன்: [தலை வணங்கி] பாதிரியாரே! நான் எதற்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ? என்னைப் பலர் முன்பாக அவமானப் படுத்திய சாம்பர்லைன்தான் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

ஆர்ச்பிஷப்: சாம்பர்லைன் சொன்னதில் என்ன தப்பு ? நீ மெய்யாகக் கிராமத்துப் பெண்தானே! அப்படிச் சொன்னால் உனக்குக் கோபம் ஏன் வருகிறது ?

ஜோன்: இப்போது நான் புதிய இராணுவத் தளபதி! பட்டிக்காட்டுப் பாவை என்று அவர் என்னை அவமதித்தது தவறு! அப்படிச் சொல்வது தப்பில்லை என்று நீங்கள் சரிக்கட்டுவதும் தவறு!

ஆர்ச்பிஷப்: உனக்குப் பதவிக் கர்வம் உச்சிவரை ஏறி விட்டது! பெரியவர் மீது குற்றம் சாற்றத் தொடங்கி விட்டாய்! இப்போது நீ இரண்டாவது பகைவரை தேடிக் கொண்டாய்! நீ எப்படி ஆர்லியன்ஸ் கோட்டைப் பிடிக்கப் போகிறாய் என்று நான் பார்க்கப் போகிறேன் ? உன்னைத் தவிர உன்னைப் பின்பற்றும் அனைத்துப் படையினரும் ஆடவர் என்பதை மறந்து விடாதே! ஆடவரை அடக்கி விடலாம் என்று வேடம் போடாதே!

ஜோன்: [அழுத்தமாக] பாதிரியாரே! என்னை படைத் தளபதியாக ஏற்றுக் கொள்ளாத எந்த ஆடவனும் என் பின்னே வரத் தயங்குவான், கவலைப்படாதீர்கள்! கோட்டையைப் பிடிக்க, எனக்குத் துணை புரிவார் கடவுள்! … [வேகமாய்த் தன் வாளை உருவி அனைவரையும் சுற்றி நோக்கி] … கடவுளின் பணிக்கு, பிரான்ஸின் விடுதலைக்கு இந்தப் பணிமங்கையுடன் சேர்ந்து யாரெல்லாம் போரிடத் தயார் ? யாரெல்லாம் ஆர்லியன்ஸ் முற்றுகையை முறிக்க என்னுடன் வருகிறீர்கள் ? யாரெல்லாம் தயார் ? கை தூக்குங்கள்!

லாஹயர்: [தன் வாளை உருவி] படை வீரர்களே! நாமெல்லாம் செல்வோம்! ஆர்லியன்ஸ் நோக்கிச் செல்வோம்! கடவுள் ஆணைக்குப் படிந்து ஆர்லியன்ஸ் செல்வோம்! பணிமங்கை தலைமையில் ஆர்லியன்ஸ் செல்வோம்!

உள்ளிருந்த படையினர்: [ஆரவாரத்துடன், தம் வாளை உருவி] செல்வோம்! செல்வோம்! ஆர்லியன்ஸ் நோக்கிச் செல்வோம்! பணிமங்கை பின்னால் ஆர்லியன்ஸ் செல்வோம்.

[ஜோன் மண்டியிட்டுத் தலை கவிழ்ந்து, கடவுளைத் துதிக்கிறாள். ஆர்ச்பிஷப்பைத் தவிர அனைவரும் மண்டியிட்டு வணங்குகிறார்கள்.]

ஆர்ச்பிஷப்: [காதுகளை மூடிக் கொண்டு, ஆங்காரமோடு மன்னரைப் பார்த்து] மன்னரே! தேவாலய அதிபதி என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை! … உங்கள் அந்தரங்க இராணுவ நிபுணரிடம் ஆலோசனை கேட்க வில்லை! இந்த சூனியக்காரி வலையில் சிக்கி, ஆர்லியன்ஸ் கோட்டை முற்றுகையை முறிக்க நம் படைகளை அனுப்பப் போகிறீர்! இது அறிவீனம்! இது ஓர் அவசர முடிவு! இது ஓர் அழிவு முடிவு!

சார்லஸ் மன்னர்: [கோபத்துடன்] போதும் உங்கள் அடுத்த போதனை! இது நான் ஆழ்ந்து தீர்மானித்த முடிவே! எனக்கு யாரும் வலை விரிக்க வில்லை! ஜோன் சூனியக்காரி இல்லை! மக்கள் எதிர்பார்த்த லோரேன் பணிமங்கை அவள்! மக்கள் ஜோனை நம்புகிறார்! நானும் ஜோனை நம்புகிறேன்!

ஆர்ச்பிஷப்: [ஆங்காரமாய்] நான் அவளை நம்பவில்லை! நாட்டை இன்னும் நாசமாக்க வந்திருக்கிறாள் இந்த நங்கை! நமது படைகளை ஆங்கிலப் பிசாசுகள் நசுக்க வழிவகுத்து விட்டாள் இந்த நங்கை! இந்த சூனியக்காரி முன்பாக நீங்கள் என்னை எதிர்ப்பது, எனக்கு அவமானம்! போகிறேன் மன்னரே! போகிறேன்! [வேகமாய் வெளியேறுகிறார்]

(இரண்டாம் காட்சி முற்றும். மூன்றாம் காட்சி அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

4. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

5. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

6. Britannica Concise Encyclopedia (2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 16, 2005]

Series Navigation